Monday, January 31, 2011

பூச்சிகளின் புதல்வர்கள் நாங்கள்சத்ய ஜித்ரேயின் எறும்புகள் கதையை படித்திருக்கிறீர்களா? ஆன்மாவின் அடிக்குரலில் பேசும் கதையது.அக்கதையில் அன்புதான் ஆதாரம்.உங்களை அப்படியே உலுக்கி கொன்றுவிடும்.ரேவின் இக் கதையை படிக்கும் போது நான் எட்டு வயசுக்கு மறுபடியும் திருப்பினேன். சுத்தமான ஜீவராசிக் காதலை பேசும் இந்தக் கதையை ஒரு இந்தியனால் மட்டுமே எழுத முடியும்.ஆச்சர்யங்கள் திளைக்கும் அக்கதையை ரே உயிரோட்டம் குறையாமல் எழுதியிருப்பார். எறும்புகளோடும் இன்னபிற பிராணிகளோடும் தன் காதலை பகிர்த மனிதன் போன நூற்றாண்டோடு இறந்துவிட்டான்.இன்றைய மனித மனம் பிராணிகளை,ஜீவராசிகளை சக உயிரியாக பார்ப்பதையே தவிற்கிறது.பூமி முழுக்க மனிதனுக்கு மட்டுமே சொந்தம் கொள்ள சொல்கிறது. இது அபாயகரமான மனநிலை.

வீட்டில் ஒரு அந்துப்பூச்சியை பார்த்திட்டாலும் கூட ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணுகிற பழக்கம் விளம்பரங்கள் மூலம் ஒரு விஷ விதையைபோல தூவுகின்றது ஊடகங்கள்.வீடு என்றால் அது மனித வாசனைக்கு மட்டுமே உகந்த இடம் என சிறு வயதிலிருந்து பழக்கி வைக்கப்படுகிறார்கள் பிள்ளைகள்.பல்லியும் பட்டாம்பூச்சியும் கூட ஒவ்வாமை கொள்ள வேண்டிய விஷயமா என்று புரியவில்லை.

வீட்டில் பாம்பு வந்தாலும் கூட வக்கனயாய் பிடித்து வணங்கி வழியனுப்பியப் பழக்கம் இந்தத் தலைமுறைக்கு தெரியுமா? தவறி அடிபட்ட பாம்பிற்காக ஆயுள் முழுக்க சாங்கியம் சடங்கு செய்து மன்னிப்புகேட்ட மனிதர்கள் இங்கே வாழ்ந்தார்கள் என்றால் ”கண்ட்ரீ புரூட் அவங்க” என்று வாயை திரிந்து சொல்லவில்லை என்றால் இரவு தூக்கம் கொள்ளது இன்றைய இளசுகளுக்கு. காக்கை குருவி எங்கள் ஜாதி என்பதெல்லாம் பழஞ்சொல்லாகிவிட்டது? மண் பண்டங்களை பித்தளைப் பாத்திரங்கள் ஒளியிழக்க வைத்தன.பின்னால் பித்தளையை சில்வர் செயலிழக்க வைத்தன.இன்று கை நனைக்காமல் சாப்பிட கண்ணாடிப்பாத்திரங்கள் வந்துவிட்டன. நாகரீகம் என்பது ஆரோகியத்தை அடமானம் கேட்கிறது என்பது எத்தனை பேர்களுக்கு புரியபோகிறது.

வீட்டிற்கு முன்னால் முற்றம்.நடுவில் தாழ்வாரம்.உயிரினங்கள் உள்ளே வந்துபோக ஓட்டை.வெளிச்சம் எட்டிப் பார்க்க கம்பி கிராதி.காற்று வந்து கண்காட்ட சன்னல் துவாரங்கள்.வீட்டில் உள்ளவர்கள் கூடி உட்கார கூடாரம்.பிரத்தியார் வந்து சுகம் பார்க்க திண்னை என்று இருந்த மனையடி சாஸ்திரம் எல்லாம் இன்றைக்கு ககூஸ் எந்த மூலையில் வைப்பது? டி.வி.யை எந்த ஹாலில் புதைப்பது? ஃப்ரிட்ஜை எங்கே நிறுத்துவது என்று கவலை பாட வைத்திருக்கிறது.

மூதாதையரின் மூச்சுக்காற்றை கேட்டு வாங்கி வளர்ந்த துளசியும் செம்பருத்தியும் வெறு செடிகொடிகள் அல்ல;தலைமுறை தலைமுறையாக கை மாற்றி மாற்றி கொடுக்கப்பட்ட சீதனம். தெரு முற்றத்தில் நிற்கும் தாவரமும் மரமும் மூத்தோரின் அடையாளங்கள். அவர்களின் ஆயுளை அதில்தான் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்பதெல்லாம் புரியாமல் பிதற்றுகிறார்கள் இன்றைய பிள்ளைகள்.

கவிஞர் பழமலய்யின் சனங்களின் கதை கவிதைத் தொகுப்பில் அம்மாவின் விசனம் கேட்டுத்தான் இந்த வேம்பும் கசந்திருச்சோ என்று ஒரு வரிவரும்.வேம்பின் பால் தாய் பாலுக்கு நிகர் என்பதாய் பழமலய்யின் பாடல் போகும்.அவரது குழுமூர் கிராமத்தில் குருவிகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் குடிநீர் தொட்டியை பற்றி எழுதியிருப்பார். காடு என்பது அன்றைக்கு வாழ்வியலோடு ஒன்றிய ஒன்று.புச்சையைகூட காடு என்பார்கள் ஊர்களில்.இன்று காடு என்பது பிக்னிக் போகும் இடம்.குழாமோடு கூடி குடிப்பதற்கான சாலை.இப்படிதான் போகிறது நவீனம்.

என் தலைமுறை வரை பூச்சிகளும் பறவைகளும்தான் எங்களின் செல்ல சகோதரர்கள்.நாய்களும் பன்றிகளும் கூட எங்களின் தோழமைதான். விதவிதமான பூச்சிகளின் ரசிகன் நான். எருகஞ்செடிகளில் வண்ண வண்ணமான நிறத்தில் அழகிய வெட்டுக்கிளிகள் இருக்கும்.பார்க்கவே படு கவர்ச்சியான ஜீவராசி.தழைகளை இமிஇமியாய் கத்தரிக்கும் பூச்சியது. பிடித்து எடுத்து கண்ணாடிப் பைகளில்(கேரிபேக் என்பதெல்லாம் அப்புறம் வந்த சொல்) அடைத்து மூச்சுபோக சிறுசிறு ஓட்டைகளிட்டு வீட்டில் உள்ள டிரங்கு பெட்டிக்கடியில் வைத்துவிட்டு பள்ளிக்கு புறப்பட்டுவிடுவேன்.மாலை வீடு திரும்பியது அவைகளோடுதான் என் சங்காத்தம்,ஆட்டம் பாட்டம் எல்லாம்.

உச்சி வெயிலில் ஓணான் பிடிக்க கிளம்புவோம்.உருமநேரத்தில் தான் சூரியன் ஊச்சுக்கு வருவான்.அடிக்கிற வெயிலுக்கு இதம்தேடி ஓணான்கள் மர அடிவாரத்தை அண்டும்.அந்த நேரத்தில்தான் ’அண்ணனை’வீழ்த்த முடியும்.தென்னை ஓலையின் நடுவில் நிற்கும் நரம்பை மட்டும் தனியே உரித்து நரம்பிற்கு முன்னால் சுருக்கிட்டு ஓணானின் தலையில் மாட்டியிழுப்போம். மாட்டியக் கழுத்தை அவிழ்க்க முடியாமல் அல்லாடும் ஓணான் ஒருவழியாக நம்ம வழிக்கு வந்திடும்.தென்னை ஓலையில் ஓணானை பிடிக்கும் பழக்கம் சங்ககாலத்து தமிழனிடமே இருந்துள்ளது.அதற்கான சான்று பாடலில் கூட உள்ளது.

பிடிபட்ட ஓணான்களை கொண்டு வந்து சிகரெட் புகைக்க வைப்போம்.கப் கப்பென்று புகையை இழுத்து ஓணான் விடும் லாவகம் இருக்கே என்ன அழகு தெரியுமா? தினமும் அப்பா இழுத்துவிட்டுப் போடும் சிகரெட் துண்டுகளை பொறுக்கி இந்தக் காரியத்திற்கு பயன்படுத்துவோம்.அப்புறம் அறுவைசிகிச்சை வரை போகும்.ஓணான் நெஞ்சை அறுத்து இதயத்துடிப்பை காண்போம். அறுவை முடிந்த கையோடு இலைதழைகளை அறைத்து பச்சிலையாக ஓணானின் காயத்திற்கு கட்டுக்கட்டுவோம். கட்டிய சில நேரத்திற்குள் கைலாயம் போய்விடும் பெரும்பாலான ஓணான்கள்.இறந்த ஓணானுக்கு இறுதிச்சடங்கு நடத்துவோம். புதைக்கும் குழியில் காசு போட்டுப்புதைத்தால் சில்லறை பணமாகும் என்பது பழங்காலத்து நம்பிக்கை.அதையும் பண்ணுவோம். அரைஞையை பிடித்து வம்பு பண்ணுவோம்.அரைஞைக்கு அதிக ஞாபக மறதியுண்டு என்பார்கள்.கடிக்க வருவதற்குள் அது மறந்துவிடும் என்பது நம்பிக்கை.நிஜமா தெரியாது.

இதுபோல நல்ல காரியத்திற்காக பல ஓணான்களை பிடித்து, பையில்போட்டு இரையாக சில வெட்டுக்கிளிகளையும் உள்ளே வைத்து முடியிட்டு, பையை பெட்டிக்கு அடியில் வைத்துவிட்டு பள்ளிக்குப்போய்விடுவேன்.ஒரு நாள் பெட்டிக்கு அடியில் சரசரவென சத்தம் கேட்க, அம்மா கை பையை அவிழ்த்திருக்கிறாள்.விட்டேன் சவாரி என்று திசைக்கொரு ஓணான்கள் வீட்டிற்குள் மூலாமூலைக்குள் பாய்ந்திருக்கின்றன.அப்போது பயத்தில் உறைந்தவள்தான்.மாலை பள்ளிவிட்டு நான் வரும் வரை காத்திருக்கிறாள்.வீட்டிற்கு நுழைந்தவுடனேயே கதைவை தாழ் வைத்துவிட்டு அர்ச்சனையை ஆரம்பித்துவிட்டாள்.அடியென்றால் ஒவ்வொன்றும் இடி. எங்கள் தெருவில் பிள்ளைகளுக்கு அடிகொடுக்கும் விஷயத்தில் என் அம்மாதன் கில்லாடி. விறகுக்காக உள்ள முந்திரி செராக் கட்டைகளை எடுத்து அடிக்க ஆரம்பித்தாள் ராட்சஷி ரத்தம் பார்க்காமல் அடங்கமாட்டாள்.

இரவில் குசு பூச்சி என்று ஒரு பூச்சி உலாத்தும். ஆமையின் தலைபோலவும் உடல் முழுக்க கருப்பாகவும் அதில் மஞ்சள் நிறத்தில் வட்டங்களும் கொண்டுடிருக்கும்.மூக்கில் இருந்து இரு மீசைகள் நீண்டிருக்கும்.ஆட்காட்டி விரல் முனையளவுக்கு உள்ள இந்தப்பூச்சி கடிக்காது. ஆனால் பிடிக்கப்போனால் புஸ்ஸ்ஸென்று ஒரு குசுவை சூடாக விடும்.சூடு கையில் பட்டால் கொப்பளித்துபோகும்.அந்த அளவுக்கு அணல் தகிக்கும்.குசு வந்தவுடனேயே ஒரு மாதிரி கருகல்வாடை பரவும்.அப்பூச்சிகளை வைத்து ஃப்யர் விளையாட்டு விளையாடுவோம். இதேபோல் மழை பூச்சி.பார்க்க அச்சு அசலில் இலையை போல இருக்கும்.இதே ரகத்தில் காய்ந்த குச்சியைபோல சருகுப்பூச்சி என்று ஒன்றுள்ளது. இலைபோல உள்ள பூச்சி மழைக்கு முன்னதாக வரும். அதை பிடித்து இப்ப மழை எந்தப் பக்கம் பெய்யுது சொல்லு என்போம். அது உடனே தலையை திருப்பி ஒரு திசையை காட்டும்.உடனே அந்தப் பக்கம் மழை வருவதாக ஐதீகம். சருகுப்பூச்சியின் முன்னங்கால்கள் கொக்கியைபோல முன்னோக்கி வளைந்திருக்கும்.அதனிடன் ஒரு பொருளைக் கொடுத்து தயிர் கடைய சொல்லுவோம்.அது கொடுத்தப்பொருளை கையில் பிடித்தபடி தயிர்கடைவதைபோல உடலை அசைக்கும்.


பன்னிபூச்சி என்று ஒரு பூச்சி உள்ளது. வீட்டு சுவரோரங்களில் ஆள் நடமாட்டமே இல்லாத பகுதிகளில் மணலில் குழி பறித்துக்கொண்டு உள்ளேயே மணலுக்குள் மறந்திருக்கும்.லேசில் கண்ணில் அகப்படாது. அது உண்டாக்கி வைத்திருக்கும் குழியின் ஓரங்களில் உள்ள மணல் சலித்து வைத்த மணலைபோல நைஸ் ஆகாக இருக்கும்.அக்குழியில் எறும்போ மற்ற சிறு பூச்சிகளோ விழுந்தால் அவ்வளவுதான் அதன் மேல் மணலை பறித்து தள்ளி அப்பூச்சை கொன்று இரையாக்கிவிடும். இந்தக் குழியில் எறும்பை விட்டு விளையாட்டுக்காட்டுவோம்.

பிள்ளைப்பூச்சி என ஒரு பூச்சியுள்ளது.ஊரில் அதை வாயில்லா பூச்சி என்பார்கள்.எவ்வளவு இன்னலுக்கு அதை உட்படுத்தினாலும் அது கடிக்காது.மீறி அது கடித்தால் மரணம் என்பார்கள். ஒரு நாளும் யாரையும் அது கடித்ததாக நான் கேள்விபட்டதில்லை.அதை கொன்றவர்களுக்கு பிள்ளை பாக்கியம் இருக்காது என்று பெரியவர்கள் குறிப்பிடுவார்கள். தண்டனைக்காக அதை பிடித்து துண்டில் போட்டு தொப்பூழில் கட்டி விடுவார்கள்.அது சற்று சந்து பார்த்தால் குழித்தோண்ட தொடங்கிவிடும்.தொப்பூழ் பள்ளம் கிடைத்தால் சும்மா விடுமா? மாட்டியவன் கதி அதோகதிதான்.

இருக்கின்ற பூச்சிகளிலேயே சிறப்பான பூச்சி பொன்வண்டுதான்.இதற்கடுத்து பட்டுப்பூச்சி.வெல்வெட் துணிபோல மெத்து மெத்துவென்றிருக்கு.தூறல் விழுந்த விடிற்காலையில் உழுத நிலம் முழுக்க அலையும் பூச்சியிது.வசீகரமென்றால் அப்படியொரு வசீகரம். பொன்வண்டில் இரு வகையுண்டு.இலந்தை பொன்வண்டு.பச்சை பொன்வண்டு. இலந்தை பொன்வண்டின் தலை மட்டும் பச்சையாக மின்னும்.உடம்பு முழுக்க இலந்தைப் பழநிறத்தில் இருக்கும்.அதனாலே இது இலந்தைப் பொன்வண்டு.இவை இலந்தைத் தழைகளை உண்டு வாழும் பூச்சி. பச்சை பொன்வண்டு நாவல் மரத்தில் இருக்கும்.நாவல் தழையை உண்ணும். இலந்தை பொன்வண்டு எளிதில் சிக்கக்கூடியது.அதை பிடித்துவந்து தீப்பெட்டிக்குள் அடைத்து வைப்போம்.தவிட்டில் போட்டு வைத்தால் மஞ்சள் நிறத்தில் முட்டை ஈனும்.முட்டைபோட்ட கொஞ்ச நாளில் இறந்தும் போகும். முட்டையை மட்டும் வைத்துக்கொண்டு ஆகாயத்தை அண்ணாந்து பார்த்துத் தவிப்போம். பச்சை பொன்வண்டு வைத்திருப்பவன் அதிருஷ்டக்காரன். பத்து போந்தா குண்டுகள்(கோலி) கொடுத்து பள்ளிப் பிள்ளைகள் வாங்க நான் நீ என்று முண்டியடிப்பார்கள்.ஏறக்குறைய அதை வைத்திருப்பவன் சிறுவர்கள் உலகில் கோடீஸ்வரன்.

எறுப்புகளில் பல வகையுண்டு.கருப்பெறும்பு.பிள்ளையார் எறும்பு.சீனி எறும்பு. சித்தெறும்.கட்டை எறும்பும்.சிவப்பெறும்பு,புத்தெறும்பு இப்படி பல.இதில் கட்டெறும்பு முருங்கை மரத்தில் இருக்கும்.சித்தெறும்பு மா,பலா மரத்தில் இருக்கும்.கடித்தால் அங்குளம் அங்குளமாக தடித்துவிடும்.கருப்பெறும்பு கடிக்காது.சீனி எறுப்பு கூட்டமாக ஆயிரக்கணகில் வாழும்.ஈரம் கண்ட இடம் அதற்கு சொர்க்கம்.மழை வருவதற்கு சில தினங்கள் முன்பாகவே தான் ஈன்ற முட்டைகளை கவ்விக்கொண்டுபோய் மேட்டில் ஒளித்து வைக்கும்.சிவப்பெறும்பும் கடிப்பதில் ருசியறிந்தது.தண்டி தண்டியாக தேகம் தடிக்கும் அளவுக்கு கடித்து வைத்துவிடும். குழந்தைகள் விடும் சிறுநீரில் இனிப்பு கலந்திருப்பதால் இரவில் பெல்லாவை கடித்து வைத்துவிடும்.இதனிடம் கடிவாங்காத பெல்லாவே இருக்க முடியாது வையகத்தில்.புத்தெறுப்பு என்பதும் கடிக்காது.இவையும் கருப்பாக மிதமான பருமனில் இருக்ககூடியவை.வலையில் ஈரமணலை மலைபோல வட்டமாக குவித்து வைத்து புற்றை அலங்கரிக்கும். இவ்வெறும்புகள் மனிதர்களை போல விவசாயிகள். புற்களை துண்டு துண்டாக கத்தறித்து கொண்டு போய் நிலத்துக்கடியில் காற்றோட்டமே இல்லாத்தால் உருவாகும் காளான்களுக்கு உணவாக இட்டு காளானை வளர்த்து அவற்றை பின் தனக்கு உணவாக்கிக் கொள்ளும். இந்த அளவுக்கு மதி நுட்பம் கொண்டவை இவ்வெறும்புகள்.இம்மாதிரியான எறும்புகள் தனது எடையை போல இரு மடங்கு எடையை சுமக்கும் சக்தி உடையவை. இவற்றின் புற்றில் உட்கார்ந்து கொண்டு வீட்டிலிருந்து கொண்டு சென்ற அரிசி பண்டங்களை உணவாக இடுவோம். தெய்வமாக தொழுவோம். கட்டெறும்புகளை சீசாவில் போட்டு மூடி உள்ளேயே சுழலவைப்போம். மூடிவைத்தால் ஈசன் படியளக்குறானா என்று சோதிப்போம். சித்தெறும்பு எலுமிச்சை,நார்த்தங்காய் இலைகளில் கூடுகட்டும்.இலைகலை கோர்த்து பஞ்சுகளை வைத்து இவைகட்டும் கூடு அபாயகரமானது.பெரும்பாலான எறும்புகள் வருசை மாறாமல் பணிக்கும்.அதன் தடத்தில் சின்ன தடங்கல் நேர்ந்தால்கூட தனது வழியை மாற்றியமைக்கும்.சில எறும்புகள் ஒத்தையில் இரை எடுக்கும். இதில் உழைக்கும் எறும்புகள்.உழைக்காத எறும்புகள் என்று தனித்தனி வகையுண்டு. ராணி எறும்பு என்றைக்கும் உழைக்காது.சந்ததியை பெறுக்குவதே அதன் தலையாயப் பணி.

மழைகாலங்கள் பல ஜீவராசிகளுக்கு உகந்தக் காலம்.ஈசல் தொடங்கி தலைபிரட்டை வரை உருவாகும் காலம். காலையில் வீதி விளக்குகளை மொய்க்கும் ஈசல்களை வாரிக்குமித்து பொடியாக்கி வருத்துண்போம்.அவ்வளவும் புரோட்டின்.மாட்டிறைச்சிக்கு இணையான சத்து இதற்கிருக்கிறது. ஒரு மழைக்கே தவளைகளுக்கு உயிர் முளைத்துவிடும். பச்சை தவளைகளை முன்பெல்லாம் இலகுவாய் பார்க்கலாம்.அதேபோல் குண்டு தவளைகள் இருந்தன. சொறித்தவளை என்றும் தவளையுண்டு.பறக்கும் தவளை,தேரை,கல்தேரை என்று பலவகை.தேரை நம் பிள்ளைகள் மீது விழுந்தால் உடம்பு தேராது என்பார்கள்.அதில் உண்மையில்லை.குண்டுத்தவளையை பச்சையாய் உரித்து சுத்தப்படுத்து மஞ்சளிட்டு அக்குள் கட்டியில் வைத்து கட்டுவார்கள்.கூச்சப்பட்டு கொப்புளம் உடையும் என்பார்கள்.அது உண்மையும்கூட.நானே நேரில் பார்த்திருக்கிறேன். மழைக்குட்டையில் உருவாகும் தலைபிரட்டைகளை பிடித்துவைத்து மீன் குஞ்சென்று வியப்போம்.பாட்டில் தண்ணிரீல் மெண்டுவந்து வளர்ப்போம். ஏரி,கன்மாய்,வயல்களில் நண்டு பிடிப்போம்.வலைநண்டுகள் நெஞ்சு சளிக்கு நல்லது. நண்டின் வயிற்று பகுதிகயில் மூடாக்கு போல ஒரு பை இருக்கும்.அதில்தான் தன் குஞ்சுகளை மறைத்து வைத்திருக்கும் தாய் நண்டு.அவற்றை பச்சையாகவே வாரி வாய்க்குள் போட்டுமெல்வோம்.பால்போல ஈரம் உழலும் நாக்கில்.

அடுத்து மரவட்டைகள். ரயில் வண்டிப்பூச்சி என்பது இதன் சிறப்புபெயர். கருமரவட்டை.கட்டை மரவட்டை என இரு மரவட்டைகள் ஊரில் உலாத்தும். மரவட்டைகளை கையில் நசுக்காத பிள்ளைகளே இல்லை.அதன் மீது எப்போதும் குழந்தைகளிக்கு ஓர் ஈர்ப்புண்டு. பறவைகள் என்று பார்த்தால் சிட்டுக்குருவி, தேன்சிட்டு,தைய லான் குருவி, பனங்காடை, மைனா, தவிட்டுக்குருவி, தூக்கணாங்குருவி,தையல் சிட்டு,சோளக்குருவி,பூங்குருவி,சிவப்புச் சில்லை,புள்ளிச் சில்லை,கரிச்சான்,கருவாட்டுவால்,ஓலைகரிச்சான்,சிகப்பு மீசை சின்னான்,சிகப்பு புட்டம் சின்னான், மாம்பழத்தான், மாங்குயில், கொண்டலாத்தி, பஞ்சாங்கம், சுடலைக்குயில், கருங்குயில், மீன்கொத்தி, ஆட்காட்டி,மரங்கொத்தி,மரந்தொற்றி,ஆலா,காய்ச்சுள்,செம்போத்து,மணிப்புறா,மாடப்புறா,கரும்பருந்து,செம்பருந்து,வல்லூறு,தேன்பருந்து,குடுமிப்பருந்து, பூனைப்பருந்து, மயில், செங்கல்நாரை, வர்ணநாரை, கூழைக்கெடாவக்கா, வாத்து, உண்ணிக்கொக்கு,நரையான்,மடையான்,கானாங்கோழி,நாமக்கோழி,நீர்க்கோழி,ஆண்டிவாத்து,பவழக்கால் உள்ளான்,அரிவாள் மூக்கன்(அன்றில்),துடுப்புமூக்கு நாரை,ஓட்டைவாய் நாரை,வானம்பாடி,இருவாய்ச்சி,சோலைப்பாடி,மரகதப்புறா,காடை,கெளதாரி,கீச்சாங்குருவி,வால்காக்கை,கருப்புக் காக்கை,அண்டங்காக்கை,கிளி,புள்ளி ஆந்தை,கொம்பு ஆந்தை,கூகை இத்தனை வகை பறவைகள் இருந்தன.

கழுத்தில் நாமம் இருக்கும் கருடனை தர்சிக்க ஊர் ஆற்று பாலத்தில் பெரும்கூட்டம் வியாழன் மாலைதோறும் கூடும்.கருடன் ஆற்றைக்கடந்தல் முடிந்தக்கையோடு முழுக்கூட்டம் சில்லாய் நின்ற இடம் தெரியாமல் தெரிக்கும்.நாங்களும் கருடன் பார்க்க மணிக்கணகில் காத்துநிற்போம். தூக்கணாங்கூட்டை எடுக்க ஒவ்வொரு பனைமரமாக அலைவோம்.ஓரே மரத்தில் நூறு இரநூறு என கூடுகள் தலைகீழாய் தொங்கும்.கழற்றிக்கொண்டு எடுத்துவந்து வீட்டில் மாட்டுவோம்.காக்கை கூட்டில் முட்டை எடுப்போம்.குருவி முட்டைகளை அவித்து தின்போம்.

தட்டான்,தும்பி,பட்டாம்பூச்சி,தேன்பூச்சி இவை பறக்கும் தோட்டம்தான் பிள்ளைகள் குதூகலிக்கும் கூடாரம்.தும்பியை பிடித்து வாலில் செடிக்கட்டி பறக்கவிடுவோம்.சிலந்தி வலை தேடித்தேடி திரிவோம்.இதில் கருப்பு,சிகப்பு இரு நிறத்தில் உண்டு.சிகப்பு கடித்தால் நெஞ்சடைத்து சாக நேரும்.அந்த அளவுக்கு இதில் விஷமுண்டு. எட்டுக்காலியை பிட்டித்து காலை ஒடித்து கடிகாரம் காட்டவைப்போம்.உயிர்ப் பிரிந்தக்கால் கொஞ்ச நாழி தானே சுழலும் இல்லையா அதுதான் எங்களுக்கு மணிக்கூண்டு.

பறப்பன ஊர்ன தவிற நடப்பன சகவாசமும் உண்டு.நாய், பூனை,ஆடு,மாடு என்று அவை ஒருபுறம். எங்கள் வீட்டில் நிறைய பூனைகள் இருந்தன.இரண்டு நாய்கள் இருந்தன. மனிதர்களிடம் அன்புக்காட்டுவதில் பூனைக்கு நிகரான பிராணியில்லை.நமது ஒவ்வொரு சொல்லையும் கவனிக்கும் சாமர்த்தியம் பெற்றதது.

மழலையாக இருந்த போது நாங்கள் அதிகம் மனித சகவாசம் கொள்ளமலே இருந்திருக்கிறோம் என்பது இப்போது நினைக்கையில் வியப்பாக இருக்கிறது.இன்றைய குழந்தைகளுக்குதான் மனித சுவாசமும் கிட்டவில்லை.இயற்கையின் வாசமும் எட்டவில்லை!

17 comments:

babu said...

//மூதாதையரின் மூச்சுக்காற்றை கேட்டு வாங்கி வளர்ந்த துளசியும் செம்பருத்தியும் வெறு செடிகொடிகள் அல்ல;தலைமுறை தலைமுறையாக கை மாற்றி மாற்றி கொடுக்கப்பட்ட சீதனம் //
அருமையான சிந்தனை நண்பா ..!!

கடற்கரய் said...

பாபு,உங்களின் வாசிப்பிற்கு நன்றிகள் பல

அ.வெற்றிவேல் said...

அற்புதமான கட்டுரை..பாம்பைக் கூட வணங்கி வழிபட்ட சமுதாயம்.. புஞ்சையைக் கூட காடுன்னு சொன்ன வரலாறு ந்ம்முடையது.துளசியும் செம்பருத்தியும் நம் சீதனங்கள்.. ஓணான் பிடித்து விளையாடிய்வன்.. பொன்வ்ண்டு பிடித்து அதை தீப்பெட்டியில் வைத்து அதைப் பாதுகாப்பது .என்னை சிறுவயதிற்கே அழைத்து சென்று விட்டீர்கள்.. என் பையன்களுக்கு கம்ப்யூட்டரும் காரும் சொல்லிக் கொடுத்த நேரத்தில் ஒரு விழுக்காடுகூட பூச்சி தாவரங்கள் பற்றிச் சொல்லிக் கொடுக்க வில்லயே என்ற குற்ற உணர்ச்சியைத் தூண்டியது தங்கள் பதிவு மிகவும் ஆழமான பதிவு..

கடற்கரய் said...

அ.வெற்றிவேல்,உங்களின் பகிர்வுக்கு முதலில் நன்றி.என்னுடைய பூச்சிகளின் உலகம் உண்மையில் இதுபோல் இருமடங்கு நீளும் அளவுக்கு தகவல்கள் நிரம்பியது.இனி அவற்றையும் சேர்த்து எழுதலாம் என உள்ளது உங்களின் தூண்டுதல்!

M.G. said...

மரவட்டையைப் பற்றிய பத்தி என் இளமைக் காலத்தை நினைவூட்டியது.என் அப்பா சாப்பிடும் போது சோற்றில் மரவட்டை இருந்ததை அறியாம உண்டு அம்மாவுக்கு விட்ட டோஸ் நினைவுக்கு வந்தது. ஒரு சேர அம்மாவையும் அப்பாவையும் நினைக்க வைத்தமைக்கு நன்றி!

umavaratharajan said...

நண்பர் கடற்கரய்,
மிகவும் அருமையான பதிவு. என்னுடைய பால்ய காலத்துக்கு அழைத்துச் சென்று விட்டீர்கள்.சக ஜீவராசிகளை பொருட் படுத்தும் மன நிலை அருகிக் கொண்டு போகும் ஒரு சூழலில் உங்கள் பதிவு ஆசுவாசமூட்டுகின்றது.வாழ்த்துகள்.
அன்புடன்,
உமா வரதராஜன்

kalapria said...

நீர் பின்னுமந்நிலை பெற வேண்டீரோ... என்று பாரதி பாடிய மாதிரி பிள்ளைப்பிராய நினைவுகளை... சுகமாகக் கிளர்த்தும்....பதிவு.. எழுதிக் கொண்டே இருங்கள் கடற்கரய்

கடற்கரய் said...

மரவட்டை அனுபவதை மட்டும் தனி கட்டுரையாக எழுதவேண்டும்,எம்.ஜி!
உங்கள் கருத்துக்கு நன்றி

கடற்கரய் said...

உண்மைதான் உமா வரதராஜன்.இன்றைக்கு எலக்ட்ரானிக் பூச்சிகள் கம்ப்யூட்டரில் நம் குழந்தைகளுக்காகக் காத்துகொண்டுள்ளன.

கடற்கரய் said...

அண்ணாச்சி எல்லாம் உங்க புண்ணியம்.நினைவின் தாழ்வாரங்கள்!

Mayoo Mano said...

அற்புதமான பதிவு..! உண்மையில் கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்ட பல சம்பவங்கள் வேறு விதமான சூழ்நிலையில் என்றாலும் அனுபவித்ததை மீளப் நினைவில் கொண்ட உணர்வு. ஓணானிற்கு மரணவீடு செய்வது போல நாம் ஐஸ்கிரீம் குச்சிகளை வைத்து செய்வோம். வீடு கட்டிக் குடிபூரல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் கொட்டிக் கிடந்த எஞ்சிய மணலில் செய்த நினைவு. அருமையான பதிவு. நிறைய நினைவுகளை எண்ணிப் பார்க்கிறேன்.!

கடற்கரய் said...

eமாயோ மனோ,இந்தக் கட்டுரையின் நோக்கமே உங்களை போன்ற சகாக்களின் அனுபவத்தை கிளர்த்துவதுதான்.நன்றி உங்களுக்கு

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அருமையாக பழைய கிராமிய நினைவுகளை மீட்டுள்ளீர்கள். தேனீ; குழவி; சிலந்தியை விட்டுவிட்டீர்கள்.
இன்றும் வண்ணத்திப்பூச்சியின் இளம் பருவ மயிர்கொட்டிப் புழுக்களை அவை தான் பின் வண்ணத்திப்பூச்சியாக வருபவை என அறியா வயதில் எரித்ததை நினைக்கையில் கவலையாக இருக்கும்.
இப்போ நான் 50 கடந்தவன் என் வீட்டு பல்கனியில் உள்ள பூச்செடி நோக்கி வரும் ஒரு சில தேனீக்களை ரசிப்பேன். அந்தச் செடிகளில் வலையிட்டுக் காத்திருக்கும் ஒரு சில சிலந்திகளுடன் விளையாடுவேன். சுவாரசிகமாக இருக்கும் சிலந்திவலையில் தூசி தும்பைப் போட்டால் , சிலந்தி அதிர்வுக்கு ஓடி வந்து , அது ஏதாவது சிறு பூச்சியா? என பார்த்துவிட்டு அத் தூசியையோ; தும்பையோ எடுத்து வலைக்கு வெளியே போட்டு விட்டு மீண்டும் மறைந்து இருக்கும்; தன் வலை (பொறி) எப்போதும் அடையாளம் தெரியா வண்ணம் மிக துப்பரவாக வைத்திருப்பதில் சிலந்திக்கு நிகரில்லை.பூச்சி சிக்கினால் அதை உடனே வந்து கடித்துக் கொன்று பின் வாயிலிருந்து வரும் பட்டு நூலால் சுற்றி தன் இருப்பிடத்தில் வைத்து விடும்.
ரசித்துக் கொன்டே இருக்கலாம்....அவற்றின் உலகத்தை.

கடற்கரய் said...

அடுத்தபதிவு எழுதும் அலவுக்கு தகவல்கள் உருண்டு நிற்கிறது,யோகன் பாரிஸ்..நிச்சயம் இன்னும் எழுதுவேன்

Thekkikattan|தெகா said...

வெரி நைஸ் ... :)

ezhil said...

மரவட்டை குறித்து அறிய கூகுளில் தேடிய போது உங்களின் இந்தப் பதிவைப் படித்தேன். உணர்வுப் பூர்வமான பதிவு. உங்களின் அணிநிழற்காடு ஓசை அமைப்பின் தலைவர் காளிதாஸ் மூலம் கிடைக்கப் பெற்று படித்தேன். காடு குறித்து அவரின் ஆழம் தெரிந்தமையால் அதன் மூலம் பெரும் தகவல் கிடைக்கப் பெற்று அதனை என் பதிவில் விமர்சித்தேன். தங்களைப் பற்றி தெரியாததாகையால் நான் யார் குறித்த செய்திகளையும் பரிமாறாமல் அப்புத்தகத்தில் இருந்த செய்திகளை மட்டும் பகிர்ந்தேன் தங்களின் இப்பகுதி உங்களுக்கு இயற்கையுடனான காதலை எடுத்தாளுகிறது. இதனை அனைவரும் அறியும் வண்ணம் ஓசை அமைப்பின் முக நூல் பக்கத்தில் இப்பக்கத்தை பகிர்கிறேன் நன்றி

கடற்கரய் said...

நன்றி! உங்களின் தேடலுக்கும் அன்புக்கும்!