Tuesday, August 25, 2009

"தண்ணீரைத் தனியார் மயமாக்குகிறார்கள்"-பி. சாய்நாத்





சர்வதேசப் புகழ்பெற்ற பத்திரிகையாளரான பி. சாய்நாத் சாதாரண மக்கள் பிரச்சினைகளைப் பற்றி எழுதிவரும் கட்டுரைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. வறட்சி பற்றிய அவரது கட்டுரைகள் “Everybody loves a good drought” என்ற நூலாக வெளிவந்துள்ளன. தற்போது தலித் பிரச்சினை குறித்து இந்து நாளேட்டில் அவர் எழுதிவரும் கட்டுரைகள் நூலாக வெளிவரவுள்ளன. சென்னை வந்திருந்த சாய்நாத்திடம் (தலித் இதழ் எண் 6, ஜூன் 2003இல் வெளியிடுவதற்காக) இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது. ஆங்கிலத்தில் இதனைப் பதிவு செய்தவர் : டாக்டர் ஆர். அழகரசன், தமிழாக்கம் : ரவிக்குமார்

இந்தியாவின் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றான வறட்சி என்பதை நீங்கள் அடையாளம் கண்டது எப்படி? அதிலிருந்து சாதிப் பிரச்சினைக்கு எப்படி வந்தீர்கள்?

வறட்சி பற்றியதாக முன்வைக்கப்பட்டுள்ள எனது புத்தகம் உண்மையில் வறட்சி பற்றியதல்ல. வறட்சி என்பது ஒரு உருவகம். அது அத்தனைவிதமான கொள்ளைகளையும் பற்றிய ஒரு உருவகம். நீங்கள் வறட்சியால் துன்பப்படுவீர்கள், தொடர்பு ஊடகங்களின் வழியாக வறட்சி பற்றிய பேச்சு மட்டும் பரவிக் கொண்டிருக்கும்.

ஆக, வறட்சி என்பது தானாக வரவில்லை. அது சிலரால் ஏற்படுத்தப்படுகிறது என்கிறீர்களா?

இரண்டுவிதமான வறட்சிகள் உள்ளன. ஒன்று உண்மையான வறட்சி. மற்றது போலியான வறட்சி. “இந்த நூற்றாண்டின் மிக மோசமான வறட்சி” என்று அடையாளப்படுத்தப்படும் இடங்கள் பலவற்றில் ஆண்டுக்கு 1100 மி.மீ. மழை பொழிகிறது. லோனாவாலாவை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஒரு மலைப் பிரதேசம். ஒவ்வொரு வருடமும் அது வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியின்கீழ் வகைப்படுத்தப்படுகிறது. லோனாவாலாவில் ஆண்டுக்கு 2400 மி.மீ. மழை பொழிகிறது. ஒரு பிரதேசத்தை வறட்சி பாதித்த பிரதேசமாக அறிவிப்பதென்பது ஒரு அரசியல் முடிவு. ஏனென்றால், அப்படி அறிவிக்கப்பட்ட பகுதிக்கு நிவாரணம் கிடைக்கும், பணம் கிடைக்கும், நலத்திட்டங்கள் வரும். ஆனால் உலகில் வேறு எங்கும் 2400 மி.மீ. மழை பொழிவதில்லை. கலஹண்டியில் ஆண்டுக்கு 1100 முதல் 1300 மி.மீ. வரை மழை பொழிகிறது. ராமநாதபுரத்தில் 450 மி.மீ. மழை பெய்கிறது. ஆனால் கலஹண்டியில் மக்கள் வறட்சியால் சாகிறார்கள். ராமநாதபுரத்தில் சாவதில்லை. ஏன்-? வறட்சி என்றாலே உங்களுக்கு கலஹண்டி நினைவுக்கு வரும். ராமநாதபுரத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக வறட்சி நிலவுகிறது. ஆனால் கலஹண்டிபோல மக்கள் மடிவதில்லை. நான் சொல்வது இதுதான். “இயற்கைமீது பழி போடாதீர்கள். மனிதர்களைப் பாருங்கள். ராமநாதபுரத்தில் உற்பத்தி ஆவதைப்போல ஐந்து மடங்கு உணவுப் பொருட்கள் கலகண்டியில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனாலும், மக்கள் அங்கே சாகிறார்கள். இது இயற்கையின் பிரச்சினையா? மனிதர்களின் பிரச்சினையா? கலஹண்டியில் நடப்பதென்ன? அங்கு உற்பத்தியாகும் பொருட்கள் யாவும் வட்டிக்காரர்களிடம் போய்ச் சேர்கிறது. இப்போது கலஹண்டிக்கு போனீர்களேயானால் ஏழு ஆண்டுகளு’குப் பிறகு விளையப்போகும் தானியத்தை அடகுவைத்து இப்போது கடன் வாங்கும் விவசாயிகளைப் பார்க்கலாம்.
ராமநாதபுரத்திலும் நிலைமை அதுதான். மிளகாய் விளைவிக்கும் விவசாயிகள் மூன்று ஆண்டுகளு’குப் பிறகு வரப்போகும் விளைச்சலை இப்போதே தரகர்களிடம் அடகுவைத்துவிட்டார்கள். எப்படி அந்த விவசாயிகள் பிழைத்திருக்கிறார்கள்?
மக்கள் தம் வாழ்நாளில் பலமுறை வறட்சியைப் பார்த்திருக்கிறார்கள். அதை சமாளிக்க அவர்களால் முடியும். நான் ஒரு விவசாயியைப் பார்த்துக் கேட்டேன். “வறட்சிதான உங்களின் முதல் எதிரியா?” அவர் சொன்னார், “இல்லை, அது எனது எதிரிகளின் வரிசையில் ஐந்தாவதாகத்தான் வருகிறது.” முதல் எதிரி அரசாங்கம் தான். அரசாங்கம் என்றால் ஒரு குறிப்பிட்ட அரசாங்கத்தைக் கூறவில்லை. விவசாயத்தைப் பற்றிய அரசின் அணுகுமுறைகள், எப்படியுள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

அவர்களுக்கு அரசியல் யதார்த்தமும் அரசாங்க யந்திரம் என்றால் என்ன என்பதும் தெரியும் என்கிறீர்களா?

ஆமாம். “நாங்கள், எங்களது அப்பன், பாட்டன் காலத்தில் இதைவிட மோசமான வறட்சியைப் பார்த்திருக்கிறோம்“ என அவர்கள் சொல்கிறார்கள். தொண்ணூறுகள் முழுவதும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகள் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டதைப் பார்த்தோம். அதனால்தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இப்போது அவர்கள் மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நாட்டிலுள்ள ஏழை மக்கள் தொடர்ந்து வரும் அரசாங்கத்தின் மோசமான கொள்கைகளால் பாதிக்கப்படுகின்றனர். தொண்ணூறுகளைப் பொய்களின் காலம் என்று சொல்லலாம். திட்டக் கமிஷனின் வறுமை பற்றிய மதிப்பீட்டைப் பார்த்தால் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. திட்டக் கமிஷனின் மதிப்பீடு உண்மையென்றால் அமெரிக்காவை ராஜஸ்தான் மிஞ்சிவிடும். வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் உள்ளதைவிட ராஜஸ்தானில் குறைவு என திட்டக் கமிஷன் கூறுகிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில் ராஜஸ்தானைவிட, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகமாக இருக்கும் என்கிறது திட்டக் கமிஷன். அதாவது, நாம் அமெரிக்காவைவிட வளமாக இருப்போம்! என்ன ஒரு வேடிக்கை!

இதில் அரசாங்கத்தைத்தான் நாம் குறை கூற வேண்டுமா-?

பொய் சொல்லப் பழகிவிட்டால் பொய் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். திட்டக் கமிஷனின் மதிப்பீட்டின்படி 2011இல் இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களின் சதவீதம் 4.5 ஆக இருக்கும். ராஜஸ்தானில் அது 1.5 சதவீதமாக இருக்கும். இந்தியாவிலேயே வறிய மாநிலம் அதுதான். அமெரிக்க நிலவரம் எப்படியிருக்குமென்பதைப் பார்ப்போம். அமெரிக்க அரசு தந்துள்ள புள்ளி விவரங்களின்படி 2011இல் அமெரிக்காவில் 12 முதல் 15 சதவீதம் மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பார்கள். ஆக நாம் அமெரிக்காவைவிட வளமான நிலையில் இருப்போம். இது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது.
வறட்சியைப் பொருத்தவரை நாம் இயற்கையைக் குறை கூறிக்கொண்டு, மனிதர்கள் திட்டமிட்டு செய்யும் மோசடியை மறைத்து வருகிறோம் என்பதையே நான் பேசியிருக்கிறேன். வறட்சி பற்றி ஆராய்ந்தபோது அதில் பொதிந்திருக்கிற வேறுபல கூறுகளை நான் புரிந்து கொண்டேன். அவற்றுள் ஒன்றுதான் “சாதி” எனது நூலில் (ணிஸ்மீக்ஷீஹ்தீஷீபீஹ் றீஷீஸ்மீs ணீ ரீஷீஷீபீ பீக்ஷீஷீuரீலீt) பல இடங்களில் அது வெளிப்படுகிறது என்ற போதிலும் வறட்சி பற்றிய ஆராய்ச்சியின் பகுதியாக அதைப் பேசுவது போதாது. தனியாகவே சாதியைப் பற்றி ஆராய்ந்தாக வேண்டும் என நான் முடிவு செய்தேன்.

நீங்கள் கள ஆய்வில் ஈடுபட்டபோது என்ன மாதிரியான பிரச்சினைகளை எதிர் கொண்டீர்கள்? நீங்கள் அதிகாரத்தில் உள்ளவர்களை மனதில் வைத்துக் கொண்டு எழுதினீர்களா? சாதாரண மக்களை நினைத்து எழுதினீர்களா?

ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒன்றை நான் கற்றுக் கொண்டேன்1983 - 84 ல் ஐந்து மாநிலங்களில் கடுமையான வறட்சி நிலவியது. அது எனது அறிவுக்கு சவாலாக இருந்தது. நான் மரபான பயிற்சி பெற்ற ஒரு பத்திரிகையாளன். எனக்கு எனது பயிற்சியின் போதாமை புரிந்தது. ஏனென்றால் அந்தப் பயிற்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கே பயன்படும். ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு கிராமத்தைப் பார்வையிட்டிருந்த ஒரு கலெக்டரின் அறிக்கையைத்தான் நாங்கள் சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.
ஒரு விவசாயி கிராமத்திலேயே முப்பது நாற்பது ஆண்டுகளாக வசிக்கிறார். அவர் சொல்வதைக் கேட்காமல் ஏன் கலெக்டரின் கருத்தைக் கேட்க வேண்டும்? அவர் ஒரு மாவட்டத்தில் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள்தான் இருப்பார். ஒரு விவசாயியை விடவும் கலெக்டருக்கு அதிகம் தெரியும் என நீங்கள் எப்படி நம்புகிறீர்கள்-? தட்பவெப்ப நிலைகளில் ஏற்படும் மாற்றங்களையும் அவற்றுக்கேற்ப பயிர்களில் செய்யவேண்டிய மாற்றங்களையும் ஒரு விவசாயி நன்றாக அறிந்திருப்பார். அவர்தான் நம்பகமான ஆதாரமாக இருக்க முடியும். கலெக்டர் அல்ல. ஷூ போட்டுக் கொண்டிருக்கும் கலெக்டர் பேசுவது தத்துவம். ஆனால் விவசாயி சொல்வது அனுபவம். இப்படித்தான் எனக்கு இந்த யோசனை வந்தது. ஆகவே 1993 ஜனவரியில் நான் எனது வேலையை ராஜினாமா செய்தேன்.

எதனால் வேலையை ராஜினாமா செய்தீர்கள்?

நான் வேலையை விடுவதற்கு 1991 இல் ஏற்பட்ட சம்பவங்களே காரணம். அது தாராளமயம் ஆரம்பித்த காலம். அப்போது பத்திரிகைகள் சமூகத்தின் உயர்மட்டத்திலிருந்த 5 சதவீதம் பேரைப் பற்றி மட்டுமே எழுதிக்கொண்டிருந்தன. அழகுராணிகள், சினிமா நட்சத்திரங்கள்... இப்படி, அந்த நேரத்தில்தான் சமூகத்தின் ஆகக்கீழே இருக்கும் 5% மக்களைப் பற்றி எழுதுவதென தீர்மானித்தேன். இந்த இருதரப்பில் எது முக்கியம் என்பதை வாசகர்கள் தீர்மானிக்கட்டும் என நான் நினைத்தேன். பத்திரிகைகளின் அணுகுமுறையை என்னால் மற்ற முடியாது. ஆனால் தனிப்பட்ட முறையில் நான் அடித்தட்டிலிருக்கும் 5% மக்களைப் பற்றி எழுதலாமில்லையா.

வெகுசன பத்திரிகைகளில் அதற்கான இடத்தை எப்படிப் பெற்றீர்கள்?

நீங்கள் சண்டை போட்டால்தான் அது கிடைக்கும். நான் எண்ணியிருந்ததை எழுத இடம் கிடைக்கும் என்றுதான் நம்பினேன். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது. பன்னிரெண்டு ஆண்டுகளாக நான் பத்திரிகை தொழிலில் இருந்தேன். என்னை யாவரும் அறிவார்கள். ஆனால் அந்தக் கணக்கெல்லாம் தவறாகிவிட்டது. ஒவ்வொரு பத்திரிகையாக ஏறி இறங்கினேன். அவர்கள் எனது “ப்ராஜெக்டை” நிராகரித்துவிட்டார்கள். நான் “வறட்சி” என்ற சொல்லைக்கூட பயன்படுத்தியிருக்கவில்லை. இருந்தாலும் அதுதான் பதிலாக இருந்தது. “இந்தியாவின் வறிய பத்து மாவட்டங்களில் உள்ள ஏழை மக்களின் நிலையைக் கண்டறிவது” என்பதுதான் எனது “ப்ராஜெக்ட்”. “வாசகர்களுக்கு இதெல்லாம் பிடிக்காது” என பத்திரிகை ஆசிரியர்கள் கூறிவிட்டனர். “தேசபக்திதான் அயோக்கியர்களின் கடைசிப் பு-கலிடம்“ என்ற ஜான்சனின் வார்த்தைகளை சற்றே மாற்றிக் கூறுவதானால், “வாசகர்களுக்குப் பிடிக்காது என்பதுதான் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்“. தமது வாசர்கள் யாரென்பதை மார்க்கெட்டிங் ஆட்களிடம் கேட்டுத்தான் அவர்கள் தெரிந்து கொள்கிறார்கள். எனது நூலின் இங்கிலாந்து பதிப்பில் முதல் அத்தியாயத்துக்கு நான் அதனால்தான் இப்படித் தலைப்பிட்டேன்; “வாசகர்கள் அறிய விரும்பாதது”.

எப்படி உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்து?

நிகில் சக்ரவர்த்தி போன்றவர்களால் தான் நான் அந்த கட்டுரைகளை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. “டைம்ஸ்” ஸ்காலர்ஷிப்புக்கான தேர்வுக் குழுவில் நிகில் சக்ரவர்த்தி, ஏ.கே.ஜெயின் போன்றவர்கள் இருந்தனர். அவர்கள் சுதந்திர போராட்ட தலைமுறையைச் சேர்ந்தவர்கள். ஆகவே, அவர்களுக்கு என் “ப்ராஜெக்ட்” பிடித்திருந்தது.
ஏழை மக்களைப் பற்றிய காந்தியப் பார்வை காரணமாகத்தான் அவர்கள் உங்கள் “ப்ராக்ஜெக்டை” ஏற்றார்களா?
அப்படிச் சொல்ல முடியாது. அந்த குழுவில் டேரியல் டி. மோன்ட் போன்ற சூழலியல் வாதிகளும் இருந்தனர். அவர்கள் அந்த கோணத்தில் இதைப் பார்த்தனர். மொத்தத்தில் ஒரு காந்திய அணுகுமுறை அவர்களுக்கு இருந்தது என்று சொல்லலாம்.

ஏழைகள் என நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள்? அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் எடுக்கப்படும் விதம் பற்றி மட்டும்தான் நீங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறீர்களா? வறட்சியின் பல்வேறு பரிமாணங்களையும் நீங்கள் காணவில்லையா?

இந்த விஷயங்கள் எல்லாமே கொள்கைகளோடும் தொடர்புகொண்டேயிருக்கின்றன. உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அனந்தபூர் தொடர்ந்து வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். ஆனால் கடந்த 150 ஆண்டுகளில் அங்கே பெய்யும் மழையின் அளவில் குறிப்பிடும் படியான மாற்றம் எதுவுமில்லையென புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதை எப்படி அணுகுவது? இயற்கை விஞ்ஞானமோ, புவியியலோ வறட்சி இஷ்டம்போல ஏற்படக்கூடிய ஒன்றல்ல என்றே கூறுகின்றன. அதுவொரு இயற்கையான விஷயம். அது நடக்கும். ஆனால் நாம்தான் அதற்கேற்ப திட்டமிட வேண்டும். நீங்கள் வட இந்தியாவில் இருந்தால் குளிர் காலத்துக்கென கம்பளி ஆடைகளை வாங்கி வைத்துக் கொள்வதில்லையா? அதேபோல நீங்கள் வறட்சியை உத்தேசித்தும் திட்டமிடவேண்டும். சில நேரம் எதிர்பாராத வறட்சி ஏற்படலாம். உங்களுக்குத் தெரிந்தே நீங்கள் திட்டமிடவில்லையெனில் நீங்கள் ஒரு முட்டாளகவோ அல்லது மோசமான பேர்வழியாகவோதான் இருக்க வேண்டும். நீங்கள் அந்தப் பிரச்சினையை தட்டிக் கழிக்க விரும்புகிறீர்கள் என்றுதான் பொருள். இப்படியிருக்கும்போது நாட்டிலுள்ள நதிகளை இணைப்போமென நீங்கள் எப்படிக் கூற முடியும்? கடந்த நாற்பது ஆண்டுகளாக நர்மதை நதிப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. எல்லா நதிகளிலும் நீர் பெருக்கெடுத்து ஒடுவதாக யார் சொன்னது? நதிகளை இணைப்பதற்கு நீங்கள் திட்டமிட்டுள்ள செலவு எவ்வளவு? ஆறு லட்சம் கோடி ரூபாய். இது உங்கள் தேசிய உற்பத்தியில் கால் பங்கைவிட அதிகம். பெரிய திட்டங்களுக்கான செலவுகள் இந்தியாவைப் பொருத்தவரை திட்டமிட்டதைவிட இருநூறு முதல் ஐநூறு சதவீதம்வரை அதிகரித்தன என்பதே வரலாறு. நதிகளை இணைத்து முடிக்கும் போது அந்த செலவு நாட்டின் மொத்த உற்பத்தியையும் தாண்டியிருக்கும். ஐந்து பைசா அளவுக்குக் கூட உத்தரவாதமில்லாமல் இந்த திட்டத்துக்குள் நீங்கள் இறங்குகிறீர்கள். இதன்மூலம் நீங்கள் புதிதாக பத்துப் பிரச்சினைகளை உருவாக்குகிறீர்கள். காவிரிப் பிரச்சினை ஒன்றால் மட்டுமே பல உயிர்கள் பறி போயிருக்கிறது. நதிகளை இணைக்கும் திட்டமோ காவிரிப் பிரச்சினைபோல ஆயிரம் பிரச்சினைகளைக் கொண்டு வரும்.

நதிகளை இணைப்பது சாத்தியமே இல்லை என்கிறீர்களா?

நதிகளின் போக்கை திசை திருப்பினால் அதனால் பாதிக்கப்படுவது காவிரியின் டெல்டா பகுதியில் இருக்கும் விவசாயிகள் மட்டுமல்ல. பத்து மாநிலங்களில் அது பிரச்சினையைக் கிளப்பும். ஐம்பது ஆண்டுகளாகியும் காவிரிப் பிரச்சினையைத் தீர்க்க முடியாதவர்கள் புதிதாக எழும் பிரச்சினைகளை எப்படி தீர்ப்பார்கள்?
இரண்டாவதாக, இது வெறுமனே என்ஜினியரிங் பிரச்சினை அல்ல. சமூக, கலாச்சார, சுற்றுச்சூழல் பிரச்சினை. எந்தவொரு மடையனும் நதிகளை இணைத்துவிடலாம். ஆனால் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பது யார்? அது என்ஜினியரால் ஆகிற காரியமா?
துங்கபத்ரா அணை கட்டப்படுவதற்கு முன்பு ஆந்திராவிலுள்ள ரெட்டிகளும், ராவ்களும் அதை அறிந்து அங்கே விழுந்தடித்துக் கொண்டு ஓடினார்கள். அங்கே வாழ்ந்தவர்கள் தலித்துகளும், ஆதிவாசிகளும்தாம். அவர்களிடமிருந்து ஒரு கிரவுண்டு நிலம் வெறும் ஐம்பது ரூபாய் என்ற விலையில் இந்த காண்ட்ராக்டர்களால் வாங்கப்பட்டது இன்னும் ஆறே மாதங்களில் தங்களது நிலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு கொண்டதாக மாறப்போகும் விஷயம் அந்த ஏழை மக்களுக்குத் தெரியாது. இன்று தங்களது நிலத்தில் தாங்கள் கூலிகளாக வேலை செய்யவேண்டிய நிலை அவர்களுக்கு. இப்படியான சிக்கல்கள் இந்த நாட்டில் இருக்கின்றன. நீங்க்ள சரியாகத் திட்டமிடாவிட்டால் கலாச்சார சமூகப் பிரச்சினைகளை என்ஜினியர்களின் தீர்வுக்கே விட வேண்டியிருக்கும்.

இது சரியான புரிதல் இல்லாததால் ஏற்படுகிறதா? அல்லது “உயர்சாதியினரின்” சதிவேலை எனப் பார்க்கிறீர்களா?

உலகமே செய்யத் தயங்குகிற ஒன்றை நீங்கள் செய்கிறீர்களென்றால் நீங்கள் காட்டுமிராண்டியைப் போல சிந்திக்கிறீர்கள் என்று அர்த்தம். இங்கு ஒரு கல்வி அமைச்சர் இருக்கிறார். ராமனின் காலத்திலேயே அணு ஆயுதங்கள் இருந்ததாக அந்த அமைச்சர் எண்ணுகிறார். அவர் இயற்பியல் துறையில் பேராசிரியர் என்பதுதான் வேடிக்கை.
இந்த திட்டங்கள் யாவும் கான்ட்ராக்டர்களுக்கு பணத்தைக் கொண்டுவருகின்றன. அந்த குறிப்பிட்ட சில கான்ட்ராக்டர்களுக்கு அந்த ஒப்பந்தங்களை வழங்கும் அரசியல்வாதிகளுக்கு பணத்தைக் கொண்டு வந்து சேர்ககின்றன. இங்குதான் சதித் திட்டம் இருக்கிறது.

இவற்றை எதிர்த்து மக்கள் போராட வில்லையா?

இந்த சதித் திட்டங்களை அவர்கள் முழுமையாக அமுல்படுத்துபோதுதான் அது தெரியும். தங்களது நீரையும், பயிர்களையும் இழக்கப்போகிறோமென்பதை மக்கள் உணர்ந்து கொண்டால் என்ன நடக்குமென்று பாருங்கள். ஒருபுறம் நதிகளை தேசிய மயமாக்குவதைப் பற்றி பேசிக்கொண்டு மறுபுறம் நதிகளை தனியார் மயமாக்கி வருகிறார்கள். சட்டிஸ்கார் மாநிலத்தில் ஒரு ஆற்றில் இருபது கிலோ மீட்டர் நீளத்தை தனியாருக்கு விற்றுவிட்டனர். மக்களை மட்டும் அவர்கள் விற்கவில்லை. நீரையும் விற்கிறார்கள். நதிகளை தேசியமயமாக்குவார்களாம் தண்ணீரைத் தனியார் மயமாக்குவார்களாம். என்ன முட்டாள்தனம் இது?

அந்தப் பகுதிகளில் என்ன மாதிரியான போராட்டங்கள் எழுந்தன?

போராட்டங்கள் வருகின்றன. நாம் நமது சக மனிதர்களின் நலனில் எவ்வளவு அக்கறை கொண்டவர்களாக இருக்கிறோம் என்பதைப் பொருத்தது அது. ஒரிசாவில் தான் அவர்கள் கவனம் குவிந்திருக்கிறது. அங்கு அரசியல் விழிப்புணர்வு குறைவு. எனவே ஒரிசாவை அவர்கள் சோதனைக் கூடமாகப் பயன்படுத்துகிறார்கள். அதையே அவர்கள் பீகாரில் செய்தால் விளைவு வேறுவிதமாக இருக்கும். ஆந்திராவில் அரசியல் விழிப்புணர்வு அதிகம் எனவே அங்கு எதிர்ப்பும் அதிகமான உள்ளது. மின்கட்டண உயர்வை எதிர்த்து அங்கு மிகப் பெரும் போராட்டம் நடந்தது. 1998&2000ல் ஆந்திராவின் சில பகுதிகளில் நீரை தனியார் மயமாக்கினார்கள். நலகொண்டா பகுதியில் வாட்டர் மீட்டர் பொருத்தப்போனபோது அங்கிருந்த விவசாயிகள் அதை அனுமதிக்கவில்லை. மீட்டரைப் பொருத்தினால் உடைத்தெறிவார்கள் என்ற நிலை. அப்படித்தான் அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது.
இந்தியாவில் 70 முதல் 80 சத விவசாயிகள் மழையையும் ஏரிகளையும்தான் நம்பியுள்ளனர். ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் 100 சதவீத மக்கள் மழையைத்தான் நம்பியிருக்கிறார்கள். தண்ணீரை தனியார் மயமாக்குவது என்றால் மழையை தனியார் மயமாக்குவதாக அர்த்தம். மிச்சம் என்ன இருக்கிறது? ஆக்ஸிஜனையும் தனியாருக்குத் தந்துவிடவேண்டியதுதான்.

கிராமங்களில் பல இடங்களில் தலித்துகள் தண்ணீரைத் தொட முடியாத நிலை உள்ளது. அப்படி இருக்கும்போது தண்ணீரை தனியார்மயமாக்குவது எப்படி அவர்களை பாதிக்கும்?

ஊர் குளங்களில் நீர் எடுக்கக்கூடாது எனத் தடுக்கப்படும் தலித்துகள் ஆறுகளை நோக்கிச் செல்கிறார்கள். அவற்றையும் தனியார் மயமாக்கிவிட்டால் அவர்கள் தானே அதிகம் பாதிக்கப்படுவார்கள்? தனியார் மயமாக்கலால் தமது பிரதிநிதித்துவ உரிமையை இழந்து அதிகம் பாதிக்கப்படுவது தலித்துகள்தான்.

உங்கள் கவனம் வறட்சியைப் பற்றி எழுதுவதிலிருந்து சாதியைப் பற்றி எழுதுவதாக எப்படி மாறியது?

1997இல் சுதந்திர தினப் பொன்விழா சமயத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்காக “மறக்கப்பட்ட சுதந்திரம்“ என்ற தலைப்பில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடிய சாதாரண மனிதர்களைப் பற்றி ஒரு தொடர் எழுதினேன். 1942ல் நடந்த ஒரு கிளர்ச்சியைப் பற்றிய செய்திகளை சேகரிக்க காஸிப்பூர் சென்றிருந்தேன். முஜாகர் என்ற தலித் சாதியைச் சேர்ந்த ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் கூறிய ஒரு தகவல் என்னைத் தூக்கிவாரிப்போட்டது.
காஸிப்பூரில் சிறையன்று உள்ளது. அதில் இருநூறு பேரை அடைக்கலாம். அந்தப் பகுதியில் போராட்டம் நடக்கும்போதெல்லாம் சிறை நிரம்பிவிடும். இருநூறு பேர் இருக்கவேண்டிய சிறையில் மூவாயிரம் பேர்வரை அடைக்கப்படுவார்கள். மூன்று நான்கு நாட்களில் அவர்கள் விடுதுலை செய்யப்படுவார்கள். அப்போது அந்த சிறை எந்த நிலையில் இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். அந்த சமயங்களில் மூன்று நான்கு ஜீப்புகளில் ஜெயில் காவலர்கள் ஊருக்குள் சென்று அங்கிருக்கும் முஜாகர் சாதியைச் சேர்ந்த இருபது முப்பது பேர்களைப் பிடித்து வருவார்கள். அவர்கள் மீது திருட்டு வழக்கு போடப்படும். அவர்கள் ஜெயிலில் அடைக்கப்படுவார்கள். அந்த ஜெயிலில் நிரம்பியிருக்கும் கழிவுகளையெல்லாம் அந்த இருபது முப்பது தலித்துகள் சுத்தம் செய்ய வேண்டும். அந்த வேலை முடிந்ததும் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். இந்தத் தகவலை அவர் சொன்னபோது இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவமா அது என நான் அவரிடம் கேட்டேன். இல்லை அது இப்போதுதான் சில மாதங்களுக்கு முன்னால் நடந்தது என அவர் சொன்னார். நான் அது பற்றி விசாரித்தபோது அது உண்மைதான் எனத் தெரிந்தது. அதற்குப் பிறகுதான் இனிமேலும் தாமதிக்கக்கூடாது என்ற முடிவுடன் சாதிப் பிரச்சினையைப் பற்றி எழுத ஆரம்பித்தேன்.

சாதிப் பிரச்சினையின் முக்கியமான அம்சமாக எதை நீங்கள் கருதுகிறீர்கள்?

நமது சொல்லாடலில் சாதியைப் பற்றி நாம் அனுஷ்டிக்கும் மௌனம்தான் எனக்கு முதலில் தைத்தது. தலித்துகளைப் பற்றி ஆயிரக்கணக்கான “நியூஸ் க்ளிப்பிங்குகளை” நான் சேகரித்தேன். அவற்றில் “தீண்டாமை” என்ற சொல் ஒரு இடத்திலும் தென்படவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு அது ஒரு கெட்ட வார்த்தை. ஒவ்வொரு நாளும் தீண்டாமையை வாழ்வில் கடைபிடிப்பீர்கள். ஆனால் அதைப்பற்றிப் பேசமாட்டீர்கள், என்ன ஒரு கோமாளித்தனம் இது!
தீண்டாமை ஒரு சமூகக் கொடுமை மட்டுமே என நீங்கள் நினைத்தால் அது ஒரு தவறு. அது, அதைவிடவும் ஆழமான பிரச்சினையாகும். ஏராளமான மக்களை அடிமைகளாக வைத்து கூலி தராமல் அவர்களிடம் வேலை வாங்கும் வசதியை சாதி ஏற்படுத்தித் தருகிறது. சாராயம் ஒரு சமூக தீமை என்று சொல்லலாம். ஆனால் சாதியை அப்படி மட்டுமே கூறிவிட முடியாது.
உத்திரப்பிரதேசத்தில் ஜன்மாஷ்டமி வந்தால் கிராமத்தைக் காலிசெய்துவிட்டு தலித்துகள் ஓடுகின்றனர். ஏனென்றால் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் ஜன்மாஷ்டமி கொண்டாடுகிறார்கள். அங்கு அடிமை வேலை செய்ய தலித்துகளைத்தான் அவர்கள் பிடித்துக்கொண்டு வருகிறார்கள்.
இப்படி சுரண்டப்படும் கூலியற்ற இலவச உழைப்பை எந்தவொரு பொருளாதார நிபுணராவது கணக்கிட்டிருக்கிறார்களா?

தலித்துகளும், ஆதிவாசிகளும் பி.ஜே.பி.யால் திரட்டப்படுவதாக சொல்லப்படுகிறதே அது பற்றி உங்கள் கருத்து என்ன--?

இந்த மதச்சார்பின்மை பற்றி பார்வையில் மிகப்பெரும் ஓட்டை உள்ளது. அது மதம் சார்ந்த பிரச்சினையாக மட்டும்தான் பார்க்கப்படுகிறது. அப்படிப் பார்ப்பது ஒரு நடுத்தர வர்க்கப் பார்வைதான். மதக் கலவரங்கள் பற்றி பேசும்போது ஒருவர் ஏதேனும் ஒரு மதத்தை விமர்சிக்கலாம். ஆனால், சாதிக்கலவரத்தின்போது ஒரு சாதியை விமர்சித்துவிட்டு உருப்படியாகப் போய்ச் சேர முடியாது. மதச் சார்பின்மை என்பது மதம் மற்றும் சாதி இரண்டையும் ஆய்வு செய்ய வேண்டும். அப்படிச் செய்யாததால்தான் பி.ஜே.பி. தலித்துகளைத் திரட்டுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது.

அறிவுஜீவிகள் தலித் இலக்கியத்தைப் பற்றி பேசுவார்கள். தலித்துகள் மீதான வன்கொடுமைகளைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் அவர்கள அம்பேத்கரின் படைப்புகளை வாசிப்பதில்லை. நீங்கள் அம்பேத்கரை படித்திருக்கிறீர்களா?

தலித்துகளைப் பற்றிய எனது நூல் விரைவில் வெளிவரவுள்ளது. அதைப்பாருங்கள். அந்த நூல் “சாதி என்பது உழைப்புப் பிரிவினை அல்ல. அது உழைப்பாளர்களைப் பிரிவினை செய்வது” என்ற அம்பேத்கரின் வார்த்தைகளோடுதான் துவங்குகிறது. நான் அம்பேத்கரை மிகவும் முக்கியமாகக் கருதுகிறேன்.
1993&க்கும் 2003&க்கும் இடையில் நான் பலமுறை தமிழ்நாட்டில் பயணம் செய்துவிட்டேன். நான் இரண்டு விஷயங்களை கவனித்தேன். எந்தவொரு தேசியத் தலைவருக்கும் இல்லாத அளவுக்கு அம்பேத்கருக்கு ஏராளமான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்திய கிராமங்கள் தோறும் இதே எழுச்சியை நான் பார்க்கிறேன். அந்த சிலைகள் அரசாங்கத்தால் நிறுவப்பட்டவை அல்ல, மக்களே வைத்தவை.
மகாராஷ்டிராவில் அறியப்பட்டதுபோல தமிழ்நாட்டில் அம்பேத்கர் அறியப்பட்டதில்லை என்றபோதிலும் இங்கே இப்படியரு அங்கீகாரம். தேசம் தழுவிய பிம்பமாக அம்பேத்கரே விளங்குகிறார். மக்களின் விருப்பம் இப்படி இருக்கிறது. நாம் மக்களிடமிருந்து எவ்வளவு விலகி இருக்கிறோம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

ஏழை எளிய மக்களின் மீதான உங்களின் அக்கறையைக் காட்டும்விதமாக தனிப்பட்ட முறையில் ஏதேனும் செய்திருக்கிறீர்களா?

எனது நூலிலிருந்து எனக்குக் கிடைக்கும் ராயல்டி தொகையைக் கொண்டு, இளம் பத்திரிகையாளர்களுக்கான விருது ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறேன். பத்தாயிரம் ரூபாய் ரொக்கம், ஐகான் காமிரா, ஒரு டேக்ரெக்கார்டர் ஆகியவை அதில் அடங்கும். அது பிராந்திய மொழிகளில் இயங்கும் பத்திரிகையாளர்களுக்கானது. இதுவரை மூன்று பேருக்கு அந்த விருதினை வழங்கியிருக்கிறோம். இருவர் ஆதிவாசி சமூகத்தையும் ஒருவர் தலித் சமூகத்தையும் சேர்ந்தவர். விருதுபெற்ற அந்த பத்திரிகையாளர்களுக்கு அவர்களது சாதியின் காரணமாக வெகுசன பத்திரிகைகளில் வேலை கிடைக்கவில்லை. இங்கே அவ்வளவுதூரம் சாதி துவேஷம் இருக்கிறது. அதுதான் உண்மை.
***