Friday, July 31, 2009

சின்னதாக ஒரு விளக்கம்

ரா.மா.வின் என் பதிவு குறித்து அபிலாஷ் சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டிருந்தார். அவருக்கு என் நன்றிகள். சிறு கடிதமாயினும் உரையாடலுக்கான தன்மைகள் அதிலொரு அழைப்பாய் இழையிட்டன. அந்தக் குரல்தான் இன்றையத் தேவையாக உள்ளது.
அபிலாஷ் இதழியல் பற்றி தெரிவிக்கும் கருத்துக்கள் ஒரு வெளியாளின் பார்வைக்குள் நின்று இயங்குபவை. அவரின் குரல் பொதுவான அபிப்ராயங்களால் நிரம்பியுள்ளது. நான் தொந்தரவு என்று குறிப்பிட்டது புதிய எழுத்தாளர்களை அல்ல; ’பெரும் ஜாம்பவான்’களை.
அல்லது அப்படி சொல்லிக்கொள்பவர்களை. நான் குறிப்பிட்ட தொந்தரவின் விளக்கம்:மிரட்டல் என்பது. கொஞ்சம் நாசூக்காக எழுதியதால் பிழையாக புரிந்துகொள்ள வழிவகுத்திருக்கிறது..
ஆரம்ப அடையாளத்திற்காக காத்திருக்கும் புதுபடைப்பாளிகள் மனித நேயம்மிக்கவர்கள். ஒருபோதும் உளவியல் வன்முறை சார் நடவடிக்கைகள் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அதன் வரைபட நுட்பத்தினை அவர்கள் கற்க காலங்களாகும்.புதியவர்கள் பெரும்பாலும் தன்படைப்பின் ஆகிருதி குறித்த சந்தேகத்திலேயே
இறுதிவரை நேரத்தை செலவிடுவதால் அவர்கள் இதழியளார்களுடன் வம்புக்கு நிற்பதில்லை. அவர்களிக்கு இமெயில் அனுப்பி மிரட்டுவதுமில்லை. ஆனால் ஜனநாயத்திற்கான குரலை பாதுகாக்கிறோம், பெண்ணிய சுதந்திரத்தை பேண விழைகிறோம் என்று கிளம்பியவர்களின் ஒருசிலர்தான் அடியாட்களை ஏவிவிடும் அளவிற்கு தாதாவாக மாறியுள்ளார்கள். ஆரம்பக்கட்ட எழுத்தாளன் பாவம். அப்பாவி. மிட் நைட்டில் புகழடைந்த கருத்தியல் தாதாக்கலோடு அவர்களை
ஒப்பிடக் கூடாது.
அபிலாஷ் குறிப்பிடுவத்தைபோல புதிய படைப்பாளிகளை பத்திரிகைகள் கண்டுபிடிக்கவில்லை என்பதில் கொஞ்சம் உண்மையுள்ளது.
இப்படி டிஸ்கவரி செயும் அளவிற்கு எப்போதும் பத்திரிகைகள் களம் இறங்கியதாக நம்மிடம் வரலாறுகள் இல்லை. பலர் வெகுசன ஊடகத்தின் வெளிச்சம் படாமலே இன்று வளர்ந்திருக்கிறார்கள். பின்பு அவர்களை ஊடகங்கள் பயன்படுத்திக்கொண்டன அல்லது பயன்படுத்திக் கொண்டுள்ளன என்பதே நிசம். பத்திரிகைகள் இன்றும் பேச அச்சப்படும் பல விஷயங்களை அபிலாஷ் போன்றவர்கள் தைரியாமாக எழுத முயன்றிருப்பது எந்தப் பத்திரிகையின் தைரியத்தால் அல்ல இங்கே கவனிக்கப் படவேண்டிய விஷயமில்லையா.
அபிலாஷ் என் கவிதைகளை படித்திருப்பதாக குறிப்பிட்டதே எனக்கு ஆச்சர்யம் தரும் தகவல். கவிதைகள் குறித்து எழுதுவதாக வேறு சொல்லியிருப்பது அதைவிட இன்ப அதிர்ச்சி. உதிரிகளை யார் இங்கு கண்டுகொள்கிறார்கள் சொல்லுங்கள்

அன்புடன்
கடற்கரய்

ரா.மா பற்றின உங்கள் பதிவு

கடற்கரய் அவர்களுக்கு

ரா.மா பற்றின உங்கள் பதிவு படித்தேன். நன்று. இளைய தலைமுறை எழுத்தாளர்கள் படைப்புகள் பிரசுரமாவது பற்றி விசாரித்து தொந்தரவு கொடுக்கும் மாண்பின்மையை குறிப்பிட்டிருந்தீர்கள். ஆசிரியர் தனக்கு வரும் அனைத்து கவிதைகளையும் படித்து உடனே தீர்மானிக்க முடியாமல் போகலாம். இதனால் பொதுவாக பரிச்சயமுள்ள இளைய எழுத்தாளர்கள் அல்லது முன்னணி நட்சத்திரங்களின் படைப்புகளே கவனிக்கப்பட்டு பிரசுரமாகின்றன. எம்.ஜி ஆர் கல்லூரி மாணவன் ஆனது போல் ஒரு சிலர் மட்டுமே எத்தனை நாட்களுக்குத் தான் எழுதிக் கொண்டிருக்க முடியும்? சமீபத்தில் அறிவியல், தத்துவம், இலக்கியம் போன்ற தளங்களில் ஆழமாக எழுதக்கூடிய எத்தனை புதிய எழுத்தாளர்களை நமது பத்திரிகைகள் கண்டுபிடித்துள்ளன? நமது விமர்சனங்கள் வெறுமனே ரீடர்-ரெஸ்பான்ஸ் வகை தீர்க்கமான கருதுகோள்களோ அற்ற, நிறுவுதல்களோ அற்ற திசையற்ற எழுத்துக்களாக உள்ளது ஏன்? சூப்பர் ஸ்டாராகவோ, பத்திரிகயாள\குடி நண்பனாகவோ இருந்தால் மட்டுமே பிரசுர கவனம் கிடைக்கும் என்பது நமது தமிழ்ப்பரப்பில் உள்ள சடைவுக்கு காரணம் என்று கருதுகிறேன். மனுஷ்யபுத்திரனை அடிக்கடி போனில் அழைத்து பிரசுரம் பற்றி நச்சரிப்பவர்களை அவர் பொறுமையாக கையாள்வதை கவனித்திருக்கிறேன். இளைய எழுத்தாளர்களை அவரே அழைத்து உற்சாகப்படுத்தி தொடர்ந்து உயிரோசையில் இயங்க செய்கிறார். ஒரு ஆசிரியருக்கு இந்த பொறுமையும், திறமை அறியும் கூர்மையும் அவசியம். உயிரோசையின் மிகப்பெரிய வெற்றிக்கு இதுவும் காரணம்.

உங்கள் உரை நடையில் எளிதாக துல்லியமான சித்திரங்களை தருகிறீர்கள். மேலும் எழுடுங்கள் தொடர்ந்து படிக்கிறேன். உங்கள் கவிதைகள் பற்றி cognitive poetics (figure vs ground) முறைப்படி விமர்சித்து எழுத உத்தேசம் உள்ளது. விரைவில் எழுதுவேன்.

அன்புடன்
ஆர்.அபிலாஷ்
http://thiruttusavi.blogspot.com/