Sunday, September 11, 2011

வை. கோவிந்தன்: அச்சுப் பண்பாட்டின் நவீன அரிச்சுவடி


ஆ. இரா. வேங்கடாசலபதியின் பரம்பரையில் வரும் தேர்ந்த ஆய்வாளராகப் பழ. அதியமானைச் சொல்லலாம். தமிழ் மறுபதிப்பியல் ஆய்வில் அதியமானின் பங்களிப்பு கவனிக்கத்தக்கது. வ. ரா. ஆராய்ச்சி வழியே ஆய்வுலகத்திற்குள் அடியெடுத்து வைத்தவரான அதியமான், வரலாற்றில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்திய முன்னோடிகள் குறித்துச் சில முதல் நூல்களைப் படைத்துள்ளார். அப்படியான ஆய்வு நூல்களில் ஒன்றே சக்தி வை. கோவிந்தன்: தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமை எனும் அரிய நூல்.
2008ஆம் ஆண்டு காலச்சுவடின் வெளியீடாக வந்த இப்புத்தகம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டதற்கான தகவல்கள் தட்டுப்படவில்லை. அதீத உழைப்பைக் கோரும் இம்மாதிரியான ஆய்வுகள் சகலத் தரப்புகளிலும் கவனம் பெறாதுபோவதற்கு வாசகர்களின் நோஞ்சான் தன்மையே முக்கியக் காரணம். ஒருசேர அனைவரும் ஒரே இடத்தில் குவியும் இச்சந்தைக் கடை மனப்போக்கு சத்தானதல்ல; ஊட்டச்சத்து குன்றிய ஆகாரத்திற்கு ஒப்பானது.
இன்று தமிழ் அச்சுத் துறை அபார வளர்ச்சி கண்டிருக்கிறது. இரண்டாயிரத்திற்குப் பின் எனக் குறிப்பிடுவதைவிட அழுத்தம் திருத்தமாக இரண்டாயிரத்து ஐந்துக்குப் பிறகு இந்த அபார வளர்ச்சி அபாய வளர்ச்சியாக ஊதிப்பெருத்துள்ளது. தமிழில் சிறந்த நூற்பதிப்பு என்ற வேட்கையோடு இனிதே இயங்கிவந்த பதிப்புத் துறை இன்றைக்கு நூல் உற்பத்தித் துறையாக மட்டுமே சுருங்கிப்போனது சகிக்கக் கூடாத அவக்கேடு. இம்மாற்றம் லேசானதல்ல; சர்வதேசப் பெரும் முதலாளிகளை மட்டுமே உள்ளடக்கிய உருமாற்றம். இது உருப்படியான மாற்றமா என்னும் விசாரணை தொடர்ந்து விவாதிக்கத்தக்கது. தொடர்ந்து பொருள் தேடக் கூடியது. தமிழ் அச்சுத் துறையின் வளர்ச்சி இன்று நேற்று உண்டானதல்ல; அச்சுத் துறையில் இந்திய மொழிகளிலேயே முன்னோடி என்னும் நட்சத்திர அந்தஸ்திற்குரிய பெருமை நம் தமிழ்மொழிக்கு மட்டுமேயுண்டு. தரங்கம்பாடியில் சீகன் பால்கு, மிஷனரி பணிக்காகக் கால்வைத்த காலத்திலேயே தமிழ் ஊடகம் மறுமலர்ச்சியைக் கண்டுவிட்டது. அதன் அடையாளமாக இந்திய மொழிகளிலேயே முதன் முதலாகப் பைபிளைத் தமிழ்மொழியில் தான் வெளிக்கொணர்ந்தார் சீகன் பால்கு. இது வரலாறு. மிஷனரி பணிகளுக்காகத் தொடங்கப்பட்ட அச்சகங்கள் மக்கள் பயன்பாட்டை நோக்கி மெல்ல நகர்த்தப்பட்டன.
ஒரு நூற்றாண்டைத் தாண்டி ஆசிரியரின் பொறுப்பில் மட்டுமே செயல்பட்டுவந்த வெளியீட்டுத் துறை 1930களுக்குப் பிறகே ஆசிரியர், தொகுப்பாசிரியர் தனிப்பொறுப்பிலிருந்து சுயாதீனம் பெற்றது. பின் கையெழுத்துப்படிகளைக் கொண்டு அச்சேற்றும் தொழிலாக வளர்ச்சிகண்டிருக்கிறது. அச்சு என்பது தனித்த தொழிலாக வளர்ந்த காலத்தில்தான் ஏனைய பதிப்பகங்கள் முளைவிடத் தொடங்கியுள்ளன. இதையொட்டி உ. வே. சாமிநாதையர் எண்ணிலடங்காத ஓலைச் சுவடிகளுக்கு அச்சு உருவம் கொடுத்தார். அதன்பிறகு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மர்ரே பதிப்பகம், முருகவேள் புத்தகச் சாலை, திரு. வி. கவின் சாது அச்சுக் கூடம், அல்லயன்ஸ், நவயுக பிரசுராலயம், ஸ்டார் பிரசுரம், சக்தி பிரசுராலயம், பாரி நிலையம், தமிழ்ப் பண்ணை, பூங்கொடி பதிப்பகம், சக்தி காரியாலயம் இப்படி எண்ணற்ற பதிப்பகங்கள் தமிழ் மண்ணில் தோன்றின. இவற்றில் பாதி, பொதுப் பதிப்பகங்களாகவும் நிறுவனங்களாகவுமே இயங்கின. அவ்வாறு தோன்றிய பதிப்பகங்களில் அச்சுத் தொழிலில் முன்னெட்டு வைத்த முதல் பதிப்பகம்தான் சக்தி காரியாலயம். அதன் உரிமையாளர் சக்தி வை. கோவிந்தன். இவரின் அச்சகச் சாதனைகள் ஆச்சரியம் கொள்ளத்தக்கவை. மலைக்கவைக்கும் காரியத்தையும் வை.கோ. அன்றே சாதுர்யமாக நிகழ்த்திக் காட்டினார். அதன் சான்றே பின்வரும் ஒரு சம்பவம்:
அடையாறு பிரம்ம ஞான சங்கத்தின் ஒரு விஷேசத்தையொட்டிப் பன்னிரெண்டு வண்ணங்கள் கொண்ட படங்களை அச்சடிக்க முடிவெடுத்திருக்கிறது அந்நிர்வாகம். அதன் ஆர்டரைத் தூக்கிக்கொண்டு ஆங்கிலேயர் ஒருவர் கல்கத்தா, மும்பை என அலைந்து திரிந்து முடியாமல் கடைசியில் சென்னை திரும்பி கோவிந்தனிடம் வேலையைக் கொடுத்திருக்கிறார். அரைகுறை மனதோடு ஆர்டர் கைமாறியுள்ளது. பெரிய பெரிய கம்பெனி கதவுகளைத் தட்டிவிட்டுத் திரும்பியவரின் நம்பிக்கை பிசகாதபடி மிக நேர்த்தியாக அமைந்த கோவிந்தனின் அச்சுப் பணி ஆங்கிலேயரை அசரடித்திருக்கிறது. அப்படங்கள் மிகப் பழைய எந்திரத்தில் அச்சாக்கப்பட்டவை என்ற அதிர்ச்சி வேறு ஆங்கிலேயருக்குக் காத்திருந்திருக்கிறது. இத்தனை தொழில்நுட்பம் பழகியவர் கோவிந்தன். கைவசம் உள்ளதைக் கொண்டு வளர்ச்சியைப் புகுத்தியவர். எதையும் இலாவகமாகக் கையாளக் கற்றவர். இத்தனைக்கும் இவர் படித்தது வெறும் எட்டாம் வகுப்பு. மொத்தத்தில் வை. கோவிந்தன் அச்சுக் கலாச்சாரத்தின் நவீன அரிச் சுவடி. பரவலாக்கல் எனும் வடிவிற்காக அயராது சுழன்றுகொண்டிருந்த சமர்த்தான பல் சக்கரம் அவர்.
பொதுத்தளத்தில் இயங்கிய கோவிந்தன், காங்கிரஸ் இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டவர். இந்தக் கதர்ச் சட்டைக்காரருக்குள் சிறிதளவு சிகப்புச் சாயச் சார்பும் இருந்திருக்கிறது. இவர் காலத்தில் உதயமான திராவிட அரசியலின் மீது கோவிந்தனுக்குச் சிலாக்கியமில்லை. வெறுப்பு உண்டு. ஆனால் சுயமரியாதைக் கட்சியினர் புகுத்திய மொழிச் சீர்திருத்தத்தில் உடன்பாடு கொண்டிருந்தார். தேவையானதை மட்டும் பிரித்தெடுக்கும் பண்பே தொழில்காரனுக்கு அழகு. அதன் லயம் உணர்ந்தவர் கோவிந்தன். திராவிட அரசியலுக்கு எதிரானவரான இவர் மொழிவழி மாநிலப் பிரிவினையை ஆதரித்திருக்கிறார். மேற்சொன்னவை கோவிந்தனைப் பற்றிய புறவயமான முக்கிய அம்சக் குறிப்புகள்.
1939இல் தொடங்கப்பட்ட சக்தி காரியாலயம் தமிழில் நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை வெளியிட்டுள்ளது. கே. எம். முன்ஷியின் அகண்ட இந்தியாவில் இருந்து ராஜ கோபாலாச்சாரியின் அபேத வாதம், வெ. சாமிநாத சர்மா மொழிபெயர்ப்பில் உருவான பிளேட்டோவின் அரசியல், சூடாமணியின் அலமு, டால்ஸ்டாயின் அன்ன கரினா, தொ. மு. சி. எழுதிய ஆணா பெண்ணா, மு. அருணாசலத்தின் உணவுப் பஞ்சம், ஏ. கே. செட்டியாரின் உலகம் சுற்றும் தமிழன், ஜே. சி. குமரப்பாவின் ஏசுநாதர் போதனை, கு. அழகிரிசாமியின் கதைகள், கொத்த மங்கலம் சுப்புவின் காந்தி மகான் கதை, புதுமைப்பித்தனின் சிற்றன்னை, வேதநாயகம் பிள்ளையின் சுகுண சுந்தரி, ஆஸ்கர் வைல்டின் சிலையும் குருவியும், ஜான் ஸ்டீன்பெக்கின் சிவப்புக் குதிரைக்குட்டி, மார்க்சிம் கார்க்கியின் தந்தையின் காதலி, செல்லம்மா பாரதியின் பாரதியார் சரித்திரம், மகாகவி பாரதியார் கவிதைகள், கம்ப ராமாயணம், டால்ஸ்டாயின் போரும் அமைதியும் என்று ஏகப்பட்ட வரிசைகள். வை.கோ. தானே சில நூல்களை எழுதியும் இருக்கிறார். பதிப்பகம், எழுத்தாளர் என்னும் இரட்டைக்குதிரையில் சவாரிசெய்தவர் இவர். இவரது சக்தி பத்திரிகையில் தான் கரிசல்காட்டு எழுத்தாளர் கு. அழகிரிசாமி பணியாற்றினார். அழகிரிசாமியின் ஏராளமான கதைகளை வெளியிட்ட பெருமை சக்தி பத்திரிகைக்கு உண்டு. அழகிரிசாமியின் வெந்தழலால் வேகாதுஎனும் மிகச் சிறந்த கதையின் தொடர்ச்சி போலமைந்த விட்டகுறைசக்தியில் பிரசுரமான கதை. அவர் பல அயலகப் படைப்புகளைச் சக்தி காரியாலயத்திற்காக மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார்.
வை. கோவிந்தனின் வாழ்க்கைப் பருவத்தை ஆய்வாளர் மூன்று கட்டங்களாகப் பகுத்துப் பார்க்கிறார். 1912இல் பிறந்தது முதல் தொழிலுக்கு வந்த 1938 வரை இளமைக்காலம்; 1939 முதல் 1960வரை பதிப்பு காலம்; வாழ்வின் இறுதிப் பகுதியில் எழுத்தில் ஈடுபாடு உண்டான காலம். கோவிந்தனின் சொந்த ஊர் ராயவரம். தன் இளமையைப் பர்மாவில் கழித்த இவர், சென்னை விஜயத்திற்குப் பிறகே பதிப்பகப் பணியின் பக்கம் தலைவைத்தார். இப்பதிப்பகம் சென்னை, காரைக்குடி, ராயவரம் என்று மாறிமாறி இயங்கியுள்ளது. இதற்குக் கோயமுத்தூர், திருநெல்வேலி நகரங்களில் கிளைகளும் இயங்கின. பின்னால் ஓர் உத்வேகம் பிறந்து சக்தி, மங்கை, அணில், பாப்பா, குழந்தைகள் செய்தி, கதைக்கடல் எனப் பல இதழ்களைத் தருவித்தார் கோவிந்தன். தவிர சினிமா இதழொன்றையும் நடத்தியுள்ளார். இதில்தான் கவியரசு கண்ணதாசன் பணியாற்றினார். ஏறக்குறைய கால் நூற்றாண்டுக் கால இவரது செயல்பாடு அச்சுத் தொழிலில் தீவிரமாக இயங்கியிருக்கிறது. கோவிந்தன், முதல் மனைவி அழகம்மை மறைவுக்குப் பின்னால் புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமத்தில் சந்நியாச சம்போகம் கொண்டும் இருந்திருக்கிறார். அப்புறம் சிலரின் அறிவுரைப்படி 1946இல் மு.அ. செல்லப்ப செட்டியாரின் மகள் வள்ளியம்மையை மறுமணம் புரிந்திருக்கிறார். அச்சுத் தொழிலைத் தன் உடன்பிறந்த சகோதரர்களுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார். இப்படி இவரால் பழக்கப்பட்டு உருவான பிற பதிப்பகங்கள் பழனியப்பா பிரதர்ஸ், தமிழ்ப் பண்ணை உள்ளிட்டவை. தான் கற்றதை ஊராருக்கும் எடுத்தோதும் நற்குணம் வை.கோவிந்தனுக்குள் தூக்கலாகவே இருந்திருக்கிறது.
சக்தி காரியாலயத்தின் முதல் நூல் டால்ஸ்டாயின் இனி நாம் செய்ய வேண்டியது யாது. பின்னர் போரும் வாழ்வும் நூலின் ஆறில் ஒரு பகுதியை அச்சிட்டுப் போரும் காதலும் என்னும் தலைப்பில் 1943இல் வெளியிட்டார். தொடர்ந்து அதன் மற்ற பகுதிகளை வெளியிடவில்லை. இதற்கு இரண்டாம் உலக யுத்தத்தால் உருவான காகித நெருக்கடியும் சரியான ஆங்கில மூலம் கிடைக்காததுமே காரணம். மூல நூல் 1957இல் கிடைத்ததும் 2,500 பக்கமுள்ள முழுப் பிரதியையும் வெளியிட்டார். இதன் அடக்க விலை 24 ரூபாய். தனித்தனி பாகங்கள் எட்டு ரூபாய்க்கும் கிடைத்துள்ளது. அதை மொழிபெயர்த்தது பேனா மன்னன் டி. எஸ். சொக்கலிங்கம். குறிப்பிட்ட ஒரு மூல நூலுக்காக இப்பதிப்பாளர் 14 ஆண்டுகள் தவமிருந்திருக்கிறார். கொஞ்சமும் அச்சு அறமில்லாமல் செயல்படும் இக்காலத்துப் பதிப்பகத்தார் சிலர் கோவிந்தனிடம் கற்றுத்தேற வேண்டிய மிகச் சிறந்த பாடம் இது.
டி. எஸ். சொக்கலிங்கம் எழுதிய மக்கள்தொகைப் பெருக்கத்தால் உண்டாகும் பஞ்சம் பற்றிய சிறு பிரசுரம் வாயிலாகவே சக்தி காரியாலயத்தை நான் முதன்முதலாகக் கண்டடைந்தேன். ஏ. கே. செட்டியார் எழுதிய பிரயாண நினைவுகள் புத்தகத்தைப் பின்னர் படிக்க நேர்ந்தது. அப்படியே சில பழம் பதிப்புகள் வாசிக்கக் கிடைத்தன. அதுவரை தமிழில் வாசகர் வட்டம் பதிப்பகத்தை உச்சிமுகர்ந்து கொண்டுவந்த எனக்குச் சக்தி காரியாலயச் சாதனைகள்மீது ஒரு சரித்திரச் சாய்வு இங்குதான் உண்டானது. பல வருடங்கள் கழித்து ஆனந்த விகடனில் கோவிந்தனின் வாரிசுகள் நித்ய ஆகாரத்திற்கே அவதிப்படுவதாய் ஒரு செய்தி படித்து மனம் சரிந்தேன். தமிழின் முன்னோடி ஆளுமைக்கு இப்படி நேர்வது வழமைதானே.
தனது பதிப்பகத்தை லாப நோக்கிற்குள் மட்டுமே சுருக்கிவிடாமல் வை.கோ. மக்கள் வசதி கருதி, பல மலிவுப் பதிப்புகளைக் கொண்டு வந்தார். அப்படி மலிவுப் பதிப்பாக வெளிவந்ததே கம்பராமாயணத்தின் பால காண்டம்-அயோத்தியா காண்டம். வெ. சாமிநாத சர்மாவின் நூல்களை மட்டுமே வெளியிட்டு வந்த பிரபஞ்ச ஜோதி பிரசுராலயத்திற்கு இணையாக வாசக நலம் கருதி வெ. சாவின் தத்துவ முன்னோடி நூல்களை சக்தியும் வெளியிட்டது. பாரதியாரின் கவிதைகள் முதற்பதிப்பில் 15,000 படிகள் அச்சடிக்கப்பட்டு விற்றும் தீர்ந்துள்ளன. இன்னும் 50 ஆயிரம் பிரதிகள் விற்கக்கூடிய வாய்ப்புள்ளதாகக் கோவிந்தன் தெரிவித்த கருத்தை இன்று படிக்கவும் பிரமிப்பாக இருக்கிறது. ஏழரை ரூபாய் விலைக்கு விற்ற பாரதியின் கவிதைத் தொகுப்பை ஒன்றரை ரூபாய்க்கு வெளியிட்டுத் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் அதைக் கொண்டுபோய்ச் சேர்த்தார். திருக்குறள் விஷயத்திலும் அவ்வாறே. ‘15 ஆயிரம் அச்சடிக்கப்பட்டது. 21 ஆயிரம் பிரதிகளுக்கு ஆர்டர் வந்திருக்கிறது. இன்னும் 50 ஆயிரம் பிரதிகள் சுலபமாக விற்பனையாகும்என்கிறார். இத்தனை வசதி வாய்ப்புகளும் வாசல் தேடி சுலபமாக வந்திட்ட வரப்பிரசாதமல்ல; கொஞ்சம் கொஞ்சமாகத் தனது உழைப்பால் இக்கோட்டை மதிற் சுவரைக் கோவிந்தன் கட்டி எழுப்பினார். ஆகவேதான் சி. சு. செல்லப்பா இவரது பதிப்பகத்தை பென்குவினுக்கு நிகர் என்கிறார். சக்தி இதழை டைம்ஸோடு ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். அரசு நூலகப் பொருளுதவிகள் இல்லாத நாளில் தனித் தெம்போடு அமைந்த இவரின் லட்சிய நடை மெச்சக் கூடியது. அச்சுத் துறையில் தனிச் சூரியனாய்க் கிளம்பிய கோவிந்தன் 1966இல் தனது தொடர்ச்சியான இயக்கத்தை நிறுத்திக்கொண்டது ஒரு பேரிழப்பு. ஒரு பதிப்பாளரைப் பற்றி அவர்தம் அரும் பெரும் ஆற்றல் குறித்து ஆராய்ந்து எழுதப்பட்ட பழ. அதியமானின் இந்நூல் காலக் கண்ணாடியின் உடைந்த சிறு துண்டு. ஆனால் அதற்குள் தெரிவது பெரிய வானம்.




ஆசிரியர்: 
பழ. அதியமான்
பக். 232, விலை ரூ.175 (2008)
வெளியீடு
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. சாலை, நாகர்கோவில்