Tuesday, July 14, 2009

எனக்கு பிடித்த தேவதச்சன் கவிதைகள்

மழையைப் பற்றிய

மழையைப் பற்றிய எல்லாக் கவிதைகளையும் நீங்கள்
படித்திருக்க மாட்டீர்கள்.
மழைக்கவிதைகளைப் படிக்கையில் நீங்கள் எழுதியவனைப்
பற்றியும்
உங்களைப் பற்றியும் தெரிந்து கொள்வதோடு மழையைப்
பற்றியும்
ஒன்றும் தெரிந்துகொள்ளாமல் போகிறீர்கள்.
தாள்களை நனைக்காமல் பெய்கிறது மழை.
எனினும் தாள்களில் தேங்கி நிற்கும் மழை நீரில்
உங்கள் கணுக்கால்வரை மறைந்திருக்கிறீர்கள்.
கவிதைக்கு வெளியேயும்,
மழையைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள்
மழை எப்படியெல்லாம் பெய்யாமல் போகிறது என்று.
மழையை வழியனுப்பிய அந்தக்கால சடங்குகள் பற்றி
அதற்குரிய தெய்வங்கள் பற்றி
மழை மட்டுமா போச்சு என்று
சிறகி நாரை கொக்கு முக்குளிப்பான்
உள்ளான் நீர்க்கோழி பனங்காடை எல்லாம்
எங்கே போச்சு.
அவைகள் மீனைத் தின்கின்றன.
மீன்கள் இல்லை
“காடுகளில்
மரபுத் தான்யங்கள் போய்
ஒட்டுத் தான்யங்கள் வந்து விட்டன
பறவைகள் எல்லாம் எங்கே போச்சு
வடக்கேயா மேற்கேயா”
அவர்களுக்குத் தெரியவில்லை.
கவிதைக்கு வெளியே
மாடுகளை விற்க
ஓட்டிக்கொண்டு போகிறார்கள்
கவிதைக்கு உள்ளே,
காலித் தொழுவங்கள்.
இன்னும் கொஞ்ச நாளில்
அவர்களும் காணாமல் போய்விடுவார்கள்
வடக்கேயோ மேற்கேயோ சூன்யத்திலோ
பெய்யாத
மழைக்கவிதையின் நிர்வாணத்தில் நீங்கள்
கணுக்கால்வரை கூட மறையாமல்
தெரிகிறீர்கள்.
***

குருட்டு ஈ

ஆஸ்பத்திரியில்
வெண்தொட்டிலில்
சுற்றுகிறது
இறந்து கொண்டிருக்கின்ற குழந்தையின்
மூச்சொலி
பார்க்கப்
பயமாக இருக்கிறது
சுவரில்
தெரியும் பல்லி
சீக்கிரம் கவ்விக் கொண்டு
போய்விடாதா
என் இதயத்தில்
சுற்றும் குருட்டு ஈயை

**
பரிசு

என் கையில் இருந்த பரிசை
பிரிக்கவில்லை. பிரித்தால்
மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது
என் அருகில் இருந்தவன் அவசரமாய்
அவன் பரிசைப் பார்த்தான். பிரிக்காமல்
மகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்
பரிசு அளித்தவனோடு
விருந்துண்ண அமர்ந்தோம்
உணவுகள் நடுவே
கண்ணாடி டம்ளரில்
ஒரு சொட்டு
தண்ணீரில்
மூழ்கியிருந்தன
ஆயிரம் சொட்டுகள்