எல்லிசன்! தமிழன் மறந்துபோன ஒரு ஆங்கிலேய தமிழ் அறிஞர்! பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் என்ற தன் ஆங்கில பெயரை தமிழ் ஒலிச் சப்தத்திற்கேற்ப தூய தமிழில் எல்லீசன் என்று மாற்றிக்கொண்ட தமிழ்மொழிக் காதலர்!
தமிழுக்கு அப்படி இவர் என்னதான் செய்தார் என்கிறீர்களா? திருக்குறள் உலகப் பொதுமறை என்று பெரியாரால் போற்றப்படுவதற்கு நூறு வருடங்களுக்கு முன்னதாகவே திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகறியச் செய்த உத்தமர் இந்த எல்லீஸ்! மதராஸ் ஆங்கிலேய அரசாங்கத்தின் வருவாய் வாரியச் செயலாளர் பதிவிக்காக இந்தியா வந்த இவர் நிலச்சுங்க அதிகாரி,சென்னை மாவட்ட ஆட்சியர் எனப் பல பதவிகளை வகித்த ஓர் உயர் அதிகாரி. இவரது காலத்தில்தான் சென்னையில் நிலவிய குடிநீர் பஞ்சதைப் போக பல கிணறுகள் வெட்டப்பட்டன. இப்போதும் ஏழுகிணறு என சென்னை மக்களால் குறிப்பிடப்படும் கிணறு எல்லிஸால் வெட்டப்பட்டதுதான். தமிழனின் தாக்கம் போக்கிய இந்த ஆகிலேயனுக்கு தமிழ்மீது தனியா தாகம் உண்டானதில் வியப்பொன்றுமில்லை!
மறைந்துபோன எல்லிஸ் வரலாற்றை மறுபடியும் கண்டறிந்தவர் தாமஸ் டிராவுட்மன். ஒரு பயணத்தின்போது எதேட்சையாக அயர்லாந்தில் இருந்த எல்லிஸின் கையெழுத்துப் பிரதிகளை புறட்டிப்பார்த்த டிராவுட்மன் இது அரிய பொக்கிஷம் என்பதை உணர்ந்தார்.உடனே தாமதிக்காமல் தன் ஆய்வைத் தொடர்கிறார்.இந்த தாமஸும் ஓர் ஆங்கிலேயர் என்பது கூடுதல் தகவல். தமிழை பற்றி ஆங்கிலேயர்கள் உணர்ந்துகொண்ட அளவுக்கு தமிழர்களே உணரவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை! மக்கள் ஒருபுறம் இருக்கட்டும் அரசாவது உணர்ந்ததா என்றால் இல்லை என்றுதான் நமக்கு பதில் வருகிறது.கால்டுவெல்லுக்கு கொடுக்கப்பட்ட அளவுக்கு எல்லிஸ் கெளரவிக்கப்படவில்லை.
“தமிழ்மொழி,இலக்கியத்தின் மீது காதலார்வம் கொண்ட்டிருந்த எல்லிஸின் புலமை இன்று பெரிதும் மறைக்கப்பட்டுவிட்டது;அதனை மீட்டு,தமிழ் வாசகர்களின் கையில் ஒப்படைக்க வேண்டும் என்பதே என் நெடுநாள் விருப்பம்”என்கிறார் தாமஸ் டிராவுட்மன்.இவர் அமெரிக்காவிலுள்ள மிஷிகன் பல்கலையில் பணியாற்றி வரும் மானிடவியல் மற்றும் வரலாற்றுப் பேராசிரியர்.
எல்லிஸின் ஆய்வுகள் குறித்த நன்கு அறிந்த தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கிடாசலபதியிடம் பேசினோம். “தமிழில் செய்யுள் இயற்றும் அளவுக்கு ஆங்கிலேய துரை எல்லீசனுக்கு பயிற்சியிருந்தது.நமசிவாயம் என்ற ஐந்தெழுத்து மந்திரம்பற்றி இவர் ஐந்து பாடல்கள் இயற்றியுள்ளதாக ரா.பி.சேதுப்பிள்ளை குறிப்பிருகிறார்.சென்னையில் தம் பொறுப்பிலிருந்த அரசாங்கத் தங்கச் சாலையில் திருவள்ளுவரின் உருவம் பொறித்த நான்கு வாரகம் தங்க நாணயங்களை வார்த்து வெளியிட்டவரும் இவரே. 1994ல் ஐராவதம் மகாதேவன் இலண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருந்த இரு நாணயங்களையும் கல்கத்தாவில் இருந்த இரு நாணயங்களையும் கண்டெடுத்து அதன் ஒளிநகலை முதன்முதலாக வெளியிட்டார்.
எல்லிஸ் தென்னிந்திய மொழிகளையும் பிற இந்திய நாட்டு மொழிகளையும் ஆங்கிலேய நிர்வாக அதிகாரிகளுக்குப் பயிற்றுவிப்பதற்காகப் புனித ஜார்ஜ்கோட்டையில் ஒரு கல்லூரியை 1812ல் நிறுவினார்.’சென்னைக் கல்ல்விச் சங்கம்’ என்று தமிழில் அறியப்பட்ட இக்கல்லூரியே எல்லிஸின் மொழி ஆய்வுகளுக்குக் களமாக விளங்கியது.1856ல் கால்டுவெல் எழுதி வெளியிட்ட ‘திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம்’என்னும் அரிய ஆய்வு நூலுக்கு நாற்பதாண்டுகளுக்கு முன்னரே,1816ல் ‘திராவிட மொழிக் குடும்பம்’என்ற புலமை மிக்க கருத்தாக்கத்தை கண்டுணர்ந்து உலகுக்கு வெளிப்படுத்தியவர் எல்லிஸ்.தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,துளு முதலான திராவிட மொழிக்குடும்பம் என்றும்,சொற்கள் அளவிலான கொள்வினையே சமஸ்கிருதத்துடன் உண்டு என்பதையும் எல்லிஸ்தான் முதலில் நிறுவுகிறார்”என்ற சலபதியிடம் “தன் ஆய்வுகளை எல்லிஸ் ஏன் வெளியிட முயற்சிக்கவில்லை என்றோம்?” மறுபடி தொடர்ந்தார் சலபதி.
“நாற்பது வயது நிறையும் வரை நூல்களை எழுதி வெளியிடுவதில்லை என்ற உறுதிபூண்டிருந்த எல்லிஸ் நாற்பத்தோரு வயதில் திடீரென்று உடல்நிலை சீர்குலைந்து மறைந்துபோகிறார்.இதனால் அவரது ஆய்வு மூலையில் முடக்கிவிட்டது.இதை மீண்டும் கண்டெடுத்து நூலாக கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் ஆங்கிலத்தில் வெளியீடுவதற்கு முன்னதாகவே தமிழாக்க செய்து வெளியிடப்பட்டது.இவ்வளவு சிறப்பு மிக்க நூல் தமிழக அரசு நூலகத்திற்குகூட கொள்முதல் செய்யாமல் தவிர்த்துவிட்டது என்ற செய்தி வருந்த்தக்க ஒன்றாகும்.பள்ளிக்கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டம் ஒரு பலனும் கிடைக்கவில்லை”என்றார்.
தாமஸ் டிராவுமன் தனது தமிழ்மொழிபெயர்ப்பு நூலை எழுத்தாளர் தியடோர் பாஸ்கரனுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.அவருடன் பேசினோம். “டிராவுட்மன் அர்த்தசாஸ்திரம் பற்றி ஆய்வைதான் முதலில் மேற்கொள்கிறார்.அதன்மூலம் அர்த்தசாஸ்திரம் கெளடில்யர் என்ற தனியொருவரின் படைப்பல்ல;சில நூற்றாண்டுக்கால இடைவெளியில் பலருடைய பங்களிப்பால் உருவான நூல் அது என்று தன் புள்ளியல் பகுப்பாய்வின் மூலம் நிறுவினார். தற்செயலாக ஏ.எல்.பாஷம் எழுதிய The Wonder that was India என்ற நூலை படிக்கிறார். அதன் பின் டிராவுட்மன் கவனம் இந்தியாவின் மீது விழுந்தது. நாடு சுதந்திரம் அடைந்தப் பிறகு புதிய ஆய்வுகள் நம் சமூகத்தில் நடைபெறவே இல்லை.எல்லோரும் பாடிய பாட்டையே பாடுகிறார்கள்.கால்டுவெல் எவ்வளவு முக்கியமான அறிஞரோ அதற்கு சற்றும் குறையாதவர் எல்லிஸ்.மெட்ராஸ் லிட்ரரி சொஸைட்டி உட்பட பல நல்ல துறைகளை சென்னையில் நிறுவியவர்.ஆனால் எல்லிஸை யாரும் கண்ண்டுகொள்வதேயில்லை.இதே போலதான் அறிஞர் சுரேஷ்பிள்ளை.வரலாற்றாய்வில் மிகப் பெரிய முன்னோடி.அவரையும் யாரும் பேசுவதில்லை. தாமஸ் டிராவுட்மனை எனக்கு 1974ல் இருந்து தெரியும்.’திராவிட உறவுமுறை’ ஆய்விற்காக இந்தியா வந்த போது பழக்கமேற்பட்டு தமிழ்நாட்டிலுள்ள பல வரலாற்று சின்னங்களை காண என்னுடன் பயணித்தார். அவரது ஆய்வை உலகம் அறிந்துகொண்டு எல்லிஸை இன்று கொண்டாடுகிறது.தமிழனுக்காக நடத்தப்பட்ட ஆய்வை தமிழகஅரசுகூட கண்டுகொள்ளாதது துரதிருஷ்டமானதுதான்”என்றார்.
எல்லிஸின் கல்லறையை கண்டறிந்தவர் கல்வெட்டறிஞர் வெ.வேதாசலம்“பல்வேறு ஆய்விற்காக நான் சுற்றிய போது இராமநாதபுரத்திலுள்ள ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தில் எல்லிஸின் கல்லறையுடன் கல்வெட்டு ஒன்றைக் கண்டெடுத்தேன்.சிதைந்த நிலையில் கிடந்த அக்கல்வெட்டை இப்போது பாதுகாப்பாக மதுரை நாயக்கர் மகால் அருங்காட்சியத்தில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறேன்”என்றார். எல்லிஸின் சில கட்டுரைகளை தமிழுக்கு மறுபடியும் வழங்கியவர் பேரா.மருதநாயகம்.எல்லிஸின் பிரதிகளை வெளியிட கொடுத்த பதிப்பகமொன்று எல்லிஸ் ஆய்வை தன் தாயாருக்கு சமர்ப்பணம் செய்த கொடுமையும் நிகழ்ந்துள்ளது.
எவ்வித பிரதிபலனும் பாராமல் உழைத்த எல்லிஸுக்கு இன்று ஒரு படம் கூட இல்லை. சிலை கூட இல்லை.இதைவிட கொடுமை வேரென்ன இருக்கமுடியும்? வாழ்க செம்மொழியான தமிமொழியாம்!
-நன்றி குமுதம்