Tuesday, August 24, 2010

நிறம் மங்காத கருப்பு வெள்ளை



எங்கள் ஊரில் இருந்து பென்னாடம் செல்லும் ரோட்டில் இருந்த பழையபோஸ்ட் ஆபிஸ் எதிர்புறம் துரை ஸ்டுடியோ என்ற பெயரில் ஒரு ஸ்டுடியோ இருந்தது.அதன் உரிமையாளர் பெயர்; துரை. பார்ப்பதற்கு துரை,கட்டையாகவும், குள்ளமாகவும் இருப்பார்.அசப்பில் அவர் ஒரு டி.பி.கஜேந்திரன்.என்ன.. கஜேந்திரன் கறுப்பு.இவர் கொஞ்சம் சிகப்பு. அவ்வளவுதான் வித்தியாசம். அவர் தினதோறும் காலையில் கடைக்கு வரும்போது நெற்றியில் விபூதிப் பட்டை,அதன் இடையில் சந்தனத் திட்டை,கழுத்தில் உத்திராட்சைக் கொட்டை என்று மங்களகரமாக வந்து கடையைத் திறப்பார்.

ஊரில் மிகப்பழைய ஸ்டுடியோவின் பெயர் பூபதி ஸ்டுடியோ.அது பாலக்கரை கடைவீதி இருந்தது.அதற்கு அடுத்த இடத்தில் சாரதி ஸ்டுடியோ இருந்தது.இந்தக் கடையின் உரிமையாளர் பக்கத்து ஊரான நெய்வேலிக்காரர். பூபதியிடம் இருந்து தொழில் கற்றவர்கள் பின் அங்கிருந்து வெளியேறி வந்து கெம்பு ஸ்டுடியோ,குவாலிட்டி ஸ்டுடியோ,ராமு ஸ்டுடியோ,ரவி ஸ்டுடியோ என பல ஸ்டுடியோக்களை ஊரில் ஆரம்பித்தார்கள். சாரதி ஸ்டுடியோ வேறு ஆளிடம் கைமாறி பின்னால் லைன் ஸ்டுடியோ என்று பெயர் மாற்றம் கண்டது.அக்கடையை ஒட்டியே கோல்டன் ஸ்டுடியோ என்ற பெயரில் பாய் ஒருவர் ஸ்டுடியோ வைத்திருந்தார்.ஒரு நாளும் அவர் படம் எடுத்து நான் கண் குளிரப் பார்த்ததில்லை.ஒப்புக்கு ஸ்டுடியோவை திறந்து வைத்துக் கொண்டு சும்மாவே உட்கார்ந்திருப்பார்.அவர் ஒரு கம்யூனிட்.கட்டிட உரிமையாளருக்கும் அவருக்கும் கோர்ட்டில் வழக்கு நடப்பதாகவும் அதனால் அவருக்கு வாடகைப் பிரச்னை இல்லை என்றும் ஊரில் பேசிக் கொண்டார்கள். இந்தக் கடைக்கு பக்கத்திலேயே பதினாறு வயதினிலே படத்தில் வரும் டாக்டரின் ஸ்டைலில் ஒரு டாக்டர் கிளினிக் வைத்திருந்தார்.அங்கேயும் நோயாளிகள் வந்து நான் கண்டதில்லை. அங்கே கம்பெளண்டராக வேலை பார்த்த பெண் எப்போதும் வீதியை வேடிக்கை பார்த்தபடி சும்மாவே உட்கார்ந்திருப்பார்.

ஸ்டுடியோ என்றால் கடைக்கு வெளியே பெரிய பெரிய சைஸ்ஸில் போட்டோக்களை மாட்டி வைப்பார்கள்.மரச்சட்டத்தை அடித்து கண்ணாடிப் போட்டு பிரேம் பண்ணித் தரும் ஆட்கள் ஸ்டுடியோவுக்கு வெளியிலேயே காத்திருப்பார்கள்.வாடிக்கையாளர்களின் வசதிக்காக சில ஸ்டுடியோக்களை அந்த மாதிரி ஆசாரிகளை வேலைக்கு அமர்த்திக் கொள்வதும் உண்டு. ஒவ்வொரு ஸ்டுடியோக்களின் முன்பும் அண்ணாதுரை,காமராஜர்,காந்தி,நேரு,இந்திராகாந்தி,எம்.ஜி.ஆர்.,கருணா நிதி,ஜெயலலிதா,ஸ்ரீதேவி,கமல்,ரஜினி என்று பழைய அரசியல், சினிமா ஸ்டார்களின் படங்களாக கடை முழுக்க நிறைந்திருக்கும். அதை தாண்டி அழகழகான குழந்தைகளின் படங்கள் நிறையவே இருக்கும்.அவைகளை முன்மாதிரியாக வைத்து தங்களின் பிள்ளைகளை பொதுமக்கள் படம் எடுத்துக் கொள்வார்கள்.எனக்கு வினவு தெரிய வந்தபோது லைன் ஸ்டுடியோவும் ஜெமினி படமனையும் புகழின் உச்சில் இருந்தன.லைன் அதன் பிரமாண்டத்தினால் பெயர் எடுத்தது. ஜெமினி அதன் நடவடிக்கைகளால் பெயர் எடுத்திருந்தது. ஜெமினியை கல்லூரி மாணவப் பருவத்தில் ரெங்கப்பிள்ளை என்பவர் ஆரம்பித்தார்.அவருக்கு சினிமா நண்பர்கள் அதிகமாக இருந்தார்கள்.பாடலாசிரியர் அறிவுமதி,இயக்குநர் தங்கர்பச்சான்,ஷெல்வன்,வ.கெளதமன் என்று பல பிரபலங்கள் ஸ்டுடியோவுக்கு அடிக்கடி வந்து போவதால் ஊரில் அவர் முக்கிய புள்ளியாக மதிக்கப்பட்டார். ஜெமினி படமனை ஜங்ஷன் ரோட்டில் உள்ள பஸ் ஸ்டாண்டின் அருகில் இருந்தது.லைன் ஸ்டுடியோ அதே ரோட்டின் கடைசி முனையான கடலூர் ரோட்டின் முடிவில் இருந்த அண்ணா சிலைக்கு அருகில் இருந்தது. இந்த ஸ்டியோவை ஒட்டி நூர்ஜஹான் என்ற பெயரில் பெரிய ரைஸ் மில் ஒன்றும் இருந்தது. இது பிரமாண்டமான ரைஸ்மில். அன்றாடம் அரைவைச் சத்தம் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் கேட்டுக்கொண்டே இருக்கும்.தீபாவளி மாதிரியான பண்டிகைகளில் ஜனங்களின் கூட்டம் தெரு வரைக்கும் வரிசைக்கட்டி நிற்கும்.ஊரின் பிரதான சந்தை நடக்கும் இடத்தையொட்டி இந்த மில் இருந்ததால் நகரத்தை சுற்றி உள்ள கிராமத்து ஜனம் முழுக்க இங்கேதான் ஜாகைப் போட்டு உட்கார்ந்து மாவு அரைப்பார்கள்.நெல் அவிப்பார்கள்.மில்லில் நெல் அவிக்கும் வாசம் வீதி எங்கும் நீக்கமற கமழும்.இவ்வளவு பிரபலமான மில் இன்றைக்கு சத்தம் குறைந்துபோய் ஈனச் சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கிறது.90களிக்கு பிறகு வந்த பெரும் தொழில்புரட்சியால் இந்த மாதிரியான அரைவை எந்திரத் தொழில் நசிந்தே போய்விட்டது. எல்லாம் பாக்கெட்டுகளின் உலகமான பிறகு, மக்கள் ரெடிமேட் பொருட்களின் அடிமைகளாக வடிவமைக்கப்பட்டுவிட்டார்கள். கடைகளுக்குப் போகையில் கைப்பையை கூட சுமக்க சத்தற்றவர்களாகப் மாறிப் போயிவிட்டார்கள்.தொலைநோக்கற்று சுறுங்கிப்போய்விட்டார்கள். மில் தொழிலை போல ஊரில் நசிந்துபோன சிறு தொழில்கள் ஏராளம்.

நான் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போது இந்த மில்லை ஒட்டிப்போகும் காட்டுக்கூடலூர் ரோட்டு வழியாகதான் தினமும் பள்ளிக்கு நடந்து போவேன்.அந்த ரோட்டில் புதன் கிழமை அன்று ஊர் சந்தை நடக்கும். அன்றைக்கு ரோட்டில் நடக்கமுடியாத அளவு மக்கள் நெரிசல் பிதுக்கிக் கொண்டு நிற்கும். இதே இடத்தில் வியாழன் அன்று மாட்டு சந்தையும் நடக்கும். இங்கே இரவு நேரங்களில் சீனிக்கிழங்கு,மரவல்லிக்கிழங்கு போன்ற வியபாரச் சந்தையும் நடக்கும்.வாரக் காய்கறி சந்தையில் நடக்கும் வாழைப்பழ ஏலம் ஊரில் மிகப் பிரசித்தம். ஒரு ரூபாய்க்கு, ஒரு சீப்பு பழம் ஏலத்தில் எடுக்கலாம். ஆனால் சமயம் வாய்க்கும் வரை காத்து நிற்க வேண்டும். பள்ளிக்கு போகும் போது அப்பா தினம் கொடுக்கும் 50பைசாவை வழைப்பழ ஏலத்திற்காக தனியாக சேர்த்து வைத்து காத்திருப்பேன். சந்தையில் ஏலம் எடுப்பது ஒரு கலை. அதில் ஒருவர் கைதேர்ந்து வர பல நாட்கள் பிடிக்கும்.
ஏல வியபாரி “அப்படியே போடு.. அஞ்சு ரூபா..யாருக்கு வேணும்..சும்மா லட்டு மாதிரி இருக்குப்பாரு..யாருக்கு வேணும் அலேக்கா அஞ்சு ரூபா” என்று மாட்டு வண்டியின் மேல் நின்று முதலில் பழ ஏலத்தை ஆரம்பிப்பார். நேரம் ஆகஆகதான் விலை குறையும்.பொழுது சாயசாய பழத்தின் எடை ஏறும். ஒளித்து வைத்திருந்த சீப்புகள் ஒவ்வொன்றாக வெளியே தலைக்காட்ட ஆரம்பிக்கும்.மக்களின் கூட்டம் நல்ல சீப்பு வரும் வரை வாயை பிளந்து, உயரே அண்ணாந்து பார்த்துக் கொண்டே அப்படியே நிற்கும்.
மறுபடியும் “இது அஞ்சு ரூபாக்கு பொறாதா?”என்று ஏலக்காரர் எதிர்க்கேள்வி கேட்டுக் கொண்டே “சரி,போடு..அப்படியே நாலு ரூபா ஐம்பது காசு ”என்பார்.அப்போதும் கூட்டம் அமைதிக் காக்கும். பழம் வாங்குவதற்காகமுக்கால் தூரத்திற்கு உயர்திய கைகள் அப்படியே பொறுமைக்காக்கும்.
“அதுக்கும் ஆகாதா? சரி,நாலார் ரூபா” என்றதும் கூட்டம் முந்திக்கொண்டு காசை நீட்டும். 4 ரூபாய் ஐம்பது காசு என்றாலும் நாலார் ரூபாய் என்றாலும் ஓரே விலைதான்.அவரத்தில் ’நெகா’’ புரியாமல் பலர் குழம்பிப்போவார்கள்.அதுதான் ஏலம் விடுபவனுக்கு வேண்டும். மக்களின் மதியை குழப்புவதில்தான் ஏல வியபாரத்தின் தந்திரம் இருக்கிறது.அதில் சுதாரிப்பவர்களுக்கு ஏலம் என்பது இன்பமான அனுபவம்.பிசகுபவர்களுக்கு கசப்பான அனுபவம். எனது ஏல அனுபவம் முழுக்க இன்பமயமானது. ஆற்றில் தன் ஒற்றைக்காலை தூக்கிக்கொண்டு மீன் வருகைக்காக காத்திருக்கும் செங்கல்நாரைப் போல நல்ல சீப்பு வரும் வரை அப்படியே செப்புச் சிலையாக நான் காத்திருப்பேன். ஊரில் பழ வியபாரம் என்பது சாப்பாட்டுக்கடை வியபாரம் போல.புதன் கிழமை நடக்கும் ஏலம் இல்லத்தரசிகளுக்கானது. வியாழன் கிழமை நடைபெறும் ஏலம் வியபாரிகளுக்கானது.வியாழன் அன்று கூடும் மாட்டு சந்தைக்கு மாடு பிடிக்க கிராமத்தில் இருந்து வரும் விவசாயிகள் யாரும் கிளப்புக் கடைக்குப் போய் சாப்பிடமாட்டார்கள்.அது வீண் செலவு என்பது அவர்களின் பொது அபிப்ராயம். சந்தையில் ஏலத்தில் விற்கும் வாழைப்பழத்தை வயிறுமுட்ட வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு,மாடு விற்ற காசை மடியில் முடிந்துக்கொண்டு அப்பாடாவென்று நடந்தே ஊர் போய் சேர்ந்துவிடுவார்கள்.
விற்பனை சந்தையில் மாட்டை பூசினார்போல் காட்ட மணிமுத்தாறு நதியில் இருக்கும் தொட்டியில் தரகர்கள் தண்ணியில் தவிட்டை கொட்டி மாட்டின் வயிறு முட்டமுட்ட வாயைப்பிளந்து உள்ளே ஊற்றுவார்கள்.இதை குடித்த மாடு அது நடக்கின்ற பாதை எல்லாம் கழிந்துபடி நடந்துபோகும்.இப்படி கழிந்தகொண்டு ஒரே தெருவில் ஓராயிரம் காளைகள் ஒரே நாளில் நடந்தால், அந்த சாலையின் கதி அதோகதிதான்.இந்த சாணத்தை தட்டுக்கூடையில் அள்ளிப்போய் விராட்டித்தட்டி காயவைத்து பிழப்பவர்களும் ஊரில் உண்டு. அப்படி போஜனம் நடத்தும் குடும்பத்துக் குழந்தைகள் அவற்றை தட்டுத்தட்டாக அள்ளிக்கொண்டு வீடுக்கு நடப்பார்கள். அந்தப் பிள்ளைகளை பார்க்கவே தலைவெறி கோலமாய் இருக்கும். நானும் பத்தாம் வகுப்பு வரும் வரை இப்படி சாணி அள்ளி இருக்கிறேன். இந்தச் சந்தையில் கிடைக்கும் சாணியையல்ல;நாங்கள் வீட்டில் வளர்த்த மாடின் சாணியை.

மாட்டுச்சந்தையில் தரகர்கள் கையில் துண்டை போர்த்திக் கொண்டு மாட்டை விலைபேசும் பாணியை பள்ளிப் பிள்ளைகளான நாங்கள் மெய்மறக்க பார்த்துக் கொண்டு நிற்போம்.மாடின் சுழியை வைத்து ஜாதகம் கணிப்பதில் எங்கள் தெருவில் மாவிடந்தல்காரர் ஒருவர் கில்லாடியாக இருந்தார். அவரால் மாடுச்சுழியால் ஏற்பட இருக்கும் நல்லது பொல்லதுகளை சொல்லிவிட முடியும் என்று ஊர் மக்கள் நம்பினார்கள். அவர் மாட்டின் பல் பார்த்து அதன் வயதைக் கணித்துவிடுவார். 2000ம் ஆண்டு வரை ஊரில் சந்தை தனியாகவும் மார்க்கெட் தனியாகவும் இருந்த்து.மார்க்கெட்டில் எப்போது வேண்டுமானாலும் போய் காய்கறி வாங்கலாம்.மார்க்கெட் பெரியக் கோயிலின் முன்பாக இருந்த இட்த்தில் இருந்த்து. அந்த இடம் கோயிலுக்கான நந்தவனத்தின் இடம் என்று கோயில் நிர்வாகம் மார்க்கெட்டை காலிசெய்ய சொல்லி நிர்பந்திக்க அந்த இடத்தை விட்டு மார்க்கெட் வாரச்சந்தை இடமான காட்டுகூடலூர் ரோட்டுக்கு இப்போது மாற்றமாகிவிட்டது.சரி, ஸ்டுடியோ கதைக்கு வருவோம்.

துரையின் ஸ்டுடியோ மணிமுத்தாறு பாலத்திற்கு அந்தப்புறம் இருந்தது.அதாவது வானொலி திடலில் இருந்து போகும் தெருவின் நேர் கடைசி முனையில் இருந்தது. பாலக்கரை பக்கம் இருந்த துரையின் ஸ்டுடியோ ரொம்ப சின்ன ஸ்டுடியோ. எனக்கு தெரிந்து அவருக்கும் கடை வருமானத்தைவிட வெளி ஆர்டர்கள் நிறைய வந்தன. ஸ்டுடியோவிற்குள்ளாகவே முடங்கிப்போய்விடாமல் ஓடியாடி வேலை செய்ய துரை தயாராக இருந்தார்.அதனால் கூப்பிட்டதும் மறுபேச்சு சொல்லாமல் வெளிவேலைக்கு வந்துவிடுவார். ஊரில் துரைதான் சகல அரசியல் பொதுக் கூட்டங்களுக்கு ஆஸ்தான போட்டோகிராஃபர். கட்சி பேதமின்றி எல்லா அரசியல் மேடைகளையும் அவர் அலங்கரிப்பார்.துரை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அடுத்தவர் கட்சி மேடைகளில் அதை அவர் காட்டிக் கொள்ளாமல் அடக்கத்துடன் நடந்துக் கொள்வதால் அவரை பலரும் விருப்பினர்.


அறிவாளயத்தில் நான் பொதுச்செயலாளர் அன்பழகனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட குரூப் போட்டோ துரை ஸ்டுடியோவில் ரெடியாகிவிட்டதாக ஒரு நாள் சைக்கிள் கடை பன்னீர்செல்வம் என்னிடம் சொன்னார். பன்னீர்செல்வம் ஒரு காலத்தில் காய்கறி மார்க்கெட்டில் சைக்கிள் கடை வைத்திருந்தவர்.பின் வியபாரம் நொடித்துப் போக, வெட்டி ஆபீஸர் ஆகிவிட்டார். கறுப்பு சிகப்பு கறைப் போட்ட வேட்டி சட்டையுடன் ஊரின் வடக்கே உள்ள, காந்திநகர் அவரது வீட்டிலிருந்து புறப்பட்டு ஊரின் கிழக்குக் கோடியான பெரியார்நகர் வரை சும்மாவே சுற்றிவிட்டு வீடு திரும்புவது பன்னீரின் வழக்கம். இந்த மாதிரியான பயணத்தில் பல கடைகளில் அவரது இடைத்தங்கல் நிகழும்.அதில் துரையின் கடையின் கீழ் இருந்த நகைப் பத்தர் கடையும் ஒன்று.அவர் போட்டோவை பற்றி சொன்னவுடன் எனக்கு அதை பார்க்கவேண்டும் போல் இருந்தது. உடனே துரை ஸ்டியோவுக்கு போய்விட்டேன். நான் போன நேரம் பார்த்து ஓனர் துரை கடையில் இல்லை. அவரது உதவியான்தான் இருந்தான். அவனிடன் எவ்வளவு விளக்கியும் பலன் எதுவும் இல்லை.சரி,உரிமையாளர் வரட்டும் என்று பல மணி நேரம் கடையில் உட்கார்ந்து இருந்தேன். முற்பகல் தாண்டி பிற்பகலும் வந்துவிட்டது.துரையை காணேம்.புகைப்படத்தின் ஆவல் பசியை அடக்கிவைத்திருந்தது.அதற்கும் அளவிருக்கிறது இல்லையா?அப்புறம் பசி அதன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்ட சமயத்தில் ஆடி அசைந்து துரை உள்ளே நுழந்தார்.

“என்னப்பா..என்ன வேணும்?” என்றார். விஷயத்தை விவரமாக சொன்னதும் “ஆமாம்..வந்த கப்பி எல்லாத்தையும் எல்லோருக்கும் பிரிச்சுக் கொடுத்துட்டேன்.உனக்கு தனியா வேணும்னா ஆர்டர் கொடுத்தா ரெண்டு நாள்ல பிரிண்ட் போட்டுத்தர்றேன்.ஆனா முழுக்காசயும் முன்ன கூட்டியே கொடுத்தாதான் பிரிண்ட் போட செளகர்யப்படும்.இப்படி பிரிண்ட் போட சொல்லிட்டு போறவங்க யாரும் வேலை முடிஞ்ச பின்னாடி திரும்ப வர்றதே இல்ல.நெறைய நஷ்டம் பட்டாச்சு.எவ்வளவு போட்டோ கிடக்கு பாரு..எடுத்துக் காட்டுடா அத” ”என தன் உதவியாளரிடம் துரை சொன்னார்.
அவனும் இட்டப் பணியை செய்வதுபோல அப்படி இப்படி தன் உடலை மட்டும் அசைந்தான்.ஆனால் எந்தப் படங்களையும் எடுத்துக் காட்டவே இல்லை.துரை,தன் காலம் பூராவும் இப்படி பலபேரிடம் ஏமாந்து போயிருப்பதென்னவோ உண்மைதான்.அதனால் அவரது சகல நஷ்டத்திற்கும் மூலக்கூறே நான்தான் என்பதைப்போல் அவர் என்னிடம் நடந்து கொண்டதை பொறுமையாக நான் கேட்டுக்கொண்டதற்கு முதல் காரணம் ,என் வயதுதான்.இந்தச் சின்ன வயதில் ஸ்டுடியோவுக்கு தனியாளாக வந்து யாரும் போட்டோ வாங்கமாட்டார்கள். இந்தப் பொடியன் காசுக் கொடுத்து போட்டோவாவது? வாங்குவதாவது என்று என்னைக் கழித்துக் கட்டவே அவர் அவ்வாறு நடந்துக் கொண்டார்.அதையும் மீறி நான் பணம் எவ்வளவு என்றதும் அவரது முகம் வெளிச்சமானது. காசை கொடுத்துவிட்டு மறுநாள் வருவதாக சொல்லிவிட்டு வந்தேன். சொன்னபடி நான் நடந்துகொண்டேன்.ஆனால் அவர் ,அவரது பேச்சைக்கூட கேட்கவில்லை.தினமும் ஒரு சாக்குப்போக்கு பேசினார்.இருந்தாலும் அவரை பகைத்துக் கொள்ளும் வயசில்லையே எனக்கு.காசையும் கொடுத்துவிட்டு ஏதோ கடன் நடையாய் நடப்பதுப் போல தினமும் நடையாய் நடந்தேன்.

90களில் பிற்பகுதி வரை ஒரு போட்டோவை கண்னில் பார்ப்பதென்றால் குதிரைக் கொம்பான காரியம். ஸ்டியோவில் உட்கார வைத்து, வெப்பத்தை உமிழும் சோடியம் லைட்டுகளை போட்டு, நம் தலையை அப்படி இப்படியுமாக அசைத்து, அவர்கள் நம்மை ஒரு போட்டோ எடுப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். இதற்கே ப்ளாக் அண்ட் ஒய்ட் படம்தான்.கலர் படமாக இருந்தால் பூந்தொட்டி பக்கத்திலோ, திரைச்சீலைகளில் வரையப்பட்ட பங்களாக்கள் பக்கத்திலோ, அல்லது புலி சிங்கம் பக்கத்திலோ நின்று சரியான வெளிச்சத்தில், சரியான தோற்றத்தில் ஒரு படம் எடுப்பதற்குள் நம்மை ஒருவழிப் படுத்திவிடுவார்கள்.அன்று டம்மி பீஸில் புட்லட்,டாக்ஸி எல்லாம் ஸ்டுடியோவிற்குள் நிற்கும். அவர்கள் மாடலாக கொடுக்கும் உடையை கொஞ்சமும் பொருத்தமில்லாமல் நாம் மாட்டிக் கொண்டு நின்றால், சற்றும் நம் இயல்பு நம்மீது பட்டுவிடாமல் ஒரு படத்தைதான் நமக்கு எடுத்துக் கொடுப்பார்கள். அவர்களின் உடை ரசனையே விநோதமாக இருக்கும். வருஷக் கணக்கில் தண்ணிப்படாமல் நாறும் கோட்டை உடுத்திக்கொண்டு எப்படி நாம் சந்தோஷமாக சிரிக்க முடியும் சொல்லுங்கள்? அப்படி பார்த்தால் நம் சங்கடத்தை கொஞ்சமும் வெளியேக் காட்டிக் கொள்ளாமல் காமிரா முன் சிரிப்பது கூட ஒரு பெரியக் கலைதான். சிவாஜி கணேசனையும் தாண்டி ’தம்’ ’கட்டி நம்மவர்கள் எப்படியெல்லாம் அந்தக்காலத்தில் நடித்திருக்கிறார்கள். நம் ஆட்களுக்கு கோட்டின் கப்பு வாடை எல்லாம் சப்பமேட்டர். எடுக்கப்போகின்ற போட்டோவின் சந்தோஷம்தான் முக்கியம். “இதெல்லாம் வேண்டாம்ப்பா”என்று வழத்தை மீறி நாம் படம் எடுக்க முயன்றால்,
“அப்புறம் படம் சரியா வரலன்னா எங்கள கேட்க்ககூடாதுங்க””என்று நம் முயற்சியை முளையிலே கிள்ளிவிடுவார்கள். ஆளாளுக்கு வாத்தியார் ஆகிவிட்டால் அவர்கள் பணி ஆட்டம் கண்டுவிடுமே? அவர்கள் சொல்லும் கட்டளைக்கு எல்லாம் அடி படிந்து நம் எடுத்துக் கொள்கின்ற படமே ஏதோ வேற்று கிரக வாசியைப்போலதான் இருக்கப்போகிறது. அவர்களின் சொல் மீறிவிட்டால்? வம்பே வேண்டாம்.நிச்சயம் அந்தப் படம் சிம்பன்ஸி மாதிரியோ,கொரிலா மாதியோதான் இருக்கும். அதற்கு பயந்தே அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் நாம் வந்துவிடுவோம். அதுதான் அவர்களுக்கும் வேண்டும். அதற்காகதான் இத்தனை பிரயத்தனம்.
அன்றைக்கு ஒரு போட்டோ என்பது இவ்வளவு அனுபவங்களை உள்ளடக்கியது.இன்று டிஜிட்டல் காமிராவை க்ளிக் என்றது அதன் குட்டித்திரையில் அதன் நல்லது கெட்டதுகளை அறிந்து கொள்ளமுடிகிறது.ஆனால் அன்று எக்ஸாம் பேப்பர் கைக்கு வரும்வரை ஒரு மாதிரி அடி வயிறு கலக்கிக் கொண்டு நிற்கும் இல்லையா?அதேபோல் நமது ஆவல் உள்ளே கிடந்து மனதைக் கலக்கிக் கொண்டிருக்கும். அன்றைக்கு இத்தனை சங்கடங்களுக்குப் பிறகு கிடைக்கும் பொருளில்தான் ஒரு சந்தோஷம் மறைந்து கொண்டிருந்தது. இன்று எல்லாமே வெளிப்படையாகிவிட்டன. இருட்டு என்பதே இல்லை.எல்லா பக்கங்களிலும் வெளிச்சம் தன் வேலையை பார்த்துவிட்டது.அதித வெளிச்சம் இன்பத்தின் பல நிறங்களைத் தின்றுவிட்டதுப்போல ஓர் உணர்வு.இன்று புதிர் என்பது சுத்தமாய் மறைந்தே போய்விட்டது. இன்றைக்கு அதனால்தானோ என்னவோ எல்லா பொருட்களும் நொடிக்கு நொடி கவர்ச்சி இழந்துவிடுகின்றன. நமது கால்களுக்கு அடியில் மறைவிடங்களே இல்லாத்தை போன்ற ஓர் உணர்வு உருவாகியிருக்கிறது. அன்று அறியாமையின் மறைவிடம் என்பது வாழ்வின் மகத்துவத்தின் இன்னொரு இடமாக இருந்தது.