Monday, September 15, 2014

வாசிக்கபட வேண்டிய ஆன்மா!








 











பொதுவாக வாரலாறு என்பது நிறைய எதிரிகளை வழங்கும் மைதானம் நமக்கு. எதிரி என்பவன் நியாய தர்மங்களுக்கு அப்பாற்பட்டவன் என்ற கருத்தாக்கம் நமக்குள் காலகாலமாய் ஊறிப்போயிருக்கும் முன்முடிவு. ஆகவே புதைக்கபட்ட எதிரியின் எலும்புத் துண்டுகளை தோண்டியெடுத்து அதனோடு நம் கனவு யுத்தத்தை உடனே தொடங்கிவிடுகிறோம். ஆனால் வரலாற்றில் எதிரி என்பவனுக்கும் நியாய தர்மங்கள் உண்டு. அவன் நியாயத்தின் பாதையில்யேயே அநியாயங்களை நிகழ்த்துகிறவனாகிறான். அவன் நியாயத்தின் வரம்பை மீறுகையில் அது அநியாயமாக உருமாற்றம் பெருகிறது. ஒரு தேச எல்லைக் கோட்டை போல துள்ளியமற்றது இவ்வரம்புக்கோடு. துரோகத்தை துரோகமாக கற்றுத்தருகிறது மேலைய வரலாறு. துரோகத்தை வாழ்வியலாக போதிக்கிறது இந்தியத் தத்துவ மரபு. இந்தியனுக்கு வரலாற்று பிரக்ஞையை காட்டிலும் அடையும் தத்துவநிலையே முதன்மையானது இதைதான் இந்நூலில் மையமாக பிடித்திருக்கிறார் யங்.

இந்தியாவின் விடியல் எனும் வரலாற்று புத்தகம் நம் எதிரி மனபோக்கிற்கு மாறாக சர் ஃபிரான்சின்ஸ் யங் ஹஸ்பண்ட் எனும் நண்பனை நமக்கு வழங்க முற்பட்டிருக்கிறது. இது ஓர் ஆறுதல்தரும் அம்சம். பகையுணர்வால் மட்டுமே இயங்கும் வலாற்றின் விதியை ஹஸ்பண்ட் கூடிய மட்டும் தோழமையுணர்வுக்கு கை மாற்றிக் கொடுத்திருக்கிறார். நிலவியலின் படி ஹஸ்பண்ட் ஓர் ஆங்கிலேயர். வரலாற்றில் அவரொரு அதிகாரி. விடுதலை எழுச்சி போக்கில் அவரோர் அந்நியர். இன்று இந்தியாவை இந்தியனுக்கே இன்னொரு கோணத்தில் உணர்த்த முற்படும் வரலாற்றாசிரியர்.
வரலாறு என்பது எல்லாவற்றுக்கும் அப்பால் ஒரு விவாதம். வேறுபட்ட வரலாற்றாசிரியர்களுக்கு இடையேயான ஒரு விவாதம்; கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான ஒரு விவாதம்; உண்மையில் நிகழ்ந்துவிட்டதற்கும் அடுத்து நடக்கவிருப்பதற்கும் இடையிலுள்ள ஒரு விவாதம். விவாதங்கள் முக்கியமானவை; அவை மாற்றங்களுக்கான சாத்தியங்களை உருவாக்குகின்றன. அந்த விவாத்ததின் வழியே உள்ளே இறங்கிகிறார் ஃபிரான்சிஸ் யங். ஏற்கெனவே படிந்து பழுப்பேறிக்கிடக்கும் வரலாற்று ஆய்வுகளை தன் நுட்பமான விவாத்ததினால் வேறு எல்லைக்கு நகர்த்திக் கொண்டுப்போடுகிறார்.அதுதான் இந்நூலின் பலம். ஓர் அந்நியனாக இருந்தும் ஓர் இந்திய மனோநிலையோடு தன் ஆய்வை களைத்துப்போகிறார். இதன் யங்கின் வீரியம்.

ஹஸ்பண்ட் சுட்டிக்காட்டும் இந்தியா நம் பாடப் புத்தகத்தில் விரவிக்கிடக்கும் வளம் கொஞ்சும் இந்தியாவல்ல; தங்களைத் தாங்களே ஆளத் தெரியாமல் அரசியல் உணர்வே அற்றுக்கிடந்த மக்கள் நிரம்பிய இந்தியா. எளிய மக்களின் உரிமைகள் குறித்து எவ்வித அறிவுமில்லாத எஜமானர்கள் ஆண்ட இந்தியா. அதாவது ஏழை இந்தியா. அன்றைக்கு இந்தியர்களின் சராசரி வருமானம் எட்டு பவுண்ட். அதே காலத்தில் இங்கிலாந்தின் தனிநபர் வருமானம் 95 பவுண்டுகள். இந்நிலை  சீராக மாற்றம் கொள்கிறது. 1901-02 களில் தனிநபர் வருமானம் இரண்டு பவுண்டுகளாக இருந்தவை 1921-22களில் ஐந்து பவுண்டுகளாக உயர்ந்திருக்கிறது.இம்மாற்றம் ஆங்கிலேய அரசின் வருகையால் நிகழ்ந்த சாதகம். இந்த சாதக குரலால் பேச ஆரம்பிக்கிறார் யங்.
இந்தியாவுக்கு வர்த்தக நோக்கத்திற்காக வந்த ஆங்கிலேயர்கள் அரசியல் ஆட்சியதிகாரம் பெற்றது தற்செயலானது என்கிறார் யங். நிர்வாகத் திரனற்று உதிரி உதிரியாக சிதறிக்கடந்த தேசத்தோடு ஒரு முழுமையாக வர்த்தகம் சாத்தியமல்ல என உணர்ந்த ஆங்கிலேயர்கள் ஒரு மைய நிர்வாகத்தை தோற்றுவிக்க முற்பட்டதன் விளைவே இந்தியா அடிமை தேசமானது என வாதிடுகிறது இந்நூல். அதை காந்தி சரிவர புரிந்துக்கொள்ளாமல் மக்களை தவறாக வழிநடத்தினார் என வாதிடும் அளவுக்கு யங்கை இட்டுச்செல்கிறது. பிரிட்டீஷ் ஆட்சியை சைத்தானின் ஆட்சிஎன காந்தி கூறுவது ஒரு புனிதரின் தவறான வாதம்என்கிறார் யங். இந்தியா பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்திற்கு அடிபடியாமல் போயிருந்தால் அது ஜப்பான், ரஷ்யா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பலம் வாய்ந்த நாட்டிற்கு அடிமையாக நேர்ந்திருக்கும் என்பதே அன்றைய நிலை. அதற்கு அரணாக பிரிட்டீஷ் படைகள் இந்தியாவுக்கு பயன்பட்டன என்பதும் யங் உணர்த விரும்பும் உண்மை. இதுவே நம் வரலாற்றில் மறைக்கப்பட்ட இன்னொரு முகம்.

ஹஸ்பண்ட் கணிப்பின்படி இந்தியர்கள் அரசியல் நுண்ணறிவற்றவர்கள். சீனர்கள் கலைகளிலும், இந்தியர்கள் ஆன்மிகத்துறையிலும் நுண்ணறிவு பெற்றவர்கள்எனலாம். ஞானமடைதல் எனும் இந்திய மரபு அரசியல் உணர்வை மட்டுப்படுத்தி வைத்திருந்திருக்கிறது. ஆகவே ஆளத் தெரியாதவர்களாக இந்தியர்கள் இருந்துள்ளனர். மேற்கத்திய வரலாற்றை அரசியல் உணர்வோடு புரிந்துக் கொண்டால் இந்தியாவின் வரலாற்றை ஆன்மிக ரீதியாகவே புரிந்துக் கொண்டாக வேண்டும் என ஹஸ்பண்ட் கண்டறிந்து வைக்கும் மைய கருத்தே இந்திய வரலாற்றின் தனித்துவமாக எனக்குப்படுகிறது. இந்திய தேச வரலாற்றுக்கு அடிசரடாக பாய்ந்தோடும் ஆன்மிக ஆற்றை இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் கணக்கில் கொள்ளாமல் இடற விட்டது மிகப் பெரிய கொடுமை.  இந்த விடுபடல்தான் இந்தியாவை வேறு பாதைக்கு அழைத்துக்கொண்டு போக நேர்ந்தது. அறிந்தோ அறியாமலோ நமது முட்டாள்தனங்களோடு நமது ஆற்றலையும் சேர்த்து நாம் புதைத்துவிட்டோம். அதற்கு சரியான சான்று, நம் நவீன கல்விமுறை.
ஹஸ்பண்டின் ஆய்வு பிரகாரம்  ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட இந்தியக் கல்வி என்பது பிராந்திய மொழியை கற்றுத்தரும் மையமாகவே செயல்பட தொடங்கியிருக்கிறது. ஆக்ராவில் முதலில் துவங்கப்பட்ட அரசுப்பள்ளி திட்டம் பின் 1853ல் வடமேற்கு மாகாணம் முழுக்க விரிவுபடுத்தப்பட்டதன் நோக்கம் இதுவாகவே இருக்கும். ஆனால் இந்திய சமயவாதிகளால் துவங்கப்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களின் நோக்கமும் சமயத்தை  சீர்த்திருத்தவதும் அதன் வழி ஞானமரபை கட்டமைப்பதுமே இலக்காக இருந்திருக்கிறது. ஆக, கல்வியின் மேலை நோக்கமும் கீழைத்தேய தேவையும் ஒன்றானவையாக அல்ல; என்பதை ஹஸ்பண்ட் இந்நூலில் மீண்டும் புரியவைக்கிறார். 

இந்தியாவின் சரித்திரத்தை ஒரு தொகை வடிவமாக்கியதில் ஹஸ்பண்ட் வெற்றிப் பெற்றிருகிறார்.அதே இந்தியா என்பது வடமாநில நிலப்பரப்பை மட்டுமே உள்ளடக்கியதல்ல; அதன் கீழ் தென்னிந்தியா எனும் பெரும் நிலப்பரப்பு பரந்துவிரிந்துள்ளது. அந்தத் திசைகளை பல ஆங்கிலேய வரலாற்றாசிரியர்கள் தவறவிட்டிருப்பதைப் போன்றே ஹஸ்பண்டும் தவறவிட்டிருக்கிறார். இந்திய வரலாற்றில் தென்னிந்திய வரலாறு என்பது ஒரு புதிர். இருண்ட பிரதேசம். இதில் முத்துலெட்சுமி ரெட்டியும், சரோஜினிநாயுடுவும் இதில் விதிவிலக்காக பங்கு கொள்கிறார்கள். ஆயினும் யங் கட்டாயம் படிக்கப்பட வேண்டிய எழுத்தாளர்.
ஏனெனில் அவர் இங்கிலாந்து போய்விட்ட பின்பும் இதமளிக்கும் இந்திய இமயமலைப் பகுதியின் அதிகாலை நேரத்தின் அழகின் அமைதிக்காகவும், சிம்லாவின் வானத்தை முட்டும் தேவதாரு மரங்களுக்காகவும், டார்ஜிலிங்கில் தெரியும் கஞ்சன்ஜங்காவின் அழகுக்காகவும் ஏங்குகிறார். இந்த ஆன்மா வாசிக்கப்பட வேண்டியது.

இந்தியாவின் விடியல்: நூல் முன்னுரை