Friday, February 20, 2009

எஸ்.ரா.அதிருஷ்டசாலி. நான் துரதிருஷ்டசாலி







இந்த வருட தீபாவளிக்கு ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளை திரும்பத் திரும்ப மறு ஒளிபரப்பு செய்கின்றன பல சேனல்கள்.அப்படி ஒரு நிகழ்ச்சியான சேரனின் பொக்கிஷம் நிகழ்ச்சியைவிஜய் டி.வி.யில் மறு ஒளிபரப்பு செய்தபோது நான் பார்க்க நேர்ந்தது. அந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு பிரபலங்களின் பொக்கிஷங்கள் என்ன, அதன் முக்கியத்துவம் என்ன என்று கேட்டு தொகுத்துத் தந்திருந்தார் சேரன்.நடிகர் நாசர் தனக்கு எங்கிருந்தோ தன் மனைவி வாங்கிவந்து பரிசளித்த பழங்காலத்து துருப்பிடித்த காமிராவைக் காட்டி ரசித்து ரசித்துப் பேசிக்கொண்டிருந்தார்.இவன் புலம்ப ஆரம்பிச்சுட்டான்யா.இனி நிறுத்தமாட்டான் என்பதுபோல நாசரைப் பார்த்துக்கொண்டிருந்தது அந்தப் பழைய காமிரா.

உண்மையில் நமக்கு பொக்கிஷம் என்று சொல்வதெல்லாம்வீட்டாரின் பார்வையில் வெறும் குப்பைகள்.ஒன்றுக்கும் உதவாத குப்பைகள். எப்படா இவன் ஒழிவான் இதைத் தூக்கி குப்பையில போடலாம் என்று காத்துக் கொண்டிருக்கும் டி.வி.சீரியல் வில்லிகள் அவர்கள்.பைசாப் பொறாததையெல்லாம் பத்திரப்படுத்தி என்னடா பண்ணப்போறவென்று பலமுறை என் அம்மா என்னை கேலி பேசியதுண்டு.அப்படித்தான்நீல.பத்மநாபன் சாகித்ய அகாதெமி விருது வாங்கிய கையோடு அவரை பேட்டி எடுக்கப் போயிருந்தேன்.அவர் ஆர்வமிகுதியில் அவரைப் பற்றிவந்த குறும்படம்தொடங்கி அத்தனை துண்டுக் காகிதங்கள் உட்பட சகலத்தையும் எடுத்து எடுத்துக் காட்டி பேசிக்கொண்டே இருந்தார்.நான் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் வரை பயணித்த களைப்பில் வாடிப்போயிருந்தேன். நேரம் போகப்போக மறுநாளே திரும்பவேண்டிய கட்டாயம் என்னை அழுத்திக்கொண்டேஇருந்தது ஒருமூட்டையைப்போல. ஒருவழியாக அவரது ஆர்வத்தைக் கெடுத்துவிடாமல் பொறுமைகாத்துப் பேசலாமா என்றேன்.அவர் மதியம் சாப்பிட்ட பிற்பாடு வீட்டிற்குப் பின்புறம் இருக்கின்ற வுட் ஹவுஸிற்குப்போய் ஆர அமர பேசலாம். வசதியான இடம் என்றார்.வுட் ஹவுஸ் என்றதும் எனக்கு உற்சாகம் தாளவில்லை. அழகான கேரளா டைப் வுட் ஹவுஸ்களை தமிழ்சினிமாக்களில் நிறைய பார்த்திருக்கிறேன்.அதன் வசீகரத்தைக் கண்டு சிலிர்த்திருக்கிறேன்.அப்படியான வுட் ஹவுஸுக்குப் போகப் போகிறத் தெம்பில் நேரம் ஆனாலும் பரவாயில்லை என்று சாதுவாக கட்டிப்போட்ட இடத்திலேயே தேமே என்று உட்கார்ந்திருந்தேன்.

அவர்”சரி, வுட் ஹவுஸுக்குப் போவோமா” என்றதும் மின்னல் வேகத்தில் எகிறிக் குதித்தேன்.போய்பார்த்தால் வீட்டிற்குப் பின்புறம் மரத்திலான ஒருசிறுக் கூடம். அதைத் திறந்தே பலவருடங்களாகியிருக்கும் போல.சந்திரமுகி படத்தில் வரும் பேய் பங்களா மாதிரி தெரிந்தது.உள்ளே னுழைந்த போது”மாப்பு..மாப்பு” என்று சவுண்ட் மட்டும்தான் நான் எழுப்பவில்லை.மற்றபடி சந்திரமுகி பங்களாவேதான்.சாவியைப் போட்டுத் திறந்தால் திறப்பேனா என்று முரண்டுபிடிக்கிறது கதவு. விடுவேனா என்று மல்லுக்கட்டுகிறார் பத்மநாபன். “சார் இந்த விஷப் பரிட்சை வேண்டாம். வீட்டிலேயே ஒக்கார்ந்துபேசிகிடுவோமே”என்றேன். அந்த வீட்டின் மகத்துவத்தை எப்படியாவது எனக்கு புரியவைத்துவிட வேண்டும் என்பதில் விடாப்பிடியாக நின்றார்அவர்.“இந்த வுட் ஹவுஸ் ரொம்ப பிரமாதமா இருக்கும். இது என் பழைய வீட்டில்தான் இருந்துச்சு. என் மகளுக்கு அந்தப் பழைய வீட்டைக் கொடுத்துட்டேன். அங்க கெடந்தா வீணாயிடுமே... அதான் அப்படியேபெயர்த்து இங்க தூக்கிட்டு வந்துட்டேன்.”என்றார்.அதன் அழகைவிட அதனுடன் பத்மநாபனுக்குமுள்ள உறவு என்பது உயர்வானது என்பதாக அதை நான் புரிந்து கொண்டேன்.சாவிச் சண்டை முடிந்து கதவைத்திறந்து வுட் ஹவுஸுக்குள் போனால் ஒரே ஒட்டடை. உலுத்துப்போன வாடை. மின் விசிறியைப் போட்டால் டர்ரு...டர்ரு..டர்ரு.. என்று சத்தம் எழுப்புகிறது. என் பேனாவை மின்விசிறியின் கம்பிகளுக்கிடையில் விட்டு இறக்கைகளைச் சுற்றிவிட்டேன்.ம்ம்ம்ம்....அசைவேனா என்றது.அடுத்து மின் விளக்கைப்போட்டால் பரபரவென்று பொறி கிளம்புகிறது.எறிந்தவாடை அறையில் பரவியது.ஆனாலும் பத்மாநாபன் முயற்சியைக் கைவிடுவேனா என்று போரிடுகிறார்.இதையெல்லாம் பார்த்தபின்பும் இங்கேதான் பேசணுமா வேற இடமே இல்லையா என்றேன்.அவரோ “இதன் உன்னதத்தெ யாரு நம்மல போல புரிஞ்சிகிடப் போறா. அழகுணர்ச்சியே இல்லாத மனுஷங்களா எல்லாம் மாறிப்போய்ட்டாங்க” என்று அலுத்துக் கொண்டார்.அவரது அழகுணர்ச்சியை இன்றைய இளையதலைமுறை எவ்வளவோ தாண்டிப் போய்விட்டது என்பதை அவரிடம் சொல்லமுடியாமல் நான் எனக்குள் தவித்தேன்.பொக்கிஷம் என்பதற்கும், அழகுணர்ச்சி என்பதற்குமெல்லாம் ஒரு பொது வரைமுறை இருப்பதில்லை. நபருக்கு நபர் மாறக்கூடியது அது.

அதெல்லாம் இருக்கட்டும் நாம் விஜய் டி.வி. நிகழ்ச்சிக்கு வருவோம். அந்தப் பொக்கிஷம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தன்னுடைய பொக்கிஷம் என்று ஹெம்மிங்வேவின் புத்தகத்தை எடுத்துக் காட்டி பேசிக்கொண்டிருந்தார். பல வருடங்களுக்கு முன் ராமகிருஷ்ணன்சென்னையில் தனக்கென்று ஓர் அறைவசதி கூட இல்லாமல் நாடோடியாகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் தன்னுடைய ஜோல்னா பையில் மாற்றுக்கு சில உடுப்புகளையும்ஹேம்மிங்வேயின் அந்தப் புத்தகத்தையும் தூக்கிக் கொண்டே திரிவாராம். அந்தப் புத்தகத்தின் அட்டையைப் பார்த்தபோது சிகப்பு நிறத்தில் சோவியத் நாட்டு புத்தகத்தைப் போல தடிமனாக இருந்தது. ’ அந்நாவலின் மொழிபெயர்ப்புக் கூட தமிழில்’கிழவனும் கடலும்’ என்று வந்திருக்கிறது.ஒருநாள் தன் ஜோல்னாப் பையை நண்பர்களின் அறையில் வைத்து விட்டு ஊருக்கு அவசரமாகப் போய்விட்டாராம். நாட்கள் ஓடின. வாரங்கள் கழிந்தன.மாதங்கள் தாண்டின. வருடங்கள் வளர்ந்தன. எஸ்.ரா. சென்னைக்கு வரவேயில்லை. பல வருடங்கள் கழித்து மறுபடி வந்து பார்த்தபோது நண்பர்களின் அறை காணாமல் போய்விட்டது.வாழ்வின் அலைக்கழிப்பில் நண்பர்கள் பறவைகளாகத் திசைதவறிவிட்டார்கள். அன்றாடம் காய்ச்சிகளாக வாழ்க்கை நடத்தும் வரும்படி இல்லாத உதிரி மனிதர்கள் இவ்வாறுஇருந்த இடம் தெரியாமல் மறைவது வடிவேலு பாணியில் சொன்னால் ஜகஜம்தான். ஆனால் அதுவல்ல பிரச்சனை. எஸ்.ரா.வின் சட்டை துணிமணிகளை விட ஹெம்மிங்வேவின் அந்தப் புத்தகத்தை எப்படி கண்டுப்பிடிப்பது. எஸ்.ரா.கேட்டதற்கு நண்பர்களோ சாதாரணமாக ”தூக்கி குப்பையில் போட்டாச்சு போட்டாச்சு” என்று பதிலளித்திருக்கிறார்கள்.குப்பைக்குப் போனது திரும்பக் கிடைக்குமா?அந்த அரிய பொக்கிஷம் லக்கி மேன் படத்தில் வரும் மெகா சைஸ் புத்தகத்தைப் போல பூலோக பிரஜைகளிடம் மாட்டிக்கொண்டு பாடுபடுமா?இப்படி பல கேள்விகளை எழுப்பும் நேரத்தில் ஒரு குட்டி பிரேக்குக்கு அப்புறம் பார்ப்போம் என்று விளம்பரத்தைப் போட்டார்கள்.எனக்கு பதற்றம் தலைக்கேறியது.ஹெம்மிங்வேக்கு என்னாச்சோ என்னாச்சோ என்று பெனாத்திக்கொண்டிருந்தேன்.ஒரு டி.வி. சீரியலுக்கு ஏற்ப அத்தனை குணாதிசயங்களும் நிறைந்த அந்நிகழ்ச்சியை தொடந்து பார்த்து விடையறிவதற்கு முன் என் வீட்டுவாசிகளுக்கு மானாட மயிலாடஜுரம் பிடிக்க ஆரம்பித்துவிட்டது.அவர்களிடம் கையில் காலில் விழுந்து ஹெம்மிங்வே புத்தகம் என்னாச்சோ கொஞ்சம் பொறுங்கள் பார்த்து விடுகிறேன் என்று அனுமதி வாங்கினேன். கடைசியில் காணாமல் போன ஹெம்மிங்வேவைஒரு நாள் எஸ்.ரா. நடந்து போகிற போது பழைய புத்தகக் கடையில் கண்டுபிடித்து எடுத்துவிட்டாராம். காணாமால் போன ஹெம்மிங்வேவை தூசுத்தட்டி வீட்டிற்குக் கொண்டுவந்துஇன்றுவரை பத்திரமாக பாதுகாக்கிறார் எஸ்.ரா. ஸோ.. அதுதான் அவருடைய பொக்கிஷம்.அது தன்னுடையதுதான் என்பதை அவர்,தான் கையெழுத்து இட்டிருந்ததை வைத்து உறுதிசெய்திருக்கிறார். அவர் சொன்னதைப் போலவே அதில் அவரின் கையெழுத்து எஸ்.ராமகிருஷ்ணன்/98 என்று ஆங்கிலத்தில் இடப்பட்டிருந்தது.எஸ்.ரா. ஒரு அதிர்ஷ்டசாலி. இதற்கு முன்கூட அவர் வெகுகாலமாகத் தேடிக்கொண்டிருந்த ஒரு புத்தகத்தை பழைய புத்தகக்கடையிலிருந்து கண்டெடுத்ததாகஎழுதியிருந்தார். பழைய புத்தகக் கடையின் வழியே அவர் நடந்து செல்லும் போது அந்தப் புத்தக வேதாளம் அவரை வா..வா.. என்று அழைத்ததாம்.உடனே அதன் ருசி நுகர்ந்துப் போய் அதைக் கண்டெடுத்துவிட்டாராம். இப்படி பல அமானுஷ்யங்கள் எஸ்.ரா.வின் வாழ்வில் நடந்திருப்பதாக ஏற்கெனவே படித்தது எனக்கு ஞாபகத்தில் வந்தது.

எஸ்.ரா.வோடு ஒப்பிடும் போது நான் ஒரு துரதிருஷ்டசாலி. 2006-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். வெளிநாட்டிலுள்ள அண்ணனிடம் பணம் கொஞ்சம் கடன் கேட்டிருந்தேன்.வங்கிக் கணக்கிலெல்லாம் போட்டால் நாட்களாகும், ஒரு குருவி மூலம் தந்துதவுவதாக சொல்லியிருந்தார்.சொன்னபடி அனுப்பியும் வைத்தார். அந்தக் குருவி ஒருநாள் எனக்கு போன் செய்தது. பணம் வந்திருப்பதாகவும்அதை எங்கு வந்து கொடுக்கவேண்டும் என்றும் கேட்டது. நான் முகவரி சொல்ல அங்கு வந்துவிடுவதாக உறுதியளித்தது. பணம் சரியான நபரிடம்தான் தருகிறோமாஎன்பதை உறுதிசெய்துகொள்ள அடையாளத்திற்கு வரும் போது என்னுடைய பாஸ்போர்ட்டை கொண்டுவரும்படி சொன்னது. நானும் பணம் வந்த சந்தோஷத்தில்பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு சைதாப்பேட்டையிலிருந்து எழும்பூருக்கு ரயிலில் பறந்தேன். ரயிலை விட்டு கீழ் இறங்கிப் பார்த்தால் மேல் சட்டைப்பையிலிருந்த என் பாஸ்போர்ட்டைக் காணோம். பதறிப்போய்விட்டேன். அலுவலகத்திலுள்ள நண்பர்களிடம் இதைச் சொன்னபோது தீவிரவாதிகளின் கையில் கிடைத்தால் அதை அவர்கள் மிஸ் யூஸ் செய்துவிடுவார்கள்.பிறகு நீதான் மாட்டவேண்டும்.ஜாக்ரதை. அவ்வளவுதான் என்றுபயமுறுத்திவிட்டுவிட்டார்கள். நானோ அந்தப் பயத்தில் தீவிரவாதியானதைப் போலவும், போலீஸ் என்னைப் பிடித்துக் கொண்டுபோய் லாடம் கட்டுவதைப் போலவும் கனவுகாண ஆரம்பித்துவிட்டேன்.தொலைக்காட்சி நிருபர்கள் என்னை உண்மையைச்சொல்லுங்க என்று கேட்டால் நான் எஸ்.ரா.வின் பொக்கிஷம் கதையில் ஆரம்பித்து பாஸ்போர்ட் தொலைந்தது வரை கக்கினாலும் உண்மைதான் என யார் நம்பப்போகிறார்கள். அனுப்பியப்பணம் வந்து சேரவில்லையென்றாலும் பரவாயில்லைதீவிரவாதியாகாமல் நம்மைக் காப்பாற்றிக்கொள்வோம் என்று புகார்கொடுக்க போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனால் கேள்விமேல் கேள்வி. விசாரணை மேல் விசாரணை.

“எப்போது தொலைஞ்சுது?”-இது போலீஸ்.

“காலையில்”-இது நான்.

“ அப்ப மதியம் வரைக்கும் என்ன பண்ணீங்க”

“ஆபிஸூல வேல அதான்..”

“உங்களுக்குதான் வேல.. எங்களுக்கு வேல இல்ல?”

“அப்படி இல்ல சார்...”“பின்ன எப்படி”என்று குறுக்கு கேள்வி கேட்டு மட்டையடி அடித்தார்கள்.உடன் வந்தநண்பர் எப்படியோ பேசி சரிக்கட்டி எஃப்.ஐ.ஆர். வாங்கிக் கொடுத்தார்.இதையெல்லாம் செய்து முடிப்பதற்குள் குருவி தொடர்ந்து எனக்கு போன் செய்ய ஆரம்பித்துவிட்டது. அங்கிருந்து அடித்துப்பிடித்துக் கொண்டு குருவியிடம் பணம் வாங்க வந்தால்பாஸ்போர்ட்டை காட்டினால்தான் பணம் தருவேன் என்று ஒரே அடாவடி. நிலைமைகளை எவ்வளவோ விளக்கிச்சொல்லியும் குருவி நம்பவே இல்லை.”இந்தக் கையில் பாஸ்போர்ட்.அந்தக் கையில பணம்”என்றது குருவி.”பாஸ்போர்ட்டே இல்லாதவங்களுக்கு எப்படி” என்றேன்.

அதுவோ கவுண்டமணி மாதிரி ”பாஸ்போர்ட் இல்லாதவங்களுக்கு எல்லாம் பணம் வராது” என்றது.கடன் வாங்கப் போய் ஏற்கெனவே 2000 ரூபாய் கட்டிவாங்கிய பாஸ்போர்ட்டும் அம்பேலானதுதான் மிச்சம்.இத்தனை வருடங்களாக அந்த பாஸ்போர்ட்டைத் தேடிக்கொண்டே இருக்கிறேன்.கிடைத்தபாடில்லை. இதற்கே அதில் என்னுடைய புகைப்படம் இருக்கிறது.முகவரி தெளிவாக இருக்கிறது.இருந்தும் கிடைக்கவில்லை.எஸ்.ரா.வைப்போல வெறும் கையொப்பம் மட்டும் உள்ள புத்தகம் இல்லையது.ஆனால் அவருக்குக் கிடைத்துவிடுவது எனக்கேன் கிடைப்பதில்லையோ?காரணம் என்னவாக இருக்குமென்று துழாவினேன். அவர் புத்தகத்தைத் தொலைத்த வருடம்:1998. கிடைத்த வருடம்:2008. மொத்தம் பத்து ஆண்டுகள் கழித்தே அவருக்குக் கிடைத்திருக்கிறது.நான் பாஸ்போர்ட்டைத் தொலைத்த வருடம்:2006. கணக்குப்படி பார்த்தால் பத்து வருடம் கழித்து 2016-ல் தான் என்னுடைய பாஸ்போர்ட் கிடைக்கும்.ஒருவேளை 2016-ல் அது எனக்குக் கிடைத்தாலும் பயன்படாது. ஏனென்றால் அதன் காலக்கெடு முடிந்தே போயிருக்கும். முடிந்து போனதை வைத்து .................வழிக்கதான் வேண்டும்.அதற்குதான் முன்னயே சொன்னேன். எஸ்.ரா.அதிருஷ்டசாலி. நான் துரதிருஷ்டசாலி.

Wednesday, February 18, 2009

சுகத்தின் கேன்வாஸ்;மருது




இந்த மாத பிப்ரவரி உயிர் எழுத்து(2009) இதழில் ஓவியர் மருதுவைப் பற்றி தா.சனாதனன், அ.மங்கை,இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட சிலர் தங்களின் பார்வையை எழுதியிருந்தார்கள். அதில்ஓவிய விமர்சகர் சனாதனன் சென்னை ஓவியக் கல்லூரியின் ஆரம்பக்கால சரித்திரத்தில் தொடங்கி மருது வரை வளர்ந்து வந்திருக்கும் வளர்ச்சியைப் பற்றி பன்முகநோக்கில்குறிபிட்டுச் சொல்லும்அளவிற்கு விரிவாக எழுதியிருந்தார். வாழும் காலத்திலேயே படைப்பாளியை கௌரவிக்கும் நோக்கில் உயிர் எழுத்து எடுக்கும் முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. ஆனால் ஓர் இதழ், ஓர்ஆளுமையைப் பற்றிய பதிவுகளை வெளியிடவேண்டும் என விரும்பினால் கொஞ்சமாவது மெனக்கெட்டு பலரிடம் படைப்புகளைப் பெற்று அது நிறைவெட்டும்வரை பொறுத்திருந்து செவ்வனே கொணர வேண்டும். அதுதான் சிற்றிதழ் தருமம்.உயிர் எழுத்தின் வளர்ச்சி ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும் என்ற என்னுடைய அதீத ஆவல் கரணமாக இதை இங்கு பதியவைப்பதாக நீங்கள் எடுத்து கொள்ளவேண்டும். இடைநிலை பத்திரிகைகளைமுழுக்க வளர்ந்த எழுத்தாளர்கள் வலைத்துப் போட்டுக்கொண்ட ஒரு காலகட்டத்தில் புதிய படைப்பாளிகளுக்கு ’வெளி’யே இல்லாமல் போய்விட்டது. அந்தப் பள்ளத்தை நிraப்பும் முயற்சியைஉயிர் எழுத்து வலிமையாகவே செய்கிறது. எஸ்.வி.ஆரின் தொடர் பங்களிப்பை இணைத்துக் கொண்டு இளைய தலைமுறையினருக்கும் சேர்த்து வாய்ப்பளிக்கும் ஆசிரியர் குழுவின் முயற்சிபோற்றத்தக்கது. இவ்விதழில் வந்த மருது சார் கட்டுரைகளைப் படித்தபோது மருதுவைப் பற்றிய என்னுடைய அனுபவங்கள் மேலெழுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.நான் 90களின் வாசகனாகமட்டுமேஇருந்த காலத்தில் வெளிவந்த கவிதை, சிறுகதை, கட்டுரை புத்தகங்கள் மருதுவின் அட்டை ஓவியத்தோடுதான் பெரும்பாலும் வெளிவரும்.அதன் அட்டைகள் பொதுத்தன்மையிலிருந்து நகர்ந்துதனித்துத் தெரியும்அளவிற்கு அதன் காத்திரம் கவரும்படியாக மிளிரும். எழுத்துத் தரத்தைத்தாண்டி மருதுவின் ஓவியங்களுக்காகவே பல புத்தகங்களை நான் நண்பர்களிடம் திருடி இருக்கிறேன். அவர் பயன்படுத்தும்வண்ணங்கள் எனக்கு வசீகரமானவை. அவரின் கோடுகளில் இருந்து வெளிவரும் மனித உருவங்கள் கலைத்துவமானவை. அடர்த்தியான கருங்கோடுகள் நம் கண்களைஊமையாக்கிவிடுபவை.அதில் தென்படும் முரட்டான மாந்தர்கள் நம்மைக் கவர்ந்திழுக்கக் கூடியவர்கள். அவரின் ஓவியங்களுக்கு பரவலான ரசிகர்கள் இருந்ததைப் போல அவரின் மெலிந்த அட்சரங்களுக்கும் அத்தனை ரசிகர்கள் இருப்பார்கள்.புத்தகத்தின் அட்டையை மெருகேற்றுவதில் கோட்டிற்கும்,ஓவியத்திற்கும்,வண்ணத்திற்கும்,எழுத்துருக்களுக்கும் இடையே பெரும் போட்டியை பார்வையாளனிடம் நிகழ்த்தச் செய்யும்வலிமை மருதுவின்ஓவியங்களுக்கே உரித்தவை. மருதுவின் ஓவியங்கள் சிறு வட்டத்தினை உடைத்துக்கொண்டு பிரபஞ்சத்தை நோக்கி விரிந்த காலத்தில் வெகுஜன ஊடகங்கள் அவரை அப்படியே அள்ளிப் பூசிக்கொள்ளக் தயாராகியது அவருக்குக்கிடத்த பெரிய வெற்றியல்லாமல் வேறென்ன. பத்திரிகைகளின் அடுத்த கட்ட அலங்காரத்திற்கு மருது பலமாகவே பயன்பட்டிருக்கிறார்.அதற்கான முன்சால்லை ஆதிமூலம் உருவாக்கியிருந்தது மருதுவுக்கு சற்று சுமைகுறைக்கும் காரியமாக அமைந்தது.அவரது படத்தோடுவெளியாகும் படைப்புகளைக் கண்ட படைப்பாளி எவரும் அக்காலத்தில் மகிழாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.அதையொரு அங்கீகாரமாகவே எழுத்தாளர்கள்கருதிய காலமது.மருதுவின் படைப்புகளை மட்டுமே ரசித்த எனக்கு அவருடன் முதல் பரிச்சயம் 2000-ம் ஆண்டு நிகழ்ந்தது. ஒரு வாரப்பத்திரிகையில் வேலை கிடைத்து சென்னைக்கு வந்த சிலமாதங்களிலேயேஅவரை சந்தித்தேன். அவரின் பழைய நினைவுகளை அசைபோடும் பகுதிக்காக சந்திக்கலாமா என்று தொலைபேசியில் கேட்டேன். உடன் இன்முகத்தோடு வரச் சொன்னார்.நந்தனம் தேவர் சிலையைத்தாண்டியுள்ள தன் காலனியின் முகவரியைக் கொடுத்து மாலையில் சந்திப்பதாகவும், வீட்டிற்கு வந்துவிடுங்கள் என்றும் பணித்தார். சென்னையின் புதுமுகவாசியான நான்அவரது முகவரியை கண்டுபிடித்துப் போவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அப்போதெல்லாம் இன்றுள்ளதைப் போல் செல் வசதிகள் இல்லை. தவறிய அழைப்பைக் கொடுத்துசங்கேத மொழியில் எல்லாம் விஷங்களை பரிமாறிக்கொள்ள முடியாது. இன்கம்மிங் கால்களுக்கே காசழுத காலம்.அவரது அப்பார்ட்மெண்ட்டிற்குள் நுழைந்த பின்பும் கூட அவரது வீடு என் கண்களுக்கு ஆக்காட்டியே நின்றது.ஒருவழியாக வீட்டின் அழைப்புமணியை அழுத்தியபோது அவர் வீட்டின் கறுப்பு கேட்டில் பித்தளைத் தகட்டில் பொரித்த மருது பெயர்ப்பலகை சற்று நிம்மதியை எனக்குப் பரிசளித்தது.இன்றைக்கும் எனக்கு பசுமையாக நினைவுள்ளது. பெரிய ஆளுமை ஒருவரை சந்திக்கப் போகிறோம் என்ற பதற்றத்தில் எனக்கு அடிவயிறு கலக்க, பெரும் சிக்கலாய்ப்போனது. சிரித்த முகத்தோடுவீட்டிற்குள் அழைத்த திருமதி மருதுவிடம் நான் முதலில் கேட்ட கேள்வி, கழிவறை எங்கிருக்கிறது என்பதுதான். மருது இப்போதுதான் வெளியில் கிளம்பியதாகவும் சற்றைக்குள் வந்துவிடுவார்என்றும் திருமதி பதிலளித்ததை பாதி காதில் வாங்கிக்கொண்டு கழிவறைக்குள் புகுந்துவிட்டேன். எதனாலோ மனதிற்குள் பிடிங்கித்தின்னும் கூச்சம் வெறி நாயைப்போல்திரிந்துகொண்டிருந்தது அன்று.என் வேலைகள் சுகமாக முடிந்து வெளித் திரும்பியபோது, மருது தரையில் விரித்திருந்த மெத்தையில் அமர்ந்திருந்தார்.சுவற்றில் நான் வாசகப் பருவத்தில் ரசித்த நகல் ஓவியத்தின் அசல்சிரித்தபடி தொங்கியது. அதற்கும் எனக்குமான உறவோடு மருதுவிடம் பேச்சைத் தொடங்கினேன். அவரோ,” ஓஓஓஓ....அதுவா” என்று பேச்சை நீட்டாமல் உடன் முடித்துக்கொண்டார்.வார்த்தகளை விரயமடிப்பதில் உவப்பற்றவர் மருது என்பதைப் புரிந்துகொண்டேன்.அவரது பரபரப்பு எனக்குப் பிடிபடவில்லை. பேசி முடித்துக் கொண்டு வெளியில் வந்து எதிரில் உள்ள மரத்தோடு அவரை நிற்க வைத்து படமெடுத்தார் என்னுடன் வந்த நிழற்படக் கலைஞர்.அவரது பளீர் வெள்ளை உடுப்பு, அறிவுத்தனமான புன்னகை,கவர்ச்சியான நரை,அழகான நீலநிற ஜீன்ஸ், வட்டமான மூக்குக் கண்ணாடி என்று அவரது உருவம் எனக்குள் வீடுவரை தொடர்ந்துகொண்டே வந்தது.அவரிடமிருந்து எனக்கான அவரின் நகலை நான் எடுத்து வந்ததை மருது அறிய வாய்ப்பில்லை. அவர் எங்களை வழியனுப்பும் முன் ”ஒரு விஷயம் கடற்கரய்... ..................நான்சொன்ன இந்தவிஷ்யத்தைமட்டும் குறிப்பிட்டு எதையும் எழுதிடாதீங்க” என்றார். அதை இன்று வரை கடைப்பிடித்து எழுதாமல் தவிர்க்கிறேன்.எங்களை வழி அனுப்பிவிட்டுச் சென்றவரை திருப்பிப் பார்த்தேன். அப்படியொரு வேக நடை அவரிடம். அது மருதுவின் கோடுகளைப் போல வலிமை,வேகமானவை.
***********

ஏறக்குறைய காட்சிமொழியிலான உலகத்தில் நாம் இன்றைக்கு வாழ்கிறோம். அதனால்தான் எந்தத் தகவல்களையும் காட்சிவடிவத்தில் காண விரும்புகிறோம். காட்சி மொழி என்பது நம் அறிவைத்தீர்மானிப்பதாய் செயலாற்றுகிறது. அதன் போக்கில் உண்மை என்பது நம்மிடம் கட்டமைக்கப்படுகிறது. மருத்துவ ரீதியான கண்டுபிடிப்பில் மூலைக்கும் கண்களுக்கும் நேரடித்தொடர்பு இருப்பதாகவும் நிறச்சேர்க்கைகளை அதன்பொருட்டே நாம் உள்வாங்கிக் கொள்வதாகவும்மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.பிம்பம் என்பது மூளையுடைய பிரதிபலிப்பு.அப்படிப் பார்த்தால் சரியான மொழி என்பது லிபிகளில் மட்டுமே இல்லை. காண் புலத்தில் சம அளவில் இயக்கம் கொள்கிறது. ஆக, மருத்துவம் அறிவுறுத்தும் அறிவுலகத்தில் வந்து நிற்கிறோம் நாம்.அதனால்தான் நமது எல்லா நடவடிக்கைகளுக்கும் பொருள் சொல்ல முற்படுகிறது மருத்துவ உலகம்.காட்சிமொழி நிர்வகிக்கும் இன்றையகாலத்தில் ஊடகத்துறையில் முக்கியப்பங்காற்றும் ஓவியமும் தனது அடுத்த கட்டத்தை தழுவிக்கொள்ளத் துவங்கியுள்ளது. அனிமேஷன் போன்றபுதிய வடிவத்தினை பூசிக்கொள்ளவும் ஆரம்பித்திருக்கிறது. இதையொட்டிதான் மருதுவின் இன்றைய ஓவிய மொழியினை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர் தனது பழைய சாயைகள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு முற்றிலும் மாறுபட்ட ஓர் நவீனம் கடந்த உலகத்திற்குள் பயணிக்கப் போய்விட்டார். மரபின் பிசுறுகளுக்காக மருதுவைக் கொண்டாடியவர்களுக்கு அவரின்தற்கால ஓவியங்கள் நிறைவளிப்பதில் இன்றைக்கு சில தடைகள் உருவாகியுள்ளன. அவரது புதிய காண்மொழியோடு ஒப்பிடுகையில் நம்மவர்களின் ரசனை மொழி கொஞ்சம் மட்டுப்பட்டிருக்கிறது.பழைய பார்வையாளனின் ரசனையின்உயரம் சற்று குன்றியிருக்கிறது.அவரது ஓவிய மொழிக்கும் பழைய பார்வையாளனின் காண் புலத்திற்கும் ஒரு பள்ளம் உண்டாகியிருக்கிறது. மரபின் இழைகளுக்காக மருதுவின் கோட்டினைக்கொண்டாடிய தலைமுறையினர் தேங்கி நிற்கிறார்கள். இது மருது தலைமுறை ரசிகர்களுக்கு நேர்ந்திருக்கின்ற பிரச்னை. இன்றைய தலைமுறைக்கு மருதுவின் அசைவுறும் நிழல்மனிதர்களை உள்வாங்கிக் கொள்வதில் சிக்கல் இராது.ஏனென்றால் இன்றைய பின்நவீன உலகத்தில் அனைத்தம்சங்களும் கேலிச்சித்திரத் தனம் கலந்திருக்கின்றது.எல்லா திரு உருவங்களிலும்கார்ட்டூன் தன்மை கலந்திருக்கிறது.ஆக, அனைத்திலும் கார்ட்டூன் அம்சமே பிரதானம் வகிக்கின்றன.கேலி என்ற கலைக்கு சம்பந்தமில்லாத கருப்பொருள் கலையோடு கை குலுக்கிக் கொள்கிற ஒரு நிலை கலை உலகத்திற்குள் புதிய வரவாக வந்து சேர்ந்திருக்கிறது. அப்படியென்றால் ஒவ்வொரு பாத்திரத்தோடும் அதன் கார்ட்டூன் தன்மையை சேர்ந்தே ஒரு ஓவியன் காட்சிப்படுத்தும் தேவை உருவாகியுள்ளது.அப்படிப்பட்ட படைப்புகளை ரசிக்கும் மனநிலை சென்ற தலைமுறையினருக்கு இல்லையென்றே சொல்வேன்.கலையோடு கேலிகள் கலப்பதில் உவப்பற்றவர்கள் அவர்கள். ஆனால் மருதுவோதலைமுறையைத் தாண்டும் கலைஞனாக தன்னை அடையாளப்படுத்த ஆரம்பித்துவிட்டார். இன்றைய இளம் தலைமுறையினரோடு தன் ரசனையை இணைக்கும் புள்ளிக்கு தன் கோடுகளை நீட்டும்அளவுக்கு பின்நவீன கலைப்பிரதிகளோடு தன் கோட்பாட்டினைக் கொண்டு கலக்கிறார். தன் பழைய புள்ளியிலிருந்து மருது நகர்ந்திருப்பது எதேச்சையானதல்ல; கருத்தியல் ரீதியானது.தலைமுறை ரீதியானது.கருத்தியல், கோட்பாடுகளின் அளவுகோள்களோடு தன் படைப்பை வெளிப்படுத்தியதில் சென்ற தலைமுறை ஓவியர்களில் மிக முக்கியமானவர் மருது. அவரது படைப்புகள் பற்றி தீர்மானமானகருத்தியல்கள் மருதுவிடம் வெளிப்படையாகவே உள்ளன. அரசியல் செயல்பாடுகளை தெளிவாக முன் வைப்பதில் மருது அளவிற்கான ஓர் ஓவியன் இளையதலைமுறையில் உருவாகவே இல்லை.ஓவியத்தின் மூலம் மருது முன்வைத்த அளவிற்கு தன் கருத்தியலை பிரதியளவிலும் முன்வைத்திருக்கிறார். சமகால இலக்கியப் பிரதி,படைப்பாளிகளோடு மருதுவிற்கு இடைவெளி இல்லாத ஒரு சம்பந்தம் இருக்கிறது. சங்க இலக்கியம் தொடங்கி சமகால இலக்கியம் வரை மருதுவோடு எவரும்விவாதிக்கலாம்.அவற்றோடு அறிதலுண்டு அவருக்கு. இன்றைய இளம்தலைமுறை ஓவியர்கள் நாளிதழ்களைக்கூட வாசிப்பதில்லை என்று பகிரங்கமாக மேடைகளில் தெரிவிக்கிறார்கள்.அதில் அவர்களுக்கு எவ்விதக் கூச்சமும் இருப்பதாகத் தெரியவில்லை. படிக்காத, கலை உலகத்தோடு தொடர்பற்ற சாதாரண ஒரு விவசாயிக்கு நாட்டின் அரசியலோடு தொடர்பிருக்கும் அளவிற்குக் கூட ஒரு கலைஞனுக்கு நாட்டின் அரசியலோடுதொடர்பில்லை என்பதிலிருந்தே நம் அடுத்த கலை தலைமுறை அரசியல் எப்படி கெட்டுப்போய்க் கிடக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளமுடிகிறது. அரசியலோடு தொடர்பை அறுத்துக்கொள்கிற ஒரு படைப்பாளியின் படைப்பைமக்கள் எப்படி கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியும். ஆக, கலைத்துறையின் வேராக இருக்கிற ஓவியத்தில் இன்று ஊனம் உண்டாகியிருக்கிறது.இந்த ஊனத்தை ஓரளவிற்கு காப்பாற்றும் அரும் பணியை மருது போன்ற பழைய தலைமுறையினர் செய்திருக்கிறார்கள். மருதுவின் பழைய கோடுகள் ஏற்படுத்திய அதிர்வுகள்அளவுக்கு அவரின் இப்போதைய கோடுகள் கூடுதல் பலம் இல்லாததுபோல் நிற்கின்றன. வலிமை என்பது அவரின் பழையகோட்டில் ஒரு வன்முறையைப்போல நிகழ்த்தப்பட்டுள்ளது.அது ஆழ்மன கலையாற்றலின் தங்குதடையற்ற வன்முறை அல்லது பாய்ச்சல். ஆனால் இப்போதையகோடுகளில் சாந்தம் தவழுகிறது. எள்ளல் கூடி நிற்கிறது. எல்லா உருவங்களும் காற்றில் கலைவதைப்போல் கலைகின்றனர்.கண்ணாடியில் மறைவதைப் போல் மறைகின்றன.நிழற்உருவங்கள் அசலோடு மோதுகின்றன. சித்திரங்களோடு அதன் குணநலன்களும்மோதிச் சிதைவுறுகின்றன.ஆகவே அதில் பாய்ச்சல் மென்மையாக வெளிப்படுகிறது.
நான் முன் வேலை செய்த அப்பத்திரிகையை விட்டு விலகி வேறு இதழில் சேர்ந்த பிறகு மருதுவை ஒரு தொடருக்கு படம் போடச் சொல்லி அழத்தேன்.இம்முறையும்மறுக்காமல் சரி தான் அவரது பதிலானது.பல படைப்பாளிகள் பங்கேற்கும் அத்தொடருக்கு மருதுவால் கனம் சேர்க்க முடியும் என்று நாங்கள் எல்லோரும் நம்பினோம். பலவாரங்களை தாண்டி தொடர் வெற்றிபெற்றது. மருதுவின்ஓவியங்களில் கறுப்பு அதிகமாக இருப்பதாகவும் அதை குறைத்தால் நல்லதென்றும் பலர் விரும்பியதால் அவரிடம் சொன்னேன்.அவரோ வழக்கம் போல கோபத்தை கூட்டிப் பேசினார்.அவர் கோபப்படும் தருணம் அந்த மாதிரி சந்தர்ப்பமாகவே இருக்கும் என்பதால் நான் மௌனியாகியிருந்தேன். நியாயம் பேசும் தருணமல்ல இது என்பதால் உருவான மௌனம் அது.தொடருக்கு படம் வரைவதாக இருந்தால் எழுத்தாளரின் பெயர் எந்த அளவிற்காக எழுத்துருவில் போடப் படுகிறதோ அதே அளவுக்கு தன் பெயரையும் போடவேண்டும்என்று வலியுறுத்திய கையோடுவரைய ஆரம்பித்தார். அவரின் அணுகுமுறை எனக்குப் பிடித்திருந்தது.படைப்பாளிகள் எல்லோரும் சமமே. எழுத்து ஒரு மொழி என்றால் கட்சியும் ஒரு மொழியே.

Tuesday, February 17, 2009

அறிவியலுக்கு அப்பால் நிகழும் அறிவீனம்





மசினக்குடியில் துவங்க உள்ள நியூட்ரினோ திட்டத்தினை நேரடியாகச் சென்று பார்த்து வரலாம் என்று கடந்த ஜனவரி மாதம் கள ஆய்விற்கு கிளம்பினேன். கோவையிலுள்ள ஓசை நண்பர் காளிதாசன்அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாக சொல்லியிருந்தார்.அவரின் வழிகாட்டலோடு சென்று திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கையில் புறப்பட்டுவிட்டேன்.ஆனால் அவரால் அன்று என்னுடன்ஒத்துழைக்க முடியாமல் போனது. மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் கோவையில் அன்று யானை- மனித மோதல் அதிகரிப்பதை தடுப்பதற்கு என்ன என்ன செய்யலாம் என்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள இருந்ததே அதற்கு காரணம். மேற்குத் தொடர்ச்சி மலையைச் சுற்றியுள்ள யானைகளின் வலசைப் பாதைகள் (எலிஃபெண்ட் காரிடார்) பல தனியார் நிறுவனங்கள்ஆக்கிரமித்துவிட்டதால் யானைகளின் போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டுப் போய்விட்டது. பல கல்வி நிறுவனங்கள் ஏக்கர் கணக்கில் இடங்களை வளைத்துப் போட்டுள்ளதால் இன்று யானைகள் தம் வாழ்விடத்தை புழங்க முடியாமல் தவிக்கின்றன. கோடைக் காலங்களில் மலையிலுள்ள நீர்ப்பிடிப்புகள் வற்றி ஓடைகள் வழியாக நீர் சமதளத்திற்கு வந்துவிடுவதால் யானைகள்குடிநீர்த் தேடி கீழ் இறங்கத் தொடங்கிவிடுகின்றன.வருகிற வழியில் தென்படுகின்ற விளைநிலங்களில் அவை புகுந்து நீர்குடிக்க முற்படுவதால் பயிர்கள் நாசமாகிவிடுகின்றன. இதைத் தடுக்க விவசாயிமேற்கொள்கின்ற முயற்சிகள் யானை-மனித மோதலாக மாறிப்போகின்றன என்பதெல்லாம் பல காலமாக இயற்கை ஆர்வலர்கள் கண்டறிந்து சொல்கின்ற உண்மைகள்.ஆனால் அரசோ,நிறுவனங்களோ இதுவரை தங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொண்டதாக வரலாறு இல்லை. எப்படியாவது இந்தமாதிரியான கூட்டங்கள் வாயிலாவது அரசின் கவனத்தை ஈர்க்கலாம் என்று முட்டிமோதிக்கொண்டிருக்கிறார்கள் ஆர்வலர்கள்.அதற்கான ஒரு முன்மாதிரி கூட்டமாக அது அமையும் என்பதால் அதை முதலில் கவனியுங்கள் என்று காளிதாசனிடம் சொல்லிவிட்டேன்.அவரோ, அவர் இல்லாத குறையைத் தீர்ப்பதற்காக ஓசை கணேஷ் அவர்களை என்னுடன் அனுப்பித் தந்தார்.அவரோடு அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தியும்,பொறியாளர் தேன்முருககனியும் உடன்வந்தனர்.கிருஷ்ணமூர்த்தி கோவையில் ஒரு பேக்கரி கடையின் உரிமையாளர்.அது முக்கியமல்ல; அதைவிட முக்கியம் இயற்கை ஆர்வலர்,நல்ல நிழற்படக் கலைஞர்.லட்ச ரூபாய்க்கு மேல்செலவழித்து சொந்தமாக காமிராவாங்கி காட்டு விலங்கினங்களைப் படமெடுத்து வருபவர். இதுவரை அவர் எடுத்த படங்கள் சில நூறுகளைத் தாண்டியிருக்கும். அவற்றை எங்கும் அவர் இதுவரைவெளியிட்டதே இல்லை என அவர் சொல்லிக்கொண்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவற்றை என்ன செய்வீர்கள் என்று நான் கேட்டதற்கு,” சும்மா ஹாபிக்குத்தான் எடுக்கிறேன் சார்” என்றார் கிருஷ்.இதுவரை அவரது காமிராவில் சிக்கிய ஜீவராசிகள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததோ இப்படி ஆய்வுப் பிரக்ஞை இல்லாமல் இருக்காதீர்கள். அதன் முக்கியத்துவத்தை முதலில்நீங்கள் உணருங்கள் என்று எச்சரித்து வைத்தேன்.

கிருஷ்ணமூர்த்தி எந்தவித உபரிப் பழக்கமும் இல்லாதவர். பீடி, சிகரெட், கறி,மீன் உண்ணாது சைவ ஜீவனம் நடத்துபவர்.ஆகவே இவரதுநிழற்பட செலவுகள் குறித்து அவரது வீட்டாருக்கு புகாரில்லை என அவர் தன்னைப் பற்றி அடிக்கடி சொல்லிக்கொண்டார். அதற்கு நண்பர் கணேஷ் கவுண்டமணியின் ஒரு காமெடி வசனத்தைச்சொல்லி அவரை கிண்டலடித்துக் கொண்டது பயணத்திற்குக் கொஞ்சம் கூடுதல் சுவாரஸ்யமாக இருந்தது. கணேஷ் எனக்கு ஏற்கெனவே நன்கு பரிச்சயமானவர்தான்.அவருடன் நான்கு வருடங்களுக்கு முன்பு நான், இந்திரன், வ.ஐ.ச.ஜெயபாலன் என்று ஒரு பெரிய பட்டாளமே டாப்சிலிப்பிற்கு போய் இருந்தோம்.அப்போது கணேஷ் செய்த உதவிகள் அளவில் பெரியவை.ஆகவே கணேஷுடன் பயணிப்பதில் சிக்கல் ஏதும் இல்லை எனக்கு.அதிகாலை ஐந்து மணிக்கு கோவையிலிருந்து உதகையை நோக்கிக் கிளம்பினோம். பொறியாளராக வேலை செய்துகொண்டிருந்த கணேஷ், இயற்கை அழிவினங்களைத் தடுத்து நிறுத்துவதற்காகமுழு நேர களப்பணியாளராக மாறியவர். இவரைப் போன்றோரைச் சந்திக்கும்வேளையில் என் குற்றவுணர்ச்சி மேலெழுவதை என்னால் சீர் செய்ய முடியாமல் தவிக்கநேரிடுவதுண்டு.போகும் வழி முழுக்க காட்டைப்பற்றிய தகவல்களை மிடறு மிடறாய் கொடுத்துக் கொண்டே இருந்தார் கணேஷ்.விஷயங்களை சிரஞ்சி மாதிரிமெல்லஏற்றுவதில் கணேஷ் வல்லவர்.இவர் இப்படியென்றால்காளிதாசோ நேர் எதிர்.நிறுத்தாமல் பெரு வெள்ளமாய் தகவல்களை அள்ளிவிடுபவர்.என்னைப் போன்ற ஆர்வலர்களுக்கு வேண்டுமானால் காளிதாசன் தரும் இடைவிடாத தகவல்கள் இன்பமானவையாக இருக்கும். சாதாரண சுற்றுலா வாச மனநிலையாளர்களுக்கு சோர்வாகிவிடும். கணேஷ் அளவாக பேசுபவர். அதீதமாக உபசரிப்பவர். காளி அதிகமாகபேசுபவர்.அளவை விட குறைவாக உண்பவர். செவிக்கு உணவு வேண்டுபவர்கள் காளி பாக்கத்தில் நின்றுக் கொள்ளலாம்.நானோ எறும்புத்தீனி தின்பவன்.வாய் வலிக்க பேசுபவன். ஆக,இவ்விஷயத்தில் காளிதாசனும் நானும் ஒரே ஜாதி. திட்டமிட்டபடி காலை ஏழு மணிக்கு கோத்தகிரிக்கு(கோத்தர் கிரி என்றதன் திரிபு இது.கோத்தர் என்ற பழங்குடியின் மலை என்பது இதன் பொருள்) சென்றுவிட்டோம். அங்கு சரியான குளிர்.காலைச் சிற்றுண்டிக்காக ஒரு ஹோட்டலுக்குள் அமர்ந்தோம். கை அலம்பும் நீரில் கை நனைத்த போது கைகள் விறைக்கும் அளவிற்கான குளிர். என்னுடன் சென்னையிலிருந்து வந்திருந்த புகைப்பட நிபுணர் சித்ரம் மத்தியாஸுக்கு கைவிறைத்துப்போய் அவர் துடிதுடித்ததைப் பார்த்த ஹோட்டல் சர்வர் அதிகக் குளிராகவா இருக்கிறது என்று அவரைப் பார்த்துக் கேட்டதும், வருடம் முழுவதும்கட்டப்பாறையாய் சுடும் சென்னைவாசிக்கு குபுக்கென்று சிரிப்பு வந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இருக்காது என்பதைபோல் நான் தோசையைப் பிய்த்து உள்ளே தள்ளிக்கொண்டிருந்தேன்.உணவு முடிந்ததும் தாமதிக்காமல் வண்டி ஊட்டி, தொட்டபெட்டா(இது ஒரு கன்னடச் சொல். தொட்ட- என்றால் பெரியது. பெட்டா-என்றால் மலை.ஆக பெரியமலை என்பது பொருள்)வழியே எங்களின்கார் மசினகுடிக்கு போய்க் கொண்டிருந்தது.

இங்கே ஒரு தகவலை உங்களுடன் கட்டாயம் நான் பகிர வேண்டும். ஊட்டியிலிருந்து மசினகுடிக்கு கல்லட்டி குறுக்குவழி. இவ்வழி நேர்வழியைவிடமுப்பது கிலோ மீட்டர் குறைவானது. ஆனால் கொஞ்சம் ஆபத்தான பாதை. ஹேர்பின் வளைவைபோல நெளிவான பாதை.அதித சறுக்கல் நிறைந்தது. இவ்வழியில் செல்லும் போது குறிப்பிட்டப்பகுதியில் முதல் கியரில்தான் வண்டி போகவேண்டும்.அடுத்து வரும் சில தூரங்களை இரண்டாம் கியரில் பயணிக்கலாம். ஏன் இந்தக் கட்டுப்பாடு என நண்பர்களை விசாரித்தேன். இப்பாதை பாதாளசறுக்கலைப்போல இருப்பதால் வாகனம் எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதை ஓட்டுநரால் கண்டறிய முடியாது ஆகவே இக்கட்டுப்பாடு என்றார்.அதோடு பயங்கர வேகத்தில் வண்டி போவதால் சட்டென்று பிரேக் போடும் போதுபிரேக் ஷூ செயலிழந்துவிடுமாம். தினமும் இங்கே ஒரு சில விபத்தாவது நடக்கும் என்றார். மெதுவாக வந்ததற்கே எங்களின் வாகனத்திலிருந்து பிரேக் ஷூ உருகும் வாடை வந்ததை நுகர்ந்ததும் அதன்விபரீதத்தை நான் உணர்ந்து கொண்டேன்.மசினகுடியிலுள்ள சிங்காரா நீர் மின் திட்டம் செயல்படும் இடத்திற்கு நங்கள் சென்றுசேர்ந்த போது நேரம் மதியத்தைத் தொட்டிருந்தது.சிங்காரா திட்டம் 1923ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட ஒரு திட்டம். மலையின் மீதிருந்து கீழிறங்கும் நீரை குறிப்பிட்ட உயரத்திலேயே ஓர் அணையமைத்து(GLEN MORGAN DEM), குழாய்கள் மூலம் நீரை கீழிறக்கிக் கொண்டுவந்து, சுழற்சிக்கு அதனை உட்படுத்தி,அதன் மூலம் மின் உற்பத்தி நிகழ்கிறது.ஆங்கிலேயர்களால்ஆசியாவிலேயே நிறுவப்பட்ட முதல் திட்டம் இதுதான். இதை நிறுவியபோது ஏற்பட்டசெலவினைத்தவிர மின் உற்பத்திக்கென்று தனி செலவே இல்லாமல் மின்சாரம் கிடைக்கின்ற அருமையான திட்டமாக அதுஅமைக்கப்பட்டிருந்தது. ESCHER WYSS ZURICH என்ற கம்பெனியின்எந்திரங்களை ஆங்கிலேய அரசு இங்கிலாந்திலிருந்தும்,ஜெர்மனியிலிருந்தும் வரவழைத்து இதற்கு உபயோகப் படுத்தியுள்ளது. மொத்தம் ஏழு நீர் மின்சுழற்சி எந்திரங்கள் ஆரம்பத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தன.அதில் இரண்டு இப்போது பழுதாகிவிட்டதாக நிறுத்தி இருக்கிறார்கள்.விசாரித்ததில்அவ்வெந்திரம் இரண்டும் பழுதுபட்டமைக்காக நிறுத்தவில்லையாம். இதர ஐந்து எந்திரங்களுக்கு உதிரி பாகங்கள் கிடைக்காதென்பதால், மாற்று பயன்பாட்டிற்கு இதிலிருந்து பகங்களைக் கழற்றிபயன்படுத்திக் கொள்வதற்காக இயக்காமல் நிறுத்தியுள்ளோம் என்றார்கள் சில ஊழியர்கள். சிங்காரா தொடங்கப்பட்டபோது இதில் 70 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது. இப்போது 59 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது.

இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை யூனிட் ஒன்றிற்குவெறும் 18 பைசாவிற்குகொள்முதல் செய்கிறது தமிழக அரசு.இதோடு ஒப்பிடுகையில் சென்னையிலுள்ள GMR மின் நிலையத்திலிருந்து யூனிட் ஒன்றிற்கு 8 ரூபாய்க்கு, இன்றையதேதியில் மின்சாரத்தை அரசு கொள்முதல் செய்கிறது. இதன் அருகாமையில் உருவாக்கப்பட்ட மின் திட்டம்தான் பைக்காரா மின் திட்டம். இங்கு 150 மெகாவாட் மின் உற்பத்திசெய்யப்படுகிறது. சிங்காராவை முதலில் நிறுவிய கம்பெனிக்காரர்கள் அதன் எந்திரச் செயல்பாட்டை வியந்து மறுபடியும் அவர்களின் சொந்தச் செலவிலேயே புது திட்டத்தை அமைத்துத் தருவதாகஉறுதியளித்தார்களாம். ஆனால் நம் சுதேசி அரசு சும்மாவெல்லாம் தேவையில்லை என்று சுயமரியாதைப் பேசி அவர்களை கிளப்பிவிட்டுவிட்டு பல கோடி செலவழித்து புதுத் திட்டத்தினைமலையைக் குடைந்து உள்ளே கட்டியிருக்கிறது. இதில் வேதனைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ஆங்கிலேய அரசு இயற்கை வளத்தைச் சிதைக்காமல் பயபடுத்தி உருவாக்கிய ஒரு திட்டத்தினைகெடுத்துவிட்டு அதன் பக்கத்தில் மலையைக் குடந்து,இயற்கையை நாசப்படுத்தி பைக்காராவை கட்டி சாதித்திருக்கிறார்கள் நம் நாட்டு விஞ்ஞான அறிவுஜீவிகள்.சிங்காராவில் வேலைசெய்து ஓய்வு பெற்ற தேவசுந்தரம் என்பவரிடம் பேச்சுக் கொடுத்தேன். சுமார் 90 வயது மதிக்கத்தக்க முதியவரான அவர்,எந்த வசதியும் இல்லாத இந்தக் கிராமத்திற்குஈரோட்டிலிருந்து வந்த எல்.எம். சுந்தரம் என்பவர்தான் சாலை வசதிகளை ஏற்படுத்தித் தந்ததாகக் குறிப்பிட்டார். சிங்காரா, பைக்காரா மின் உற்பத்தி நிலையம் செயல்படுகின்ற இந்த மலைக்கு அருகில்தான் நியூட்ரினோ சுரங்கத்தைஇரண்டு கிலோ மீட்டர் மலையைக் குடைந்துஉருவாக்கப்போகிறார்கள். நியூட்ரினோ சுரங்கம் இங்கு வந்துவிட்டால் இப்பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் சேர்க்கப்பட்டுவிடும்.ஏற்கெனவே மின்பற்றாக்குறையால் அவதிப்படும் தமிழகம்சிங்காரா,பைக்காராவை இழக்க நேரலாம். வேண்டாத தலைவலியை தமிழக அரசு தலையில் கட்டிக்கொள்ளவும் வேண்டிவரும்.நல்ல வேளையாக தமிழக அரசு இத்திட்டத்திற்கு இன்னும்அனுமதி தரவில்லை. வனத்துறையும் இதனை கடுமையாக எதிர்க்கிறது.இவை மட்டும்தான் இப்போதைக்கு சாதகமான விஷயங்கள்.சூரியனிலிருந்தும்,நட்சத்திர ஒளியிலிருந்தும் வெளியேறும் அணுவிலும் மெலிதான நியூட்ரினோ துகள்களை எடுத்து ஆய்வை நடத்தினால் பல பிரபஞ்ச ரகசியங்களுக்கு நம்மால் விடைகண்டறிந்துவிட முடியும்.உலகம் எப்போது உண்டானது,மனிதர்கள் எப்போது தோன்றினார்கள் என பல கேள்விகளுக்கு பதில் வந்துவிடும்.நாம் சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும்போதே நம் உடலை ஊடுருவி பல நியூட்ரினோக்கள் செல்கின்றன.வெற்றுவெளியில் இவற்றை பிடித்து எளிதில் ஆய்வுசெய்ய முடியாதென்பதால் அதற்கென்று தனிச் சுரங்கம் அமைத்து குளிர்வான பகுதியில் அதை பிடித்து ஆராய்ச்சிக்கு உட்படுத்தவேண்டும். ஆகவேதான் அதற்கு சுரங்கம் தேவையாகிறது.

இதற்கு ஏற்கெனவே பயன்படுத்தாமல் கிடப்பில்போட்டுவிட்ட கோலார் தங்கச்சுரங்கம் மாதிரியான சுரங்கங்களை பயன்படுத்தலாம். இந்தியாவின் முதல் நியூட்ரினோ ஆய்வுச்சுரங்கம் 1965ல் அங்குதான்முதலில் அமைக்கப்பட்டது.அதைப் புதுப்பிக்காமல் விட்டுவிட்டு ஆரோக்கியமான மலையைக் குடைந்து புதியதாக ஆராய்ச்சிக்கூடத்தை நிறுவ வேண்டுமா என்பது சுற்றுச்சூழல்வாதிகளின் நயமான கேள்வி. உலக அளவில் பாதுகாக்கப்பட்ட முல்லை,குறிஞ்சிக்காடுகளில் முதுமலை மிகமிக முக்கியமானகாடு என்பது ஊரறிந்த தகவல். முதுமலை புலிகளின் சரணாலயமாக அண்மையில்தான் அறிவிக்கப்பட்டிருக்கிறது.தன் சுதந்திர தினப் பேருரையில் நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங் புலிகளைக் காப்பாற்றவேண்டும் என்று சூளுரைத்திருக்கிறார்.ஆசியளவில் அதிகப்படியான யானைகள் முதுமலையில்தான்உள்ளன. ஆசியளவில் தலை சிறந்த யானை ஆய்வாளகள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியே தங்களின்ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். யானைகளை அழித்துவிட்டு ஆய்வைச் செய்தால் அதற்குப் பெயர் ஆய்வல்ல; அகழ்வாராய்ச்சி.டினோசர்களைப்போல யானைகளும் முன்பொருகாலத்தில் இங்குவாழ்ந்தன என்று பாடத்திட்டத்தில் நம் பிள்ளைகளுக்கு நாம் பாடம் நடத்தலாம்.அதுதான் கடைசியாக நிலத்தில் வாழ்ந்த பெரிய விலங்கினம் என்று கதை பேசிக் கொள்ளலாம்.அந்தக் கொடுமையைஅரங்கேற்றிவிட்டுதான் நம் வ்ஞ்ஞானகள் ஓய்வார்கள் போல.விஞ்ஞானியும்,முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாம் அய்யாவோதன் கனவுத் திட்டமான நியூட்ரினோ மட்டும் நிறைவேற்றப்பட்டால் உலக அரங்கில் நம் நாட்டில் அறிவியல் கொம்பு பெரியதாகிவிடும் என்கின்றார். நமது விஞ்ஞானிகள். உலகம்முழுவதும் இயற்கை வளங்களைமீட்டெடுக்க திரும்பிக்கொண்டிருக்கிற காலத்தில் மலையைச் சிதைத்து, இயற்கையை அழித்து அறிவியல் வளர்க்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

கலாம்இத்திட்டத்தை மேற்கொள்ளுங்கள் என்றாரே ஒழிய,மலையை உடைத்து உள்ளே கட்டுங்கள் என்று எவ்விடத்திலும் சொல்லவில்லை. ஆகவே அறிவியல் கனவு காண்பவர்கள்சற்று இயற்கை வளங்களைத் தாண்டி ஒதுக்குப் புறமாகப்போய் தன் கனவைக் காணலாம்.இந்த மலையைக் குடைவதால் வரக்கூடிய கழிவுகள் அப்பகுதியின் சுற்றுச்சூழலையே நாசப்படுத்திவிடும். மலைக்குள்ளே கட்ட உள்ள ஆராய்ச்சிக்கூடத்திற்கு மொத்தம் 1லட்சம் டன் இரும்புப்பொருட்கள் தேவைப்படும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.இதைத்தவிர சிமெண்ட்,ஸ்டீல்,பி.வி.சி.பைப்,காப்பர்,அலுமினியம்,மணல் என்று 35 ஆயிரம் டன் பொருட்கள் தேவைப்படும் என்கிறார்கள்.8டன் ஏற்றக்கூடிய டிராக்டரைப் பயன்படுத்தினால் 17 ஆயிரம் ட்ரக் லோடுகள் தேவை. இவர்களின் கணக்கில் பார்த்தால் மொத்தம் 6,30,000டன் வருகிறது.அப்படி என்றால்தினசரி வேலைகளுக்காக 50 வகனங்கள் 50 ரவுண்ட் டிரிப் அடித்தாக வேண்டும்.இதில் மலையை குடைவதால் கிடைக்கக்கூடிய கழிவை கணக்கில் எடுத்துக்கொள்ளவேயில்லை. அதையும்சேர்த்தால் அம்மாடியோ காடே கணாமல்போவதென்னவோ உறுதி. தினமும் வந்துபோகின்ற வாகனத்தில் அடிபட்டு அத்தனை ஜீவராசிகளும் சாகவேடியதுதான்.நம்மால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உருவாக்கவே முடியாத 5000 சதுர அடி கிலோ மீட்டர் உள்ள முதுமலை காட்டை ஒழித்துக்கட்டிவிட்டு வெறும் ஆராய்ச்சிக்கூடத்தை மட்டும் வைத்துக் கொண்டு நாக்கை வழிக்கவேண்டியதுதான். அதுதானே வளர்ச்சி.அதற்குத்தானே அறிவியல்.1990களில் உறுதிசெய்யப்பட்ட இத்திட்டத்தை இப்போதுதான் மக்களின் பார்வைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். இந்திராகந்தி அவர்களால் ஏற்படுத்தப்பட்ட வனச்சட்டம் மட்டும் இல்லயென்றால்நமது காடுகளை அழித்து என்றைக்கோ துவம்சம் செய்திருப்பார்கள் பலர். பாதுகாக்கப்பட்ட ஒரு வனப்பகுதிக்குள் தனி நபர்கள் பிரவேசிப்பதற்கே ஆயிரம் கெடுபிடிகள் உள்ளபோது இப்படியொருஆய்வைமேற்கொள்ள மத்திய அரசு எப்படி அனுமதித்தது.அதற்காகதான் இயற்பியல் ஆராய்ச்சிகளுக்காக உண்டாக்கப்படும் காரியங்களுக்கு நீதிமன்றம் தடை வழங்கக்கூடாது என்று மத்திய அரசு அதிரடிசட்டம் இவ்வாண்டு கொண்டுவந்ததோ என சந்தேகிக்க வைக்கிறது நம்மை.வனப்பகுதிக்குள் அமைக்கப்படும் இத்திட்டத்திற்கு முதலில் “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ”என்ற ஆய்வறிக்கையை சமர்ப்பித்தால்தான் மத்திய அரசின் அனுமதியைப் பெறமுடியும் என்பதற்காகஅவசர அவசரமாகSACON என்ற சலீம் அலி அவர்களின் ஆய்வு நிற்வனத்தின் உதவியோடு அம்மதிப்பீட்டை சமர்ப்பித்து அனுமதி வாங்கியுள்ளனர்.அம்மதிப்பீட்டை மூன்றே மாதங்களில் நடத்தி இருக்கிறது SACON.நிச்சயம் இவ்வேலைக்கு குறந்தது ஒரு வருடமாவது தேவைப்படும். சாகானே அதை தோராயமான ஆய்வே என்றும், முழு முடிவான ஆய்வல்ல என்று ஒப்புக் கொண்டுள்ளனர். அப்படி இருக்கையில் CARE EARTH என்ற ரஞ்சித் டேனியலின்ஆரய்ச்சியகம் “சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்ட அறிக்கை” சமர்ப்பிப்பதில் என்ன நியாயம் இருக்க இயலும்.ராம்மன்,டார்ஜிலிங் போன்ற மலைகளுடன் ஒப்பிடுகையில் மசினகுடியிலுள்ள சிங்காரா மலை உறுதியானது என்கிறது ஆய்வு. முன்னதாகச் சொன்ன இரு மலைகளையும் குடைந்தால்அவை வெறும் 24 மணி நேரம் மட்டுமே விழாமல் நிற்கும் திறன் படைத்தவை.
சிங்காராவோ துளையிட்ட 90 நாட்கள் வரை கீழே விழாமல் நிற்கும் வலிமையைக் கொண்டது. அதனால்இவர்கள் சாவகாசமாக வேலை செய்துகொள்ளலாமாம்.இதெல்லாம் சாதகமானவை. ஆகவேதான் இங்கே வருகிறோம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஊமைத்தகவலாக மக்கள் முணுமுணுப்பதுஇவ்வாராய்ச்சிக் கூடத்தில் வேலை பார்க்கப் போகும் விஞ்ஞானகள் எல்லோரும் மைசூர், பெங்களூர் வாசிகலாம்.அவர்களின் கூப்பிடு தூரத்தில் உள்ள, பெங்களூரைப்போல குளுகுளுஇடம் இதுதான் என்பதாலேயே விடாமல் இவ்விடத்தை சுற்றுகிறார்கள் என்கிறார்கள்.

அமெரிக்கா,ஜப்பான்,கனடா,இத்தாலி என்று பல நாட்டில் நியூட்ரினோ கூடம் செயல்படுகிறது.இதில் இத்தாலியில் மட்டும்தான் கிரான்சாசோ என்ற மலைப் பகுதியில் கூடம் இருக்கிறது.அங்கும்சில வருடங்களுக்கு முன் அங்கு பல பிரச்சனைகள் உருவாகியுள்ளன.அதை இப்போது என்னவாக இருக்கும் என்று ஆராய்கிறார்கள். இதெல்லாம் நம் கண்முன் தென்படும் முன்னெச்சரிக்கைகள்.மசினகுடி ஊராட்சித் தலைவி சங்கீதா பின்னுவைப் பார்த்துப் பேசிய போது அவர், மசினகுடியில் வேலைவாய்ப்பே இல்லை. இந்தத் திட்டம் வந்தால் மக்களுக்கு வேலை கிடைக்கும் என்றார்.ஐ.என்.ஓ.வின் அதிகாரப்பூர்வ வளைதளமோ இது யாருக்கும் வேலைவாய்ப்பை வழங்கும் திட்டமில்லை என்கிறது.ஊராட்சியின் வரும்படிக்காக ஏற்கெனவே மசினகுடி,ஊட்டியைச் சுற்றி கட்டப்பட்ட ரிசாட்ஸ்கள் இரவில் அடிக்கும் கும்மாளத்தினால் மிருகங்கள் அவதிப்படுகின்றன.வரும்படியும் பெரியதாக இல்லை. தனி நபர்களே லாபப் பணத்தில்கொழிக்கிறார்கள்.முதுமலையிலுள்ள பெட்ட குரும்பர் என்னும் ஆதிவாசிப் பழங்குடி இனத் தலைவர் மாதன் அவர்களை சந்தித்துப் பேசலாம் என்று தர்ஷ் தேக்கேகரா உதவியோடு போனேன்.தர்ஷ் இத்திட்டத்தினைமலையில் நிறுவ எதிர்ப்பு தெரிவிக்கும் சுற்றுச்சூழல் அமைப்பிகளை ஒருகிணைத்து என்.பி.ஆர். அலையன்ஸ் என்னும் அமைப்பைக் கட்டி அதன் ஒருங்கிணைப்பாளராக செயல்படுபவர்.பழங்குடித்தலைவரோ,யாரையும் நாங்கள் ஆதரிக்கவும் இல்லை.எதிர்க்கவும் இல்லை. எது எப்படி கெட்டால் எங்களுக்கென்ன என்ற தொனியில் பேசியதில் எங்களுக்கு வியப்பொன்றுமில்லை.

கள ஆய்வெல்லாவற்றையும் முடித்துக் கொண்டு மசினகுடி உட் ஹவுஸில் பழங்குடி ஒருவர் தயாரித்து வழங்கிய அசைவச் சாப்பாட்டை ஒருபிடி பிடித்தோம். சற்று ஓய்விற்குப் பின்ஐ.ஐ.எஸ். யானை ஆய்வாளர் கண்ணன் உதவியோடு முதுமலையின் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாத உட் பகுதிக்கு அவரது ஜீப்பில் புறப்பட்டோம். பயணித்த சாலையின் இருமருங்கிலும் திட்டுத்திட்டாக மொத்தமாக சேர்த்து 68 மான்களை நான் கணக்கிட்டுப் பார்த்தேன்.முதுமலையிலிருந்து தெப்பக்காடு வழியாக கார்குடி,அப்பர் கார்குடி, ஹேம்ஹட், இம்பர்லா வரை சென்று திரும்பினோம். ஹேம்ஹட்டில் ஒரு அழகான ஏரி இருந்தது.சதுப்புநிலக்காடு என்று கண்ணன் அதை குறிப்பிட்டார். யானைகள் உள்ளிட்ட விலங்கினங்கள் நீரருந்தும் ஏறி அது. அழகழகான பறவைகள் பலவற்றைப் பார்தோம். கிருஷ்ணமூர்த்தியும், சித்ரம் மத்தியாஸும்படமெடுத்துக் கொண்டார்கள்.ஹேம்ஹட் ஏரியைச் சுற்றி அற்புதமான மூங்கில் காடுகள் நிறைந்திருந்தன.அதனையொட்டிய கரையோரத்தில் ஆங்கிலேயர்கள் நீரருந்த வரும் விலங்கினங்களைவேட்டையாடுவதற்கு பூமிக்கு மேல்புறத்தில் ஒரு வுட் ஹவுஸ் கட்டியிருக்கிறார்கள்.அது இப்போது நினைவுச்சின்னம் மட்டுமே. வேண்டுமானால் மேல்நின்றவாறு மிருகங்களைப் பார்த்து ரசிக்கலாம்.இம்பர்லா செல்லும் வழியில்தான் அவ்வதிசயம் நிகழ்ந்தது. அந்த மலைச்சரிவில் மொத்தமாக சேர்த்து ஏழு யானைகளைப் பார்த்தோம்.அதில் இரண்டு குட்டிகள்.கொம்பன் ஒன்று. நான் காட்டில் வைத்து கொம்பனைப் பார்ப்பது இதுவே முதல் தடவை. ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தங்கள் இருக்கும்.ஆப்பிரிக்க யானைகளில் ஆண் பெண்இரண்டிற்கும் தந்தங்கள் இருக்கும்.வழியில் தென்பட்ட யானை ஆய்வாளர் சிவசுப்பரமணியன் நேற்று இங்குதான் ஒரு புலியைப் பார்த்தேன்என்றதும் எங்களுக்கு ஆர்வம் இருப்புக் கொள்ளவில்லை. உடனே கண்ணனோ இங்கிருந்து சற்று தள்ளிதான் நானும் ஒரு புலியைப் பார்த்தேன் என்றார். அதை அவரது சின்ன கேண்டி காமிராவில் படமெடுத்துள்ளதையும் காண்பித்தார்.உடனே ஜீப்பை விட்டு இறங்கி கொஞ்ச தூரம் துழாவினோம். புலி அப்படியேவா அங்கேயே படுத்திருக்கும் என்று கண்ணன் நகைக்க உடன் புறப்பட்டோம்.அங்கிருந்து வேறு வழியாக கீழிறங்கியபோது ஒருசில மயில்கள் தென்பட்டன. இங்கே பாதையில் புலிகளை கணக்கெடுக்கும் இரு காமிரா டிராக்கள் அடுத்தடுத்து இருந்தன.அது எங்களை படமெடுக்கும் ஆவலில் வாகனத்தைவிட்டு இறங்கிப்போய் நான் நின்றேன். அவ்விரண்டுமே பாட்டரி இல்லாமல் பழுதாகிக்கிடந்தன. இந்த காமிராக்களின் கணக்கீட்டின் படிதான் இக்காட்டில் மொத்தம் 36 புலிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. காமிரா பழுதாகாமல் தொடர்ச்சியாகக் கணக்கிட்டால் நிச்சயம் அதிகமான புலிகள் இருப்பதை கண்டறியலாம்.சாலை ஓரமாகவே இரண்டு காட்டெருதுகள் கண்ணில் தட்டுப்பட இறங்கிப்போய் நோக்கியதில் அங்கு ஒருஎருதுதான் நின்றிருந்தது.தூரத்திலிருந்து பார்க்க இரண்டாக கண்களை ஏமாற்றியிருக்கிறது என்பது புலனானது. ஒரு டன் எடைக்கு மேல் இருக்கும் என்றார் கணேஷ்.இவ்விடத்தில் நான் குறிப்பிட மறந்து போன ஒரு தகவலைச் சொல்லிவிடுகிறேன். சிங்காரா போனேன் இல்லையா அங்கே பொறியாளர், எழுத்தாளர் சோமு.பழ.கருப்பையா வீட்டில் சில மணிதிவளைகள் தங்க நேர்ந்தது. அப்போது அவரது வீட்டிற்கு முன்னுள்ள மரத்தில் ஹார்ன்பில்(இருவாச்சி- கேரளாவின் தேசியப்பறவை. தமிழ்நாட்டின் தேசியப்பறவை-பச்சைப் புறா)பறவை வந்தமர்ந்தபோது மகிழ்ச்சியில் எல்லோரும் துள்ளிக்குதித்தோம். ஹார்ன்பில் பறவையில் மொத்தம் தமிழ்நாட்டில் நான்கு வகை உள்ளதாக கணேஷ் சொன்னார்.அதில் ஒன்று சாம்பல் நிற வகையைச் சார்ந்தவை. ஹார்ன்பில் தலையில் அழகான கொண்டைகள் இருக்கும்.மூங்கிலை இரண்டாகப் பிளந்தால் பிறை மாதிரி இருக்கும் வடிவத்தைப் போன்று இருக்கிறது அதன் கொண்டை.இரு கொண்டைகள் கொண்ட ஹார்ன்பிலும் உண்டு. அவர் இப்படி தனக்குப் பெயர் தெரியாத பல பறவைகளை தினமும் காண்பதாகவும், காமிராவை வீட்டிற்கு உள்ளே சென்று எடுத்துவருவதற்குள் அவை பறந்துபோய்விடுவதாகவும்வருந்தினார்.