Sunday, June 13, 2010

பெருதலுக்கு அப்பாலான இழப்பு










நமது வளர்ந்த நகரங்கள் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாக வேண்டும் என்ற விஷயத்திற்கு அதிக முக்கியத்துவத்தை கொடுப்பதை போல தினமும் பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன. தமிழ்க அரசின் கொள்கை சார் நடவடிக்கைகளும் அவ்வறே நடப்பதாக திட்ட வடிவிலான அறிவிப்புகள் நமக்கு தகவல் சொல்கின்றன. சமீபத்தில் கூவத்தை சுத்தப்படுத்தி அதை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது சம்பந்தமாக தமிழக அரசின் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்ட கையோடு அத்திட்டம் சம்பந்தமாக தன் குழுவினரோடு சிங்கப்பூர் சென்று ஆய்வையும் மேற்கொண்டு திரும்பி இருக்கிறார். இத்திட்டத்திற்காக அரசு அறிக்கையளவில் ஒதுக்கியிருக்கும் தொகை மொத்தம் 120கோடி. தலா
சென்னை மாநகராட்சிக்கு 840கோடியும்,பொதுப்பணித் துறைக்கு 640கோடியும் ஒதுக்கப்பட்டிருப்பதாக துணை முதல்வர் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்து இருக்கிறார்.அவரின் தகவலின் படி இத்திட்டம் தற்போதைய முதல்வர் மு.கருணாநிதியின் கனவுத் திட்டமாக எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது.

கூவம் புணரமைப்புத் திட்டம் சம்பந்தமாக சில ஆலோசனைகளை பெற அமெரிக்க டெக்சாஸ் நகரில் ஓடும் நதியை பார்வையிட்டு அதன் படிப்பினைகளின் பேரில் தமிழக கூவத்தை சிறப்புற வைப்பதாக முதலில் சில கருத்துக்கள் நிலவ ஆரம்பித்தன. ஆனால் டெக்சாஸ் நதியின் அனுகுமுறைகள் கூவத்தோடு பொறுந்திப் போகாமல் இருப்பதால் இவ்விஷயத்தில் அமெரிக்காவின் உதவி நமக்குதவாது என்று தமிழக அரசு முடிவெடுத்துவிட்டதாக செய்திகள் வழியில் மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது. இதற்கிடையில் சிங்கப்பூரில் ஓடும் நதியை தூய்மைப்படுத்த அவ்வரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் நமக்கு சாதகமாக இருக்கும் என்பதால் துணை முதல்வர் குழு சிங்கப்பூர் விரைந்தது.1977ம் ஆண்டில் சிங்கப்பூர் நதியின் நிலைமை தற்போதைய கூவம் ஆற்றின் நிலமையைவிட மோசமாக இருந்ததாகவும் அதையே அவர்கள் சீர்படுத்திவிட்டதாகவும் நம் தமிழக அரசிற்குத் தகல்கள் கிடைத்திருக்கிறது. மிக மோசமான தன் நிலையை 1987ம் ஆண்டு சிங்கப்பூர் நதி முற்றிலுமாக உதரிவிட்டு புதுப்பொளிவை எட்டியிருகிறது. அதை சீர்படுத்த சிங்கப்பூர் அரசிற்கு பத்தாண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. ஆக, இவ்வழியே உகந்ததென்று நம் அரசு தீர்மானித்து, பி.யு.பி. என்ற சிங்கப்பூர் அமைப்புடன் ஒப்பந்தங்கள் முடிவை எட்டவுள்ளன.

12கீ.மீட்டர் நீளமே கொண்ட சிங்கப்பூர் நதியை பத்தாண்டுகளில் சுத்தப்படுத்தியிருக்கிறார்கள் அவர்கள்.ஆனால் நம் கூவம் திருவள்ளுவர் மாவட்டத்திலிருந்து தொடங்கி சென்னை வந்து சேர்வது வரை மொத்தம் 72கீ.மீட்டர் நீளமுடையது.சிங்கப்பூர் நதியை விட நீளத்தில் பெரியது. சென்னை நகரில் மட்டுமே 18கீ.மீட்டர் நீளத்தை கூவம் உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது.
ஆக,நம்முடைய கூவம் சுத்திகரிப்பின் காலம் இரண்டு மூன்று மடங்கு அதிகரிக்கலாம். ஐந்து வருட ஆட்சியின் காலத்திற்குள் இதை செவ்வன- தலைமைச் செயலக பாணியில் முடிப்பதென்பது ஆகாத காரியம். அப்படி விரைந்து முடிப்பதற்கு இது அரசின் பார்வையில் அதி முக்கியத்துவம் பெற்ற திட்டமுமல்ல. நாட்பட இத்திட்டத்தை அரசு வாபஸ் பெற்றுக்கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கும் இதில் ஒன்றுமில்லை. வீராணம் திட்டத்தை தொடங்கியக் கையோடு திரும்பப் பெற்றுக்கொண்ட அரசுதான் இந்த தி.மு.க.அரசு. ஆட்சியாளர்கள் எதை சொல்கிறார்களோ அதையே உண்மையாக பாவிக்கும் போக்கு மக்களிடம் இருக்கும் வரை சகலமும் அரசின் ராஜ்ஜியம் சார்ந்ததுதான். இதில் மக்களின் பங்கு எதிவுமில்லை.
இன்றைக்கு சென்னை மாநகராட்சியின் முலமாக பல கோடிதொகைகள் பூங்காக்கள் அமைப்பதற்கு செலவிடப்படுகிறது.சாலைகள் இருமருங்கிலும் உள்ள சுவர்களில் ஓவியம் வரைந்து செயற்கையான பசுமையை நிரப்பும் திட்டமும் படு ஜரூராக நிரவேற்றப்பட்டு வருகிறது. மெரீன கடற்கரையை மட்டும் பல கோடிகள் வரை செலவு செய்து சர்வதேச தர அந்தஸ்துக்கு உயர்த்தும் முயற்சிகள் நடந்தேறியும் உள்ளன.

இந்த வார இறுதியில் 1கோடியே 30லட்சம் செலவில் பனகல் பூங்கா மட்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.டி.நகர் பூங்கா,நடேசன் பூங்கா,அண்ணாநகர் டவர் பூங்கா உள்ளிட்ட 200பூங்காக்களையும் 300 சாலையோர பூங்காக்களையும் மூன்றரை கோடி செலவில் புதுப்பிக்க இருப்பதாக அரசு செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வளவு முயற்சிகளும் நாட்டின் பசுமையை காப்பாற்ற அரசு செய்யும் முயற்சிகள் என்றே விளம்பரப்படுத்தப்படுகிறது .ஆக, நமது அரசு நாட்டை பசுமை பொங்க வைத்திருப்பதையே விரும்புகிறது. இப்படி ஒரு பிம்பத்தையே விளம்பரங்கள் வாயிலாக பொதுமக்கள் மத்தியில் கட்டி எழுப்பியும் வருகிறது.சுற்றுச்சூழல் விஷயத்தில் அத்தனை பெரிய கரிசனத்தை அரசு காட்டுவதாக சொல்லப்படும் தகவல்களில் துளி உண்மையும் இருப்பதில்லை என்பதே இதில் நம் தரப்பு வாதமாக சொல்ல வருகிறோம்.

இந்த வார(19.02.10) இறுதியில் தினமலர் செய்தி தாளில் வெளியான ஒரு செய்தி இவ்வாறு சொல்கிறது: தாம்பரம் ‘மெப்ஸ்’’ வளாகத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் திருநீர்மலை ஏரியையே நஞ்சாக்கி வருகிறது.இதனால் 1000 ஏக்கர் விளைநிலங்கள் அழிவின் விளிம்பில் தத்தளிக்க ஆரம்பித்திருக்கின்றன.இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இந்த ஏரி அப்பகுதி வாசிகளின் கழிப்பறையாக மாறிய அவலமும் நடந்தேற தொடங்கியிருக்கிறது என கவலை கொள்கிறது அச்செய்தி.

கூவத்தின் முக்கியதுவத்தைப் பேண முற்படும் அரசு திருநீர்மலை ஏரிக்கு கவலை கொள்வதாக தெரியவில்லை.சென்னை பூங்காக்களை காக்க முற்படும் நம் அரசு நொய்யல் ஆற்றின் பேரழிவு குறித்து கவலைப்படுவதாக தெரியவில்லை. அப்போது அரசின் கவனத்திற்குள் ஏதோ உள்ளர்த்தம் இழைவதை நம்மால் ஊகிக்க முடிகிறது. எந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் நிற்பந்தத்தால் கூவம் கவனம் பெற்றதோ அதே பன்னாட்டு நிறுவனங்களின் நிற்பந்தத்தால் தாமிரபரணி மாசாக்கப்பட்டிருக்கிறது.
அழிந்து வரும் நமது பண்பாட்டு அடையாளங்களை பற்றி கண்ணீர் வடிக்கும் ஒருசில அரசியல் கட்சிகள் இதை ஏனோ கண்டுக் கொள்வதேயில்லை. தினமும் ஒரு போராட்டம் மேற்கொள்ளும் பிரதான எதிரிக்கட்சியான அ.தி.மு.கவோ அதன் தலைவி ஜெயலலிதாவோ இவ்வியஷத்தை காண்பதாகத் தெரியவில்லை. இவர்கள் இருவரும் அரசியல் இயக்கம் சார்ந்து முரண்பட்டாலும் முதலாளிகள் சார்ந்த நலனில் ஒன்றுபட்டே இயங்குகிறார்கள்.

அரசியல் ஊழல் குறித்து அல்லோலப்படும் பத்திரிகைகள் கூட மணல் திருட்டு,நதிநீர் திருட்டு குறித்து சமூகம் சார்ந்து ஒரு அதிகத் தகவலை வெளியிடுவதில்லை.அப்படியே வெளியாகும் சிறுசிறு செய்திகள் கூட மக்களின் கவனத்தை ஒருங்கே குவிக்க விட்டாமல் சிதரடித்து வெளியிடுகின்றன.அதையும் தாண்டி வெளிவரும் செய்திகள் தனிநபர் முயற்சியின்பால் இதழிகளில்/பத்திரிகைகளில் பிரசுரமாகின்றன. மக்களின் கவனம் இப்பிரச்னைகளில் குவிக்கப்படாத்தற்கு அவர்களின் அறியாமையே காரணமாககிறது. இதன் முழு விபரங்களை அறியாத மக்கள், இப்பிரச்னையை இரண்டாம்(அ)மூன்றாம் நிலையில் வைத்து அனுக ஆரம்பிக்கிறார்கள்.ஆகவே இதன் அபாயம் அவர்களால் அறியப்படாத அளவுக்கு மறைக்கப்பட்டுவிடுகிறது.

ஒருவர் தனது பொருளை காணவில்லை என்று தரும் புகாரை ஏற்றுக்கொள்ளும் நம் காவல்துறை சட்டம் ஒரு ஒட்டு மொத்த சமூகத்தின் வாழ்வாதாரமாக இயங்கும் நதியை காணடித்துக் கொண்டிருக்கும் கிரிமினல் குற்றத்தை எப்படி அனுகுவதென்று புரியாமல் கண் விழித்து நிற்கிறது. இதைவிட பேரவலம் எங்காவது உண்டா. இங்கு சட்டத்தின் ஊமை தனத்தை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறேம். இதை மாற்றும் பொருப்புள்ள அரசியல்வாதிகள் ஆதாய பங்கீட்டின் அடிப்படையில் பிழைப்பை நடத்தப் போய்விட்டார்கள்.
நாட்டின் மையப் பிரச்னையானவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு ஏதேதோ பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல்வாதிகளிடம் இருந்து இங்கேதான் தனித்து நிற்கிறார் சி.மகேந்திரன். அவரின் ‘ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம்’’’ என்ற இந்நூல் எதை பற்றி இன்றைய அரசியலாளர்கள் கவனம் கொள்ள மறந்துப் போனார்கள் என்பதை குறித்து வகுப்பெடுக்கிறது. வெறும் வாய்ப் பேச்சுகளால் பந்தல் அமைக்கு அரசியல்வாதிகளின் மீது தன் சவுக்கை சுழற்றுகிறது. இப்புத்தகத்தில் மொத்தம் 58 தலைப்புகளின் கீழ் வைத்து விவாதிக்கப்படும் அத்தனை சங்கதிகளும் அவ்வளவாக வெளிச்சம் காணாதவை.அல்லது அரசியல் அழுத்தங்களால் வெளிச்சமிட்டு காட்டாமல் திட்டமிட்டே மறைக்கப்பட்டவை.

ஆற்றுவழி பாதைகள் எல்லாம் வெரும் வெயில் தவழும் வெப்ப ஆறாக காய்ந்துக்கிடக்கும் பின்னணி பற்றி பேசத் தொடங்கும் மகேந்திரன் ஆற்றையும் அது சார்ந்து தமிழனிடம் மிளிர்ந்த பண்டையத் தொழில்நுட்பத்தையும் உயர்ந்த நாகரிகமுள்ள அகில உலக உயர் குடிகளோடு ஒப்பிட்டுப் பார்த்து கதறுகிறார். அவரின் கேவல் புலம்பலாக மட்டுமே அல்லாமல் அறிவார்ந்தத் தளத்தில் ஆய்ந்தலசி ஆராய்ந்து பேசுகிறது. அறிவு பெறுக்கோடு சமநிலையும் கொள்கிறது. நீரின் மரணத்தை பற்றி விவாதிக்க ஆரம்பிக்கும் இவரின் முதல் கட்டுரை நிகழ இருக்கும் எதிர்கால ஆபத்திற்கு அடிக்கப்பட்ட முதல் அபாய மணியாக இறங்குகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையின் பிரான நசிவை பற்றி எல்லா கட்டிரைகளும் சதா அலறிக் கொண்டே உள்ளன. மலையின் அழிவு என்பது நதியின் அழிவு மட்டுமே அல்ல; அது மழையின் அழிவையும் உள்ளடக்கிதான் உள்ளது. நிதியின் ஆதார நீராக மழை நீரையே பெறும்பாலும் நம்பியுள்ள மாநிலம் தமிழகம். காடுகளிலிருந்தும்,மலைகளிலிருந்தும் நாம் பெறும் ஒவ்வொரு சொட்டு நீரும் மழையின் கொடையே அன்றி, நிலத்தடிநீர் மட்டுமே சார்ந்ததல்ல.

உலகம் முழுவதும் இயற்கையில் நான்கு பருவங்களே உண்டு.வசந்த காலம்,கோடை காலம்,இலையுதிர் காலம்,குளிர் காலம் என்பதே அவை. இந்தியாவில் மட்டுமே மழைக்காலம் என்று கூடுதலான ஒரு பருவக்காலம் இருக்கிறது.இதனாலேயே
ஏப்ரல் – மே மாதங்களில் பகற்பொழுது நமக்கு அதிகமாகிறது. இந்த வெயில் துணைக் கண்டமான இந்தியாவில் வடமேற்கு பகுதி,சவூதி அரேபியா,ஆப்பிரிக்காவின் வடகிழக்குப் பகுதி உள்ளிட்ட நிலப்பரப்பை சூடாக்குகிறது. ஆக, மழை என்பது நம் நிலப்பரப்பில் முக்கியப் பாங்காற்றுகிறது.
இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையினர் தொகுத்தளிக்கும் மழை பற்றிய புள்ளி விவரங்களைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் பெய்யும் மழையின் மொத்த அளவையை கணித்துவிடலாம். இந்த மழைநீரின் ஒரு பகுதி நிலப்பரப்பிலிருந்து ஆவியாவதன் மூலமும்,தாவரங்களின் இலைவழியே தன் ஈரத்தை வெளியேற்றுவதன் மூலமும் கழிந்துவிடுகிறது என்கிறது ஒரு தகவலறிக்கை. எஞ்சிய நீர் மட்டுமே நம் நிலப்பரப்பை ஈரப்படுத்தும் ஆற்றுநீராக செயல்படுகிறது.மண்ணிலிருந்தும், தாவரங்களிலிருந்தும் ஆவியாகும் மழைநீரின் அளவை, கிடைக்கும் மொத்த மழைநீரின் அளவை வைத்துக் கழித்தால் கிடைக்கும் மழைநீரின் அளவே ஆற்றுநீரின் அளவாக இருக்கிறது. இப்படி ஒரு கணக்கீட்டு முறையை இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் டாக்டர் எ.என். கோஸ்லா என்பவர்தான். இவரின் கணக்கின் படி இந்திய நிலப்பரப்பில் மொத்தம் 330 மில்லியன் ஹெக்டேரில் ஆண்டொன்றுக்கு சராரியாக ஒரு மீட்டருக்கும் கூடுதலான மழைப் பொய்கிறது. அதாவது 400 மில்லியன் ஹெக்டேர் அளவு ஆண்டுதோறும் மழையின் மூலம் நமக்கு நீர் கிடைக்கிறது.

ஆவியாக மாறும் நீரின் அளவும் ஈரப்பசையாக வெளிறும் நீரின் அளவும் தரையை சார்ந்திருக்கும் காற்றின் வெப்பநிலையைப் பொறுத்தே இருக்கும் என கோஸ்லா குறிப்பிடுகிறார்.அதாவது ஆவியாகும் நீரின் அளவு நிலத்தில் நிலவும் அந்தந்த மாதத்தின் சராசரி வெப்பநிலைக்கும் சம்பந்தமிருப்பதாக இவரது ஆய்வு சொல்கிறது.
இவ்வாறு நாடு முழுவதிலும் வீணாகும் நீரைத் தனித்தனியே கணக்கீட்டு பின் மொத்தமாக கூட்டி 230 மி.ஹெ.மீட்டர் நீர் காற்றில் கலந்து வீணாவதாக குறிப்பிடுகிறார். மழை நீராக நமக்கு கிடைக்கும் 400 மி.ஹெ.மீ. அளவில் பாதிக்கும் அதிகமான 230 மி.ஹெ.மீ.நீர் ஆண்டுதோறும் இயற்கையாகவே காற்றில் கலந்து வீணாகிறது.மீதமுள்ள 170 மி.ஹெ.மீ.நீர்தான் கடலை நோக்கி ஓடி ஆறுகளில் சேர்கிறது. அப்போது நாம் கடலில் கலக்கும் மழைநீரை மட்டுமே பாதுகாப்பது குறித்து இதுவரை கவனம் செலுத்தி வந்திருக்கிறோம்.மழைநீர் வேரொரு இயற்கை சுழற்சியில் வீணாவதை நாம் கவனித்ததே கிடையாது எனக்கூட சொல்லலாம். மிஞ்சிப்போனால் 70-80 மி.ஹெ.மீ.அளவு நீரைத்தான் கூடுதலால நம்மால் பயன்படுத்த முடியும். அதிநவீன வசதிகளைக் கொண்டு நம்மால் மிதமான நீர் முழுவதையும் வசப்படுத்த முடியும் என்றாலும் அவ்வாறு செய்வது நல்லதல்ல.
மழைநீர் கடலைச் சேராமல் முழுவதுமாகத் தடுத்துவிட்டால் மண்ணிலுள்ள உப்புச் சாரத்தை நீக்குவதற்கு அமைந்த இயற்கை சுழற்சி தடுக்கப்பட்டாகிவிடும். அதனால் நிலத்தின் உவர்த்தன்மை மேலும் அதிகரிக்க கூடும். எனவே இம்முயற்சிகள் கவனமாக கையாள தக்கவை.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் மழைநீரை அதிகமாக அளவில் பயன்படுத்த முடியாமற் போவதற்கு காரணம், நம் மலை செங்குத்தாக இருப்பதே. அதனால் மழைநீர் சிற்றாறுகள் மூலம் வழிந்தோடி அரபிக்கடலை கலக்க நேர்கிறது. இங்கு கடலுக்கும் மலைக்கும் இடைப்பட்ட பகுதி அகலம் குறைவானதாக உள்ளது.அதனாலேயே பாசன வசதிகளுக்காக வாய்க்கால்களை அமைப்பது சற்று கடினமான செயல்முறையாக இருக்கிறது.

மழைக்காலங்களில் கிடைக்கும் நீர் வழிந்து போன பின்பும் நீரை கொடுக்கக் கூடிய ஆற்றல் இந்த மண்ணிற்கு இருப்பதால் வெப்பக் காலங்களிலும் நீர் கொடுக்கும் அமுதசுரபியாக இம்மலையின் மணற் அடுக்குகுகள் செயலாற்றுகின்றன. இந்த மண்ணின் நுண் துளைகளே நமக்கு மினிமம் நீராதாரத்திற்கு வழிவகை செய்கின்றன. இந்த மண் நுண்ணிய துளைகள் அதிகமாக இருந்துவிட்டாலே இதிலிருந்து நமக்கு போதுமான நீரை பெற்றுவிட முடியும். ஆனால் துரதிருஷ்டவசமாக நம் நாட்டில் பாதிப்பரப்பில் எரிமலைப் பாறைகளும்,கருங்கல் பாறைகளும்,வண்டல் பாறைகளுமே நிறைந்திருப்பதினால் அளவுக்கு குறைவான மழைநீரை மட்டுமே பூமித் தேக்கி வைக்க முடிகிறது.ஆனாலும் இது நமக்கு போதுமான அளவே எனலாம்.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கொங்கண் மற்றும் வேறுசில பகுதிகளில் நிலத்தடியில் உள்ள பாறைப் பகுதிகளை மழையின் முதல் தூறலே நிரப்பிவிடுவதினால் தொடர்மழையின் மூலம் கிடைக்கும் நீர் நிலத்திற்குள் சேகரிக்கப்படாமலே போய்விடுகிறது. நம் நாட்டில் ஏராளமாக மழை பெய்கிறது.அந்நீரை உறிஞ்சும் மண் அடுக்குகளும் இருக்கின்றன ஆனால் நீரை தேக்கி வைக்க மண்ணிற்குள் வெற்றிடங்கள்தான் இல்லை.அதனாலேயே சகல மழைநீரும் தரையின் மேற்பிலேயே வழிந்தோடி கடலில் கலந்துவிடுகிறது.

ஒருவிதத்தில் நிலத்தடி நீரை ஆழ்துளை பம்புகள் மூலமும்,பெரிய வகை கிணறுகள் மூலமும் வெளியே இறைத்து நாம் செய்யும் விவசாயம் நன்மையானதே.இதனால் ஆற்றுநீர் இருப்பு உள்ள காலங்களிலும் நிலத்தடி நீர் வெளியேற்றப்படுவதினால் மண் அடுக்குகளில் நிறம்பி இருக்கும் நீர் காலியாக்கப்பட்டு அடுத்த மழைக்காக கத்திருக்க செய்யமுடியும். இதுவும் கூட ஓரளவிற்குதான் சாத்தியம்.முழு நிலத்தடி நீரையும் இறைக்க ஆரம்பித்திவிட்டால் பின் கடல்நீர் உள்ளே புகுந்து நிலத்தின் உப்புச் சத்து அதிகமாகி நிலம் பாழாகிவிடவும் கூடும்.
அப்படியே ஆற்றுவழி பாசனத்தை மட்டுமே நம்பி நிலத்தடி நீரை நாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால் நிலத்தடி நீமட்டம் நிலமட்டத்திற்கு உயர்ந்து பயிர்களின் வேர் அழுக நேரலாம்.மண்ணும் பாழாக வாய்ப்புள்ளது என்கிறார்கள் விஞ்ஞானிகள். பயிர்களின் வேர்கள் காற்றை சுவாசிக்கும் அளவிலான நீர்மட்டமே விவசாயத்திற்கு பாதுகாப்பானது. இப்படியும் இல்லாமல் நீர்மட்டம் பயிரின் வேர் மட்டத்திலிருந்து தாழ்ந்திருந்தாலும் பயிரின் வளர்ச்சி பாதிக்கவே செய்யும். அப்படியே நிலத்தடி நீர் தரைமட்டத்தை அடைந்ததும் ஆவியாக ஆரம்பித்துவிடும். நிலத்தடிநீரில் எப்போதும் ஓரளவு உப்புக் கலந்தே இருப்பதால் நீர் ஆவியாக ஆக உப்பு மட்டும் நிலத்தில் தங்க ஆரம்பித்துவிடும்.ஏதேனும் ஒரு வழியில் இவ்வுப்பு கரைந்து வெளியேறாமல் வயலிலேயே தங்கிவிட்டால் நிலம் உவர் பொங்கியதாகிவிடும்.அதனால் பயிர் செழிப்புறாமல் போகலாம். ஆக,எல்லாம் சரி மட்டத்தில் இயங்குவது அவசியம்.இயற்கை அதனளவில் இவற்றை சரியாகவே கவனித்துக் கொள்கிறது.மனிதனின் குறுக்கீடு இச்சுழற்சியை சிதைக்கத் தொடங்கும் தருணத்தில்தான் எல்லாப் பிரச்னைகளும் தலைக் காட்ட முற்படுகின்றன.இத்தகவல்கள் யாவையும் வேளாண்மை சார்ந்த அறிவுமுறைக்கு மட்டுமே ஆனதல்ல.இந்த ஒட்டுமொத்த இச்சுழற்சியினை ஒட்டிதான் விவசாயம் என்ற ஒரு பாகம் இயக்கம் கொள்கிறது என்றே நாம் இதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

”மொத்தம் 26 சுணைகளில் தேங்கி வழிந்து,பின் சிறுசிறு துளிகளாக ஒன்றுசேர்ந்து துணை நதிகளாக மாற்றமடைந்து பிறகு இவைதான் தமிரபரணியாகப் பிறப்பெடுக்கிறது” என்கிறார் மகேந்திரன். இக்கணக்கின் படி தாமிரபரணியின் துணையாறுகள் மொத்தம்137.ஒரு காலத்தில் தாமிரபரணி இலங்கை வரை சென்று அந்த நாட்டின் ஜீவநதியாக ஓடியதாகவும் ஒரு தகவலை எழுதுகிறார். மகாவம்சம் இலங்கை பெளத்த வரலாற்றின் மூலநூல். இது இலங்கைத் தீவை தாமிரபரணி என்றுதான் அழைக்கிறது.அசோகரின் பாறைக் கல்வெட்டுகளில் இதற்கான சான்றுகள் உள்ளன.தமிழகத்தின் தாமிரபரணிக் கரையில் திருநெல்வேலி இருப்பதைப்போல் இலங்கையின் யாழ்ப்பாணத்திலும் ஒரு திருநெல்வேலி அமைந்துள்ளது. இன்றும் யாழ் பல்கலைக்கழகம் அங்குதான் செயல்பட்டு வருகிறது என்றெல்லாம் மகேந்திரன் எழுதுவது ஆய்விற்கு உகந்த விஷங்களே ஒழிய முடிவான வரலாற்றுக் குறிப்புகள் அல்ல.
இதற்கு சான்றாக பல்வேறு தகவல்கலை வழங்கும் இவர் திருநெல்வேலியை முற்காலத்தில் வேணுவனம் என்ற பெயரில் குறிக்கப்பட்டதாக சொல்லிச் செல்ல்கிறார்.இன்றைய தமிழகத்தின் நாகரீக நகரங்களின் ஒன்றான நெல்லை ஆதிக்காலத்தில் மூங்கில் வனமாக இருந்தப் பகுதி எனக் குறிப்பிடுகிறார். இவர் குறிப்பிடும் காலம் மனிதன், மூங்கி அரிசி உண்டதிற்கும் நெல் அரிசி உண்டதிற்கும் இடைப்பட்ட ஆண்டுகள் எவ்வளவோ அவ்வளவு காலங்கள் என்பதாக எடுத்தியம்பப் படுகிறது. மனிதனின் விவசாய வாழ்க்கைக்கு வந்து பத்தாயிரம் ஆண்டுகள் இருக்கும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் விளிக்கிறார்கள். தஞ்சயையோடு இணையக்க இங்கு நெல் விளைந்ததாக ஆங்கில ஆட்சியின் ஆவணங்களை எடுத்துக் காட்டி நெல்லை வரலாற்றிற்கு உண்மை ருசியேறுகிறார்.

நீரின் ஆதி மூலத்தை கணக்கீட முற்படும் மகேந்திரன் நிலத்தோடு ஒட்டிய மனித நாகரிகத்தையும் அதன் பண்பாட்டு விழுமியங்களையும் இணைத்து நமது மண்ணின் வீரகாவியத்தோடு கூடிய தொல்குடி வரலாற்றை பேசச் செய்கிறார். அதனால்தான் திருநெல்வேலி என்றதும் சுலோச்சனம் முதிலியாரின் பாலம் அதோடு ஒட்டி பாலையங்கோட்டை வீரபாண்டிய கட்டப்பொம்மன் என்னும் சுதந்திர நாயகனின் வீரமூச்சுக் காவியம் எனக் சகலத்தையும் குழைத்து கொடுக்கிறார். தமிழனின் வரலாற்று வீரதீர சங்கதிகளை சி,ம.பேசும் போதெல்லாம் உயர்வு நவிற்சி உயர்ந்து கொண்டே போவது சற்று அலுப்பை தருகின்றது. எல்லாத் தொல் கதைகளும் அதித கட்டமைப்பை கொண்டே ஒலிக்கின்றன. இவ்விஷயங்கள் யாவையும் பேசப்படும் கருத்தியலுக்கு தேவையற்ற கோணத்தையே வழங்குகின்றன.
தாமிரபரணி நதிக்கரையில் இன்று 10 பெரிய ஆலைகளும் 250க்கும் மேற்பட்ட சிறியதும்,நடுத்தரமுடையதுமான தொழிற்சாலைகளும் இருக்கின்றன.இந்த ஆற்றிலிருந்தே மூன்று மாவட்டங்களில் நாளொன்றுக்கு 60 லட்சம் மக்கள் தங்களின் தண்ணீர் தாகத்தை தணித்துக்கொள்கிறார்கள்.ஆனால் இப்போது இந்த ஆறு மரணப்படுக்கையில் கிடந்து அல்லாடுகிறது. இதை காக்கும் வழி புரியாமல் மக்களோ பரிதவிக்கிறார்கள். அயல் மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு நீர் வர மறுக்கும் போது இங்கிருந்து மட்டும் மணல் கொள்ளைகள் தங்குதடையற்று நடக்கின்றன.இந்த முரண்நகையை என்ன வென்று சொல்வது?

தலித் ஒருவன் நதிநீரில் குளித்தால் தீட்டுப்பட்டுவிடும் என்றவர்கள் இன்று நதியே தீட்டாகி தீண்டப்படாமல் கிடப்பது குறித்து மெளனம் காக்கிறார்கள். மகேந்திரன் எழுதுகிறார்: நயாகரா,மற்றொன்று விக்டோரியா ஆகிய இரு அருவிகளும் உலகில் புகழ்பெற்றதாகக் கூறப்படுகிறது.நயாகரா நதி,பனிக்கட்டியாகப் போன பிரமாண்ட தொடர் ஏரிகளின் உருகிய நீரின் பிறப்பு.37மைல் நீளத்துக்கு ஓடி வந்து இரண்டாகப் பிரிந்து,ஒரு பகுதி அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் இன்னும் ஒரு பகுதி கனடாவிலும் தரையிறங்குகிறது. விக்டோரியா,ஆப்பிரிக்காவின் சாம்பசி நதியில் அமைந்த அருவி.இந்த நதியின் நீளம் 2200 மைல்கள்.400அடி உயரத்திலிருந்து பேரிரைச்சலுடன்,மலையைப் பிளந்துக் கொண்டு அருவியாக் கொட்டி தரையில் வழிகிறது.இந்த அருவிச் சாரலை போலதான் நம் குற்றாலச் சாரல். ஆயியன்காவு கணவாயிலிருந்து படிப்படியாக உயர்ந்து ஐயாயிரம் அடிவரை நிமிர்ந்து,பொதிகை மலையை திரும்பிப் பார்க்கிறது ஒரு மலைத் தொடர்.இதன் மிகவும் உயரமான சிகரம் பஞ்சந்தாங்கி மலை.இந்த மலையிலிருந்தே குற்றால சிந்தாநதி பிறப்பெடுக்கிறது.

இங்கு 1835ல் டாக்டர் வைட் மிக விரிவான ஆய்வை நடத்தியிருக்கிறார். பேரால்,மாவால்,வெள்ளால்,கல்லால் போன்ற வகை வகையான ஆலமரங்கள் இங்கே இருந்துள்ளன.சிறிய வடிவத்திலான ஆலமரத்திற்கு குற்றால் எனப் பெயர்.இதன் பட்டையிலிருந்து காயகல்பம் தயாரிக்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தென்பாசிக்கும் குற்றாலத்திற்கும் இடையில் காசிமேசாபுரம் என்னும் ஊர் உள்ளது.காசிமோர் என்னும் ஆங்கில வர்த்தகர் நினைவாக இப்பெயர் இடப்பட்டிருக்கிறது.காப்பித் தோட்டங்களை இங்கே முதன் முதலில் அமைத்தவர் இவர்தான் என்பதால் நன்றிக் கடனாக நம் முன்னோர்கள் ஆற்றியிருக்கும் காரியம் இது. அயல்நாட்டவர்கள் கூட குற்றாலத்தில் வந்து நீராட எந்தவிதத் தடையுமில்லை.
ஆனால் இம்மலைக்கு அருகேயே அனாதிக் காலம் தொட்டு குடி இருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் குளிக்க தடை இருந்திருக்கிறது என்றால் கேட்கவே உடல் கூசுகிறது இல்லையா?

1892ம் ஆண்டில் மாஜிஸ்டிரேட் உத்தரவின் படி, ஆங்கிலேயர்கள் காலை 7 மணி முதல் 9 மணி வரை அருவியில் குளிக்கும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். விபரம் அறியாமல் மைசூரைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் குளித்துவிடுகிறார்கள். உடனே வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டிக்கப்படுகிறார்கள். இறுதியில் இவ்வழக்கு உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்படுகிறது. நாடு சுதந்திரம் அடையும் வரை தலித் மக்கள் குற்றாலத்தில் நீராடும் உரிமையை இழந்திருந்தார்கள்.குற்றாலத்தில் நீராடும் இன்பம் தலித்துகளுக்கு மறுக்கப்பட்ட்து என்ற உண்மை,1934ம் ஆண்டில் காந்தியடிகளின் தமிழக வருகையின் மூலம்தான் உலகம் அறிய நேர்ந்தது.குற்றாலத்துக்கு வந்த காந்தி, அருவியிலிருந்து மூன்று மைல் தொலைவில் உள்ள அய்யாசாமி பங்களாவில் ஓய்வு கொள்கிறார். அப்போது தாலுக்கா போர்டு உரிப்பினர் குமாரவேலு குடும்பம் தலைமையில் ஒரு தூதுக் குழு காந்திஜியைச் சந்திக்கிறது. அவரிடம் மேற்படியான பிரச்னைகளை கூறுகிறார்கள். இதை கேள்விப்பட்டதும் காந்தி அதிர்ச்சியடைகிறார்.
அன்று மாலையே காந்தி குற்றால அருவிக்கு அழைத்து செல்லப்படுகிறார்.அருவியின் மூலிகை குணம் இதர பெருமைகள் அவரிடம் கூறப்படுகிறது. இருந்தும் இயற்கையின் உபாசகன் காந்தி, அருவியில் நீராட மறுக்கிறார்.என்றைக்கு தலித் மக்கள் நீராடும் உரிமை பிறக்கிறதோ அன்று நானும் குளிக்கிறேன் என்றார் மகாத்மா. நதிநீர் பற்றி பேசும்போது இதெல்லாம் எங்கே வருகிறது என்கிறீகளா? அங்குதானே நாம் வேறுபடுகிறோம்.மற்ற நாடுகளை போல அல்ல நம் நதிகளை பற்றிய வரலாறு. அதோடு ஒரு அடிமையின் வரலாறும் சேர்ந்தே ஒடுகிறது.ஒரு பிரிவினருக்கு காலம் காலமாய் மறுக்கப்பட்ட நீர் என்பதால்தான் இன்று நீரற்ற நதியாக நம்முன் காட்சித் தருகிறாளா காவேரி. அடிமைகளின் சாபம்தான் நதியின் அனலாய் நம்மை எரித்துக் கொண்டிருக்கிறதா? என்றெல்லாம் கேள்விகள் பிறக்கின்றன.

பாபிலோனுக்கு இணையானது கொற்கையை நாகரிகம் என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள். வட்டம்,அனுவட்டம்,ஒப்புமுத்து,குறுமுத்து என 13 வகையான முத்துக்கள் இலக்கணப்படி பழங்காலத்தில் பிரித்திருக்கிறான் தமிழன்.
அகச்சாலை எனும் சொல் உயர்ந்த நாகரிக் குடியான தமிழர்களின் பெருமையை இட்டு நிரப்பும் சொல்.பாண்டியர்களின் காலதில் நாணயங்கள் அச்சடிக்கும் தொழில் நடைபெற்ற இடத்திற்கு அகச்சாலை என்று பெயர். தாமிரபரணிக் கரையில் பல நாட்டு நாணயங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்று தாமிரபரணியில் அதற்கான எவ்வித அடிச்சுவட்டையும் காணமுடியாத அளவுக்கு மணல் கொள்ளை அரங்கேறுகிறது. இங்கு அள்ளப்படும் மணல் யூனிட் ஒன்றுக்கு அரசாங்கம் நிர்ணயித்தத் தொகை315 ரூபாய். இதே மணல் வெளிச்சந்தையில் 1600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இதில் கள்ளச்சந்தையின் விலையை நம்மால் யூகிக்கவே முடியாது. 2யூட்டிற்கு மேல் லாரிகளில் ஏற்றிச் செல்லக் கூடாது என விதிமுறைகள் இருந்தும் 9யூனிட்டிற்கு மேல மணல் ஏற்றப்படுகின்றது.3அடி ஆழத்திற்கு மேல் தோண்டக்கூடது என சட்டம் இருந்தும் 11அடிக்கு மேல் குழித் தோண்டப்படுகிறது.
காலப்போக்கில் பல நதிகள் புவியின் வரைபட்த்திலிருந்து காணாமல் போய் உள்ளன. ஐயாயிரம் வருடங்கள் ஓடி செழிப்பை நல்கிய ஒரு நதி இன்று பாலவனமாகிவிட்ட்து.ராஜஸ்தானின் பாலைவனப் பகுதிதான் அப்பகுதி. அன்றைக்கு அங்கே ஓடிய நதியின் பெயர் சரஸ்வதி என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதே போல பஃகுறுளியாற்றுக்கும் குமரியாற்றுக்கும் இடையில் ஏழ்தெங்க நாடு,ஏழ் மதுரை நாடு,ஏழ்முன் பாலை நாடு,ஏழ்குணகரை நாடு,ஏழ் குறும்பாணை நாடு என 49 நாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. சரஸ்வதியை போல காணாமல் போனவையின் பட்டியல்களில் சேந்துவிட்டன இவை.

இப்படி நமது பண்டைய இலக்கியங்கள் எடுத்து சொல்லும் பல நதிகளை இழந்திருக்கிறோம் நாம். பரிபாடலில் மொத்தம் 70 பாடல்கள் உள்ளன. இதில் 26 பாடல்கள் வைகையின் சிறப்பை பாடுகின்றன. வைகையை ஒட்டி இருந்த பல்வேறு இயற்கைச் செல்லவங்களை காணவே காணோம். மதுரை திருமலை நாயக்கர் மகாலின் உட்புறத்தில் அழகிய நீராழி மண்டபமும் அழகிய வனச் சோலையும் இருந்ததாக டெய்லர் எனும் ஆங்கில பாதரியார் தன் நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார். கூடல் மாநகர் பற்றி கிரேக்க ஆவணங்களில் 2320 ஆண்டுகளுக்கு முன்னேயே பதிவாகியிருக்கிறது
இன்று மதுரை பெரியார் பேருந்து நிலையம் இருக்கும் இடம் ஒருகாலத்தில் நீரும் நீர்வாழ் உயிரினங்களின் வாழ்விடம்,பிறப்பிடம். இவ்விடத்திற்கு வலைவீசித் தெப்பம் என்பது அன்றைய பெயர். இப்படி ஏகப்பட்ட பொதுக் கூடங்களை நம் அரசு இந்நாளில் ஏரி, குளங்களில்தான் நிறுவியுள்ளது.

தமிழன்; இலஞ்சியம்,கயம்,கேணி,கோட்டகம்,ஏரி,மலங்கள்,மடு,ஓடை,
வாவி,சாலந்தரம்,வட்டம்,தடாகம்,நளினி,பொய்கை,குட்டம்,கிடங்கு,குளம் என மொத்தம் 17 பெயர்களை நீர்நிலைகளுக்கு சூட்டியிருந்தான்.இன்று இவ்வார்த்தகளைப் போலவே இவ்விடங்களும் புழக்கத்தில் இல்லாமலே போய்விட்டன.

ஒரு காலத்தில் நிரம்பி வழியும் மடைகளை நீர் உள் மூழ்கிப்போய் திறந்துவிடுபவர்களுக்கு மடையர்கள் என்று பெயர்.ஆனால் இச்சொல் இன்று வசைச் சொல்லாக மாறிப்போனது. வைகையிலிருந்து கண்மாய்களுக்கு நீர் கொண்டு செல்வதிற்கென்றே சில வல்லுனர்கள் அன்றைக்கு இருந்திருக்கிறார்கள். அப்படி புகழ் பெற்றவந்தான் இருப்பைக்குடி கிழவன் என்பவன்.இவன் ஒரு குறுநில மன்னன். கி.பி.815 முதல்860 வரை ஆட்சி புரிந்தவன்.
ராமநாதபுரத்தின் சேதுபதிகள்தான்,முல்லை பெரியாறு நீரை வைகையில் இணைக்கும் சாத்தியங்களை முதலில் ஆராய்ந்தவர்கள்.முத்து இருளப்பிள்ளை சேதுநாட்டின் தலமை அமைச்சர்.இவர் தலைமையில்தான் 12பேர் கொண்ட வல்லுனர் குழு ஒன்று,மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் சென்றது. கேப்டன் ஸ்மித் என்ற பிரிட்டீஷ் சர்வேயரும் இக்குழுவில் பங்கேற்று இருக்கிறார்.ஆய்வு செய்திட்டக் குழு இத்திட்டம் சாத்தியமானதுதான் என்ற முடிவிற்கு வந்திருக்கிறது.
இதற்கான பெறும் தொகையை செலவிட இயலாது என்பதால் 1798 இத்திட்டம் கைவிடப்பட்டிருக்கிறது.

திருவிதாங்கூர்,கொச்சின் ஆகிய இரு சமஸ்தான்ங்களும் ஆட்சியின் கீழ் இருந்தக் காலத்தில் சென்னை மாகாணத்திற்கும் இவர்களுக்கும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.8 ஆயிரம் ஏக்கர் சென்னை மாகானத்தின் சார்பில் குத்தகைக்கு எடுக்கப்பட்ட்து999 ஆண்டுகள் செல்லுபடியாகும் ஒப்பந்தம் இது. குத்தகைத் தொகை ஆண்டுக்கு 40 ஆயிரம் ரூபாய். இத் தொகஒ 1960ம் ஆண்டு 2லட்சது,57 ஆயிரத்து,789ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 1896ம் ஆண்டின் கண்க்குப்படி 850 கோடி கன அடி தண்ணீர் அரபிக்கடலில் சென்று கலந்த்தற்கான சான்றுகள் இருக்கின்றன.
பின் 1887ல் ஆங்கிலேய ஆட்சியில் தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் முடிவடைய ஏழு ஆண்டுகள் பிடித்துள்ளன. இதற்கான அன்றைய செலவு:80லட்சது 30 ஆயிரம் ரூபாய்.அணைக்கட்டுதல்,சுரங்கம் அமைத்தல் ஆகியவற்றுக்கான செலவு: 42லட்சது,26 ஆயிரம் ரூபாய். கால்வாய்,வாய்க்கால் அமைக்கும் செலவு 18 லட்சது,43 ஆயிரம் ரூபாய். இயந்திரங்கள் வாங்கியதற்கான செலவு:20லட்சது,61 ஆயிரம் ரூபாய்.இதில் பென்னிக் குக்கின் மாதச் சம்பளம்: 1,752 ரூபாய்4 அணா. பணியாற்றிய மேஸ்திரி கூலி:15ரூபாய். ஆண்கூலி:4அணா.பெண் கூலி:2 அணா. 1887க்கும்1895க்கும் இடைப்பட்ட செலவு விபரங்கள் இவை.
இதையெல்லாம் கூறி விட்டு மகேந்திரன் சொல்ல வரும் அறக் கதை என்ன தெரியுமா?
ஒருகட்ட்த்திற்கு மேல் ஆங்கிலேய அரசு அணைக்கட்ட மேலும் நிதி ஒதுக்க முடியாது என்று கைவிரித்துவிட பென்னிக் குக்கின் மனம் துயர ஆரம்ம்பிக்கிறது.உடனே தன் கனவர் படும் மன உளைச்சைக் கண்டு அவரின் மனைவி உதவ முன்வருகிறார். பெரும் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த அவர் இங்கிலாந்து சென்று தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்று கொண்டு வந்து அணையை கட்டுமாறு அறிவுரை வழங்குகிறார். ஆங்கில வெறி கதையை மட்டுமே குதப்பிக் கொண்டிருக்கும் நமக்கு அவர்களின் கொடைத் தன்மையை வெளிச்சமிட்டுக் காட்டும் மகேந்திரனின் எழுத்து நம் சுயநல ஆசைகளுக்கு மூட்டப்பட்ட நெருப்பு என்றே நம்மைச் சொல்ல வைக்கிறது.
அதைபோவே மற்றொரு ஆங்கில துரை வெல்ஷூக்கும் மருது சகோதரகளுக்கும் இடையிலாக நடந்த கதை நெஞ்சை எரிக்கிறது.

தாமிரபரணியை பற்றி எழுதும் இவர் காவேரிக் கரையில் பிறந்தவர். ஆவூர்கிழார்,ஆவூர் மூலக்கிழார்,இடைக்காடர்,இரும்பிடர்த்தலையார்,உறையூர் இளம்பொன் வாணிகனார்,உறையூர் ஏணிச்சேரி முட மோச்சியார்,உறையூர் முதுகூத்தனார்,எருகாட்டூர் தாயங்கண்ணனார்,ஐயூர் முடவனார்,ஐயூர் மூலக்கிழார்,கருவூர் கதப்பிள்ளை,கருவூர் பெரும்சதுக்கப் பூதனார்,காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வணிகணார் மகனார்,நம்பூதனார்,குடவாயிற் கீரத்தனார்,கோப்பெரும்ஞ்சோழன்,சோணட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்,சோழன் குளமுற்றது துஞ்சியக் கிள்ளிவளவன்,சோழன் நல்லுறுத்திரன்,பேரெயின் முறுவலார்,பொத்தியார்,வெண்ணிக்குயத்தியார்,வெள்ளைக்குடி நாகனார் ஆகியோ எல்லோரும் காவேரிக் கரை சங்கப் புதல்வர்கள்தாம்.
அவர்கள் சங்கக் கவிதைகளில் ஆற்றிய பணியை இன்று தமிழ் உரையில் பதிய வைக்கிரார் இவர்.

பவானி,கரூர் நாகரீகம்,காஞ்சி மாநதிஉறையூர் கலாச்சாரம்,மலைக்கோயில் வரலாறு,கல்லணைக் கதை,சோழர் கால நீர்ப் பாசனம்,அழ்ந்த பூம்புகார், பல்வேறு தகவல்களின் கலைஞ்சியமாக விளங்குகிறது மகேந்திரனின் இந்நூல்.
இந்தக் கட்டுரையின் தொடர்ச்சிக்கும் இவரின் இந்நூல் முடிவிற்கும் ஒரு ஒற்றுமை நிலவுகிறது. கூவத்தின் இன்றைய சமாச்சாரங்களோடு தொடங்கும் எனது கட்டுரையை போலவே இவரின் இறுதிக்கு சற்று முந்தைய கட்டுரையும் கூவத்தை பற்றியே பேச்ச் செய்கிறது. ஒருக்கோட்டில் செயல்படுபவர்கள் ஒரே கோணத்தில்தானே சிந்திக்க முடியும்.அதில் என்ன ஆச்சர்யங்கள் இருக்கப்போகிறது.




















‘சிற்றிலை’ ‘ ஏற்பாடு செய்திருந்த சி.மகேந்திரனின் ’’ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம்’ ‘நூல் குறித்து கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை.