Wednesday, February 2, 2011

பன்றியை பின் தொடர்தல்



உலகத்தில் மிக அழகான விலங்கு எதுவென்று என்னைக் கேட்டால் கருப்பு பன்றி போடும் குட்டிபன்றிகள்தான் என்பேன். கருப்பு பன்றிகள் போடும் குட்டிகள் பிறந்தவுடன் வெள்ளையாகவே இருக்கும்.கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம்.அவ்வளவு கொள்ளையழகு கொஞ்சும். மெல்ல உரோமம் முளைக்க ஆரம்பிக்கும் நாளில்தான் தாயின் நிறத்திற்கு குட்டி மெதுமெதுவாக தாவும்.பன்றிக்குட்டி கருப்பாகிவிட்டாலும் அதன் அழகு குறையாது. வளர்ந்த பிறகு தாயுடன் சகதியில் கலந்து கெட்டுச் சீரழிந்துபோகும்.பன்றி அழகு பார்த்தால் போஜனம் கிட்டுமா? ஆகாரத்திற்காக அதன் வேலையை அது தொடங்குவதுதானே நியாயம்?

பேச்சுவாக்கில் ஒரு நாள் என் அலுவலகத் தோழியிடம் ”கருப்பு பன்றிமாதிரி அந்த நடிகை மழமழவென்று அழகா இருக்கிறாள்” என்றேன்.”கருப்பு கலர்ல பன்னி இருக்கா என்ன?”என்று எதிர்க்கேள்வி எழுப்பினாள்.எனக்கு தூக்கிவாறிப் போட்டது.”நீ தமிழ்நாட்டுல தானே இருக்குற? இங்க இருக்குற பன்றிங்க எல்லாம் கருப்பு கலர்லதான் இருக்கும்”என்றேன்.அவள் மறுத்தாள். இல்லை என சாதித்தாள்.வீம்புக்கு ஒட்டாரம் பழகினாள்.விடாமல் அடம்பிடித்தாள்.அலுவலக சகாக்கள் எல்லோரிடமும் தான் சொல்வதே சரியென்று சண்டைக்கு நின்றாள். உண்மை அதுதான் என்பது தெளிவாக தெரிந்தும் நான் எடுத்து சொல்ல முடியாமல் திண்டாடினேன்.அவள் விறுவிறு என்று கூகிளில் பன்றியின் ஆங்கில சொல்லையிட்டு சர்ச் கொடுத்தாள்.பன்றி என்று கூகிள் தேடிக்கொண்டுவந்து அவளிடம் கொட்டிய ஒரு நூறு படங்களில் ஒன்றுகூட கருப்பு இல்லை.எல்லாம் வெள்ளைக்காரப் பசங்கள். ”பார்த்தீங்களா நான் சொன்னதுதான் நிஜம்“என தோளை உயர்த்தினாள் தோழி.
நான் என்ன செய்வது சொல்லுங்கள்?

“சரி,நுங்கம்பாக்கம் கூவம் ஆற்றங்கரைக்கு வா கருப்பு பன்றிகளை காட்டுகிறேன்”என்றேன். ”நான் ஏன் வரவேண்டும்? கூகிள் பொய் சொல்லுமா?”என்றாள், வம்படியாக. பொய்தான் சொல்கிறது என்றேன். “இல்லை நான் பெங்களுர் போனபோதுகூட அங்குள்ள சில கடைகளில் பார்த்தேன்.பன்றிகள் வெள்ளையாகதான் இருந்தன”என்றாள்.
பிறந்து வளர்ந்த்திலிருந்து சென்னையில் வாழ்பவள் இவள்.அப்பர் மிடில் கிளாஸ்.தாம்பரம் தாண்டாதவள்.தாண்டாதது அவள் குற்றமா? இல்லை.மஞ்சத்திற்கு வஞ்சகம் செய்தார்களே அந்த வீணர்களின் குற்றம்? என்று கருணாநிதியின் மனோகரா வசனம்தான் அப்போதைக்கு என்னால் பேசமுடியும்.


இது இவள் ஒருவளது பிரச்னை இல்லை. நமது கல்விப் புலம் போதித்திருக்கும் அறிவின் வெளிப்பாடு. இன்று வெட்டவெளிச்சமாகிறது.என் வீட்டருகே உள்ள ஒரு குழந்தை ”பனானா ட்ரீக்கு தமிழ்ல என்ன அங்கிள்?” என்றாள்.அவளுக்கு வாழைமரம் தெரியவில்லை.பனானா டிரீ தெரிகிறது.தோழிக்காகவே என் ஊருக்கு போனபோது தேடித்தேடி கருப்பு பன்றிகளை படம்பிடித்து வந்துக் காட்டினேன்.ஆனாலும் அவள் நம்பவில்லை.அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் சில கருப்பு பன்றிகளை வலிய படம் பிடித்துகொண்டு வந்து பூதாகரப்படுத்துவதாக சாடினாள். ஆங்கிலத்தில் ”யூ சீட்” என்றாள்.அவள் அறிவின் கொள்ளளவு அவ்வளவுதான் என விட்டுவிட்டேன்.

உண்மையில் நான் பன்றிகளோடு வாழ்ந்தவன்.எங்கள் ஊரில் நான் வசிக்கும் வீரபாண்டியன் தெருவின் வடக்கு பக்கம் முழுக்க ஒட்டர்களின் குடியிருப்புக் காலனி.நான் தினமும் உயர்நிலை பள்ளிக்கு போகும் வழி இவ்வழி. கண்விழித்து எழுந்து தெருவிற்கு வந்தால், ஒரு ஒட்டச்சி தன் கக்கத்தில் ஒரு கூடையை கவ்வியபடி இருபது முப்பது பன்றிகளை ஓட்டிக்கொண்டு தெருவில் போய்கொண்டிருப்பதை கட்டாயம் காணலாம். வழியில் பன்றிகள் இடும் விட்டைகளை சூடாறுவதற்கு முன்னால் நீண்ட குச்சுயினால் செய்யப்பட்ட கரண்டியின் மூலம் லாவகமாக கால் கட்டை விரலால் கெந்தித்தள்ளி கூடியில் போடுவாள்.இதற்காகவே தகரத்தினால் வலைத்து செய்யப்பட்ட கரண்டிகள் அவை. இதை பழக்கமில்லாத ஒருவன் செய்ய முயன்றால் அள்ளிப்போடும் வேகத்திற்கு விட்டை முகத்தில் கொட்டிவிடும்.அவள் விட்டையை கரண்டியால் தொடுவதும் அது குறிப்பிட நேரத்திற்குள் கூடைக்குள் விழுவதும் கண்ணிமைக்கும் தருணத்தில் அரங்கேறும்.நேக்குபோக்கு நிறைந்த வித்தையது. எனக்கும் என்னை போன்றவர்களுக்கும் அன்றாடக்காட்சி அது .நாங்கள் அன்றாடம் கண்விழிப்பதே பன்றியின் முகத்தில்தான்.அந்த அளவுக்கு அதோடு அந்நியோன்யம் எங்களுக்கு. இதையெல்லாம் அவளுக்கு எப்படி புரிய வைக்க?எடுத்தயெடுப்பிலேயே புளுவுகிறேன் என்கிறாள். ”சீட்” என சினுங்குகிறாள்.


என்னுடன் படித்த பல பள்ளி சிநேகிதர்கள் ஒட்டர் குலத்தை சேர்ந்தவர்கள்.இதை பெருமையாக கூறுகிறேன்.கழுத்தில் கழுத்துப்பட்டியும், காலில் காலுறையையும் மாட்டிக்கொண்டு கான்வெண்டில் படித்தவனில்லை நான். சகல வகுப்பினரும் படிக்கும் நகராட்சி பள்ளியில் படித்தவன்.சகதியில் கூடும் பன்றியின் கூடவே ஒரு மனிதப் பன்றியாக திரிந்தவன்.அதோடு ஊரில் என் அம்மாவுக்கு ஒட்டர் பெண்களுடன் நல்ல சிநேகிதமும் இருந்தது. ”நூறு, மொவனா நீ”என்று என்னை முகம் பார்த்து அடையாளம் சொல்லும் அளவுக்கு அவர்கள் என் அம்மாவின் முகத்தை படித்து வைத்திருந்தார்கள். ஜாதிய படிநிலையில் கீழ் உள்ளவர்களாயிற்றே என் அம்மாவை பெயரிட்டு அழைக்க முடியுமா என்ற சந்தேகம் எல்லாம் உங்களுக்கு அநாவசியம். இந்த அனுகுமுறையோடு பலர் என் அம்மாவிடம் பழகினார்கள்.

தெருவில் தினமும் வீட்டு வேலிகளை உடைத்துக் கொண்டு உள்ளே பாயும் பன்றிகளை அடித்து விரட்ட சிறார் பட்டாளம் ஆவலாய் அலைபாயும். வீதியில் பன்றியை ஒட்டர்கள் பிடிக்கும் சாகசமே தனி. சர்க்கஸ் சாகசத்தை போன்றதது. மஞ்சுவிரட்டில் காளையை அடக்கும் வீரர்களை விட தினமும் பன்றியோடு மல்லுக்கட்டும் ஒட்டர்களின் தீரம் எந்த இலக்கியத்திலும் சரியாக இன்னும் பதியப்படவில்லை. சினிமாவிலும் அந்நிலையே.பருத்தி வீரன் படத்தில் கொஞ்சம் வந்துள்ளது. அதனளவில் மிக சிறப்பான காட்சிகள் அவை.முன்னால் மதுரைவீரனின் எம்.ஜி.ஆர் ஒப்புக்கு கொஞ்சம் தொட்டுப்போனார்.
காட்டு விலங்கின் குணம் படைத்த பன்றியை வீட்டுப் பிராணியாக மனிதன் மாற்றிய திறமையே மிகச் சிறப்பானதொன்று. சோறிட்ட எஜமானனிடம் என்றைக்காவது ஒரு நாள் விசுவாசம் காட்டிவிடும் பிராணி குணங்களுக்கு முற்றிலும் மாறான குணம் படைத்தவை பன்றிகள். எத்தனை நாள் பாலும் சோறும் ஊட்டினாலும் சொந்த எஜமானனாக இருந்தாலும் இன்முகம் காட்டாது. வழக்கம்போல் குர்குர் உறுமல்தான். இது உங்களுக்கும் பொது.எஜமானுக்கும் பொது.


பன்றிகளை மேய்ச்சலுக்கு விட்டு பிறகு மாலையில் அதன் உரிமையாளர்கள் ஓட்டிக்கொண்டு பட்டிக்கு திரும்புவார்கள்.அப்படி திரும்பும் பன்றிகள் ஒன்றையொன்று சீண்டிவாறு செல்லும்.அந்த சமயத்தில்தான் கூடலும் நிகழும்.பெண் பன்றியின் பின்புறமிருந்து எகிறும் கெடா பன்றியை பார்த்தால் சின்ன நீர் யானை அளவு இருக்கும்.பன்றியின் சம்போகம் வெகு நூதனமானது.பெண் பன்றியின் மீதேறி மீதேறி முதலில் பிடிமானமற்று கீழிறங்கும். பின் சீர்நிலையடைந்த பிறகு அப்படியே சிலைப்போல நிற்கும்.புணர்வின் போது ஆண் பன்றியின் குறி சிகப்பாக இருக்கும்.அதேடு அதன் குறி எல்லா உயிரினத்தைபோல நேராக நீட்டி நிற்காது.ஒரு குச்சியின் பருமனே உள்ள அதன் குறி ஸ்பிரிங்கை போல சுருள் சுருளாக சுழன்றிருக்கும்.ஏறக்குறைய அதன் புணர்ச்சி பெண்குறியை துளையிடுவது போல உள்ளே இறங்கும். ஒரு ஊசிபோடுவதைபோல நேர்த்தியாக இதை செய்யும்.
ஆண் பன்றியை இறைச்சிக்காகவே வளர்ப்பார்கள்.அதன் எடை குறையாமல் இருக்க அது புணர்ச்சியில் ஈடுபடுவதை தவிர்தாகவேண்டும்.ஆகவே ஆண் பன்றிகளை சம்போகத்திலிருந்து தவிர்க்க அதன் விதைகளை எடுத்துவிடுவார்கள். விதையகன்றால் விந்து உற்பத்தி நின்றுவிடும். இந்த மருத்துவ தொழில் முறையை ஒட்டர்களின் சிறுபிள்ளைகளே செய்து முடிப்பார்கள்.அறுவை சிக்கிச்சை செய்ய பால்யத்திலேயே பிள்ளைகள் பழக்கப்படுவார்கள்.


ஆண் பன்றியின் கால்களை வாகாக கட்டிவிட்டு சாதாரண முகச்சவர பிளேடை எடுத்து பன்றியின் கவட்டிக்கடியில் மாங்கொட்டை மாதிரியுள்ள விதைப்பையில் இரு விதைகளாக பிரியும் பாதையின் நடுவில் கத்தியை மேலாக்கப் பதிப்பார்கள்.அது பலா பழத்தை போல இரண்டாக அப்படியே பிளக்கும்.அதன் உள்ளேயோடும் நரம்புகளை தனித்தனியே விளக்கிவிட்டு சிகப்பாய் உருளும் இரு உருண்டைகளை மட்டும் செம்மனே வெளியே தள்ளுவார்கள். வலியில் அலறும் பன்றி தன் சத்ததால் ஊரையே கூட்டும். அதன் உதிரப்போக்கு ஓரளவுக்கு நின்றதும் அடுப்புச் சாம்பலை விதைப்பையில் அள்ளி அப்புவார்கள்.அதுதான் அருமருந்து. விதையெடுத்த பன்றி சில வாரத்திற்குள் போஷாக்காகிவிடும். சதைகளின் திரட்சி கண்ணை பறிக்க ஆரம்பிக்கும்.

ஒரு பன்றி பத்துக்குட்டிக்கு மேல் இடும்.அதனால்தான் அவை கூட்டமாகத் திரிகின்றன.ஒரு தான் தன் குட்டிகளோடு தெருவில் நடந்தாலே பார்ப்பவர்களுக்கு கூட்டம் பெரிதாக தெரியும்.நாளைந்து தாய் பன்றிகள் தெருவைக் கடக்க நேர்ந்தால் கூட்ட்த்திற்கு பஞ்சமிருக்காதில்லையா? இதை குறிப்பிடும் போது.”பன்றிங்கதான் கூட்டமா வரும் சிங்கம் சிங்கிள் ஆ தான் வரும்” என்ற ஒரு பிரபல சினிமா பஞ்ச் டயலாக்கும் ஞாபகத்திற்கு வருகிறது. உண்மையில் சிங்கம் சிங்கிள் பிராணியல்ல;அவையும் கூட்டமாகவே வசிக்கும்.கூட்டமாகவே வேட்டையிடும்.இப்படி அபத்தமான வசங்கள் தமிழ் சினிமால் ஏராளமுண்டு.அதை தனிப் பதிவாகவே இடலாம்.

பன்றியை நைலான் கயிற்றில் பெரிய வலைக்கட்டியே பிடிப்பார்கள்.நான்கு மூலையில் நான்கு நபர்கள் வலையை இழுத்துப்பிடித்துக்கொண்டு ஒரு புறத்திலிருந்து பன்றியை ஒரு மூலைக்கு ஒதுங்கச்செய்வர்.கொஞ்சம் கொஞ்சமாக விரட்டிக்கொண்டே முன்னேறினால் பன்றி வலைக்குள் மாட்டிக்கொள்ளும். இந்த முறையை பயன்படுத்தி ஒரே நேரத்தில் இரண்டு மூன்று பன்றிகளை பிடித்துவிடலாம். ஒற்றை பன்றியை பிடிக்க நீண்ட கழியின் முனையில் லாரி டயர்களின் ஓரத்திலிருக்கும் கம்பிகளை தனியே பிரித்து அதை சுருக்குபோல் வலைத்து பன்றியின் கழுத்தில் வாகாக நுழைத்து பிடிப்பார்கள். தனி பன்றியை சைக்கிளில் கட்டு ஓரிட்த்திலிருந்து பிரிதொரு இடத்திற்கு எடுத்து செல்வார்கள்.மொத்த வியபாரம் என்றால் லாரிபோன்ற பெரிய வாகனங்கள் பட்டிக்கு வரும்.பன்றிகளை வாகனத்திற்கு மேல் ஏற்றுவது தவறல்ல;வண்டியை பன்றி மீது ஏற்றிவிட்டால் அபசகுனமாக ஊர்களில் பார்க்கப்படுகிறது.இது ஒரு பொதுபுத்தி.உடனே வாகனத்தை விற்றுவிடுவார்கள்.இல்லையென்றால் சிதம்பரம் அருகில் ஸ்ரீமுஷ்ணம் ஊரிலுள்ள பூவராக் கோவிலுக்கு வண்டியை கொண்டுசென்று பரிகாரம் செய்வார்கள்.தமிழகத்தில் இந்தப் பரிகாரத்திற்கு என்றே பெயரெடுத்தக் கோவில் இக்கோவில்.

மேய்ச்சலின் போது வயல்களை தன் வாயால் கிளறி பன்றி நிலத்திற்குள் இருக்கும் கிழங்கு வகைகளை உண்ணும்.இதற்கு வசதியாக பன்றிகளுக்கு யானையை போல வாயின் இருபுறங்களிலும் சிறிய பற்கள் கானப்படும்.தினமும் சொந்தக்காரர்களால் பன்றிக்கு அன்றாட உணவுகள் கொடுக்கப்படும். சக்கரைவள்ளிக் கிழங்குகளை துண்டுத்துண்டாக வெட்டி காய வைத்து பின் ஆகாரமாக பகிர்வார்கள்.இது போக வாரச் சந்தை,தினச் சந்தையில் கிடைக்கும் அழுகிய,பாழாய்போன காய்கறிகளை மூட்டையில் கொண்டுவந்து இவைகளுக்கு உணவாக்குவார்கள். முட்டைகோஸ் தழைகளை பன்றிகள் விரும்பியுண்ணும்.
அதுபோக உணவுவிடுதிகளில் மிச்சும் பழைய சாப்பாடு,குழம்பு போன்றவைகளை பெரிய பீப்பாய்களில் நிரப்பி எடுத்துவந்து பன்றுகளுக்கு ஊற்ற்வார்கள்.பன்றிகள் இந்த நீராகாரத்தை வாகாக குடிக்க மரக்கட்டைகளின் நடுவில் உளியால் குழிபோல தோண்டி அக்குழிகளில் ஊற்றி வைப்பார்கள்.இக்குழியில் ஓரே சமயத்தில் வரிசைக் கட்டி பன்றிகள் தன் வாய்களை விட்டு உறிஞ்சிக்குடிக்கும்.
பன்றிகள் இயற்கை உருவாக்கி கொடுத்திருக்கும் துப்புறவாளன்.ஊரில் இருக்கும் நரை,நட்டைகளையெல்லம் சாப்பிட்டு தூய்மைப்படுத்துவது இதன் வேலை.இவைகளால் ஊர்கொஞ்சம் சுத்தமாகிறது என்பதும் உண்மை.

சில சமயங்களில் பன்றி யானையைபோல தந்தமுள்ள பன்றிக்குட்டியை போட்ட அதிசயமும் நிகழ்ந்திருக்கிறது.அதை ஊரே கூடிநின்று அதிசயிக்கும்.அது போல பன்றிக்குட்டியை நானே பார்த்திருக்கிறேன்.பிறந்த சில மணித்தியாலத்தில் இக்கோளாறான குட்டி இறந்துக் போனது.அக்குட்டியின் படம் மறுநாள் தந்தியில் பிரசுரமும் ஆகியிருந்த்து.




பன்றிகளை பொதுவாக தனது வீட்டின் பக்கத்திலேயே பட்டியிட்டு வளர்ப்பதையே ஒட்டர்கள் விரும்புவார்கள்.பல நாட்கள் பன்றிக்குட்டிகள் ஒட்டர்களின் வீட்டின் உள்ளேயே ஓடியாடி வளரும்.நாய்க்குட்டிகளை போல பன்றிக்குட்டிகளை தூக்கி ஒட்டர்களின் பிள்ளைகள் அழகு கொஞ்சுவார்கள். அதை பார்க்கவே தனிக் கண்கள் வேண்டும். மாரி காலங்கள் தவிர பன்றிகளின் பட்டிக்கும் ஒட்டர்களின் குடிலுக்கும் வித்தியாசங்களிருப்பதில்லை.தன் ரேகைகளை அது அழித்து நிற்கும்.தன் குடிலின் ஒரு பகுதியை ஒதுக்கி, பன்றியை வளர்ப்பார்கள்.அதுவே வளர்பிற்கும் கவனிப்பிற்கும் உகந்த அம்சம். ஊர் எல்லைக்கு வெளியில் பட்டியிட்டு பன்றிகளை வளர்வதில் பல தர்மசங்கடங்கள் உள்ளன. ஒன்று;அவை களவுப்போகும்.அல்லது பகவர்களின் தாக்குதலுக்கு உள்ளாகும்.இதை தவிர்க்கவே ஒட்டர்கள் பெறும்பாலும் பன்றி வளர்பிற்கு தன் வீட்டருகையே விரும்புவார்கள். தங்களின் கண் பார்வையை விட்டு அகலாமல் விழிக்குள் வைத்துக் காப்பார்கள்.ஒட்டர்கள் தன் வீட்டருகே பண்றிகளை வளப்பதால் ஊரில் வம்பு வழக்குகள் கண்டதுமுண்டு.சுற்றத்தார் வீடுகளில் புகுந்து அட்டகாசம் செய்யும் பன்றிகளை அடிக்க ஓயாமல் பரபரக்கும் கைகள் பன்றிகளை அடையாளம் தெரியாமல் தாக்கிவிடுவதுண்டு.பிறகு பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா என்று உரிமையாளன் புலம்ப நேரிடும்.


”அடையாளம் தெரியாம அடிச்சுட்டாங்க. எல்லா பன்னியும் கருப்பாதான் இருக்கு என்னத பண்ண? எவன கேட்டாலும் என்னிதில்ல உன்னிதில்லங்குறானுவோ.அப்ப என்ன பண்றது? அடிச்ச உடனே ஒப்பாரி வெச்சுகிட்டு வந்து நிக்குறானுவோயில்ல! இப்ப அனுபவிக்கட்டும்”என்பார் பன்றியை தாக்கியவர்.
“யார் பன்னியோ புக்குந்துக்கு நாங்க என்ன பண்ணுவோம் சொல்லுங்க? இந்தக் கருமத்திற்காகதான் நாங்க எங்க பட்டிய தொறக்குறதேயில்ல. எங்கப் பன்னிதான் சேதாரம் பண்ணிச்சுன்னு வலுவா சொல்லுங்க நாங்க ஏன் உங்க வூட்டு வாசலுக்கு முன்ன வந்து நிக்கோம்.உண்மன்னு தெரிஞ்சா உங்க வாய் பேசவேண்டாம்.சோட்டால பேசுங்க வாங்கிகிறோம்”என்பார் அடிப்பட்ட பன்றியின் சொந்தக்காரர்.
உண்மையில் எந்தப் பன்றி புகுந்தது? யார் பன்றி செய்த அட்டகாசம் இவை? எதையும் கண்டறிவது ஊர்க்காரர் கண்களுக்கு கஷ்டம். பன்றியின் உரிமையாளனுக்கு கட்டாயம் தெரியும்.நூறு பன்றியில் தன் பன்றி எதுவென்று நொடியில் கண்டறிந்து சொல்லும் ஆற்றல் நிரம்ப பெற்றவனவன்.அதற்குதக்க பன்றியின் அங்கஹீனமாக்கி அடையாளம் வைப்பார்கள்.ஆனால் ப்ரச்னை, வழக்கு என்றால் பம்ம ஆரம்பித்துவிடுவார்கள். வழக்கம்போல் ”என்னிதில்லை உன்னிதில்லை” என்று சாக்குபோக்கு படிப்பதோடு நின்றுகொள்வார்கள்.ஆகவே ஊர்க்காரர்கள் இன்னதுதான் என்றில்லாமல் வேலையை காட்டிவிடுவார்கள்.அப்புறம் மல்லுக்கு நிற்க வேண்டியிருக்கும்.
பன்றியை வளர்பதில் ஊராருடன்தான் சிக்கல் என்றால் சர்க்காரிடமும் சங்கடம்தான். ஊரில் கொசு அதிகரித்தால்,மழைகாலங்களில் வாந்திபேதி ஆரம்பித்தால் உடனே நகராட்சி கமிஷ்னர் பன்றிகளை சுட ஆர்டர் வழங்கிவிடுவார்.நரிக்குறவர்களை கூலிக்கு அமர்த்திக்கொண்டு நாட்டுத்துப்பாக்கிகளால் பன்றிகளைச் சுட நகராட்சி வாகனங்கள் ஊரின் மூலமுடுக்கு எல்லாம் விரையும்.பன்றிகள் சுடப்பட்டு அலங்கோலமாய் கிடக்கும் காட்சியை கண்டு உண்மையில் நான் கண்கலங்கி இருக்கிறேன். அதன் உரிமையாள ஒட்டச்சிகள் கொடுக்கும் அபலைக்குரல் எந்த மனிதனையும் உலுக்ககூடியது. அப்போதே மிருகவதை பற்றி அவர்களிடம் பேசுவேன். நீதி மன்றத்திற்கு சென்று நியாயம் கேட்கச் சொல்லுவேன்.அன்றாடம்காய்ச்சிகள் அவர்கள் ஆட்சியர்களை காணுவது எப்போ?நீதி கிட்டுவது எப்போ? இப்போது யோசிக்கையில் உணர்கிறேன்.


மழைக்காலங்களில் பன்றிகளால் மூளைக்காய்ச்சல் பரவுவதாக ஊரார் பீதியடைவார்கள்.அதில் உண்மை இருக்காது.என் வாழ்நாளில் ஒரே ஒருவன் மூளைக்காய்ச்சலால் இளம்பிள்ளைவாதம் வந்து தன் கால்களை இழந்தான்.அந்த ஒன்றுதான்.இது நூறில் ஒன்றல்ல ஆயிரம் லட்சத்தில் ஒன்று. தாய் பன்றியின் பாலை எடுத்து அதில் நெய் செய்வார்கள்.அதை ஒரு வலிநிவாரணியாக ஊட்ட மருந்தாக பயன் படுத்துவார்கள். பன்றியை சமைத்து மணிமுத்தாற்றங்கரை ஓரம் இருக்கும் செல்லியம்மன் ஆலயம் பக்கம் வைத்து வியபாரம் நடக்கும்.இங்கேதான் பட்டை சரக்கும் விற்கும். கருவேல மரங்கள் நிழலில் உட்கார்ந்து அந்திசாயும் வரை விற்பார்கள்.


பன்றியை அறுத்து சமைக்கும் பழக்கம் ஒட்டர்களிடம் இல்லை.கழுத்தில் கட்டையால் அடித்தே கொல்வார்கள்.கொன்றவுடன் அதன் உடம்பிற்கு மேல் சத்தைகளை கொட்டி தீ வைப்பாட்கள்.முழு பன்றியும் தீயில் வேகும்.வெந்த பின்பு பெரிய கத்தியால் உடலில் உள்ள உரோமத்தை சுரண்டுவார்கள்.பன்றிக்கு தோல் கிடையாது.ஆகவே இம்முறை.பிறகு மஞ்சலைப்பூசி மறுமுறை தீயில் அவிப்பார்கள்.அதன் பின்னால் உடலை அறுத்து தேவையற்றதை அகற்றிவிட்டு கறியை பங்கிட்டுக்கொள்வர்.இதுதான் அவர்கள் சமைக்கும் முறை. சமையலாகும் பன்றி சாப்பிட்டும்போது சாதி வித்தியாசமில்லாமல் விற்பனைக்கு போகும்.சத்தமில்லாமல் சில உயர் சாதி வீட்டு பெருசுகள் ஆற்றங்கறையில் உட்கார்ந்து ருசி பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

12 comments:

Unknown said...

Hello Sir...interesting article...are you from vriddhachalam...am from vriddhachalam..the place you have described matches vriddhachalam...brought back my old memories...

Babu Palamalai said...

ஹா ...ஹா ..தற்சமயம் செல்லியம்மன் கோயில் பின்புறம் உள்ள கருவேலங்க்காடு அழிக்கப்பட்டு குடியிருப்புகளாகி வெகு நாட்களாயிற்று நண்பா ...:) நம் மக்கள்
'டாஸ்மாக் 'க்கு மாறிட்டாங்க ...! நம் நகரின் நாகரீகம் வளர்த்த நதி ...அடையாளமின்றி போனதுதான் மிககொடுமை ..:(

அ.வெற்றிவேல் said...

கடற்கரய்!! தாங்கள் எந்த ஊர்..சிவகங்கையில் நானும் தாங்கள் சொல்லிய அனைத்தையும் கண்ணால் பார்த்திருக்கேன்.. பன்றி அதிகமாக குட்டி போடும் என்ற தகவலும் அதில் ஒன்றிரண்டை அதுவே தின்று விடும் என்பதையும் நானே பார்த்து இருக்கிறேன்..

கடற்கரய் said...

ராஜமணி,நீங்களும் விருத்தாசலமா? இந்தப் பதிவின் மூலம் உங்களை நண்பராக பெற்றதில் சந்தோஷம்..

கடற்கரய் said...

பாபு,ஒரு வருடங்களுக்கு பிறகு போன வாரம் ஊருக்கு போயிருந்தேன்.அந்த அநியாயங்களை நானும் பார்த்தேன்.சுடுகாட்டை எல்லாம் ரியஎஸ்டேட் ஆக கூறு போட்டிருந்தார்கள்.அதை பின்னால் எழுதுவேன்

கடற்கரய் said...

அ.வெற்றிவேல் என் ஊர் விருத்தாசலம்.உங்களுக்கும் எங்களுக்கும் இது நிலபரப்பு சார்ந்த பிரிவினை மட்டுமே!கலாச்சாரத்தில் சில ஓர்மை இருக்கும் இல்லையா?

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

உங்கள் கைவண்ணத்தில் பன்றிகள் கூட அழகாக மிளிர்கின்றன! பெரும்பாலருக்கு அசிங்கமாய் தெரியும் பன்றிகள் உங்கள் பதிவுக்கு பிறகு சிலருக்காவது அழகாக தெரியும்!!

அமுதா கிருஷ்ணா said...

எவ்வளவு விஷயங்கள் பன்றி பற்றி. திண்டுக்கல்லில் பன்றி கூட்டங்களை பார்த்து இருக்கேன். இங்கே தாம்பரத்திலும் அதிகம் இருக்கின்றன.ஆனால், ரொம்ப கவனித்து பார்த்தது இல்லை.

கடற்கரய் said...

உண்மைதான்.சில விலங்குகள் அழகானவை சில விலங்குகள் அழகற்றவை என்பதெல்லாம் ஒரு மரபுவழியான மனநிலைதான்.அதை தாண்டினால்தான் உண்மையழகை ரசிக்க இயலும் எஸ்.ஏ.சரவணகுமார்

கடற்கரய் said...

அமுதா கிருஷ்ணா நாம் அன்றாடம் கவனிக்கத்தவறுவது ஏராளம் இல்லையா?

கடற்கரய் said...

அன்புள்ள கடற்கரை,
பன்றிகளை பற்றிய உங்கள் பதிவை படித்தேன். மிகவும் பிடித்திருந்தது. பொதுவாகவே பன்றி என்பதை ஒரு அருவருக்கதக்க விஷயமாகவே கருதுகிறார்கள் பலர். ஆனால் அதிலும் வெள்ளை பன்றி என்பதை சற்று மேலாக பார்ப்பதை என்ன சொல்வது. இதில் கூட நிறம் தான் முக்கியமாக இருக்கின்றது. 'சலவான்' புதினம் நினவுக்கு வந்தது இதை படிக்கும் போது.
இலக்கிய ஆளுமைகளுடன் நீங்கள் எடுத்த பேட்டிகள் தீராநதியில் படித்திருக்கின்றேன். இப்போது தான் உங்கள் பதிவை பற்றி அறிந்தேன். நன்றி.
அஜய்
http://wordsbeyondborders.blogspot.com

geethappriyan said...

நான் கூட கண்ணீரை பிந்தொடர்தல் போல ஒன்றோ என நினைத்து படிக்க ஆரம்பித்தேன்,மிகவும் சுவாரஸ்யமும் எளிய நடையும்,மிகவும் அருமை,மேலும் நிறைய இது போல பகிருங்கள்.