Monday, October 4, 2010
சுந்தர ராமசாமி கவிதைகள்
மந்த்ரம்
ட்யூப்லைட் சுந்தராச்சி உபயம்
குத்துவிளக்கு கோமுட்டிச்செட்டி உபயம்
உண்டியல்பெட்டி தெ.கு.வே. உபயம்
பஞ்சதிரி விளக்கு ஆண்டி நாடார் உபயம்
குண்டுச்சட்டி பால்பாயச உருளி த்ரிவிக்ரமன்
நாயர் உபயம்
சூடன்தட்டு ரீஜென்று மகாராணி உபயம்
தகரடப்பா ஆறு நித்யானந்தா உபயம்
அலுமினியப் போணி வமு.சல.பெ.ம.
அரிகரபுத்திரன் செட்டியார் உபயம்
ஸ்க்ரு ஆணி நட்டு பட்டு அம்மாள் உபயம்
தீபத்தட்டு பெரியன் தாத்தாச்சாரி உபயம்
சின்னத்தட்டு ஒரு டஜன்
வைரங்குளம் மிட்டாதார் உபயம்
வைரங்குளம் மிட்டாதார்
அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அம்மா உபயம்
அவர் அம்மா
அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அம்மா
அவர் அம்மா
அவர் அப்பா
நீ
நான்
அவள்
இவன்
அவன்
பூனை
புண்
பூ
புழு
பூச்சி
குண்டூசி
குத்தூசி
கடப்பாரை
லொட்டு லொடக்கு
எல்லாம்
ஸ்வாமி
உபயம்
ஸ்வாமி
சிற்பி
உபயம்
சிற்பி
அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அம்மா உபயம்
அவர் அப்பா அவர் அம்மா
அவர் அம்மா அவர் அப்பா
எல்லாரும் ஸ்வாமி உபயம்
ஸ்வாமி
நம்ம உபயம்
நாம
ஸ்வாமி உபயம்
நம்ம பேரு சாமிமேலே
சாமி பேரு நம்மமேலே.
****************************
சவால்
நோவெடுத்துச் சிரம் இறங்கும் வேளை
துடைகள் பிணைத்துக் கட்ட
கயிறுண்டு உன் கையில்.
வாளுண்டு என் கையில்
வானமற்ற வெளியில் நின்று
மின்னலை விழுங்கிச் சூலுறும்
மனவலியுண்டு.
ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின் வாங்கல் அல்ல பிதுங்கல்.
எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நரையேற்றும் காலங்கள்.
எனது கொடி பறக்கிறது
அடிவானத்துக்கு அப்பால்.
****************************
நம்பிக்கை
தூரத் தொலைவில் அந்த நடையைக் கண்டேன்
அச்சு அசல் என் நண்பன்.
மறைந்தவன் எப்படி இங்கு வரக்கூடுமெனத் திடுக்கிட்டேன்.
வேறு யாரோ.
அப்படி எண்ணாதிருந்தால் அவனே வந்திருப்பான்.
****************************
பூனைகள் பற்றி ஒரு குறிப்பு
பூனைகள் பால் குடிக்கும்.
திருடிக் குடிக்கும் கண்களை டிக்கொள்ளும் டிய கண்களால் சூரிய
அஸ்தமனம் ஆக்கிவிடும். மியாவ் மியாவ் கத்தும் புணர்ச்சிக்கு முன்
கர்ண கடூரச் சத்தம் எழுப்பும் எப்போதும் ரகசியம் சுமந்து வளைய வரும்
வெள்ளைப் பால் சம்பந்தமாக சர்வதேசக் கொள்கை கொண்டவை பெண்
பூனைகள் குட்டி போடும் ஒன்று அல்லது இரண்டு அல்லது ன்று அல்லது
நான்கு அல்லது குட்டிகளுக்ளு மியாவ் மியாவ் மியாவ் கத்தச் சொல்லித்
தரும். வாலசைவில் அழகைத் தேக்கிச் செல்லும் இரண்டு அடுக்குக்
கண்களில் காலத்தின் குரூரம் வழியும் பூனைகள் குறுக்கே
வராமலிருப்பது அவற்றுக்கும் நமக்கும் நல்லது. குறுக்கே தாண்டிய
பூனைகள் நெடுஞ்சாலைகளில் தாவரவியல் மாணவனின் நோட்டில் இலை
போல் ஒட்டிக்கிடப்பதைக் கண்டதுண்டு வேறு பூனைகள் குறுக்கிட்டுத்
தாண்டும் சிறிய பூனைகள்தான் பெரிய பூனைகள் ஆகின்றன.
பூனைகளின் முதுமையைக் கண்டறிவது கடினம் அவற்றின்
மரணத்திற்குச் சாட்சியாக நிற்பது கடினம் அவற்றின் பேறுகால
அனுபவங்கள் பற்றி நாம் யோசிப்பது காணாது இருப்பினும் அவை
இருக்கின்றன. பிறப்பிறப்பிற்கிடையே.
****************************
ஒரு படைத்தலைவர் மேலதிகாரிக்கு மனதில் எழுதும் சொற்கள்
தாண்டிச் சென்றதும் பாலத்தைத் தகர்க்க
தங்கள் ஆணையை என் ரத்தத்தில்
எழுதிக் கொண்டிருக்கிறேன்
மேன்மை தங்கியவரே
குதிரைகளின் புட்டங்களில்
குதிரைகளின் முகங்கள் உரச
தாண்டிக் கெக்ணடிருக்கிறோம்
கடைசிக் குதிரை தாண்டியதும்
பாலம் பறந்து நதியில் மூழ்கும்.
தாண்டாமல் காத்திருக்கிறான் ஒரு வீரன்
தங்களிடம் சேதி சொல்ல
எப்படி மீண்டும் சேர்ந்து கொள்வேன்
என்று அவன் கேட்கவில்லை.
தான் செல்லப் பாலங்கள் இருக்குமா
செய்தி சொன்ன பின் நான் இருப்பேனா
என்று அவன் கேட்கவில்லை
தன் குதிரை இருக்குமா
என்று அவன் கேட்கவில்லை
தாங்கள் இருப்பீர்களா
என்று அவன் கேட்கவில்லை.
மேன்மை தங்கியவரே
தகர்ப்பது பெரிது இல்லை.
கேட்கப்படாத இந்தக் கேள்விகள்
அவற்றின் தகர்ப்பு...
****************************
அக்டோபர் 14 சுராவின் நினை வுநாள்
Sunday, October 3, 2010
ஏசுவும் எம்.ஜி.ஆரும்
24.12.1987 அன்று.கிறிஸ்துமஸூக்கு முதல் நாள் காலை. சுவற்றில் ஆணி கொண்டு அறைந்து மாட்டப்பட்டிருக்கும் மர்பி ரேடியோ ஒரு அதிச்சியான தெய்தியை சன்னமானக் குரலில் உச்சரிக்கிறது. ரேடியோவின் திசை முள்ளை திருகிக் கொண்டிருந்த அம்மா, சுவற்றின் ஒதுக்குப் புறமாக ஒண்டிப் படுத்திருக்கும் என்னை தன் காலால் கெந்திக் கெந்தி உதைத்தாள். வலி பொருக்காமல் உடனே நான் அலறிக்கெண்டு எழுகிறேன். கண்ணில் ஒட்டி நிற்கும் கண் ஊலையை துடைத்தபடி,”என்ன ஆச்சும்மா” என்கிறேன். அம்மா தேம்மித் தேம்பி அழுகிறாள்.ஒன்று புரியவில்லை.சொன்னாலே விளங்காத வயசு.தானாக புரிந்து கொள்வது என்பது தர்மசங்கடம். கண்களை தன் சேலை முந்தியால் துடைத்துக் கொண்டு பேச ஆரம்பிதாள்.
”எம்.ஜி.ஆர். செத்துட்டாருப்பா!?” அவளிடம் முனங்கல் மொழியில் வார்த்தைகள் வெளியேறுகிறது. எம்.ஜி.ஆர்.எங்கள் உறவினர் இல்லை? அப்புறம் ஏன் இவள் இப்படி தேம்பித் தேம்பி அழுகிறாள்.மறுபடியும் ஒன்று புரியவில்லை. எம்.ஜி.ஆரின் மறைவையொட்டி பள்ளி விடுமுறை என்று அதே ரேடியோவில் அறிவிக்கப்படுகிறது.பள்ளி விடுமுறைக்காக நான் சந்தோஷப்படுவதா?இல்லை எம்.ஜி.ஆரின் அகால மரணத்திற்காக அம்மாவோடு சேர்ந்து ஒப்பாரி வைப்பதா?
அந்த மறைவுச் செய்தியைக் கேட்டதும் தெருவே தன் இயல்பை இழக்கிறது.எல்லோரும் ரேடியோ பெட்டியின் முன்பாகவே எதையோ உற்றுநோக்கி உட்கார்ந்திருக்கிறார்கள். திரும்ப வரப்போகும் செய்தி பொய்த்துவிடகூடாதா? புலம்புகின்றனர் பலர். அன்று முழுக்க அம்மாவும் சமைக்காமல் உம்மென்று உட்கார்திருக்கிறாள்.இடிவிழுந்த மாதிரி நொறுங்கிப்போய் இருந்தாள். மறுநாள் கிறிஸ்துமஸுக்கான வீதியில் தொங்கும் இரவு நட்சத்திரங்கள் அன்று எரியவே இல்லை.இருட்டோடு இருட்டாக கலந்திருந்தன.தேவக்குமாரனுக்கு நேர்ந்த சோகம் இது. பலரது மனதில் யாராலும் சகித்துக் கொள்ளமுடியாத சங்கடம் வாட்டி வதைக்கிறது. மக்கள் தலைவன் அல்லவா?
அதிக கிறிஸ்துவ மக்கள் புழங்காத தெரு எங்களின் தெரு.ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைக்கும் கிறிஸ்துமஸ் நட்சத்திர விளக்குகளை மெய்மறந்துபோய் பார்த்துகொண்டு நிற்பேன்.தெருவின் தெற்கில் இருந்த சர்ச்சும்,அங்கே கமழும் பன்னீர் மரப் பூக்களும் எனக்குள் ஒரு கிறிஸ்துவ உபாசனையை உண்டாக்கியிருந்தன.அதற்கு சில குடும்ப ரீதியிலான காரணங்கள் இருந்தன.எனது பெரியம்மாள் ஒரு கிறிஸ்துவரை காதல் மணம் புரிந்தவர்.ஆகவே எங்கள் குடும்ப வட்டாரத்திற்குள் கிறிஸ்துவ வாசம் அன்னிச்சையாய் தவழ்ந்து கொண்டிருப்பதை நான் சின்ன வயதிலேயே புரிந்து வைத்திருந்தேன்.பரீட்சை முடிந்து பள்ளி விடுமுறைவிடும் நாட்களில் நான் பெரியம்மாவின் வீட்டிற்கு செல்வது வழக்கமாக இருந்தது.அவருக்கு மணமாகியும் பிள்ளைபேறு இல்லாத்தால் நான் அவர்களின் செல்லப் பிள்ளையாக வளர்த்தெடுக்கப்பட இருந்தேன்.பெரியப்பா ஞானசேகரன் நாடார் சமூகத்தை சார்ந்த கிறிஸ்துவர்.தேவனின் காதலர்.தன் பூலோகக் காதலியிடம் மறுபேச்சு பேசாதவர்.இருப்பதை வைத்துக் கொண்டு விருப்பம் போல் வாழப் பழகியவர்.படித்தப் பட்டதாரி ஆசிரியர். ஒழுக்கத்தை உயிரென ஓம்புபவர்.இப்படி சீரான அவரின் பண்பு என்னை கவர்ந்திருந்தது.அவர் பண்பிற்கு நான் விசிறியானேன்.
பாண்டிச்சேரியில் இருந்து மரக்காணம் போகும் ரோட்டில் கீழ்புத்துப்பட்டுதான் என் பெரியம்மாவின் சொந்த கிராமம்..அதே ரோட்டில் இரண்டு ஸ்டாப்பிங் தாண்டினால் அம்மாவழி பாட்டியின் சொந்த ஊர் செட்டிக்குப்பம்.பக்கம் பக்கமாக இருப்பதால் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் மாறி மாறி விடுமுறையை கழிப்பேன். இன்று உள்ளதை போன்று அன்றைக்கு ஈ.சி.ஆர்.ரோடு வசதி எல்லாம் வரவில்லை.சின்னப் பாதையை போல இருமறுங்கிலும் கருத்தப்பனைகள் வரிசையாய் நிமிர்ந்து நிற்கும். கண்ணுக்கு குளிர்ச்சியானக் பயணம்.அகலப் பாதைகள் இன்று அதனை அழகையும் நாசம் செய்துவிட்டன. பெரியம்மா,பாட்டி வசித்த இரண்டு கிராமங்களுமே அழகான கடற்கரை கிராமங்கள். பெரியம்மா வீட்டிலிருந்து கடலுக்கும் வீட்டிற்குமான இடைவெளி கொஞ்சம் தான்.கண்விழித்ததும் கால் நனைக்கும் அளவுக்கு கடல் என்னுடன் நெருக்கமாய் இருந்தது.மீனவப் பிள்ளைகளோடு மணல் பரப்பில், மார்பில் மண் ஒட்ட மாலை வரை விளையாடி புரள்வேன். கட்டுமரத்தில் ஏறி கடலுக்கு மீன் பிடிக்கப்போகும் மீனவர்களோடு கடலுக்கும் போவேன்.பெரிய வலையை கடலில் விரித்துவிட்டு ப்ளாஸ்டிக் மண்ணெண்னை கேனை மார்புக்கு கீழ் வைத்தவாறு கடலில் நீச்சலடித்து கரையேறும் மீனவர்களின் சாகசத்தைக் கண்டு பெருமிதப்படுவேன்.பெரிவலையின் தாம்புக்கயிறை கரையில் மீனவர்களோடு சேர்ந்து நின்று இழுத்து பழகுவேன். சங்கு,கிளிச்சல்,சிப்பி,கடல்நுரை எல்லாவற்றையும் பொக்கிஷமாக அள்ளிக்கொண்டு வீடுதிரும்புவேன்.ஒரு கிறிஸ்துமஸ் நாளில் பெரியப்பாவோடு கடலுக்கு சென்று திரும்புகையில் உயிருள்ள முத்துச் சிப்பியை வீட்டுக்கு கொண்டுவந்து வாசல் உள்ள விளக்கு மாடத்தில் வைத்து மணிக்கணக்காய் காவல்காத்தது இப்போதுகூட ஞாபகத்தில் நிற்கிறது.
தினமும் கருக்கலிலேயே பெரியப்பா ஜெபக் கூட்டத்தினரை அழைத்துக் கொண்டு இசை மணம் கமழ கடற்கரையோரம் உள்ள மீனவக் குடும்பங்களிடம் சென்று தேவ ஊழியம் செய்வார்.தேவனின் வருகையை பற்றி பாடம் நடத்துவார்.இப்படி ஊழியம் பார்த்தவர்கள் பலர் 2000ம் ஆண்டு பூலோகத்தில் தேவன் அவதரிப்பார் என்று மக்களிடம் அன்றைக்கு நம்பிக்கை ஊட்டிக் கொண்டிருந்தார்கள்.அதில் பெரியப்பாவும் ஒருவர்.தினத் துயரத்தில் சிக்கித் தவிக்கும் மீனவ மக்களுக்கு தேவன் வருகையை பற்றிய பெரியப்பாவின் வார்த்தைகள் தேனாய் இனிக்கும். தேவனின் ஆசிர்வாதத்திற்கு அடி பணிந்த முதல் மீனவன் அன்று முதல் சீடனாக்கப்படுவான். முதல் சிலுவையும் அங்கே ஊன்றப்படும்.அவன் வழி பின்னால் வரப்போகும் சந்ததிக்கு ஒரு புதிய பாதையொன்று உருவாக்கப்படும். இப்படி நடத்தப்படும் மதமாற்ற சடங்குகளில் நான் உற்சாகமாக பங்கேற்பேன். இந்தக் குழுவில் சிறுபிள்ளைகளுக்கு என்று தனிக்குழு ஒன்றும் இருந்தது. அவர்கள் இசை வாத்தியங்களை இசைப்பது,துண்டுப் பிரசுரங்களை இலவசமாகவும், பத்து பைசா இருபத்தைந்து பைசாவுக்கும் வசதிக்கேற்ப விநியோகிப்பதுமாக தங்களின் பணிகளை ஏற்றிருந்தார்கள். எனக்கு நிறைய கிறிஸ்துவப் பாடல்களை பெரியப்பா கற்றுத்தந்திருந்தார். “சந்தோஷம் பொங்குதே..சந்தோஷம் பொங்குதே..சந்தோஷம் விண்ணில் பொங்குதே” உள்ளிட பல பாடல்களை அழகாக பாட கற்றிருந்தேன். அதேடு துண்டுப் பிரசுரங்களில் எழுதப்பட்டிருக்கும் வாக்கியங்களையும் கதைகளையும் தரவாக் கற்றிருந்தேன். பைபிளின் வசனங்களை விளக்குவதில் கூட தேர்ச்சிப் பெற்றிருந்தேன்.அதோடு தனியே நானே கிறிஸ்வ நாடகங்களை இயக்கும் அளவுக்கு திறமை பெற்றிருந்தேன்.இதனால் அச்சிறுவர் குழாமுக்கு நான் தலைமை வகித்தேன். இப்படி குழந்தை இல்லாத பெரியப்பாவின் குடும்பத்தில் வந்த தேவகுமாரனாய் நான் வளர்த்து எடுக்கப்பட்டேன்.
கிறிஸ்துவ மதத்தின் மிஷனரி பணிகள் என் மனதை ஆட்கொண்டதால் எனக்கு இயல்பாக இஸ்லாம் மீதான பிடிப்பு குறைய ஆரம்பித்தது. ஆதரவற்ற ஒருவனை தன்னைப்போல் ஒருவனாக பாவிக்கும் குணத்தை பெரியப்பா கடைபிடித்ததை கண்கூடாக காண்பதில் இருந்து என்னுள் மனிதநேயம் வேர் பிடித்திருந்தது. இவ்வுலகில் மனிதனை போலவே சகல ஜீவன்களும்,அவைகளுக்கு துன்பன் விளைவிப்பதை தேவன் பொருத்துக் கொள்ளமாட்டார் என்ற கருத்தியல் சிறு குழந்தையான எனக்கு பக்கத்தில் இருந்தது. அதை நான் இறுகப் பற்றிக்கொண்டேன். புலால் சாப்பிடும் குடும்பத்தில் பிறந்த நான் முற்றாக மாமிசம் உண்பதற்கு எதிரான நிலைக்கு வந்து சேர்ந்தேன். மாமிசம் சாப்பிடும் பழக்கத்தை அறவே கைவிட்டேன். 19 வயது வரை என் வீட்டில் மாமிச சமையல் என்றால் அம்மா எனக்காக தனி சைவ சாப்பாட்டை சமைத்து வைத்திருப்பாள்.ரம்ஜான் போன்ற பண்டிகைப் பொழுதுகளில் கூட எனக்கு தனி சமையல் அடுப்பில் வேகும்..
எம்.ஜி.ஆரின் மறைவையொட்டி ரேடியோவில் வயலின் மெளன இசை மட்டும் இசைத்தது.எல்லா நிகழ்ச்சிகளும் நிறுத்தப்பட்டன.அன்றைக்கு மக்களின் ஒரே பொழுதுபோக்கு ரேடியோதான்.டி.வி.என்பது ஊருக்கு ஒரு வீட்டில் இருக்கும் பணக்கார அடையாளம். ரேடியோ என்பது ஜனநாயகத்தின் சின்னம்.எங்கள் தெருவில் ஒரு ரெட்டியார் வீட்டிலும் ஒரு செட்டியார் வீட்டிலும் மொத்தம் இரண்டே டி.வி.க்கள் இருந்தன. ஒரு வீட்டில் டி.வி. இருக்கிறதென்றால் அந்த விஷயம் ஊருக்கே அத்துபடியாகிவிடும்.காரணம், ஆகாயத்தை முட்டிக்கொண்டு நிற்கும் ஆண்டெனா.அதுபோதுமே எங்கே டி.வி. இருக்கிறது இல்லை என்பதை மக்கள் பார்வைக்கு கடைவிரிக்க.ரெட்டியார் ஓர் அரசு ஊழியர்.செட்டியார் பரம்பரை பணக்காரர்.ஹிந்துஸ்தான் விற்பனை பொருட்களின் டீலர். எம்.ஜி.ஆர். மறைந்த அன்று தெரு ஜனமே இந்த இரு வீட்டின் முன்னால் முண்டியடித்துக் கொண்டு நின்றது.கால் வைக்கக்கூட இடமில்லை.இரண்டு வீட்டிலும் உட்கார்ந்து டி.வி.பார்க்க அனுமதிக்கமாட்டார்கள்.வாசலிலேயே வாயை பிளந்துக்கொண்டு நிற்கவேண்டியதுதான்.வீட்டின் ஜன்னல் கிராதிகளுக்குள் முகத்தை உரசியபடி,எம்.ஜி.ஆரின்.இறுதி ஊர்வலத்தை தெரு மக்களோடு சேர்ந்து பார்த்தேன். அம்மா தன் அடக்க முடியாத சோகத்தால் வெதும்பி வெதும்பி அழுகிறாள்.ஊர் ஜனமே அழுகிறது. கருப்பு வெள்ளையில் ஒளிபரப்பான அக்காட்சி எல்லோர் நெஞ்சிலும் ஓங்கி அறைகிறது. இனி நீங்கள் எல்லாம் அநாதைதான் என்கிறார் ஒரு முதியவர். மக்கள் நெரிசலில் காமிராவை நுழைத்து மூவ் செய்கிறார்கள்.நெஞ்சில் அடித்துக் கொண்டு ஒரு பெண்மணி வீறிடுகிறாள். தலைமயிரை பிடித்து இழுத்துக் கொள்கிறாள். எம்.ஜி.ஆரின் பக்கத்தில் ஜெயல்லிதா அமர்ந்திருக்கிறார். ஒவ்வொரு தலைவராக வந்து மலைவலையம் வைக்கிறார்கள். அவரது சொத்தின் அத்தனை பத்திரங்களும் அவரது கைகடிகாரத்தில்தான் இருப்பதாக ஜன்ங்கள் பேசிக் கொள்கிறார்கள். தொப்பியோடு புதைப்பார்களா?இல்லை அதை கழற்றி விட்டு புதைப்பார்களா?என்று விவாதம் ஜனங்களுக்குள் நடக்கிறது.இந்தப் பேச்சுக்கு இடையில் காட்சியையும் கவனமாக காண்கிறார்கள். சந்தனக்கட்டையில் செய்தப் பெட்டியில் அவரை அடக்கம் செய்யபோவதாக செய்தி பரவுகிறது.இறுதி ஊர்வலம் தயாராகி அவரை ராணுவ ஊர்திக்கு மேல் வைத்து கொண்டுப் போகிறார்கள். டி.வி.யில் மெட்ராஸ் முழுக்க ஜனங்களாக தெரிகிறார்கள். ”ஒரு புள்ள இருந்திருந்தால் கொல்லியாவது வைக்கும்.அதுக்கு கொடுத்து வைக்கலையே”என்கிறாள் அம்மா. ஊர்வலத்தில் வர்ணனைக்கு நடுவில் “போகுதே..போகுதே”என்ற எம்.ஜி.ஆரை பற்றிய புகழ் பாடல் ஒலிக்கிறது.அது சோகத்தை மேலும் கூட்டுகிறது. இனி அவளவுதான் இந்த முகத்தை பார்க்க முடியாதே என்று கேவுகிறாள் ஒரு மூதாட்டி. ஐயோ ஐயோ என்று அலறுகிறார்கள் மக்கள். கூட்டத்தினர் மத்தியில் அழுகுரல் அளவும் கூடுகிறது. ஏனோ அங்கே ஆண்டவனை எல்லோரும் அசிங்கமாய் திட்டிக்கொண்டிருந்தார்கள்.
Subscribe to:
Posts (Atom)