Wednesday, February 11, 2009


சுலபமில்லை மகளே

முருங்கைப் பூ உதிரும் தாழ்வாரம்,

இனி நமக்குச் சொந்தமில்லை மகளே.



வேம்புவை மேற்கில் நட்டுவிட்டார்கள்.



மஞ்சள் ஓர் அரசியல் நிறமானது.

ஆடாதொடை புளாப்பூ ஆவாரை பெரியாநங்கை

சிறுநெல்லி பிரண்டைக்கொடி விரவிய

மேய்ச்சல் நிலத்தில் வளர்ப்பு ஜீவன்கள் அருகிவிட்டன.

உனக்குத் தெரியும்:

சோடியம் பல்பு வெளிச்சத்தை, கீழ்படரவிடாமல்

தடுத்ததற்காக நகராட்சித் தொழிலாளி

மரம் வெட்டவந்த நாளில்தான்,

என்பழைய வாழ்க்கைக்கு நான் முழுக்குப்போட்டதும்.

கோவில் காட்டில்கொட்டிய மழையில்,

இறைந்த மாம்பிஞ்சுகளை பொறுக்கித் தின்றவர்கள்,

திருட்டு மரத்தில் தப்புக்காய் பறித்தவர்கள்,

எல்லாம் நாகரிகப்பட்டதும்.

என் தெய்வம் நந்தவனம் கேட்டதும் அந்நாளில்தான்.

ஊர்க்குடிகள் புழங்கும் பூவல் மேட்டில்

கொம்பூதும் பெருசுகள்

சோகை நோய் பீடித்துசாக நேர்ந்ததும்.

சவுக்குத் தோப்பில்

வாழைப் புதரில்

புங்கமரம் விளையும் வயல்களில்

என் வண்ண மயில் வனப்போடு அழிந்ததும் அன்றைக்குத்தான்.

இனி, நம் குடிலுக்குத் திரும்பும் தூரம் சுலபமில்லை மகளே.

அது என்,உள்ளங்கை ரேகைகளைப் போல கிளைத்துக்கொண்டே போகிறது.


ஐந்திணை வாழ்வு


ஒருவன்,கடைசி மூத்திரத்தை

முனைந்துவெளியேற்றுவதைப்போல

வெளியேறிக்கொண்டிருக்கிறது

மாரிநீர்.

நெய்தல் புரத்தில்

புணரிக்குப் போனவர்கள்

மஞ்சுப் பொதிகள் வலு இழப்பதாய் இல்லைஎன்றார்கள்.

பாலைமேட்டில்

மேற்செம்பாலை பாடியவர்கள்

எங்கேயும் இல்லாமல், வேனல் காற்றில்

வேரோடு கரைந்தார்கள்.

வைகறை காலை

மருத வெளியில் தவளைகளைப் பிரசவிக்கிறது.

அதன்அடர் இசைப் பாடல்கள்மிளையை உயிர்ப்பாக்குகிறது.அதன் ஒலியுண்ணும் நட்சத்திர ஆமைகள்,

நகர ஆரம்பிக்கின்றன.

முல்லைப் புதரில்

காடைக் குஞ்சுகளைத் தேடி

வேட்டுவன் பவனுகிறான்.

சேடல் மலர்கள்நடுங்கின நளிரில்.

குறிஞ்சிச் சரிவில்இரலை ஒன்று இடம் தேடுகிறது, அண்ட.

அதன் இடம் பூமிக்கு வெளியில்

நகர்ந்துபோய்விட்டது.கொம்பால்

முட்டி முட்டி இடத்தைமீண்டும்

பூமிக்கு உள்ளே தள்ளிவிடுகிறது.

தேரிக் காட்டிலோ

உழவாரக்குருவி ஒன்று

உயிரற்றுத் துடிக்கிறது.

அதன்உயிர்க்கூட்டின் மேல்நின்று

வெல்வெட் பூச்சிகள்வேடிக்கை பார்க்கின்றன.



ஈழக் கரும்பனையோ, கடந்து கேவுகிறது.


மீறல்

சாதாரணமான சாலைகளை

பெரிய பெரிய மதிற்சுவராக்கி நட்டுவிட்டது அரசு.

சூரியனின் செங்கதிர்கள் தீண்டுவதில்லை

மண்ணை

உன்னை

என்னை.

வெளிச்சம் வழமைக்கு எதிரில் பிறக்கிறது.

பெயல் பெயர்ந்து போகும்

வானம் மண் இடையில்.

தங்கநாற்கரம்

தரணி குறுக்கே ஓடுகிறது பிளந்தபடி.

உசந்த சுவர், சாலை மேல் நின்று

குக்கிராமங்களைக் கவனிக்கிறேன்.

பார்வைக்கு எட்டிய வரை பதுங்கி உள்ளன, எதுவும்.

செங்கிஸ்கான் புரவிகள் ஓடும்

கதைப் புத்தகத்தில்

வரலாற்று எலிகள்

குஞ்சு பொரிக்கின்றன.

புத்தகத்திலிருந்து வளர்ந்த

வரலாற்று எலியின் வால்களாகிநீள்கிறது சாலை.

புத்தகத்தின் வேறுவேறு பக்கங்களானது ஊர்.

முன்னது தெரிய பின்னது மறைகிறது.

மனிதர்களும் மறைகிறார்கள்.

நான்கு வழிப்பாதை நாயொன்று.

நாட்டார் வாழ்வை நக்கி நக்கிக் குடிக்கிறது.


வருகை


மூன்றாம் நாள், காய்ச்சல் முடிந்து,

படுக்கை முழுக்கதூசும் தும்பட்டையும்.

வேர்வை புளிப்பேற

எறும்புகள் வரிசைகட்டிவிட்டன.

உப்பு வாடையால்உடுப்பும் தடித்தது.

மா நகரில் ஒருதுளி வெந்நீர் கேட்டுத் திரிகிறேன்.

தவம் பூண்ட நவீன தவசி நான்.

அயர்ச்சி உடல் உலர்ந்த காகிதமானது.

அப்படியே காற்றில் பறக்கிறேன்.

உடலை நான்கு துண்டுகளாக மடித்து,

சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டான் ஒரு பையன்.

பையின் வெளியே அலைகிறது,ஒரு மிருகத்தின் நாக்கு.

நடை, கால்கள் திரும்பும்.

காகங்கள் வெட்டி இறங்கிதலைகொத்திப் பறக்கின்றன.

சித்தம் தவறிய கால்களைவிரிப்பில் கிடத்துகிறார்கள்.

பசித்த சின்ன எறும்புக்கு முன்மலையாகப் பெருக்கிறது உடல்.


வெளி உலகு


நேற்றைக்குத்தான் பிறந்த ஒரு பிஞ்சுக் குழந்தையை

இன்றைக்கு என் கையில் கொடுக்கிறார்கள்,அதை

என் பழைய கைகளில் வாங்கிக்கொண்டேன்.

இன்றிலிருந்து நான் நேற்றைக்குள் போகிறேன்.

குழந்தைநாளைக்குள் நகர்ந்து நகர்ந்து விழுகிறது.

மகிழ்ச்சித் தழைகள்அரும்ப ஆரம்பிக்கின்றன.

சட்டென்றுவெண்சங்குமுழு மலராகிறது.

முதல் சுடரில்இனிக்கிறது வாழ்க்கை; எல்லோருக்கும்

பாரம் அழுத்துகிறது. சுமை கூடுகிறது.

ஆதுரத்தோடு

பிள்ளையைப் பார்த்துப் போனவர்கள்

யாவரும்நாளையைக் கொன்றவர்கள்.

சிரிக்கிறதுகுழந்தை.

பாவம் அதற்குவெளி உலகம் தெரியாது.
- நன்றி காலச்சுவடு

செயல்நோக்கம் இல்லாத ஒரு செயல்நோக்கத் தன்மை






பொதுவாகக் கவிதைகள் குறித்துப் பேசுவதைவிட கவிதைகள் குறித்து எழுதுவது பல சமயங்களில் அபத்தமாகவே முடிகிறது. அதனாலேயேகவிதை இயல் பற்றிய கறாரான கருத்துள்ளவர்கள் பெரும்பாலும் கவிதைகள் குறித்து எழுதுவதைத் திட்டமிட்டே தள்ளிப் போடுகிறார்கள் அல்லதுதவிர்க்கிறார்கள். நானும் இதற்கு விதிவிலக்கு அல்ல; இதற்கு இன்னொரு பார்வையில் பதில் தேடினால் கவிதையின் இடம் என நாம் தீர்மானிக்கும் இடம்பருவத்திற்குத் தப்ப, தொடர்ந்து நகர்ந்து கொண்டே அல்லது மாறிக்கொண்டே இருப்பதுதான் என்பது புலனாகும். ஆக, கவிதைக்கு ஒற்றை இருப்பிடம் என்பது சாத்தியமில்லை.அதற்காகக் பல இடங்களில் திக்கற்றுத் திரிவதெல்லாமும் கவிதையாகிவிடாது.கவிதைக்குத் திக்கு இருந்தாக வேண்டும்.திக்குதான் தீரம்.
ஒரு கோணத்தில் உண்மையைப் போலவும் பலவிதத்தில் பொய்யைப்போலவும் இருப்பதைக் கவிதை என்கிறோம். கவிதையில் உண்மைக்கு நிகர் பொய், சரிநிகர் சமானம். வெறும் உண்மைகளைக் கொண்டு புனையப்படுவது கவிதை அல்ல; தகவல் அறிக்கை.அதனால்தான்”ஒரு எழுத்தாளனின் எழுதுகின்ற வேலையானது வெறும் தகவல் தெரிவிக்கும்காரியம் அல்ல”என்றார் பார்த்.தகவலுக்குள் உண்மை இருக்க வாய்ப்புள்ளதே ஒழிய, தகவல் முழுக்க உண்மையைக் கொண்டதல்ல;உண்மையான,தகவலான விஷயங்கள் அதில் இருக்கலாம்நிச்சயம் கவிதை அம்சம் இராது.கவிதைக்குக் குட்டிக் குட்டிப் பொய்கள் அவசியம். கவிதைக்குள் பொய், ஆணென்றால் உண்மையோ, பெண். எனவே கவிதையில் ஈருடல் வேண்டும்.இது புற கருத்தியலுக்குப் பொருந்தாது.
நவீன கவிதையில் பெண் என்பவள் புற அளவில் அரசியல் காரணியங்களுக்காக வேறாகிறாள். ”பெண் வாசகர் என்ற கருதுகோள் ஒரு பிரதியின் பாலியல் சங்கேதங்களுடைய தனிச்சிறப்பின் மீது நம்முடைய கவனத்தை ஈர்ப்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பிரதியைப் பற்றிய நம்முடைய புரிந்துகொள்ளலை அது எவ்வாறு மாற்றுகிறது” என்பதைப் பற்றிஎலைன் ஷோவால்ட்டர் (ELAINE SHOWALTAR) நிறையவே விவாதிக்கிறார்.இதைத்தான் பெண்ணிய வாசிப்பில் என்கிறார்கள்.நடப்பிலுள்ள பொய்யானது கவிதைக்குள் அழகியலாக மாற்றமடைகிறது.காண்ட் உள்ளிட்ட பிற கோட்பாட்டாளர்களின் கருத்தின்படி ”அழகியல் பொருட்களுக்கு, செயல் நோக்கம் இல்லாதஒரு செயல்நோக்கத்தன்மை இருக்கிறது.”
”இலக்கியத்தை வித்தியாசமான முறையில் வாசகர்கள் கவனித்துப் பார்ப்பதற்குக் காரணம், அதனுடைய கூற்றுகள் உலகத்தோடு ஒரு தனிச்சிறப்பானஉறவைக் கொண்டுள்ளன என்பதுதான்.இந்த உறவை நாம் புனைவு ரீதியானது என்று அழைக்கிறோம். ஆக, அகம் புறம் என்பது ஆண் - பெண் போல. தமிழ்க்கவிதை மரபு அகத்திற்கு தரும் முக்கியத்துவத்தைப் புறத்திற்கும் வழங்கியே உள்ளது.இன்று நாம் எவ்வளவுதான் மரபை மீறியதாக நம்பினாலும் அவற்றின் கண்ணிகளை உடைத்து வெறுமனேவெளியேறிவிடுவதென்பது முடியாததாகிறது.மரபை குறித்து மீள் வாசிப்புகள் நடக்கும் தற்காலத்தில் இதைப் பற்றிய புரிதலின் தேவை மேலும் கூடுதலாகிறது நமக்கு.
கவிதையை இன்றைக்குள்ள பின் நவீனத்து கருத்தியல் நிராகரிக்கிறது.’’கவிதை என்பது குறியீடுகளாலும், ஏகப்பட்ட அர்த்தங்களின் சுமையாலும் ஆனது.மரபார்ந்த கவிதைகள் வித்தியாசமான மொழிப் பிரயோகத்தால் ஆனவை என்றால் நவீன கவிதையோ மொழியை வன்முறையாக்கிக் கொண்டு இயங்குகிறது” என்கிறார் ரொலாண்ட் பார்த். அப்படியென்றால் நாம் கவிதையை ஓரங்கட்டிவிடலாமா?முடியாது.ஒருவேளை அக்கருத்து மேற்கில் பொருந்தலாம்.கவிதை நடையே உரைநடையாக புழங்கிய நம் குடிக்கு நிச்சயம் பொருந்தாது.இங்குதான் நாம் கிழக்கில் சாய்கிறோம்.உதவிக்கு எட்வர்த் சயீத் நிற்கிறார்.
ஒருவிதத்தில் மீண்டும் மீண்டும் புதிய கவிதைகள் பிறந்துகொண்டே இருந்தான் பழைய கவிதையின் இருப்பு சாத்தியமாகிறது.ஒரு வகையில் புதிய கவிதையை வாசிப்பதென்பது அதைப் பழைய, சமகாலக் கவிதையோடு தொடர்புபடுத்துவதாகும். அதனால் ஒரு தளத்தில் ஒரு கவிதை வாசிப்பதென்பது அது ஒட்டுமொத்த கவிதையை வாசிப்பதாகிறது.ஒரு கவிதையைவாசிப்பதன் மூலம் எப்படி ஒட்டுமொத்த கவிதையை அது வாசித்ததாகிறதோ அதைப் போலதான் பல கவிதைகளை வாசிப்பதென்பது ஒரு புதிய கவிதையைப் படைப்பதாகிறது.பழையதன்நகல்தான் புதியது.பழையதன் பரிச்சயம்தான் புதியதற்கான முன்நகர்வாகிறது.ஆகவே, ஒரு புதிய படைப்பாளிக்குக் கவிதை எழுதுவதற்கு ஆழ்மன ரீதியாகக் கவிதை இயல் பற்றிய ஞானம் எவ்வளவு முக்கிமானதோ அதைப்போலவே அதன் வரலாறும் அவசியமானது. அப்போதுதான் அவனால் புதிய யுத்திகளை நோக்கியும், கவிதையை புதிய வெளிக்குள் நின்றும் பேச முடியும்.
நவீன கவிதையைப் பற்றி அடிக்கடி வைக்கப்படும் வாதம்,புரியாமை. இருண்மை. புரியாமையின் முதற்காரணம் கவிதையல்ல;அவதானிப்பு.அதுவும் நெடிய அவதானிப்பு.சில சமயம் நெடிய அவதானிப்புகூட புரிதலுக்கு உதவாமல் போகலாம்.அப்பட்டமான அர்த்தங்களைக் கவிதைக்குள் தேடுபவர்கள் ஏறக்குறைய கவிதையின் எதிரிகள்(அர்த்தம் என்பதை உரைவடிவில் விளக்கப்படும் நேரடித் தன்மையென கொள்ளவும்).”அர்த்தம் என்பது சார்புநிலை கொண்டது.எதையும் சார்ந்திராத சுயம்புவான அர்த்தம் என்று எதுவும் கிடையாது. அர்த்தம் என்பதுபொருட்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த மொழி என்கிற அமைப்பின் உற்பத்தியே. அர்த்தங்களை உருவாக்கும் இந்த மொழி என்கிற அமைப்பு அடிப்படையில் அர்த்தங்கள் ஏதும் இல்லாததே”என்பதே அர்த்தம் பற்றிய ரொலாண்ட் பார்த்தின் விளக்கம்.
என் புரிதலில் கவிதையின் அர்த்தம் அகராதிக்கு வெளியில் கிடக்கிறது.அகராதியில் பொருள் தேடுபவர்கள் ஒரு நாளும் கவிதையை உணரமுடியாதவர்கள்.அகராதியின் அந்தப் பக்கம்என்பது அனுபவத்தின் பக்கம். அனுபவம் என்பது வாழ்வியலின் பொருள்.பொருள் என்பது இயற்கையின் கச்சா.கச்சா என்பது கவிதையின் ஆன்மா.ஆன்மா என்பது அத்துவானத்தின் வெளி. வெளி என்பது பிரபஞ்சத்தின் நிறம். நிறம் என்பது ஊடுறுவும் ஒளி. ஒளி என்பது நிதர்சனத்தின் காட்சி.காட்சி என்பது நடப்பியலின் கலை.கலை என்பது செயல்பாட்டின் வடிவம்.வடிவம் என்பது கற்றலின் பிரதிபலிப்பு. பிரதிபலிப்பு எனபது மொழியின் வெளிப்பாடு.வெளிப்பாடு என்பது சாரம்சத்தின் உணர்தல். .உணர்தல் என்பது மனதின் அமைதி.அமைதி என்பது ஆழ்கடலின்தியானம்.தியானம் என்பது ஆன்மிகத்தின் தரிசனம். தரிசனம் என்பது கடவுளின் இன்மை. இன்மை என்பது சுவடற்ற கரைதல்.கரைதல் என்பது மென்மையின் ஒலி. ஒலி என்பது நிலத்தின்நீர் . நீர் என்பது ஆகாயத்தின் நிர்மூலம். நிர்மூலம் என்பது அனுபூதியின் காற்று. காற்று என்பது உடம்பின் உயிர்.உயிர் என்பது ஞானத்தின் சக்தி.சக்தி என்பது நெருப்பின் வலிமை.வலிமைஎன்பது ஆரோக்கியத்தின் கிரியா.கிரியா என்பது படைத்தலின் லயிப்பு. லயிப்பு என்பது உற்பத்தியின் உறவு. உறவு என்பது இனத்தின் காதல்.காதல் என்பது தத்துவத்தின் அறம்.அறம் என்பதுதேவியின் கவிதை. கவிதை என்பது இன்பத்தின் அனுபவம்.
தாய்த் தமிழ்த்கவிதைப் பற்றிய வாசிப்பு பரிச்சயம் தமிழியல் மாணவனான கிருஷ்ண மூர்த்திக்கு கல்விப்புலமாகவே வாய்த்திருக்கிறது.அது அவருக்கு பேரான விஷயம். பேரானதை அவர்எப்படி கையாளப்போகிறார் என்பதில்தான் ரகசியம் பொதிந்துள்ளது.கவிதையின் ரகசியமாக அது உருமாற்றமடைய வேண்டும்.அவரது தமிழ் அடிப்படைஇலக்கண அறிவு கவிதையின்கருத்தியல் புலமைக்கு உதவலாம். நேரடியாக அது இன்றைய கவிதைக்குள் வந்தால் ஒவ்வாமையாகிவிடும்.காலத்தின் ஒவ்வாமை.அதை மீறி கவிதையை அவர் கொண்டு செல்ல வேண்டும்.அதற்குத் தமிழ் இலக்கிய கல்வியைப் போல கல்விப்புலத்திற்கு வெளியில் ஓர் இலக்கிய கல்விப் புலம் இருப்பதை கண்டு அதில் கிருஷ்ண மூர்த்தி அடிப்படை பயில வேண்டும். இது ஏறக்குறைய ஒரு மாற்றுக் கல்வி மாதிரி. அப்படியான தெளிவு உண்டாகும் நாளில் அவரால் கவிதையின் மெய்மையை எட்டிவிட முடியும். அந்த வெளிச்சத்தைத் தொடஇருட்டில் நிற்க வேண்டும். அந்த இருட்டுலகின் வருத்தலுக்கு கிருஷ்ண மூர்த்தி தயாராகிவிட்டார் என்பதே மகிழ்ச்சி.இனி இருட்டையும் வெளிச்சத்தையும் மாற்றி மாற்றி அடுக்குவதில் அவருக்கு சாமர்த்தியம் கைவர வேண்டும், அவ்வளவுதான்.
இன்றைய பொருள் ஈட்டும் உலகில் கவிதையின்பால் மூர்த்திக்கு ஆவல் பிறந்திருப்பதே நம்மை இன்பமிக்கச் செய்கிறது.பல நாள் சந்திப்பில் கூட மூர்த்தி தான் ஒரு கவிஞன் என்பதைஎன்னிடம் காட்டிக்கொண்டதேயில்லை.திடீரென்று கொண்டுவந்து நீட்டினார்.மறுக்காமல் பெற்றேன்.காரணம்,மூர்த்தியின் எளிமை எனக்குப் பிடிக்கும்.நல்ல மாணவன் பட்டியலில் நிற்பவர் அவர்.அதற்காக எனக்கு இவரை அறிமுகப்படுத்திய அடையாளம் சாதிக்கிற்கு நன்றி.வளர்ந்து வரும் இளம் படைப்பாளியான இவரின் கவிதையின் நிறைகுறை குறித்து அதிகம் நான் அலசிஆராயவில்லை.ஆனால் முழுக்க வாசித்தேன். அதைப் பற்றிய எனது கருத்துகளை வாசகர்களாகிய உங்களைப் போலவே என்னோடு வைத்துக் கொள்கிறேன்,அது இங்கே இடையூறாக இருக்கும் என்பதால்.இதுவும் ஒரு நாசுக்குதான். கவிதை எழுதுவது யாருடைய நல்கையையும் பெறவேண்டியல்ல;அது ஒரு நோக்கில் சமூகப் பொறுப்புணர்வின் சுமை.சுமையைத் தலையில் தூக்கிக் கொண்டு திரிவது இன்பமுறும் காரியமா?ஆகவேதான் மற்ற எல்லோரைக்காட்டிலும் ஒரு சமுகத்திற்கு கவிஞன் என்பவன் முதன்மையானவனாகிறான்.ஒரு மொழியை அடுத்த சந்ததிக்கு சுமந்து செல்லும்,புதுப்பிக்கும் பொறுப்பு அவனிடம்தான் இருக்கிறது.மொத்தத்தில் மொழியின் கிடங்குஅவன்.இப்பெருமைக்குரிய பணியை ஏற்கும் கிருஷ்ண மூர்த்திக்கு என் வளமான வாழ்த்துகள்.
- கடற்கரய் சென்னை-15 14.12.2008

பதியப்பட வேண்டிய வரலாற்று ஆவணம்





சமகாலப் பதிவுகள் எதையும் ஆவணமாகப் பார்க்கும் ஒரு நோக்கு தமிழர்களிடையே இல்லை என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. நூறு இருநூறு ஆண்டுகள் எல்லாம் வரலாற்றுத் தன்மைக்கு உகந்ததல்ல எனும் மனப்பாங்கு நிறைந்தவர்கள் நாம். வழிபாட்டுத் தலங்களே கூட இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை மிக்கவை என்று அறிந்த பிற்பாடே, தெய்வத்தைத் தொழுவதற்கு ஒருசேர கரங்களைத் தலைக்கு மேலாக உயர்த்துகிறோம். இது முற்றிலும் குறைபாடான மனப்பான்மையல்ல.ஹரப்பா மாதிரி நீண்ட பாரம்பர்யம் மிக்க ஒருகுடியின் மனநிலை சார்ந்த விஷயம் இது, அவ்வளவுதான். ஆனால் எத்தனை காலத்திற்குதான் இப்படி சமகால பிரக்ஞையற்று கதை சொல்லிக்கொண்டு திரியப் போகிறோம் என்பது ஒருகேள்வி. ஒவ்வொரு நாளும், பொழுதும் ஓர் ஆவணமாக மாறக்கூடும்.அதை சமீப கால சான்றுகள் நிறையவே நமக்கு உணர்த்துகின்றன. அவற்றிலிருந்து பாடம் கற்க நாம் தவறிக்கொண்டிருக்கிறோம் என்பதைஇந்த வருட புத்தகக்(கண்)காட்சி எனக்கு உணர்த்தியது.
முப்பத்திரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்துவரும் இக்கண்காட்சி பற்றிய பதிவுகள் எத்தனை நம்மிடையே எழுதப்பட்டு இருக்கின்றன? இதன் வளர்ச்சிகுறித்து நம்முடைய ஆவண அவதானிப்பு என்ன?முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் புத்தகங்களை ஓரிடத்தில் வெறுமனே கொட்டிக் குவித்து அதைக் காண வாருங்கள் என்று அழைத்தபோதுதமிழ்மக்களின் மனநிலை,எதிர்வினை என்னவாக இருந்திருக்கும் என்பதெல்லாம் ஊகிக்க முடியாமல் தவிக்கவே நேர்கிறது. பபாசியின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி பதிப்பகங்களின் வரலாற்றைக் குறிக்கும் நூல் ஒன்றை வெளியிட்டதாக அறிந்தேன்.ஆனால் அதன் பிரதி இன்று பார்க்கவும் கிடைக்கவில்லை.இதைச் செய்ய வேண்டிய பபாசி பதிப்பகங்களின் முகவரியைஅச்சிட்டு அதை நூறு ரூபாய்க்கு வாங்குங்கள் என்று சொல்லி ஒலிபெருக்கியில் கூவிக் கூவி அழைத்து கொண்டிருக்கிறது.இதுபோன்ற கூத்துகள் எல்லாம் இங்கு மட்டுமே நடக்கக்கூடியவை.சமீபத்தில் பீட்டர் மேனுவல்லின் ”காசட் கல்ச்சர்”என்ற புத்தகத்தை பார்த்தேன். அதில் அவர் இந்திய அளவில் வாய்மொழிப் பாடல்கள் ஒலிநாடா வடிவில் மாற்றப்பட்டு அதுஒலிக்கும் போது ” இந்தியன் சைக்கி ” என்பது எப்படி செயல்படுகிறது என ஆராய்ந்து எழுதியிருந்தார்.அதே போன்று பவுல் டி.கிரீனின் என்பவர் தமிழ் ஒலிநாடா கலாச்சாரத்தைப் பற்றிதனி நூல் ஒன்றை எழுதி இருக்கிறார்.அதில்” தமிழ் சைக்கி” எப்படி செயல்படுகிறது என அலசி ஆராய்ந்திருந்தார். எங்கோ ஒரு கலாச்சாரத்தில் பிறந்து கீழை நாகரிகத்தை அறிந்துகொள்வதில் அத்தனை ஆர்வம் இவர்களுக்கு எப்படி பிறக்கிறதென்றே புரியவில்லை. ஒருவிதத்தில் இதை புவிசார் காலனியவாதம் என்று சிலர் புறந்தள்ளினாலும் அவற்றின்துணை கொண்டுதான் ஒவ்வொரு தமிழ் ஆய்வாளனும் தன்னுடைய ஆய்வை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதையும் நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டி இருக்கிறது. எரிக் மில்லர் என்ற இன்னொரு மேலைநாட்டு ஆய்வாளர்.சமகால சிற்றிலக்கியவாதிகளுக்கு நன்கு பரிச்சயப்பட்டவர். சிலப்பதிகாரத்தைப் படித்துவிட்டு கண்ணகியின் இடப்பெயர்வில் வரும்வழியை நேரடியாகவே பார்க்கப் புறப்பட்டார் அவர் என அறிந்தபோது எனக்குச் சற்று நடுக்கம் உண்டானதை நான் இங்கே சொல்லித்தான் ஆகவேண்டி இருக்கிறது.
”பட்டாங்கு யானும், ஓர், பத்தினியேம் ஆகில், ஒட்டன், அரசோடு ஒழிப்பேன்; மதுரையும்! என்பட்டிமையும் காண்குறுவாய், நீ” என கண்ணகி உரைப்பதுநமக்கு வெறும் செய்யுள் மட்டுமே.சிலப்பதிகாரத்தை வெறும் காதை வடிவமாகவே வாசித்துப் பழக்கப்பட்ட நம் பொதுப்புத்திக்கு இந்தப் பயண யோசனை உரைக்காமல் போவதுஏனோ தெரியவில்லை. இப்படி வரலாற்றில் நெடுக பதியப்படாமல் விட்ட வெற்றிடத்தில் சிக்கிச் சிக்கலுற்றிக்கிறது நம்முடைய வரலாறு.பலவகைகளில் வரலாறு என்பது கேள்விகளில் தொடங்கி கேள்விகளிலேயே முடிவுறுகிறது. அது எப்போதும் முற்றுப் பெறக்கூடியதல்ல; மாறாக ஒரு தொடர்ச் செயற்பாடு.”வரலாறு என்பது எல்லாவற்றுக்கும் அப்பால் ஒரு விவாதம்; வேறுபட்ட வரலாற்றாசிரியர்களுக்கு இடையேயான ஒரு விவாதம்; கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலானவிவாதம்; உண்மையில் நிகழ்ந்துவிட்டதற்கும் அடுத்து நடக்க இருப்பதற்கும் இடையில் உள்ள ஒரு விவாதம்.விவாதங்கள் முக்கியமானவை; அவை மாற்றங்களுக்கான சாத்தியங்களை உருவாக்குகின்றன”என்கிறார் வரலாற்று விமர்சகர் ஜான் எச். அர்னால்டு.நம்மிடையே சரித்திர ஆசிரியர்கள் வளர்ந்த அளவிற்குப் பெண்ணிய வரலாற்றாசிரியர்கள்,புவியியல் வரலாற்றாசிரியர்கள், அறிவியல் வரலாற்றாசிரியர்கள்,சமூகவியல் வரலாற்றாசிரியர்கள்,அரசியல் வரலாற்றாசிரியர்கள் என்று கிளைத்து இத்துறை வளரவில்லை . ஒரு துறை சார்ந்த ஆசிரியர்கள் மற்ற துறை பற்றி எதிர்ப்புணர்வையே கடைப்பிடிக்கிறார்கள். வரலாற்றில் ஆர்வத்தோடு இயங்கும் ஓர் ஆசிரியர் தத்துவத்தை ஜன்மப் பகையாகக் கருதும் போக்கு நம்மவர்களுக்கே சொந்தமானது. மேலைநாடுகளில் ஒரு துறையோடு மற்ற துறையாளர்கள்விவாதித்து, பொருள் கொண்டு அவற்றை எழுதி வெளியிடுகிறார்கள். அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சம் தத்துவவியலாளர்கள் அகாடமி அளவில் பணிபுரிகிறார்கள் என்ற தகவல்நம்மைச்சலனப்படுத்துவதே இல்லை. சென்னைப் பல்கலையில் தத்துவத்துறையே மூடப்பட்டுவிட்டது என்றதகவல் எத்தனை பேரை சுடக்கூடியதாக இருந்திருக்கும்.இதையெல்லாம் முன்வைத்து புத்தகக் காட்சி பற்றியும் அங்கே வரும் நண்பர்களிடம் புலம்பிக்கொண்டிருந்தேன். வழக்கமான புலம்பல்தான் என ஒதுக்கியவர்கள் பலர். என்னுடைய ஆதங்கத்தைப் புரிந்துகொண்டு கைகோர்த்தவர்கள் சிலர். உடனே தாமதிக்காமல் ”சென்னைப் புத்தகக் கண்காட்சி; தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூலை எழுத ஆரம்பித்துவிட்டேன். இந்தப் பத்து நாட்களில் கால் கிணறு தாண்டியாயிற்று. எப்படியும் ஓரிரு மாதங்களில் நூல் வேலை முடிந்துவிடும் என்று நம்புகிறேன்.முப்பத்திரண்டு வருடங்களுக்கு முன் ராஜாஜி ஹாலில் சுமார் ஐம்பது கடைகளுடன் தொடங்கப்பட்ட பபாசி கண்காட்சி இன்று அறுநூறு கடைகள் வரை வளர்ந்திருக்கிறது.அந்தக் காலத்தில் அரை அணா நுழைவுக்கட்டணம். இன்று படிப்படியாக வளர்ந்து ஐந்து ரூபாயைஎட்டியிருக்கிறது. கடைகளில் அலங்காரம், கூடாரத்தில் பிரமாண்டம் என எதிலும் வளர்ச்சி கூடியிருக்கிறது. காயிதே மில்லத் கல்லூரி புத்தகக் கண்காட்சியோடு பத்தாண்டுஅனுபவம் எனக்கு. அங்கிருந்த வசதிகளையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் புதிய வடிவமைப்பைப் பார்க்கவே சந்தோஷமாக இருந்தது. ஆனாலும் கழிப்பிட வசதி, அரங்கதாரர்களுக்கு மின் விசிறிவசதி போன்ற விஷயங்களில் பபாசிக்கு அக்கறை இருப்பதாகவே தெரியவில்லை. கட்டுப்பாடற்ற ஒரு சூழலே தென்படுகிறது.பார்வையாளர்களுக்குப் புத்தகங்களைச் சரிவரத் தேடிப் பார்க்கும் பக்குவமான போக்கில் ஏதோ குறைபாடே தெரிகிறது.கடைகளின் வரிசைக் கிரமங்களில் ஏதோ குழப்பங்கள் இருப்பதாக பலர்என்னிடம் குறிப்பிட்டார்கள். புத்தகத்தை வாங்குவதற்குள்ளாகவே தன்னுடைய உடல்நலத்தில் ஏதேனும்குறைகள் இருக்கின்றனவா என அறியும் மருத்துவ முகாமிற்குத் தாவி விடுகிறது ஒரு கூட்டம். வாசகர்களாக வருபவர்களின் மனநிலையை பபாசி ஒரு பதற்றத்திற்கு உட்படுத்தி அவர்களைத் திருப்புவதில்ஆரோக்கியம் இருப்பதாக சொன்னால் எப்படி நம்மால் ஏற்க முடியும். தினமும் நடத்தப்படும் அரங்கக் கூட்டங்கள் மக்களுக்குப் பயன்தருவதாக இருக்கின்றனவா. வழக்கமான பாட்டிமன்றப் பேச்சுகளில் இருந்து நம் சமூகம் விடுபடவே முடியாதா என்ற வினாக்கள் நம்மை வளைத்து நிற்கும் சங்கடங்களாக வளர்கின்றன.முதல்வர் கலைஞர் கருணாநிதி வழங்கிய ஒரு கோடி நிதியில் ஆண்டுதோறும் பரிசுக்கு அறிவிக்கப்படும் எழுத்தாளர்களை பபாசி எப்படி தேர்வுசெய்கிறது? அதற்கான குழு எது? என்பதில்எல்லாம் கொஞ்சம் வெளிப்படைத் தேவையாகிறது. லட்ச ரூபாய் என்பது தமிழ் எழுத்தாளருக்கு நன்மைதரும் தொகைதான். இப்படியான பரிசுத் தொகைகளை வரவேற்கும் வேளையில் அதில் நடக்கும் பரிமாற்றங்களையும் கணக்கில் கொள்வது நல்லதாக இருக்கும் இல்லையா?
ஒவ்வொரு வருடமும் கண்காட்சிக்கு எழுத்தாளர்கள் வந்து தங்கள் நூல்களில் கையொப்பமிட்டு வாசகர்களை சந்திக்கும் போக்கு உற்சாகமானது.காலச்சுவடு கடையில் உட்கார்ந்து சுந்தர ராமசாமி கையெழுத்துப் போடும் காட்சி என் ஞாபகப் பதிவேட்டிலிருந்து இன்னும் கூட அகலவே இல்லை. ஒவ்வொரு ஆளுமையும் இயல்பாகச் சுற்றித் திரியும் காட்சி இங்கு விட்டால் வேறு எங்கும் காணக் கிடைக்காதது. இன்று படிப்படியாக வளர்ந்து சென்னையைத் தாண்டிப் போய் இருக்கிறது இந்த அறிவுச்சந்தை. சில இடங்களில் நடந்த சந்தை சோபிக்கவிலை என்றாலும் அம் முயற்சிக்கான பயனை நிச்சயம் விரைவில் அறுவடை செய்யும் பபாசி.இந்த வருடம் பொருளாதார அளவில் பல புதிய பதிப்பகங்களுக்கு வரும்படி கிடைக்கவில்லை என்றாலும் அவர்களின் முயற்சிக்கு மக்களின் ஒரு சிறிய அங்கீகாரம் ஏற்பட்டிருப்பதென்னவோஉண்மைதான்.காலச்சுவடு கண்ணனுடன் பேசிய போது மிகுந்த உற்சாகமாகப் பேசினார். கண்காட்சி ஆரம்பமான சில தினங்கள் சற்று சோடையாக இருந்ததாகவும், போகப் போக சூடு பிடித்துவிட்டதாகவும் அவர் சொன்னார். அவரது பேச்சில் புகார்களே இல்லாதது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. நான் அடிக்கடி பார்வையிட்ட விடியல், காலச்சுவடு, வம்சி, அடையாளம், குமுதம்,பாரதி புத்தகாலயம்,என்.பி.டி என எல்லாப் பதிப்பகங்களுமே விறுவிறுப்பாகவே இருந்தன.நானும் ந.முருகேசபாண்டியனும் இரண்டு நாட்கள் சுற்றித்திரிந்தோம். சங்ககால பெண் கவிஞர்களை பற்றி ந.மு. விவாத்திதுக் கொண்டே இருந்தது என் மன நிலைக்குச் சற்று உவப்பானதாகஇருந்தது.ந.மு, ”அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்” (காலச்சுவடு) என்ற தனது சமீபத்திய நூலின் மனப்போக்கிலிருந்து வெளியேறாமல் பேசிக்கொண்டே இருந்தார். அவரது பேச்சில்பேராசிரியரின் வாடை இல்லாதது நல்ல அம்சம் என்று எனக்குப்பட்டது.அவரின் நூலிற்கு அவர் எழுதி இருந்த முன்னுரையில் சங்ககால பிரதியை கட்டவிழ்த்து எழுதியிருந்தவிதம் எனக்குபிடித்திருந்ததால் பாராட்டிச் சொன்னேன்.
ஒரு வகையில் சொல்லப்போனால் அறிவுலக நம்பிக்கைவாதிகளுக்கு தமிழ்நாட்டில் போக்கிடம் இல்லை.இந்தப் புத்தகச் சந்தைதான் ஒரே இடம். டிசம்பர் மாதத்தில் மட்டுமே வெவ்வேறு இடங்களிலும் நூற்கள் வெளியிடப்படுவது, நண்பர்களைச் சந்திப்பது என்று நம்மவர்களுக்கு ஒரு கூடல் வாய்க்கிறது. புத்தகம் என்ற ஓர் உலகம் முந்தையதலைமுறைக்கு அரசியலாகவும், அறிவு மருந்தாகவும் இருந்திருக்கிறது.புத்தக அறிவினால் ஆட்சியைப் பிடிக்க ஒரு தலைமுறை புறப்பட்டு அதிகாரத்தைக் கையிலெடுத்த நிகழ்வு தாய்த் தமிழ்நாட்டில்தான் நடந்திருக்கிறது என்ற சமகால உண்மையேஇன்று நம்பக் கூடியதாக இல்லை . அறிவுசார் விவாதங்கள் பொது மேடையில் நிகழ்த்தப்பட்டதற்கான சுவடுகளை சொல்லித்தந்தவர்களே அதனை இன்று மறக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.ஒரு தேசம் தன்னுடைய இலக்கிய சிறப்பியல்புகளை உலக அரங்கிற்குள் கொண்டு செல்ல பல லட்சங்களை செலவழித்து தன் நாட்டு இலக்கியப் பிரதிகளைக் கட்டி கப்பல் கப்பலாகஅனுப்பியது என்ற கதையை வருங்காலத் தலைமுறை எப்படி உள்வாங்கிக் கொள்ள போகிறதோ புரியவில்லை. இன்றைக்குப் புத்தகத்தின் மூலம் அறிவைப் பெருக்கிக் கொள்பவர்களை ஜென் எக்ஸ் என்று குறிப்பிட்டு அழைக்கிறது நவீன உலகம்.புத்தகப் பூச்சிகளாகத் திரியும் சென்ற தலைமுறையை,அவர்கள் புத்தகத்தின் மூலம் உருவாக்கிக் கொண்ட அறிவுலகத்தை அறவே புறம் தள்ளுகிறது இன்றைய ஜென் ஒய் தலைமுறை. புத்தகம் என்றாலே இவர்களுக்கு ஒவ்வாமை.இந்தத் தலைமுறை எதையும் அனுபவ வழியிலே ஏற்கும். இவர்கள் எதையும் விட்டேத்தியாக எடுத்துக் கொள்பவர்கள். அலுவலகத்தில் பிரச்சனையா தலையைப் போட்டு உடைத்துக் கொள்ளமாட்டார்கள். உடனே பை பை சொல்லிவிட்டு நாகரிகமாக ஒதுங்கிக் கொள்வார்கள்.ஏறக்குறையஇன்றைய காலம் இவர்களுடையது. இந்தக் காலத்தில் சிந்தனைப் பள்ளிகள் பற்றி மெய் சிலிர்ப்பவர்களுக்கு இங்கு இடமில்லை என்பதெல்லாம் இன்றைய காலத்தைப் பற்றி அறிஞர்கள்குறிப்பிடும் ஆய்வறிக்கை.புத்தக உலகத்தை ஏற்க மறுக்கும் ஒரு தலைமுறையின் காலகட்டத்தில் புத்தகங்கள் தமிழில் வளமாக வெளிவருவதை எப்படி புரிந்து கொள்வது? ஒவ்வொராண்டும் முந்தைய ஆண்டைவிடவிட ஏராளமான நூற்கள் வருகின்றன. எப்போதும் இல்லாத அளவிற்குப் பதிப்பகங்கள் தமிழில் பெருகி இருக்கின்றன. பல வருடமாக புத்தகச் சந்தைப் பக்கமே தலை காட்டாமல் இடைவெளி விட்டிருந்த க்ரியாஇந்த வருடம் கடை போட்டிருக்கிறது. ஆயிரத்து ஐநூறு பக்கத்தில் நாவல்கள் வந்திருக்கின்றன. பாழி, ஞானக்கூத்தன் கவிதைகள், சுந்தர ராமசாமி மொத்தக் கதைகள், ஜி. நாகராஜன் முழுத் தொகுப்பு,என்று இரண்டாம் பதிப்புகள் வெளிவந்து நன்றாக விற்றும்கின்றன. புதுமைப்பித்தனின் முழுத்தொகுதி ஐந்து பதிப்புகளைத் தாண்டிருக்கிறது. இவை எல்லாம் அறிவுலகம் காலியாகிவிட்டதையா நமக்குச் சொல்கின்றன.?

- நன்றி:காலச்சுவடு

நம்மாழ்வார்


தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியிலுள்ள இளங்காடுதான் நம்மாழ்வார் பிறந்த ஊர். அண்ணாமலை, பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., அக்ரி பட்டப்படிப்பு படித்தவர். கோவில்பட்டி மங்கல வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் ஆறு ஆண்டுகள் பணி செய்த இவர், இயற்கை வழி விவசாயத்திற்காக பணியைத் துறந்தார். பிறகு நோபல் பரிசு பெற்ற dominique pyre என்பவரின் நிறுவனத்தில் (களக்காடு) பணியில் சேர்ந்தார். ஐரோப்பிய நாடுகள் முழுக்க பயணம் செய்தவர் நம்மாழ்வார். நம் நாட்டு வேப்பிளைக்கான காப்புரிமையை பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டு, வென்று வந்தவர். இதுவரை Leisa, kudumbam உள்ளிட்ட 250க்கும் மேலான என்.ஜி.ஓ.க்களை உறுவாக்கியவர். எழுபது வயதை எட்டியிருக்கும் நம்மாழ்வாரை திருச்சி திருவானைக்கோயிலில் உள்ள அவரது வீட்டில் தீராநதிக்காக சந்தித்தோம்.

தீராநதி : பூமி சூடாகி விட்டது. பருவ காலங்களில் பெருத்த மாறுதல்கள் உண்டாகிவிட்டன. இதனால், தன் இயல்பான தன்மையிலிருந்து பல்வேறு மாறுதல்களை உயிரினங்கள் சந்திக்கப் போகின்றன. உணவுகளில் ஊட்டச்சத்து இல்லை. சுகாதாரக் கேடு அளவுக்கு அதிகமாக அத்துமீறிப் போய்க் கொண்டிருக்கிறது என்று தினம் தினமும் பல்வேறு அதிரடிச் செய்திகள் தினசரிகளில் சூழலியல் பற்றி வெளி வந்து கொண்டே இருக்கின்றன. மக்களும் வழக்கமாக படித்து விட்டு வழக்கம் போல் உண்டு உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே நாம் எந்த அளவுக்கான அபாயச் சூழலில் இருக்கின்றோம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

நம்மாழ்வார் : இப்போது கிட்டத்தில் சந்தித்த செய்தி படிக்கிறேன் கேளுங்கள் : ‘‘அழுகிய நெற்பயிற்களை அகற்ற டபுள் செலவு _ மத்தியக் குழுவிடம் நெல்லை விவசாயிகள் வேதனை.’’ ஒன்று : நெல்லிலிருந்து விவசாயிக்கு வர வேண்டிய வருவாய் போய்விட்டது. இன்னொன்று: அழுகினதை அள்ளிப் போட்ட பிறகு நிலத்தைச் சுத்தம் செய்ய வேண்டிய கூடுதலான வேலையன்று வந்து சேர்ந்திருக்கிறது. இது வரைக்கும் நம் மாநிலத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் எல்லாம் மழையே பெய்தது கிடையாது. இது கோடைகாலம். நல்ல வெயில் அடிக்க வேண்டிய காலம். வெயில் அடிக்க வேண்டிய காலத்தில் மழை கொட்டுகிறது. அப்போது இது எதைக் காட்டுகிறதென்றால், பருவகாலங்கள் மாறிப் போய்விட்டதைக் காட்டுகிறது. இன்னொன்றை இங்கு நான் குறிப்பிட ஆசைப்படுகிறேன். 1987_ல் இயற்கை விவசாயப் பயிற்சிக்குப் போனேன். அங்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். சுற்றுச்சூழல் கழகத்தினுடைய தலைவர் அவர். அவர் என்னிடம் ‘‘இனிமேல் உங்கள் நாட்டில் பருவ மழையே பெய்யாதென்று’’ சொன்னார். இதை அவர் 1987_ல் சொன்னார்.ஏன் என்று நான் கேட்டதற்கு, ‘‘உங்களுடைய மேற்குத் தொடர்ச்சி மலை 3 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. அதில் 300 அடி உயரத்திற்கு மரங்கள் எல்லாம் இருக்கின்றன. அது அரபிக் கடலிலிருந்து வருகின்ற ஈரக் காற்றையெல்லாம் மேகமாக மாற்றி, மழையாக மாற்றி கீழே இறக்குகிறது. அந்த மழை நீரை பூமியில் இறக்கி பிறகு ஆற்றில் நீராக ஓடுகிறது. அந்த மரங்களையெல்லாம் நீங்கள் வெட்டிவிட்டு, இடுப்பளவு உயரமுள்ள ‘டீ’ தோட்டம் போட்டு விட்டீர்கள். இன்னமும் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இன்னமும் குறையவே இல்லை அது. அதற்குப் பிறகு முழங்கால் உயரத்திற்கு உருளைக்கிழங்கு செடிகளை நடுகிறீர்கள். ஒரு ஜான் உயரத்திற்கு முட்டைக்கோஸ், காலிஃபிளவர் எல்லாம் பயிர் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதனுடைய விளைவு அரபிக்கடலிலிருந்து வரக் கூடிய ஈரக் காற்றை மேகமாக மாற்ற முடியவில்லை. மழையாக மாற்ற முடியவில்லை. அப்படியே தப்பித் தவறி மழை பெய்து ஓடுகின்ற தண்ணீரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆகவே எங்குப் பார்த்தாலும் வெள்ளம். ஆக, இனி உங்களுக்கு புயல் மழைதான் வரும். பருவ மழை வருவதற்கு வாய்ப்பில்லை’’ என்று சொன்னார் அவர். அவர் சொன்ன அன்றிலிருந்து தொடர்ந்து உற்றுக் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். அதே தான் நடந்து கொண்டிருக்கிறது. நான் போகின்ற அத்தனை கூட்டங்களிலும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் எழுதும் அத்தனை கட்டுரைகளிலும் எழுதி கொண்டுதான் இருக்கின்றேன். யாராவது இதை வாசித்து உணர மாட்டார்களா? தவறைத் திருத்திக் கொள்ள மாட்டார்களா? என்று. ஆனால் யாரும் யோசித்த மாதிரி தெரியவில்லை. தொடர்ந்து காடு அழிக்கப்படுகின்ற செய்தி வந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கென்று ஒரு இலாக்கா இருக்கிறது. ஒரு துறை இருக்கிறது. காட்டை பாதுகாப்பதற்காகவே பணமெல்லாம் செலவழிக்கிறார்கள். அந்த நிகழ்ச்சிகளுக்கு மந்திரிகள் எல்லாம் கூட வருகிறார்கள். ஆனாலும் அழிக்கப்படும் காடுகள் பற்றி எந்த அக்கறையும் இல்லை. இதன் மூலம் உண்டான விளைவுகளைத்தான் இன்றைக்கு நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.இந்த மரங்கள் மொத்தம் இரண்டு வேலைகளைச் செய்கின்றன. ஒன்று: நமக்கு உணவளிக்கிறது. நம் கால் நடைகளுக்கு உணவளிக்கிறது. இரண்டு: நம்முடைய கரிக் காற்றை உள்வாங்கிக் கொண்டு சுத்தமான காற்றாக மாற்றி திரும்ப நமக்கே அளிக்கிறது. இன்று நாம் என்ன செய்கிறோம்? சாலையோரங்களில் இருக்கின்ற மரங்களையெல்லாம் வெட்டிச் சாய்த்து விட்டு ரோட்டை அகலப்படுத்துகிறோம். எதற்கு ரோட்டை அகலமாக்குகிறோம். வண்டி வேகமாகப் போவதற்காக. அப்போது வாகனத்திலிருந்து நிறைய புகை வெளியேறப் போகிறது. அந்தப் புகையை உறிஞ்சுவதற்கு வேண்டிய மரங்கள் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஏதோ இங்கு மட்டும் நடக்கின்ற நிகழ்ச்சி இல்லை இது. உலகம் முழுக்க நடக்கின்ற நிகழ்ச்சி. ஆனால் பாதிப்பு என்பது நமக்குத்தான் அதிகமாக இருக்கும். ஏனென்றால், தென்னிந்தியாவிலுள்ள ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடுதான் தண்ணீர் குறைந்த மாநிலம்.இன்றுள்ள நிலையில் இமயமலையே உருகி ஓடி வந்து கொண்டிருக்கிறது. கங்கை ஆற்றிற்கும் காவிரி ஆற்றிற்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? காவிரியில் மழை பெய்தால் தண்ணீர் வரும். கங்கையில் பனி உருகினால் தண்ணீர் வருகிறது. கோடை காலத்தில் கங்கையில் தண்ணீர் வருகிறது. அதனால் அங்கு விளைச்சல் என்னவோ அதிகமாகவே இருக்கும். ஆனால் இப்படியே இமயமலையில் பனிமலை உருகிக் கொண்டே போனால், நாளை கங்கையிலேயே தண்ணீர் வராது. இப்படியே உருகிக் கொண்டு வந்தால் வங்காள விரிகுடாவின் கடல் மட்டம் உயரும். அப்போது சென்னை பாதி இல்லாமல் போய்விடும். கடலூர் பாதி இல்லாமல் போய்விடும். நாகப்பட்டினம் இல்லாமல் போய்விடும். கன்னியாகுமரி இல்லாமல் போய்விடும். இதைக் கூட யோசிக்க கூடிய அளவிற்கு அந்தப் பதவியிலும், அந்தப் பொறுப்பிலேயும் இருப்பவர்களுக்கு அறிவில்லை. அதையெல்லாவற்றையும்தான் இவை கூட்டிக் காட்டுகின்றன.

தீராநதி : காடுகள் அழிக்கப்பட்டு வருவதைப் பற்றியும், மரங்கள் வெட்டப்படுவதினால் உண்டாகும் விளைவுகளைப் பற்றியும் பேசினீர்கள். எனக்குத் தெரிந்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வறிக்கையின் படி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை விட, தமிழகத்தின் ஆனைமலை, முதுமலையில் புலியின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. காட்டு கணக்கீட்டின் விவரப்படி புலி உள்ள ஒரு காடு ஆரோக்கியமான காடாக கணக்கிடப்படுகிறது. ஒரு காட்டில் ஒரு புலி உள்ளதென்றால், பல நூறு மான்களும், காட்டு எறுமைகளும் அந்தக் காட்டில் வசிக்கின்றன என்பது பொருள். ஏழெட்டுப் புலிகள் உள்ள காட்டில் மான்கள், காட்டு எறுமைகள், யானைகள், ஓநாய்கள், பன்றிகள், நரிகள் என்று ஆயிரக்கணக்கான விலங்கினங்கள் வாழ்வதாக பொருள் கொள்ளப்படும். ஏனென்றால், பல்வேறு விலங்கினங்கள் இருந்தால்தான் அவற்றை வேட்டையாடி ஒரு புலி ஆரோக்கியமாக வாழமுடியும். அதே போல சோலைக் காடுகளில் மணல்களின் உற்பத்தி ஒரு இன்ஞ்ச் வளர்ந்திருப்பதாக ஆர்வலர்கள் சொல்கிறார்கள் (தகவல் : ஓசை என்ஜிஓ). இவையெல்லாம் நீங்கள் அறிந்த ஒன்று தான். என்னுடைய கேள்வி என்னவென்றால்... மற்ற மாநிலத்தைக் காட்டிலும் வனப்பகுதிகளின் வளர்ச்சி விகிதம் தழைத்து வரும் மாநிலத்தின் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சத்தியமங்கல காட்டைக் கிழித்து இரயில் பாதை அமைக்க வேண்டும் என்கிறார். வன உயிரினங்கள் ஜீவிக்கக்கூடிய வனப்பகுதிக்குள் மனித குல சௌகர்யத்திற்காக நிறைவேற்றப்படும் இந்தத் திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களை நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையானவர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். சுற்றுச்சூழல் பற்றிய போதிய படிப்பறிவே இல்லாத மந்திரிகள் இருக்கும் நாட்டைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

நம்மாழ்வார் : இதில் உங்களுடைய வார்த்தைகளைக் கொஞ்சம் மாற்றிச் சொல்ல வேண்டுமென்று நினைக்கிறேன். படிப்பறிவு என்பது வேறு. கல்வி அறிவு என்பது வேறு. படிப்பறிவின்போது என்ன செய்கிறோம் என்றால், அடுத்தவர்களின் அறிவை நாம் உள் வாங்குகிறோம். கல்வியறிவு என்பது உள்ளே இருக்கின்ற ஆற்றல் வெளியில் வருவது இரண்டும் நேர் எதிரானது. நம்முடைய நாட்டில் நிறைய படித்து விட்டார்கள். அதனால்தான் அறிவே இல்லை. அறிவு என்பதென்னவென்றால், தொட்டணைத் தூறும் மணற்கேணி. அந்த மணற்கேணியில் தோண்டத் தோண்ட தண்ணீர் வருவது மாதிரி உள்ளிருந்து அறிவு வெளிப்பட வேண்டும். இங்கு அறிவே வெளிப்படவில்லை. அதற்குப் பதிலாக இவர்கள் சந்தர்ப்பவாதிகளாக இருக்கிறார்கள். இந்த நேரத்தில், நாம் எதைப் பேசினால் மக்களுடைய ஆதரவு எனக்கு கொஞ்சம் கூட வரும். என்னுடைய பெட்டியில் இன்னும் கொஞ்சம் ஓட்டு விழும். அதை மட்டும்தான் யோசித்துப் பேசுகிறார்களே ஒழிய வேறு எதையும் யோசித்துப் பேசவே இல்லை. மக்களுக்கு நலமென்றால் அது எதில் இருக்க முடியுமென்றால் குறிஞ்சி, குறிஞ்சியாக இருக்க வேண்டும். முல்லை, முல்லையாக இருக்க வேண்டும். மருதம், மருதமாக இருக்க வேண்டும். நெய்தல், நெய்தலாக இருக்க வேண்டும். இதை இளங்கோவடிகள் அந்தக் காலத்திலேயே சொல்லி இருக்கிறார். தொல்காப்பியத்தில் சொல்லி இருக்கிறது. திருவள்ளுவருக்கு 133 அடிக்கு சிலை வைத்திருக்கிறோம். திருவள்ளுவர் என்ன சொன்னார் என்பது பற்றி யோசிக்கவே இல்லை. ‘‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்’’ என்று சொல்லி இருக்கிறார். நம்முடைய பாதுகாப்பு என்றால், அது காடும் சேர்ந்ததுதான். காடு இருந்தால்தான் தண்ணீர் வரும். தண்ணீர் இருந்தால்தான் மக்களுக்கு வாழ்க்கை இருக்கும். ஆக, மக்களுக்கு அறிவில்லை. ரோடு போட்டு முன்னேறுவதைத் தடுக்கிறார்கள் என்று ஒருவர் பேசினால் இதைவிட முட்டாள் தனம் ஒன்று இருக்கவே முடியாது. நம்முடைய மடமைக்கு அளவே இல்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் பெரும்பாலான மக்களுக்கு இந்த அறிவைக் கொண்டு போய் சேர்த்து இதனால் நமக்கு அழிவு வரும் என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தி, பிறகு நாம் எல்லோரும் சேர்ந்து வரப்போகும் அழிவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற உணர்வைத்தான். அந்த வேலையை மட்டும் தான் இப்போதைக்கு நம்மால் செய்ய முடியும்.நாம் இவ்வளவு பேசுகிறோம் இல்லையா? இவையெல்லாம் ஆட்சியில் உள்ளவர்களுக்குத் தெரியாதென்று நாம் சொல்ல முடியாது. எல்லோரும் மனு கொடுத்திருக்கிறார்கள். எல்லோரிடமும் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது. பத்திரிகைகளில் செய்தி வெளி வந்திருக்கிறது. இவையெல்லாம் அறிந்து கொண்ட பிறகும், இவர்கள் செய்யும் தவறுகளைக் குறைத்துக் கொள்ளவே இல்லை. ஒவ்வொரு தடவையும் கூட்டவே செய்கிறார்கள். உதாரணத்திற்கு: எங்கு பார்த்தாலும் தொழிற்சாலைகள். ஆற்றங்கரையெல்லாம் தொழிற்சாலைகள். ஆற்றங்கரையில் இருக்கின்ற தொழிற்சாலைகள் என்ன செய்கின்றன? ஆற்றிலிருக்கின்ற நீரை தொழிற்சாலையின் உள்ளே இழுத்துக் கொள்கிறது. மறுபடியும் தன்னுடைய கழிவு நீரையெல்லாம் ஆற்றினுள் விடுகிறது. இந்தக் கொடுமை எந்த மந்திரிக்குத் தெரியாது சொல்லுங்கள்? எதிர்க் கட்சியாக இருக்கும் போது மந்திரிக்குத் தெரிகிறது. ஆளுங்கட்சியான பின்பு தெரியமாட்டேன் என்கிறது. ஆக, அவர்களின் நடத்தையில், பண்பிலுள்ள குறைபாட்டை நாம் பார்க்கிறோம். அதைத் தடுத்து நிறுத்தவே முடியாது. குற்றவாளிகளை நீங்கள் குற்றவாளி என்று சொன்னால், அவர்களுக்குக் கோபம் வரும். ஆனால் ஒரு குடியாட்சி நாட்டில் குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு மக்களுக்கு மட்டும் தான் அதிகாரம் இருக்கிறது. மக்கள் இதைப் புரிந்து கொண்டார்கள் என்றால், மக்களே இதைத் தடுத்து நிறுத்துவார்கள். நம்முடைய வேலை அங்குதான் இருக்கிறது.

தீராநதி : தொழிற்சாலைகள் மூலமாக நடக்கின்ற சீர்கேடுகளைப் பற்றி விரிவாகப் பேசினீர்கள். இந்தத் தருணத்தில் சமீபத்தில் நடந்த நந்திகிராம் பிரச்னை என் ஞாபகத்திற்கு வருகிறது. 1946_47 காலங்களில் நிலப்பிரபுத்தத்துவத்திற்கு எதிரான ‘தெபாகா’ போராட்டத்தின் வீரமிக்க வரலாற்றிற்குச் சொந்தக்காரர்கள் அம்மக்கள். நந்திகிராமில் 1942_டிசம்பர் 17ஆம் நாள் இருப்புக்கு வந்த ஜட்டியா சர்க்கார் (மக்கள் அரசு) 1944 டிசம்பர் வரை நீடித்தது. மகாத்மா காந்தியின் வேண்டுகோளின்படி 1944_ம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று இந்தப் போட்டி அரசு கலைக்கப்பட்டது. இப்படி நெடிய பாரம்பரியமுள்ள ஒரு மக்கட் கூட்டத்தினை, பெரும் முதலாளிகளுக்காக பொருளாதார வளர்ச்சி, என்ற பெயரில் சூறையாடியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) ஆளும் மேற்கு வங்க அரசு. ஏறக்குறைய 150,000 பேர் வாழ்வாதாரத்திற்காக சார்ந்திருக்கும் நிலத்தை அபகரித்து சுமார் ஆயிரத்திற்கும் மேலான நபர்களுக்கு வேலை தருவதாக கூறியது. இதே கருத்தியலுக்குள் தமிழக அரசு வரத் தொடங்கி இருக்கிறது. இதில் நடக்கும் மோசடிகள் குறித்துப் பேசுங்களேன்?

நம்மாழ்வார் : நீங்கள் நிறைய உட்கட்சி அரசியலுக்குள் சென்றுவிட்டீர்கள். இந்த நேரத்தில் உட்கட்சி அரசியலை விமர்சிப்பது சரியாக இருக்காது. ஆனால் நான் ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள்: காந்தி என்ன நந்திகிராமுக்கு மட்டுமா இருந்தார். இந்தியா முழுவதற்கும்தான் சுதந்திரம் கேட்டார். இந்தியா முழுவதும் காந்தியவழியில்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், இன்றைக்கு இந்தியா காந்திய வழியில் போய் கொண்டிருக்கிறதா? காந்தியைக் குழி தோண்டிப் புதைக்கின்ற வேலைகளை மட்டும்தான் செய்து கொண்டிருக்கிறது. அப்படி பார்த்துக் கொள்ளுங்கள் இதை.

தீராநதி : நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால், நந்திகிராம் என்பது பெரிய பாரம்பரியம் உள்ள பகுதி அது..

.நம்மாழ்வார் : இடத்தையும், ஆளையும் குறிப்பிடாதீர்கள். இன்றைக்கு காந்தி பெயரைச் சொல்பவர்கள்தான் ஆட்சியில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு அக்டோபர் இரண்டாம் தேதியும், ஒவ்வொரு ஜனவரி 30_ம் தேதியும் காந்தி சமாதியில் போய் மலர்வளையம் வைப்பதுதான் இவர்களுடைய வேலையாகவே இருக்கிறது. அன்றைய தினம் ஒவ்வொரு ஆட்களும் போய் மலர்வளையம் வைத்துவிட்டு வந்ததுதான் செய்தித்தாள்கள் முழுவதும் செய்தியாக வெளி வருகிறது. எல்லா நான்கு ரோடுகளும் சந்திக்கும் இடத்தில் சிலையாக உட்கார்ந்திருக்கிறார் காந்தி. இவருக்கு மாலை போடுவதுதான் இவர்களுக்கு பெரிய வேலையாக இருக்கிறது. அப்போது இந்தியா முழுமைக்குமாக யோசியுங்கள்? யார் காந்தியின் தோள் மீது ஏறி நிற்கிறார்களோ அவர்களே காந்தியைப் புதைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆக, எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியைப் பற்றியும் நாம் இங்குப் பேச வேண்டாம்.

தீராநதி : சரி, எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியைப் பற்றியும் பேச வேண்டாம். ஒட்டுமொத்த இந்திய அரசியல் பற்றியே பேசுங்கள்?நம்மாழ்வார் : ஒட்டுமொத்த இந்திய அரசியல் மக்கள் விரோத போக்காக போய்க் கொண்டிருக்கிறது. இந்த மண்ணிற்கு விரோதமான போக்கில் போய்க்கொண்டிருக்கிறது. நம்முடைய வரலாற்றை குழிதோண்டி புதைக்கிறது. அப்படி எடுத்துக்கொள்ளுங்கள்.

தீராநதி : தொழிற்சாலைகளுக்காக தாரை வார்க்கப்படும் விளைநிலங்கள் பிற்காலத்தில் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும்?நம்மாழ்வார் : இன்றைக்கு நம்முடைய தமிழ்நாடு அரசு, செய்தித் தாள்களில் எத்தனையோ லட்சம் ஏக்கர் நிலங்களை விவசாயிகளுக்குக் கொடுத்திருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறது. என்ன கொடுத்திருக்கிறது? ஒன்றிற்கும் உதவாத நிலத்தைக் கொடுத்திருக்கிறது. அதாவது, விவசாயத்திற்கு உதவாத நிலத்தைக் கொடுத்திருக்கிறது. சுடுகாட்டு பூமியைக் கொடுத்திருக்கிறது. அவர்களே சொல்கிறார்கள். ‘நிலத்தை நாங்கள் திருத்திக் கொடுத்திருக்கிறோம்’ என்று. ஆனால் மத்தியில் இருக்கின்ற உணவு அமைச்சரும், நிதியமைச்சரும் பிரதமரும் சேர்ந்து என்ன சொல்லி இருக்கிறார்கள். ‘‘சின்ன விவசாயி நிலத்தை விட்டு வெளியில் போய்விட வேண்டும்’’ என்று சொல்லி இருக்கிறார்கள். யாரை நிலத்தை விட்டுப் போய்விட வேண்டும் என்று மத்தியில் உள்ளவர்கள் சொல்லி இருக்கிறார்களோ அவர்களுக்கு நிலத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அப்போது என்ன செய்யப் போகிறார்கள் என்றால், நிலத்தை பிடுங்கிக் கொள்ளப் போகிறார்கள். நிறைய வசதியாக இருப்பவன் நிறைய நிலம் வைத்திருக்கிறான். காலங்காலமாக விவசாயம் நடந்து வரும் நிலம். ஆற்றோரத்து நிலம். விளைச்சல் நிலம். இப்போது அதை விற்பதற்கு அவன் தயாராக இருக்கிறான். அதை வாங்கியல்லவா சின்ன விவசாயிக்குக் கொடுக்க வேண்டும்? விவசாயத்திற்கு லாயக்கு இல்லாத நிலத்தைக் கொடுத்தால் அவன் ‘இது’ விவசாயத்திற்கு லாயக்கற்றது என்று போட்டுவிட்டுப் போய் விடுவான். அதைப் புடுங்கி தொழிற்சாலைகளுக்குக் கொடுத்துவிடலாம். மறுபடியும் தொழிற்சாலைகளுக்குக் கொடுப்பதற்காகவேதான் இந்த ‘தரம்’ குறைந்த நிலங்களை சிறு விவசாயிகளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எதையுமே மக்கள் நலத்திற்காகவே செய்யவில்லை. நீங்களே யோசித்துப் பாருங்கள்?அப்புறம் இன்னொன்றைப் பார்ப்போமா? இந்த நாட்டில் இன்னமும் 28 கோடி பேர் பசியோடு தூங்கப் போகிறார்கள். 28 கோடி பேர்! இவர்கள் சதவீதம் சதவீதம் என்று சொல்வார்கள். சதவீதத்தில் சொன்னால் உங்களுக்குப் பெரியதாகத் தெரியாது. 75 சதவீதம் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ‘சோகை’ நோய் இருக்கிறது. இரத்தத்தில் இரும்புச் சத்து இல்லை. 57 சதவீதம் குழந்தைகளுக்கு கண் பார்வை சரியாக இல்லை. வைட்டமின் ‘கி’ பற்றாக் குறையாக இருக்கிறது. இதற்கு என்ன காரணமென்றால், தாய் வயிற்றில் இருக்கும் போதிலிருந்தே அந்தக் குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைக்கவில்லை. நம்மால் சத்தான உணவைக் கொடுக்க முடியவில்லை. அப்புறம் எதை வைத்து ‘வளர்ந்து விட்டோம். வளர்ந்து விட்டோம்’ என்று சொல்கிறார்கள்? பெரும்பாலான மக்களுக்கு என்ன இல்லையென்று பார்த்தோமேயானால், அவர்களுக்கு என்று தனி சொத்து கிடையாது. அப்போது அவர்கள் பொது ஆதாரத்தை நம்பி இருக்கிறார்கள். அவர்களின் ஆடு பொது இடத்தில் மேய வேண்டி இருக்கிறது. அவர்களின் மாடு பொது இடத்தில் மேய வேண்டி இருக்கிறது. இவர்கள் விறகை பொது இடத்திலிருந்து எடுக்க வேண்டி இருக்கிறது. தண்ணீரை பொது இடத்திலிருந்து எடுக்க வேண்டி இருக்கிறது. அதையெல்லாவற்றையும் தனியாரிடத்தில், ஒரு முதலாளி இடத்தில் ஒப்படைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்போது வறுமைக் கோட்டிற்கு உள்ளே இருக்கின்ற கோடானுக்கோடி மக்களை அழிவை நோக்கித் தள்ளிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களை விளிம்புக்கு வெளியே இருக்கின்ற மக்கள் என்று சொல்வார்கள். அவர்களை மேலும் சாவை நோக்கித் தள்ளுவதற்குத்தான் இந்தத் திட்டங்கள் எல்லாம் செல்லுபடியாகும். ஆக, கிராமங்களில் இருக்கின்ற நிலங்கள் மூன்றே மூன்றிற்குத்தான் பயன்படுத்தப்பட வேண்டும். ஒன்று: மழைநீர் பெருக்கெடுத்து ஓடி கடலில் கலக்காதபடி அங்கேயே குளம் வெட்டுவதற்குப் பயன்படுத்த வேண்டும். இரண்டு : அங்குள்ள ஆடு, மாடுகள் மேய்வதற்காக மேய்ச்சல் நிலங்களை உண்டு பண்ண பயன்படுத்த வேண்டும். மூன்று. : அங்கேயும் காற்று சுத்தமாக, மழை வர, குளிர்ச்சி நிலவ வேண்டும் என்பதற்காக மரங்களை நட பயன்படுத்த வேண்டும். இந்த மூன்றிற்கும் தவிர, வேறு எதற்கும் கிராமத்தின் நிலத்தை இவர்கள் கொடுக்கிறார்கள் என்றால், வேறு ஏதோ ஆதாயம் கருதி செய்கிறார்கள் என்று அர்த்தமே தவிர நாட்டு நலனுக்காக செய்வதற்காக அல்ல; அப்படித்தான் நாம் பார்க்க வேண்டும்.

தீராநதி : இலவச நில மனைப்பட்டாக்கள் பற்றி நீங்கள் பேசியதால் எனக்கு அமார்த்யா சென் சொன்ன தகவல் ஒன்று நினைவுக்கு வருகிறது. அமார்த்யா சென், இந்தியா மற்றும் பிற நாடுகளில் பஞ்சங்கள் குறித்து ஆராய்ந்துள்ளார். உணவு கிடைக்காமையினால் பஞ்சம் உருவாகவில்லை என்று அவரது நூலில் நிரூபித்திருக்கிறார். நிலப்பட்டா வழங்குவதில் உள்ள கோளாறுகளே பஞ்சங்களின் காரணம் என அதில் வாதிடவும் செய்கிறார். இந்தியாவில் பட்டினிச் சாவுக்குப் பலியாவது உணவு இல்லாததால் அல்ல; இருக்கும் உணவுக்கான உரிமை அவர்களுக்கு இல்லாததே. இன்று ஆப்பிரிக்கா, சஹாரா பகுதி முழுவதும் உள்ளதை விடக் கூடுதலான இந்தியர்கள் போதிய ஊட்டமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியக் குழந்தைகளில் பாதிப்பேருக்கு மேல் போதிய எடையின்றி உள்ளனர் என்கிறார் அவர். சர்வதேசக் குழந்தை உணவுச் செயல்பாட்டுக் கூட்டிணைவு (மிஙிதிகிழி இன்டர்நேஷனல் பேபி ஃபுட் ஆக்ஸன் நெட்வொர்க்) என்ற அமைப்பு மூன்றாம் உலக நாடுகளில் ஒவ்வொரு 30 விநாடியும் ஒரு குழந்தை பாதுகாப்பற்ற புட்டிப்பால் அருந்தி இறக்கிறது என்ற தகவலை வெளியிட்டிருக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்த நாம் என்ன செய்தால் தகும் என்று நீங்கள் அறிவுரை சொல்ல முடியுமா?நம்மாழ்வார்: அமார்த்யா சென் சொல்லும் சில தகவல்கள் நமக்கு உபயோகமாக இருக்கிறது. இது ஆட்சியாளர்களின் கண்களைத் திறப்பதற்கு உபயோகப்படும். அதற்கு மேல் உபயோகப்படாது. ஏனென்றால், வெளிநாட்டில் படித்து விட்டு வெளிநாட்டில் உள்ளதைப் போல இங்கேயும் பொருளாதார கணக்குகளையெல்லாம் போட்டுக் கொண்டிருக்கிறார். அவர் சொல்வதில் மிக முக்கியமான விஜயம். ‘‘நாம் வெட்கப்பட வேண்டிய ஒரு சூழ்நிலையில் இருக்கிறோம். ரொம்ப வளமான நாடு கலிபோர்னியா. வளமே இல்லாத இடம் சஹாரா பாலைவனம். இந்த இரண்டும் இந்தியாவில் இருக்கிறது. அப்போது இதை எப்படி ஒரு தேசம் என்று சொல்லுவீர்கள். ஒன்றுமே இல்லாத மக்கள் ஏராளமாக இருக்கிறார்கள். வசதியைக் குவித்துக் கொண்ட சில மக்கள் மேலே இருக்கிறார்கள். ஆக, கலிபோர்னியாவும் இங்கு இருக்கிறது. சஹாராவும் இங்கே இருக்கிறது’’ என்று சொல்கிறார் அமார்த்யா சென். அதை அப்படியே நாம் எடுத்துக் கொள்வோம். ஏனென்றால் அது ரொம்ப நல்ல விஷயம். ஒரு பொருளாதார மேதை பார்வையில் பட்டிருக்கிறது.இன்னொன்றையும் அவர் சொல்கிறார். ‘‘பள்ளிக்கூடத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. வீடுகளில் பூட்டு தொங்குகிறது. ஏனென்றால் வாழ வழியின்றி குடும்பம் இடம் பெயருகிறது. கூடவே குழந்தைகளும் போக வேண்டி இருக்கிறது. ஒரு குழந்தைக்கு ஐந்தாம் வகுப்பு வரையாவது படிப்பு சொல்லிக் கொடுக்க முடியவில்லை’’ என்று அவர் வருத்தப்படுகிறார். ஆனால் நான் என்ன சொல்கிறேன் என்றால், ஐந்தாம் வகுப்பு வரை படித்து என்ன செய்யப் போகிறது அந்தப் பிள்ளை. இங்கு பி.ஏ., வரை படித்தவன் என்ன செய்துவிட்டான். இதை ஒரு அளவாகப் பார்ப்பதில் ஒரு பிரயோஷனமும் கிடையாது. இந்தியா ஒன்றும் இங்கிலாந்து அல்ல; இங்கிலாந்தில் நான்கு மாதங்கள்தான் வெயில் அடிக்கும். இங்கு 12 மாதமும் வெயில் அடிக்கிறது. ஒருவனிடம் தண்ணீரையும் நிலத்தையும் கொடுத்துவிட்டால் அந்தக் குடும்பம் எப்படியாவது பிழைத்துக் கொள்ளும். அந்தக் குடும்பத்தில் உள்ள குழந்தை முதல் வயதானவன் வரை அந்நிலத்தில் வேலை செய்வார்கள். அவ்வளவு ஏன் அவன் கழிக்கும் மலம் ஜலமே செடி கொடிகளை வளர்த்து விடும். அதானே எரு. அவன் வைத்திருக்கும் ஆடு சாணி போடும். மாடு சாணி போடும். ஆட்டு பாலை குழந்தை குடிக்கும். மாடு கொடுக்கும் பால் தயிராகி அவர்களின் சாப்பாட்டிற்கு சேரும். சக்தி தரும் ஒரு முருங்கை மரம் போதும் அவர்களுக்கு. ஒரு பப்பாளி மரம் போதும் அவர்களுக்கு. இவர்களுக்கு நிலமே இல்லாத வேலைகளைத்தான் இந்த வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் செய்கிறது. உடனடியாக நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், இன்றைக்கு வளர்ச்சித் திட்டம் என்று எதை எதையோ செய்து கொண்டிருக்கிறோமே, அதை உடனடியாக நிறுத்திவிட வேண்டும். போட்டதை அப்படியே போட்டு விட்டுத் திரும்பி நிற்க வேண்டும். எங்கிருந்து நாம் தப்பு செய்தோமோ அந்த இடத்திற்குத் திரும்பிப் போனதற்கு பிற்பாடுதான் வளர்ச்சியைப் பற்றி யோசிக்க வேண்டும். உதாரணத்திற்கு எங்கு நம்முடைய தப்பு ஆரம்பித்ததென்றால், ‘பசுமைப் புரட்சி’யில்தான் ஆரம்பித்தது. பசுமைப் புரட்சிக்கு முன்னால் என்ன நடந்ததென்றால், நான் என்னுடைய அப்பா நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் வயலில் வேலை செய்து விட்டுத்தான் பள்ளிக்கூடம் போக வேண்டும். பதினொன்றாம் வகுப்பு வரையிலும் அப்படித்தான் போனோம். அன்றைக்கு என்னுடைய அப்பா என்ன செய்யவில்லை என்றால் விவசாய உற்பத்திக்காக டவுனிலிருந்து எதையும் வாங்கவில்லை. அவர் டவுனிலிருந்து விவசாயத்திற்காக ஏதாவது வாங்கி இருந்தால் அது: கொழுவடிப்பதற்காக இரும்பு வாங்கி இருக்கிறார். கடப்பாறை வாங்கி இருக்கிறார். அறிவாள் வாங்கி இருக்கிறார். மண்வெட்டி வாங்கி இருக்கிறார். ஆக, இரும்புச் சாமான்கள் மட்டும்தான் வெளியில் வாங்கியது. மற்றபடி எங்கள் வயல்வெயில் இருக்கின்ற இலை தழைகளையே எருவாகப் பயன்படுத்திக் கொண்டோம். வரப்புகளில் இருந்த மரத்தை வைத்தே வீட்டிற்கு கட்டில், ஜன்னல், கதவு, பீரோ, வண்டி என்று சகலத்தையும் செய்து கொண்டோம். உள்ளூர் ஆசாரியார் இவற்றை அழகாக செய்து கொடுத்து விட்டார். நாங்கள் அதற்கு ஈடாக களத்தில் நெல் அடிக்கும் போது அரிசி, சாப்பாடு என்று கொடுத்துவிட்டோம். முடி திருத்தும் தொழிலாளியின் வீட்டுப் பெண்தான் எங்கள் குடும்பத்திற்கு மருத்துவம் பார்த்தார். அவருக்கு நெல் கொடுத்தோம். இராத்திரி சாப்பாடு எங்கள் வீட்டிலிருந்து தான் அவர் வீட்டிற்குப் போகும். இப்படித்தான் எல்லோரும் பகிர்ந்துண்டோம்.எங்கள் அப்பா எங்கள் தாத்தா கொடுத்த இரண்டு ஏக்கர் நிலத்தை பத்து ஏக்கராக மாற்றி, அவரது நான்கு மகன்களுக்கும் ஆளுக்கு இரண்டு ஏக்கர் வீதம் பிரித்துக் கொடுத்தார். ஆனால், இன்றைக்கு என்ன நடக்கிறது? இரண்டு ஏக்கர் வைத்திருந்தால் ஒரு ஏக்கரை விற்று பையனை இஞ்ஜினீயரிங் காலேஜுக்கு அனுப்பிவிட்டு இன்னொரு ஏக்கரை விற்று மகளுக்குக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு விவசாயி ஓட்டாண்டியாக தெருவில் நிற்க வேண்டியதுதான். இதற்குக் காரணம் பசுமைப்புரட்சி. அந்தப் பசுமைப்புரட்சி என்பது எல்லாவற்றையும் வெளியில் வாங்கிச் செய்யும் விவசாயமாக மாற்றி விட்டது. கிராமத்தை உறிஞ்சுவது, சுரண்டுவது என்பது பசுமைப்புரட்சியிலிருந்துதான் ஆரம்பமானது.

தீராநதி : அன்றைக்கு ஏற்பட்ட உணவு பற்றாக் குறையினால் பலர் செத்து மடிந்து கொண்டிருந்தார்கள். உணவு உற்பத்தி போதுமான தேவைக்கு ஏற்ற அளவில் இல்லை. ஆகவே பசுமைப்புரட்சி என்ற திட்டத்தால் தான் வறுமையை ஒழித்திருக்கிறோம். இந்த நிலைமையைச் சரி செய்திருக்கிறோம். அதிலிருந்து பிழைத்து மீண்ட தெம்பில்தான் இவர்கள் இன்றைக்கு விமர்சிக்கிறார்கள் என்று அந்தத் தரப்பிலிருந்து எதிர்வாதம் வருகிறதே?

நம்மாழ்வார்: நீங்கள் விவசாயம் படித்திருக்கிறீர்களா?தீராநதி : இல்லை.நம்மாழ்வார் : விவசாயம் செய்திருக்கிறீர்களா?

தீராநதி : இல்லை. (ஆனாலும் ஒரு விவசாயியாக வேண்டும் என்பதுதான் என் லட்சியம்.)

நம்மாழ்வார் : உங்களைப் போல உள்ளவர்களுக்குப் புரியவே புரியாது. ஏனென்றால், அவன் வந்து பொய் சொல்கிறான். இங்கே அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். மந்திரிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு விவசாயம் தெரியாது. விஞ்ஞானமும் தெரியாது. அப்போது அவர் என்ன செய்கிறார். விஞ்ஞானியிடம்தான் யோசனை கேட்கிறார். அப்போது அந்த விஞ்ஞானி என்ன செய்ய வேண்டும்? விஞ்ஞான பூர்வமாக பதில் சொல்லவேண்டும். அன்றைக்கு ஏன் விளைச்சல் அதிகமாக இல்லை என்பதை விஞ்ஞானபூர்வமாக அவர் சொல்ல வேண்டும். அவன் விஞ்ஞானபூர்வமாக ஒரு பதிலைச் சொல்லாமல் இப்படி மேலோட்டமான ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கிறான். நான் வரலாறு முழுவதும் படித்திருக்கிறேன். நம்ம விவசாயப் பெண்ணிடம் உட்கார்ந்து பேசி இருக்கிறேன். விவசாயப் பெண் பள்ளிக்கூடம் போய் இருக்க மாட்டாள். அவள் ஒரு விடுகதை போட்டாள். என்ன விடுகதை போட்டாள். ‘அடி காட்டுல. நடு மாட்டுல. நுனி வீட்டுல.’ அறுக்கும்போது அடியில் இருக்கின்ற கட்டையை காட்டில் விட்டோம். நடுவில் உள்ளது மாட்டிற்குச் சென்று விட்டது. நுனியில் உள்ளது வீட்டிற்கு வந்துவிட்டது. அடிக்கட்டைக்கு விவசாயி காசு செலவழிக்கவில்லை. நடுவில் இருந்த மாட்டிற்கு காசு செலவழிக்கவில்லை. வேண்டாததை மண்ணிற்குக் கொடுத்தார். வேண்டாததை மாட்டிற்குக் கொடுத்தார். பால் வீட்டிற்கு வந்தது. சாணி மண்ணிற்குப் போய்விட்டது. பயிர் விளைந்து கொண்டே இருந்தது. அப்போது விளைந்தது வீட்டில் இருந்தது. நீங்கள் கடனை வாங்கி, கடனுக்கு யூரியாவையும், டிஏபியையும் போட்டதால் நிறைய விளைந்திருக்கிறது. ஆனால், விவசாயி கையில் ஒன்றுமில்லை. ஏனென்றால் விளைந்ததை விற்று கடன் அடைத்திருக்கிறார். இன்றைக்கு நாடு முழுவதும் உள்ள 112 கோடி பேர்களில் 65 சதவீதம்பேர், அதாவது 73 கோடி பேர் கிராமத்தில்தான் உள்ளோம். இந்த 73 கோடி பேர்களை கிராமத்தில் பட்டினி போட்டுவிட்டு அப்புறம் என்ன நீங்கள் விளைய வைக்கவில்லை.. விளைய வைக்கவில்லை என்று வாயாடுகிறீர்கள். இங்கே எல்லோருக்கும் எங்கே சாப்பாடு போட்டீர்கள்.இப்போது தானே சொன்னேன் 28 கோடி பேர் இன்னமும் பசியோடு தூங்கப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று. இதை நான் சொல்லவில்லையே? தேசிய உழவர் கமிஷன் தலைவர் சாமிநாதன் அவர்கள்தான் அறிக்கையாகக் கொடுத்திருக்கிறார். அந்த அறிக்கை மந்திரி சபையிலேயே இருக்கிறது. ஆக, பொய் சொல்வது நழுவுவது இதையெல்லாம் விஞ்ஞானிகள் செய்யக் கூடாது.இந்த ரசாயனப் பொருட்களை நிலத்தில் போட்டதால் நிலம் உப்பாகப் போய் இனிமே ஒரு தானியம் கூட இருக்க முடியாது. இதை ஆரம்பித்ததே மிகவும் வளமான பகுதிகளில்தான் ஆரம்பித்தார்கள். இந்தியா முழுவதும் எங்கெல்லாம் ஆறுகள் நிறைய பாய்கின்றதோ அங்கே ஆரம்பித்தார்கள். வடக்கே ஒரு பஞ்சாப் இருக்கிறது. அங்கே ஐந்து ஆறு பாய்கிறது. அங்கே ஆரம்பித்தார்கள். இங்கே தென்னிந்தியாவில் ஒரு பஞ்சாப் இருக்கிறது. (பஞ்சாப் என்றால் ஐந்து ஆறுகள் என்று பொருள்) இங்கும் ஐந்து ஆறுகள் பாய்கிறது. அதுதான் திருவையாறு. நம்முடைய காவிரி வட்டம் முழுவதும் இதைப் புகுத்தினார்கள். எங்கெல்லாம் ஆறு பாய்ந்து செழிப்பாக இருந்ததோ அங்குதானே பசுமைப் புரட்சியை புகுத்தினீர்கள்? அங்கெல்லாம் இன்று ஒன்றும் விளையாத கட்டத்திற்குப் போய் விட்டது பூமி. அன்றைக்கு இதுதான் ஒரே வழி என்று சொன்னீர்களே? இது எப்படி சரியான வழியாகும்? அப்போது ஒவ்வொரு நாளுக்காகவும் ஒவ்வொரு திட்டத்தையா போடுவீர்கள்? இன்றைக்கு என்ன சொல்கிறார்கள். நிலைத்த, நீடித்த, வேளாண்மை என்கிறார்கள். நிலைத்த நீடித்த வளர்ச்சி என்கிறார்கள். நிலைத்த நீடித்த வளர்ச்சி என்னவென்றால், இன்றைய தேவைக்காக நீங்கள் ஒன்றைச் செய்ய வேண்டும். ஆனால் அது நாளைய தேவையைக் கெடுத்துவிடக் கூடாது. அதற்கு பெயர் தான் sustணீவீஸீணீதீறீமீ டெவலப்மெண்ட். அந்த சஸ்டைனபுலிட்டியை இப்போது இழந்து விட்டு நிற்கிறோம். ஆக, அன்றைக்கு அதைச் சரி என்று சொன்னது நியாயம்தானே என்றால், அதைவிட முட்டாள் தனம் வேறு எதுவும் கிடையாது.அன்றைக்கு அமெரிக்காக்காரன் சொன்னதைப்போல சொன்னீர்கள். அதில் அமெரிக்காக்காரனுக்கு லாபம் இருக்கிறது. வட்டிக்குக் கொடுத்திருக்கிறான். அதற்காக உங்களிடமிருந்து வட்டி வாங்கிக் கொண்டிருக்கிறான். அவனுடைய ரசாயணப் பொருட்களையெல்லாம் நம்மிடம் விற்றிருக்கிறான். நம்முடைய பூமியை நாசமாக்கி இருக்கிறான். நம்முடைய நுகர்வோரை விஷமாக்கி இருக்கிறான். நுகர்வோர் என்றால் 112 கோடியும் நுகர்வோர்தான். மண்ணைக் கெடுத்திருக்கிறான். விவசாயியை பொருளாதார ரீதியாக நஷ்டத்தை ஏற்படுத்தி ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் பேர் கடந்த ஒரு பத்து வருடங்களுக்குள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இதுவரை இவ்வளவு பெரிய விவசாயிகள் தற்கொலை உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் நடந்திருக்க முடியாது. ஒருலட்சத்து எழுபத்தைந்தாயிரம் விவசாயிகள் இன்றைக்கு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்கு தோற்றுவாய் பசுமைப்புரட்சியிலிருந்து தொடங்குகிறது.வெள்ளையன் ஒரு இருநூறு ஆண்டுகள் நம்முடைய நாட்டை ஆண்டான். அவன் என்ன செய்தான் ஷமீன்தாரை நியமித்து விவசாயிகளிடமிருந்து நிலத்தையெல்லாம் புடுங்கிவிட்டான். தூக்கி ஷமீன்தார் கையில் கொடுத்துவிட்டான். அப்போது சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தும் காந்தி காலத்திலிருந்தும் சுதந்திரம் வந்தால் நிலத்தை விவசாயிகளின் கையில் ஒப்படைப்போம் என்றார்கள். அதைச் செய்யவில்லை. ஆகையினாலே தான் பற்றாக்குறை. இன்றைக்கு வரை அந்த உண்மையை மூடி வைத்துக் கொண்டு பற்றாக்குறையால்தான் ‘பசுமைப் புரட்சி’யைக் கொண்டு வந்தோம் என்கிறார்கள். வரலாற்றையும் ஒழுங்காகப் படிக்கவில்லை. விஞ்ஞானத்தையும் ஒழுங்காகப் படிக்கவில்லை. வரலாற்றையும், விஞ்ஞானத்தையும் ஒழுங்காகப் பார்க்கவில்லை என்றால் நம் முன்னேற்றத்திற்கான எந்த வெளிச்சமும் நமக்குக் கிடைக்காது.

தீராநதி : இந்திய மக்கள் மேலை நாட்டு விஞ்ஞான தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள், உணவு தானியங்கள்தான் சுத்தமானது, உடலுக்கு ஆரோக்கியமானது என்று நம்பும்படி மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். காந்தியின் சுதேசி மனப்பான்மையை இந்தியர்களே தூக்கி எறிந்து விட்டார்கள். அல்ஜீரிய போராளி ஃபிரான்ஸ் ஃபனான் சுதேசி கொள்கையை அகப் பொருள் புறப் பொருள் என்று தனித்தனியே ஆராய்ந்து காந்தியின் பார்வையை மறு ஆய்வுக்குட்படுத்தி மேலும் ஆழமான சுதேசி கருத்தியலைக் கட்டமைக்கிறார். ஒரு நாட்டின் உண்மையான புரட்சியை விவசாயிகளிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். அதுவே உண்மையான புரட்சியாக அமையும் என்றும் ஃபனான் குறிப்பிடுகிறார். கோபால் ஆசிரமம் என்ற புது ஆசிரமத்தை மீரா பென் நிறுவி சுற்றுச் சூழல் குறித்து போராடி வந்திருக்கிறார். அம்மக்களின் கதைப் பாடல்களில் பஞ்ஜ் எனப்படும் ஓக் மரங்கள் முற்றிலும் இன்று அழிக்கப்பட்டு விட்டதைக் கண்டறிந்தார். அதே போல அம்ரிதா தேவி தலைமையில் பிஷ்னோய் சமூகத்தினர் புனித ‘கேஜ்ரி’ மரங்களை வெட்டுவதை எதிர்த்து அப்பழங்குடி மக்கள் மரங்களைக் கட்டியணைத்து வெட்ட விடாமல் உயிர்தியாகம் செய்தார்கள் என்பது நம் வரலாறு.இன்றைக்கு மேதா பட்கர் இவ்விஷயத்தில் முன்னுதாரணமாக நிற்கிறார். தமிழகத்தில் நீங்கள் தீவிரமாக இயங்குகிறீர்கள். கென்ய நாட்டில் ‘கிரீன்பெல்ட்’ இயக்கம் போல வலுவான அரசியல் இயக்கமாக மாறவேண்டிய தேவை நம் நாட்டில் உருவாகி இருக்கிறது? இதை எவ்வாறு சாத்தியமாக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

நம்மாழ்வார் : இன்றைக்கு நிறைய இயக்கங்கள் நம்நாட்டில் செயல்படுகின்றன. நீங்களே சொல்லி விட்டீர்களே. மேதா பட்கர் ஒரு இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்று. வடக்கே வந்தனாசிவா ஊர் ஊராகப் போய் களப்பணி செய்து வருகிறார். இங்கு நாம் செய்து கொண்டிருக்கிறோம். ஆந்திராவில் டெக்கான் டெவலப்மெண்ட் சொஸைட்டி என்ற ஒரு அமைப்பு இயங்கி வருகிறது. அவர்கள் என்ன செய்தார்கள் என்றால், நிலத்தை விட்டு வெளியே நகரங்களுக்குக் கூலிகளாகச் சென்ற விவசாயிகளை அழைத்து மறுபடியும் நிலத்தில் விவசாயம் செய்யச் சொல்லி, நிலத்தை மேம்படுத்தி இழந்து போன தானியத்தையெல்லாம் உற்பத்தி செய்து, அங்கு தேவைக்கு மீறிய மகசூலை எட்டி அவர்களின் தேவைக்குப் போக அவர்களே மற்றவர்களுக்கு ரேஷன் அளிக்கிறார்கள். 2002 ஆம் ஆண்டு ஒரு கிராமத்தில் ஆரம்பித்தவர்ககள் இன்றைக்கு நூறு கிராமத்தில் இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதே போல, கேரளத்தில் ஒரு கிராமத்தில் ‘தனல்’ என்ற ஒரு இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த எல்லா இயக்கங்களும் ஒன்றுசேருகின்ற காலகட்டத்தில்தான் நாம் இன்றைக்கு இருக்கிறோம். இன்னும் கொஞ்ச காலங்களில் இவை ஒன்று சேரப்போகின்றன.மக்களிடம் அறிவிருந்ததென்றால், எடுத்துச் சொன்னவுடன் அவன் மாறிவிடுவான். அறிவில்லை என்றால் அவன் கஷ்டங்களை அனுபவிக்கும் போதுதான் மாறுவான். இப்போது அவன் கஷ்டங்களை அனுபவிக்கின்ற காலகட்டம் வந்துவிட்டது. ஆக, மக்கள் மாறக்கூடிய நேரம் இது. விவசாயத்தைப் பொருத்த மட்டும் மற்றதிலிருந்து கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. மற்றவை எல்லாவற்றையும் பேசிதான் தீர்க்க வேண்டி இருக்கும். விவசாயம் என்பது செய்து காட்டி தீர்க்க வேண்டிய விஷயம். இன்றைக்கு தமிழ்நாட்டில் எனக்கு 100 பண்ணைகள் இருக்கின்றன. இந்த நூறு பண்ணைகளையும் பயிற்சி மையமாகப் பயன்படுத்துகிறோம் நாம். அதில் மக்கள் நேரடியாக வந்து பார்க்கிறார்கள். பார்த்ததை அவர்கள் தன்னுடைய நிலத்தில் நடைமுறைப்படுத்துகிறார்கள். ஆக, நம்முடைய உற்பத்தி முறையை மாற்றுவதென்பது கடினமான காரியமில்லை. ஆக, வள்ளுவர் என்ன சொல்லி இருக்கிறார் என்றால் ‘‘ஆங்கதை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு’’ என்று சொல்லி இருக்கிறார். எல்லா வளமும் இருந்தாலும் அரசாங்கம் உருப்படியாக அமையவில்லை என்றால், எது ஒன்றும் உருப்படாமல் போய் விடும் என்பது இதன் பொருள். ஆக அரசாங்கத்தை நேர்படுத்துவதற்குத்தான் நாம் அதிகம் உழைக்க வேண்டி இருக்கிறது.

தீராநதி : ஆற்றுநீரைப் பயன்படுத்தி தஞ்சை மாதிரியான வட்டாரங்களில் மூன்று போகம் விளைவித்திருப்பதை நாம் அறிந்துள்ளோம். ஆனால், ஆற்று நீர் ஆதாரமே இல்லாத செங்கல்பட்டு மாதிரியான பகுதிகள் ஏரி குளங்களை உண்டாக்கி அதன் வழியாக நீர்த்தேக்கி மூன்று போகம் விளைவித்து, அப்பகுதி செல்வச் செழிப்பாக இருந்திருக்கிறது. இன்றைக்கு ஆற்று நீர் ஆதாரங்கள் முழுக்க அரசியல் காரணங்களால் நாம் இழந்திருக்கிறோம். அண்மையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கூட பிரச்னையாகி தவிக்கிறது. இச் சமயத்தில் ஏரி, குளங்கள் மூலமாக _ செங்கல்பட்டு மாதிரி _ ஒரு விவசாயத்தை நம்மால் வளர்த்தெடுக்க முடியுமா? ஏரிகளை நம்பி மட்டுமே பயிர் செய்வதென்பது பிற மாவட்டங்களிலும் சாத்தியப்படுமா?

நம்மாழ்வார்: உங்களிடம் இருப்பது பொது அறிவு. இந்தப் பொது அறிவு விவசாயத்திற்கு உபயோகப்படாது. இன்னும் கொஞ்சம் அறிவு ஆழமானால்தான் விவசாயத்திற்கு அது பயன்படும். ஏரிகளை வைத்து சாகுபடி செய்வதென்பது செங்கல்பட்டில் மட்டும்தான் நடக்கும். அது தஞ்சாவூரில் நடக்காது. ஏன் என்று கேட்டீர்களென்றால், செங்கல்பட்டில் மலைகள் நிறைய இருக்கின்றன. மலையில் பெய்யும் மழை நீர் கடலுக்குப் போவதற்கு முன் மறித்து ஏரிகளில் நிரப்பி சாகுபடிக்குப் பயன்படுத்துகிறார்கள். இங்கு மேட்டூர் தண்ணீர் கடலுக்குப் போவதற்கு முன் மறிக்கப்பட வேண்டும். அப்படி மறித்து 33 ஆறுகளாகத் திருப்பி இருக்கிறார்கள். கல்லணையிலிருந்து 33 ஆறுகளாக பிரித்து கடலில் போய்ச் சேருகிறது. கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கின்ற ஆறுகளிலேயே 95 சதவீதம் விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஆறு காவிரி ஆற்றுத் தண்ணீர் மட்டும்தான்.இன்று காடுகளை அழித்ததினால் புயல் மழையாக வரும் நீரை மேட்டூர் அணையில் நாம் தேக்கி வைத்தது போக, அதே போல ஐந்து மடங்கு தண்ணீர் வங்காள விரிகுடாவிற்குப் போய் விடுகிறது. நம்முடைய கரிகாலச்சோழன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தக் கல்லணையைக் கட்டியதாகச் சொல்கிறார்கள். இங்கிலாந்துகாரன் இங்கு வந்து கல்லணையைப் பார்த்தபோது அவனுடைய தொப்பியைக் கழற்றி மரியாதை செலுத்தினானாம். ஏனென்றால், எப்படிடா தண்ணீர் பாயும் மணல் ஆற்றில் அணையைக் கட்டி இருப்பான் என்று அவனுக்குப் புரியவே இல்லை. ஆகவே அப்படி மரியாதை செய்திருக்கிறான். காட்டாற்றில் தண்ணீர் போய்க் கொண்டே இருக்கும். ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்படுகின்ற வேலையுமல்ல இது என்று மலைத்திருக்கிறான். ‘‘இந்த அணையைக் கட்டுவதற்காக இங்கு முதல் கல்லைப் போட்டானே அந்த மனிதனுக்கு என்னுடைய வணக்கம்’’ என்று அவன் சொன்னதாக வரலாற்றில் எழுதி இருக்கிறார்கள். ஆக, அந்தச் சாதனை மிக்க அணையை கரிகாலச் சோழன் கட்டி இருக்கிறான். அணையென்றால் நீரைத் தேக்கி வைத்து பிறகு தண்ணீரைத் திறந்து விடும் அணையல்ல; கொள்ளிடத்திற்கு அதிகமாகச் சொல்லும் தண்ணீரை அணையிட்டு தடுத்துவிட்டோம் என்றால், அதில் குறிப்பிட்ட அளவிற்கான தண்ணீர் காவிரி ஆற்றில் போய்க் கொண்டே இருக்கும். அதற்கு மேல் தண்ணீர் வந்தால் காவிரி அக்கரை தாங்காது. ஆகவே இதைக் கட்டி இருக்கிறான். அதற்கப்புறம் ஒரு விஷயம், பெரிய மன்னர்களை ஒளவையார் பாடவே இல்லை. கரிகாலனை மட்டும்தான் பாடி இருக்கிறாள். பாடும் போது என்ன சொல்கிறாள் என்றால், ‘‘காடு கொன்று நாடாக்கினான். குளம் தொட்டு வளம் பெருக்கினான்’’ என்று எழுதுகிறாள். சரி தானே?ஆக, காவிரி மண்டலத்திலும் நிறைய குளங்களாகவே வெட்டி வைத்திருந்திருக்கிறார்கள். ஏனென்றால், காவிரியில் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் மட்டும்தான் தண்ணீர் வரும். அதற்காக எங்குப் பார்த்தாலும் குளங்கள் வெட்டினார்கள். தேக்கிய நீரை வருடம் முழுவதும் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால், இன்றைக்கு ஆற்று ஓரத்தில் தொழிற்சாலைகளை உண்டாக்கி வைத்துக் கொண்டு ஆற்று நீர் முழுவதையும் சாக்கடையாக்கி வைத்திருக்கிறோம். உடனடியாக நாம் செய்தாக வேண்டிய வேலை. ஆற்று ஓரங்களில் உள்ள எல்லா தொழிற்சாலைகளையும் பூட்டுப் போட்டு பூட்ட வேண்டியதுதான்.நேற்று நாங்கள் திருவனந்தபுரத்திலுள்ள பத்மநாப சாமிகள் கோயிலுக்குப் போனோம். அங்கு கோயிலுக்குப் பக்கத்தில் பெரியதாக ஒரு ஏரியைக் கட்டி வைத்திருக்கிறார்கள். பக்கத்தில் குடியிருப்புக்கள் எல்லாம் இருக்கிறது. கோயிலின் மீது கூரை போட்டு விட்டார்கள். அதில் விழும் மழைத் தண்ணீர் ஏரிக்குள் வந்து விழுந்து நிரம்புகிறது. மக்கள் தன்னை கடவுள் காப்பாற்றுவதாக நம்பவைத்தார்கள். ஆனால், உண்மையில் இவர்கள் தான் கடவுளைக் காப்பாற்றினார்கள். ஏனென்றால், இவர்களே வகுத்துக் கொண்ட திட்டங்களால்தான் இவர்களை இவர்களே காப்பாற்றிக் கொண்டார்கள். ஆனால் கடவுள் காப்பாற்றுவதாக போதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்தம் 40 ஆயிரம் ஏரிகளை நம்முடைய முன்னோர்கள் கட்டி வைத்திருந்தார்கள். ஏரி என்றால் என்ன அர்த்தம். ஏர் பூட்டி பயிர் செய்யப்படுகின்ற இடங்களை ஏரி என்றோம். அதோடு சின்னதானால் குளம். ஆடு மாடு குளிக்கலாம். அதைவிடச் சின்னதானால் குட்டை. கை கால் மட்டும் கழுவிக் கொள்ளலாம். இப்படி ஒவ்வொன்றிற்கும் பெயர் வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அந்த 40 ஆயிரம் ஏரிகளில் இன்றைக்கு 20 ஆயிரம் ஏரிகள்தான் இருக்கிறது என்கிறார்கள்.ஒரு காலத்தில் காரல் மார்க்ஸ் இங்கிலாந்திலிருந்து எழுதுகிறார். ‘‘இந்தியாவினுடைய சூழல் ரொம்ப இயற்கை வளம் மிகுந்ததல்ல; அவர்கள் ஏரி குளங்களையெல்லாம் உண்டாக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் அவற்றை அடிக்கடி மராமத்து செய்ய வேண்டும். அப்போதுதான் விவசாயம் ஒழுங்காக நடக்கும். ஆனால் இங்கிலாந்திலிருந்து போன ஆங்கில அரசு அவற்றின் மேம்பாட்டிற்குச் செலவழிப்பதே இல்லை. இவர்கள் போருக்குச் செலவு செய்வதும், வரி வசூலிப்பதும், வரிப் பணத்தை தலைநகரத்திற்கு அனுப்புவதும் மட்டும்தான் அங்கிருக்கும் ஆட்சியாளர்களின் வேலையாக இருக்கிறது. ஆகையினால் அங்கு பஞ்சம் மிஞ்சி இருக்கிறது. பஞ்சம் நிலவுகிறது’’ என்று எழுதுகிறார். அப்போது அந்த வெள்ளைக்காரன் போன பிற்பாடு நாம் நம்முடைய மக்களுக்காக ஆள வேண்டுமில்லையா? இப்பவும் பணக்கார நாட்டிற்கு சம்பாதித்துக் கொடுப்பதற்காகவே நம்முடைய ஆட்சியாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்தப் பஞ்சம் இன்னும் தொடருகிறது. காந்தியே சொல்லி இருக்கிறார். ‘இந்தியாவில் ஆறு லட்சம் கிராமங்கள் இருக்கின்றன. இந்த ஆறு லட்சம் கிராமங்கள் வாழ்ந்தால் இந்தியா வாழ்கின்றதென்று அர்த்தம். இல்லையென்றால் இல்லை’ என்றார். அப்போது இந்த ஆறு லட்ச கிராமத்தினையும் வளர விடாமல் செய்து பட்டணத்தை மட்டும் ஊதி ஊதிப் பெருக்கி இருக்கின்றோம். பட்டணமும் இன்றைக்கு நன்றாக இல்லை. எவ்வளவு நகரமாக இருந்தாலும் ஒரு சிலர் வரைதான் தாங்கும். அப்போது பட்டிக்காட்டை வறட்சியில் தொடரவிட்டு விட்டோம் என்றால், எல்லா மக்களும் சாப்பாட்டிற்காக நகரத்தில் வந்து மோதுகிறார்கள். வேலை வாய்ப்பில்லை. வீட்டு வசதியில்லை. குடிப்பதற்கு நீர் இல்லை. மருத்துவ வசதி இல்லை. குழந்தைகளுக்கு பள்ளி வசதி இல்லை. மறுபடியும் என்ன செய்திருக்கிறார்கள். கிராமத்திலிருந்த சேரிகளுக்குப் பதிலாக பட்டணத்துச் சேரிகளை உண்டு பண்ணி இருக்கிறார்கள். ஆகவே மறுபடியும் இந்த ஆறுலட்சம் கிராமத்தினையும் வாழக் கூடிய பூமியாக மாற்றினோம் என்றால், பட்டணத்தில் ஏகப்பட்ட மக்கள் நெரிசலை கிராமத்திற்குத் தள்ளிவிடலாம். அப்போது பட்டணத்தில் இருப்பவர்களுக்கும் சேர்த்து இவர்கள் உற்பத்தி செய்வார்கள்.தீராநதி : ‘‘பயிர்கள் தானாக வளர வேண்டுமே தவிர, நாமாக வளர்க்கக் கூடாது. இயற்கையான வழிக்கே எல்லாவற்றையும் விட்டு விட வேண்டும். ஆனால் திடீரென்று இந்த எண்ணத்தை ஒட்டுமொத்தமாக நடைமுறைப்படுத்தினால் விளைவு நன்றாக இருக்காது. அதற்குப் பெயர் இயற்கை வேளாண்மை அல்ல; கை கழுவி விடுவது’’ என்று தன்னுடைய இயற்கை வேளாண்மை குறித்து மசானோபு ஃபுகோகா சொல்கிறார். அவர் இந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தன் நிலத்தை உழுவதை நிறுத்தியதைத் தொடர்ந்தும் அவர் நிலத்தின் வளம், அமைப்பு மற்றும் நீரைத் தக்க வைத்து கொள்ளும் மண்ணின் தன்மை வெகுவாக உயர்வதாக குறிப்பிடுகிறார். அவரது இயற்கை வேளாண்மையை அப்படியே இங்கு நடைமுறைப்படுத்த இயலாதென்ற போதிலும் ஃபுகோகாவின் இயற்கை வேளாண்மையிலிருந்து உங்களின் இயற்கை வேளாண்மை வேறுபட்டதா? கொஞ்சம் விளக்குங்களேன்?நம்மாழ்வார் : முதலில் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா விஷயத்தையும் எல்லா இடத்திலும் உற்பத்தி பண்ணலாம். ஆப்பிள் மரம் கூட நம்முடைய மண்ணில் வளர்ந்து விடுகிறது. ஆனால் காய்க்க மாட்டேன் என்கிறது. அதுபோல ஒன்று இரண்டு மரங்கள் தான் நம் சூழலுக்கு ஒத்துவராதே ஒழிய, மற்ற எல்லாவற்றையும் நம்முடைய மக்கள் வளர்த்து சாதித்து விட்டார்கள். திருச்சியை விட வெயில் அதிகமாக இருக்கக் கூடிய பட்டுக்கோட்டை பகுதியில் காப்பி விளைகிறது. லவங்கம் விளைகிறது. ஆல் ஸ்பைஸஸ் பிளாண்ட் விளைகிறது. கோகோ விளைகிறது. ஜாதிக்காய் விளைகிறது. பாக்கு விளைகிறது. இப்படி எல்லாவற்றையும் வளர்த்துக் காண்பித்து விட்டார்கள். இது எப்படிச் சாத்தியமென்று கேட்டீர்கள் என்றால், அது ஒரு இயற்கைச் சூழலில் வளர்கிறது. அதை ‘மைக்ரோ கிளைமேட்’ என்பார்கள். இப்போது நீங்கள் நல்ல வெயிலில் ரோட்டில் சைக்கிளில் பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். களைத்து விடுகிறீர்கள். உடனே சாலை பக்கத்தில் உள்ள வேப்ப மரத்தின் கீழ் உள்ள நிழலில் போய் நிற்கிறீர்கள். உடனே உங்களுக்கு குளுகுளு என்று இருக்கிறதில்லையா? உடனே உங்களின் களைப்பு போய் விடுகிறதல்லவா? அதற்குப் பெயர்தான் ‘மைக்ரோ கிளைமேட்’ என்கிறோம். ஒரு சின்ன இடத்தினால் கூட ஒரு வித்தியாசமான சூழலை நம்மால் உருவாக்க முடியும். பாலைவனத்தில் ஒட்டகத்தின் மீது செல்பவன் பக்கத்திலுள்ள நீர்ச்சுனை பக்கமாக நிற்பான். அதை பாலைவனச் சோலை என்பார்கள். ஒயாஸிஸ் என்றும் சொல்வார்கள். அங்கு இளைப்பாற அவனுக்கு நிழல் கிடைக்கிறது. அருந்த நீர் கிடைக்கிறது. சாப்பிட பேரீச்சம் பழம் கிடைக்கிறது. அவனுக்குத் தேவையான சகலமும் கிடைக்கிறது. மனிதன் அறிவை மட்டும் சரியாகப் பயன்படுத்தினான் என்றால் எங்கும் வாழ்வதற்கான சரியான சூழலை, அழகாக உருவாக்கிவிட முடியும். இதுதான் உங்களின் ஒரு பகுதி கேள்விக்கான பதில். அடுத்தது நாம் ஃபுகோகாவிற்குள் போவோம். ஃபுகோகாவினுடைய ‘ஒற்றை வைக்கோல் ‘புரட்சி’யை எல்லோரும் படித்திருக்கிறார்கள். அடுத்தாற்போல் வந்த இரு புத்தகங்களை யாரும் படிக்கவில்லை. ‘நேச்சுரல் வே ஆஃப் ஃபாமிங்’ என்ற புத்தகம் வந்திருக்கிறது. ‘ரோடு பேக் டு நேச்சர்’ என்ற புத்தகம் வெளி வந்திருக்கிறது. இந்த இரண்டு புத்தகத்திற்கு அடுத்து இப்போது ஒரு புது புத்தகம் கூட வெளி வந்து விட்டதென்று நினைக்கிறேன்.‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ புத்தகம் முழுக்க நெற் சாகுபடி பற்றி தான் பேசுகிறது. ‘நேச்சுரல் வே ஆஃப் ஃபாமிங்’ புத்தகத்தில் இயற்கை வழி பண்ணையம் பற்றிய ஏகப்பட்ட விஷயங்கள் பேசப்படுகிறது. முக்கியமாக ஜப்பானிலிருந்து எந்த இடத்தில் நாம் வித்தியாசப்பட்டு நிற்கிறோம் என்று கேட்டால், ஜப்பானில் 52 வாரம் மழை பெய்கிறது. இங்கே மூன்று மாதம் மட்டும்தான் மழை பெய்கிறது. இந்த மூன்று மாத மழையும் 45 நாட்களுக்குள் பெய்ந்து விடுகிறது. இங்கு தான் பெரிய வித்தியாசம் ஏற்படுகிறது. ஃபுகோகா பதினைந்து வருடங்கள் நிலத்தில் இயற்கை வழி விவசாயத்திற்கான வேலையைச் செய்து விட்டு அதற்குப் பிற்பாடு உழுவதை நிறுத்தி விட்டார். நாமும் உடனே நம்முடைய நிலத்தில் உழுவதை நிறுத்திவிட்டு விவசாயம் பண்ண முடியாது. ஃபுகோகா உழவேண்டாம் என்று சொல்லவே இல்லை. மண்புழுவும் புல் பூண்டுச் செடியின் வேர்களும் நிலத்தை இயற்கையாகவே உழுகிறதே பிறகு எதற்கு நீ தனியாக உழவேண்டும் என்று கேட்கிறார். இந்த ‘உழவு’ என்பது திருவள்ளுவரின் அதிகாரங்களில் வரக்கூடிய ஒரு தலைப்பு. உழவு என்றால் என்ன அர்த்தம்? ‘உழவு’ என்றால் துன்பம் என்று அர்த்தம். மழை பெய்து கொண்டிருக்கும்போது விவசாயி தலையில் ஒரு சாக்குப் பையைப் போட்டுக் கொண்டு நிலத்தை உழுது கொண்டிருப்பான். ஒரு மாதம் தொடர்ந்து மாடு உழுததென்றால், அதனுடைய கால் செக்கச் செவேல் என்று வெளுத்து விடும். அதன் கால் உரோமங்கள் எல்லாம் உதிர்ந்து விடும். குளம்பெல்லாம் தேய்ந்து போய்விடும். உழவு மாட்டிற்கே இவ்வளவு சங்கடங்கள். அப்போது விவசாயி மாடாக உழைக்கிறான். அதனால்தான் சிறப்பு என்று வள்ளுவர் சொன்னார். இதுதான் இனியது என்று சொன்னார். ‘‘சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை’’ என்கிறார். துன்பப்பட்டீர்கள் என்றாலும், அந்த உணவு சிறந்தது. ஏருக்குப் பின்னால்தான் உலகமே இருக்கிறது என்பதுதான் இதன் பொருள். ‘ஏர்’ என்றால் தமிழில் ‘அழகு’ என்ற இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. தன் நூலில் ஃபுகோகா டிராக்டரை ரொம்பவும் அழகாக தாக்குகிறார். ஒருவன் விடாமல் கண்விழித்து ஆராய்ச்சி செய்கிறான். கடைசியாக என்ன கண்டுபிடித்திருக்கிறான் என்றால் கிட்டப்பார்வைக்கு மூக்கு கண்ணாடி. ‘ஏன் அய்யா இவ்வளவு கண்விழித்து கண்களை கெடுத்துக் கொண்டு உடலையும் வருத்தி துன்பப்படுகிறீர்’ என்று கேட்டால் ‘கண்ணாடி கண்டுபிடிப்பதற்கு’ என்று பதிலளிக்கிறான். அதே போல பூமியை உப்பைப் போட்டு எவ்வளவு தூரம் கெடுக்க முடியுமோ அவ்வளவையும் கெடுத்து வைத்து விட்டு மாட்டு கலப்பையினால் இனி உழவே முடியாது என்கின்ற நிலை வரும் போது டிராக்டரைக் கொண்டு வந்து இறக்குகிறார்கள் என்று விமர்சிக்கிறார் ஃபுகோகா. மண்ணின் இயற்கை தன்மையைக் கெடுத்து விட்டு டிராக்டரைக் கண்டுபிடித்தீர்கள். டிராக்டர் ஓடுவதற்கு எண்ணெய் வேண்டுமே அதற்காக பூமியில் சுரங்கம் தோண்டி வேறு ஒரு பகுதியைக் கெடுத்தீர்கள். இதற்கு தேவையான இரும்புச் சாமான்களைச் செய்வதற்காக காட்டினை அழித்தீர்கள். ஆக, சுற்றுச் சூழலைக் கெடுத்துவிட்டுதான் இந்த டிராக்டரே வருகிறது. ஆனால் நம்ம மாடு உழும் போது சாணி போடுகிறது. அது மண்ணிற்குள் இறங்கி எருவாகிறது. அதனால்தான் ‘ஏர்’ என்பதை அழகு என்றார்கள் தமிழர்கள்.கிராமத்தில் சொல்வார்கள் ‘‘கோணக்கா மாணக்க மூணு பேரு கூட்டிப் பார்த்தா பத்து காலு’’ என்று. இரண்டு மாட்டையும் சேர்த்து எண்ணினால் எட்டுக் கால். அதை ஒட்டுபவனின் கால் இரண்டு. மொத்தம் சேர்த்தால் பத்து கால். ஆக, மாட்டை தனியாக நம்முடைய விவசாயி பிரித்துப் பார்க்கவில்லை. தன்னுடைய சொந்தமாகச் சேர்த்துப் பார்க்கிறான். அடுத்தது உங்களுடைய கேள்வியின் முக்கியமான பகுதிக்கு வருகிறேன். ஷப்பானில் மொத்தம் 12 மாதமும் மழை பெய்வதினால் அவர்கள் ஆறு மாதம் நெல் அல்லது பார்லியை விதைப்பது, ஆறு மாதம் கோதுமை விதைப்பது என்று பிரித்துக் கொண்டார்கள். நெல் அறுப்பதற்கு ஏழு எட்டு நாட்களுக்கு முன்னாலேயே கோதுமையை விதைத்து விடுவார்கள். அதேபோல் கோதுமையை விதைப்பதற்கு முன்னாலேயே நெல்லை விதைத்து விடுகிறார்கள். அப்போது உழுவதற்கே வேலை கிடையாது. நாற்று விடுவது தேவையில்லை. புடுங்கி நடவேண்டியதில்லை. பூமி எப்போதும் மூடியே இருக்கிறது. களை மண்டாது. அப்படியே நிலம் முன்னேறிவிட்டது. ஆனால் நமக்கு அப்படி இல்லை. மூன்று மாதம்தான் மழை. மீதியெல்லாம் வெயில், காற்று என்றிருக்கிறது. என்னுடைய கூட்டாளி ஆரோவில்லில் (பாண்டிச்சேரி பக்கமாக) இருக்கிறான். பெல்ஜியத்துக்காரன். அவனது பெயர் பெர்னார்டு டி கிளார்க். இந்த பெர்னார்டு டி கிளார்க்குதான் எனக்கு வழிகாட்டி. கிளார்க் என்ன செய்தார் என்றால், இங்கு நம்முடைய பருவநிலைக்குத் தகுந்த மாதிரி மூன்று பயிர் சுழற்சியைக் கொண்டு வர வேண்டும். கொண்டு வந்தார். அவரது முறைப்படி மழைக்காலத்தில் நெல்லை பயிர் செய்தார். அதற்கடுத்தது சோளமும் தட்டைப் பயிறும் பயிர் செய்தார். சோளம் நேராக விளைந்து நிற்கிறது. தட்டை அதைச் சுற்றிக் கொண்டு வளர்கிறது. சோளம் மண் சத்தை எடுக்கிறது. தட்டை பயிர் சத்தை சேர்க்கிறது. மூன்றாவது நல்ல வெயில் பருவம் வரும் போது வெறும் உரச் செடிகளை மட்டுமே விதைப்பது என்று திட்டமிட்டுக் கொண்டார். ஆக, பூமி எப்போதும் மூடியே இருக்கும். இதனால் மண் வளம் பெருகச் செய்கிறது. நாம் முன்னோர்கள் இப்படித்தானே பயிர் செய்தார்கள்.ஆக, நம்முடைய வரலாற்றையும் கலாச்சாரத்தையும் அடிப்படையாகக் கொண்டு மூன்று பயிர்த் திட்டமாக கொண்டு வந்தார் கிளார்க். ஃபுகோகா சொல்கிறார். ‘‘இயற்கைக்கு ஒரு விதி இருக்கிறது. இயற்கை கொடுத்ததைத் திருப்பி அளிப்போம். நெல்லை விளைத்தால் நெல்லை எடுத்துக்கொண்டு வைக்கோலைத் திரும்ப நிலத்திற்கே கொடுத்துவிடு. ஆக, வேண்டியதை எடுத்துக் கொண்டு வேண்டாததை இயற்கையிடம் திருப்பிக் கொடுக்கப் பழக வேண்டும். இன்றைக்கு மக்களுக்கு அரசாங்கம் கோடி கோடியாக செலவழிப்பதாகச் சொல்கிறது. ரோடு போடுகிறது. மின்சாரத்தைத் தயார் செய்து கொடுக்கிறான். தண்ணீர் சப்ளையெல்லாம் செய்து கொடுக்கிறான். ஆனால் விவசாயிகளுக்கு கிராமத்தில் தானியங்களை அடித்து உலர்த்துவதற்கு ஒரு களம் செய்து கொடுக்கவில்லை. விவசாயி தார் ரோட்டிற்குக் கொண்டு வந்து விரவி பஸ் லாரியை தானியத்தின் மீது ஓட விட்டு தானியத்தைப் பிரிக்க வேண்டிய நிலைமைதான் இன்னும் இருக்கிறது. இதனால் என்ன ஆகிறது? ரோட்டிலேயே வைக்கோலை போட்டுவிட்டு வந்து விடுகிறான். அடுத்த நாள் மாடு மேய்க்கப் போகும் சிறுவன் அவற்றிற்கு ‘தீ’ வைத்து எரித்துக் கொண்டிருக்கிறான். வைக்கோல் சத்து நிலத்திற்குப் போய்ச் சேரவில்லை. ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கொள்கை (அ) தத்துவம் என்றும் நடைமுறை என்றும் இரண்டு இருக்கிறது. நடைமுறை ஊருக்கு ஊர் வித்தியாசப்படும். ஆனால் கொள்கை ஊருக்கு ஊர் வித்தியாசப்படாது. உலகம் முழுவதும் ஒன்றுதான்.

தீராநதி : நம் மரபிலிருந்து அழிந்துபோன, அதாவது ரசாயன வேளாண்மையில் காணாமல் போன பல்வேறு வகைப்பட்ட தானியங்களை நம்மால் மறுபடியும் மீட்டெடுக்க முடியுமா?

நம்மாழ்வார் : எங்கள் ஊரில் இருந்த கோயில் மாடு திருடு போய்விட்டது. மூன்று வருடம் போராடி மாட்டை திரும்பக் கொண்டு வந்து விட்டார்கள். அதே போல நம்முடைய தானிய வகைகள் எல்லாம் பிலிஃப்பைன் நாட்டுக்குத் திருட்டு போய் இருக்கிறது. நம்முடைய விஞ்ஞானிகளை அனுப்பி வைத்தால் திரும்ப கொண்டுவந்து விடப்போகிறார்கள். நம்முடைய ஆட்களை வைத்துத் தானே அவர்கள் திருடி இருக்கிறார்கள். இந்தத் துணைபோன திருடனை அனுப்பி உண்மையான திருடனைப் பிடித்துக் கொண்டுவா என்றால் பிடித்துக் கொண்டு வருகிறான். நம்முடைய தானியங்கள் எல்லாம் இயற்கையாக அழிந்து போகவில்லை. திருடுதானே போய் இருக்கிறது.

தீராநதி : இதற்கு முன்னால் கூட ‘மான்சாண்டோ விதைகளை’ கொண்டு வந்து நம்முடைய நாட்டில் அறிமுகம் செய்தார்கள். தொடர்ந்து அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக வல்லரசு நாடுகள் அதற்கான வேலைகளை நடத்திக் கொண்டுதான் இருக்கின்றன. மனித சமூகத்திற்கே பெரும் கேடு என்று தெரிந்த ஒரு விஷயத்தை, ஒரு சாதாரண சாமான்யன் கூட புரிந்து கொள்ளக் கூடிய ஒரு விஜயத்தை, நம்முடைய அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ளாமல் போவது ஏன்? 123 அணு ஆயுத ஒப்பந்தத்திற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அளவுக்குக் கூட இந்த பிரச்னைகளுக்குக் கொடுக்கப்படுவது இல்லையே அது ஏன்?

நம்மாழ்வார் : இதற்கு பதிலை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள்தான் ரொம்ப படிக்கக் கூடிய ஆளாக இருக்கிறீர்கள். அதாவது நம்மூரில் நிறைய வட்டிக் கடைகள் எல்லாம் இருக்கிறது. இதற்கு ‘பேங்க்’ என்று பெயர் வைத்திருக்கிறோம். இந்த பேங்க் என்பது எங்கிருந்து வந்தது என்பதை நான் அறிந்து கொண்ட போது ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. 1985_ல் நான் இங்கிலாந்து சென்றிருந்தபோது ஒரு நண்பர் என்னைக் கூப்பிட்டுக் கொண்டு போய் ஒரு ஏரிக்கரையை காண்பித்தார். அந்த ஏரிக் கரைக்குக் கீழாக நிறைய தரிசு நிலங்கள் இருந்தன. ‘இதுதான் எங்கள் காலத்தில் சந்தையாக இருந்தது. இந்த ஏரியினுடைய கரை இருக்கிறது பாருங்கள், அதற்கு பெயர் பேங்க். இந்தக் கரைக்கு பக்கத்தில் ஒரு காய்ந்து போன மரம் கிடக்கும். அந்த மரத்தின் மீதமர்ந்து இரண்டு நபர்கள் காலையில் சந்தைக்கு வரும் விவசாயிகளுக்குக் கடன் கொடுப்பார்கள். சாயுங்காலம் விவசாயி வட்டியுடன் கொண்டு வந்து தொகையைத் திரும்பக் கொடுப்பான். அதான் ‘பேங்க்’கிலிருந்து பணம் போனது. ‘பேங்க்’கிலிருந்து பணம் வந்தது. ஆக, ‘பேங்க்’ என்றால் ஏரிக்கரை. ஏரிக்கரையில் உட்கார்ந்து வட்டிக்குக் கொடுத்து வியாபாரம் பண்ணவன் இன்றைக்கு கோடி கோடியாக மாளிகைகள் எல்லாம் கட்டிக் கொண்டு எங்கெங்கோ இருக்கிறான். அத்தனை பேர்களும் வட்டிக் கடைக்காரர்கள். வட்டிக்கடை வைத்திருப்பவன் எந்த உழைப்பும் செய்வதில்லை. சட்டை காலரில் அழுக்குப்படாமல் உழைக்கிறான் அவன். அதே போல நாம் உலக வங்கியில் கடன் வாங்கினோம். அவனுக்குக் கடன் பட்டிருக்கிறோம். இங்கு விளைந்ததை விற்று அவனுக்கு இன்னும் வட்டியையே கட்டிக் கொண்டிருக்கிறோம். ஆக, அவன் உழைக்கவே வேண்டாம். நாம் சுகமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் யாராவது உழைக்க வேண்டும். நம்ம வயிறு நிரம்ப வேண்டும். அது அவர்களின் கொள்கையாக இருக்கிறது. இதை வேறு மாதிரி சொன்னோம் என்றால், பேங்கில் இருக்கும் அதிகாரி என்ன சொல்கிறான் ‘ஒரு திட்டத்தைக் கொண்டு வாருங்கள். நான் பணம் தருகிறேன்’ என்கிறான். அதே மாதிரி ஒரு திட்டத்தை நாம் கொண்டு போனால், ‘உங்களின் திட்டம் 30 சதவீதம் லாபம் வரும் என்று வாக்குறுதி தந்தால்தான் அதற்கு நான் பணம் கொடுப்பேன்’ என்கிறான். அப்போது லாபம் சம்பாதிப்பவனுக்கு மட்டும் தான் பணம் தருவான் ‘பேங்க்’காரன். ஆக, முப்பது சதவீதம் லாபம் கிடைக்கும் என்றால் எவனாக இருந்தாலும் கடன் வாங்கி தொழிலைத் தொடங்குவான். 50 சதவீதம் லாபம் வரும் என்றால் சட்டத்தை மீறுவான். 100 சதவீதம் லாபம் கிடைக்கும் என்றால் கொலை செய்வான். 200 சதவீதம் லாபம் வருமென்றால் தானே செத்தாலும் பரவாயில்லை என்று அக்குற்றத்தைத் துணிந்து செய்வான். இதுதான் அரசியல் பொருளாதார கொள்ளை. அது இன்றைக்கும் சரியாக இருக்கிறது. ஆக, வரப்போகும் லாபம் தான் ஒருவன் எப்படி நடந்து கொள்வான் என்பதைத் தீர்மானிக்கிறது.

தீராநதி : இதுபோல வர போகும் கேடுகளை ஏன் நம்முடைய விஞ்ஞானிகள் முன் கூட்டியே அரசிடம் எடுத்துச் சொல்லக் கூடாது?

நம்மாழ்வார் : நாம் தான் இங்கு தப்பு செய்கிறோம். விஞ்ஞானம் என்ன செய்யுமென்றால், ஒன்றை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைத் தான் சொல்லும். ஆனால் ஒரு இலக்கியவாதிதான் ஏன் செய்ய வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டும். அதனால் இலக்கியவாதிகள் தான் விஞ்ஞானிகளுக்கு யோசனை சொல்ல வேண்டுமே தவிர, விஞ்ஞானிகள் இலக்கியவாதிகளுக்கு யோசனையைச் சொல்லக் கூடாது. கனடாவில் உள்ள ஒரு விஞ்ஞானி என்ன சொல்லி இருக்கிறான் தெரியுமா? ‘‘இந்த விஞ்ஞானிகள் செய்வதற்காக நான் வெட்கப்படுகிறேன்’’ என்று சொல்லி இருக்கிறான். விஞ்ஞானிகள் வரலாற்றைப் படிக்காமல் விஞ்ஞானத்தைக் கையில் எடுக்கக்கூடாது. வரலாற்றில் இரண்டு பெரிய தவறுகள் நடந்திருப்பதாக கனடா நாட்டு விஞ்ஞானி சுட்டிக் காட்டுகிறார். ஒன்று : 1938_39 DDT என்று ஒரு விஜத்தைக் கண்டுபிடித்தார்கள். அந்த DDT விஷத்தை கிணற்றில், ஆற்றில் கலந்து விட்டால் எதிரிகள் நம்மீது படையெடுத்து வரும்போது அந்த தண்ணீரைப் பருகிவிட்டு இறந்து விடுவார்கள். அல்லது குடிக்க முடியாமல் திரும்பி விடுவார்கள். அந்த விஜத்தைக் கண்டுபிடித்து உயிரியைக் கொலை செய்யுமா என்று தெரிந்து கொள்வதற்காக பூச்சியின் மீது தெளித்தான். பூச்சி செத்து விட்டது. ஆனால் 1945_ல் போர் முழுக்க நின்று போய் விட்டது. உடனே இதை பூச்சி மருந்து என்று சொல்லி உலகம் முழுவதும் பரப்பினார்கள். ஆனால் தயாரித்தது எதற்கு? ஆட்களைக் கொல்வதற்கு. இந்த விஜத்தைக் கண்டுபிடித்தவன் பெயர் Paul Muller. இந்த Paul Muller1948_ல் நோபல் பரிசையே கொடுத்தார்கள். மனித மேம்பாட்டிற்காக பாடுபட்ட விஞ்ஞானி என்று சொல்லி விருதைக் கொடுத்தார்கள். 1960_61_ல் என்ன தெரிய வந்ததென்றால், அந்த மருந்து மனிதனையெல்லாம் கொல்கிறது என்று தெரிய வருகிறது.அமெரிக்காவில் உள்ள மரத்தின் மீது வண்டுகள் இருக்கிறது என்பதற்காக ஹெலிகாப்டரில் கொண்டு சென்று மரத்தின் மீது இந்த மருந்தை தெளித்தார்கள். அந்த மரத்தின் இலை பட்டு கீழே விழுந்ததை தின்று மண்ணில் இருந்த மண்புழு செத்து விட்டது. செத்த மண்புழுவைத் தின்ற பறவை செத்துப் போனது. ‘ராபின்’ என்ற ஒரு பறவை அங்கிருந்தது. அது என்ன செய்யுமென்றால் பனிகாலம் வரும் போது நாட்டை விட்டு வெளியில்போய் விடும். வசந்த காலம் வரும் போது சத்தம் போட்டுக் கொண்டு நாட்டிற்குள் திரும்பும். ஆக, வசந்தம் வரப்போகிறது என்று ‘கட்டியம்’ கூறக் கூடிய பறவை அது. இப்போது அந்தப் பறவையையே அங்கு காணோம். இதையெல்லாம் பார்த்து விட்டு கடல் விஞ்ஞானி ராச்சேல் கார்சன் என்பவள் ஒரு புத்தகத்தை எழுதினாள். எழுதிய அடுத்த வருடமே அவள் கேன்சர் நோயினால் இறந்து போனாள். DDT என்ன செய்யுமென்றால், நம்முடைய உள்ளுறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி விந்து சுரப்பதையே நிறுத்தி விடும். உள்ளுக்குள்ளே புற்று நோயை வளர்க்கும். அந்தப் புத்தகத்தைப் படித்த அந்நாட்டு மக்கள் அபாயத்தை உணர்ந்து பின் போராடி அதைத் தடுத்து நிறுத்தினார்கள். அவர்களின் தேசிய பறவை வழுக்கை தலை கழுகு காணாமல் போய்விட்டது. ஹெலிகாப்டரில் தெளிக்கும் மருந்து மரத்தின் மீது மட்டுமே விழாது. அது பக்கத்தில் இருக்கும் ஆறு, ஏரிகளின் மீதும் விழும். அப்படி விழுந்து நீரில் கலந்த அந்நீரைப் பருகிய மீன்கள் நோய்வாய் பட்டு மெதுவாக நீந்தின. அதை சுலபமாக வேட்டையாடி உண்ட கழுகுகள் இறந்து போயின. இவ்வளவு பெரிய தீங்கை கண்டுபிடித்த விஞ்ஞானிக்குத்தான் நாம் நோபல் பரிசை கொடுத்திருக்கிறோம். அதே போல குளோரோ ஃபுளோரோ கார்பன் வாயுவைக் கண்டுபிடித்தவனுக்கு பரிசு கொடுத்தார்கள். இதைத் தான் ஏர் கண்டிஷனில் எல்லாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாயுதான் ஓசோன் மண்டலத்தை ஓட்டை போடுகிறது. இந்த வாயு காற்றை விட லேசானது. அதனால் அது ஓசோன் திரையைக் கிழித்துக் கொண்டு மேலே போகிறது. ஓசோன் என்றால் என்ன அர்த்தம்? ஆக்ஸிஷன் அடர்த்தியாக இருக்கிறதென்று அர்த்தம். ‘ஓ’ என்றால் ஆக்ஸிஜன். பொதுவாக ‘ஓ’ என்பது இரண்டாக (O2) இருக்கும் இதில் ‘ஓ’ மூன்று அனுவாக இருக்கிறது. இந்த வாயு ஓசோனின் காற்றுத் திரையைக் கிழித்துக் கொண்டு மேலே போகும் போது குளோரின் தனியாகப் பிரிந்து விடுகிறது. பிரிந்ததும் கனமாகி கீழே இறங்குகிறது. அப்போது ஓசோனை ஓட்டை போடுகிறது. இதனால் என்ன நடக்கிறது. சூரியக் கதிர்கள் வடிக்கப்படாமல் கீழே இறங்குகின்றன. அதனால் நமது தோலில் புற்றுநோய் உண்டாகிறது. ஆக, விஞ்ஞானம் என்றாலே முன்னேற்றமானது என்று நினைப்பவனை விட முட்டாள் வேறு ஒருவன் இருக்க மாட்டான். முன்னேற்றமாகவும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். அதான் சரி.தீராநதி : பறவைகளின் இறப்பு குறித்து சொன்னீர்கள். மாலத்தீவில் ‘கல்வேரிய மேஷர்’ என்ற மரங்கள் சமீப காலமாக புதியதாக எதுவும் முளையவே இல்லை. எல்லாம் முன்னூறு ஆண்டுகள் பழமையான மரங்கள்தான் இருக்கிறது. ஏன் என்று ஆராய்ந்த போது அம்மரத்தின் விதைகள் தானே மண்ணில் விழுந்தால் முளைப்பது கடினம். அதுவே டோடோ (DODO) என்ற ஒரு பறவை உண்ட பிற்பாடு அதன் கழிவிலிருந்து வெளியேறும் விதைக்குத்தான் முளைக்கக்கூடிய வீரியம் இருக்கிறது என்று கண்டுபிடித்தார்கள். இன்றைக்கு DODO முற்றிலுமாக அழிந்து விட்டது. ஆகவே அம்மரங்கள் புதியதாக முளைக்கவே இல்லை என்பதும் தெரிய வந்தது. இங்கிருக்கும் ஆலமரத்திற்கும் வேம்பிற்கும் கூட இந்த ‘விதிகள்’ பொருந்தும். இந்த மாதிரி இயற்கை சுழற்சியின் வளையத்தை மனிதர்கள் எந்த அளவிற்கு நாசப்படுத்தி இருக்கிறோம் என்று சொல்லுங்களேன்?நம்மாழ்வார் : DODO பறவை எப்படி செத்ததென்று நீங்கள் சொல்லவில்லையே?

தீராநதி : தெரியவில்லை. சொல்லுங்கள்?

நம்மாழ்வார் : மாலத்தீவில் அந்த DODO பறவைகள் ரொம்ப சுகமாக வாழ்ந்து கொண்டிருந்தன. இந்துமகா கடலில் மாலத்தீவு என்பது ரொம்ப அழகாக இருக்கிறதென்று நிறையப் பேர் சுற்றுலாவிற்குச் சென்றார்கள். அப்படிப் போனவர்கள் நல்ல சுகத்தை அனுபவித்தார்கள். போனவர்கள் சும்மா போகவில்லை. துப்பாக்கியுடன் போனார்கள். இந்தப் பறவைகளுக்கு இவர்கள் தன்னைச் சுடுவார்கள் என்று தெரியாததால் அது சாதுவாக உட்கார்ந்திருந்ததால் அதை சுட்டுச் சுட்டே தின்றார்கள். அப்படியே ஒரு பறவை கூட மிச்சமில்லாத அளவிற்கு சுட்டுச் சுட்டு தின்றிருக்கிறார்கள். இப்போது தான் அவர்களுக்குத் தெரிய வருகிறது DODO இல்லை என்றால், கல்வேரியமரங்கள் முளைக்காதென்று.

தீராநதி : நம்முடைய நாட்டுப் பிரச்னைக்குள்ளாக வருவோம். ஒரு காலத்தில் தான் உண்டதுபோக இருக்கும் தானியங்களை வியாபாரம் செய்தார்கள் நம் முன்னோர்கள். அதில் ஒரு நியாய தர்மம் இருந்ததாக நாம் இன்று படிக்கிறோம். ஆனால் இன்றைய சந்தையில் கிடைக்கும் சகல பொருட்களிலும் கலப்படம் கலப்படம். எதிலும் ஒரு நம்பகத் தன்மையற்ற வியாபாரமே நடக்கிறது. ரசாயன முறையில் தவறுகளைச் செய்வதற்கென்றே இன்றைக்கு இயந்திரங்கள் எல்லாம் கூட விலைக்கு வந்துவிட்டன. இதன் மூலம் வியாபாரி அதிக லாபம் அடையலாம்? இப்படி நாணயமற்ற ஒரு போக்கு நம் சமூகத்திற்குள் எப்படிப் புகுந்தது?

நம்மாழ்வார் : நம்முடைய சமுதாயம் என்றைக்கு நீதியாக வாழ்ந்த தென்று நீங்கள் சொல்கிறீர்கள்? அசோகனின் அப்பன் பிந்துசாரன் இருந்தான் பாருங்கள் அவனும் புத்தனும் நண்பர்கள். அப்படி இருந்தும் அசோகன் தொடர்ந்து கொலை செய்து கொண்டே வருகிறானே? எங்கே நீதியாக இருந்தது நம் சமூகம்? நாடு முழுவதும் எப்போது பார்த்தாலும் போராட்டம்?. ‘இவன்’ அவனை வெட்டுவது. ‘அவன்’ இவனை வெட்டுவது. அந்தக் காலத்திலிருந்து இன்று வரைக்கும் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறார்கள். ஆக, நீதி என்ற ஒன்று வரவேண்டுமென்றால், அது இனிமேல்தான் வர வேண்டும். இராஷராஷசோழன் காலத்தில் தண்டனை இது : மழை பெய்யவில்லை. பூமி விளையவில்லை என்று வைத்து கொள்ளுங்கள். என்ன செய்வார்களென்றால் குடிசையில் இருக்கின்ற வெண்கல பாத்திரங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு குடிசைக்குத் தீயை வைத்து விட்டு அவனுக்கு சிவ துரோகி என்று பட்டம் கட்டி நாடு கடத்திவிடுவார்கள். இது தஞ்சை பெரிய கோயிலின் கல்வெட்டில் எழுதி இருக்கிறது. நிலத்தையெல்லாம் சிவனின் சொத்தாக எழுதி வைத்துவிட்டார்கள். குத்தகை கொடுக்கவில்லை என்றால் சிவனுக்குத் துரோகம் செய்துவிட்டதாக அர்த்தம். சிவனுக்குத் துரோகம் செய்தவனுக்கு தண்டனை என்னவென்றால், ‘‘மண் கலம் உடைத்து பொன் கலம் எடுத்து குடிசைக்கு தீ வைத்து சிவதுரோகி பட்டம் சூட்டி நாடு கடத்துதல்’’ இதுதான் தண்டனை. அப்போ என்றைக்கு நீதி இருந்திருக்கிறது?

தீராநதி : பொத்தம் பொதுவாக எல்லாம் அநீதியானவர்கள் என்று தீர்ப்பெழுதுவது சரியானதா?

நம்மாழ்வார் : பாரதியார் சொன்னதை எடுத்துக் கொள்ளுங்களேன். ‘‘உழுது விழித்து அறுப்பாருக்கு உணவில்லை. பொய்யைத் தொழுது அடிமை செய்வார்க்கே செல்வமெல்லாம் உண்டு’’ என்று நான் சொல்லவில்லை பாரதியார்தான் சொல்லி இருக்கிறார். எங்கே இருந்திருக்கிறது நல்ல சமூகம்?

தீராநதி : சரி, இன்றைக்கு இருக்கும் வியாபார சமூகத்தை எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள்?

நம்மாழ்வார் : உலகத்திலேயே முதன்முதலாக உழைக்காமலே சாப்பிட்ட கூட்டம் வியாபாரிகளின் கூட்டம்தான். பாண்டிச்சேரியில் டூப்ளேவுக்கு சிலை வைத்திருக்கிறார்கள். பண மூட்டைகளாக அடுக்கி அதன் மீது உட்கார்ந்து இருப்பான் டூப்ளே. பணம் குவிப்பதற்காக இங்கு வந்தான் அவன். பணம் குவித்துக்கொண்டு போகிறான் அவன். ஆனால் இந்த நாட்டில் குடிமகன் என்று சொல்லிக் கொள்பவன் டூப்ளே வைப்போல நடந்து கொண்டான் என்றால் இவனும் கொள்ளைக்காரன் போலவே நடந்து கொள்கிறான் என்றே அர்த்தம்.

கி.அ. சச்சிதானந்தன்


கி.அ. சச்சிதானந்தத்தினை நேர்காணல் செய்ய முடிவு செய்ததே அவருடன் பழகிய இலக்கிய நண்பர்களின் நினைவோடைக்காகத்தான். அதற்காக அதனளவில் மட்டும் முக்கியத்துவம் பெறும் படைப்பாளியே இவர் என்ற முடிவுக்கு நாம் வந்துவிடக் கூடாது. அதையும் தாண்டி தனிப்பெரும் ஆளுமை சச்சி. பலகாலம் நாடோடியைப் போல ஊர் சுற்றித் திரிந்தவர். எவரெஸ்ட் சிகரத்திற்கு பயணித்த முதல் தமிழர். தேர்ந்த தத்துவப் பிரியர். ஜே. கிருஷ்ணமூர்த்தியின்பால் ஈர்க்கப்பட்டவர். நோபல் பரிசுபெற்ற `சாமுவேல் பெக்கட்'டின் `கோடோவிற்காக காத்திருத்தல்' (நாடகம்), தாகூரின் சித்ரா (நாடகம்), ரோசா லக்சம்பெர்கின் சிறைக்கடிதங்கள், பனிமலைப் பிரதேசத்துக் கதைகள், கல்மாளிகை (மராட்டி நாடகம்) போன்றவற்றை தமிழுக்குக் கொண்டுவந்து சேர்த்தவர். சாகித்ய அகாடமிக்காக `மௌனி'யை பற்றி மோனாகிராப் எழுதியவர். கூடவே மௌனியின் மொத்த சிறுகதைகளையும் பதிப்பித்தவர்.`நடை' - இதழ் தொகுப்பு, `இலக்கிய வட்டம்'- இதழ் தொகுப்பு இவற்றின் தொகுப்பாசிரியர். இதுவரை `அம்மாவின் அத்தை' `உயிர் இயக்கம்' (தமிழினி) ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.பி.ஆர். ராஜம் ஐயர் அவர்களின் ‘Rambles in Vedanta என்ற எளிய வழி ஆங்கில வேதாந்த நூலைக் கொண்டுவந்தவர். அதனால் பெரும் தொகையை இழந்தவர். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இலக்கிய பரப்பில் ஜம்மென்று இயங்குபவர். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாத எளியர். வயிறு புண்ணாகிப் போகும் அளவிற்கு குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் குறும்பர். தீராநதிக்காக கோபாலபுரத்திலுள்ள அவரது வீட்டில் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுதில் சந்தித்தோம். மாலை வரை உரையாடல் நீண்டது. பசி மயக்கத்திலும் ருசியாகப் பேசினார்சச்சி
.தீராநதி : நவீன தமிழிலக்கியப் பரப்பில் `எழுத்து' காலகட்டத்தின் பிரதிநிதிகளில் ஒருவராக நீங்கள் இன்றைக்கு அடையாளம் காணப்படுகிறீர்கள். அதைத் தொடர்ந்து சமகால இலக்கியப் போக்குகள் வரை ஒரு தொடர்ச்சியான தொடர்பை வைத்தும் இருக்கிறீர்கள். உங்களின் பின்புலத்திலிருந்து ஆரம்பிப்போமா?
கி.அ. சச்சிதானந்தம் : ஹைஸ்கூல் வரைக்கும் நான் செங்கல்பட்டில்தான் படித்தேன். என் சின்ன வயசிலேயே எங்கள் அப்பா இறந்துவிட்டார். அவர் இறந்தபிறகு குடும்பத்தில் ரொம்பக் கஷ்டம். செங்கல்பட்டில் நாங்கள் மேட்டுத் தெருவில்தான் குடியிருந்தோம். எங்கள் வீட்டிலிருந்து நான்கு ஐந்து வீடுகள் தள்ளி ஒருவர் மளிகைக் கடை வைத்திருந்தார். அந்தக் கடைக்குப் போய் நான்தான் வீட்டிற்குத் தேவையான மளிகைச் சாமான்களை வாங்கி வருவேன். அவரிடம் கல்கி, ஆனந்த விகடன் எல்லாம் வரும். அந்தப் பழைய புஸ்தகங்களைக் கிழித்து பொட்டலம் கட்டிக் கொடுப்பார். அதை நான் படித்துக் கொண்டே இருப்பேன். என்னுடன் இருந்த பசங்கள் எல்லோரும் சினிமாவுக்குப் போவார்கள். என்னிடம் சினிமாவுக்குப் போக காசு கிடையாது. அதனால் ஓசியில் இந்த மாதிரி படிப்பது மனசுக்குப் பிடித்த விஷயமாக இருந்தது. அதே போல எனக்கு சின்ன வயசில் பகல் கனவு காண்பது ரொம்ப விருப்பம். மேட்டுத் தெரு பக்கத்தில் ஒரு சின்ன குன்று இருந்தது. அங்கு தனியாக உட்கார்ந்து கொண்டு ஏதாவது பகல் கனவு கண்டு கொண்டிருப்பேன். அங்கு மாடு மேய்க்கும் பசங்களோடு உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருப்பேன். காட்டு களாக்காய் பறித்துத் தின்று கொண்டே அந்த மாடு மேய்க்கும் பசங்களோடு ஊர் சுற்றித் திரிவேன். இதனால் சின்ன வயசிலேயிருந்தே தனியாகப் போக வேண்டும், தனியாக ஊர் சுற்ற வேண்டும் என்ற ஆவல் வந்துவிட்டது.இந்தச் சமயத்தில் செங்கல்பட்டு ஆஸ்பத்திரி பக்கத்தில் ஒரு நூலகம் இருந்தது. நீங்கள் நம்பினால் நம்புங்கள். என்னுடைய 12 வயதுக்குள் வை.மு. கோதைநாயகியின் எல்லா நாவல்களையும் படித்துவிட்டேன். புரியுதோ இல்லையோ எல்லாவற்றையும் படித்தேன். அவரின் 90 புஸ்தகம் முழுக்க படித்துவிட்டேன். அதே போல அந்தக் காலத்தில் ரொம்பவும் புகழ்பெற்ற ஆரணி குப்புசாமி முதலியாரின் துப்பறியும் நாவல்கள் முழுவதையும் படித்துவிட்டேன். இந்த நேரத்தில் படித்த மேஜர் புஸ்தகம் என்றால் அது சரத்சந்தர் எழுதிய `தேவதாஸ்'தான். அதைப் படித்துவிட்டு இரண்டு நாள் `ஓ'வென்று அழுதிருக்கிறேன். இப்படி கண்ட புஸ்தகங்களை படித்தேன். அதே மாதிரி விளையாட்டிலும் எனக்கு ஈடுபாடு இருந்தது. வாலிபால் விளையாடுவேன். கிரிக்கெட் விளையாடுவேன். ஆக எனக்கு சின்ன வயசு பொழுதுபோக்கு என்றால் ஒன்று: விளையாடுவது. இரண்டு: படிப்பது. சின்ன வயசிலேயே பள்ளிக்கூட படிப்பு என்றாலே எனக்குப் பிடிக்காது. பரீட்சைக்கு நான்கு நாட்கள் முன்னால்தான் நான் படிப்பேன். அதே ஞாபகத்தில் இருக்கும். அதை வைத்தே எழுதி பாஸ் பண்ணிவிடுவேன். பரீட்சைக்காகத்தான் பாட புஸ்தகத்தை கையிலெடுப்பேனே ஒழிய மற்ற நேரங்கள் முழுக்க கதைப் புஸ்தகத்தைத்தான் படித்துக் கொண்டிருப்பேன். பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு எங்கள் குடும்பம் காஞ்சிபுரத்திற்கு மாறியது. அங்கு வந்த பிறகு பச்சையப்பன் கல்லூரி இன்டர் மீடியட்டில் சேர்ந்தேன். அப்போது செட்டித் தெருவில்தான் பச்சையப்பன் கல்லூரி இருந்தது.. அதற்கு எதிரில் `திராவிட நாடு' ஆபீஸ் இருந்தது `திராவிட நாடு' ஆபீஸ் முன் திண்ணை இருக்கும். திராவிட நாட்டிற்கு வருகின்ற பத்திரிகைகளையெல்லாம் அந்தத் திண்ணையில் போட்டுவிடுவார்கள். அப்போது அண்ணா அங்கேதான் இருந்தார். மதிய உணவு இடைவேளை ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை அங்கேபோய் அங்குள்ள பத்திரிகைகளைப் படிப்பேன். இப்படி படிக்கும் காலத்தில்தான் எனக்கு தாகூர் மீது ஒரு பைத்தியம் பிடித்தது. இதோடு கல்கி, அகிலன் போன்றவர்களையும் படிக்க ஆரம்பித்தேன். கல்லூரியில் இருந்த நூலகத்திற்குச் சென்று படிப்பேன். அப்போது அங்கு பேராசிரியராக நா.சஞ்சீவி இருந்தார். அப்போது நானும் என்னுடைய அண்ணனும்தான் இன்டர்மீடியட் படித்துக் கொண்டிருந்தோம். அதனால் இருவருக்கும் சேர்த்து ஒரு புஸ்தகம்தான் வாங்குவோம். ஒரு நாள் சஞ்சீவி முதல் வகுப்பு `அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்' என்ற கபிலரின் புறநாறூற்றுப் பாடலைதான் எடுத்தார். பாடம் நடத்திக் கொண்டே வரும்போது திடீரென்று யார் யாரிடம் புஸ்தகம் இல்லை என்றார். சிலர் எங்களிடம் புஸ்தகம் இல்லை என்றார்கள். உடனே அவர்களை வெளியே போ என்று சொல்லி அனுப்பிவிட்டார். என்னிடமும் புஸ்தகம் இல்லை. ஆனால் நான் சொல்லாமல் உட்கார்ந்திருந்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் என்னிடம் புஸ்தகம் இல்லை என்பதை சஞ்சீவி கண்டுபிடித்துவிட்டார். என்னை எழுந்திருங்கள் என்றார். எழுந்தேன். ``புஸ்தகம் இல்லாதவர்களை வெளியில் போகச் சொன்னேன். நீங்கள் ஏன் போகவில்லை'' என்றார். நான் சண்டை போட்டுக் கொண்டு வெளியில் வந்துவிட்டேன்.அருமையாக அவர் பாடம் நடத்தும்விதமே ரசிக்கும் விதமாக இருக்கும். அந்த வகுப்பறை ஒரு வீடு என்பதனால் வெளியில் வந்த நான் வகுப்பறைக்கு வெளியிலுள்ள படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு பாடம் கவனித்துக் கொண்டிருந்தேன். வகுப்பு முடிந்து வெளியில் வந்த அவர் ``உன்னை வெளியில் போகத்தானே சொன்னேன்'' என்றார். உடனே எனக்கு கோபம் வந்துவிட்டது. இருந்தும் பேசாமல் போய்விட்டேன். இரண்டாம் நாள் ``புஸ்தகம் வாங்கி வந்தாயா'' என்று கேட்டார். நான் இல்லை என்றேன். ``ஏன் நீங்க தகராறு செய்கிறீங்க'' என்றார். உடனே நான் கோபத்தில் ``புஸ்தகம் வாங்கவிலலையினாலும் உங்களுக்கு நான் பீஸ் கட்டுகிறேன். பாடம் கேட்க எனக்கு உரிமை இருக்கு'' என்றேன். என்னடா இவன் தகராறு பிடிச்சவன்போல என்று என்னை ஓய்வறைக்கு வா என்றார். உடனே நான் ``சார், எங்கிட்ட இரண்டு புஸ்தகம் வாங்க காசில்லை. எங்க அம்மா தமிழ், இங்கிலீஷ் புஸ்தகம் இரண்டு பேருக்கும் சேர்த்து ஒண்ணுதான் வாங்கித் தருவாங்க'' என்றேன். கூடவே ``நீங்கள் பாடம் நடத்தும் விதம் எனக்குப் பிடிச்சிருக்கு. அதற்கு நான் பீஸ் கட்டுகிறேன். பாடம் கேட்க எனக்கு உரிமை உண்டு'' என்றேன். உடனே என் நிலைமையைப் புரிந்து கொண்டு அவரே புஸ்தகம் வாங்கிக் கொடுத்தார். கல்லூரி லைப்ரரி பற்றிச் சொன்னேன் இல்லையா? அங்கிருக்கும் லைப்ரரியனுக்கு முக்கியமான வேலை என்ன தெரியுமா? லைப்ரரிக்கு வருகின்ற பசங்களை போய் பாடப் புஸ்தகங்களை படிங்கடா என்று துரத்தியடிப்பதுதான்.பம்மல் சம்பந்தமுதலியார் இருக்கின்றார் தெரியுமா? அவர் இருநூறு புஸ்தகம் எழுதி இருக்கிறார். அந்த புஸ்தகம் எல்லாம் அந்த லைப்ரரிக்கு வரும். ஒரு டிக்கெட் வைத்துக் கொண்டு புஸ்தகம் வாங்கி படித்துவிட்டு மறுநாளே போய் திருப்பிக் கொடுப்பேன். ``இதுல பதிநாலு நாள்தானே கெடு போட்டு இருக்கு உடனே திருப்பி வேற புஸ்தகம் கேட்குற'' என்று லைப்ரரியன் வம்பு பண்ணுவார். உடனே நான் சண்டை போட்டுக் கொண்டிருப்பேன். அப்படி சண்டை போடும்போது ஒருநாள் சஞ்சீவி பார்த்துவிட்டார். விசாரித்தபோது விஷயத்தை அவரிடம் சொன்னேன். உடனே அவர் இந்தப் பையனுக்கு மட்டும் என்னுடைய கணக்கில் எவ்வளவு புஸ்தகம் கேட்டாலும் கொடுங்கள் என்றார். இப்படி சின்ன வயசிலிருந்தே தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தால் உங்களுக்கென்று ஒரு தனியான கற்பனையான உலகம் உருவாகிவிடும். பிறகு உங்களுக்கு நிஜ உலகத்தைப் பற்றி எந்தக் கவலையும் இருக்காது. தனிமை விரும்பியாகிவிடுவீர்கள் நீங்கள். அந்தக் காலத்தில் காஞ்சிபுரத்தில் பெரிய ஏரி ஒன்றிருந்தது. அந்த ஏரியைச் சுற்றி பனைமரக்காடு இருந்தது. அந்தக் காட்டில் தனியாளாக சுற்றித் திரிவது மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். மதிய நேரத்தில் யாருமே இல்லாத பனைமரக் காட்டில் அந்தப் பனை மரங்கள் காற்றில் சப்தமிட்டு சலசலக்கும் ஓசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதற்காகவே நிறைய ஊர் சுற்றுவேன். கல்லூரி விடுமுறை நாட்களில் புஸ்தகம் கிடைக்காதில்லையா... அந்த மாதிரி நேரத்தில் இதுபோல சுற்றுவது பிடித்தது. அப்போது ஒரு நண்பன் ``ராமகிருஷ்ண மடம் இங்கே இருக்குடா, அங்கே நிறைய புஸ்தகமெல்லாம் இருக்குடா'' என்றான். உடனே அடிச்சுபிடிச்சு மூன்று கிலோ மீட்டர் போய்ப் பார்த்தால் ``வெளியில் எல்லாம் எடுத்துக்கிட்டு போகக்கூடாது. இங்கே மடத்துக்குள்ளயேதான் படிக்கணும்'' என்று அங்குள்ள சாமியார் சொன்னார். மடத்தில் என்னோட ரசனைக்குத் தகுந்த மாதிரியான கதைப் புஸ்தகங்கள் இல்லை. வேதாந்தம் அது இதுவென்று ஏதேதோ புஸ்தகங்கள் இருந்தன. சரி, என்று சில இங்கிலீஷ் நாவல்களை எடுத்துப் படித்தேன். அப்படிப் படிக்கும்போது பல இங்கிலீஷ் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாது. உடனே அந்த வார்த்தைகளையெல்லாம் ஒரு நோட்டில் எழுதி எடுத்துக் கொண்டு வந்துவிடுவேன். மறுநாள் அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள மடத்திற்குச் சென்று அங்குள்ள டிக்ஷ்னரியில் பார்த்துத் தெரிந்து கொள்வேன். அப்போது ஒருநாள் இந்த டிக்ஷ்னரியை கொடுங்கள் சாமீ என்று கேட்டேன். கூடவே இரண்டு மூன்று புஸ்தகங்களையும் கேட்டேன். அதெல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார். இந்த சாமியாரை சரிக்கட்டுவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துப் பார்த்து அந்த சாமியாருக்குத் துணியெல்லாம் துவைத்துப்போட ஆரம்பித்தேன். அதன் மூலம் பழக்கம் நெருக்கமானது. அதை வைத்து புஸ்தகங்கள் கேட்டேன். இருநூறு பக்க புஸ்தகத்தை கொடுத்துவிட்டு மறுநாளே கொண்டு வந்துவிட வேண்டும் என்பார். இரவெல்லாம் கண்விழித்துப் படித்தாலும் 100 பக்கம்தான் படிக்க முடியும். இருந்தாலும் மறுநாள் நான் சொன்ன மாதிரியே தவறாமல்கொண்டுபோய்க் கொடுத்துவிடுவேன். ``என்னடா படிச்சுட்டீயா'' என்று கேட்பார். ``இல்ல.. சாமி... கொஞ்சம் பாதிதான் படிச்சேன். நீங்கதான் உடனே திருப்பி எடுத்துக்கொண்டுவான்னு சொன்னீங்களே''ன்னு பதில் சொல்லுவேன்.``சரி, கொண்டுபோய் படிச்சிட்டு கொண்டுவா''ன்னு சொல்லுவார். இந்த இடத்தில் இன்னொரு பியூட்டி என்னவென்றால், விவேகானந்தரை படிச்சா கடவுளைப் பார்க்கலாம்னு திருக்கழுக்குன்றத்துல இருக்குற சாமியார் ஒருத்தர் சொன்னார் என்று உடனே அவரைப் பார்க்கப் போனேன். போய் ``சாமீ நானும் விவேகானந்தரையெல்லாம் படிச்சிருக்கேன். நீங்க ஏதோ கடவுளை எல்லாம் பார்க்குறீங்கன்னு கேள்விப்பட்டேன்'' என்றதும் அவர் ``நான் தினம் கடவுளைப் பார்க்கிறேன்'' என்றார். ஒரு நாள் விடாமல் தொடர்ந்து அவரைப் பார்க்கப் போனேன். அவரும் கடவுளை காண்பிக்கிறேன். கடவுளை காண்பிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். எனக்கு கோபம் வந்துவிட்டது. இவர் ஏதோ திருடன் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டு ``சாமீ... நான் தொடர்ந்து ஒரு வருஷமா வர்றேன். நீ கடவுளையே காண்பிக்க மாட்டங்குற'' என்றேன். உடனே அவர் ``இன்னைக்கே என்னோட உயரத்துக்கு உன்னால வர முடியுமா?''ன்னு கேட்டார். அப்போது எனக்கு அது புரியவில்லை. பிற்பாடு அந்த வார்த்தைக்குள் இருக்கும் வேறு அர்த்தம் பிடிபட்டது. சரி, மடத்தில் இருந்த சாமியார் கதைக்கு வருவோம். அப்படி துணி துவைத்து போட்டுவிட்டு புஸ்தகம் வாங்கிக் கொண்டிருந்த சாமியிடம் ``இவ்வளவு பெரிய புஸ்தகமா இருக்கு சாமீ... ஒரு நாலு அஞ்சு நாளு டைம் கொடுங்களேன்''னு கேட்டேன். ``உனக்கு என்னடா புரியும் இதுல'' என்றார் அவர். நான் கேட்டேன் ``நீங்க படிச்சு இருக்கீங்களா சாமீ'' என்றேன். ஒரு வாரம் டைம் கொடுத்தால் உங்க துணியை துவைப்பேன். இல்லையின்னா நான் வரவேமாட்டேன் என்றதும் சரி என்று ஒத்துக் கொண்டார். இப்படி புஸ்தகம் படிப்பதற்காக எவ்வளவோ காரியங்களைச் செய்திருக்கிறேன்.எங்கள் பேராசிரியர் சஞ்சீவி தமிழரசு கழகத்தைச் சேர்ந்தவர். மா.பொ.சி.யின் கட்சியைச் சேர்ந்தவர். அவருடைய அரவணைப்பின் பேரில் நிறைய புஸ்தகங்களை நூலகத்திலிருந்து எடுத்துப் படித்தேன். காஞ்சிபுரத்தில் படிப்பை முடித்துக் கொண்டு மெட்ராஸுக்கு குடிபெயர்ந்தோம். இங்கு வந்ததும் பச்சையப்பன் கல்லூரியில் பி.காம். சேர்ந்தேன். அப்போது முரசொலி மாறன், நாஞ்சில் மனோகரன் பி.ஏ. ஆனர்ஸ் கடைசி ஆண்டு மாணவர்கள். இங்கு வந்ததும் அதே மாதிரி லைப்ரரியே கதி. அப்போது எல்லாம் லைப்ரரியில் டிக்கெட் கொடுப்பார்கள் இல்லையா? அதில் பிகாம் என்று போட்டிருக்கும். ஆனால் நான் இங்கிலீஷ் லிட்ரேச்சர் புத்தகத்தைக் கேட்பேன். அங்கிருந்த செங்கல்வராயன் நாயுடு என்ற லைப்ரரியன் ``நீ பிகாம்தானடா படிக்குற? அப்புறம் எதுக்கு இங்கிலீஷ் லிட்ரேச்சர் புத்தகம் கேட்கிற?'' என்று கொடுக்கமாட்டார். எப்படியாவது புத்தகம் வாங்கியாக வேண்டுமே? உடனே அவருக்கு ஏதாவது எடுபிடி வேலை செய்வேன். அப்படிப் படிப்பதில் பெரிய ஈடுபாடு. அதற்காகத்தான் இந்த எடுபிடி வேலையெல்லாம். அந்த நேரத்தில்தான் கன்னிமரா லைப்ரரி என்று ஒன்று இருக்கிறது, மிகப் பெரிய லைப்ரரி என்று கேள்விப்படுகிறேன். 1954ல் உள்ளே போகிறேன். கேள்விப்பட்டது போலவே எங்கு பார்த்தாலும் ஒரே புஸ்தகம். கல்லூரி லைப்ரரியில் உள்ளே விடவில்லை. ராமகிருஷ்ண மடத்தில் உள்ளே விடவில்லை. ஆனால் கன்னிமராவில் கடல் போல புஸ்தகங்கள். உள்ளே போய் தாராளமாக படி என்று இஷ்டத்திற்கு திறந்துவிட்டார்கள். ஒரே ஆச்சர்யம். சந்தோஷம் தாளமுடியவில்லை.கன்னிமராவில் உறுப்பினராக வேண்டுமென்றால் அந்தக் காலத்தில் கவுன்சிலர்தான் ரெக்கமென்ட் செய்ய வேண்டும். அன்று இதுதான் விதி. திறந்துவிட்டும் அனுபவிக்க முடியவில்லை. ஒருமாசம் அவதிப்படுகிறேன். எங்கள் மாமா மூலமாக லக்ஷ்மணன் முதலியார் என்று ஒரு ஜட்ஜ்கிட்ட போய் கையெழுத்து வாங்கினேன். அவர்தான் எம்.ஆர்.ராதா வழக்கை விசாரித்தவர், தீர்ப்பு அளித்தவர். தமிழ்நாட்டில் ஒரு லைப்ரரியில் உறுப்பினர் ஆக இவ்வளவு சிக்கல்கள். ஆனால் 2005_ல் லண்டன் போனேன். அங்குள்ள லைப்ரரிக்கு உள்ளே போய் புஸ்தகம் கேட்டால் `உங்களுக்கு வங்கிக் கணக்கு இருக்கிறதா?'' என்றார்கள். ``இல்லை. என்னுடைய மகன் இங்கே வேலை செய்கிறான். நான் அவனைப் பார்க்க இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன்' என்றதும் ``இப்போது கையில் பாஸ்போர்ட் வைத்திருக்கிறீர்களா?'' ``இல்லை'' என்றதும், ``உங்கள் மகனின் வருமான வரி எண் தெரியுமா?'' என்றார்கள். ``தெரியாது'' என்றேன். `சரி, வீட்டிற்குச் சென்றதும் ஈமெயிலில் அனுப்புங்கள் முகவரி கொடுத்துவிட்டு எடுத்துக் கொள்ளுங்கள்' என்றார்கள். `எத்தனை புஸ்தகங்கள் எடுக்கலாம்' என்று கேட்டதற்கு `எத்தனை புஸ்தகம் எடுக்கப் போகிறீர்கள்' என்கிறார்கள். `நான் 19 புஸ்தகம்' என்றதும் `சரி' எடுத்துக் கொள்ளுங்கள் என்று சர்வசாதாரணமாக சொல்லிவிட்டார்கள். இதுதான் பிரிட்டீஷ்காரனின் அணுகுமுறை.தீராநதி : 2005-ல் இந்த மாதிரியான ரூல்ஸ் அங்கு இருந்தது என்பது வாஸ்தவம். ஆனால் ஒரு முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் அங்கு இதே விதிமுறை இருந்திருக்குமா?கி.அ. சச்சிதானந்தம் : ஆமாம். 1960-ம் ஆண்டு கூட இதே ரூல்ஸ்தான் இருந்திருக்கிறது. அங்கிருக்கும் லைப்ரரியிலிருந்து திருடி வந்து புஸ்தகத்தை வெளியில் விற்க முடியாது. யாரும் வாங்கமாட்டார்கள். நூலகத்திலேயே பத்து சதவீத புஸ்தகங்கள் ஆண்டுக்கு திருடு போய்விட்டால் நல்லதென்று நினைக்கிறார்கள். ஏனென்றால் அவ்வளவு புஸ்தகங்களை பராமரிப்பது கஷ்டமாக இருக்கிறது என்பதால். அவர்களுக்கு இடநெருக்கடி. அவர்கள் லைப்ரரியில் ஒரு பெரிய பெட்டி வைத்திருப்பார்கள். கம்ப்யூட்டரில் ஒரு வருடத்திற்கு மேலாக யாரும் எடுத்து என்ட்ரி போடாமல் இருக்கும் புஸ்தகத்தை தூக்கி அந்தப் பெட்டியில் போட்டுவிடுவார்கள். நீங்கள் விரும்பிய தொகையை கொடுத்துவிட்டு உங்களுக்கு தேவையான புஸ்தகத்தை எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் புஸ்தகங்கள் புதியதாக நூலகத்திற்குள் வருகிறது.
தீராநதி : சரி, உங்களுக்கு சி.சு. செல்லப்பாவுடன் எப்படி பழக்கம் ஏற்பட்டது? கி.அ. சச்சிதானந்தம் : போஸ்டல் ஆடிட்டில் வேலை கிடைத்தது. ரொம்ப சௌகர்யமான வேலை. ஒரு நாளைக்கு ஆயிரம் மணியார்டரை செக் பண்ணிவிட்டால் போதும். பக்கத்திலுள்ள கன்னிமரா லைப்ரரிக்குப் போய்விடுவேன். அலுவலகத்தில் என்னை யாராவது தேடினால் உடனே லைப்ரரிக்குத்தான் வருவார்கள். யானைக்கால் அய்யங்கார் என்ற ஒருத்தர் போஸ்டல் ஆடிட்டில் இருந்தார். அவர் சில புஸ்தகங்களை அறிமுகம் செய்தார். ஒரு நாள் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் `முரசொலி' அலுவலகத்திற்குப் பக்கத்திலுள்ள பெட்டிக் கடையில் `எழுத்து' என்று ஒரு பத்திரிகை அழுக்கு கலரில் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது (1959-60) அரை ரூபாய் இருந்தது. அதன் பிறகு 25 காசு. அப்புறம் 50 காசு. அந்தப் பத்திரிகையை ஒன்று வாங்கிப் புரட்டிப் பார்த்தால் `புதுக் கவிதை' என்று போட்டிருந்தது. அதற்கு முன் வால்ட் விட்மன் எல்லாம் ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன். இதுமாதிரி யாரும் ஏன் தமிழில் எழுதவில்லை என்று யோசித்திருக்கிறேன். `எழுத்து' பத்திரிகையில் புதுக்கவிதை என்று இருந்ததை `படித்தபோது ஒரே மகிழ்ச்சி. உடனே அலுவலகத்தில் இருந்த ஆபீஸ் பாயைக் கூப்பிட்டு' 19ஏ பிள்ளையார் கோவில் தெருவில் இருக்கின்ற `எழுத்து' ஆபீஸுக்குப் போய் பழைய மாத `எழுத்து', புதிய மாதத்திற்கான `எழுத்து' என்று எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டுவா' என்று சொல்லி அனுப்பினேன். அவன் போய் பார்த்துவிட்டு அங்கே யாரும் இல்லை சார். அவர் பத்திரம் எழுதுறவர் சார் என்று திரும்பிவிட்டான். மறுநாள் நான் திரும்பவும் சொல்லி பத்திரிகையை எடுத்துக் காண்பித்து அனுப்பி வைத்தேன். போனவன் சில பழைய `எழுத்து' இதழ்களை வாங்கி வந்தான். சில நாள் கழித்து ஜப்பானிய சிறுகதை ஒன்றை மொழிபெயர்த்து கையில் எடுத்துக் கொண்டு செல்லப்பாவை பார்க்கப் போனேன். கீழே அவரது மனைவி நின்று கொண்டிருந்தார். `செல்லப்பா என்று ஒருவர் இங்கே இருக்கிறாரா?' என்றேன். `மேலே இருக்கார் போக' என்றார். உள்ளே போனால் சின்ன ரூம். விளக்கை போட்டுக் கொண்டு ஜன்னலுக்குப் பக்கத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார். ஆபீஸ் பாயை அனுப்பி புஸ்தகம் வாங்கியதைச் சொல்லி அறிமுகம் செய்துகொண்டேன்.. சரி, என்று உட்காரச் சொன்னவர் பேச ஆரம்பித்தார். மாலை நான்கு மணிக்கு உள்ளே போனேன். இரவு பத்து மணிக்குதான் வெளியே வந்தேன். நான்-ஸ்டாப்பான பேச்சு. புதுமைப்பித்தன், டி.எஸ்.எலியட் என்று அது இது என்று பேசிக்கொண்டே இருந்தார்.``சார்... நான் ஜப்பானிய சிறுகதை ஒன்று மொழிபெயர்த்திருக்கிறேன். முதலில் நீங்கள் படித்துப் பாருங்கள்'' என்று கொடுத்துவிட்டு வந்தேன். உடனே அதை அடுத்த இதழில் போட்டுவிட்டார். Lifeல் வந்த கதை அது. அதைத்தான் நான் மொழிபெயர்த்திருந்தேன். ரொம்ப நல்ல கதை. இப்படித்தான் செல்லப்பாவுடன் நட்பு உண்டானது. கடம்பட்டு ராமகிருஷ்ணன் என்று ஒரு மலையாளக் கவிஞர். அவனும் நானும் ஏ.ஜி.எஸ். ஆபீஸில் சக ஊழியர்கள். நான்தான் அவனின் முதல் ரசிகன். சில மாதங்களுக்கு முன்னால்தான் இறந்துபோனான். மகா குடிகாரன். காலை பத்து மணிக்கே இரவில் தான் எழுதிய கவிதையை எடுத்துக்கொண்டு வந்து ஆபீஸில் என் நாற்காலி பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு ராகம் போட்டு படிப்பான். எங்கள் செக்ஷனின் கோபால நாயர் என்று ஒரு அதிகாரி இருந்தார். அவருக்கு ராமகிருஷ்ணன் கவிதையை படிக்க ஆரம்பித்தால் கடுகடுவென்று கோபம் வந்துவிடும். ``இனிமேல் ராமகிருஷ்ணனை உள்ளேவிட்டாய் என்றால் உன் வேலை போய்விடும்'' என்று `என்னிடம் சொல்லிவிட்டு போய்விட்டார். ராமகிருஷ்ணன் என்னிடம் வை.கோவிந்தன் என்று ஒருத்தர் இருக்கிறார். `சமிக்ஷா' என்று ஒரு பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கிறார். நீ அவரைச் சந்திக்க வேண்டும்' என்று என்னை சித்ரா டாக்கீஸ் (இன்று மௌண்ட்ரோடில் பாட்டா செருப்பு கடை இருக்கும் இடம்) இருந்த இடத்திற்குப் பின்னால் கூவம் பாலத்தைத் தாண்டி இருந்த அவரது அலுவலகத்திற்கு அழைத்துக் கொண்டு போனான். கடம்பட்டு ராமகிருஷ்ணன் வெறும் டீ, பீடியைக் குடித்துவிட்டு எவ்வளவு தூரம் வேண்டும் என்றாலும் நடந்தே போய்விடுவான். அன்றைக்கும் ``நீ மாடிக்கு மேலே போ... நான் பின்னால் பீடி அடித்துவிட்டு வந்துவிடுகிறேன்'' என்று சொல்ல நான் மேலே போனேன். ஒருவர் ஆணி அடித்துக் கொண்டிருந்தார். அவரிடம் கோவிந்தன் இருக்கிறாரா என்றதும் கீழே இறங்கி அறையின் உள்ளே போனவர், `என்ன விஷயம்' என்றார். அவரைப் பார்க்க வேண்டும் என்றதும் `நான்தான் கோவிந்தன்' என்றார். பார்த்த மாத்திரத்திலேயே அவரின் எளிமை எனக்குப் பிடித்துப் போய்விட்டது. அவர் நடத்திய `சமிக்ஷா'வில் நான் எழுதிக் கொடுத்தவற்றை அவர் வெளியிட்டார். நான் எழுதி முதல்முதலாக காசு கிடைத்தது அவரது பத்திரிகையில்தான். கல்கத்தாவிற்குச் சென்று நான் திரும்பிய அனுபவத்தை வைத்து `கல்கத்தா டைரி' என்று ஒரு கட்டுரை எழுதினேன். அதை அவரே மொழிபெயர்த்து `சமிக்ஷா'வில் வெளியிட்டார். ரொம்ப அருமையான கட்டுரை அது. நான் மௌனி பற்றி எழுதிக் கொடுத்தேன். அதையும் வெளியிட்டார்.வை.கோவிந்தனைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒரு சாக்ரடீஸ். அவர் வீட்டில் தகழியைப் பார்த்திருக்கிறேன், வைக்கம் முகம்மது பஷீரைப் பார்த்திருக்கிறேன். காரு. நீலகண்டபிள்ளை, ஆனந்தன், இயக்குநர் அரவிந்தன், அடூர் கோபாலகிருஷ்ணன் எல்லாம் வருவார்கள். அவர் உயிரோடு இருக்கின்ற வரை மெட்ராஸில் இலக்கியக் கூட்டம் போட்டார். அங்கு எல்லா மொழிக்காரர்களும் பங்கு கொள்வார்கள்.தீராநதி : கூட்டத்தை எந்த இடத்தில் போடுவார்?கி.அ. சச்சிதானந்தம் : மகாஜன ஹாலில்தான் போடுவார். ஆனந்தகுமாரசாமி வந்து பேசிய இடம் அது. பாரதியார் பேசிய இடம். முதன் முதலாக ஆல் இண்டியா ரைட்டர்ஸ் மாநாடு நடத்தியவர் அவர்தான். அதில் செல்லப்பா, க.நா.சு. மௌனி, நகுலன் எல்லாம் கலந்து கொண்டிருக்கிறார்கள். தினமும் செல்லப்பா வீட்டிற்குப் போவேன், இல்லையென்றால் கோவிந்தன் அலுவலகத்திற்குப் போவேன். இந்த இடம்தான் கதியென்றுகிடப்பேன். அதே போல தி.ஜானகிராமனும் இலக்கியக் கூட்டங்கள் போடுவார். அப்போது அவர் சென்னையிலுள்ள ஆல் இண்டியா ரேடியோவில் வேலை பார்த்தார். ஜானகிராமன் போடும் இலக்கியக் கூட்டத்திற்கு செல்லப்பாதான் என்னை முதன் முதலில் அழைத்துக் கொண்டு போனார். ஜானகிராமன் தான் எழுதும் கதைகளைப் பற்றி செல்லப்பாவிடம்தான் அடிக்கடி அபிப்ராயம் கேட்பார். ஜானகிராமனின் சில கதைகள் சம்பந்தமாக செல்லப்பா வெளிப்படையான அறிவுரைகள் சொல்ல இருவருக்குக் கருத்து வேறுபாடுகள் வந்துவிட்டதால், அதற்குப் பிறகு கூட்டத்திற்குப் போவதை செல்லப்பா நிறுத்திக் கொண்டார். அப்படி கருத்து வேறுபாடுகள் வருவதற்கு முன்பாகவே என்னை ஜானகிராமனுடன் அறிமுகப்படுத்திவிட்டார் செல்லப்பா. நான் மட்டும் தனியாக கூட்டத்திற்குப் போக ஆரம்பித்தவுடன் செல்லப்பாவிற்கு வருத்தம் வந்துவிட்டது. க.நா.சு. மட்டும்தான் அந்த விஷயத்தில் பெருந்தன்மையானவர். ``நீ எந்த ஆளிடமாவது போ. எனக்கு கவலை இல்லை'' என்று சொல்வார். தனக்கு சிஷ்யனே வேண்டாம் என்று நம்பியவர் அவர். நான் செல்லப்பாவிடம், ``சார் ஜானகிராமன் கூட்டத்திற்குப் போகலாமா?'' என்று கேட்டேன். உடனே காச்சுமூச்சு என்று கத்திவிட்டார். ஒவ்வொரு முறையும் செல்லப்பாவிடம் எப்படியாவது சண்டையே இல்லாமல் சமாதானமாகிவிடவேண்டும் என்றுதான் அவர் வீட்டுக்குப் போவேன். ஏதாவது பேச புது சண்டை வந்துவிடும். ``சார்... அவர் கொடுக்கின்ற பலகாரம் நன்றாக இருக்கிறது. அதற்காகவாவது போகலாமே?'' என்றதும் கடுங்கோபம் வந்துவிட்டது அவருக்கு. அதோடு நிற்காமல் ``சார்.. அவர் பொண்ணு ரொம்ப நல்லா அழகா இருக்கு. அதைப் பார்க்கவாவது போகக் கூடாதா?'' என்றும் கேட்டுத் தொலைத்துவிட்டேன் ``உனக்கு என்ன வயது? எனக்கு என்ன வயசு? இதெல்லாம் என்கிட்ட பேசலாமா நீ?'' என்று முறைத்தார். ஜானகிராமன் கூட்டத்திற்கு போட்டியாக `எழுத்து' கூட்டம் என்று செல்லப்பா தன் வீட்டில் கூட்டம் போட்டார். அங்குதான் பிரமிள், வெங்கட்சாமிநாதன், ந. பிச்சமூர்த்தி, ந.முத்துசாமி, சி.மணி, வி.து. சீனிவாசன் _ இவர்தான் என் குரு. எம்.ஏ. ஃபிலாஸஃபி படித்தவர். அவரோட வாழ்க்கையை எழுதினாலே ஒரு நாவலாயிடும். அவ்வளவு பெரிய அறிவாளி. அதே அளவுக்கு சொந்த வாழ்க்கையில் தோற்றுப் போனவர். பிறகு இவர்களுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். இந்தக் காலகட்டத்தில்தான் இலங்கையிலிருந்து தர்மு சிவராமு `எழுத்து, பத்திரிகைக்கு நிறைய கடிதங்கள் எழுதினான். என்னிடம் அதே போல எழுதிய முந்நூறு லெட்டர்கள் இன்னும் இருக்கிறது. தர்மு சிவராமு என்பவனை அதுவரை இந்த ஊர் ஆள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். தமிழ் உரைநடைக்கு தர்மு சிவராமுதான் புதிய கோணத்தைக் கொடுத்தான். அதை நீங்கள் மறுக்கவே முடியாது. என்னைக்கூட எவ்வளவோ திட்டி எழுதி இருக்கிறான். அது முக்கியமில்லை. சிவராமுவின் உரைநடை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவனின் கவிதைகளில் எல்லாம் எனக்குப் பிடிக்காது.அந்தக் காலத்தில் பாஸ்கரன் என்று ஒருத்தர் இருந்தார். சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் துறை அதிகாரியாகப் பணிபுரிந்தவர். பேராசிரியர். ரொம்பத் திமிர் பிடித்தவர். ஆனாலும் பெரிய படிப்பாளி. அவர் ஒரு நாள் செல்லப்பாவிடம் வந்து ``ஹு இஸ் தட் ஃபிலோ தர்மு சிவராமு? இஸ் ரைட்டிங் வெரி குட் மேன்'' என்று சொல்லி, அவனுடைய எழுத்துக்களை நிறைய வெளியிட்டு அவனை உற்சாகப்படுத்து'' என்று சொல்லி ஒரு தொகையைக் கொடுத்துவிட்டு போய்விட்டார். நான் செல்லப்பாவிடம், ``யாரு சார்... இந்த ஆள். ரொம்ப நல்லா எழுதுறானே?'' என்று கேட்டேன். இப்போதும் எழுத்தில் வந்த சிவராமுவின் எழுத்துகளை வாசித்தீர்கள் என்றால் ரொம்ப பிரமாதமாக இருக்கும். புதிய ஸ்டைலில் எழுதி இருப்பான். அந்த புதிய பாணி உரைநடையை எழுதிய பிரமிளுக்கு அன்றைக்கு வயது என்ன தெரியுமா வெறும் 19. செல்லப்பாவிடம் கேட்டதற்கு அவர், ``அவன் இந்த ஊர்க்காரன் இல்லப்பா... சிலோன்காரன்'' என்று சொன்னார். ஒருநாள் காலை நான் ஆபீஸுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தபோது செல்லப்பா ஒருவரை என் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தார். ``இவன்தான் தர்மு சிவராமு'' என்று அறிமுகப்படுத்தினார். அவன் பேசிய தமிழே எனக்குப் புரியவில்லை. வந்தவன் ``ரொம்ப பசியா இருக்கு'' என்றதும் காபி கொடுக்கச் சொன்னேன். உடனே அவன் ``எனக்கு காபி எல்லாம் பிடிக்காது பால்தான் சாப்பிடுவேன்'' என்றான். சரியென்று பால் கொடுத்தேன்.என் வீட்டில் ழீன்பால் சார்த்தரின் `ஜெயின்ட் ஜெனே' என்று ஒரு பெரிய புத்தகம் இருந்தது. அதைப் பார்த்ததும் சிவராமு ``இது உனக்குப் புரியுதா?'' என்றான். எனக்கு ஒரே கோபம், தம்மாத்துண்டு பையன் இவன் நம்மிடம் ரொம்பத் திமிரா பேசுறானே என்று. இப்படியே பழக்கமாகி பிறகு என் வீட்டிலேயே சில காலம் தங்கியும் இருந்தான். அது இருக்கட்டும். `எழுத்து' எதற்கு தொடங்கப்பட்டது என்று தெரியுமா உங்களுக்கு?`சுதேசமித்திரன்' என்ற பத்திரிகையின் தீபாவளி மலரில் ஒரு விவாதம், சிறுகதை வளர்ந்திருக்கிறதா? இல்லையா? என்று. அதில் சி.சு. செல்லப்பா `வளரவில்லை' என்று ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்தார். அவர்கள் போடமாட்டேன் என்று மறுத்துவிட்டார்கள். அப்போதுதான் செல்லப்பா முடிவு பண்ணினார். ஏற்கெனவே செல்லப்பாவுக்கு பத்திரிகை அனுபவமுண்டு. க.நா.சு. சந்திரோதயம், சூறாவளி என்று பத்திரிகைகள் நடத்திக் கொண்டிருந்தார். அதில் சி.சு. செல்லப்பா உதவி ஆசிரியராக இருந்திருக்கிறார். முதன் முதலாக `வாடி வாசல்' சந்திரோதயம், சூறாவளியில்தான் வெளிவந்தது. அதற்கு முன்னால் `சுதந்திர சங்கு' என்று ஒரு காந்திய பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. அதில்தான் செல்லப்பாவின் முதல் சிறுகதை வெளிவந்தது. சங்கு சுப்பிரமணியன் தான் அதன் ஆசிரியர். அவர் எழுத்தாளர்களை ஊக்குவித்து வந்தார். அவர் எப்படி கதை எழுத வேண்டும் என்றெல்லாம் `வகுப்பெடுத்துக்' கொண்டிருந்தார். அதற்கு செல்லப்பா போவார். செல்லப்பாகூட சுதந்தர சங்குவில்தான் நான் பிறந்தேன் என்று எழுதி இருக்கிறார். க.நா.சு. சிட்டி, பி.எஸ். ராமய்யா போன்ற மணிக்கொடி நண்பர்கள் கூடி செல்லப்பாவை `எழுத்தை' ஆரம்பி, நாங்கள் அதில் எழுதுகிறோம் என்றார்கள். உடனே செல்லப்பா `எழுத்து'வைத் தொடங்கினார்.
தீராநதி : நாம் தர்மு சிவராமு சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருந்தோம். அதைவிட்டு நகர்ந்து போய்க் கொண்டிருக்கிறோம்.
கி.அ. சச்சிதானந்தம் : சிவராமு சிதம்பரத்தில் தங்கி இருந்தான். தமிழ்ப்புத்தாண்டு வருகிறது உடனே நீ புறப்பட்டு வரவும் என்று எனக்கு சிவராமு தந்தி அனுப்பினான். ``மௌனியை உனக்கு அறிமுகப்படுத்துகிறேன். நீ கட்டாயம் மௌனியை பார்க்க வேண்டும்'' என்று சொன்னதால் சிதம்பரத்திற்கு நான் போனேன். அன்றைக்கெல்லாம் சிதம்பரத்திற்குப் போவதென்றால் பெரிய சிக்கல். பஸ்ஸெல்லாம் அடிக்கடி கிடையாது. அப்போது மௌனி தெற்கு ரத வீதியில் குடி இருந்தார். வீரராகவன் தெருவில் அவருடைய அரிசி மில் இருந்தது. அங்குதான் நண்பர்களைத் தங்க வைப்பார் மௌனி. வீட்டுக்கே போய்விடலாம் என்று பிரமிள் சொன்னதால் கொளுத்தும் வெயிலில் குடையை பிடித்துக் கொண்டு மௌனி வீட்டுக்குப் போனோம். போகின்ற வழியில் சிவராமு ``மௌனி ஒரு மாதிரியான ஆளு. சில நேரத்தில் முகம் கொடுத்துப் பேசுவார். சில நேரத்தில் பேசாமல் இருந்தாலும் இருந்துவிடுவார். மௌனி உன்னிடம் பேசவில்லை என்றால், நீ என் மீது கோபித்துக் கொள்ளக்கூடாது'' என்றான். எனக்குக் கோபம் வந்துவிட்டது. ``என்னடா விளையாடுறீயா? நான் வீட்டுக்கே திரும்பிப் போய்விடுகிறேன்'' என்றதும், ``இல்ல... இல்ல.... ஒரு முன்னெச்சரிக்கைக்காக சொல்கிறேன் அவ்வளவுதான் ஆனால் நீங்க வர்றீங்கன்னு அவர்கிட்ட முன் கூட்டியே சொல்லிட்டேன்'' என்றான்.இன்றைக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது எனக்கு. கண் முன்னால் மௌனி நிற்கிறார். கூடத்தில் ஒரு பெஞ்சு போட்டு புஸ்தகத்தை வைத்துக் கொண்டு சட்டை போடாமல் எழுதிக் கொண்டிருந்தார். இவர்தான் மௌனி என்றான் சிவராமு. ``நீ உள்ளே போ நான் திண்ணையிலேயே உட்கார்ந்து இருக்கிறேன்'' என்று சொல்லிவிட்டான். மௌனிக்கு நான்கு பிள்ளைகள். அதில் வசந்தன் என்று ஒருத்தன் இருந்தான். எம்.ஏ., பி.எட் படித்தவன். அவனுக்கு கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பிற்பாடு திடீரென்று பைத்தியம் பிடித்துவிட்டது. அவன் திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பான். யாராவது போனால் மூக்குப்பொடி கேட்பான். வீட்டிற்கு உள்ளே போனவுடனேயே என்னை அவன் (வசந்தன்) மடக்கிவிட்டான். ``தெரியுமா? பக்கத்து தெருவுல பெரிய கொலை நடந்துடுச்சு. போலீஸ்காரன் எல்லாம் வந்துவிட்டான். பெரிய கலாட்டா ஆயிடுச்சு'' என்றான். உடனே மௌனி ஓடிவந்து என்னை அழைத்துக் கொண்டு உள்ளே போய்விட்டார். கொலை நடந்ததாக அவன் சொன்னது பத்து வருடத்திற்கு முந்தி நடந்த கதை. அந்தக் கதையை என்னிடம் அவன் நேற்று நடந்தது மாதிரி சொல்கிறான். மௌனியைப் பார்த்தவுடனேயே எனக்குப் பிடித்துபோய்விட்டது. எப்படி செல்லப்பாவைப் பார்த்தவுடன் எனக்கு பிடித்ததோ அதேபோல்.``சரி, நீங்க நேத்து ராத்திரி வர்றன்னு சொன்னீங்க. ஏன் வரலை?'' என்றார். காத்துக் கொண்டிருந்து இருக்கிறார். அவர். நான் அவரிடம் ``சார்.. எங்க அப்பா இங்க இருக்குற அண்ணாமலை காலேஜுலதான் பி.ஏ. படிச்சாரு'' என்று சொன்னேன். ``அப்போ மீனாட்சி காலேஜுன்னுதானே இதுக்குப் பேரு?'' என்றார். ``ஆமாம்... பி.ஏ. ஃபிலாஸஃபிதான் சார் படிச்சிருக்கார்'' என்றேன். உடனே. தங்கு தடையில்லாமல் பேசிக் கொண்டே இருந்தார். அன்றையிலிருந்து தர்மு சிவராமு அவரை விட்டுவிட்டான். நான் அவரைப் பிடித்துக் கொண்டேன். தர்மு சிவராமுக்கும் மௌனிக்கும் பெரிய சண்டையே நடந்தது. அது ஒரு பெரிய கதை
.தீராநதி : அவர்கள் இருவருக்கும் என்ன கருத்து முரண்பாடு?
கி.அ. சச்சிதானந்தம் : திரிகோணமலையில் இருந்த தன்னுடைய வீட்டை விற்றுவிட்டான் சிவராமு. அந்தக் காலத்தில் சிலோனிலிருந்து இந்தியாவிற்கு பணத்தைக் கொண்டு வருவது ரொம்ப கஷ்டம். அதனால் மௌனியிடம் ``சார் உங்க பேங்க் அக்கவுண்ட்டுக்கு அனுப்புகிறேன். நீங்கள் எனக்கு எடுத்துக் கொடுத்துவிடுங்கள்'' என்றான். அவர் ``அதெல்லாம் சட்டவிரோதம். நான் வருமானவரி கட்டுகிறேன். அதுவெல்லாம் சரிப்பட்டு வராது என்று மறுத்துவிட்டார்.'' அதெல்லாம் சிவராமு புரிந்து கொள்ளமாட்டான். அதே போலதான் நானும் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டேன்.
தீராநதி : நீங்கள் என்ன சிக்கலில் மாட்டிக் கொண்டீர்கள்?
கி.அ. சச்சிதானந்தம் : ஒருநாள் ஏதோ பேச்சு வருகின்றபோது என்னுடைய `வீசா' முடிவடைந்துவிட்டது. அதைப் புதுப்பித்துத் தர வேண்டும் என்றான். கிருஷ்ணன்மேனன் என்று ஒருத்தர் எனக்குத் தெரிந்தவர் இருந்தார். புகழ் வாய்ந்த மனநோய் மருத்துவர் சாரதாமேனனின் வீட்டுக்காரர்தான் அவர். அவரிடம் ``இவர் ஒரு எழுத்தாளர். இவருடைய வீசா முடிவடைந்துவிட்டது. கொஞ்சம் நீங்கள் உதவி செய்ய வேண்டும்'' என்று உதவி கேட்க ``சரி, வரச் சொல்'' என்றார். நானும் சிவராமுவும் போனோம். அவரிடம் பாஸ்போர்ட்டை கொடுத்தேன் வாங்கிப் பார்த்தவர் ``என்னங்க `வீசா' காலம் முடிவடைந்து எட்டு மாதம் ஆகப் போகிறது இப்போது வருகிறீர்களே. சட்டப்படி இது குற்றம்'' என்று கத்த ஆரம்பித்துவிட்டார். சரி என்று வெளியில் வந்ததும் சிவராமுவை நான் திட்டிவிட்டேன். உடனே சிவராமு என்ன செய்தான் தெரியுமா? சிவராமு அந்த விஷயத்தில் ரொம்ப தைரியசாலி. பாஸ்போர்ட்டை கிழித்து எறிந்துவிட்டான். இந்தப் பிரச்னையினால்தான் என் மீது கோபம் அவனுக்கு.அன்றைக்கு எல்லாம் தமிழ்நாட்டில் மதுவிலக்கு இருந்த காலம். சிலோன்காரர்கள் இங்கே வந்தவுடன் என்ன செய்வார்கள் என்றால் தாலுக்கா ஆபீஸ் போய் பர்மிட் வாங்கிக் கொள்வார்கள். பர்மிட் வாங்கிக் கொண்டு மதுபாட்டில் விற்பார்கள். வாழ்க்கைக்குத் தேவையான வருமானம் அவர்களுக்கு இதிலிருந்துதான் கிடைக்கும். ஏதோ யூனிட் அளவு கணக்கில் கொடுப்பார்கள். சிதம்பரம் தாலுக்கா ஆபீஸில் மாதா மாதம் இவனுடைய பாஸ்போர்ட்டை காண்பித்து காண்பித்து சரக்கு வாங்கி விற்பான். தாலுக்கா ஆபீஸில் தங்கி இருக்கின்ற முகவரி கேட்டபோது மௌனியின் அட்ரஸை கொடுத்து இருக்கிறான். மௌனியைத் தேடி போலீஸ்காரன் வந்திருக்கிறான். மௌனி குடிப்பார் ஆனால் இந்த அளவுக்குக் குடிக்கமாட்டாரே என்று சந்தேகப்பட்டு வந்திருக்கிறான். மௌனி சிவராமுவைக் கூப்பிட்டு கேட்டு இருக்கிறார். எந்த அட்ரஸைக் கொடுத்த என்றதற்கு `உன்னுடைய அட்ரஸைத்தான் கொடுத்திருக்கிறேன்' என்று சொல்லி இருக்கிறான். உடனே `வெளியே போடா' என்று சொல்லிவிட்டார். மௌனி ஊரில் பெரிய மனிதர். அரிசி மில் எல்லாம் வைத்திருக்கிறார். அவருடைய பெயர் கெடுவதை அவர் விரும்பவில்லை. அவரும் குடிக்கக் கூடியவர்தான். அவருடைய மூன்றாவது பையன் பெரிய இன்ஜினீயர். கல்யாணமாகி ஒரு வருடம் கூட ஆகவில்லை. எலக்ட்ரிக் ஷாக் விபத்தில் செத்துப் போய்விட்டான். அந்த துக்கத்தில்தான் குடிக்க ஆரம்பித்திருக்கிறார். தர்மு சிவராமுவின் மனநிலை எப்படித் தெரியுமா? யார் அவனுக்கு அதிகமாக உதவி செய்திருக்கிறார்களோ அவரைத்தான் அவன் திட்டுவான். இலங்கையில் இருந்த அவனுடைய வீட்டை பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றான் என்று வைத்துக் கொண்டால் இந்திய ரூபாயில் ஐயாயிரம் ரூபாய்தான் அவனுக்கு கையில் கிடைத்தது. அதில் பெரிய இழப்பு அவனுக்கு. ஆனால் அவன் அதற்காக கவலையேபடவில்லை. சிவராமு இந்தியா வந்ததே கனடா போவதற்காகத்தான்.
தீராநதி: பாரிஸ் போவதற்குத்தானே அவர் இங்கு வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்!
கி.அ. சச்சிதானந்தம் : இல்லை. கனடா போவதற்காகத்தான் இந்தியாவிற்கு வந்தான். அதற்குப் பிறகு பாரிஸ் போவதற்காக பிரெஞ்ச் படித்தான். பிறகு விட்டுவிட்டான். இங்கிலீஷ் நாவல் ஒன்றை எழுதி கனடாவுக்கு அனுப்பினான். ஆனால் அது எதுவும் வேலைக்கு உதவவில்லை.
தீராநதி : பிரமிள் உங்களைப் பற்றி விமர்சித்து நிறைய கவிதைகள் எழுதி இருக்கிறாரே? உங்களுக்கும் அவருக்கும் எதன் பொருட்டு தர்க்கம் நடந்தது?கி.அ. சச்சிதானந்தம் : அடிப்படையில் நான் ஓர் ஊர் சுற்றி. பிரமிள் ஊர் சுற்றுவதையே விரும்பாதவன். ரூமுக்குள்ளேயே அடைஞ்சிகிடப்பான். நான் 1974 வாக்கில் வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் நேபாளுக்கு சென்று ஆறு மாதம் தங்கி இருந்தேன். மௌண்ட், எவரெஸ்ட் என்று சுற்றினேன். அப்படிப் போய்விட்டு வந்ததும் அவனிடம் ``எவரெஸ்ட் மலைக்கு முதன் முதலில் தமிழ்நாட்டிலிருந்து நான்தான் போயி இருக்கிறேன்'' என்றேன். அதற்கு அவன் ``இதுவெல்லாம் ஒரு சாதனையா?'' என்று கேலி பேசினான். நீங்கள் சொல்வதைப் போல நிறைய கவிதைகளில் என்னைத் திட்டி எழுதியிருக்கிறான். பலமுறை என்னிடம் பணம் கேட்டிருக்கிறான். `வேலை செய்து பணம் சம்பாதி' என்று சொன்னேன். அவனிடம் ``உன்னுடைய உரைநடைதான் நன்றாக இருக்கிறது. உன் கவிதைகள் எனக்கு பிடிக்கவில்லை'' என்று சொன்னேன். அதேபோல விமர்சனத்தையும் நிறுத்திக் கொள் என்றேன். அவன் நிறைய பொய் சொல்வான். அதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். சங்கரலிங்கம் என்று ஒருத்தன் இருந்தான். இலங்கை அகதி அவன். சிவராமு தன்னைத்தானே பேட்டி எடுத்துக் கொண்டு சங்கரலிங்கம் பேட்டிக் கண்டதைப் போல ஒரு பத்திரிகையில் போட்டுவிட்டான். சங்கரலிங்கத்தை உண்மை தெரியாமல் ``யாரோ ஒருவனைத் திட்டுவதற்கு நீ எதுக்கடா அவனை போய் பேட்டி எடுத்தே'' என்று கேட்டேன். அவன் என்ன செய்தான் ``நான் செய்யுல சார்... அவனே கேள்வி எழுதி நான் பேட்டி எடுத்த மாதிரி எழுதிட்டான்'' என்று சொன்னான். நான் தர்முசிவராமுகிட்ட ``என்னடா பெரிய தார்மீகம், ஜே.கிருஷ்ணமூர்த்தி, தத்துவம் என்றெல்லாம் சொல்றீயே இப்படிச் செய்யலாமா?'' என்றேன். உடனே என் மீது அவனுக்கு கோபம் வந்துவிட்டது. அதேபோல சிவராமு இறப்பதற்கு முன்னால் என்னை விமர்சித்து ஏதேதோ எழுதி வெளியிட்டான். என்னுடைய `பீக்காக்' பதிப்பகத்தை `பீ'காக் என்று எழுதினான். அதை `லயம்' சுப்ரமணியன் வெளியிட்டார். உடனே நான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிட்டேன். பிறகு சுப்ரமணியன் மன்னிப்புக் கேட்டதால் பிரச்சனையை பெரிதாக்காமல் விட்டுவிட்டேன்.இன்னொரு முக்கியமான காரணம் என்னவென்றால், தர்முசிவராமு வை.கோவிந்தனிடம் போக ஆரம்பித்தான். அவரிடம் என்னைப் பற்றியும் ந.முத்துசாமி பற்றியும் நிறைய குறை சொல்லி இருக்கிறான். அவருக்கு கோபம் வந்துவிட்டது. உடனே அவர் சிவராமுவிடம் ``சச்சிதானந்தம் ஒரு மனுஷன். முத்துசாமியும் ஒரு நல்ல எழுத்தாளர். இருவரும் என் நண்பர்கள். இவர்கள் இருவரையும் பற்றி என்னிடம் குறை சொல்வதாக இருந்தால் என் இடத்திற்கு இனிமேல் வராதே!'' என்று கத்திக் கொண்டிருக்க, அந்தச் சமயத்தில் நான் எதேச்சையாக அங்கு சென்றுவிட சிவராமுவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. உடனே சரசரவென்று இறங்கிவிட்டான். நான் இந்த இடத்தில் என்ன செய்ய முடியும்? அப்படித்தான் ஒருநாள் முத்துசாமி வீட்டில் நான், முத்துசாமி, அவர் மனைவி எல்லோரும் இருக்கின்றபோது முத்துசாமியைப் பார்த்து சிவராமு ``நீங்கள் ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளர். சிறுகதையில் நீங்கள் பெரிய இடத்திற்குப் போகவிடாமல் உங்களை குடும்பம்தான் நாசம் பண்ணுகிறது. (ஒரு நல்ல எழுத்தாளனுக்கு குடும்பமே இருக்கக் கூடாது என்பது சிவராமுவின் தியரி)'' என்று சொல்லிவிட்டான். முத்துசாமிக்கு நடந்திருப்பதோ காதல் கல்யாணம். கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை. உடனே முத்துசாமியின் மனைவி இவனை வீட்டிற்கு வரக் கூடாது என்று சொல்லிவிட்டார். இதனால் இருவருக்குள் பெரிய சண்டை.இந்தச் சமயத்தில்தான் எங்களிடமிருந்து பிரிந்து போய் பெசண்ட் நகரில் குடி இருந்தான். அந்தச் சமயத்தில் அவனுக்கு நரோ ஜெயராமன்தான் நிறைய உதவி செய்தார். நானும் அடிக்கடி போய் பார்ப்பேன். பண உதவிகள் செய்தேன்.
தீராநதி : நீங்கள் எதற்காக `பீக்காக்' என்று தனியாக பதிப்பகம் தொடங்கினீர்கள்?
கி.அ. சச்சிதானந்தம் : `எழுத்து' நின்று போய்விட்டது. அப்போது செல்லப்பாவிடம் ``சார்... நீங்கள் எழுதிக் கொடுங்கள், நான் செலவு செய்து கொண்டு வருகிறேன்'' என்றேன். அப்போது செல்லப்பா வீட்டில் பெரிய வறுமை. தனக்குக் கிடைத்த சுதந்திரப் போராட்ட தியாகி உதவித் தொகையைக் கூட அப்போது அவர் வாங்கமாட்டேன் என்று மூன்று வருடங்கள் உதாசீனப்படுத்திக் கொண்டிருந்தார். அப்புறம் நடையாக நடந்து நான் சில உதவிகள் செய்து உதவித் தொகையை வாங்கித் தந்தேன். அப்போதுதான் க.நா.சு. ``செல்லப்பா தியாகி உதவித் தொகையை வாங்கிக் கொண்டு இப்போது ரொம்ப சௌகர்யமாக இருக்கிறார்'' என்று எழுதிவிட்டார். அதனால் பெரிய வாக்குவாதம் வந்தது.செல்லப்பா எழுதுவது எப்படியோ அச்சாகிவிட்டால் பிற்காலத்தில் எப்படியும் காப்பாற்றப்பட்டுவிடும் என்பதால் நான் அவரை வற்புறுத்தி எழுதுங்கள் என்றேன். உடனே ``தமிழ் சிறுகதை பிறக்கிறது ஏற்கெனவே வெளிவந்தது இருக்கிறது. அதைச் சில திருத்தங்கள் செய்து மாற்றித் தருகிறேன், நீங்கள் போடுங்கள்'' என்றார். சி.மோகன் `க்ரியா'விடம் கருத்துவேறுபாடாகி தனியாகச் சென்று `மிதிலா அச்சகம்' என்று ஒன்றை ஆரம்பித்தார். என் வீட்டு மாடியில்தான் `க்ரியா' பதிப்பகம் அப்போது இருந்தது. அதன் மூலம் எனக்கு சி.மோகனை ஏற்கெனவே தெரியும். அவரிடம் சென்று கேட்டேன். அவர் ``பேப்பர் செலவுக்கு மட்டும் முதலில் பணம் தந்துவிடுங்கள், அச்சுச் செலவை வேண்டுமென்றால் பிறகு வாங்கிக் கொள்கிறேன்'' என்றார். அப்படி உருவானதுதான் `பீக்காக்' பதிப்பகம்.
தீராநதி : ஆனந்தகுமாரசாமி பற்றிய ஆய்வாளர்களில் அல்லது அவரின் பங்களிப்பைப் பற்றிய தகவல்களைப் பேசுபவர்களில் இந்திய அளவில் நீங்கள் குறிப்பிடப்படும்படியான நபராக இருக்கிறீர்கள். அவரின் பங்களிப்பைப் பற்றிப் பேசுங்களேன்?
கி.அ. சச்சிதானந்தம் : முதன் முதலில் ஆனந்தகுமாரசாமியை நான் படிக்க ஆரம்பித்ததே நான் ஊர் சுற்றத் தொடங்கிய போதுதான். இந்திய அளவில் முக்கியமான ஸ்தலங்களுக்குச் செல்லும்போது, அந்த இடங்களை வெறுமனே பார்த்துத் திரும்பாமல் அவற்றை பற்றி உணர்வுபூர்வமான கருத்துபூர்வமான தகவல்களையும் தெரிந்துகெண்டால் இன்னும் ரசிக்கலாம் என்று ஒருவர் சொல்ல, அதற்காக படித்தேன். துரைராஜசிங்கம் என்பவர் ஆனந்தகுமாரசாமியின் நூற்றாண்டுவிழாவையொட்டி ஒரு மலர் வெளியிட அதற்கான விமர்சனம் `ஹிண்டு'வில் வெளியாகி இருந்தது. அதை நான் படித்தேன். அதில் வெளியாகி இருந்த கோலாலம்பூர் முகவரிக்கு ``இந்தப் புஸ்தகத்தை நீங்கள் அனுப்பித் தந்தால் நான் பணம் அனுப்புகிறேன். இல்லையென்றால், எங்கு கிடைக்கும் என்று தகவல் தந்தால் வாங்கிக் கொள்கிறேன்'' என்று ஒரு கடிதம் எழுதினேன்.அப்போது ரிசர்வ் பாங்கின் ஏகப்பட்ட கெடுபிடி. வெளிநாட்டு பண மாற்றம் என்பது சுலபமானதல்ல; அந்த முகவரியிலிருந்து ``முதலில் பணத்தை அனுப்புங்கள். பிறகு புஸ்தகத்தை அனுப்புகிறேன். ஏனென்றால் இந்தப் புஸ்தக விஷயத்தில் பல அனுபவங்களை நான் இந்தியர்களிடமிருந்து பெற்றிருக்கிறேன்'' என்று ஒரு பதில் கடிதம் வந்தது. துரைராஜசிங்கம் என்பவர் ஆனந்தகுமாரசாமியின் பெரிய பற்றாளர். ஆனந்த குமாரசாமியின் எல்லா புஸ்தகத்தையும் அவர் சேகரித்து வைத்திருந்தார். அப்போது நான் திருமணமாகாதவன். 700 ரூபாய் இருந்தால் வாங்கிவிடலாம் என்றதும் உடனே பணம் அனுப்பி வைக்க, புஸ்தகம் வந்து சேர்ந்தது. அன்றிலிருந்து துரை ராஜசிங்கம் நிறைய கடிதங்களைத் தொடர்ந்து எனக்கு எழுத ஆரம்பித்துவிட்டார். ஆனந்த குமாரசாமியின் புஸ்தகங்களை படித்துப் பார்த்ததும் பிடித்துப்போய்விட்டது. உடனே அப்போது இருந்துதான் நான் ஆனந்தகுமாரசாமியின் நூல்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன். கோவிந்தன் இருக்கிறார் இல்லையா அவர் ஒரு பகுத்தறிவுவாதி. எம்.என். ராயின் குழுவைச் சேர்ந்தவர். அவருக்கு ஆன்மிகம் என்பதெல்லாம் பிடிக்காது. `ஹிஸ்டரி ஆஃப் த இண்டியன் ஆர்ட்' என்ற ஆனந்தகுமாரசாமியின் புஸ்தகத்தை அவருக்கு படிக்கக் கொடுத்தேன். படித்துப் பார்த்த அவர் ``அடடே பெரிய ஆளுய்யா இவன்'' என்று அவரும் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார்.ஆனந்த குமாரசாமியின் பெரிய பங்களிப்பு எதுவென்றால், இந்தியாவின் கலை மரபுகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவரைத் தவிர வேறு ஆட்கள் யாரும் நம்மிடம் இல்லை. அவரை விட்டுவிட்டு இந்தக் கலைகளை நீங்கள் புரிந்து கொள்ள முடியாது. எப்படி மேற்கத்திய நாடுகள் கிழக்கத்திய நாடுகளை அழித்திருக்கிறது. கிழக்கத்திய நாடுகள் மேற்கத்திய கலாச்சாரத்தை அப்படியே உள்வாங்கிக் கொள்ளக்கூடாது. நமக்கென்று சில மதிப்புகள் இருக்கிறது என்று பிரிட்டீஷ்காரர்களை நோக்கி தன் எழுத்துக்களால் விமர்சித்தார் ஆனந்த குமாரசாமி.`இவன் யாருடா நம்மை விமர்சிக்கிறது?' என்று வெள்ளையர்கள் திரும்பிப் பார்க்கத் தொடங்கினார்கள். ஆனந்த குமாரசாமியின் அம்மா ஆங்கிலேயர். அப்பா தமிழர். இரண்டு வயசு வரைதான் இலங்கையில் இருந்திருக்கிறார். மீதி காலம் முழுக்க லண்டனில் வாழ்ந்தவர். ஆக, இவர் சொல்வதில் ஏதோ அர்த்தம் இருக்கிறதென்று ஆங்கிலேயர்கள் கவனிக்க ஆரம்பித்தார்கள். ஆனந்த குமாரசாமியின் மொழி இருக்கிறதே அது அசல் ஆங்கிலேயனின் மொழி. நாம் எவ்வளவு வேண்டுமென்றாலும் ஆங்கிலத்தில் எழுதலாம், ஆங்கிலேயனின் மொழி நடை என்று ஒன்று இருக்கும் இல்லையா? ஆனந்த குமாரசாமியின் அந்த நடைதான் எல்லா ஆங்கிலேயரையும் இந்திய கலைகள் பக்கம் திருப்பியது.மேலை நாடுகளில் கலை என்றால் அது கலைக்காக மட்டும்தான். ஆனால் இந்தியாவில் கலை என்றால் வெறும் கலைக்காக அல்ல அது. கலைநயம் மிக்க ஒரு பொருள் பயன்பாட்டிற்கான ஒரு பொருளாகவும் இங்கே இருக்கும். ஆக, இந்த வித்தியாசத்தை விளக்கினார். ஆனந்த குமாரசாமியின் முதல் கட்ட எழுத்துக்கள் எல்லாம் வெறும் தகவல்களாகவே இருக்கும். இரண்டாம் கட்ட எழுத்துக்களை எடுத்துக் கொண்டால் விளக்க உரையோடு கூடிய தகவல்களாக இருக்கும். `டான்ஸ் ஆஃப் சிவா'வை எடுத்துக் கொண்டால் வெறும் தகவல்மட்டும்தான் இருக்கும். மூன்றாவது காலகட்டத்தில் அவருக்கு வயதாகி எழுதும்போது ஆன்மிகத் தன்மையோடு வெளிப்பட்டிருக்கும். இந்தக் காலகட்டத்தில் தத்துவத்தில் ஈஸ்ட் வெஸ்ட் என்றெல்லாம் தனித்தனியாக கிடையாது. அந்தக் காலத்தில் `கிழக்கு கிழக்குதான், மேற்கு மேற்குதான். இரண்டும் சேரவே முடியாது' என்ற, நோபல் பரிசு வாங்கிய ஆங்கில எழுத்தாளர் கிப்லிங் கோட்பாட்டை முதலில் உடைத்தவர் ஆனந்த குமாரசாமிதான். இம்பிரியலிஸம் கோலோச்சிய காலத்தில் உடைத்தார். ``நாகரிகமற்ற உலகத்தை நாங்கள் நாகரிகப்படுத்த போகிறோம்'' என்றுதான் அன்றைக்கு இங்கிலீஷ்காரன் வாதிட்டான். இதையெல்லாம் உடைக்கிறார் குமாரசாமி. உலகத்தில் உள்ள பெரிய பெரிய தத்துவவாதிகளின் சிந்தனைகள் எல்லாம் அனுபூதி மட்டத்தில் எல்லாம் ஒன்றே என்ற கருத்திற்கு வந்து சேர்கிறார். இதைச் சொல்வதற்கு ஆனந்த குமாரசாமிக்கு எல்லா தகுதிகளும் உண்டு. செவ்வியல் மொழி என்று சொல்லப்படுகின்ற மொழிகளான தமிழ் அவருக்குத் தெரியும். சமஸ்கிருதம் தெரியும். ஹீப்ரு தெரியும், லத்தின் தெரியும். கிரீக் தெரியும். ஆக, செவ்வியல் இலக்கியங்கள் தத்துவம் என்று சொல்லப்படுகின்ற புஸ்தகங்களையெல்லாம் மூல மொழியிலேயே படித்தவர் அவர்.
தீராநதி : ஆனந்த குமாரசாமியின் தந்தைதானே முத்துக்குமாரசாமி. அவர் இலங்கையில் பெரிய செல்வந்தர் இல்லையா?
கி.அ. சச்சிதானந்தம் : யாழ்ப்பாணத்தில் மிகப் பெரிய பணக்கார தமிழ் சமுதாயத்தில் பிறந்தவர் முத்துக்குமாரசாமி. அந்த தமிழ் சமுதாயம் நல்ல நல்ல காரியங்களை எல்லாம் செய்திருக்கிறது. சிலோன் அரசாங்கத்தில் இவர் ஒரு அங்கத்தினர். சிங்களரை எல்லாம் நீங்கள் மட்டமாக கருதுகிறீர்கள் அவர்களின் கலாச்சாரம் அவ்வளவு தரம் குறைந்ததல்ல என்று இங்கிலாந்தில் முதன்முதலாக இவர்தான் எடுத்துப் பேசுகிறார். அதைப் பேசிவிட்டு சிலோன் திரும்பிய முத்துக்குமாரசாமியை பெரிய தேரில் உட்கார வைத்து சிங்களர்கள் கொழும்பில் ஊர்வலமாக அழைத்துக்கொண்டு போனார்கள்.அந்தச் சமயத்தில் சிங்களர் - தமிழர் பாகுபாடெல்லாம் அங்கு உருவாகவில்லை. தர்மு சிவராமு சொல்லுவான் பண்டார நாயக்கா காலத்திற்கு முன்புவரை சிங்களப் பெண்கள் எல்லாம் மிக மிக அறியாமைவாதிகளாம். தமிழர்களின் நிலப்பரப்பு ரீதியிலான பிரச்சனை என்னவென்றால், அவர்கள் வசித்துக் கொண்டிருந்த பகுதியெல்லாம் நீர் ஆதாரம் இல்லாமல் வறண்ட பூமியாக இருந்திருக்கிறது. தென் இலங்கை அப்போது வளராமல் கிடந்திருக்கிறது. நிலவளம் இல்லாததால் தமிழர்கள் எல்லாம் நன்றாக படித்துவிட்டு பிரிட்டீஷ் ஆட்சியில் அரசு வேலைக்குப் போய்விட்டார்கள். பிரிட்டீஷ் காலத்தில் 90 சதவீதம் அரசு ஊழியர்கள் தமிழர்கள்தான் இருந்திருக்கிறார்கள். அதனால் சிங்களரை அவன் (பிரிட்டீஷ்) பொருட்படுத்தவே இல்லை.தாய்வழி சமூகத்தில் அன்று சிங்களர்கள் யாரும் யாருடனும் வாழலாம் என்ற நிலை இருந்திருக்கிறது. திருமணமாகாத சிங்களப் பெண்ணுக்கு குழந்தை பிறந்து பள்ளியில் படிக்கச் சென்றால் தகப்பனின் பெயர் கேட்பான். இவளுக்கு தகப்பனின் பெயர் தெரியாது. அதனால் யாரோ சாமிநாதப்பிள்ளை என்ற ஒருவருடைய பெயரையே பதிய வைத்திருக்கிறார்கள். இப்படியே நூறு பெயர்களுக்கு தகப்பன் சாமிநாதப் பிள்ளை என்று பதிய வைத்திருக்கிறார்கள். உடனே பிரிட்டீஷ்காரனுக்கு சந்தேகம் வந்துவிட்டது. என்னடா இது 100 பேருக்கு சாமிநாதப் பிள்ளைதான் தகப்பனா என்று விசாரித்துப் பார்த்தால் அந்த சாமிநாதப்பிள்ளை என்பவன் கிழவனாக இருக்கிறான். அவனிடம் அதிகாரி ஒரு சிங்களப் பெண்ணின் பெயரைச் சொல்லி `அந்தக் குழந்தைக்கு நீதான் தகப்பனா?' என்று கேட்டால் ஆமாம் என்றிருக்கிறான். அதிகாரிக்கு ஒரே குழப்பம். தொடர்ந்து விசாரித்ததில் ``பதிவு இல்லாமல் இருந்து போனால் அரசாங்கத்தில் சலுகை பெறமுடியாது. இந்தப் பெண் பிள்ளைகளைக் கெடுத்து ஏமாற்றிவிட்டு போய்விட்டார்கள் பாவம். அதான் என்னோட பெயரைக் கொடுத்தேன்'' என்று சொல்லி இருக்கிறான். இப்படிப்பட்ட பின்னணியில்தான் முத்துக்குமாரசாமி அம்மக்களுக்காக வாதாடி இருக்கிறார்'' என்று சிவராமு விளக்கினான். சிங்கள இன மக்களில் இருந்த பணக்காரர்கள் எல்லாம் அன்றைக்கு வெளிநாட்டில் இருந்தார்கள். சிலோனையே அவர்கள் பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால் சிங்களன் என்று தன்னைச் சொல்லிக் கொள்வார்கள்.ஆசியக் கண்டத்திலேயே முதல் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர் முத்துக்குமாரசாமிதான். `டிஸ்ரேலி' என்று ஒரு பிரதமர் இருந்தார். அவர் முத்துக்குமாரசாமியின் நண்பர். அவர் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அந்த நாவலில் வரும் கதாபாத்திரம் முத்துக்குமாரசாமியைக் குறிப்பதைப் போலவே இருக்கும். அதை நான் ஜெராக்ஸ் எடுத்து இன்றும் வைத்தி ருக்கிறேன். முத்துக்குமாரசாமி எலிசபெத் பீபி என்ற இங்கிலீஷ்காரியை கல்யாணம் பண்ணிக்கொண்டார். எலிசபெத் பீபி மிகப்பெரிய பணக்கார குடும்பம். அந்தக் குடும்பம் ஏற்கெனவே இந்தியாவில் வியாபாரம் செய்தவர்கள். அந்தப் பழக்கத்தில்தான் இருவருக்கும் கல்யாணம் நடந்தது. கல்யாணமாகி இரண்டு வருடத்திற்குப் பிறகு அதாவது 1877-ல் ஆனந்த குமாரசாமி பிறந்தார். குழந்தை பிறந்த கையோடு எலிசபெத் பீபி இங்கிலாந்திற்குச் சென்றுவிட்டார்.அவர் போன ஒரு வருடத்தில் முத்துக்குமாரசாமி இறந்துவிட்டார். இந்தத் தகவல் தெரிந்ததும் அந்த அம்மா சிலோன் திரும்பவே இல்லை. ஆனந்த குமாரசாமி இங்கிலாந்திலேயே வளர்ந்து தன்னுடைய 24 வயதில்தான் இந்தியாவிற்கே வருகிறார். இந்தியாவிற்கு வந்து கனிமங்களைப் பற்றி ஆய்வு செய்கிறார். அவர் ஒரு கனிமவியல் அறிஞர். இந்தியக் கலைகளின் மீது ஆர்வம் வர, பிறகு இந்த வேலையை விட்டுவிட்டார்.