Tuesday, July 27, 2010

எனக்கு தெரிந்த மெட்ராஸ்








மெட்ராஸ் என்றதும் உடனே மனதில் தோன்றும் உருவம் என் அப்பாவினுடையது.அவர் ஓர் உடல் உழைப்பாளி.தனது தொழிலுக்கான உபகரணங்களைக் கொள்முதல் செய்ய அவர் அடிக்கடி வந்துபோகும் ஊர்தான் மெட்ராஸ்.அப்படி அவர் தொழில் சம்பந்தமாக மெட்ராஸ் வர நேர்ந்தால் வீடு திரும்ப இரண்டு இரவுகள் ஆகும்.அவரின் தனிமையை நாங்கள் உணராமல் இருக்க போகும்போது எனக்கு கிஸ்தி கொடுத்துவிட்டுப் போவார்.மெட்ராஸ் பயணத்திற்கு அப்பா எப்போதும் தேர்ந்தெடுக்கும் நேரம் நள்ளிரவு.இரவு முழுக்க பயணம் பண்ணிவிட்டு அதிகாலையில் தலைநகரம் வந்து தன் வேலைகளை முடித்துக் கொண்டு மறுநாள் இரவு வீடு திரும்புவார்.அப்பா வீட்டிற்குள் நுழையும் போது பிராந்திவாடை நான் போர்த்தி இருக்கும் போர்வையையும் தாண்டி உள்ளே இறங்கும்.சென்னை போகும் போதெல்லாம் அப்பா குடித்துவிட்டு வீடு வந்தாலும் அம்மா உட்பட குடும்பத்தினர் அனைவரும் அவர் மெட்ராஸ் செல்வதை விரும்பினோம்.

அப்பா,வெளியூர் எங்கு சென்று வந்தாலும் வாய்க்கு ருசியான ஸ்வீட் பாக்ஸ்களை பெட்டி பெட்டியாக வாங்கி வருவார்.மெட்ராஸ் பயணம் என்றால் பழவகைகள் பை முழுக்க கனமாய் கனக்கும்.இரவிலேயே சிறுநீர் கழிக்க எழுவது மாதிரி எழுந்து யாருக்கும் தெரியாமல் அப்பா வாங்கிவந்திருக்கும் இனிப்புப் பெட்டிகளைப் பிரித்து தனியாகக் கொஞ்சம் எடுத்து வைத்துவிட்டு உறங்கி விடுவேன்.இப்படி திருடும்போது கவனமாக எல்லா பெட்டிகளிலும் ஒன்று மேனிக்கு லவட்டினால் இனிப்பு குறைந்திருப்பது தெரியாது என்பது ஐயாவின் ஐடியா.திருட்டும் அவ்வழியே நடக்கும்.வாங்கி வந்த இனிப்புப் பண்டங்களை மறுநாள் காலை உட்கார்ந்து தனித் தனியாக பங்கு போடுவார் அப்பா.பங்கில் ஒன்று வீட்டுக்கு.மற்றதெல்லாம் தன் நண்பர்களின் வீட்டுக்கு கொடுக்கச் சொல்லி எங்களிடம் கொடுத்தனுப்புவார்.அப்பா இன்றுவரை தன் வீட்டிற்கு மட்டும் என்று எந்தப் பொருளையும் வாங்கி வந்ததில்லை.அவரது சுபாவம் அப்படி.சம்பாத்தியத்தை சாப்பிட்டுப் பார்த்தே சாகவேண்டும் என்பது அவரது கொள்கை.அம்மாவுக்கு ஸ்வெட்டர் வாங்கினாலும் அதே தோற்றத்தில் பையில் மூன்று நான்கு இருக்கும்.அவை விடிந்ததும் வேறு வேறு வீட்டுக்குப் போய்விடும்.தானத் தம்பட்டம் அடிப்பதில் தாராள மனம் உள்ளவர் அப்பா.பின்னால் இதனால் தம்பிடு காசிற்கு வழியில்லாமல் குடும்பம் அழிந்தது தனிக் கதை.

அப்பாவின் தொழில் சார்ந்த பயணத்தின்போது அடம்பிடித்து அவருடன் ஒருமுறை மெட்ராஸுக்கு வந்து சேர்ந்தேன்.அதுவே எனக்கு முதல் மெட்ராஸ் பயணம்.அன்று இன்றுள்ளதைப் போல தங்கநாற்கர சாலை வசதியெல்லாம் கிடையாது.இரண்டு பேருந்துகள் மட்டுமே வந்துபோகின்ற அளவுக்கான சாலை வசதிகள்தான்.விழுப்புரத்தைத் தாண்டிவிட்டால் பேருந்துகள் எல்லாம் ஆமைநடை போடும்.அவ்வளவு வாகன நெரிசல்.திண்டிவனம் பேருந்து நிலையத்திற்குப் போவதற்கு முன் ஒரு பாலத்திற்கு அடியில் புகுந்து பேருந்து சென்றது.நல்ல மழைக்காலம் என்பதால் பேருந்தின் பாதியளவிற்கு மழைத் தண்ணீர் உயர்ந்து நின்றது.அந்தப் பாலம் இன்று இல்லை.பயணத்தின் போது மேல்மருவத்தூர் தாண்டி ஒரு லாரி தலைகீழாய் கவிழ்ந்து உருண்டதை நேருக்கு நேராய் பார்த்தேன்.பஸ்ஸில் பரிதாபப்பட்டுக்கொண்டே பலர் பயணித்தார்களே ஒழிய யாரும் வாகனத்தை நிறுத்த சொல்லவில்லை. லாரி உருண்ட வேகத்தில் இருவர் உள்ளிருந்து ரத்தம் வழிந்த முகத்தோடு வெளியே தவழ்ந்து தவழ்ந்து வந்தார்னர்.இவை எல்லாம் மின்னல் வேகக் காட்சியாக நடந்தேறியது.ஒருவழியாக மெட்ராஸுக்குள் பஸ் புகுந்தது.எனக்கு அண்ணாசாலையில் இருக்கும் மேம்பாலத்தைப் பார்க்கப் பார்க்க பிரமிப்பாக இருந்தது.இரண்டு புறங்களிலும் கம்பீரமாக குதிரையின் லகானைப் பிடித்துக்கொண்டு வீரர்கள் நிற்பதும்,அவர்களிடம் இருந்து திமிறிக்கொண்டு குதிரை துள்ளுவதுமான காட்சியைக் காணவே கிளர்ச்சியாக இருந்தது.அச்சிலை கிண்டி ரேஸ் கோர்ஸ் மூடப்பட்டதன் சின்னமாக எம்.ஜி.ஆர்.திறந்ததாக அப்பா அதற்கு அர்த்தம் சொன்னார்.ஆனால் எனக்கெதுவும் புரியவில்லை.அண்ணா மேம்பாலத்திற்கு அடியில் பேருந்துகள் நுழைந்து நுழைந்து போவதை பஸ்ஸின் ஜன்னல் வழியே அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.அந்தக் காலத்தில் மெட்ராஸ் மத்திய பேருந்து நிலையம் பாரிமுனையில்தான் இருந்தது.அங்குள்ள எழிலகம்,அப்புறம் நீதி மன்றம்,அர்மீனியன் தெருவில் உள்ள சர்ச்,பூக்கடை ஒட்டி இருந்த கடைவீதி என பலவற்றைப் பார்த்த ஞாபகம் இன்னும் நீரடியில் உருளும் கூழாங்கல்லாய் மனதில் கிடந்து உருளுகிறது.பகல் முழுக்க தன் வேலைகளுக்கான சாமான்களை தேடித்தேடி வாங்கி அப்பா,இரவு எட்டு மணிவாக்கில் பாரிஸ் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தார்.விருத்தாசலம் என்ற பெயர் பலகை பொறித்த தந்தைபெரியார் வண்டியில் என்னை தனியாக உட்கார வைத்துவிட்டு, பக்கத்திலேயே இருந்த பிராந்திக்கடைக்குள் புகுந்துகொண்டார்.அன்றைக்கு இன்றுள்ளதைப் போல மாடர்ன் பஸ்கள் எல்லாம் கிடையாது.பேருந்தின் உள்ளே நுழைந்தாலே வாந்தியும் பேதியுமாக இருக்கும்.குறைந்தது எங்கள் ஊருக்குப் பயணநேரம் பத்து மணி நேரம் ஆகும்.பயணத்தில் ஏகப்பட்ட இன்னல்கள் வேறு. பேருந்தின் புகை பொத்துக்கொண்டு இருக்கை மீதாக எழும்பும்.இப்படியான வசதிகள் கொண்ட பேருந்துகள்தான் அன்றைக்கு ஓடின.கும்பகோணம் திருவள்ளுவர் பேருந்து என்றால் அப்பா ஏறவே மாட்டார்.காரணம்;கூடுதல் கட்டணம்.அதோடு அந்த டிப்போ வண்டி ஒழுங்காய் ஊர்போய்ச் சேராது என்ற கற்பிதமும் அன்று நிலவியது.நான் தட்டுமுட்டு சாமான்கள் நிறைந்த பைகளுடன் பேருந்திற்குள் தவியாய் தவித்தேன்.அவர் வாங்கிக் கொடுத்துவிட்டுப் போன மிக்ஸர் பொட்டலம் தீர்ந்த பிறகும் அவர் வந்தபாடில்லை.டிரைவர் வண்டியை ஸ்டார்ட் பண்ணி கொஞ்ச நேரம் ஆடவிட்டபடி இருக்க,வண்டியின் உள்ளே அப்பா புகுந்தார்.அதோடு கண்ணயர்ந்தவன்தான், ஊர் வந்த
பிறகுதான் விழித்தேன்.

விவரம் அறியாத வயதில் அப்பாவோடு மெட்ராஸ் வந்து போன பிறகு அண்ணனின் நண்பன் ஒருவன் கிண்டி ஐ.டி.ஐ.யில் படிப்பதாக அறிந்து அவனைப் பார்க்க நானும் அண்ணனும் மெட்ராஸ் வந்தோம்.அப்போதும் இதற்கு மெட்ராஸ் என்றே பெயர்.கிண்டி அரசு ஐ.டி.ஐ.யின் மொட்டை மாடியில் நிலா வெளிச்சம் முகத்தில் அப்ப அப்படியே ஓர் இரவு முழுக்க படுத்துக்கிடந்தோம்.பக்கத்தில் சதசதவென்று சத்தம் கேட்டு எழுந்த எனக்கு ஒரே அதிர்ச்சி.மாடி மேலிருந்து நின்றமேனிக்கு ஒரு மாணவன் கீழே மூத்திரம் பெய்துகொண்டிருந்தான்.அப்போதுதான் மாடி முழுக்க மூத்திரவாடை அப்பிக்கிடப்பதை உணர்ந்தேன். மூக்கைப் பிடித்துக் கொண்டு உறங்கியவன் விடியும்வரை நான் எழவே இல்லை.காலையில் எழுந்து புதியதாக வாங்கி வந்த பேஸ்ட் பிரெஷ்ஷை பாத் ரூமுக்கு எடுத்துக் கொண்டு போகும் வழியில் குறுக்கே புகுந்த தடியன் ஒருவன் “என்னோட பிரெஷ்ஷ நீ எடுத்துகிட்டியா?”என்று லடக்கென என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டான்.என் பொருளை தன்னுடையது என ஒருவன் ஏமாற்றிப் பிடுங்கிக் கொண்டதை என்னால் ஜீரணிக்க முடியாமல் வெதும்பினேன். அதை ஒரு பெரிய விஷயமாக யாருமே எடுத்துக் கொள்ளவில்லை.அவதி அவதியாகக் குளித்துவிட்டு நானும் அண்ணனும் அங்கிருந்து முதலில் வெளியேறினோம்.
மாலை வரை மெட்ராஸில் கண்டமேனிக்கு கால்கள் உளைய சுற்றினோம்.சுற்றிவிட்டு பாரிஸ் பேருந்து நிலையம் வரும் வழியில் உள்ள தெருவோர பஜாரில் ஏதோ ஒரு பொருளை நான் பார்க்க,மனம் கொஞ்சம் அலைபாய்ந்து.அருகில் போய் விலை விசாரித்தேன்.கடைக்காரன் முதலில் கையில் வாங்கிப் பார்க்குமாறு சொல்ல,நானும் ஆர்வமிகுதியில் கையில் வாங்கிக் கொண்டேன். பிறகு அவன் சொன்ன விலை அதிகம் என உணர்ந்ததால் வேண்டாமென்று திருப்பிக் கொடுத்தால் பொருளை வாங்க மறுக்கிறான். “எவ்வளவுக்கு வேண்டும்னு சொல்லுங்க குறைச்சுக் கொடுக்குறேன்”என்றான்.அவன் விலையை அடிமட்டமாகக் குறைத்தாலும் எங்களிடம் வாங்க காசில்லை.ஊர் திரும்ப மட்டுமே கையில் காசை இருக்கிப் பிடித்திருந்தோம். முயல் பிடிக்குற நாயை மூஞ்சப் பார்த்தாலே தெரியும் என்று எங்களூரில் ஒரு சொலவடை உண்டு.அதேபோல் எங்களிடம் பணமில்லை என்பதை அறிந்த கடைக்காரன் அசிங்கமாக ஒருமையில் பேச, அண்ணனும் கொஞ்சம் குரலை உயர்த்த, இடம் கலவரக் கோலம் மூண்டுவிட்டது.பக்கத்து கடைக்காரர்கள் எல்லோரும் ரவுடிகளைப்போல ஒன்றாக சேர்ந்துகொண்டு எங்களை வம்புக்கு அழைப்பது போல் கேலி பேசினார்கள்.எனக்கு அழுகை வந்துவிட்டது.ஒருவழியாக அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அங்கிருந்து வெளியேறினோம். வண்டி பிடித்து ஊர்த் திரும்பும் வரை எங்கள் அள்ளு எங்கள் கையில் இல்லை.

இதற்கப்புறம் நான் சென்னைக்கு வந்தது 1994ம் ஆண்டு.அப்போது நான் தி.மு.க.வின் தொண்டனாக இருந்தேன்.இன்னும் சரியாகச் சொன்னால் கலைஞரின் தீவிர வெறியன்.கலைஞரை என் வீட்டில் யாராவது கருணநிதி என்று பெயர் சொல்லி அழைத்தால் வீடே ரெண்டுபட்டு போகும்.அவர்களை அடிக்கவும் தயங்காது என் கைகள்.ஓட்டுப் போடக்கூட வயது வராத பருவத்தில் கலைஞருக்காக கள்ளவோட்டு போடவும் நான் தயங்கியவனில்லை.எங்கள் தெருவில் ஒரு நாடார் மளிகைக் கடை இருந்தது.அதன் உரிமையாளரின் பெயர் ராமச்சந்திரன்.அவர் ஒரு தி.மு.கழகத்துக்காரர்.எங்கள் 12வார்டில் அவரைத் தெரியாமல் யாரும் கட்சியில் இருப்பது அரிது. அதோடு எம்.செல்வராஜ் அளவுக்கு நேரடி பழக்கம் கொண்டவர்.எம்.செல்வராஜ் அண்ணா காலத்து எங்களூர் தி.மு.க.எம்.எல்.ஏ.அதோடு சாகும் வரை தி.மு.கழகத்தின் தலைமைக்கழக அமைப்பு செயலாளராக பதவிவகித்தவர். ராமச்சந்திரனின் மளிகைக் கடைக்கு தினம் மாலையில் போய் உட்கார்ந்துவிடுவேன். அவரிடம் தி.மு.க.வின் உறுப்பினர் அட்டை ஒன்று கேட்டிருந்தேன்.அது கிடைத்துவிட்டால் ஊரையே உண்டு இல்லாமல் ஆக்கிவிடலாம் என்பது அப்போது என் எண்ணம்.அதனுடன் கை அகலத்திற்கு கறைபோட்ட தி.மு.க.வின் துண்டு ஒன்றையும் கேட்டிருந்தேன்.துண்டை எம்.எஸ்.வீட்டிற்குப் போகும் போது வாங்கி வந்து தருவதாக உறுதியளித்திருந்தார் அவர்.அவற்றைப் பெற தினமும் என்னையும் அறியாமல் அவர்கடையை நோக்கி என் கால்கள் நடக்க ஆரம்பித்துவிடும்.சில நாட்களில் அவ்ர் கடைக்கு நான் வழக்கத்திற்கு மாறாக காலையிலேயே போய்விடுவதும் உண்டு. அவர் வாங்கிக் கொடுக்கப்போகிற துண்டிற்காகவும் உறுப்பினர் அட்டைக்காகவும் பல ஏவல் வேலைகள் புரிந்திருக்கிறேன். அவர் சைக்கிளில் மார்கெட்டிலிருந்து தன் கடைக்கு ஏற்றிவரும் காய்கறி மூட்டைகளை பொறுப்பாய் இறக்கி வைத்து அவருக்கு பணிசெய்வேன். எந்த வேலையை செய்தாலும் பரவாயில்லை, அவரின் மனதில் இடம்பிடித்து ஒரு துண்டும் உறுப்பினர் அட்டையையும் வாங்கிவிட வேண்டுமென கங்கணம் கட்டி பலநாள் வேலை பார்த்தேன். அவரும் என் ஆர்வத்தை புரிந்துகொண்டு எனக்கு ஒரு வாய்ப்பை நல்கினார்.“நாளைக்கு தி.மு.க.வில் புதியதாக இணைய மெட்ராஸுக்கு இரண்டு வண்டியில் எ.எஸ்.தலைமையில் ஆட்கள் போகிறார்கள்.நீயும் போறீயா?”என்றார்.கரும்பு தின்ன கூலியா?உடனே கிளம்பிவிட்டேன்.வண்டியில் வரும் போது மனம் முழுக்க ஒரே ஆசைதான் இருந்தது.அது எப்படியாவது கலைஞருடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்வது என்ற ஆசை.நினைத்ததைப் போன்றே வண்டி அறிவாலயத்தை வந்தடைந்தது.முற்பகல் இருக்கும்.“இப்போதுதான் தலைவர் புறப்பட்டார்.கொஞ்சம் முன்கூட்டி வந்திருக்கக் கூடாதா?இனி மாலை ஆறு மணிக்குதான் வருவார்.அதுவரை எங்காவது போய் சுற்றிப்பார்த்துவிட்டு வாருங்கள்”என்று கழக அலுவலகத்திற்குள்ளிருந்து வெள்ளை வேட்டியும் சட்டையுமாக வந்த ஒரு மெலிந்துபோன உருவம் எங்களிடம் சொன்னது.அவர்தான் எம்.செல்வராஜ் என்பது பிறகு அறிந்துகொண்டேன். ஊரைச் சுற்றி பார்க்க எனக்கு மனமில்லை.அறிவாலயத்தின் முன்னும் பின்னுமாக சுற்றிக்கொண்டிருந்தேன்.அங்கே சன் டி.வி.யின் தொகுப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் ஷூட் நடந்து கொண்டிருந்தது.அவரை டி.வி.யில் பார்த்த ஞாபகம்.ஆனால் சரியாக அடையாளம் தெரியவில்லை.அவரிடம் போய் “நீங்க சன் டி.வி.யில வர்றவருதானே”என்றேன்.“ஆமாம்” என்றவர், “எந்த நிகழ்ச்சியின்னு சொல்லுங்க பார்ப்போம்”என்றார்.தலையே வெடிக்கிற அளவுக்கு நினைவுபடுத்த முயன்றும் முடியவில்லை.பெயரை மட்டும் சரியாகச் சொல்லிவிட்டேன்.பிறகு அவரே தன் நிகழ்ச்சியின் பெயரை குறிப்பிட்டார்.கட்சியில் இணையும் போது படம் எடுப்பதற்காக எங்களுடன் வந்திருந்த புகைப்படக் கலைஞரிடம் கெஞ்சிக் கூத்தாடி ஜேம்ஸோடு ஒரு படம் எடுத்துக் கொண்டேன்.நான் புகைப்படம் எடுத்த முதல் வி.ஐ.பி.ஜேம்ஸ்தான்.இவ்வளவுக்கும் புகைப்படக்காரர் ஆகமட்டும் படமெடுக்க மறுத்தார். ஃபிலிம்ரோல் தீர்ந்துவிட்டால் வந்த வேலை கெட்டுப்போகும் என்று அஞ்சினார்.அன்றைக்கு ஒரு புகைப்படம் எடுப்பதில் ஏகப்பட்ட சிரமங்கள் இருந்தன.பிறகு அறிவாலயத்தின் ஒதுக்குப்புறமாக அப்படியே உறங்கிவிட்டேன்.மாலை ஊர்சுற்றிவிட்டு வந்தவர்கள் என்னை எழுப்பினார்கள்.அங்கேயே உள்ள பைப்பில் முகம் அலம்பினேன்.“தலைவர் வருகின்ற நேரம் தயாராக
இருங்கள் ”என எம்.எஸ்.எச்சரித்துவிட்டுப் போனார். இரவு எட்டாகியும் கலைஞர் வரவில்லை.பின் அவர் ஏதோ அவசரக் கூட்டத்திற்குப் போய்விட்டதாக தகவல் வந்தது. “சரி,பேராசிரியர் இருக்கிறார்.அவர் தலைமையில் இணைந்துவிடுங்கள்”என்றார் எம்.எஸ். உடனே எல்லோரும் உள்ளே போனார்கள்.நான் மட்டும் போகவில்லை. என்னை காணவில்லை என்றதும் தேடிக்கொண்டு வெளியே வந்த ஆள் அதட்டி உள்ளே அழைத்துக் கொண்டுபோனார்.“கலைஞர் தலைமையில் கட்சியில் சேர்வதாக இருந்தால் நான் உள்ளே வருகிறேன்.இல்லையென்றால் என்னை விட்டுவிடுங்கள்”என்றேன் அவரிடம்.அவர் என்னை சமாதானப்படுத்தி அழைத்துக்கொண்டுபோனார்.கட்சியில் இணைந்தவுடன் க.அன்பழகனோடு எல்லோரும் சேர்ந்து இன்முகத்தோடு ஒரு குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.புகைப்படத்தில் அத்தனைபேர் முகத்திலும் ஏக மகிழ்ச்சி.நான் மட்டுமே உள்ளுக்குள் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன்.அந்த வருத்தத்திற்குள் அன்றைக்கு இருந்த அர்த்தம் வேறு.இன்றைக்கு இருக்கின்ற பொருள் வேறு.