(1)
பழுக்காத இலை
காலம் மாறாமல்
தருநிழல் ஓரம் அமர்ந்து
நான்கு பேர் சதாப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
வழவழப்பான ஃபோர்னோ புத்தகம்,முதல் சுயமைதுனம்
தீட்டுத் துணி,பூப்பெய்திய ஜூலி அக்கா என,அவர்கள்
வார்த்தைப் பூதம் வளர்ந்து தரைத் தட்டி நிற்கிறது
அப்போது
பருவத்தின் முகவாசல் வழியே புகுந்து
புறவாசல் வழியே வெளியேறுகிறது, இளமான் ஒன்று
நால்வரில் ஒருவன் வெளிர் மஞ்சள்நிற
அவ்விளமானை பார்க்கிறான்
மேயாத மானை.
மேயாதமானை மாயமான் விரட்டுகிறது
முன்னவள் கண்ணில் விழுந்த மான்
பின்னவன் கண்ணில் காணாமல் மறைந்தது
இருஜோடி
இமையை திறந்து-
ஒரே நேரத்தில் நான்கு கண்களுக்குள்
உள்ளே இறங்குகிறான் ஒருவன்
அப்போது
மான் ஓட்டத்திற்கு தக்க
தலையில் நரை பரவ ஆரம்பிக்கிறது ஒருவனுக்கு
மீதம் மூவர் புள்ளிமானின் வேகத்தை பின்தொடர்கிறார்கள்
நண்பர்களுக்கும் மானுக்குமான இடைவெளி-அங்கே
ஒரு சிறுகல் தோட்டம்.அதற்குள் அகண்ட நந்தவனம்
மாயமானை மேயவிடுகிறேன்
காலம் மாறாது, நால்வர் அமரும் அம்மரக் கிளையில்
ஒரு பச்சை இலையும் பழுப்பதேயில்லை
(2)
என் ஏழுக்கழுதைகள்
எனக்கு ஏழுக்கழுதை வயசாகிவிட்டது
வளர்ந்து நடைபழகிய நாலாவது மாசம்,கக்குவான் பயத்தில்
பாலாடைக்கட்டியில் அம்மா கழுதைப்பால் ஊட்டிய தேதியில்-
என் முதல்கழுதையோடு நான் சிநேகிதம் கொண்டேன்
பசங்களோடு தள்ளுமுள்ளு நடத்தி
பள்ளிச்சீருடையில் தார்பூசி கொண்டதற்காக
அப்பா சுண்டுவிரல் பிடித்தப்போய்
வண்ணாந்துறைக் குட்டிக்கழுதைக்கு நான் பெயர்ச்சூட்டி
அழைத்த அன்றைக்கு- என் வயிற்றுகுள்
இரண்டாவது கழுதை வளர ஆரம்பித்தது
உடும்புப்பிடியவிழ்க்க ஏழுகழுதைகள் காதில்
கட்டெறுப்பை கடிக்கவிட்டு
உரக்கக் கத்திய பின், பிடியவிழுக்கும் தந்திரம் பற்றிப்
பாட்டி கதைவிட்ட அன்று
என் மூன்று கழுதைகளை உறவுக்கு விட்டேன். என்
நாலாவது கழுதையோடுதான் பாரதி அக்ரஹாரத்திற்குள் நுழைந்தான்
ஜான் ஆப்ரஹானை படித்தக் காலத்தில்
எனக்கு ஐந்துகழுதை வயசு பூர்தியாகிவிட்டது
என் ஆறாவது கழுதை வளர்ந்ததும்
ஓட்டிக்கொண்டு நகரத்திற்கு வந்துசேர்ந்தேன்
இப்போது என் ஏழாவது கழுதை
மேஜையில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருக்கிறது
தீரா ஆசையை,
தீர்ந்த வாழ்க்கையை
(3)
என் என்றுகள்
எல்லாம் சொல்கிறார்கள்:
என்னால் முடியும் என்று.எனக்கு இலகுவா
னதென்று.எனக்கு இது சின்னக் காரியம் என்று
மனம் வைத்தால் நடத்திவிடலாம் என்று
நையா பைசா செலவில்லை என்று
என்று என்று என்று
என்று என்று என்று
அறியாமை நட்சத்திரம் என் வானில் தட்டி நிற்கிறது
பிடுங்கி வெளியில் வீசுகிறேன் அதை.ஊருக்கு அப்பால்
அதன் ஒளியை காஃபி ஆற்றுவது போல
ஊதி ஊதி குழந்தைக்கு ஊட்டுகிறாள் அம்மா.ஒளியின்
கூர்மை கொஞ்சம் தரையில் சிந்துகிறது.அந்தக் கறையை
நக்கும் கோம்பை நாய்க்கு நாக்கேயில்லை
அவர்கள் தராசில்,எனது என்று.எடை கூடுகிறது எப்பவும்
கர்ணன் தர்மத்தட்டில் என் என்று.அரிந்து வைக்க வாளை உருவினேன்
உறைக்கு வெளியே,புறாக்களுடன் பல என்றுகள் படப்படக்கின்றன
புறா நகக்கணுவில் வளரும் என் சின்ன காரியங்களை
என் தட்டில் இறக்கிவைத்தவன் -
பிட்டுக்கு மண்சுமந்தவன்.
ஆட்டுக்குட்டிக்கு உடன் நின்றவன்.பாலை
மேட்டுக்குள் பண்பை வகுத்தவன்.
சின்னபாரம்
பெரியதாக கனம்
சின்னவரம்.பெரிய பலன்
எனக்கு ஒரே சங்கடம்
அவர்கள் என்னை பார்க்க முடிவதைபோல்
வெளியில் இருந்து
என்னை நானே பார்க்க முடிந்தால்
எவ்வளவு நல்லது
(4)
தொலைந்து போதல்:1
ஒரு நண்பனின் நண்பரை, இன்னொரு நண்பருக்கு அறிமுகம் செய்ய
நண்பனின் நண்பர் வீட்டுக்குப் போனேன்
அந்த நண்பனின் நண்பன், அறிமுக நண்பனையும் என்னையும்
பத்மாவதி மண்டபம் பக்கம் நிற்கும் வீட்டுக்கு
பொட்டிக்கடை அடையாளம் என்றான்
பத்மாவதி பத்மாவதி என முணுமுணுத்தன என் உதடுகள்
நடக்கும் வழி மறித்து
வெடித்து உதிரும் கூந்தல்பனை பூக்கொட்டி
என் ஞாபகப் பலகை முறிந்து போனது.பனைகரு
வளையங்களிலிருந்து என் மரபுவழியே நடக்கத் தொடங்கினேன்
மண்டபம் அறிந்த நாங்கள்
அந்த நண்பனின் நண்பன்
வீட்டை பார்த்தோம்:
அவன் ஒளித்து வைத்த வீடு,
கண்டுபிடிக்க கண்டுபிடிக்க எங்கோ
மறைந்து மறைந்து நகர்கிறது
தொலைந்து போதல்:2
இன்று சிறுமியைக் கடத்திக்
கொண்டு போனவர்கள் யார், தெரியாது
டி.வி.யில் செய்திப் படித்தவளுக்கு
இதே ஏக்கம் இருந்திருக்கலாம்
யாருக்கும் யாருக்கும் இடையில்
எத்தனை செ.மீட்டர் அளவுக்
காணாமல் போனால் அவள்
எட்டித் தொட முடிகின்ற
என் மூளைக்கு எட்டாத தூரம்
ஃபேன் காற்றைப் போல சோகத்தை
குறைத்து கூட்ட முடிந்தால் எவ்வளவு நல்லது.அல்லது
ஒரு ரேடியோ பெட்டியின் திசைமுள் இருந்தால்
நிலையத்தை தாண்டி, கொஞ்சம்
தள்ளிப் போயாவது நிறுத்தலாம்
சிறுமி,திரும்பும் திசையை கயல் உள் ஒளித்தவள்
கையிருப்பு தீர்ந்த கையோடு வீடு திரும்பக் கூடும்
அன்று வீட்டின் சோகத்தை ஒரு
துடப்பத்தால் வெளியே தள்ளிவிட்டுவிடலாம்
அல்லது
மூளைக்கும்
கைமறதிக்கும்
இடையில்
வைத்தாவதுவிடலாம்
(5)
அனாதிகால குறத்தி
தெருக்களில் ஆடிக் கொண்ருந்த பிள்ளைகள்
போன இடத்தில் அப்படியே அப்படியே வளர்ந்துவிட்டார்கள்
மஞ்சள் சாமந்தியைப் போல
தீராத விளையாட்டுப் பிள்ளை
இப்போது தெருக்களில் இல்லை
சரக்கொன்றை மலர் மாதிரி
இருந்ததும்,
மிச்ச சொச்சமாய் மறைந்தன,
பசலைப் பந்தல்கள்
பித்தளைப் பாத்திரத்தின் மகத்துவமான வெளிச்சத்தை
சில்வர் தட்டுகள் செயலிழக்கச் செய்துவிட்டன
மண் பாண்டங்களை பித்தளை தின்றதும், அவ்வாறே
மண்.பித்தளை.சில்வர்.என,சிறுகிளையில்
மலர்கிறது காலம்,பெரிதாக
சூரியகாந்தி பூப்போல.அதன்
அல்லிவட்டம்
புள்ளிவட்டம்
அயல்மகர்ந்தச்சேர்க்கை
எல்லாம் தாண்டி
நிற்கிறது ஒரு
பன்னாட்டு நரி.
அதன் கொம்பைப் பிடுங்க
பஜாரில் திரிகிறாள்
ஓர் அனாதிகால குறத்தி.
அவளது பழமை
தாராளக்கொள்கையை
கொஞ்சம் கொஞ்சமாக
துடைத்துக் கொண்
டு
ள்
ள
து
(6)
பங்கு
பெரிய மனிதர் போர்வையில்
தீங்கு செய்ததாக
டி.வி.யில் காட்டுகிறார்கள் ஒருவரை
அவர் தன் தலையை, துண்டைப்போட்டு
ஒளித்துவைக்கிறார்.
பத்திரிகைகள் அவர் தலையைத் தேடுகின்றன
டி.வி.க்கு வெளியே தலையைத் தொலைத்தவனை பார்த்து
"இது என்ன ஜென்மமோ "என்கிறாள் ஒருத்தி-
அண்டை வீட்டுச் சுவருக்குள் தொங்கும்
அடுக்கு செம்பருத்தியை ஒடித்து
புடவை முந்தியில் மறைத்த படி.
பெரணிச் செடியைவிட்டு இறங்கிய நத்தை
தன் பங்கிற்கு
தரையில் எதையோ எழுதிச் செல்கிறது
(7)
கண்ணாடிக் கிணறு
எனக்கு கண்கள் கண்ணாடியில் இருக்கின்றன
கீழே விழுந்து,தரையில் உடையும் கண்ணாடிக் கண்கள்
கூடிக் கூடி மூன்றாம் கண் ஆகிறது
மூக்கின் வரம்பில் ஒரு கண்ணாடி.முகம் காட்ட
மறு கண்ணாடி.ஒரு கண்ணாடி,புகுந்து
இன்னொரு கண்ணாடிக்கு போகிறது.வெளிக்கண்ணாடி,
புகுந்து முதல் கண்ணாடிக்கு திரும்புகிறது.புகுந்து
புகுந்து போகிறேன்.அங்கே
சலூன்கடை பெரிய கண்ணாடி.எனக்கு அதில்
நான்கு உடல்கள்.முகத்தின் முன்னே இரு உடல்கள்
முதுகுவுக்கு பின்னே இரண்டு உடல்கள்.பிம்பங்கள்
மோதும் ஓர் இடத்தில் ஐந்து இருக்கைகள்.என் ஐந்து
இருக்கையிருந்து ஓர் உடலாக வெளியேறுகிறேன்.என் ஓர்
உடலிலிருந்து வெளியேறிய நான்கு உடல்கள்
ஒவ்வொன்றாக இடறி கிணற்றில் விழுகின்றன,ஆண்டாளின்
கண்ணாடிக் கிணற்றில்.கிணற்று அடியில்
சரலைக்கல்போல அலையுறுகிறது ஆண்டாளின் முகம்.அதன்
இயலை கல்சிற்பம் ஒன்று,நூற்றாண்டுக்கு வெளியே காவல் காக்கிறது.
கற்சிலை வெளியே,உள்ளே
என் அவமானங்கள்-
என்னை கேலி செய்கின்றன
வீடு திரும்புகிறேன்
உனக்கு கண்கள் முகத்தில் இல்லை.
அம்மா திட்டுகையில்,தினசரி எனக்கு
எப்போதும் புறமுதுகில் கண்கள்
(8)
பருவ மேடு
மூன்று பேர்கள்,
தீராதப் பருவ மேட்டில் அமர்ந்து
கதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்
கூடவே அருகம்புல் ஒன்று கதைக்கேட்டு வளர்கிறது
அதன் வீம்பு மூவர் தலையில் கருமையாக படர்ந்து கொண்டிருக்கிறது,
ஒரு கதை தொடக்கத்திற்கும்,
முடிவுக்குமான தூரம்- மூன்றுபேரில் ஒருவன்
வளர்ந்து கதைக்குள்ளிருந்து வெளியேறினான்
மீதம் இருவரின் கையசைப்பில் மறுபடி வளர்கிறது புல்
காலமற்று கதையின் உள்ளே உட்கார்ந்து,
கதைக் கேட்டபடி இருக்கிறார், ஒரு ஊருல ஒரு ராஜா
கதைக்கு வெளியிலிருந்து அவருக்கு கதை சொன்னார்கள் சிறார்கள்
ஊரறிந்த ராஜவுக்கு, கதையின் உள்ளே ஒன்றும் தெரிவதில்லை.
மங்களாக மிதக்கும் வார்த்தைகளை அவர் பொறுக்கித்தின்பதோடு சரி
சூரியன் திரும்பாத பருவ இருட்டில்
சிறுவர்கள் பிடித்து வைத்த பொண்வண்டு வெளிச்சத்தில்
மிதக்கிறது, சலனமற்றக் காடு
காட்டின் பருவ முட்டைகளை புசித்தப் பிள்ளைகள்
கரையிலிருந்து போய் சேர்கிறார்கள்,மறுபடி கதைக்குள்