Friday, February 4, 2011

நாடோடி இயக்குநரும் புத்தகச் சந்தையும் (பார்ட்2)




இரண்டாவது பத்தி எழுதும் அளவிற்கு இந்த வருட புத்தகச் சந்தை எனக்கு தகவல்களை கொடுத்திருக்கிறது.பொதுவாக புது வருடம் பிறக்கப்போகிறதென்றால் சென்னையில் எல்லோரும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகிவிடுகிறார்கள்.நம்பை போன்றவர்களுக்கு அதும் ஒரு அடுத்த நாள் காலை அவ்வளவுதான்.அதை தாண்டி குதூகலிக்க அதில் ஒரு சந்தோஷமும் இல்லை.
புத்தாண்டு பிறக்கப்போகும் இரவை சென்னை வந்தகாலத்திலிருந்து சைதாப்பேட்டை த.மு.எ.க.ச.கிளை நடத்தும் கலை இரவுவில் கழிப்பது வழக்கமாகிப் போனது.வருடம்தோரும் போன வேகத்திலேயே ஒட்டாமல் திரும்பிவிடுவேன்.ஆனால் இந்த வருடம் அப்படியில்லை.முழு இரவையும் கலை ராத்திரியில் கழித்தேன்.கொட்டும் பனியையும் கொண்டல் காற்றையும் பொருட்படுத்தாது உட்கார்ந்து நாட்டுபுறக் கலை விழாவையும் ஆட்டக்கலைஞர்களின் ஆளுமையையும் கண்டு ரசித்தேன். ப்ரகதீஸின் புதுகோட்டை பூபாளம் கலைக்குழு வழங்கிய நையாண்டி கலை நிகழ்ச்சி பிரமாதமாக இருந்தது.மனிதர் சமகால அரசியல் பகடிகளை அவிழ்த்துவிட்டார் பாருங்கள் என் வயிறு புண்ணாகிபோனது.சிரிப்பு சிரிப்பு ஒரே சிரிப்புதான்.நிறுத்தாமல் அசரடித்தார் மனிதர்.நண்பர்களிடம் விசாரித்தபோது அவர் மக்கள் தொலை தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நட்த்துபவர் என்றார்கள்.நான் பார்த்ததில்லை.

கலை இரவு நிகழ்ச்சியில் நல்ல சினிமா இயக்குநர்களுக்கு விருதும் கொடுக்கிறார்கள்.அந்த வருடத்தில் வந்த ஆரோக்கியமான படங்களுக்கு எளிமையான விருது என்றார்கள்.மதராசப்பட்டினத்தின் இயக்குநர் விஜய்க்கு ஒரு விருது கொடுத்தார்கள்.அவர் பேசும்போது இந்தப் படத்திற்கு கிடைத்த முதல் விருது இதுதான் எனவே வாழ்நாளில் மறக்கவே மாட்டேன் என நெகிழ்ந்தார்.அப்புறம் பல இயக்குநர்கள் வந்தார்கள்.மதராசப்பட்டினம் நல்லப்படம் என்று சொல்லமுடியாது.அது ஒரு ப்ரீயட் ஃபிலிம்.அதில் இருக்கும் அக்கபோர் சமாச்சாரங்களை பட்டியலிட்டால் கட்டுரை சினிமாகட்டுரையாகிபோகும் அபாயமுள்ளது.ஆகவே தவிர்த்துமுன்னேறுகிறேன். பொதுவாக த.மு.எ.க.ச.போன்ற பண்பாட்டு அமைப்புக்கு எது நல்ல சினிமா எது கேவலமான சினிமா என்பதெல்லாம் புரிவதில்லை.மொக்கைப்பட்த்தை தூக்கிக்கொண்டு ஆடுவார்கள்.அவர்களுக்கு தேவை படத்தின் அம்சமல்ல;பிரச்சாரம்.மூட்டைமூட்டையாக அறிவுரை சொல்லவேண்டும்.கருத்து பொட்டகமாக காட்சிக்கு காட்சி கதா பாத்திரம் கண்ணீர் வடிக்கவேண்டும்.உடனே காவியம்,யதார்த்தம்,அபாரமான நல்ல படம் என்பார்கள். படத்தில் இயக்குநர் பார்வைக்கு வரமலேயே காரல்மார்க்ஸின் சுவரோவியம் ஒன்று இடம் பெற்றிருக்கும்.உடனே புரட்சி படம் என்று புல்லரிப்பார்கள்.இவ்வளவுதான் இவர்களின் சினிமா ரசனை,கோட்பாடெல்லாம்.அந்த லட்சணத்தில் தான் விரு துவழங்கும் விழா இருந்தது. இந்த மாதிரி சின்ன எரிச்சலை கடந்துபோனால் நிறைய கலாபூர்வங்களை அனுபவிக்க முடிந்தது. இல்லையானால் பூ மாதிரி பேத்தல் படத்தின் பொட்டியை ஊர் ஊராக தூக்கி சுமந்து திரிந்திருப்பார்களா இவர்கள்?
ச.தமிழ்ச்செல்வனின் அந்தக் கதையை நானும் படித்திருக்கிறேன்.அந்தக் கதைக்கும் பட்த்திற்கும் பல்லாயிரம் பரலாங்கு தூரம்.இதை தமிழ்ச்செல்வனிடமே நான் சொல்லியும் உள்ளேன்.அவரும் ஆமாம் ஏதோ ஒப்பேற்றியிருந்தார்கள்.எனக்கே பிடிக்கவில்லை என்றார்.ஆனால் தொண்டர்களுக்கு பிடித்துவிட்ட்து.அதான் தலைமைக்கும் தொண்டனுக்குமான கலா இடைவெளி.

இந்த வருடம் புத்தகக் கண்காட்சியை ஒட்டியே எத்தனை நிகழ்ச்சிகள். ஒருபக்கம் சென்னை சங்கமம் சடங்கு.இன்னொரு பக்கம் நேஷ்னல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவும் தமிழக அரசின் கலைபண்பாட்டுத்துறையும் இணைந்து நடத்திய சர்வதேச நடகவிழா.ஒரு மனுஷன் எங்கதான் போவான். நாகேஷ் ஒரு படத்தின் படபிடிப்புக் காட்சி முடிந்த உடனேயே இன்னொரு அறைக்கு ஓடிபோய் முகத்தை அலம்பிவிட்டு அடுத்தப் பட்த்திற்கு ஒப்பணை செய்துகொள்வார் என்று ஒரு முறை காக்கா ராதாகிருஷ்ணன் என்ற மூத்த நடிகர் என்னிடம் சொன்னார்.ஏறகுறைய அப்படி ஆகிவிட்து கலை ரசிகர்களின் நிலைமை. ஒன்றை முடித்துகொண்டு அடுத்த இட்த்திற்கு போவதற்கு முன்னால் நாடகம் பாதி முடிந்திருக்கும்.அப்புறம் தலையும் புரியாது வாலும் புரியாது. எல்லோரும் சிரிக்கும்போது நாம் மட்டும் மெளனமாக உட்கார்ந்திருப்போம்.அப்படிதான் போனது என்னுடைய நிலமையும்.

முழுதாக பார்த்த மூன்று நாடகங்களில் இரண்டு நாடகங்கள் அற்புதமாகய் மிளிர்ந்தன. ஒன்று:அஸாம் நாடகம்.மற்றொன்று பெங்கால் நாடகம்.இதில் இந்தி நாடகம் சுத்த ஹம்பக். இந்தி நாடக ரசிகர்களின் காமெடி ரசனை சுமார்தான்.நாடகத்தில் ஒரு ஆண் தன்னை பெண்ணாகவே நினைத்து சகலத்தையும் செய்துகொள்கிறான். அக் கதா பாத்திரம் ஒரு திருநங்கை.நடை உடை பாவனை உட்பட மிதமிஞ்சிய பெண் தன்மை துருத்தி நிற்கிறது அவளிடம். அந்த திருநங்கையின் வீட்டு வேலையாள் ஒரு கிராமத்துப் பெண்.ஆனால் அவள் ரொம்பவும் இயல்பானவள்.உட்கார்வதிலிருந்து சாப்பிடுவது பழகுவது வரை அஷ்டகோணலாய் நடந்து கொள்கிறாள்.பெண் என்றால் எதிலும் ஒரு நளினம் தேவை என்கிறாள் ஆணிற்குள் ஒளிந்திருக்கும் பெண்.அதை எப்படி வேலைக்காரி கடைபிடிக்க வேண்டும் என்று கற்றும் கொடுக்கிறாள்.வேலைக்காரி அப்படியெல்லாம் கிடையாது இதுதான் சரி என்கிறாள். தன் இஷ்டப்படியே தாறுமாறாய் நடக்கிறாள்.இந்த விஷயம் நாடகத்தின் காட்சியில் எடக்கு மடக்கான நிகழ்த்திக் காட்டப்படுகிறது.வேலையாள் தொட்டதில் எல்லாம் குத்தம் பார்க்கிறாள் திருநங்கை.இவ்வாறு நீள்கிறது நாடகம்.
ஒருகாட்சியில் சாப்பிட வீட்டில் ஏதாவது இருக்கிறதா என வேலைக்காரி கேட்க,திருநங்கை சாப்பாடெல்லாம் இல்லை இந்த வெற்றிலையும் பாக்கும் தான் உள்ளது என பெட்டியை எடுத்து நீட்டுகிறாள்.வயிற்றிற்கு சாப்பாடே இல்லை.வெற்றிலை ஒரு கேடா என பிடுங்கி வாவில்போட்டு ராட்சஷிபோல மென்று காட்டுகிறாள் கிராமத்து நங்கை.உடனே இந்தி ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.நானும் நெய்தல் கிருஷ்ணனும் உன்மென்று உட்கார்ந்திருந்தோம்.எனக்கு இந்தி புரிந்து சிரிக்காமல் இருந்தேன்.நெய்தல் இந்திபுரியாமல் சிரிக்காமல் இருந்தார்.இதான் வித்தியாசம்.

அஸாம் நாடகம் உண்மையில் பிரமாதம். அஸாம் மொழியில் அவர்கள் பாடி இசைத்த நாட்டுபுற பாடல்கள் இன்னும் காதில் ஒலிக்கிறது என்றால் நீங்களே எப்படியிருந்த்து என்பதை புரிந்துகொள்ளுங்கள்.அவ்வளவு நேர்த்தியான நடிப்பு.எல்லா நடிகர்களின் முகமும் புத்தரைபோல தூய்மையாய் இருந்தன.
இந்த நாடகத்தின் கதை சுருக்கம்:
ஒரு திருடன் சாமியாரிடம் நான்கு சத்தியங்களை செய்து கொடுக்கிறான். இளவரசியை மணக்க மாட்டேன்.தங்க தட்டில் சாப்பிட மாட்டேன்.பொய் சொல்ல மாட்டேன். ராஜ பதவியை ஏற்கமாட்டேன். தன்னுடைய வாழ்க்கையில் இதெல்லாம் எங்கே நடந்துவிடப்போகிறது என்று நம்பி இவன் செய்த சத்தியங்கள் காலபோக்கில் கடைபிடிக்க முடியாமல் திண்டாடும் சூழல் உருவாகிறது.உண்மையில் இந்தத் திருடனை ஒரு இளவரசி மணமுடிக்க முன்வருகிறாள்.இவன் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு ஏற்க வருக்கிறான்.ராணியையே மணக்க சம்மதிக்கத்தால் அவனை இன்னலுக்கு உட்படுத்தி தண்டிக்கிறாள் ராணி. இப்படி செய்த சத்தியத்தையொட்டி பல சங்கடங்கள் நாடகத்தில் வந்தன.மொழிபுரியவில்லை ஆனால் அது ஒரு ப்ரச்னையே இல்லை.எல்லோரும் குலுங்கக் குலுங்கக் விழுந்து சிரித்தோம்.300 நபர்களுக்கு மேல் வந்திருந்தனர்.முதல் பார்வையாலர்கள் முழுக்க வசதியானவர்கள்.பார்வையிலேயே தெரிந்துவிட்டது.எல்லாம் கல்லூரு இளசுகள்.

திருடன் ஒரு சாமி சிலையை திருடும் காட்சி வெகு சிறப்பாய் நிகழ்த்திக்காட்டப்பட்டது.பார்த்துவிட்டு புல்லரித்துபோனேன்.பக்கத்தில் உட்கார்ந்திருந்த காலச்சுவடு கண்ணன் சிரித்த ஓரே காட்சியும் அதுதான்.அழகு!

பெங்கால் நாடகத்தை எழுதியவர் ரவிந்திரநாத் தாகூர்.மக்கள் கடவுளுக்கு காணிக்கையாக மிருகங்களை பலியிடுகிறார்கள்.இதை அரசன் தடுக்கிறான்.மக்களுக்கு உவப்பில்லாத அரசாணையை எதிர்த்து கலகம் செய்கிறார்கள்.இதான் மொத்தக் கதையின் சாரம்சம். நாடகத்தை பார்த்ததும் ஜெயல்லிதா தவிர்க்க முடியாமல் ஞாபகத்திற்கு வந்தார்.அந்தக் காலத்திலும் ஜெயலலிதாக்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு தாகூரின் நாடகமொரு அத்தாட்சி.இந்நாடகம் அவ்வளவு அழகியலாக இல்லை.தெலுங்கில் டப் செய்யப்படும் மந்திரவாதி படம்போல இருந்தது.வசனமும் காதில் அப்படியே ஒலித்தன.

கண்காட்சி,நாடகம்,சங்கமம், நடந்த இதே சமயத்தில் புத்தக வெளியிட்டு விழா,அசோகமித்திரனுக்கு சாரல் விருதளிப்பு விழா,திலிப்குமாருக்கு விளக்கு விருது கொடுக்கும் விழா என்று ஒரே விஷாகோலம்.
அசோகமித்திரனின் விருது விஷாவுக்கும் போனேன்.நிறைய கூட்டம்.ஃபிலிம் சேம்பரில் நடந்தது. கூடவே கலம்காரி ஓவிய கலைஞர்,ஸ்தபதி வித்யாசங்கர் என்று பலருக்கும் பாராட்டும் நடந்தது. ஜேடி-ஜெர்ரி வருடம் தோறும் வழங்கும் விருது.பிரபஞ்சன் அ.மி.யையும் அவர் படைப்பையும் கோடிட்டு காட்டிபேசினார்.
50 ஆயிரம் பரிசு தொகை படிப்படியாக 5லட்சமாக மாறவேண்டும் என்பது என் அவா என்றார். வழக்கமான சினிமாகாரகள் பாணியில் இதை 5லட்சமாக மாற்றுவது சுலபமானதொன்று, சொல்லுங்கள் உடனே மாற்றிவிடலாம் என்றார் இயக்குநர் லிங்குசாமி. பரிசை பெற்றுக்கொண்டு பேசிய அ.மி.,”எனக்கு எதுக்கு பரிசு பணமெல்லாம்.அதோட தெரிஞ்சவங்களே கொடுக்குற பரிசை வாங்குறதுல ஒரு சங்கோஜம் இருக்கு.சங்கடமிருக்கு. ஜேடி.ஜெர்ரியை இருபது வருஷமா எனக்கு தெரியும்.ஏதோ பிரியப்பட்டு கொடுக்குறாங்க.
5லட்சமா பரிசு தொகை மாறுனும்னு யாரோ பேசினாங்க.எவ்வளவு வந்து நான் இப்போ என்ன செய்யபோகிறேன்.இப்போ எனக்கு 80 வயசாகிடுச்சு.இனிமேல் இந்த 50 ஆயிரத்தை நான் என்ன பண்ணுவேன் சொல்லுங்கோ?”என்றார் வழக்கமான தன் நடையில்.ஆனால் இந்தக் கூட்ட்த்தில் அசோகமிரனின் பேச்சு ஏனோ அதிகம் பகடியாகயிருக்கவில்லை. திலிப்குமாரின் விளக்கு கூட்டத்தில் அ.மி.பேசும்போது செம கிண்டல்.குத்தல் எல்லாம் இருந்தன.

காலச்சுவடு ஏற்பாடி செய்திருந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு போயிருந்தேன்.தேவநேய பாவாணர் அரங்கில் நடக்க இருந்த நிகழ்ச்சிக்கு உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருத சிஸ்தர் ஜெஸ்மி,வாஸந்தி,பால் சக்காரியா,சுகுமாரனை அழைத்துகொண்டு காரில் புறப்பட்டேன். ஜெயலலிதா வீட்டு சாலையில் ஏக நெரிசல்.சக்காரியா அரண்டுபோய்விட்டார். மெளண்ட்ரோட்டில் பல இடங்களை அவருக்கு தெரிந்திருந்தது.பி.ஆர்.அண்ட் சன்ஸ் கடையை பற்றியும் அதன் பழமையை பற்றியும் சொன்னார். செம்மொழிபூங்கா,100கோடியில் கலைஞர் உருவாக்கிய நூலகம் வரை தமிழகத்து அன்றாட நடவடிக்கைகளை அறிந்து வைத்திருந்தார்.பாதி தமிழ் எடுத்தாளனுக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறதென்றே தெரிய்து.இவர்கள்பத்திரிகை படிக்கிறார்களா என்பதே சந்தேகம்.அப்புறம் என்கே அண்டை மாநிலத்தை பற்றி அறிந்துகொள்ளவது?

நாம் போவது 100கோடியில் கட்டிய நூலகமா என்றார்.இல்லை இது மாவட்ட தலைமை நூலகம் என்றேன். அப்படியா என்றார். கலைஞர் பற்றியும் சமகால அரசியல் பற்றியும் பேச்சு போனது.அதையெல்லம் சொல்லக்கூடாது.சஸ்பென்ஸ்! சுகுமாரன் சக்காரியாவோடு சரளமாக ஆங்கிலம் மலையாளத்தில் மாறிமாறி உரையாடி வந்தார்.சுகுமாரன் மலையாளம் சம்சாரிச்சு நான் இப்போதுதான் முதன்முறையாக கேட்டேன்.உண்மையில் க்ரேட் மேன்! மூன்று மொழி கற்ற புலவராயிற்றே!

கண்காட்சிக்காகவே 4பேண்ட் நாலு சட்டை புதுசாக வாங்கி இருந்தார் தேவிபாரதி.தினமும் ஒன்று என மாப்பிள்ளைகோலத்தில் மணந்தார்.ஆனால் எல்லாம் சர்பத் கலர் சட்டை.கொஞ்சம் கூட இன்றைய கால ஃபாஷன் இல்லை.மைதிலி இனி ச்ட்டை வாங்குவதாக இருந்தால் சொல்லுங்கள் நான் தேர்வு செய்துதருகிறேன் என்றார் தேவிபாரதியிடம். கா.சு.ஸ்டாலில் பழைய கா.சுவடுகளை இலவசமாக விநியோகித்தார்கள்.பபாசி அதற்கும் தாடை போட்டுவிட்டது.கலைஞர்தான் மக்களுக்கு இலவசமாக தரவேண்டும்.கண்ணன் தரகூடாது என அவர்கள் நினைத்திருக்கலாம்.
சாஹித்ய அகாடெமி பெயருக்கு கடைபோட்டிருந்தது.உள்ளே நூழந்தேன்.பாதி புத்தகங்கள் கன்னடமொழி புத்தகங்கள்.தமிழ்ல வச்சாலே எவனும் வாங்கமாட்டான்.கன்னடத்துல வைத்தால் எப்படி என்றேன்.கடையை பிடித்துவிட்டோம்.அகாடெமி அலுவலகத்தில் இருந்து நூற்களை கொண்டுவாருங்கள் என்று ஊழியர்களை அனுப்பி வைத்திருந்தோம்.போனவர்கள் கன்னட புத்தகத்தை எடுத்து வந்துவிட்டார்கள் என்றார்கள்.இந்த லட்சணத்தில் இருக்கிறது அகாடெமி.இவர்கள் கொடுக்கும் விருது மட்டும் விளங்குமா என்ன?

உயிர் எழுத்து செந்தில் இந்த வருடமும் ஸ்டால் போட்டிருந்தார்।போனேன்.”குடிக்குறதெ நிறுத்திட்டேன் மாப்ள.ஒன்லி சனி ஞாயிறு மட்டும் தான்.அதுவும் அளவுதாண்டுவதில்லை”என்றார். இந்த திடீர் முடிவால் அவ்ருக்கும் கொஞ்சம் பிறழ்வு ஏற்பட்டிருக்குமோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு இருந்தது அவரது உரையாடல். “ஃபர்ஸ்ட் லாஸ் ரூம் போட்டு இருக்கேன் மாப்ள.தினமும் ஒரு சினிமாகார வி.ஐ.பி.தான் அலோட்.நீ என்ன பண்ற முடிஞ்சா வடிவேலுவை கூட்டிகிட்டு நைட் ரூமுக்கு வந்துடு.சரக்க போட்டுகிட்டு ஜாலியா பேசிகிட்டு இருப்போம்”என்றார். வடிவேலுவை பார்க்க சாட்டிலைட் சானல்கள் தெவ்வுடு காத்துகொண்டிருக்கும் காலத்தில் மனிதன் குடிக்காமலே உலர ஆரம்பிச்சுட்டாரே? என்று சொல்லாமல் கொள்ளாமல் அங்கிருந்து நழுவிப்போனேன். வந்த பிறகு ஒரு பத்திரிகையாளரிடம் இருந்து போன். என்னவென்று விசாரித்ததில் ”உயிர் எழுத்து புத்தகத்தை வெளியிட வந்த நாடோடி இயக்குநர் 2ஆயிரம் ரூபாக்கு புத்தகங்களை அள்ளிக்கொண்டு அபேஸ் ஆகிவிட்டாரம்.பார்ட்டி பணம் கேட்க தர்மசங்கடபட்டுகிட்டு இருக்குறாப்புல.உதவுங்க!” என்றார்.
மறுநாள் அள்ளிக் கொண்டுபோன புத்தகங்கள் எல்லாம் நான் இந்த வருடச் சந்தையில் காசு கொடுத்து தான் வாங்கின புத்தகங்கள் என்று ஒரு பெரிய லிஸ்ட் பிரபல வார இதழில் வெளியாகி இந்தது.

இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

( தொடரும்)



Wednesday, February 2, 2011

பன்றியை பின் தொடர்தல்



உலகத்தில் மிக அழகான விலங்கு எதுவென்று என்னைக் கேட்டால் கருப்பு பன்றி போடும் குட்டிபன்றிகள்தான் என்பேன். கருப்பு பன்றிகள் போடும் குட்டிகள் பிறந்தவுடன் வெள்ளையாகவே இருக்கும்.கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம்.அவ்வளவு கொள்ளையழகு கொஞ்சும். மெல்ல உரோமம் முளைக்க ஆரம்பிக்கும் நாளில்தான் தாயின் நிறத்திற்கு குட்டி மெதுமெதுவாக தாவும்.பன்றிக்குட்டி கருப்பாகிவிட்டாலும் அதன் அழகு குறையாது. வளர்ந்த பிறகு தாயுடன் சகதியில் கலந்து கெட்டுச் சீரழிந்துபோகும்.பன்றி அழகு பார்த்தால் போஜனம் கிட்டுமா? ஆகாரத்திற்காக அதன் வேலையை அது தொடங்குவதுதானே நியாயம்?

பேச்சுவாக்கில் ஒரு நாள் என் அலுவலகத் தோழியிடம் ”கருப்பு பன்றிமாதிரி அந்த நடிகை மழமழவென்று அழகா இருக்கிறாள்” என்றேன்.”கருப்பு கலர்ல பன்னி இருக்கா என்ன?”என்று எதிர்க்கேள்வி எழுப்பினாள்.எனக்கு தூக்கிவாறிப் போட்டது.”நீ தமிழ்நாட்டுல தானே இருக்குற? இங்க இருக்குற பன்றிங்க எல்லாம் கருப்பு கலர்லதான் இருக்கும்”என்றேன்.அவள் மறுத்தாள். இல்லை என சாதித்தாள்.வீம்புக்கு ஒட்டாரம் பழகினாள்.விடாமல் அடம்பிடித்தாள்.அலுவலக சகாக்கள் எல்லோரிடமும் தான் சொல்வதே சரியென்று சண்டைக்கு நின்றாள். உண்மை அதுதான் என்பது தெளிவாக தெரிந்தும் நான் எடுத்து சொல்ல முடியாமல் திண்டாடினேன்.அவள் விறுவிறு என்று கூகிளில் பன்றியின் ஆங்கில சொல்லையிட்டு சர்ச் கொடுத்தாள்.பன்றி என்று கூகிள் தேடிக்கொண்டுவந்து அவளிடம் கொட்டிய ஒரு நூறு படங்களில் ஒன்றுகூட கருப்பு இல்லை.எல்லாம் வெள்ளைக்காரப் பசங்கள். ”பார்த்தீங்களா நான் சொன்னதுதான் நிஜம்“என தோளை உயர்த்தினாள் தோழி.
நான் என்ன செய்வது சொல்லுங்கள்?

“சரி,நுங்கம்பாக்கம் கூவம் ஆற்றங்கரைக்கு வா கருப்பு பன்றிகளை காட்டுகிறேன்”என்றேன். ”நான் ஏன் வரவேண்டும்? கூகிள் பொய் சொல்லுமா?”என்றாள், வம்படியாக. பொய்தான் சொல்கிறது என்றேன். “இல்லை நான் பெங்களுர் போனபோதுகூட அங்குள்ள சில கடைகளில் பார்த்தேன்.பன்றிகள் வெள்ளையாகதான் இருந்தன”என்றாள்.
பிறந்து வளர்ந்த்திலிருந்து சென்னையில் வாழ்பவள் இவள்.அப்பர் மிடில் கிளாஸ்.தாம்பரம் தாண்டாதவள்.தாண்டாதது அவள் குற்றமா? இல்லை.மஞ்சத்திற்கு வஞ்சகம் செய்தார்களே அந்த வீணர்களின் குற்றம்? என்று கருணாநிதியின் மனோகரா வசனம்தான் அப்போதைக்கு என்னால் பேசமுடியும்.


இது இவள் ஒருவளது பிரச்னை இல்லை. நமது கல்விப் புலம் போதித்திருக்கும் அறிவின் வெளிப்பாடு. இன்று வெட்டவெளிச்சமாகிறது.என் வீட்டருகே உள்ள ஒரு குழந்தை ”பனானா ட்ரீக்கு தமிழ்ல என்ன அங்கிள்?” என்றாள்.அவளுக்கு வாழைமரம் தெரியவில்லை.பனானா டிரீ தெரிகிறது.தோழிக்காகவே என் ஊருக்கு போனபோது தேடித்தேடி கருப்பு பன்றிகளை படம்பிடித்து வந்துக் காட்டினேன்.ஆனாலும் அவள் நம்பவில்லை.அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் சில கருப்பு பன்றிகளை வலிய படம் பிடித்துகொண்டு வந்து பூதாகரப்படுத்துவதாக சாடினாள். ஆங்கிலத்தில் ”யூ சீட்” என்றாள்.அவள் அறிவின் கொள்ளளவு அவ்வளவுதான் என விட்டுவிட்டேன்.

உண்மையில் நான் பன்றிகளோடு வாழ்ந்தவன்.எங்கள் ஊரில் நான் வசிக்கும் வீரபாண்டியன் தெருவின் வடக்கு பக்கம் முழுக்க ஒட்டர்களின் குடியிருப்புக் காலனி.நான் தினமும் உயர்நிலை பள்ளிக்கு போகும் வழி இவ்வழி. கண்விழித்து எழுந்து தெருவிற்கு வந்தால், ஒரு ஒட்டச்சி தன் கக்கத்தில் ஒரு கூடையை கவ்வியபடி இருபது முப்பது பன்றிகளை ஓட்டிக்கொண்டு தெருவில் போய்கொண்டிருப்பதை கட்டாயம் காணலாம். வழியில் பன்றிகள் இடும் விட்டைகளை சூடாறுவதற்கு முன்னால் நீண்ட குச்சுயினால் செய்யப்பட்ட கரண்டியின் மூலம் லாவகமாக கால் கட்டை விரலால் கெந்தித்தள்ளி கூடியில் போடுவாள்.இதற்காகவே தகரத்தினால் வலைத்து செய்யப்பட்ட கரண்டிகள் அவை. இதை பழக்கமில்லாத ஒருவன் செய்ய முயன்றால் அள்ளிப்போடும் வேகத்திற்கு விட்டை முகத்தில் கொட்டிவிடும்.அவள் விட்டையை கரண்டியால் தொடுவதும் அது குறிப்பிட நேரத்திற்குள் கூடைக்குள் விழுவதும் கண்ணிமைக்கும் தருணத்தில் அரங்கேறும்.நேக்குபோக்கு நிறைந்த வித்தையது. எனக்கும் என்னை போன்றவர்களுக்கும் அன்றாடக்காட்சி அது .நாங்கள் அன்றாடம் கண்விழிப்பதே பன்றியின் முகத்தில்தான்.அந்த அளவுக்கு அதோடு அந்நியோன்யம் எங்களுக்கு. இதையெல்லாம் அவளுக்கு எப்படி புரிய வைக்க?எடுத்தயெடுப்பிலேயே புளுவுகிறேன் என்கிறாள். ”சீட்” என சினுங்குகிறாள்.


என்னுடன் படித்த பல பள்ளி சிநேகிதர்கள் ஒட்டர் குலத்தை சேர்ந்தவர்கள்.இதை பெருமையாக கூறுகிறேன்.கழுத்தில் கழுத்துப்பட்டியும், காலில் காலுறையையும் மாட்டிக்கொண்டு கான்வெண்டில் படித்தவனில்லை நான். சகல வகுப்பினரும் படிக்கும் நகராட்சி பள்ளியில் படித்தவன்.சகதியில் கூடும் பன்றியின் கூடவே ஒரு மனிதப் பன்றியாக திரிந்தவன்.அதோடு ஊரில் என் அம்மாவுக்கு ஒட்டர் பெண்களுடன் நல்ல சிநேகிதமும் இருந்தது. ”நூறு, மொவனா நீ”என்று என்னை முகம் பார்த்து அடையாளம் சொல்லும் அளவுக்கு அவர்கள் என் அம்மாவின் முகத்தை படித்து வைத்திருந்தார்கள். ஜாதிய படிநிலையில் கீழ் உள்ளவர்களாயிற்றே என் அம்மாவை பெயரிட்டு அழைக்க முடியுமா என்ற சந்தேகம் எல்லாம் உங்களுக்கு அநாவசியம். இந்த அனுகுமுறையோடு பலர் என் அம்மாவிடம் பழகினார்கள்.

தெருவில் தினமும் வீட்டு வேலிகளை உடைத்துக் கொண்டு உள்ளே பாயும் பன்றிகளை அடித்து விரட்ட சிறார் பட்டாளம் ஆவலாய் அலைபாயும். வீதியில் பன்றியை ஒட்டர்கள் பிடிக்கும் சாகசமே தனி. சர்க்கஸ் சாகசத்தை போன்றதது. மஞ்சுவிரட்டில் காளையை அடக்கும் வீரர்களை விட தினமும் பன்றியோடு மல்லுக்கட்டும் ஒட்டர்களின் தீரம் எந்த இலக்கியத்திலும் சரியாக இன்னும் பதியப்படவில்லை. சினிமாவிலும் அந்நிலையே.பருத்தி வீரன் படத்தில் கொஞ்சம் வந்துள்ளது. அதனளவில் மிக சிறப்பான காட்சிகள் அவை.முன்னால் மதுரைவீரனின் எம்.ஜி.ஆர் ஒப்புக்கு கொஞ்சம் தொட்டுப்போனார்.
காட்டு விலங்கின் குணம் படைத்த பன்றியை வீட்டுப் பிராணியாக மனிதன் மாற்றிய திறமையே மிகச் சிறப்பானதொன்று. சோறிட்ட எஜமானனிடம் என்றைக்காவது ஒரு நாள் விசுவாசம் காட்டிவிடும் பிராணி குணங்களுக்கு முற்றிலும் மாறான குணம் படைத்தவை பன்றிகள். எத்தனை நாள் பாலும் சோறும் ஊட்டினாலும் சொந்த எஜமானனாக இருந்தாலும் இன்முகம் காட்டாது. வழக்கம்போல் குர்குர் உறுமல்தான். இது உங்களுக்கும் பொது.எஜமானுக்கும் பொது.


பன்றிகளை மேய்ச்சலுக்கு விட்டு பிறகு மாலையில் அதன் உரிமையாளர்கள் ஓட்டிக்கொண்டு பட்டிக்கு திரும்புவார்கள்.அப்படி திரும்பும் பன்றிகள் ஒன்றையொன்று சீண்டிவாறு செல்லும்.அந்த சமயத்தில்தான் கூடலும் நிகழும்.பெண் பன்றியின் பின்புறமிருந்து எகிறும் கெடா பன்றியை பார்த்தால் சின்ன நீர் யானை அளவு இருக்கும்.பன்றியின் சம்போகம் வெகு நூதனமானது.பெண் பன்றியின் மீதேறி மீதேறி முதலில் பிடிமானமற்று கீழிறங்கும். பின் சீர்நிலையடைந்த பிறகு அப்படியே சிலைப்போல நிற்கும்.புணர்வின் போது ஆண் பன்றியின் குறி சிகப்பாக இருக்கும்.அதேடு அதன் குறி எல்லா உயிரினத்தைபோல நேராக நீட்டி நிற்காது.ஒரு குச்சியின் பருமனே உள்ள அதன் குறி ஸ்பிரிங்கை போல சுருள் சுருளாக சுழன்றிருக்கும்.ஏறக்குறைய அதன் புணர்ச்சி பெண்குறியை துளையிடுவது போல உள்ளே இறங்கும். ஒரு ஊசிபோடுவதைபோல நேர்த்தியாக இதை செய்யும்.
ஆண் பன்றியை இறைச்சிக்காகவே வளர்ப்பார்கள்.அதன் எடை குறையாமல் இருக்க அது புணர்ச்சியில் ஈடுபடுவதை தவிர்தாகவேண்டும்.ஆகவே ஆண் பன்றிகளை சம்போகத்திலிருந்து தவிர்க்க அதன் விதைகளை எடுத்துவிடுவார்கள். விதையகன்றால் விந்து உற்பத்தி நின்றுவிடும். இந்த மருத்துவ தொழில் முறையை ஒட்டர்களின் சிறுபிள்ளைகளே செய்து முடிப்பார்கள்.அறுவை சிக்கிச்சை செய்ய பால்யத்திலேயே பிள்ளைகள் பழக்கப்படுவார்கள்.


ஆண் பன்றியின் கால்களை வாகாக கட்டிவிட்டு சாதாரண முகச்சவர பிளேடை எடுத்து பன்றியின் கவட்டிக்கடியில் மாங்கொட்டை மாதிரியுள்ள விதைப்பையில் இரு விதைகளாக பிரியும் பாதையின் நடுவில் கத்தியை மேலாக்கப் பதிப்பார்கள்.அது பலா பழத்தை போல இரண்டாக அப்படியே பிளக்கும்.அதன் உள்ளேயோடும் நரம்புகளை தனித்தனியே விளக்கிவிட்டு சிகப்பாய் உருளும் இரு உருண்டைகளை மட்டும் செம்மனே வெளியே தள்ளுவார்கள். வலியில் அலறும் பன்றி தன் சத்ததால் ஊரையே கூட்டும். அதன் உதிரப்போக்கு ஓரளவுக்கு நின்றதும் அடுப்புச் சாம்பலை விதைப்பையில் அள்ளி அப்புவார்கள்.அதுதான் அருமருந்து. விதையெடுத்த பன்றி சில வாரத்திற்குள் போஷாக்காகிவிடும். சதைகளின் திரட்சி கண்ணை பறிக்க ஆரம்பிக்கும்.

ஒரு பன்றி பத்துக்குட்டிக்கு மேல் இடும்.அதனால்தான் அவை கூட்டமாகத் திரிகின்றன.ஒரு தான் தன் குட்டிகளோடு தெருவில் நடந்தாலே பார்ப்பவர்களுக்கு கூட்டம் பெரிதாக தெரியும்.நாளைந்து தாய் பன்றிகள் தெருவைக் கடக்க நேர்ந்தால் கூட்ட்த்திற்கு பஞ்சமிருக்காதில்லையா? இதை குறிப்பிடும் போது.”பன்றிங்கதான் கூட்டமா வரும் சிங்கம் சிங்கிள் ஆ தான் வரும்” என்ற ஒரு பிரபல சினிமா பஞ்ச் டயலாக்கும் ஞாபகத்திற்கு வருகிறது. உண்மையில் சிங்கம் சிங்கிள் பிராணியல்ல;அவையும் கூட்டமாகவே வசிக்கும்.கூட்டமாகவே வேட்டையிடும்.இப்படி அபத்தமான வசங்கள் தமிழ் சினிமால் ஏராளமுண்டு.அதை தனிப் பதிவாகவே இடலாம்.

பன்றியை நைலான் கயிற்றில் பெரிய வலைக்கட்டியே பிடிப்பார்கள்.நான்கு மூலையில் நான்கு நபர்கள் வலையை இழுத்துப்பிடித்துக்கொண்டு ஒரு புறத்திலிருந்து பன்றியை ஒரு மூலைக்கு ஒதுங்கச்செய்வர்.கொஞ்சம் கொஞ்சமாக விரட்டிக்கொண்டே முன்னேறினால் பன்றி வலைக்குள் மாட்டிக்கொள்ளும். இந்த முறையை பயன்படுத்தி ஒரே நேரத்தில் இரண்டு மூன்று பன்றிகளை பிடித்துவிடலாம். ஒற்றை பன்றியை பிடிக்க நீண்ட கழியின் முனையில் லாரி டயர்களின் ஓரத்திலிருக்கும் கம்பிகளை தனியே பிரித்து அதை சுருக்குபோல் வலைத்து பன்றியின் கழுத்தில் வாகாக நுழைத்து பிடிப்பார்கள். தனி பன்றியை சைக்கிளில் கட்டு ஓரிட்த்திலிருந்து பிரிதொரு இடத்திற்கு எடுத்து செல்வார்கள்.மொத்த வியபாரம் என்றால் லாரிபோன்ற பெரிய வாகனங்கள் பட்டிக்கு வரும்.பன்றிகளை வாகனத்திற்கு மேல் ஏற்றுவது தவறல்ல;வண்டியை பன்றி மீது ஏற்றிவிட்டால் அபசகுனமாக ஊர்களில் பார்க்கப்படுகிறது.இது ஒரு பொதுபுத்தி.உடனே வாகனத்தை விற்றுவிடுவார்கள்.இல்லையென்றால் சிதம்பரம் அருகில் ஸ்ரீமுஷ்ணம் ஊரிலுள்ள பூவராக் கோவிலுக்கு வண்டியை கொண்டுசென்று பரிகாரம் செய்வார்கள்.தமிழகத்தில் இந்தப் பரிகாரத்திற்கு என்றே பெயரெடுத்தக் கோவில் இக்கோவில்.

மேய்ச்சலின் போது வயல்களை தன் வாயால் கிளறி பன்றி நிலத்திற்குள் இருக்கும் கிழங்கு வகைகளை உண்ணும்.இதற்கு வசதியாக பன்றிகளுக்கு யானையை போல வாயின் இருபுறங்களிலும் சிறிய பற்கள் கானப்படும்.தினமும் சொந்தக்காரர்களால் பன்றிக்கு அன்றாட உணவுகள் கொடுக்கப்படும். சக்கரைவள்ளிக் கிழங்குகளை துண்டுத்துண்டாக வெட்டி காய வைத்து பின் ஆகாரமாக பகிர்வார்கள்.இது போக வாரச் சந்தை,தினச் சந்தையில் கிடைக்கும் அழுகிய,பாழாய்போன காய்கறிகளை மூட்டையில் கொண்டுவந்து இவைகளுக்கு உணவாக்குவார்கள். முட்டைகோஸ் தழைகளை பன்றிகள் விரும்பியுண்ணும்.
அதுபோக உணவுவிடுதிகளில் மிச்சும் பழைய சாப்பாடு,குழம்பு போன்றவைகளை பெரிய பீப்பாய்களில் நிரப்பி எடுத்துவந்து பன்றுகளுக்கு ஊற்ற்வார்கள்.பன்றிகள் இந்த நீராகாரத்தை வாகாக குடிக்க மரக்கட்டைகளின் நடுவில் உளியால் குழிபோல தோண்டி அக்குழிகளில் ஊற்றி வைப்பார்கள்.இக்குழியில் ஓரே சமயத்தில் வரிசைக் கட்டி பன்றிகள் தன் வாய்களை விட்டு உறிஞ்சிக்குடிக்கும்.
பன்றிகள் இயற்கை உருவாக்கி கொடுத்திருக்கும் துப்புறவாளன்.ஊரில் இருக்கும் நரை,நட்டைகளையெல்லம் சாப்பிட்டு தூய்மைப்படுத்துவது இதன் வேலை.இவைகளால் ஊர்கொஞ்சம் சுத்தமாகிறது என்பதும் உண்மை.

சில சமயங்களில் பன்றி யானையைபோல தந்தமுள்ள பன்றிக்குட்டியை போட்ட அதிசயமும் நிகழ்ந்திருக்கிறது.அதை ஊரே கூடிநின்று அதிசயிக்கும்.அது போல பன்றிக்குட்டியை நானே பார்த்திருக்கிறேன்.பிறந்த சில மணித்தியாலத்தில் இக்கோளாறான குட்டி இறந்துக் போனது.அக்குட்டியின் படம் மறுநாள் தந்தியில் பிரசுரமும் ஆகியிருந்த்து.




பன்றிகளை பொதுவாக தனது வீட்டின் பக்கத்திலேயே பட்டியிட்டு வளர்ப்பதையே ஒட்டர்கள் விரும்புவார்கள்.பல நாட்கள் பன்றிக்குட்டிகள் ஒட்டர்களின் வீட்டின் உள்ளேயே ஓடியாடி வளரும்.நாய்க்குட்டிகளை போல பன்றிக்குட்டிகளை தூக்கி ஒட்டர்களின் பிள்ளைகள் அழகு கொஞ்சுவார்கள். அதை பார்க்கவே தனிக் கண்கள் வேண்டும். மாரி காலங்கள் தவிர பன்றிகளின் பட்டிக்கும் ஒட்டர்களின் குடிலுக்கும் வித்தியாசங்களிருப்பதில்லை.தன் ரேகைகளை அது அழித்து நிற்கும்.தன் குடிலின் ஒரு பகுதியை ஒதுக்கி, பன்றியை வளர்ப்பார்கள்.அதுவே வளர்பிற்கும் கவனிப்பிற்கும் உகந்த அம்சம். ஊர் எல்லைக்கு வெளியில் பட்டியிட்டு பன்றிகளை வளர்வதில் பல தர்மசங்கடங்கள் உள்ளன. ஒன்று;அவை களவுப்போகும்.அல்லது பகவர்களின் தாக்குதலுக்கு உள்ளாகும்.இதை தவிர்க்கவே ஒட்டர்கள் பெறும்பாலும் பன்றி வளர்பிற்கு தன் வீட்டருகையே விரும்புவார்கள். தங்களின் கண் பார்வையை விட்டு அகலாமல் விழிக்குள் வைத்துக் காப்பார்கள்.ஒட்டர்கள் தன் வீட்டருகே பண்றிகளை வளப்பதால் ஊரில் வம்பு வழக்குகள் கண்டதுமுண்டு.சுற்றத்தார் வீடுகளில் புகுந்து அட்டகாசம் செய்யும் பன்றிகளை அடிக்க ஓயாமல் பரபரக்கும் கைகள் பன்றிகளை அடையாளம் தெரியாமல் தாக்கிவிடுவதுண்டு.பிறகு பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா என்று உரிமையாளன் புலம்ப நேரிடும்.


”அடையாளம் தெரியாம அடிச்சுட்டாங்க. எல்லா பன்னியும் கருப்பாதான் இருக்கு என்னத பண்ண? எவன கேட்டாலும் என்னிதில்ல உன்னிதில்லங்குறானுவோ.அப்ப என்ன பண்றது? அடிச்ச உடனே ஒப்பாரி வெச்சுகிட்டு வந்து நிக்குறானுவோயில்ல! இப்ப அனுபவிக்கட்டும்”என்பார் பன்றியை தாக்கியவர்.
“யார் பன்னியோ புக்குந்துக்கு நாங்க என்ன பண்ணுவோம் சொல்லுங்க? இந்தக் கருமத்திற்காகதான் நாங்க எங்க பட்டிய தொறக்குறதேயில்ல. எங்கப் பன்னிதான் சேதாரம் பண்ணிச்சுன்னு வலுவா சொல்லுங்க நாங்க ஏன் உங்க வூட்டு வாசலுக்கு முன்ன வந்து நிக்கோம்.உண்மன்னு தெரிஞ்சா உங்க வாய் பேசவேண்டாம்.சோட்டால பேசுங்க வாங்கிகிறோம்”என்பார் அடிப்பட்ட பன்றியின் சொந்தக்காரர்.
உண்மையில் எந்தப் பன்றி புகுந்தது? யார் பன்றி செய்த அட்டகாசம் இவை? எதையும் கண்டறிவது ஊர்க்காரர் கண்களுக்கு கஷ்டம். பன்றியின் உரிமையாளனுக்கு கட்டாயம் தெரியும்.நூறு பன்றியில் தன் பன்றி எதுவென்று நொடியில் கண்டறிந்து சொல்லும் ஆற்றல் நிரம்ப பெற்றவனவன்.அதற்குதக்க பன்றியின் அங்கஹீனமாக்கி அடையாளம் வைப்பார்கள்.ஆனால் ப்ரச்னை, வழக்கு என்றால் பம்ம ஆரம்பித்துவிடுவார்கள். வழக்கம்போல் ”என்னிதில்லை உன்னிதில்லை” என்று சாக்குபோக்கு படிப்பதோடு நின்றுகொள்வார்கள்.ஆகவே ஊர்க்காரர்கள் இன்னதுதான் என்றில்லாமல் வேலையை காட்டிவிடுவார்கள்.அப்புறம் மல்லுக்கு நிற்க வேண்டியிருக்கும்.
பன்றியை வளர்பதில் ஊராருடன்தான் சிக்கல் என்றால் சர்க்காரிடமும் சங்கடம்தான். ஊரில் கொசு அதிகரித்தால்,மழைகாலங்களில் வாந்திபேதி ஆரம்பித்தால் உடனே நகராட்சி கமிஷ்னர் பன்றிகளை சுட ஆர்டர் வழங்கிவிடுவார்.நரிக்குறவர்களை கூலிக்கு அமர்த்திக்கொண்டு நாட்டுத்துப்பாக்கிகளால் பன்றிகளைச் சுட நகராட்சி வாகனங்கள் ஊரின் மூலமுடுக்கு எல்லாம் விரையும்.பன்றிகள் சுடப்பட்டு அலங்கோலமாய் கிடக்கும் காட்சியை கண்டு உண்மையில் நான் கண்கலங்கி இருக்கிறேன். அதன் உரிமையாள ஒட்டச்சிகள் கொடுக்கும் அபலைக்குரல் எந்த மனிதனையும் உலுக்ககூடியது. அப்போதே மிருகவதை பற்றி அவர்களிடம் பேசுவேன். நீதி மன்றத்திற்கு சென்று நியாயம் கேட்கச் சொல்லுவேன்.அன்றாடம்காய்ச்சிகள் அவர்கள் ஆட்சியர்களை காணுவது எப்போ?நீதி கிட்டுவது எப்போ? இப்போது யோசிக்கையில் உணர்கிறேன்.


மழைக்காலங்களில் பன்றிகளால் மூளைக்காய்ச்சல் பரவுவதாக ஊரார் பீதியடைவார்கள்.அதில் உண்மை இருக்காது.என் வாழ்நாளில் ஒரே ஒருவன் மூளைக்காய்ச்சலால் இளம்பிள்ளைவாதம் வந்து தன் கால்களை இழந்தான்.அந்த ஒன்றுதான்.இது நூறில் ஒன்றல்ல ஆயிரம் லட்சத்தில் ஒன்று. தாய் பன்றியின் பாலை எடுத்து அதில் நெய் செய்வார்கள்.அதை ஒரு வலிநிவாரணியாக ஊட்ட மருந்தாக பயன் படுத்துவார்கள். பன்றியை சமைத்து மணிமுத்தாற்றங்கரை ஓரம் இருக்கும் செல்லியம்மன் ஆலயம் பக்கம் வைத்து வியபாரம் நடக்கும்.இங்கேதான் பட்டை சரக்கும் விற்கும். கருவேல மரங்கள் நிழலில் உட்கார்ந்து அந்திசாயும் வரை விற்பார்கள்.


பன்றியை அறுத்து சமைக்கும் பழக்கம் ஒட்டர்களிடம் இல்லை.கழுத்தில் கட்டையால் அடித்தே கொல்வார்கள்.கொன்றவுடன் அதன் உடம்பிற்கு மேல் சத்தைகளை கொட்டி தீ வைப்பாட்கள்.முழு பன்றியும் தீயில் வேகும்.வெந்த பின்பு பெரிய கத்தியால் உடலில் உள்ள உரோமத்தை சுரண்டுவார்கள்.பன்றிக்கு தோல் கிடையாது.ஆகவே இம்முறை.பிறகு மஞ்சலைப்பூசி மறுமுறை தீயில் அவிப்பார்கள்.அதன் பின்னால் உடலை அறுத்து தேவையற்றதை அகற்றிவிட்டு கறியை பங்கிட்டுக்கொள்வர்.இதுதான் அவர்கள் சமைக்கும் முறை. சமையலாகும் பன்றி சாப்பிட்டும்போது சாதி வித்தியாசமில்லாமல் விற்பனைக்கு போகும்.சத்தமில்லாமல் சில உயர் சாதி வீட்டு பெருசுகள் ஆற்றங்கறையில் உட்கார்ந்து ருசி பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

Monday, January 31, 2011

பூச்சிகளின் புதல்வர்கள் நாங்கள்



சத்ய ஜித்ரேயின் எறும்புகள் கதையை படித்திருக்கிறீர்களா? ஆன்மாவின் அடிக்குரலில் பேசும் கதையது.அக்கதையில் அன்புதான் ஆதாரம்.உங்களை அப்படியே உலுக்கி கொன்றுவிடும்.ரேவின் இக் கதையை படிக்கும் போது நான் எட்டு வயசுக்கு மறுபடியும் திருப்பினேன். சுத்தமான ஜீவராசிக் காதலை பேசும் இந்தக் கதையை ஒரு இந்தியனால் மட்டுமே எழுத முடியும்.ஆச்சர்யங்கள் திளைக்கும் அக்கதையை ரே உயிரோட்டம் குறையாமல் எழுதியிருப்பார். எறும்புகளோடும் இன்னபிற பிராணிகளோடும் தன் காதலை பகிர்த மனிதன் போன நூற்றாண்டோடு இறந்துவிட்டான்.இன்றைய மனித மனம் பிராணிகளை,ஜீவராசிகளை சக உயிரியாக பார்ப்பதையே தவிற்கிறது.பூமி முழுக்க மனிதனுக்கு மட்டுமே சொந்தம் கொள்ள சொல்கிறது. இது அபாயகரமான மனநிலை.

வீட்டில் ஒரு அந்துப்பூச்சியை பார்த்திட்டாலும் கூட ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணுகிற பழக்கம் விளம்பரங்கள் மூலம் ஒரு விஷ விதையைபோல தூவுகின்றது ஊடகங்கள்.வீடு என்றால் அது மனித வாசனைக்கு மட்டுமே உகந்த இடம் என சிறு வயதிலிருந்து பழக்கி வைக்கப்படுகிறார்கள் பிள்ளைகள்.பல்லியும் பட்டாம்பூச்சியும் கூட ஒவ்வாமை கொள்ள வேண்டிய விஷயமா என்று புரியவில்லை.

வீட்டில் பாம்பு வந்தாலும் கூட வக்கனயாய் பிடித்து வணங்கி வழியனுப்பியப் பழக்கம் இந்தத் தலைமுறைக்கு தெரியுமா? தவறி அடிபட்ட பாம்பிற்காக ஆயுள் முழுக்க சாங்கியம் சடங்கு செய்து மன்னிப்புகேட்ட மனிதர்கள் இங்கே வாழ்ந்தார்கள் என்றால் ”கண்ட்ரீ புரூட் அவங்க” என்று வாயை திரிந்து சொல்லவில்லை என்றால் இரவு தூக்கம் கொள்ளது இன்றைய இளசுகளுக்கு. காக்கை குருவி எங்கள் ஜாதி என்பதெல்லாம் பழஞ்சொல்லாகிவிட்டது? மண் பண்டங்களை பித்தளைப் பாத்திரங்கள் ஒளியிழக்க வைத்தன.பின்னால் பித்தளையை சில்வர் செயலிழக்க வைத்தன.இன்று கை நனைக்காமல் சாப்பிட கண்ணாடிப்பாத்திரங்கள் வந்துவிட்டன. நாகரீகம் என்பது ஆரோகியத்தை அடமானம் கேட்கிறது என்பது எத்தனை பேர்களுக்கு புரியபோகிறது.

வீட்டிற்கு முன்னால் முற்றம்.நடுவில் தாழ்வாரம்.உயிரினங்கள் உள்ளே வந்துபோக ஓட்டை.வெளிச்சம் எட்டிப் பார்க்க கம்பி கிராதி.காற்று வந்து கண்காட்ட சன்னல் துவாரங்கள்.வீட்டில் உள்ளவர்கள் கூடி உட்கார கூடாரம்.பிரத்தியார் வந்து சுகம் பார்க்க திண்னை என்று இருந்த மனையடி சாஸ்திரம் எல்லாம் இன்றைக்கு ககூஸ் எந்த மூலையில் வைப்பது? டி.வி.யை எந்த ஹாலில் புதைப்பது? ஃப்ரிட்ஜை எங்கே நிறுத்துவது என்று கவலை பாட வைத்திருக்கிறது.

மூதாதையரின் மூச்சுக்காற்றை கேட்டு வாங்கி வளர்ந்த துளசியும் செம்பருத்தியும் வெறு செடிகொடிகள் அல்ல;தலைமுறை தலைமுறையாக கை மாற்றி மாற்றி கொடுக்கப்பட்ட சீதனம். தெரு முற்றத்தில் நிற்கும் தாவரமும் மரமும் மூத்தோரின் அடையாளங்கள். அவர்களின் ஆயுளை அதில்தான் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்பதெல்லாம் புரியாமல் பிதற்றுகிறார்கள் இன்றைய பிள்ளைகள்.

கவிஞர் பழமலய்யின் சனங்களின் கதை கவிதைத் தொகுப்பில் அம்மாவின் விசனம் கேட்டுத்தான் இந்த வேம்பும் கசந்திருச்சோ என்று ஒரு வரிவரும்.வேம்பின் பால் தாய் பாலுக்கு நிகர் என்பதாய் பழமலய்யின் பாடல் போகும்.அவரது குழுமூர் கிராமத்தில் குருவிகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் குடிநீர் தொட்டியை பற்றி எழுதியிருப்பார். காடு என்பது அன்றைக்கு வாழ்வியலோடு ஒன்றிய ஒன்று.புச்சையைகூட காடு என்பார்கள் ஊர்களில்.இன்று காடு என்பது பிக்னிக் போகும் இடம்.குழாமோடு கூடி குடிப்பதற்கான சாலை.இப்படிதான் போகிறது நவீனம்.

என் தலைமுறை வரை பூச்சிகளும் பறவைகளும்தான் எங்களின் செல்ல சகோதரர்கள்.நாய்களும் பன்றிகளும் கூட எங்களின் தோழமைதான். விதவிதமான பூச்சிகளின் ரசிகன் நான். எருகஞ்செடிகளில் வண்ண வண்ணமான நிறத்தில் அழகிய வெட்டுக்கிளிகள் இருக்கும்.பார்க்கவே படு கவர்ச்சியான ஜீவராசி.தழைகளை இமிஇமியாய் கத்தரிக்கும் பூச்சியது. பிடித்து எடுத்து கண்ணாடிப் பைகளில்(கேரிபேக் என்பதெல்லாம் அப்புறம் வந்த சொல்) அடைத்து மூச்சுபோக சிறுசிறு ஓட்டைகளிட்டு வீட்டில் உள்ள டிரங்கு பெட்டிக்கடியில் வைத்துவிட்டு பள்ளிக்கு புறப்பட்டுவிடுவேன்.மாலை வீடு திரும்பியது அவைகளோடுதான் என் சங்காத்தம்,ஆட்டம் பாட்டம் எல்லாம்.

உச்சி வெயிலில் ஓணான் பிடிக்க கிளம்புவோம்.உருமநேரத்தில் தான் சூரியன் ஊச்சுக்கு வருவான்.அடிக்கிற வெயிலுக்கு இதம்தேடி ஓணான்கள் மர அடிவாரத்தை அண்டும்.அந்த நேரத்தில்தான் ’அண்ணனை’வீழ்த்த முடியும்.தென்னை ஓலையின் நடுவில் நிற்கும் நரம்பை மட்டும் தனியே உரித்து நரம்பிற்கு முன்னால் சுருக்கிட்டு ஓணானின் தலையில் மாட்டியிழுப்போம். மாட்டியக் கழுத்தை அவிழ்க்க முடியாமல் அல்லாடும் ஓணான் ஒருவழியாக நம்ம வழிக்கு வந்திடும்.தென்னை ஓலையில் ஓணானை பிடிக்கும் பழக்கம் சங்ககாலத்து தமிழனிடமே இருந்துள்ளது.அதற்கான சான்று பாடலில் கூட உள்ளது.

பிடிபட்ட ஓணான்களை கொண்டு வந்து சிகரெட் புகைக்க வைப்போம்.கப் கப்பென்று புகையை இழுத்து ஓணான் விடும் லாவகம் இருக்கே என்ன அழகு தெரியுமா? தினமும் அப்பா இழுத்துவிட்டுப் போடும் சிகரெட் துண்டுகளை பொறுக்கி இந்தக் காரியத்திற்கு பயன்படுத்துவோம்.அப்புறம் அறுவைசிகிச்சை வரை போகும்.ஓணான் நெஞ்சை அறுத்து இதயத்துடிப்பை காண்போம். அறுவை முடிந்த கையோடு இலைதழைகளை அறைத்து பச்சிலையாக ஓணானின் காயத்திற்கு கட்டுக்கட்டுவோம். கட்டிய சில நேரத்திற்குள் கைலாயம் போய்விடும் பெரும்பாலான ஓணான்கள்.இறந்த ஓணானுக்கு இறுதிச்சடங்கு நடத்துவோம். புதைக்கும் குழியில் காசு போட்டுப்புதைத்தால் சில்லறை பணமாகும் என்பது பழங்காலத்து நம்பிக்கை.அதையும் பண்ணுவோம். அரைஞையை பிடித்து வம்பு பண்ணுவோம்.அரைஞைக்கு அதிக ஞாபக மறதியுண்டு என்பார்கள்.கடிக்க வருவதற்குள் அது மறந்துவிடும் என்பது நம்பிக்கை.நிஜமா தெரியாது.

இதுபோல நல்ல காரியத்திற்காக பல ஓணான்களை பிடித்து, பையில்போட்டு இரையாக சில வெட்டுக்கிளிகளையும் உள்ளே வைத்து முடியிட்டு, பையை பெட்டிக்கு அடியில் வைத்துவிட்டு பள்ளிக்குப்போய்விடுவேன்.ஒரு நாள் பெட்டிக்கு அடியில் சரசரவென சத்தம் கேட்க, அம்மா கை பையை அவிழ்த்திருக்கிறாள்.விட்டேன் சவாரி என்று திசைக்கொரு ஓணான்கள் வீட்டிற்குள் மூலாமூலைக்குள் பாய்ந்திருக்கின்றன.அப்போது பயத்தில் உறைந்தவள்தான்.மாலை பள்ளிவிட்டு நான் வரும் வரை காத்திருக்கிறாள்.வீட்டிற்கு நுழைந்தவுடனேயே கதைவை தாழ் வைத்துவிட்டு அர்ச்சனையை ஆரம்பித்துவிட்டாள்.அடியென்றால் ஒவ்வொன்றும் இடி. எங்கள் தெருவில் பிள்ளைகளுக்கு அடிகொடுக்கும் விஷயத்தில் என் அம்மாதன் கில்லாடி. விறகுக்காக உள்ள முந்திரி செராக் கட்டைகளை எடுத்து அடிக்க ஆரம்பித்தாள் ராட்சஷி ரத்தம் பார்க்காமல் அடங்கமாட்டாள்.

இரவில் குசு பூச்சி என்று ஒரு பூச்சி உலாத்தும். ஆமையின் தலைபோலவும் உடல் முழுக்க கருப்பாகவும் அதில் மஞ்சள் நிறத்தில் வட்டங்களும் கொண்டுடிருக்கும்.மூக்கில் இருந்து இரு மீசைகள் நீண்டிருக்கும்.ஆட்காட்டி விரல் முனையளவுக்கு உள்ள இந்தப்பூச்சி கடிக்காது. ஆனால் பிடிக்கப்போனால் புஸ்ஸ்ஸென்று ஒரு குசுவை சூடாக விடும்.சூடு கையில் பட்டால் கொப்பளித்துபோகும்.அந்த அளவுக்கு அணல் தகிக்கும்.குசு வந்தவுடனேயே ஒரு மாதிரி கருகல்வாடை பரவும்.அப்பூச்சிகளை வைத்து ஃப்யர் விளையாட்டு விளையாடுவோம். இதேபோல் மழை பூச்சி.பார்க்க அச்சு அசலில் இலையை போல இருக்கும்.இதே ரகத்தில் காய்ந்த குச்சியைபோல சருகுப்பூச்சி என்று ஒன்றுள்ளது. இலைபோல உள்ள பூச்சி மழைக்கு முன்னதாக வரும். அதை பிடித்து இப்ப மழை எந்தப் பக்கம் பெய்யுது சொல்லு என்போம். அது உடனே தலையை திருப்பி ஒரு திசையை காட்டும்.உடனே அந்தப் பக்கம் மழை வருவதாக ஐதீகம். சருகுப்பூச்சியின் முன்னங்கால்கள் கொக்கியைபோல முன்னோக்கி வளைந்திருக்கும்.அதனிடன் ஒரு பொருளைக் கொடுத்து தயிர் கடைய சொல்லுவோம்.அது கொடுத்தப்பொருளை கையில் பிடித்தபடி தயிர்கடைவதைபோல உடலை அசைக்கும்.


பன்னிபூச்சி என்று ஒரு பூச்சி உள்ளது. வீட்டு சுவரோரங்களில் ஆள் நடமாட்டமே இல்லாத பகுதிகளில் மணலில் குழி பறித்துக்கொண்டு உள்ளேயே மணலுக்குள் மறந்திருக்கும்.லேசில் கண்ணில் அகப்படாது. அது உண்டாக்கி வைத்திருக்கும் குழியின் ஓரங்களில் உள்ள மணல் சலித்து வைத்த மணலைபோல நைஸ் ஆகாக இருக்கும்.அக்குழியில் எறும்போ மற்ற சிறு பூச்சிகளோ விழுந்தால் அவ்வளவுதான் அதன் மேல் மணலை பறித்து தள்ளி அப்பூச்சை கொன்று இரையாக்கிவிடும். இந்தக் குழியில் எறும்பை விட்டு விளையாட்டுக்காட்டுவோம்.

பிள்ளைப்பூச்சி என ஒரு பூச்சியுள்ளது.ஊரில் அதை வாயில்லா பூச்சி என்பார்கள்.எவ்வளவு இன்னலுக்கு அதை உட்படுத்தினாலும் அது கடிக்காது.மீறி அது கடித்தால் மரணம் என்பார்கள். ஒரு நாளும் யாரையும் அது கடித்ததாக நான் கேள்விபட்டதில்லை.அதை கொன்றவர்களுக்கு பிள்ளை பாக்கியம் இருக்காது என்று பெரியவர்கள் குறிப்பிடுவார்கள். தண்டனைக்காக அதை பிடித்து துண்டில் போட்டு தொப்பூழில் கட்டி விடுவார்கள்.அது சற்று சந்து பார்த்தால் குழித்தோண்ட தொடங்கிவிடும்.தொப்பூழ் பள்ளம் கிடைத்தால் சும்மா விடுமா? மாட்டியவன் கதி அதோகதிதான்.

இருக்கின்ற பூச்சிகளிலேயே சிறப்பான பூச்சி பொன்வண்டுதான்.இதற்கடுத்து பட்டுப்பூச்சி.வெல்வெட் துணிபோல மெத்து மெத்துவென்றிருக்கு.தூறல் விழுந்த விடிற்காலையில் உழுத நிலம் முழுக்க அலையும் பூச்சியிது.வசீகரமென்றால் அப்படியொரு வசீகரம். பொன்வண்டில் இரு வகையுண்டு.இலந்தை பொன்வண்டு.பச்சை பொன்வண்டு. இலந்தை பொன்வண்டின் தலை மட்டும் பச்சையாக மின்னும்.உடம்பு முழுக்க இலந்தைப் பழநிறத்தில் இருக்கும்.அதனாலே இது இலந்தைப் பொன்வண்டு.இவை இலந்தைத் தழைகளை உண்டு வாழும் பூச்சி. பச்சை பொன்வண்டு நாவல் மரத்தில் இருக்கும்.நாவல் தழையை உண்ணும். இலந்தை பொன்வண்டு எளிதில் சிக்கக்கூடியது.அதை பிடித்துவந்து தீப்பெட்டிக்குள் அடைத்து வைப்போம்.தவிட்டில் போட்டு வைத்தால் மஞ்சள் நிறத்தில் முட்டை ஈனும்.முட்டைபோட்ட கொஞ்ச நாளில் இறந்தும் போகும். முட்டையை மட்டும் வைத்துக்கொண்டு ஆகாயத்தை அண்ணாந்து பார்த்துத் தவிப்போம். பச்சை பொன்வண்டு வைத்திருப்பவன் அதிருஷ்டக்காரன். பத்து போந்தா குண்டுகள்(கோலி) கொடுத்து பள்ளிப் பிள்ளைகள் வாங்க நான் நீ என்று முண்டியடிப்பார்கள்.ஏறக்குறைய அதை வைத்திருப்பவன் சிறுவர்கள் உலகில் கோடீஸ்வரன்.

எறுப்புகளில் பல வகையுண்டு.கருப்பெறும்பு.பிள்ளையார் எறும்பு.சீனி எறும்பு. சித்தெறும்.கட்டை எறும்பும்.சிவப்பெறும்பு,புத்தெறும்பு இப்படி பல.இதில் கட்டெறும்பு முருங்கை மரத்தில் இருக்கும்.சித்தெறும்பு மா,பலா மரத்தில் இருக்கும்.கடித்தால் அங்குளம் அங்குளமாக தடித்துவிடும்.கருப்பெறும்பு கடிக்காது.சீனி எறுப்பு கூட்டமாக ஆயிரக்கணகில் வாழும்.ஈரம் கண்ட இடம் அதற்கு சொர்க்கம்.மழை வருவதற்கு சில தினங்கள் முன்பாகவே தான் ஈன்ற முட்டைகளை கவ்விக்கொண்டுபோய் மேட்டில் ஒளித்து வைக்கும்.சிவப்பெறும்பும் கடிப்பதில் ருசியறிந்தது.தண்டி தண்டியாக தேகம் தடிக்கும் அளவுக்கு கடித்து வைத்துவிடும். குழந்தைகள் விடும் சிறுநீரில் இனிப்பு கலந்திருப்பதால் இரவில் பெல்லாவை கடித்து வைத்துவிடும்.இதனிடம் கடிவாங்காத பெல்லாவே இருக்க முடியாது வையகத்தில்.புத்தெறுப்பு என்பதும் கடிக்காது.இவையும் கருப்பாக மிதமான பருமனில் இருக்ககூடியவை.வலையில் ஈரமணலை மலைபோல வட்டமாக குவித்து வைத்து புற்றை அலங்கரிக்கும். இவ்வெறும்புகள் மனிதர்களை போல விவசாயிகள். புற்களை துண்டு துண்டாக கத்தறித்து கொண்டு போய் நிலத்துக்கடியில் காற்றோட்டமே இல்லாத்தால் உருவாகும் காளான்களுக்கு உணவாக இட்டு காளானை வளர்த்து அவற்றை பின் தனக்கு உணவாக்கிக் கொள்ளும். இந்த அளவுக்கு மதி நுட்பம் கொண்டவை இவ்வெறும்புகள்.இம்மாதிரியான எறும்புகள் தனது எடையை போல இரு மடங்கு எடையை சுமக்கும் சக்தி உடையவை. இவற்றின் புற்றில் உட்கார்ந்து கொண்டு வீட்டிலிருந்து கொண்டு சென்ற அரிசி பண்டங்களை உணவாக இடுவோம். தெய்வமாக தொழுவோம். கட்டெறும்புகளை சீசாவில் போட்டு மூடி உள்ளேயே சுழலவைப்போம். மூடிவைத்தால் ஈசன் படியளக்குறானா என்று சோதிப்போம். சித்தெறும்பு எலுமிச்சை,நார்த்தங்காய் இலைகளில் கூடுகட்டும்.இலைகலை கோர்த்து பஞ்சுகளை வைத்து இவைகட்டும் கூடு அபாயகரமானது.பெரும்பாலான எறும்புகள் வருசை மாறாமல் பணிக்கும்.அதன் தடத்தில் சின்ன தடங்கல் நேர்ந்தால்கூட தனது வழியை மாற்றியமைக்கும்.சில எறும்புகள் ஒத்தையில் இரை எடுக்கும். இதில் உழைக்கும் எறும்புகள்.உழைக்காத எறும்புகள் என்று தனித்தனி வகையுண்டு. ராணி எறும்பு என்றைக்கும் உழைக்காது.சந்ததியை பெறுக்குவதே அதன் தலையாயப் பணி.

மழைகாலங்கள் பல ஜீவராசிகளுக்கு உகந்தக் காலம்.ஈசல் தொடங்கி தலைபிரட்டை வரை உருவாகும் காலம். காலையில் வீதி விளக்குகளை மொய்க்கும் ஈசல்களை வாரிக்குமித்து பொடியாக்கி வருத்துண்போம்.அவ்வளவும் புரோட்டின்.மாட்டிறைச்சிக்கு இணையான சத்து இதற்கிருக்கிறது. ஒரு மழைக்கே தவளைகளுக்கு உயிர் முளைத்துவிடும். பச்சை தவளைகளை முன்பெல்லாம் இலகுவாய் பார்க்கலாம்.அதேபோல் குண்டு தவளைகள் இருந்தன. சொறித்தவளை என்றும் தவளையுண்டு.பறக்கும் தவளை,தேரை,கல்தேரை என்று பலவகை.தேரை நம் பிள்ளைகள் மீது விழுந்தால் உடம்பு தேராது என்பார்கள்.அதில் உண்மையில்லை.குண்டுத்தவளையை பச்சையாய் உரித்து சுத்தப்படுத்து மஞ்சளிட்டு அக்குள் கட்டியில் வைத்து கட்டுவார்கள்.கூச்சப்பட்டு கொப்புளம் உடையும் என்பார்கள்.அது உண்மையும்கூட.நானே நேரில் பார்த்திருக்கிறேன். மழைக்குட்டையில் உருவாகும் தலைபிரட்டைகளை பிடித்துவைத்து மீன் குஞ்சென்று வியப்போம்.பாட்டில் தண்ணிரீல் மெண்டுவந்து வளர்ப்போம். ஏரி,கன்மாய்,வயல்களில் நண்டு பிடிப்போம்.வலைநண்டுகள் நெஞ்சு சளிக்கு நல்லது. நண்டின் வயிற்று பகுதிகயில் மூடாக்கு போல ஒரு பை இருக்கும்.அதில்தான் தன் குஞ்சுகளை மறைத்து வைத்திருக்கும் தாய் நண்டு.அவற்றை பச்சையாகவே வாரி வாய்க்குள் போட்டுமெல்வோம்.பால்போல ஈரம் உழலும் நாக்கில்.

அடுத்து மரவட்டைகள். ரயில் வண்டிப்பூச்சி என்பது இதன் சிறப்புபெயர். கருமரவட்டை.கட்டை மரவட்டை என இரு மரவட்டைகள் ஊரில் உலாத்தும். மரவட்டைகளை கையில் நசுக்காத பிள்ளைகளே இல்லை.அதன் மீது எப்போதும் குழந்தைகளிக்கு ஓர் ஈர்ப்புண்டு. பறவைகள் என்று பார்த்தால் சிட்டுக்குருவி, தேன்சிட்டு,தைய லான் குருவி, பனங்காடை, மைனா, தவிட்டுக்குருவி, தூக்கணாங்குருவி,தையல் சிட்டு,சோளக்குருவி,பூங்குருவி,சிவப்புச் சில்லை,புள்ளிச் சில்லை,கரிச்சான்,கருவாட்டுவால்,ஓலைகரிச்சான்,சிகப்பு மீசை சின்னான்,சிகப்பு புட்டம் சின்னான், மாம்பழத்தான், மாங்குயில், கொண்டலாத்தி, பஞ்சாங்கம், சுடலைக்குயில், கருங்குயில், மீன்கொத்தி, ஆட்காட்டி,மரங்கொத்தி,மரந்தொற்றி,ஆலா,காய்ச்சுள்,செம்போத்து,மணிப்புறா,மாடப்புறா,கரும்பருந்து,செம்பருந்து,வல்லூறு,தேன்பருந்து,குடுமிப்பருந்து, பூனைப்பருந்து, மயில், செங்கல்நாரை, வர்ணநாரை, கூழைக்கெடாவக்கா, வாத்து, உண்ணிக்கொக்கு,நரையான்,மடையான்,கானாங்கோழி,நாமக்கோழி,நீர்க்கோழி,ஆண்டிவாத்து,பவழக்கால் உள்ளான்,அரிவாள் மூக்கன்(அன்றில்),துடுப்புமூக்கு நாரை,ஓட்டைவாய் நாரை,வானம்பாடி,இருவாய்ச்சி,சோலைப்பாடி,மரகதப்புறா,காடை,கெளதாரி,கீச்சாங்குருவி,வால்காக்கை,கருப்புக் காக்கை,அண்டங்காக்கை,கிளி,புள்ளி ஆந்தை,கொம்பு ஆந்தை,கூகை இத்தனை வகை பறவைகள் இருந்தன.

கழுத்தில் நாமம் இருக்கும் கருடனை தர்சிக்க ஊர் ஆற்று பாலத்தில் பெரும்கூட்டம் வியாழன் மாலைதோறும் கூடும்.கருடன் ஆற்றைக்கடந்தல் முடிந்தக்கையோடு முழுக்கூட்டம் சில்லாய் நின்ற இடம் தெரியாமல் தெரிக்கும்.நாங்களும் கருடன் பார்க்க மணிக்கணகில் காத்துநிற்போம். தூக்கணாங்கூட்டை எடுக்க ஒவ்வொரு பனைமரமாக அலைவோம்.ஓரே மரத்தில் நூறு இரநூறு என கூடுகள் தலைகீழாய் தொங்கும்.கழற்றிக்கொண்டு எடுத்துவந்து வீட்டில் மாட்டுவோம்.காக்கை கூட்டில் முட்டை எடுப்போம்.குருவி முட்டைகளை அவித்து தின்போம்.

தட்டான்,தும்பி,பட்டாம்பூச்சி,தேன்பூச்சி இவை பறக்கும் தோட்டம்தான் பிள்ளைகள் குதூகலிக்கும் கூடாரம்.தும்பியை பிடித்து வாலில் செடிக்கட்டி பறக்கவிடுவோம்.சிலந்தி வலை தேடித்தேடி திரிவோம்.இதில் கருப்பு,சிகப்பு இரு நிறத்தில் உண்டு.சிகப்பு கடித்தால் நெஞ்சடைத்து சாக நேரும்.அந்த அளவுக்கு இதில் விஷமுண்டு. எட்டுக்காலியை பிட்டித்து காலை ஒடித்து கடிகாரம் காட்டவைப்போம்.உயிர்ப் பிரிந்தக்கால் கொஞ்ச நாழி தானே சுழலும் இல்லையா அதுதான் எங்களுக்கு மணிக்கூண்டு.

பறப்பன ஊர்ன தவிற நடப்பன சகவாசமும் உண்டு.நாய், பூனை,ஆடு,மாடு என்று அவை ஒருபுறம். எங்கள் வீட்டில் நிறைய பூனைகள் இருந்தன.இரண்டு நாய்கள் இருந்தன. மனிதர்களிடம் அன்புக்காட்டுவதில் பூனைக்கு நிகரான பிராணியில்லை.நமது ஒவ்வொரு சொல்லையும் கவனிக்கும் சாமர்த்தியம் பெற்றதது.

மழலையாக இருந்த போது நாங்கள் அதிகம் மனித சகவாசம் கொள்ளமலே இருந்திருக்கிறோம் என்பது இப்போது நினைக்கையில் வியப்பாக இருக்கிறது.இன்றைய குழந்தைகளுக்குதான் மனித சுவாசமும் கிட்டவில்லை.இயற்கையின் வாசமும் எட்டவில்லை!

Sunday, January 30, 2011

புத்தகங்களின் வாசனை




இந்த
வருட புத்தகச் சந்தைக்கு முதல் நாளே போயிருந்தேன்.காரணம்,அம்பைக்கு ஒரு லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்ததுதான். பாம்பன்விளையில் போன வருடம் அவரை வந்தித்ததோடு சரி.அதற்கப்புறம் நடக்க விருந்த சந்திப்பு. பரிசளிப்பு விழாவுக்கு வருகிறேன் என்று சொல்லாமல் குறிப்பிட்ட தேதியில் சென்னை வருகிறேன் என்று மட்டும் அம்பை மெயில் அனுப்பி இருந்தார். இரண்டு நாட்கள் இ-மெயில் வசதியில்லாத ஊரில் நான் இருந்ததால் உடனே அவருக்கு பதில் அனுப்ப முடியவில்லை. நான் ஏதோ அவர் மீது மன சங்கடத்தில் இருப்பதாக எடுத்துக்கொண்டு மறு மெயிலும் அனுப்பிவிட்டார். சென்னை திரும்பிய கையோடு இரு மெயிலையும் பார்த்துவிட்டு அவரை கைபேசியில் அழைத்தேன்.இந்து நாளிதழில் கு.ப.சேது அம்மாள் பற்றி வெளிவந்திருந்த கட்டுரையை படித்துவிட்டு அவரை சந்திக்க வேண்டும் அவரின் முகவரியை பிடிக்க முடியுமா என்றார்.நான் சென்னை வந்து அழையுங்கள் மற்றதை பேசிக்கொள்ளலாம் என்றேன்.சென்னை வந்ததும் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது.மாலை புத்தகக் கண்காட்சியில் சந்திக்கிறேன் என்றேன்.சொன்னதைபோலவே மாலை கண்காட்சியில் நடக்க இருந்த பரிசளிப்பு விழாவுக்கும் போனேன். அம்பை வழக்கத்திற்கு ஒவ்வாத தோரணையோடு மேடையில் அமர்ந்திருந்தார். சம்பந்தேமே இல்லாமல் பலர் ஏதேதோ பேசிக் கொண்டு போனார்கள்.சகிக்கவில்லை, கிளம்பிவிட்டேன்.எனக்கே இப்படி என்றால் அம்பையின் மனநிலை நிச்சயம் மோசமடைந்திருக்கும். மறுநாள் சந்தித்தபோது “நேற்று வந்தேன்.நீங்கள் மேடையில் இருந்ததால் பார்த்து பேச முடியவில்லை.போய்விட்டேன்”என்றேன்.கலகலவென அவரது கரகர குரலில் சிரித்தார்.”ஒருத்தருக்கும் என்ன தெரியுல.என்னை லஷ்மின்னு நினைச்சுக்கிட்டு சிலர் பேசிக்கிட்டு இருந்தாங்க.நிகழ்ச்சி சுத்தமோசம்” என்றதாக ஞாபகம். ஒரு லட்சம் பரிசு தொகை அம்பைக்கு பல நல்ல வழிக்களுக்கு உதவக்கூடும்.அவர் நடத்தி வரும் ஸ்பேரோவுக்கு இத்தொகையை அவர் பயன்படுத்தினாலும் பயன்படுத்துவார்.ஆகவே அவருக்கு பரிசு கிடைத்ததில் எனக்கு உள்ளூர மகிழ்ச்சி.கருணாநிதி, பபாசிக்குவழங்கிய ஒருகோடி ரூபாய் முரசொலி அறக்கட்டளை பரிசைப் போல குப்பன் சுப்பனுக்குதான் போய் சேரப்போகிறது என்று நான் பயந்து கொண்டிருந்த சமயத்தில் அம்பையை போல ந.முத்துசாமியை போல நல்ல ஆளுமைகளுக்கு போய் சேர்கிறதென்றால் யார்தான் அகமகிழமாட்டார்கள்?

இந்த வருட கண்காட்சியில் அதிக நேரத்தை காலச்சுவடு அரங்கிலேயே கழித்திருக்கிறேன்.அதற்கு சின்ன காரணமும் உண்டு. ஐந்து வருடங்களுக்கு பிறகு எனது கண்ணாடிக்கிணறு கவிதை தொகுப்பு காலச்சுவடு வெளியீடாக வந்திருப்பது.அதோடு அரட்டை அடிக்க அங்கேதான் அதிகம் தெரிந்த முகங்கள் உள்ளன என்பது.காலச்சுவடு ஸ்டாலில் பல நல்ல உள்ளங்களை சந்திக்க முடிந்தது. பல வருடங்களுக்கு முன்னால் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த விமலாத்தித மாமல்லனை முதன் முறையாக சந்தித்தேன்.சுகுமாரன் அறிமுகம் செய்து வைத்தார். எடுத்த எடுப்பிலேயே “நீ என்னோட பல வருட திட்டத்தை திருடிட்டீயேப்பா?”என்றார்.எனக்கு தலைக்கால் புரியவில்லை.இப்போதுதான் அறிமுகமாகிறோம் அதற்குள் திருட்டுப்பழியா? என்னத்த திருடினோம்ன்னு தெரியலையே? என்று மூளையைக் குழப்பினேன்.அப்புறம்தான் அவரிடம் உள்ள அதே சுபாவம் என்னிடமும் இருப்பதாகவும் அவர் சொன்னார். அவர் செய்ய நினைத்திருந்த ஒன்றை நான் பகடி என்ற பெயரில் பண்ணிக்கொண்டு திரிவதாக தெரிவித்தார். “அது எப்படி உங்களுக்கு தெரியும்”என்றேன்.உபயம்; சுகுமாரன் என்றார். பார்த்த மாத்திரத்திலேயே அவரை பிடித்துப்போனது.இலக்கியவாதிகள் அதிகம் நகைச்சுவை ரசனை இல்லாதவர்கள்.இவர் அரங்கம் அதிர சிரிக்கிறார்.எடுத்த எடுப்பிலேயே மெட்ராஸ் பாஷை ”அசைச் சொற்களை”பேசுகிறார்.இவை எல்லாம் ஒரு இயல்புத் தன்மையை எனக்கு நல்கின. இந்த தமாஷ் பேர்வழிக்கு சுகுமாரன் நெருங்கிய ஸ்நேகிதராம்.என்னால் நம்பவே முடியவில்லை.மாமல்லனோடு இருப்பது விசு படம் பார்ப்பது மாதிரி.சுகுமாரனோடு இருப்பது மணிரத்னம் படம் பார்ப்பது மாதிரி.மில்லிமீட்டர் அளவில் வசனம் பேசுவார் சுகுமாரன். தண்னீர் லாரி போல தரதரவென்று சிரிப்பைக் கொட்டுகிறார் மாமல்லன். இருவரும் எதிரும் புதிருமானவர்கள்.ஆனாலும் நண்பர்கள்.அந்த நாகரீகம் எல்லாம் இன்றைக்கு இல்லை.ஒத்த அலைவரிசையோடு உள்ளவர்களே கீரியும் பாம்புமாக மாறி சண்டைப்போடும் காலமிது.இந்த எதிரும் புதிரும் நட்பெல்லாம் விஷப்பரீட்சை என்பது இன்றைய இளைய தலைமுறையின் அசைக்க முடியாத அபிப்ராயம். எதோடும் மல்லுக்கட்டுவதை அவர்கள் விரும்புவதில்லை. ஆனால் போன தலைமுறை மல்லுக்கட்டுவதே அலாதி என வாழ்க்கையை கழித்தவர்கள்.எதோடும் ஒரு சண்டை உண்டு அவர்களுக்கு.கூடவே கொஞ்சம் சமாதானம்.ஆனால் இப்போதுள்ள இளசுகள் எதையும் முழுமையா எடுத்துக்கொள்ளவதில் ஆர்வமுள்ளவர்கள். எவற்றையும் எந்த இன்னலும் இல்லாமல் அப்படியே முழுதாய் அனுபவிக்க வேண்டும்.

சந்தையில் பல நண்பர்களை சந்தித்தேன்.இயக்குனர் மணிரத்னத்தை அழைத்துக்கொண்டு ஜெயமோகன் சுற்றிக்கொண்டிருந்தார்.ஒவ்வொரு கடையாக அவரை அழைத்துக்கொண்டு போய் பல புத்தகங்களை அறிமுகப்படுத்தினார். ஜெயமோகன் எடுத்துக்காட்டும் ஒவ்வொரு புத்தகத்தையும் மணிரத்னம் கையில்கூட தொடவில்லை.தூரப்பார்வை இட்டதோடு திரும்பிக்கொண்டார். யாருக்கு தெரியும் அவரது குறிக்கோள் வேறாக இருக்கலாம்.அது சிக்கும் வரை அவர் காத்துக்கொண்டிருந்திருக்கலாம். ஜெயமோகன் என்றதும் ஒரு தகவல் ஞாபகத்திற்கு வருகிறது. சினிமா உலகில் ஜெ.மோவுக்கு ஜெய் சார் என்று ஒரு செல்லப்பெயர் உண்டாம்.ஒரு வெளியீட்டுவிழாவில் வசந்தபாலன் குறிப்பிட்டுக்கூறினார்.எஸ்.ரா.வுக்கு என்ன பெயரோ தெரியவில்லை? சுய அடையாளத்தை அழித்து ரசிப்பதில் சினிமாகாரர்களிக்கு அப்படியொரு குரூர குஷி. ஜெயமோகனை பார்த்துவிட்டு நகர்ந்த போது ஓர் உயர் அதிகாரியின் அழகியலோடு நாஞ்சில் நாடன் என்னை உரசும் தூரத்தில் கடந்துபோனார்.சாஹித்ய அகாதெமி சந்தோஷம் அவர் முகத்தில் தென்பட்டது.அவர் கையை பிடித்து என் வாழ்த்தை தெரிவித்தேன்.அகாதெமி விருது மீது ஒரு புண்ணாக்கும் எனக்கு மரியாதையில்லை.ஆனால் நாஞ்சில் மீதும் அவரின் எழுத்தின் மீதும் அளவில்லா மரியாதையை உள்ளதால் இந்தப் பாராட்டு என்றேன்.இந்தப் புத்தக்க் காட்சியில் அவரது ’சூடியபூ சூடற்க’ சிறுகதை தொகுப்பு 2900ம் பிரதிகளுக்கு மேல் விற்றிருக்கிறது என்றார்.நல்ல தகவல் என்றேன்.மாலை த.மு.எ.க.ச.அவருக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணியிருப்பதாகவும் அவசியம் வாருங்கள் என்றும் அழைப்புவிடுத்தார்.கட்டாயம் வருகிறேன் என்றேன்.எந்தக் காலத்தில் நாம் வாக்குறுதியை காப்பாற்றி இருக்கிறோம் என்று உள்ளபடியே சிரித்துக்கொண்டேன்.

சொந்த ஊரிலிருந்து கண்காட்சிக்காக வந்திருந்த நண்பர் கே.என்.செந்தில் ஓர் இரவு மட்டும் என்னோடு வீட்டில் தங்கினார். இரண்டு நாள் கண்காட்சி அவரோடு கழிந்தது.செந்தில்,நான்,தேவிபாரதி,நெய்தல் கிருஷ்ணன் அரங்கத்திற்கு வெளியில் நின்று புகைத்துக் கொண்டிருந்தோம்.அப்போது பவா செல்லத்துரை வந்து எங்களோடு கலந்து நின்றார். எப்போது சந்தித்தாலும் சொல்வதற்கு பவாவிடம் புதுசுபுதுசாக கதைகள் இருக்கும்.தனது டூரிங் டாக்கீஸ் அனுபவம் பற்றி லஷ்மண பெருமாள் தமிழ்ஸ்டூடியோ டாட் காமில் பிரமாதமாக எழுதியிருப்பதாகவும் அதில் தான் ரசித்த பகுதிகள் பற்றியும் பேசிக்கொண்டேபோனார். வழக்கம்போல பவாவின் பேச்சில் வரிக்கு வரி பிரமாதம் பிரமாதம் வந்துகொண்டே இருந்தது. இடையில் சம்பந்தமே இல்லாமல் புகுந்த சில வாசகர்கள் பவாவிடம் பேச்சுக் கொடுத்தார்கள்.அவரை விஜய் டி.வி.யின் நீயா?நானாவில் பார்த்ததாகவும் பவா பிரமாதமாக பேசியதாகவும் அவர்கள் சொன்னார்கள்.இப்போது பவாவிடமிருந்த பிரமாதம் அந்த வாசகர்களின் பேச்சில் இடம் மாறி இருந்தது. எங்களையும் சமாளித்துக்கொண்டு அவர்களையும் சமாளித்துக்கொண்டு கொஞ்ச நேரம் படாதபாடுபட்டார் பவா.மேலும் அவரை சங்கோஜத்தில் நெளிய வைக்க வேண்டாமே என்று நாங்கள் கால்களை கடத்த ஆரம்பித்தோம்.
மறுநாள் ஜமா அரங்கின் உள்ளேவே நடந்தது.நடக்கின்ற வழியை நாங்கள் மறித்து நின்றதுகூட தெரியாமல் ஒருவருக்கொருவர் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தோம்.இன்றும் பவா உள்ளேபுகுந்தார். தனது ஸ்டாலுக்கு ஒரு எழுபது வயதான மூதாட்டி வந்ததாகவும் சமகால எழுத்தாளர்களின் பல நூல்களை வாங்கியதாகவும் சொன்னார்.ஆச்சர்யம் என்னவென்றால் அம்மூதாட்டி கண்காட்சியில் புத்தகங்களுக்கு செலவு செய்வதற்காக அவரது வீட்டில் ஒருலட்சம் ரூபாய் கொடுத்துவிடுவதாகவும் சொன்னார்.இவரைப் போன்றவர்களால்தான் கண்காட்சி கண்ணீர் வடிக்காமல் தப்பிக்கிறது என்றேன். அம்மூதாடியுடன் வந்தவர் கத்தைக் கத்தையாக பணத்தை கடக்குக்கடை பட்டுவாடா பண்ணுவதை பார்த்து ஆடிபோய்விட்டேன் என்றார்.ஆட்டம் அவருக்கு மட்டுமல்ல;கேள்விப்பட்ட எங்களுக்கும்தான்.


பபாசி பல அட்டகாசங்களை அரங்கேற்றுகிறது.இதையெல்லாம் கேட்க ஆளே இல்லை என்றார் கண்ணன்.காலச்சுவடு அரங்கில் எல்.சி.டி. வைத்திருந்தார்களாம்.கரண்ட் அதிகமாக செலவாகிறது என்று தூக்கச்சொல்லிவிட்டார்கள்.அப்புறம் அரங்கில் சிறு மைக்கில் புத்தக வெளியீடு நடத்தினோம்.அதையும் நிறுத்த சொல்லிவிட்டார்கள்.கடையில் எழுத்தாளர்கள் வந்து கையெப்பம் இடுகிறார்கள் என்று பொதுஅறிவிப்பு பண்ண சொன்னோம் மாட்டேன் என மறுத்துவிட்டார்கள். காரணம் கேட்டால் எல்லாரும் செய்யத் தொடங்கிவிடுவார்கள் என்கிறார்களாம். செய்தால் என்ன? அதற்கென்று ஒரு கட்டணத்தை நிர்ணயித்துக்கொள்ள வேண்டியதுதானே என்றார்.ஜெர்மன் புத்தக் கண்காட்சியில் எழுத்தாளர்கள் சரக்கு அடிக்கவே தனியிடம் உண்டு.இங்கே நாம் அவ்வளவு தூரம் போக வேண்டாம்.இதுபோல சிறு காரியங்களுக்கு இடம் கொடுத்தால் என்ன என்றார்.எனக்கு நியாயமாகப்பட்டது. பபாசி பதிப்பகத்திடமிருந்து பணத்தை கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருக்கிறதேயொழிய ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்களை நோக்கி முன்னேறுவதற்கான அறிகுறிகளே தென்படவில்லை. இந்த வருடம் அரங்கத்திற்குள் அடித்து வைத்திருந்த நடைமேடை பல இடங்களில் பரதநாட்டியம் ஆடிக்கொண்டுயிருந்தது.அசந்தால் ஆளை உள்ளே காவு வாங்கிவிடும்போல.அவ்வளவு கரடுமுரடுகள். இதையெல்லாம் நுகர்வோர் புகார் செய்ய எங்கே போவதோ தெரியவில்லை.பத்து டிக்கெட் கவுண்டர்கள் இருந்தும் எல்லாவற்றையும் மூடி வைத்துவிட்டு ஓரே கவுண்டரில் டிக்கெட் கொடுத்தார்கள்.கூட்டம் ஓரே இட்த்தில் முண்டியடித்து நின்றது.பார்க்கவே எனக்குப் பத்திக்கொண்டு வந்தது.

அப்புறம் இன்னொரு விஷயம்.பட்டிமன்றம் என்றபெயரில் பலரின் கழுத்தில் கத்திப்போட்டுக் கொண்டிருந்தார்கள் பல பேச்சாளர்கள்.அப்பதுல் காதர் ஏனோ உட்கார்ந்த இடத்திலேயே ஆசன வாய் அடைக்க கத்திக்கொண்டே போனார்.அவ்வளவு கிட்டத்தில் மைக் இருந்தும் இவர் ஏன் மூச்சடைக்க கத்துகிறார் என்பது புரியவில்லை. கேட்டதிலேயே சுகி சிவத்தின் பேச்சு கொஞ்சம் சராசரியானது. அண்மையில் வழங்கப்பட்ட நீதிமன்றங்களின் தீர்ப்பை மறைமுகமாக எள்ளல் செய்தார் அவர். கன்டம்ட் ஆஃப் கோர்ட் பற்றி ஒரு பிடிபிடித்தார். நீதி மன்றங்களை விமர்சிக்கும் வழக்கை நீதி மன்றங்களே விசாரிப்பது முறையல்ல;ஆகவே அதற்கென தனி ஆணயத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டியச் சூழலில் இன்றைக்கு நாம் இருக்கிறோம் என்றார். சமகால ப்ரக்ஞையோடு பேசிய ஒரே பட்டிமன்ற பேச்சாளர் அவர் மட்டும்தான்.பட்டிமன்றம் என்றால் சுகி கோபித்துக்கொள்ளலாம்.வலிந்து பட்டிமண்டபம் என்றே அவர் மேடையில் குறிப்பிட்டுகொண்டு போனார்.

கறையான்கள் பசிக்காக புத்தகத்தை தின்கின்றன.நானும் பசிக்காகதான் புத்தகங்களை படிக்கிறேன். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பரிணாம வளர்ச்சியின் மிச்சசொச்சங்கள் உண்டுதானே. நான் ஒரு கறையானாக உருமாறும் மாற்றத்தை இந்த சந்தைக்குள் நின்றுதான் உணரமுடிகிறது.காஃப்கா கரப்பான்பூச்சியானதைபோல. ஆதி தன்மையின் வேரை உணர்ந்தவர்கள் மறுபடியும் தனது பிறப்பிடத்திற்கு திரும்புகிறார்கள். நானும் என் அனுபூதியான பிறப்பிடத்தை புத்தகங்கள் மூலம் அடைகிறேன். முதலில் கறையான் போன்ற ஓர் உயிரிக்கு உணவாக இருந்தது படிப்படியாக அறிவாக மாறும் விந்தைதான் வாசிப்பு.ஒரு விதத்தில் வயிற்றிலிருந்து தலைக்குத் திரும்புதல்.எப்போதும் வாசிப்பின் வாசல்கள் ஒன்றுபோலவே உள்ளன. இரையை வாயால் கவ்வும் உயிரினத்தைப்போல என் உணவை நான் மூளையால் கவ்வ ஆரம்பித்திருக்கிறேன். வயிற்றிற்கு இருக்கும் உணவுக்குழலைப்போல மூளைக்கும் உணவுக்குழல் உண்டு என்ற தகவலே பாதி மனிதர்களூக்கு தெரிவதில்லை.அவனது அன்றாட பிரச்சனையோடு அவனது ஆயுள் முடிந்துபோவது எவ்வளவு பெரிய கொடுமை. வயிற்றிலிருந்து விடுபட்டு மூளைக்குப்போய் சேராத சமூகத்திற்கு எந்தக் காலத்திலும் விடுதலை இல்லை.உடம்பிற்கு தேவையான கலோரி பற்றியே இந்த நூற்றாண்டில்தான் தமிழன் யோசிக்க ஆரம்பித்திருக்கிறான்.ஊணுடம்பு ஆலயம் ஆவது எப்போதோ? அறிவுக்கான கலோரி பற்றி விழிப்புணர்வே இல்லாத ஒரு சமூகத்தில் எழுத்தாளன் கொண்டாடப்பட வேண்டும் என நினைப்பது கூட மடத்தனம் இல்லையா என பலர் வாதிடலாம்.ஆனால் ஆசானை தெய்வத்திற்கு பக்கத்தில் வைத்தவர்கள் நாம்.அறிவாளனை மறுகடவுளாக தொழுதிட்டவர்கள் நாம் . உலகத்தில் எந்த ஒரு கவிஞனும் இறைவனுக்கு பக்கத்தில் இன்னொரு நாற்காலி போடப்பட்டிருப்பதாக சான்றுகள் இல்லை.இங்கே அப்பரும் திருநாவுக்கரசரும் இறைவனுக்கு இணையானவர்கள்.இந்தக் குலம்தான் இன்று சகதியில் உழல்கிறது.மடமையில் சிக்குண்டு கிடக்கிறது.எவ்வளவு வேதனைக் கொள்ளத்தக்க விஷயம் இது.




கண்காட்சியில் நான் கவனித்த சில விஷயங்கள் எனக்கு விநோதமாகப்பட்டன. பெரிய எழுத்தாளன் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் யாரும் ஒப்புக்கு ஒரு புத்தகத்தைக்கூட வாங்காமல் வெறு கையை வீசிக்கொண்டு திடலில் திரிந்தது. மூட்டை மூட்டையாய் நூல்களை அள்ளிச் சுமந்து போனவர்கள் வாசக மனநிலையிலேயோடே பவ்யமாக நின்று எழுத்தாளர்களிடம் பேசியது. மேட்டுக்குடி தோரணையில் இருந்த சிலர் ஸ்டாலுக்கு வெளியிலேயே நின்றுகொண்டு தாவித்தாவி புத்தகங்களை தொட்டு பார்த்துவிட்டு ஒன்றையும் வாங்காமல் கேண்டீனில் உள்ளே புகுந்தது.இவையெல்லாம் ஒன்றுக்கொன்று முரணாகவே பட்டவிஷயங்கள்.இதை சொல்வதால் கண்காட்சியிலிருந்து நான் மூட்டைக்கணக்கில் புத்தகங்களை வாங்கியிருப்பேன் என நீங்கள் நினைத்துவிட வேண்டாம்.அப்படியொன்றும் சந்தையில் தேடிப்பிடித்து கட்டுக்கட்டாக புத்தகங்களை வாங்கும் ரகமல்ல நான்;அச்சகத்திலிருந்து சூடு குறையாமல் கொண்டு வந்து அடுக்கப்படும் சில புத்தகங்களை புரட்டிப்பார்க்க மட்டுமே பிரியப்படுபவன். அதன் அட்டை, வடிவமைப்பைக் கண்டு மெய்ச் சிலீர்ப்பதோடு சரி, என் ஆசைகள் அடங்கிவிடும். அடுத்த நாளும் அட்டைகளை மட்டுமே ரசிக்க கிளம்பிவிடுவேன். அச்சு மையின் வாசனையை பிடிக்க மறுநாளும் தவறாமல் கண்காட்சிக்கு வந்துவிடுவேன். இதை வைத்து நான் புத்தகங்களே வாங்காத ஆள் என்ற முடிவுக்கு நீங்கள் வந்துவிடக் கூடாது. அதில் உண்மையுமில்லை.

ஒவ்வொரு வருட சந்தைக்கும் அசுரகதியில் தயாராகும் பல புத்தகங்கள் தரத்தில்,கருத்தில்,மொழிபெயர்ப்பில் எல்லாம் சுத்தமானவை என உறுதிப்பட்ட பின்புதான் புத்தகங்களை வீட்டுக்குச் சுமக்க தீர்மானிப்பேன். அதற்குள் சந்தையே முடிந்துவிடலாம் இல்லையா?ஆம், முடிந்துவிடும்தான்.தன் இறையை குறி பார்த்து தாக்கி விட்டு அது குறிப்பிட்ட தூரம் போய் சாக்கும் வரை காத்திருக்கும் பாலைவன சைட் வின்ட்டர் பம்பை போல நானும் எனக்காக புத்தகங்களை குறிபார்த்து குறித்திக்கொண்டு பின் புத்தகக் கடைகளுக்குப் போய் வாங்கிக் கொள்வேன். அப்போ எனக்கும் சந்தைக்கும் வியபாரத்தனமான சம்பந்தமே இல்லையா என்றால் ஏறக்குறைய இல்லை எனலாம்.அப்படியே வாங்கினாலும் 500,600ரூபாய்க்கு மேல் பட்ஜெட் தாண்டாது

சந்தையில் புத்தகங்களுக்கு பத்து சதவீதம்தான் கழிவு இல்லையா? நான் வாங்கும் கடைகளில் எனக்கு 25 சதவீதம் கழிவு.காத்திருப்பிற்கு சரியான கூலி கிடைக்கிறதில்லையா? அதற்காகதான் இந்த நிதாதம்,பொறுமை எல்லாம். இருந்தாலும் சந்தைக்கு நான் வந்துபோகும் வழக்கம் குன்றுவதில்லை. தினமும் கண்காட்சியை விட்டு திரும்பும் பத்து நாளும் நாளையும் இங்கு வரதான் வேண்டுமா என மனதில் ஒரு அலுப்புத் தோன்றவே செய்யும்.ஆனாலும் அடுத்த நாளே என்னையும் கேட்காமல் கால்கள் சந்தையை நோக்கி நடைபோட தொடங்கிவிடும். வெறுமனே நின்று புத்தகக் கடைகளை ரசிப்பதில் எனக்குள் ஏதோ சுவாரஸ்யம் உள்ளது. எனக்கு மட்டுமல்ல;என்னை போன்ற பலருக்கும் அப்படிதான்.இது ஒரு பொது மனநிலை சார்ந்த விஷயம்.கால்கள் உளைய புத்தகள் நடுவில் அலைந்து திரிவதில் ஏதோ இன்பம் இருக்கிறது. வருடம் முழுக்க வெறும் கட்டடங்களையே உரசிக்கொண்டு நடந்த கால்களுக்கும் கண்களுக்கும் இக்கண்காட்சி ஓர் ஆறுதல் நிவாரணி. உறவினர்களை விட அதி முக்கியமாகப்படும் எழுத்தாள நண்பர்களை சந்தித்து பேசிக்கொண்டிருப்பதில் உள்ளூர எனக்கு கிளர்ச்சி ஏற்படுகிறது. இதெல்லாம் சென்னைவாசியாக நான் மாறிய பிறகு உண்டான மன மாறுதல்கள். அதற்கு முன் எல்லோரையும் போல இந்தச் சந்தைதான் எனக்கும் புத்தகங்கள் வாங்கும் போக்கிடம். வியாபார நுணுக்கங்கள்,சூதுவாது அறியாத பருவம் அது.இப்போது கொஞ்சம் கற்றுக் கொண்டிருக்கிறேன்.எங்கே?எப்படி? குறைந்த தம்பிடியில் தாராளக் கொள்முதல் பண்ணலாம் என்பது உடபட.சகலமும் அத்துபடியானதாய் ஒரு நம்பிக்கை.அவை வெறும் நம்பிக்கை மட்டும்தான்.