Monday, September 15, 2014

வாசிக்கபட வேண்டிய ஆன்மா!
 பொதுவாக வாரலாறு என்பது நிறைய எதிரிகளை வழங்கும் மைதானம் நமக்கு. எதிரி என்பவன் நியாய தர்மங்களுக்கு அப்பாற்பட்டவன் என்ற கருத்தாக்கம் நமக்குள் காலகாலமாய் ஊறிப்போயிருக்கும் முன்முடிவு. ஆகவே புதைக்கபட்ட எதிரியின் எலும்புத் துண்டுகளை தோண்டியெடுத்து அதனோடு நம் கனவு யுத்தத்தை உடனே தொடங்கிவிடுகிறோம். ஆனால் வரலாற்றில் எதிரி என்பவனுக்கும் நியாய தர்மங்கள் உண்டு. அவன் நியாயத்தின் பாதையில்யேயே அநியாயங்களை நிகழ்த்துகிறவனாகிறான். அவன் நியாயத்தின் வரம்பை மீறுகையில் அது அநியாயமாக உருமாற்றம் பெருகிறது. ஒரு தேச எல்லைக் கோட்டை போல துள்ளியமற்றது இவ்வரம்புக்கோடு. துரோகத்தை துரோகமாக கற்றுத்தருகிறது மேலைய வரலாறு. துரோகத்தை வாழ்வியலாக போதிக்கிறது இந்தியத் தத்துவ மரபு. இந்தியனுக்கு வரலாற்று பிரக்ஞையை காட்டிலும் அடையும் தத்துவநிலையே முதன்மையானது இதைதான் இந்நூலில் மையமாக பிடித்திருக்கிறார் யங்.

இந்தியாவின் விடியல் எனும் வரலாற்று புத்தகம் நம் எதிரி மனபோக்கிற்கு மாறாக சர் ஃபிரான்சின்ஸ் யங் ஹஸ்பண்ட் எனும் நண்பனை நமக்கு வழங்க முற்பட்டிருக்கிறது. இது ஓர் ஆறுதல்தரும் அம்சம். பகையுணர்வால் மட்டுமே இயங்கும் வலாற்றின் விதியை ஹஸ்பண்ட் கூடிய மட்டும் தோழமையுணர்வுக்கு கை மாற்றிக் கொடுத்திருக்கிறார். நிலவியலின் படி ஹஸ்பண்ட் ஓர் ஆங்கிலேயர். வரலாற்றில் அவரொரு அதிகாரி. விடுதலை எழுச்சி போக்கில் அவரோர் அந்நியர். இன்று இந்தியாவை இந்தியனுக்கே இன்னொரு கோணத்தில் உணர்த்த முற்படும் வரலாற்றாசிரியர்.
வரலாறு என்பது எல்லாவற்றுக்கும் அப்பால் ஒரு விவாதம். வேறுபட்ட வரலாற்றாசிரியர்களுக்கு இடையேயான ஒரு விவாதம்; கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான ஒரு விவாதம்; உண்மையில் நிகழ்ந்துவிட்டதற்கும் அடுத்து நடக்கவிருப்பதற்கும் இடையிலுள்ள ஒரு விவாதம். விவாதங்கள் முக்கியமானவை; அவை மாற்றங்களுக்கான சாத்தியங்களை உருவாக்குகின்றன. அந்த விவாத்ததின் வழியே உள்ளே இறங்கிகிறார் ஃபிரான்சிஸ் யங். ஏற்கெனவே படிந்து பழுப்பேறிக்கிடக்கும் வரலாற்று ஆய்வுகளை தன் நுட்பமான விவாத்ததினால் வேறு எல்லைக்கு நகர்த்திக் கொண்டுப்போடுகிறார்.அதுதான் இந்நூலின் பலம். ஓர் அந்நியனாக இருந்தும் ஓர் இந்திய மனோநிலையோடு தன் ஆய்வை களைத்துப்போகிறார். இதன் யங்கின் வீரியம்.

ஹஸ்பண்ட் சுட்டிக்காட்டும் இந்தியா நம் பாடப் புத்தகத்தில் விரவிக்கிடக்கும் வளம் கொஞ்சும் இந்தியாவல்ல; தங்களைத் தாங்களே ஆளத் தெரியாமல் அரசியல் உணர்வே அற்றுக்கிடந்த மக்கள் நிரம்பிய இந்தியா. எளிய மக்களின் உரிமைகள் குறித்து எவ்வித அறிவுமில்லாத எஜமானர்கள் ஆண்ட இந்தியா. அதாவது ஏழை இந்தியா. அன்றைக்கு இந்தியர்களின் சராசரி வருமானம் எட்டு பவுண்ட். அதே காலத்தில் இங்கிலாந்தின் தனிநபர் வருமானம் 95 பவுண்டுகள். இந்நிலை  சீராக மாற்றம் கொள்கிறது. 1901-02 களில் தனிநபர் வருமானம் இரண்டு பவுண்டுகளாக இருந்தவை 1921-22களில் ஐந்து பவுண்டுகளாக உயர்ந்திருக்கிறது.இம்மாற்றம் ஆங்கிலேய அரசின் வருகையால் நிகழ்ந்த சாதகம். இந்த சாதக குரலால் பேச ஆரம்பிக்கிறார் யங்.
இந்தியாவுக்கு வர்த்தக நோக்கத்திற்காக வந்த ஆங்கிலேயர்கள் அரசியல் ஆட்சியதிகாரம் பெற்றது தற்செயலானது என்கிறார் யங். நிர்வாகத் திரனற்று உதிரி உதிரியாக சிதறிக்கடந்த தேசத்தோடு ஒரு முழுமையாக வர்த்தகம் சாத்தியமல்ல என உணர்ந்த ஆங்கிலேயர்கள் ஒரு மைய நிர்வாகத்தை தோற்றுவிக்க முற்பட்டதன் விளைவே இந்தியா அடிமை தேசமானது என வாதிடுகிறது இந்நூல். அதை காந்தி சரிவர புரிந்துக்கொள்ளாமல் மக்களை தவறாக வழிநடத்தினார் என வாதிடும் அளவுக்கு யங்கை இட்டுச்செல்கிறது. பிரிட்டீஷ் ஆட்சியை சைத்தானின் ஆட்சிஎன காந்தி கூறுவது ஒரு புனிதரின் தவறான வாதம்என்கிறார் யங். இந்தியா பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்திற்கு அடிபடியாமல் போயிருந்தால் அது ஜப்பான், ரஷ்யா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பலம் வாய்ந்த நாட்டிற்கு அடிமையாக நேர்ந்திருக்கும் என்பதே அன்றைய நிலை. அதற்கு அரணாக பிரிட்டீஷ் படைகள் இந்தியாவுக்கு பயன்பட்டன என்பதும் யங் உணர்த விரும்பும் உண்மை. இதுவே நம் வரலாற்றில் மறைக்கப்பட்ட இன்னொரு முகம்.

ஹஸ்பண்ட் கணிப்பின்படி இந்தியர்கள் அரசியல் நுண்ணறிவற்றவர்கள். சீனர்கள் கலைகளிலும், இந்தியர்கள் ஆன்மிகத்துறையிலும் நுண்ணறிவு பெற்றவர்கள்எனலாம். ஞானமடைதல் எனும் இந்திய மரபு அரசியல் உணர்வை மட்டுப்படுத்தி வைத்திருந்திருக்கிறது. ஆகவே ஆளத் தெரியாதவர்களாக இந்தியர்கள் இருந்துள்ளனர். மேற்கத்திய வரலாற்றை அரசியல் உணர்வோடு புரிந்துக் கொண்டால் இந்தியாவின் வரலாற்றை ஆன்மிக ரீதியாகவே புரிந்துக் கொண்டாக வேண்டும் என ஹஸ்பண்ட் கண்டறிந்து வைக்கும் மைய கருத்தே இந்திய வரலாற்றின் தனித்துவமாக எனக்குப்படுகிறது. இந்திய தேச வரலாற்றுக்கு அடிசரடாக பாய்ந்தோடும் ஆன்மிக ஆற்றை இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் கணக்கில் கொள்ளாமல் இடற விட்டது மிகப் பெரிய கொடுமை.  இந்த விடுபடல்தான் இந்தியாவை வேறு பாதைக்கு அழைத்துக்கொண்டு போக நேர்ந்தது. அறிந்தோ அறியாமலோ நமது முட்டாள்தனங்களோடு நமது ஆற்றலையும் சேர்த்து நாம் புதைத்துவிட்டோம். அதற்கு சரியான சான்று, நம் நவீன கல்விமுறை.
ஹஸ்பண்டின் ஆய்வு பிரகாரம்  ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட இந்தியக் கல்வி என்பது பிராந்திய மொழியை கற்றுத்தரும் மையமாகவே செயல்பட தொடங்கியிருக்கிறது. ஆக்ராவில் முதலில் துவங்கப்பட்ட அரசுப்பள்ளி திட்டம் பின் 1853ல் வடமேற்கு மாகாணம் முழுக்க விரிவுபடுத்தப்பட்டதன் நோக்கம் இதுவாகவே இருக்கும். ஆனால் இந்திய சமயவாதிகளால் துவங்கப்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களின் நோக்கமும் சமயத்தை  சீர்த்திருத்தவதும் அதன் வழி ஞானமரபை கட்டமைப்பதுமே இலக்காக இருந்திருக்கிறது. ஆக, கல்வியின் மேலை நோக்கமும் கீழைத்தேய தேவையும் ஒன்றானவையாக அல்ல; என்பதை ஹஸ்பண்ட் இந்நூலில் மீண்டும் புரியவைக்கிறார். 

இந்தியாவின் சரித்திரத்தை ஒரு தொகை வடிவமாக்கியதில் ஹஸ்பண்ட் வெற்றிப் பெற்றிருகிறார்.அதே இந்தியா என்பது வடமாநில நிலப்பரப்பை மட்டுமே உள்ளடக்கியதல்ல; அதன் கீழ் தென்னிந்தியா எனும் பெரும் நிலப்பரப்பு பரந்துவிரிந்துள்ளது. அந்தத் திசைகளை பல ஆங்கிலேய வரலாற்றாசிரியர்கள் தவறவிட்டிருப்பதைப் போன்றே ஹஸ்பண்டும் தவறவிட்டிருக்கிறார். இந்திய வரலாற்றில் தென்னிந்திய வரலாறு என்பது ஒரு புதிர். இருண்ட பிரதேசம். இதில் முத்துலெட்சுமி ரெட்டியும், சரோஜினிநாயுடுவும் இதில் விதிவிலக்காக பங்கு கொள்கிறார்கள். ஆயினும் யங் கட்டாயம் படிக்கப்பட வேண்டிய எழுத்தாளர்.
ஏனெனில் அவர் இங்கிலாந்து போய்விட்ட பின்பும் இதமளிக்கும் இந்திய இமயமலைப் பகுதியின் அதிகாலை நேரத்தின் அழகின் அமைதிக்காகவும், சிம்லாவின் வானத்தை முட்டும் தேவதாரு மரங்களுக்காகவும், டார்ஜிலிங்கில் தெரியும் கஞ்சன்ஜங்காவின் அழகுக்காகவும் ஏங்குகிறார். இந்த ஆன்மா வாசிக்கப்பட வேண்டியது.

இந்தியாவின் விடியல்: நூல் முன்னுரை

Friday, November 18, 2011

ஏழைமக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி உதவிகளை,புத்திசாலியாக உள்ள மற்றவர்கள் கபளீகரம் செய்து விடுகிறார்கள்.
இந்திய அறக்கட்டளை நிறுவனம் இலாப நோக்கமில்லாது,நாட்டுப்பணி செய்து வருகிறது. இந்தத் தன்னார்வத் தொண்டு அமைப்பின் செயல் இயக்குநராக 2001 ஆம் ஆண்டிலிருந்து பணிபுரிந்து வருபவர் அஜய் மேத்தா.
இவர் 1990_1999 வரை உதய்ப்பூரில் உள்ள ‘சேவா மந்திர்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தியவர். இந்தத் தொண்டு நிறுவனம் நாட்டுப்புற ஏழைமக்களுக்கு அனைத்து துறையிலும் மேம்பட உதவி செய்து வருகிறது. இன்று அது உலகளாவிய கவனத்தைப் பெற்று இருக்கிறது.
இப்படி தொண்டு செய்வதில் ஏற்படும் ஊழல் குறித்த விஷயங்களை ஆராய்ந்து பேசி ஒரு விழிப்புணர்வை உண்டாக்க முயல்பவர் இவர் சமீபத்தில் சென்னையிலுள்ள தேசிய நாட்டுப்புற உதவி மையத்தில் ஒரு உரை நிகழ்த்த வந்திருந்தார். அவரை சந்தித்து பேசினோம்.

 பெரும்பாலனவர்கள் தர்மம் செய்கிறோம் என்ற மனோபாவத்தை ஒட்டியே தான தர்மங்களை செய்கிறார்கள். சிலர் இது நம்முடைய தார்மீக அறக்கடமை என்ற நோக்கிலும் செய்கிறார்கள் எதிர்காலத்தில் அரசியல்,பொருளாதார ஆதாயம் பெறுவதற்காக, அறக்கொடைகள் என்ற போர்வையில் கொடுக்கிறார்கள். உங்கள் பார்வையில் இவையெல்லாம் எப்படிபடுகிறது?நீங்கள் எப்படி இந்த நிதியுதவிகளை பார்க்கிறீர்கள். உங்களுக்கு தொண்டு நிறுவனங்களுடன் நீண்டகாலம் அனுபவம் இருக்கிறது. உங்கள் அனுபவம்,சிந்தனையை … பகிர்ந்து கொள்ள முடியுமா?

அஜய்மேத்தா : இந்தியாவில் தர்ம காரியங்கள் செயல்படுவதற்கான தூண்டுகோல்கள்; நோக்கங்கள் பலவாகும், இதுதான் என்று பிரித்துக் காட்ட முடியாது. நீங்கள் சொன்னவைக்குள் அனைத்துமே இருக்கின்றன. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு, காந்தி தன் ஆளுமையினால் பல செல்வந்தர்களை தர்மகாரியங்களில் ஈடுபட வைத்தார்; அவர்களின் மனசாட்சியை எழுப்ப அது வல்லதாய் இருந்தது. மகாத்மா காந்தியின் நடத்தை அவர்கள் தர்மம் செய்வதாக எண்ணாமல் தம் சமூகக் கடமை இது என உணரும்படிச் செய்தார் அவர் வகுத்தளித்த ‘தர்மகர்த்தா கோட்பாடு’ ஒரு தீர்க்கதரிசியின் தொலைநோக்குப் பார்வையாகும். அது மரபாக வளராமல் போய்விட்டது வருத்தப்பட வேண்டியதாகும். அந்தக் காலத்திய பெரும் பணக்கார வணிகர்களின் அறவுணர்வுகளை எழுப்பி செயல்படச் செய்தது மகாத்மாவின் மேதையாகும். இப்போதுள்ள பெரும் சவால் என்னவெனில்,உதவும் எண்ணமுள்ளவர்களிடம் நம்பும்படியாக தன்னார்வ அமைப்புகள் தம் செயல்பாட்டினாலும் நடத்தையினாலும் இயங்கவேண்டும். நான்,ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது வருத்தப்படுவது என்னவெனில்,கொடையாளர்கள் சமுதாயத்தில் நிலவும் சிக்கலைக் காண மறுக்கிறார்கள். ஏதோ தாங்கள் தர்மம் செய்கிறோம் என எண்ணிவிடுகிறா£கள். கல்வி நிறுவனங்களுக்கு உதவு வது; அடித்தட்டு மக்களுக்கு ஏதோ செய்வது என்பதோடு நின்றுவிடுகிறார்கள். ஆத்மார்த்தமாக புரிந்து கொள்ளவும் இல்லை என்பதுதான் என் வருத்தமாகும். ஏழை மக்களுக்கு கல்வி கொடுக்கும் நிறுவனங்கள் நீண்டகாலம் நிலைத்து இருக்க வேண்டும், என்ன மாற்றங்களை ஏற்படுத்த போகிறோம் என்பதை பத்தியெல்லாம் சிந்திப்பதேயில்லை. வளர்ந்துவரும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும்,பெருகிவரும் செலவும் எப்படி ஏழைமக்களுக்கும் போகிறது என்பதில் எந்த உணர்வும் இல்லை, ஏதோ தர்மம் செய்துவிட்டதாகவே எண்ணிவிடுகின்றனர். இந்தப்போக்கு சரியானது அல்ல என்றுதான் சொல்வேன். தரமான கல்வியை கொடுக்க வேண்டும்; சிறப்பான பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற நினைப்பும் இல்லை; பண உதவியோடு நிறுத்தி விடுகின்றனர். எந்தச் சூழலில் மக்கள் சமுதாயம் இருக்கிறது என்பதை எல்லாம் புரிந்து கொள்ளுவதில்லை.

: உங்கள் அனுபவத்தின்படி, இந்தியாவில் அறக்கொடை வழங்கக்கூடியவர்களுக்குப் பெரும் சவாலாக முன் நிற்பது என்ன?அறக்கொடை செய்ய விரும்புகிறார்கள்; முன் வருகிறார்கள்; ஆனால் செய்வதற்கு இடையூறாக அல்லது இடர்ப்பாடாக இருப்பது என்ன என்பதை விளங்கச் சொல்லுங்கள்?

அஜய்மேத்தா : நாம் சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. நம் மக்கள் முன்னேறுவதற்காக என்னவெல்லாமோ செய்து பார்த்து விட்டோம். சோஷலிசம்; பொருளாதாரத்தை மேம்படுத்த அரசையே ஈடுபடுத்தினோம்; மக்களையே நேரிடையாக பங்கேற்கச் செய்தோம். ஒரு முயற்சிகூட எதிர்பார்த்த முழு வெற்றியடையவில்லை என்பது உண்மைதான். ஆனாலும் ஒவ்வொன்றும் ஏதோ ஒருவிதத்தில் ஆக்கபூர்வமாக பங்களித்தது என்பதை மறுக்க முடியாது என்பதும் உண்மைதானே. மக்கள் ஏன் இன்றும் மதிப்புடைய வாழ்க்கையை நடத்தமுடியாமல் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி விவாதமே நடைபெறவில்லை என்பேன்.

அனுபவப்படி பெறும் சவாலாக இருப்பது இந்தத் தன்னார்வ தொண்டு அமைப்புகளின் நம்பகத்தன்மை; கிடைக்கப்பெற்ற நிதிஉதவிகளை முறையாகவோ, எதற்காக அளிக்கப்பட்டதோ அதற்காக செலவழிக்காமல் அமைப்புகள் நடத்துவோர்களே சுருட்டிக் கொள்வதுதானே நடக்கிறது?

அஜய்மேத்தா : நீங்கள் சொன்னது சரிதான்; எதற்காக நிதிஉதவி கிடைக்கப்பெற்றதோ அதற்காக செலவழிக்கப்படவில்லை; முறைகேடாக செலவழிக்கிறார்கள் என்பது உண்மைதான்; இவையெல்லாம் எப்படி நடக்க முடிந்தது என்பதைப்பற்றி ஆழமாக ஆராயப்படவில்லை. சமுதாயம் இந்தச் சீர்கேடுகளை பொறுத்துக் கொண்டதும் உண்மைதான். இவற்றுக்கெல்லாம் யார் பொறுப்பு என்பதும் _ குற்றவாளி யார் என்பதையும் சுட்டுவது மிகவும் கடினமான காரியமாகும். இதற்கு நாமும் அரசும் பொறுப்பு என்பதையும் உணர வேண்டும். சமுதாயமும் அரசும் குற்றவாளிகளை அடையாளம் காணமுடியாதவர்களாக இருக்கிறோம். இப்படித் தட்டிக் கேட்கமுடியாத நிலைக்குக் காரணம் என்ன? நாம் ஒவ்வொருவருமே_ அநியாயத்தையும்,அக்கிராமத்தையும், எதிர்த்துக் குரல் எழுப்பும் கலாசாரத்தை வளர்க்கத் தவறிவிட்டோம். ஏதோ அரசியல் அதிகாரி_அறிஞர்கள்_மேல் மட்டத்தில் இருப்பவர்களின் வேலை என்று இருந்து வருகிறோம். எதிர்ப்பது என்பது சாதாரண மக்களின் கடமையாகும் என்ற பண்பாட்டை உருவாக்கவில்லை. இவை எல்லாம் வல்லுநர்கள் வேலை என்பது என தீர்மானித்துவிட்டு வாய்மூடி கிடக்கிறோம்.
எனவே, நிதி கிடைப்பது என்ற பிரச்னையைவிட இதுதான் மிகப் பெரிய பிரச்சனை என எனக்குப்படுகிறது. இதற்கு எதிரான மாற்றத்தைக் கொண்டு வருவது மிகக்கடினம் என்பதையும் அறிவேன். வெறும் சொல் உபதேசத்தால் கொண்டு வர முடியாது. இது பொதுமக்களின் நன்மைக்காக கொடுக்கப்பட்டது, பொதுமக்களின் பணம் இது என்ற விவாதம் சமுதாயத்தில் நடைபெற வேண்டும். ஆனால் பொது விவாதம் நடைபெறவில்லை.

 தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தொண்டு அமைப்பு அல்லது தன்னார்வக்குழு என்பது, வேலை கொடுக்கும் ஒரு நிறுவனம் என்பதுதான். சேவை என அர்த்தப்படாமல் வயிற்றுப் பிழைப்புக்கான ஒரு வழி என்ற மனோபாவம் ஆழமாக வேர்விட்டு விட்டது. இந்த நிலைமையை எப்படிப் போக்குவது அல்லது மாற்றுவது என்பதுதான் பிரச்னை. தமிழ்நாட்டில் வேலையில்லா பிரச்னை மிகப் பெரிய பிரச்னை. படித்த வேலையில்லாதவர்கள் பெருமளவில் பெருகிக் கொண்டு வருகிறார்கள். வேலையில்லாதவர்கள் ஒன்று சேர்கிறார்கள். நாம் ஏன் ஒரு தன்னார்வக் குழு தொடங்கி, பணம் சம்பாதிக்கக் கூடாது என்று செயல்படுத்துகின்றனர். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எப்படி? இதைப்பற்றி தங்கள் அனுபவம் என்ன?

அஜய்மேத்தா: நீங்கள் சொல்வது சரிதான் என்பேன். தன்னார்வ குழுக்கள்,அரசின் நிதியுதவிகளை செலவழிக்கும் ‘விநியோக குழாய்களாக’கீழிறக்கப்பட்டுள்ளன என்பது முற்றிலும் உண்மையே. இவை பெரும் மோசடிக் கும்பலாக, கமிஷன் சம்பாதிக்கும் நிலையங்களாக மாறித்தான் உள்ளன. எவ்வளவு பணம் தருகிறாய்? உனக்கு இவ்வளவு கொடுக்கப்படும் என்பதுதான் நடைமுறைச் செயலாக ஆகிவிட்டது. பணம் அல்லது நிதி எந்தத் திட்டத்திற்காக_ இந்த திட்டத்தினால் எவர் பயனடையப் போகிறார்கள் என்பதை எல்லாம் கண்டுகொள்வதே இல்லை, இதில் அரசியல்வாதிகளும் புகுந்து விட்டார்கள். ஏழைமக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி உதவிகளை,புத்திசாலியாக உள்ள மற்றவர்கள் கபளீகரம் செய்து விடுகிறார்கள். இதில் பெரும் துயரம் என்னவென்றால் கபளீகரம் செய்பவர்களும் வறிய நிலையிலேதான் இருக்கிறார்கள். ஆகவே சுயநலவாதிகளிடமிருந்து இந்த தர்மசிந்தனை தோற்காதபடி காப்பாற்றுவது என்பது மிகக் கடினமான காரியம். இதற்கு என்னதான் வழி இருக்கிறது? எனவே எடுத்துக்காட்டாக செயல்படும் தொண்டு அமைப்பை உருவாக்க வேண்டும், அதற்கான கொள்கைகளை,செய்முறைகளை வகுத்து நடத்தப்பட வேண்டும். எனவே படித்த வேலை இல்லா இளைஞன் தொண்டு நிறுவனம் அமைப்பது என்பது தவறு இல்லை என்றுதான் சொல்வேன். ஆனால் அவன் சமூக நலத்திற்காகவும் மேம்பாட்டிற்காகவும் செயல்பட வேண்டும் என அவன் உணரும்படி செய்ய வேண்டும். ஆகவே உன் நலத்தை கவனித்துக் கொள்ளும்போது, அதே சமயத்தில், சமுதாயத்தின் நலத்திற்கும் பாடுபட வேண்டும். அப்படித்தான் செய்ய வேண்டுமேயழிய, கண்டனம் செய்வது சரியல்ல என்றுதான் சொல்லுவேன். அதிகாரத்திலிருப்பவர்களுக்கு கண்காணிக்கும் பொறுப்பு உண்டு. எனக்கு ஆழ்ந்த அனுபவம் இல்லையென்றாலும் நான் பரிந்துரைப்பது இதுதான். செம்மையாக, நினைத்துவழிபட நெறியோடு செயல்படும் தொண்டு நிறுவனங்கள்; அனுபவமில்லாத முறைகேடாக நடக்கும் ஏனைய தன்னார்வ குழுக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் ‘நெறி தவறாமல் நடந்தால்;உங்களுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை ஏற்படும்’ என்று நிரூபித்துக் காட்ட வேண்டும்.

 தமிழ்நாட்டில் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கின்றன. பிற்படுத்தப்பட்டோர் மேம்பாடு கழகம்; தமிழ்நாடு அரிசன நவக் கழகம்,பெண்கள் மேம்பாட்டுக் கழகம், இவையெல்லாமே விளிம்புநிலை மக்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்காக, ஏற்படுத்தப்பட்டவை. அரசாங்கம் உண்மையாகவே மேம்பட வேண்டும் என்று நிதிஉதவி தருகிறது. ஆனால் எவர்களுக்கு போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்கு சேரவில்லை. போலித் தொண்டு நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அரசு நிறுவனங்களை நடத்தும் அதிகாரிகளின் மேலும் குற்றம் சுமத்த முடியாது. ஒதுக்கப்பட்ட நிதி குறிப்பிட்ட காலத்திற்குள் செலவழிக்க வேண்டும், செலவழிக்கவில்லை என்றால் விளக்கம் தரவேண்டும். ஏன் இந்த வம்பு என்று எல்லாம் எப்படியோ செலவழிக்கதானே வேண்டும் என இப்படி செயல்படுகிறார்கள். இம்மாதிரியான நிலைமை வடஇந்தியாவில் உண்டா?

அஜய்மேத்தா: வடஇந்தியாவிலும் ஏறக்குறைய இதே நிலைமையே. புதுதில்லியில் ‘சுப்பார்ட்’ என்ற ஒரு நிறுவனம் இருக்கிறது. அது தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. என்ன நடந்தது தெரியுமா? ‘சுப்பார்ட்டில்’ பணிபுரிபவர்களும், வெளியாட்களும் ஒன்றாக சேர்ந்து கொண்டு முறைகேடாக நடந்தனர், ஒதுக்கப்பட்ட நிதி எதற்காக, எவருக்காக என்பதை எல்லாம் தள்ளிவிட்டு செலவழித்தனர். என்ன நடக்கிறது என்பதை அடையாளங்காண வேண்டும். இது மிக முக்கியமான பிரச்னை. நிதி ஒதுக்கீடு செய்யும் அரசாங்கமானது, ஒதுக்கீடு செய்வதோடு நின்றுவிடாமல், எப்படிச் செயல்முறைப் படுத்தப்படுகிறது, தலைமைதாங்கி நடத்துபவர்கள் எப்படிப்பட்டவர்கள்; அவற்றின் அமைப்பு இவற்றைக் கண்காணிக்க வேண்டும்! இந்தக் கண்காணிப்பு கடினமானதுதான். ஆனால் செய்ய வேண்டியதாக இருக்கிறது, இது தொலைதூரப்பார்வை சம்பந்தமானது.

 மாநில அரசின் பொது நிறுவனங்கள் அடித்தட்டு மக்கள் வாழ்வு மேம்பாட்டிற்கான நிறுவனங்கள் செயல்பாடு இருக்கிறதே மிகவும் வருத்தப்படக் கூடியதாகவே இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து கொண்டு முறைகேடாக நிதியுதவியை எடுத்துக்கொள்கின்றனர். தமிழ்நாட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினர்,கிட்டதட்ட முப்பத்தைந்து தன்னார்வ அமைப்புகளை உண்டாக்கி பணம் பெருவது கண்டுபிடிக்கப்பட்டது. சட்டப்படி பார்த்தால் அமைப்பு, நிர்வாகம்,ஆவணங்கள் எல்லாமே சரியாகவே இருக்கின்றன. ஒன்றுமே சட்டப்படி நடவடிக்கை, எடுக்க முடியாது. மத்திய, மாநில பொது நிறுவனங்கள், தாம் செயல்படும் இடங்களைச் சுற்றியுள்ள கிராமங்களை தத்து எடுத்துக் கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம்,உதகமண்டலத்திலுள்ள ஃபிலிம் உற்பத்தி கழகம். இவை என்ன செய்கின்றன?இவற்றின் தொழிற்சாலைகளில் சுற்றுச் சூழல் மாசு அடைகின்றன. எனவே சட்டப்படியாக இந்த வகையான நிறுவனங்கள், தாம் ஈட்டும் வருவாயில் அந்தந்த பிரதேச மக்களின் வாழ்வுக்காக ஒரு பகுதியை செலவிடும்படி செய்யலாமே?

அஜய்மேத்தா: நீங்கள் சரியாகவே சொன்னீர்கள். உங்களைப் போன்றவர்கள் பொதுநலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்ல அறிகுறியாகும். மக்கள் பணம் வீணாக_ எதற்குச் செலவு செய்ய வேண்டுமோ அதற்கு அல்லாமல் செலவு செய்யப்படுகிறது; ஒருவிதமான கொள்ளைதான்_ ஐயமே இல்லை. இது அரசியல் நிர்ப்பந்தம். எதுவாக இருந்தாலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் பிரச்னை. இது சரிசெய்வதற்கான போராட்டம் மிக நீண்டகாலம் தேவைப்படும். உங்களைப் போன்றவர்கள் பத்திரிகைகளில் எழுதலாம். அதாவது இம்மாதிரியான செயல்பாடுகள் கண்டனத்திற்குரியவை என்று மட்டுமே எழுதாமல்; இருக்கிற கட்டுப்பாட்டிற்குள் மாற்று செயல்பாடுகளும் உள்ளன என்பதை எடுத்துக்காட்டிச் சொல்லலாம். பொது நிறுவனங்கள் பள்ளிக்கூடங்கள் நடத்துகின்றன. எம்மாதிரியான பள்ளிக்கூடங்கள் எம்மாதிரியான பாடத்திட்டங்கள் என்பனவற்றைப் பற்றி உரையாடல் நிகழ்த்தப்பட வேண்டும். பொதுத்துறை, தனியார்துறை நிறுவனங்கள் மிக முக்கியமானவற்றை செய்யத் தவறிவிட்டன. அதாவது உண்மையான தொண்டு பணிக்கான அஸ்திவாரத்தை எழுப்பத் தவறிவிட்டன என்று சொல்வேன். அதாவது தற்காலிகத் தீர்வைத்தான் மேற்கொள்கின்றனர்.‘என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது. எடுத்துக் கொள்ளுங்கள், ஏதாவது செய்யுங்கள். உடனடியாக தீர்வுகிடைக்கட்டும்’ இந்த தற்காலிக தீர்வு மனோபாவம் நல்லதல்ல. எதிலுமே ஒப்பிட்டு பார்க்கும் போது சிறந்த மாற்று இருக்கிறது என்பதை மக்களைப் பார்க்கும்படிச் செய்ய வேண்டும்.

 உங்களுக்கு அவசியமான தகவல் ஒன்றை கூறுகின்றேன். இங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்று தன்னார்வ குழு சான்றிதழ் படிப்பிற்காக அஞ்சல்வழி கல்வி தொடங்கியுள்ளது. அது என்ன வென்று விசாரித்ததில் பதில் கிடைத்தது’’ வேலை இல்லாத் திண்டாட்டத்தில் மாட்டித் தவிக்கும் இளைஞர்களுக்கு எப்படி தன்னார்வ அமைப்புகளை தொடங்கலாம், எப்படி நிதியுதவி பெறலாம்? என்று சொல்லிக்கொடுக்கிறதாம். இன்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் நிதியுதவி செய்கிறார்கள். அவர்கள் சம்பாத்தியத்தில் எவ்வளவு விழுக்காடு இந்த நிதியுதவி கொடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த நிதியுதவியில் இரண்டு விழுக்காடு கூட சமூகப்பணிக்காக செலவுசெய்யப்படவில்லை. இந்த நிலைமாற்ற என்ன செய்ய வேண்டும்?

அஜய்மேத்தா: வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஏதோ தான தர்மம் செய்கிறார்கள். மதக்காரியத்திற்குக் கொடுக்கிறார்கள் நல்லது. ஆனால் இவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். நீங்கள் கொடுக்கிறீர்கள். செலவும் செய்யப்பட்டு விடுகிறது. அதைப்பற்றி எல்லாம் தவறு சொல்லவில்லை. இதோ பாருங்கள் இந்த நிறுவனம் ஒன்று நீண்டகாலமாக இருக்கிறது; இதன் நீண்டகால பணியினால் பயன் அடைந்தவர்கள் உள்ளனர்; சமுதாயத்தின் மாற்றங்கள் இவற்றினால் நிகழ்ந்துள்ளன. நீங்கள் செய்யும் தர்மங்கள் தானங்கள் நினைத்த பயன்களை அடைய வேண்டாமா? என்று சொல்ல வேண்டும். இப்படி சொல்ல வேண்டும் என்ற சிந்தனையே இன்னும் எழவில்லை. முயற்சி எடுக்கப்பட வேண்டும். அவர்களை செயல்பட தூண்டிவிட வேண்டும். தொண்டு நிறுவனங்களுமே தம் செயல்பாடுகளைப்பற்றி ‘ஆத்ம சோதனை’ செய்ய வேண்டும். மகாத்மா காந்தி இதனைத்தான் செய்தார். இப்படிச் செய்ய ஐந்தோ பத்தோ ஆண்டுகள் ஆகலாம். எனவே பொது நலத்தில் அக்கறையுள்ளவர்கள் செய்ய வேண்டிய காரியம். நம் நாடு சனநாயக நாடு என்பதினால் மாற்று வழிகள் உள்ளன என்பதைச் சொல்ல முடியும். மக்களிடம் அறிவுவளர்ச்சியை எழுப்பமுடியும்தான் என்பது என் அனுபவம்.

 ‘கொடுப்பவர்’ தான தருமம் செய்ய எண்ணாமல் சமூக மாற்றத்தைத் தூண்டிவிட எண்ண வேண்டும் இல்லையா? சமூக வளர்ச்சிக்கான முதலீடு செய்பவர் என்று தன்னை எண்ணிக்கொள்ள வேண்டாமா?

அஜய்மேத்தா: உங்கள் கருத்தை முழுவதுமாக ஒப்புக் கொள்கிறேன். சமூக மாற்றத்தை ஏதோ தொழில்நுட்ப சம்பந்தமான தீர்வு என எண்ணிவருகிறார்கள். இந்தச் சிந்தனை பல பிரச்னையை உண்டாக்குகிறது. இவர்களுடன் உங்களைப் போன்றவர்கள் பேச வேண்டும். நாம் எல்லோரும் பங்கேற்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும். ஏதோ ஒரு சில புத்திசாலிப் பேர்களால் பிரச்னைக்கு தீர்வுகாணமுடியும் என்பது இயலாது. சமூக மாற்றம் என்பது நிர்வாகத்திறமையைச் சார்ந்தது அல்ல. சாதாரண மக்களும் பங்களிக்கும் திறமையுள்ளவர்கள் என்பதைக் காட்ட வேண்டும் தேவைப்படுவது உரையாடல். என்னிடம் பணம் இருக்கிறது; உன்னிடம் இல்லை என்ற பேச்சு தீர்வு காணாது. சரி என்னிடம் பணம் இருக்கிறது;நிர்வாகத்திறமை இருக்கிறது. உன்னிடம் என்ன இருக்கிறது’ ‘என்னிடம் அனுபவ சக்தி இருக்கிறது.’ ஆக இவையெல்லாம் ஒன்று திரட்டப்பட வேண்டும் ஆக நம் சமூகத்திற்குப் பொதுவான தொலைநோக்கினை. உருவாக்க வேண்டும். ‘நான் ‘சேவாமந்திர் என்ற தொண்டுநிறுவனத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்தேன். நான் அதைவிட்ட பின்பு, அது மேலும் மேன்மையடைந்தது. (சிரிப்பு) உங்களை அங்கு வரவழைக்க விரும்புகிறேன். அந்தக் கிராமங்களில் மாற்றங்கள் கொண்டு வந்ததும் சுற்றுச் சூழலை பாதுகாப்பது, பள்ளிக்கூடங்களை நடத்துவது இப்படி. ஆனால் இவை நிகழ ஆண்டுகள் பலவாயின. சாதி உணர்ச்சி மறைய எடுத்துக்கொண்ட முயற்கிள் எல்லாமே நிறைவாக_ செம்மையாக ஆகிவிட்டன எனச் சொல்லமாட்டேன். 


 பொதுமக்கள் பணத்தைச் செலவழிக்கும் தன்னார்ந்த அமைப்புகள் முறைகேடாக நடந்து கொள்ளும் போது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா? அதாவது அவை மேல் பொதுநல வழக்குகள் தொடர முடியுமா?ஏனென்றால் அவை பதிவு செய்யப்பட்டவை என்பதால்?

அஜய்மேத்தா: ஏன் எடுக்க முடியாது? அவை அரசாங்கத்திடமிருந்து நிதி பெறுமானால், நிச்சயம் அரசாங்கமே நடவடிக்கை எடுக்கலாம். வழக்கு என்பது நீண்டகால வேலை என்பது இல்லையா? சான்றுகள் திரட்ட வேண்டும், வழக்குத் தொடர்பவருக்கு உறுதியாக இல்லாதபடிக்கு நிலைமை உருவாக்கப்படலாம். நீதிமன்றத்திற்குப் போவதைவிட வேறு பொது மன்றம் வாயிலாக முறைகேடாக செயல்படும் தன்னார்வ அமைப்புகளைப் பற்றி எடுத்துச் சொல்லலாம் இது வெறும் பணம் சம்பந்தப்பட்ட சீரழிவு அல்ல;அறிவு சம்பந்தமான சீரழிவும் ஆகும். எடுத்துக்காட்டாகச் சொல்லுகிறேன். சென்ற நூற்றாண்டின் எண்பதுகளில், எங்கள் மாநிலத்தில் சொல்லப்பட்டது என்னவென்றால், இந்தப் பழங்குடிமக்கள் தாங்கள் வாழும் வனங்களை முறையாக பராமரிக்கத் தெரியாதவர்கள். ஆக, அவற்றை பராமரிக்க தொண்டு நிறுவனங்கள் தேவைப்படுகிறது’ என்று சொல்லப்பட்டது அரசும் அப்படியே செய்தது. ‘‘இப்போது இருபதாண்டுகள் கழித்து அப்படி செய்வது முட்டாள்தனம். ஏனென்றால், வனங்கள் தனியார்களிடம் வசப்பட்டுவிட்டன. அவர்களும் சமூக உணர்வையும் இழந்து விட்டார்கள். ஆக இதை இருபத்தோராம் நூற்றாண்டில் அப்போது பேசியதுபோல பேசினால் அதுதான்,அறிவு சம்பந்தமான சீரழிவு ஆகும். மேலும் கருத்தை உருவாக்குபவர்களும் நகரம் சார்ந்தவர்கள், எதார்த்த நிலைமை என்ன என்பதை அறியாதவர்கள் அவர்கள். தம் சுய முன்னேற்றத்திற்காக இவ்வமைப்புகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆக உண்மையான தொண்டு செய்பவர்களுக்கும் விளம்பரத்திற்காக உள்ளவர்களுக்கும் உள்ள வேற்றுமையை மக்களுக்குப் புலப்படுத்த புதிய சிந்தனைகளை உருவாவதற்கு வெளியை ஏற்படுத்த வேண்டும். நான் பணிபுரிந்த தொண்டு நிறுவனத்தில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை நான் பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமெனச் சொன்னேன். இதனால் நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்படும், கொடுப்பவர்கள் நிதி அனுப்புவதை நிறுத்தி விடுவார்கள் என்றார்கள். ஆனால் நானோ அவர்களுக்கு முறைகேடு நடந்து விட்டது; அதற்கான நடவடிக்கையும் எடுத்துள்ளோம் என இரண்டுமே தெரியப்படுத்த வேண்டுமென சொன்னேன். இது அறம்சார்ந்த கடமையெனவும் வற்புறுத்தி, சம்மதிக்கவும் வைத்தேன்.

சந்திப்பு( ஜூன் 7, 2007):கடற்கரய், தமிழில்:கி.அ.சச்சிதானந்தன்


Sunday, November 13, 2011

கடந்த காலம் சொன்ன கதை

சுயசரிதை பிரதிக்கென்று தற்கால தமிழ் இலக்கியத்தில் தனித் தேவை இருக்கிறது. 90களுக்குப் பிறகு இவ்வெற்றிடத்தை வேறுவகையில் தலித் புனைவிலக்கியங்கள் நிரப்ப ஆரம்பித்தன. இப் பிரதிகளுக்கு வரலாற்று அங்கீகாரத்தை வழங்குவதில் நடமுறைசார்ந்து சில சிக்கல்கள் உள்ளன. ஆகவே புனைவென்ற அர்த்தத்தில் மட்டுமே இவற்றை வரவேற்றோம். தமிழ் நினைவோடை வகை எழுத்துக்கும் சுயசரிதை வகை எழுத்துக்குமிடையில் சிறுகோடு ஒன்று வேறுபட்டுப் பிரிந்துசெல்கிறது. இரண்டிற்கும் பொதுப் பண்பு என எடுத்துக்கொண்டால், இவை இரண்டும் ஞாபகங்களைப் பிரதானமாக வைத்து எழுதப்படுகின்றன. ஆவணத் தரவுகள் அடிப்படையில் சுயசரிதை என்பது வேறுபடும். ஆனால் தமிழ்ச் சுயசரிதைப் பிரதிகளில் ஆவண உசாத்துணை என்பது ஒப்பிற்கு மட்டும் கோடிட்டுக் காட்டப்படும் ஒரு வஸ்து. இது வேதனைக்குரிய நிலை. விரைந்து களையப்பட வேண்டிய நடத்தை.
நினைவோடை எழுத்தாக்கத்தில் கனமான அடையாளத்தை உண்டாக்கியவர் சுந்தர ராமசாமி. தான் நெருங்கிப் பழகிய பல ஆளுமைகள் பற்றி எழுத்தில் தன்னால் இயன்றவரை அவர் பதியவைத்திருக்கிறார். அவரின் துணிச்சல் நமது சூழலில் ஓர் அரிய குணம். எழுத்தாளர், தலைவர், சீர்திருத்தவாதி, ஞான ஆசிரியன் ஆகியோர் பற்றிப் பன்முகக் கோணத்தில் பல்வித நோக்கில் ஆராய்ச்சி நூல்கள் எழுதப்பட வேண்டும். இதைக் கொண்டே புதிய தலைமுறையின் அறிவு நாணயம் பசுமையடையும்; அபிவிருத்திகொள்ளும். அந்தப் போக்கு தமிழில் அறவே இருப்பதில்லை. எழுத்தாளர்கள் பலர் தன் நேர் பேச்சுக்கும் எழுத்திற்கும் மத்தியில் பெரிய பள்ளத்தையே வெட்டி வைத்துக் காத்திருக்கிறார்கள். பலரைக் காவுவாங்கும் விபத்துப் பகுதியாக அது செயல்படுகிறது. கல்மிஷம் எனும் சராசரி பண்பு படைப்பாளியையும் சேர்த்துக் காவு வாங்க ஆரம்பித்துவிட்டதை நினைத்து வெதும்புவதைத் தவிர நமக்கு வேறு மார்க்கமில்லை. இந்தப் பின்புலத்தோடுதான் சு.ராவின் சகதர்மினி கமலா ராமசாமி அம்மாளின் புத்தகத்தை அணுக வேண்டியுள்ளது.
கமலா ராமசாமி, தனது உதிரி உதிரியான நினைவுச் சேகரங்களை ஒன்று கோத்து நளின மொழியில் எழுதியிருக்கும் நூலின் தலைப்பு: நெஞ்சில் ஒளிரும் சுடர். ஏறக்குறைய சுயசரிதை. கமலாவுக்கு எழுத்தாளராகும் விருப்பம், கனவுகள் இல்லை. தன் வீட்டில் ஒலித்த கணவர் சு.ராவின் அனுசரனையான வார்த்தைகளால் புத்தகம் எழுதும் புதிய உத்வேகத்தைப் பெறுகிறார். உன் சிறுவயது நினைவுகளை எழுதிப்பாரேன். பத்து, பதினைந்து பக்கங்கள் எழுதிய பிறகு வாசித்துப் பார்க்கிறேன்” - அவருடைய கணவர் அளித்த உசுப்பல் வார்த்தைகள் இவை. இவற்றைக் கேட்டபின் லேசாக ஆவல் முளைக்கிறது. சு.ரா. என்ற பெரிய கண்ணாடி முன்னால் உட்கார்ந்து தன் வாஞ்சையான வாழ்நாளின் முகத்தைப் பார்க்க ஆரம்பித்தார் கமலா ராமசாமி. அக்கண்ணாடி பிரதிபலித்துக் காட்டியது பெரும் எழுத்தாளர் சு.ராவின் தோற்றத்தையல்ல; கூடவே ஒட்டிக்கொண்டு நின்ற கமலா என்ற ஒற்றை மனுஷியின் வழியே உருவான வம்ச விருத்தியின் பிம்பத்தையும் சேர்த்துதான். அதன் பொருட்டுக் கடம்போடுவாழ்வு என்ற தன் சொந்த ஊர்ப் புராணத்திலிருந்து அசைபோட ஆரம்பிக்கிறது அவரின் உள்ளம். அப்படியே ஆலப்புழை பாலப் பருவம், வளர்ந்ததும் தாமிரபரணி நடைபழகும் திருநெல்வேலி சீமைச் சுகவாசம், இடையில் எழுந்த மதுரை குடிபெயர்வு. அங்கிருந்து நாகர்கோவில் புகுந்தவீட்டு சங்காத்தம் எனக் கடகடவென உருள ஆரம்பிக்கிறது.
கமலா ராமசாமி, அவருடைய பெற்றோரின் ஒன்பதாவது குழந்தை. உறவு அறுந்துபோகாமல் தூரத்து சொந்தத்திற்குள்ளே அவர் வாக்கப்படுகிறார். அப்பா கடம்போடுவாழ்வில் பெரிய நாட்டாமை. செல்வாக்கு நிரம்பிய வம்சம். தெருவில் ஹரிஜன மக்கள் செருப்புப் போட்டு நடக்கக் கூடாது என்பது ஊர்க்கட்டு. அந்த உரிமை பிராமணர்களுக்கு அடுத்து பிள்ளைவாள் குடும் பத்திற்கு மட்டுமே உண்டு. அந்தக் காலத்தில் கிராமத்தில் கக்கூஸ் வசதிகள் எல்லாம் கிடையாது. ஆகவே தோட்டி என்ற வகுப்பினரே இருந்ததில்லைஎன இவர் சுட்டும் கிராமம் தமிழகத்தின் அச்சு அசலான குக்கிராமம். இவரின் ஜோடிப்புகளற்ற இந்த மாதிரியான சிறு சிறு குறிப்புகளே நூலுக்கு வரலாற்று வலுச்சேர்க்கின்றன. இன்றும் தன் மனத்தைவிட்டு அகலாமல் அடிமனசில் அண்டிக்கிடக்கும் பால்ய நினைவுகளை, அதன் அழகழகான காட்சிகளை, மிக எளிமையாய்ப் போகிறபோக்கில் இவர் குறிப்பிடும் பாணி கவர்வதாக அமைகிறது. உமிக்கரி கொண்டு பல் தேய்த்ததில் தொடங்கி, பெண்பிள்ளைகள் தோண்டியும் கையுமாகத் தெருக்களில் திரியும் சின்னச் சின்னச் சித்திரங்கள்வரை அகண்டு போகிறது இவரது நினைவு.
பூப்பெய்தல் தொடங்கிப் பிள்ளைப் பேறு வரை. வீட்டு உரசல்கள் தொடங்கித் தன் கணவர் விருது வாங்கியது வரை, கைக்குத்தல் அரிசி சமைக்கத் தொடங்கி, கடை அரிசி பொங்கியது வரை. தோழியின் தலையில் பேன் குத்தியதிலிருந்து சினிமா பார்த்ததுவரை. இப்படி எண்ணற்ற ஊர் சோலி கதைகள் படைப்பாக்கம் பெற்றுள்ளன. காலம், நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் தன் ஈவு இரக்கமற்ற கால்களால் மிதித்து நொறுக்கி, தூக்கித் தூரக் கடாசிய அத்தனை பழங்கதைப் பண்பாட்டையும் பாவனையற்று எழுத்தில் படம் பிடித்திருக்கிறார் கமலா அம்மாள். பேறு காலத்துக் கை வைத்தியம். அதனுள் காலகாலமாக ஒளிந்துகிடக்கும் சாமான்ய மக்களின் மதிநுட்பம் என விவரிக்கும் இவர், “அம்மாவுக்கும் பெரியக்காவுக்கும் சில மாத வித்தியாசங்களில் மூன்று குழந்தைகள் பிறந்திருக்கின்றன. அம்மா பிரசவத்திற்கு அக்காவும் அக்கா பிரசவத்திற்கு அம்மாவும் ஒருவருக்கொருவர் உதவிசெய்துகொள்வார்கள்என்கிறார். இப்படித் தலைமுறை இடைவெளிக்கே உரித்தான பல விஷேசத் தகவல்கள் இவரது பதிவில் அதிகம். மருத்துவ முன்னேற்றம் இல்லாத காலத்தில் வீட்டில் உடன்பிறப்புகள் ஜனனமாவதும் வந்த வேகத்தில் நோவுகொண்டுபோவதும் வாடிக்கையாக இருந்துள்ளன.
இவரது தம்பி ஹரியின் மரணச் சம்பவம் உணர்ச்சிப் பெருக்கோடு எழுதப்பட்டிருக்கிறது. தங்கை பத்மா, சீமந்தத்திற்காகப் பிறந்த வீட்டுக்கு வருகிறார். சீமந்தம் முடிந்த மறுதினம் அவருக்கு வலிப்பு கொண்டு விடுகிறது. சிறுநீரகப் பரிசோதனையில் அல்பமின்அதிகமாகிவிட்டதாகவும் தாய் - சேய் இரு உயிரில் ஒன்றைத் தான் கரையேற்ற முடியுமென்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். தாயை மட்டும் காப்பாற்ற நடக்கும் போராட்டத்தை உணர்ந்தவர்கள் உயிரற்றுப் பிறக்கவிருக்கும் பச்சிளங்குழந்தையின் இறுதிக் காரியத்திற்கு மண்வெட்டியும் கையுமாக முன்கூட்டியே தயாராகிவிடுகிறார்கள். முடிவில் சுபமாக மண்வெட்டிக்கு வேலையில்லாமல் போனது என்று கமலா ராமசாமி சொல்லும் பாங்கு முதிர்ந்த எழுத்துக்கான அடையாளம்.
1954இல் சு.ராவோடு கமலா அம்மாளின் கல்யாணம். திருமணத்தின் போது ஊரில் மின்சார வசதி கிடையாது. ஆனால் ஜெனரேட்டர் போட்டுத் திருமணம் விமரிசையாக நடக்கிறது. ஊர் மக்கள் முகத்தில் ஈ ஆடாத நாள். இந்தத் தம்பதியின் புண்ணியத்தில் ஊர்க்காரர்கள் மின்விளக்கை முதன் முதலாகக் கண்கொட்டப் பார்த்து அலுக்கிறார்கள். இவ்வளவு தடபுடலாகக் கரம்பிடித்த தன் மனைவிக்கு சு.ரா. முதன்முதலாக வாங்கிக்கொடுத்த பரிசு என்ன தெரியுமா? ஒரு ஜதை செருப்பு. அது தேய்ந்துபோய் இன்று மாமாங்கம் கடந்துவிட்டது. மனம் தேயாது இன்றைக்கும் சொல்லி மகிழ்கிறார். திருமணம் செய்துகொண்டு புகுந்த வீட்டுக்கு வந்திட்ட பின்பும் டதி பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்குப் படிக்கப்போகிறார் கமலா ராமசாமி. இவர் பத்தாம் வகுப்பில் சேர்ந்து படித்த கதை சுவாரஸ்யம் நிரம்பியது. அதே பள்ளியில் சு.ராவின் தங்கை சாரதா எட்டாம் வகுப்பு மாணவி. அண்ணியும் நாத்தனாரும் ஒரே பள்ளியில் சேர்ந்து படிக்க இந்த நாளில் யாருக்கு வாய்க்கும்? இந்தப் பொருந்தா சகவாசக் கதைகளைக் கொண்டு ஒரு மிகப் பெரிய காலமாற்றத்தை நம்மால் மதிப்பிட்டு உணர முடிகிறது. தன் மனைவி பற்றி சு.ரா. ஒரு கடிதமொன்றில் இப்படிக் குறிப்பிடுகிறார்: செங்கமலம் என்ற கமலா, மாராசி புண்ணியத்தால் தான் மனிதன்போல் நடமாடிக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கையில் எங்களுக்கு எவ்வளவோ மேடு பள்ளங்கள். எந்த நெருக்கடி வந்தாலும் நான் கட்டிலில் போய்ப் படுத்துக்கொண்டுவிடுவேன். அப்போதெல்லாம் அவள்தான் என்னைத் தூக்கி நிறுத்திருக்கிறாள்” - கணவரின் இன்பமூட்டும் இதமான சொற்கள். ஒரு எழுத்தாளனின் மனைவி லௌகீக கோடு தாண்டாமல் காலம் முழுக்க அடுப்படிக் கரித்துணியை மட்டுமே கட்டி அழுத காலத்தில் சு.ராவின் தாராள குணம் மனைவிக்குச் சரி பங்கு வழங்க முற்படுகிறது. கமலாவின் எழுத்தே அதற்குச் சாட்சி. அதில் அவருக்குச் சாதக பாதகங்கள் நேர்ந்திருக்கலாம். ஆனால் சு.ராவின் மெனக்கெடல் கூடுதல் எடை நிரம்பியது என்பதை இந்தப் புத்தகம் நமக்குப் புரியவைக்கிறது.
பாரதிக்குத் திருமணமான நான்காம் நாள். ஊர்வலம் முடிந்து, வீட்டில் ஊஞ்சல் வைபவம். சகலரின் முன்னிலையில் உட்கார்ந்து மனைவியைப் புகழ்ந்து ஓர் ஊஞ்சல் பாட்டுப் பாடுகிறான் பாரதி. பாட்டு முடிந்த கையோடு ஊராருக்கு விளக்க உரை என நீளுகிறது முண்டாசுக்காரன் பேச்சு. இச்சம்பவத்தைத் தன் பாரதியார் சரித்திரத்தில் உச்சுமுகர்ந்து எழுதுகிறார் செல்லம்மா. இல்லறத்தைத் தாண்டி சம்சார பந்தத்தைத் தூக்கி நிறுத்தப் போராடிய தன் உத்தமக் கணவன் இறந்த பிற்பாடு செல்லம்மா எப்படிப் பேசினார் தெரியும்தானே? 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் என்கணவர்என்ற தலைப்பில் அவரது உரை இவ்வாறு பதிவானது: காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போட வேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்? யாருக்கு மனைவியாக வாய்த்தாலும் வாழலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம். அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்துவிடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மீக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லைஎன வெந்தழல் சொற்களில் வேகுகிறார் செல்லம்மா. மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடிஎன்று வைரக் கிரீடம் பதிக்க முற்பட்டவன் மீது விழுந்த தர்ம அடி இது. அவ்வாறே காரல் மார்க்ஸுடனான வறுமை வாழ்க்கை பற்றி ஜென்னி மார்க்ஸ் குறிப்பிட்ட வரிகள் உலக பிரசித்தம் பெற்றவை: குழந்தைகள் பிறந்தபோது தொட்டில் வாங்க காசில்லை. அவர்கள் இறந்தபோது சவப்பெட்டி செய்யப் பணமில்லை.இப்படி ஓர் ஆளுமையைக் குற்றம் குறையோடு கணக்கிட முடியாமல் தவித்த மனைவியர்கள் மத்தியில் சு.ராவின் மனைவி வஞ்சனை கொள்ளாமல் வாக்குமூலம் வழங்கியிருப்பது தமிழில் இதுவே முதல் ஈடு. சு.ராவோடு தன் ஐம்பதாண்டுக் கால வாழ்க்கையைக் குறிக்கும் அவரின் வாக்குமூலம் இப்படி விரிகிறது. எனக்கும் சு.ராவிற்கும் உயர ஒற்றுமை இல்லை. சு.ரா.சொல்லும்படி ஆரோக்கியமானவர் இல்லை என்றாலும் எங்கள் இருவருடைய மனநிலையும் முதலிலிருந்தே இணைந்து போகக் கூடியதாகத்தான் இருந்தது.
நிறைய விஷயங்களில் ஒருமித்த கருத்துடையவர்களாகத்தான் இருவரும் இருந்திருக்கிறோம். நாள் செல்லச்செல்ல எங்களுடைய அந்நியோன்யம் கூடிக்கொண்டே போயிற்று. அதன்பின் என் உயரக் குறைவோ அவரின் ஆரோக்கியக் குறைவோ எங்கள் மனத்தில் இம்மியளவுக்கூட இல்லாமல் காற்றில் கரைந்தேபோயிற்றுஎன்கிறார். இந்தப் புரிதல்தான் கமலா ராமசாமியின் மூல ஆதாரம். சு.ராவைப் பற்றித் தமிழ் வாசகர்களிடம் ஏனைய சித்திரங்கள் புகை போலச் சுற்றுகின்றன. அவரைப் பற்றிய மதிப்பீடுகளில் சில கற்பிதங்கள், வழுவல்கள் உள்ளன. அவர் ஒரு பணக்கார எழுத்தாளர். அவரது குடும்பச் சூழல் அவரை சௌகர்யமாக வைத்திருந்தது. சொந்த ஊரில் அவரின் அப்பா பெரிய ஜவுளிக் கடை அதிபர். பணமுடை இல்லாத குடும்பம். இப்படி எத்தனை எத்தனையோ சித்திரங்கள். அத்தனை புனைவுகளையும் கலைத்துப்போடுகிறார் கமலா அம்மாள்.
அப்பாவின் கணக்குப்படி சு.ரா. ஒரு பரோபகாரி. சொத்து சுகம் சேர்க்க விரும்பாத சரா சரி. வாயில்லாப் பூச்சி. ஜவுளிக்கடை வியாபாரத் தந்திரங்களை அறியாத அம்மாஞ்சி. தேக பலமில்லாத சவலை. ஏறக்குறைய இந்த வார்த்தைகள் தோற்றுவிக்கும் ரூபத்தில்தான் அப்பாவுடைய கண்களுக்குக் காட்சி தந்திருக்கிறார் சு.ரா. அதை நாசூக்காக எடுத்தியம்புகிறது கமலாவின் எழுத்து. உளப்பூர்வமாக சுந்தர ராமசாமிக்கு வியாபாரத்தைக் கவனிப்பதில் இஷ்டமிருக்கவில்லை. தறியில் பிசிறும் நூலாய்ப் பிரிந்திருக்கிறார். விடாமல் உள்ளே கோத்து கோத்து அடித்திருக்கிறது அப்பாத் தறி. இவற்றுக்கிடையில் ஊடாட்டம் கிடந்து தலையை உருட்டுகிறது. அவருக்குள் எழுத்தாளன் என்ற உணர்வே உயர்ந்து நிற்கிறது. வியாபாரம் செய்வதில் வல்லவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். நான் அந்தத் தொழில் செய்யப் பிறந்தவன் அல்லஎன்று அலுப்பாகப் பேசியிருக்கிறார். மறுத்திருக்கிறார்.
வீட்டுக்கு வீடு வாசற்படி என்ற தேய்வழக்கு சு.ராவுக்கும் பொருந்தும் தானே? பலரையும் போல அவருக்கும் சில அசட்டுப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன. மனைவியருக்குத் தயாராகும் பிரசவ லேகியத்தை விரும்பிச் சுவைப்பது. குளியலறைக்குள் தாழிட்டுக்கொண்டு சினிமா பாட்டை முணுமுணுப்பது எனச் சகல சந்தோஷங்களையும் சுவைக்க விரும்பிய அசல் கலைஞனின் அசரிரீகள் பல. பொதுவாக சு.ரா. பதினொன்று மணிக்கு மேலே எழுத ஆரம்பிப்பார். ஒன்றரை வாக்கில் முடித்துக்கொண்டு எழுவார். காலையில் எட்டரை ஒன்பதாகும் படுக்கையை மடிக்க. வீட்டில் அப்பாவுக்கு பயந்து ஒரு தப்பான காரியத்தை செய்யும் குற்றவுணர்வோடு தான் அவர் தன் கதைகளை வீட்டில் மறைத்து வைத்து எழுதிக்கொண்டிருந்தார். மறுநாள் காலை எழுந்ததும் வீட்டுப்பெண்களிடம் - அப்பா இல்லாத சமயம் பார்த்து தன் கதைகளை வாசித்துக்காட்டுவது அவரது இயல்பு” - இவ்வாறு இவர் கொடுக்கும் குறிப்புகள் முழுக்க இதுவரை நாம் அறியாத சுந்தர ராமசாமியின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறது. சு.ராவின் நெருங்கிய நண்பர்கள் சிலர் பற்றிய பதிவுகள் இதில் உள்ளன என்பது வாஸ்தவம்.
ஆனால் அதே சமயம் சில விடுபடல்களும் பதிவில் உள்ளன. கிருஷ்ணன் நம்பி, ராஜமார்த்தாண்டன், எம். எஸ்., அ. கா. பெருமாள், ஜெயமோகன், கனிமொழி, அம்பை, சல்மா இப்படிப் பலர். ஆனால் அவை நம் ஆவல் மிகுதியின்பால் எழும் தத்தளிப்புகள். எழுதியிருக்கலாமே எனத் தொனிக்கும் ஏக்கங்கள். ஏமாற்றங்கள். அதற்கான நியாயங்கள் அவரிடம் இருக்கலாம். அனைத்தையும் சேர்த்து அடுத்த பதிப்பில் இவர் எழுதி விரிவுபடுத்தலாம். செல்லம்மா பாரதிக்குப் பிற்பாடு நமக்குக் கிடைத்திருக்கும் எழுத்தாளர் ஒருவருடைய மனைவியின் வரலாற்றுப் பிரதி என்பதாலேயே இந்நூலை நான் கவனப்படுத்த விரும்பினேன். இனி, வரும் காலத்தில் பெண்ணிய வாசிப்பில் இந்நூல் குறித்துக் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும். சு. ராவின் வீட்டிற்கு ம. பொ. சியின் வருகை, கி. ராஜாநாராயணன், கு. அழகிரிசாமியின் குடும்பத்தோடான விஜயம். நா. பாவின் வாத்சல்ய தங்கல், லா. ச. ராமாமிருத்தின் அடுக்களை ஒத்தாசை, ஜானகிராமனின் வாஞ்சை நிரம்பிய வாசம், வண்ணநிலவன் அடிக்கொருதரம் எட்டுவைத்துப் பார்க்க வந்த பந்தம் என்று பலரின் வருகையைச் சிலாகிக்கும் கமலா ராமசாமி பிரமிளின் கோணல் புத்தியைக் குறிபார்த்துக் கொட்டிவிட்டு நகர்கிறார். தன் கணவரின் அதே எண்ணத்தை மறுபடியும் ஆழப் பதியவைக்கிறார். ஆனால் ஜி.நாகராஜன் உரசலைப் போகிற வேகத்தில் ஒரு வரியில் சொல்லிக் கடக்கிறார். அதில் தவறொன்றும் இல்லை என்றாலும் இவரது நூலில் குறைகொண்டு குறிப்பிடப்பட்டுள்ள ஒரே மனிதர் பிரமிள் மட்டுமே. இதைத் தவிர்த்திருந்தால் கடைசிவரைக்கும் யாருக்கும் பொல்லாப்பாகாமல் கமலா ராமசாமி அம்மாள் வஞ்சனையற்ற வாக்குமூலத்தை வழங்கி விட்டுத் தப்பியிருக்கலாம்.


நெஞ்சில் ஒளிரும் சுடர், ஆசிரியர்: கமலா ராமசாமி பக். 160. நன்கொடை:100 (2011)வெளியீடு , காலச்சுவடு அறக்கட்டளை, 669 கே.பி.சாலைநாகர்கோவில் 629001 )
நன்றி:காலச்சுவடு நவம்பர் 2011

Thursday, October 13, 2011

ஆவணமாக்கப்பட வேண்டிய நிகழ்வு
சமகாலப் பதிவுகள் எதையும் ஆவணமாகப் பார்க்கும் நோக்கு தமிழர்களிடையே இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. நூறு இருநூறு ஆண்டுகள் எல்லாம் வரலாற்றுத் தன்மைக்கு உகந்ததல்ல எனும் மனப்பாங்கு நிறைந்தவர்கள் நாம். வழிபாட்டுத் தலங்கள்கூட இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைமிக்கவை என்று அறிந்த பிற்பாடே, தெய்வத்தைத் தொழுவதற்கு ஒருசேரக் கரங்களைத் தலைக்கு மேலாக உயர்த்துகிறோம். இது முற்றிலும் குறைபாடான மனப்பான்மையல்ல. ஹரப்பா போன்று நீண்ட பாரம்பரியம் மிக்க ஒரு குடியின் மனநிலை சார்ந்த விஷயம் இது, அவ்வளவுதான். ஆனால் எத்தனை காலத்திற்குத்தான் இப்படிச் சமகாலப் பிரக்ஞையற்றுக் கதை சொல்லித் திரியப்போகிறோம் என்பது ஒரு கேள்வி. ஒவ்வொரு நாளும் பொழுதும் ஆவணமாக மாறக்கூடும். அதைச் சமீப காலச் சான்றுகள் நமக்கு உணர்த்துகின்றன. அவற்றிலிருந்து பாடம் கற்க நாம் தவறிக்கொண்டிருக்கிறோம் என்பதை இந்த வருடப் புத்தகக்(கண்)காட்சி எனக்கு உணர்த்தியது.

முப்பத்தியிரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்துவரும் இக்கண்காட்சி பற்றி எத்தனை பதிவுகள் நம்மிடையே எழுதப்பட்டிருக்கின்றன? இதன் வளர்ச்சி குறித்து நம்முடைய ஆவண அவதானிப்பு என்ன? முப்பத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் புத்தகங்களை ஓரிடத்தில் வெறுமனே கொட்டிக் குவித்து அதைக் காண வாருங்கள் என அழைத்தபோது தமிழ் மக்களின் மனநிலை, எதிர்வினை என்னவாக இருந்திருக்கும் என்பதை ஊகிக்க முடியாமல் தவிக்கவே நேர்கிறது. பபாசியின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டிப் பதிப்பகங்களின் வரலாற்றைக் குறிக்கும் நூல் ஒன்று வெளியிடப்பட்டதாக அறிந்தேன். ஆனால் அதன் பிரதி இன்று பார்க்கவும் கிடைக்கவில்லை. இதைச் செய்ய வேண்டிய பபாசி பதிப்பகங்களின் முகவரியை அச்சிட்டு அதை நூறு ரூபாய்க்கு வாங்குங்கள் என்று சொல்லி ஒலிபெருக்கியில் அழைத்துக்கொண்டிருக்கிறது.

சமீபத்தில் பீட்டர் மேனுவல்லின் காசட் கல்ச்சர் என்னும் புத்தகத்தைப் பார்த்தேன். அதில் இந்திய அளவில் வாய்மொழிப் பாடல்கள் ஒலிநாடா வடிவில் மாற்றப்பட்டு அது ஒலிக்கும்போது இந்தியன் சைக்கிஎன்பது எப்படிச் செயல்படுகிறது என ஆராய்ந்து எழுதியிருந்தார் அவர். அதே போன்று பவுல் டி.கிரீனின் என்பவர் தமிழ் ஒலிநாடாக் கலாச்சாரத்தைப் பற்றித் தனி நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் தமிழ் சைக்கிஎப்படிச் செயல்படுகிறது என அலசி ஆராய்ந்திருக்கிறார். எங்கோ ஒரு கலாச்சாரத்தில் பிறந்து கீழை நாகரிகத்தை அறிந்துகொள்வதில் அத்தனை ஆர்வம் இவர்களுக்கு எப்படிப் பிறக்கிறதென்றே புரியவில்லை. ஒருவிதத்தில் இதைப் புவிசார் காலனிய வாதம் என்று சிலர் புறந்தள்ளினாலும் அவற்றின் துணை கொண்டுதான் ஒவ்வொரு தமிழ் ஆய்வாளனும் தன்னுடைய ஆய்வை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

எரிக் மில்லர் என்னும் இன்னொரு மேலைநாட்டு ஆய்வாளர் சமகாலச் சிற்றிலக்கியவாதிகளுக்கு நன்கு பரிச்சயப்பட்டவர். அவர் சிலப்பதிகாரத்தைப் படித்துவிட்டுக் கண்ணகியின் இடப்பெயர்வில் வரும் வழியை நேரடியாகவே பார்க்கப் புறப்பட்டார் என அறிந்தபோது எனக்குச் சற்று நடுக்கம் உண்டானதை நான் இங்கே சொல்ல வேண்டும்.

பட்டாங்கில் யானும், ஓர், பத்தினியேம் ஆகில்,

ஒட்டேன், அரசோடு ஒழிப்பேன்; மதுரையையும்! என்

பட்டிமையும் காண்குறுவாய், நீ

எனக் கண்ணகி உரைப்பது வெறும் செய்யுள் மட்டுமே. சிலப்பதிகாரத்தை வெறும் காதை வடிவமாகவே வாசித்துப் பழக்கப்பட்ட நம் பொதுப்புத்திக்கு இந்தப் பயண யோசனை உரைக்காமல் போவது ஏனோ. இப்படிக் கால நகர்வின் நெடுகப்பதியப்படாமல் விட்ட வெற்றிடத்தில் சிக்கலுற்றிருக்கிறது நம்முடைய வரலாறு. பலவகைகளில் வரலாறு என்பது கேள்விகளில் தொடங்கிக் கேள்விகளிலேயே முடிவுறுகிறது. அது எப்போதும் முற்றுப்பெறக் கூடியதல்ல; மாறாக ஒரு தொடர் செயல்பாடு.

வரலாறு என்பது எல்லாவற்றுக்கும் அப்பால் ஒரு விவாதம்; வேறுபட்ட வரலாற்றாசிரியர்களுக்கு இடையேயான ஒரு விவாதம்; கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான விவாதம்; உண்மையில் நிகழ்ந்துவிட்டதற்கும் அடுத்து நடக்க இருப்பதற்கும் இடையில் உள்ள ஒரு விவாதம். விவாதங்கள் முக்கியமானவை; அவை மாற்றங்களுக்கான சாத்தியங்களை உருவாக்குகின்றனஎன்கிறார் வரலாற்று விமர்சகர் ஜான் எச். அர்னால்டு.

நம்மிடையே சரித்திர ஆசிரியர்கள் வளர்ந்த அளவிற்குப் பெண்ணிய வரலாற்றாசிரியர்கள், புவியியல் வரலாற்றாசிரியர்கள், அறிவியல் வரலாற்றாசிரியர்கள், சமூகவியல் வரலாற்றாசிரியர்கள், அரசியல் வரலாற்றாசிரியர்கள் எனக் கிளைத்து இத்துறை வளரவில்லை. ஒரு துறை சார்ந்த ஆசிரியர்கள் மற்ற துறை பற்றி எதிர்மறை உணர்வையே வெளிப்படுத்துகிறார்கள். வரலாற்றில் ஆர்வத்தோடு இயங்கும் ஓர் ஆசிரியர் தத்துவத்தை ஜென்மப் பகையாகக் கருதும் போக்கு நம்மவர்களுக்கே சொந்தமானது. மேலைநாடுகளில் ஒரு துறையோடு மற்ற துறையாளர்கள் விவாதித்து, பொருள் கொண்டு அவற்றை எழுதி வெளியிடுகிறார்கள். அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சம் தத்துவவியலாளர்கள் அகாடமி அளவில் பணிபுரிகிறார்கள் என்னும் தகவல் நம்மைச் சலனப்படுத்துவதே இல்லை. சென்னைப் பல்கலையில் தத்துவத் துறையே மூடப்பட்டுவிட்ட செய்தி எத்தனை பேரைச் சுடக்கூடியதாக இருந்திருக்கும்.

இதையெல்லாம் முன்வைத்துப் புத்தகக் காட்சி பற்றி அங்கே வரும் நண்பர்களிடம் புலம்பிக்கொண்டிருந்தேன். வழக்கமான புலம்பல்தான் என ஒதுக்கியவர்கள் பலர். என்னுடைய ஆதங்கத்தைப் புரிந்துகொண்டு கைகோத்தவர்கள் சிலர். உடனே தாமதிக்காமல் சென்னைப் புத்தகக் கண்காட்சி: தோற்றமும் வளர்ச்சியும்என்னும் நூலை எழுத ஆரம்பித்துவிட்டேன். இந்தப் பத்துநாட்களில் கால் கிணறு தாண்டியாயிற்று. எப்படியும் ஓரிரு மாதங்களில் நூல் வேலை முடிந்துவிடும் என நம்புகிறேன்.

முப்பத்தியிரண்டு வருடங்களுக்கு முன் ராஜாஜி ஹாலில் சுமார் ஐம்பது கடைகளுடன் தொடங்கப்பட்ட பபாசி கண்காட்சி இன்று அறுநூறு கடைகள்வரை வளர்ந்திருக்கிறது. அந்தக் காலத்தில் ஐம்பது பைசா நுழைவுக் கட்டணம். இன்று படிப்படியாக வளர்ந்து ஐந்து ரூபாயை எட்டியிருக்கிறது. கடைகளில் அலங்காரம், கூடாரத்தில் பிரம்மாண்டம் என எல்லாவற்றிலும் வளர்ச்சி கூடியிருக்கிறது. காயிதே மில்லத் கல்லூரிப் புத்தகக் கண்காட்சியோடு பத்தாண்டு அனுபவம் எனக்கு. அங்கிருந்த வசதிகளையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் புதிய வடிவமைப்பைப் பார்க்கவே சந்தோஷமாக இருந்தது. ஆனாலும் கழிப்பிட வசதி, அரங்கதாரர்களுக்கு மின் விசிறி வசதி போன்ற விஷயங்களில் பபாசிக்கு அக்கறை இருப்பதாகவே தெரியவில்லை.

பார்வையாளர்களுக்குப் புத்தகங்களைச் சரிவரத் தேடிப் பார்க்கும் பக்குவமான போக்கில் ஏதோ குறைபாடே தெரிகிறது. கடைகளின் வரிசைக் கிரமங்களில் குழப்பங்கள் இருப்பதாகப் பலர் குறிப்பிட்டார்கள். புத்தகத்தை வாங்குவதற்குள்ளாகவே தன்னுடைய உடல் நலத்தில் ஏதேனும் குறைகள் இருக்கின்றனவா என அறியும் மருத்துவ முகாமிற்குத் தாவிவிடுகிறது ஒரு கூட்டம். வாசகர்களாக வருபவர்களின் மனநிலையைப் பபாசி ஒரு பதற்றத்திற்கு உட்படுத்தி அவர்களைத் திருப்புவதில் ஆரோக்கியம் இருப்பதாகச் சொன்னால் எப்படி நம்மால் ஏற்க முடியும். தினமும் நடத்தப்படும் அரங்கக் கூட்டங்கள் மக்களுக்குப் பயன் தருவதாக இருக்கின்றனவா? வழக்கமான பட்டிமன்றப் பேச்சுகளில் இருந்து நம் சமூகம் விடுபடவே முடியாதா? வினாக்கள் நம்மை வளைத்து நிற்கும் சங்கடங்களாக வளர்கின்றன.

முதல்வர் கலைஞர் கருணாநிதி வழங்கிய ஒரு கோடி நிதியில் ஆண்டு தோறும் பரிசுக்கு அறிவிக்கப்படும் எழுத்தாளர்களைப் பபாசி எப்படித் தேர்ந்தெடுக்கிறது? அதற்கான தேர்வுக் குழு எது என்பதில் எல்லாம் கொஞ்சம் வெளிப்படைத் தன்மை வேண்டும். லட்ச ரூபாய் என்பது தமிழ் எழுத்தாளருக்கு நன்மைதரும் தொகைதான். இப்படியான பரிசுத் தொகைகளை வரவேற்கும் வேளையில் அதில் நடக்கும் பரிமாற்றங்களையும் கணக்கில் கொள்வது நல்லதாக இருக்கும் அல்லவா?

ஒவ்வொரு வருடமும் கண்காட்சிக்கு எழுத்தாளர்கள் வந்து தங்கள் நூல்களில் கையொப்பமிட்டு வாசகர்களைச் சந்திக்கும் போக்கு உற்சாகமானது. காலச்சுவடு கடையில் உட்கார்ந்து சுந்தர ராமசாமி கையெழுத்துப்போட்ட காட்சி என் ஞாபகப் பதிவேட்டிலிருந்து இன்னும் அகலவே இல்லை. ஒவ்வொரு ஆளுமையும் இயல்பாகச் சுற்றித் திரியும் காட்சி இங்கு விட்டால் வேறு எங்கும் காணக் கிடைக்காதது. இன்று படிப்படியாக வளர்ந்து சென்னையைத் தாண்டிப்போய் இருக்கிறது இந்த அறிவுச் சந்தை. சில இடங்களில் நடந்த சந்தை சோபிக்கவில்லை என்றாலும் அம்முயற்சிக்கான பயனை நிச்சயம் விரைவில் பதிப்பாளர்கள் அறுவடை செய்வார்கள்.

இந்த வருடம் பொருளாதார அளவில் பல புதிய பதிப்பகங்களுக்கு வரும்படி கிடைக்கவில்லை என்றாலும் அவர்களின் முயற்சிக்கு மக்களின் ஒரு சிறிய அங்கீகாரம் கிடைத்திருப்பது உண்மைதான். காலச்சுவடு கண்ணனுடன் பேசியபோது மிகுந்த உற்சாகமாகப் பேசினார். கண்காட்சி ஆரம்பமான இரு தினங்கள் சற்றுச் சோடையாக இருந்ததாகவும் போகப் போகச் சூடு பிடித்துவிட்டதாகவும் அவர் சொன்னார். அவரது பேச்சில் புகார்களே இல்லாதது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. நான் அடிக்கடி பார்வையிட்ட விடியல், காலச்சுவடு, வம்சி, அடையாளம், குமுதம், பாரதி புத்தகாலயம், என். பி. டி. என எல்லாப் பதிப்பகங்களும் விறுவிறுப்பாகவே இருந்தன.

ந. முருகேச பாண்டியனும் நானும் இரண்டு நாட்கள் சுற்றித்திரிந்தோம். சங்க காலப் பெண் கவிஞர்களைப் பற்றி ந. மு. விவாதித்துக்கொண்டே இருந்தது என் மன நிலைக்குச் சற்று உவப்பானதாக இருந்தது. ந.மு, அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் (காலச்சுவடு) என்னும் தனது சமீபத்திய நூலின் மனப்போக்கிலிருந்து வெளியேறாமல் பேசிக்கொண்டே இருந்தார். அவரது பேச்சில் பேராசிரியரின் வாடை இல்லாதது நல்ல அம்சம் என்று எனக்குப்பட்டது. அந்த நூலிற்கு எழுதியிருந்த முன்னுரையில் சங்க காலப் பிரதியைக் கட்டவிழ்த்து அவர் எழுதியிருந்தவிதம் எனக்குப் பிடித்திருந்ததால் பாராட்டிச் சொன்னேன்.

ஒருவகையில் சொல்லப்போனால் அறிவுலக நம்பிக்கைவாதிகளுக்குத் தமிழ்நாட்டில் போக்கிடம் இல்லை. இந்தப் புத்தகச் சந்தைதான் ஒரே இடம். டிசம்பர் மாதத்தில் மட்டுமே வெவ்வேறு இடங்களிலும் நூல்கள் வெளியிடப்படுவது, நண்பர்களைச் சந்திப்பது என நம்மவர்களுக்கு ஒரு கூடல் வாய்க்கிறது. புத்தகம் என்னும் உலகம் முந்தைய தலைமுறைக்கு அரசியலாகவும் அறிவு மருந்தாகவும் இருந்திருக்கிறது. புத்தக அறிவால் ஆட்சியைப் பிடிக்க ஒரு தலைமுறை புறப்பட்டு அதிகாரத்தைக் கையிலெடுத்த நிகழ்வு தாய்த் தமிழ்நாட்டில்தான் நடந்திருக்கிறது என்னும் சமகால உண்மையே இன்று நம்பக்கூடியதாக இல்லை. அறிவுசார் விவாதங்கள் பொதுமேடையில் நிகழ்த்தப்பட்டதற்கான சுவடுகளைச் சொல்லித் தந்தவர்களே அதை இன்று மறக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஒரு தேசம் தன்னுடைய இலக்கியச் சிறப்பியல்புகளை உலக அரங்கிற்குள் கொண்டுசெல்லப் பல லட்சங்களைச் செலவழித்துத் தன் நாட்டு இலக்கியப் பிரதிகளைக் கட்டிக் கப்பல் கப்பலாக அனுப்பிய கதையை வருங்காலத் தலைமுறை எப்படி உள்வாங்கிக் கொள்ளப்போகிறதோ புரியவில்லை. இன்றைக்குப் புத்தகத்தின் மூலம் அறிவைப் பெருக்கிக்கொள்பவர்களை ஜென் எக்ஸ் என அழைக்கிறது நவீன உலகம். புத்தகப் பூச்சிகளாகத் திரியும் சென்ற தலைமுறை. புத்தகத்தின் மூலம் உருவாக்கிக் கொண்ட அறிவுலகத்தை அறவே புறம் தள்ளுகிறது இன்றைய ஜென் ஒய் தலைமுறை. புத்தகம் என்றாலே இவர்களுக்கு ஒவ்வாமை. இந்தத் தலைமுறை எதையும் அனுபவ வழியிலே ஏற்கும். இவர்கள் எதையும் விட்டேத்தியாக எடுத்துக்கொள்பவர்கள். அலுவலகத்தில் பிரச்சினையா தலையைப் போட்டு உடைத்துக் கொள்ளமாட்டார்கள். உடனே பை பை சொல்லிவிட்டு நாகரிகமாக ஒதுங்கிக் கொள்வார்கள். ஏறக்குறைய இன்றைய காலம் இவர்களுடையது. இந்தக் காலத்தில் சிந்தனைப் பள்ளிகள் பற்றி மெய்சிலிர்ப்பவர்களுக்கு இங்கு இடமில்லை என்பதெல்லாம் அறிஞர்களின் இன்றைய காலத்தைப் பற்றிய ஆய்வு வெளிப்பாடு.

புத்தக உலகத்தை ஏற்க மறுக்கும் ஒரு தலைமுறையின் காலகட்டத்தில் புத்தகங்கள் தமிழில் வளமாக வெளிவருவதை எப்படிப் புரிந்துகொள்வது? ஒவ்வோராண்டும் முந்தைய ஆண்டைவிட ஏராளமான நூல்கள் வருகின்றன. எப்போதும் இல்லாத அளவிற்குப் பதிப்பகங்கள் தமிழில் பெருகியிருக்கின்றன. பல வருடமாகப் புத்தகச் சந்தைப் பக்கமே தலைகாட்டாமல் இடைவெளி விட்டிருந்த க்ரியா இந்த வருடம் கடைபோட்டிருக்கிறது. ஆயிரத்து ஐந்நூறு பக்கத்தில் நாவல்கள் வந்திருக்கின்றன. பாழி, ஞானக்கூத்தன் கவிதைகள், சுந்தர ராமசாமி மொத்தக் கதைகள், ஜி. நாகராஜன் முழுத்தொகுப்பு என மறு பதிப்புகள் வெளிவந்து நன்றாக விற்றுமிருக்கின்றன. காலச்சுவடின் புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுத் தொகுதி ஐந்து பதிப்புகளைக் கண்டிருக்கிறது. இவையெல்லாம் அறிவுலகம் காலியாகிவிட்டதையா நமக்குச் சொல்கின்றன?

நன்றி:காலச்சுவடு 2009 பிப்ரவரி