Friday, May 27, 2011

திரு என்ற ஒரு உரு!




ஒவ்வொரு ஊருக்கும் உள்ள விஷேம் என்ன தெரியுமா? பரந்த விரிந்த தார்ச் சாலையா? இல்லை.பெரிய பெரிய பங்களாக்களா?இல்லை.ஒண்டு ஒடிசலாக ஒடுங்கிப்போய் கிடக்கும் குறுக்குச் சந்துகள்தான்.பராமரிப்பு அற்றுக் கிடக்கும் மூத்திர சந்துகள்தான். பார்க்கவே பரிதாபமாய் வெளிறிப்போய் வெளிச்சமில்லாமல் கிடக்கும் பாமரர் தெருக்கள்தான். ஒரு ஊரின் அடையாளங்கள் அழகாய் அரும்பிக்கிடக்கும் இந்த வீதிகளை பற்றி வரலாறுகள் குறைவு. அந்தக் குற்ற உணர்வு நமக்குள் மண்டிப்போய் இருப்பதால்தான் வீதிக்கு வீதி வரலாற்று நாயகர்களின் பெயர்களை பலகைகளாய் செய்து மாட்டி வைக்கிறோம். அசைவில்லாமல் குன்றிப்போய் கிடக்கும் முட்டுச்சந்துக்கு கூட ஒரு முகமலர்ச்சி இருக்கிறது. இந்தக் குறுக்குச் சந்துகள் தனக்கென்று ஒரு வரலாற்று தலைவனின் பெயரை தாங்கிக்கொண்ட பிறகு இறுமாப்பைக் கூட்டிக்கொள்கின்றன. விருத்தாசலத்தில் உள்ள ஒவ்வொரு தெருவும் எனக்கு அத்துபடி. விரல் நுனியில் வைத்து விளையாடி இருக்கிறேன்.என் கால் நரம்புகளைப்போல அவை இப்போதும் கூடவே ஒட்டிக்கொண்டு வருகின்றன.

கவரத்தெரு, சந்நதி தெரு, புதுப்பேட்டை, ஜங்ஷன் ரோடு, அம்பேத்கர் காலனி, கஸ்பா தெரு,லூக்காஸ் தெரு, ஆலடி ரோடு, இரட்டைத் தெரு, அய்யனார் கோவில் வீதி, வடக்கு வீதி, கைக்கோளார் வீதி,குசக்கடை தெரு,வீரப்பாண்டியன் வீதி, திரு.வி.க.தெரு, அங்காளம்மன் தெரு, செல்லியம்மன் தெரு,கடலூர் ரோடு,பென்னாடம் ரோடு,ராமச்சந்திரன் பேட்டை என்று விருத்தாசலம் அளவான தெருக்களை மட்டுமே கொண்ட ஒரு சின்ன நகரம். நகர்கள் எல்லாம் 90களுக்கு பின்னால் முளைத்த புது முகங்கள். இதில் அண்ணா நகரும் காந்தி நகரும் விதிவசத்தால் முந்திப் பிறந்தவை.

பாலக்கரை கடைவீதியில் போலீஸ் டேஷன் இருந்த பழங்காலத்துக் கட்டிடத்தில் தான் இன்று மகளிர் காவல் நிலையம் வந்திருக்கிறது.அந்தக் காவல் நிலையத்தை ஒட்டியது போல இரண்டு பக்கங்களிலும் இரண்டு தெருக்கள்.இதில் கொஞ்சம் பெரிய தெரு இரட்டைத் தெரு.நேராக மணிமுத்தாற்றங்கரைக்கு போய் முட்டும். படித்துறை எட்டும் அளவிற்கு ஆற்றுத் தண்ணீரோடி நான் பார்த்திருக்கிறேன்.பல அய்யர்கள் ஸ்நானம் பண்ணிக்கொண்டு வீட்டிற்குத் திரும்புவதை பார்த்திருக்கிறேன். முழுக்க முழுக்க அய்யர்கள் வசிக்கும் அக்ரஹாரம்.எல்லா வீடுகளும் நாட்டு ஓடுகளால் கூரை வேயப்பட்டு பெரியத் திண்ணைகளுடம் காட்சித் தரும்.வீட்டின் வர்ணம் கூட ஒன்றுபோலவே இருக்கும்.வெள்ளைச் சுண்ணாப்பின் நடுவே வெளிறிய காவிப்பட்டைகளை அடித்து வைத்திருப்பார்கள். விருதகிரீஸ்வரர் சிவபெருமானுக்கு சேவகம் பண்ணி அத்தனை அய்யர்கள் காலத்தைக் கழித்தவர்கள். இதுதான் நித்ய ஜீவனம். அதிகம் மக்கள் புழக்காதத் தெரு. மெயின் சாலையான கடைவீதிலிருந்து பிரியும் இந்த இரட்டைத் தெருவின் முனையில் சில காப்பிக்கடையும் காப்பித்தூள் விற்கும் கடைகளும் இருந்தன. கும்பகோணம் நரசுஸ் காப்பி,முத்துராம் காப்பித்தூள்,அம்மாள் காப்பி,லியோ காப்பி, என்ற பெயரில் ஏகப்பட்டக் கடைகள். காப்பிக் கொட்டைகளை அரைக்கு சத்தம் அங்கே எழும் வாசம் எல்லாம் வீதியை செழிப்பாக்கும். டிகிரி காப்பி,ஜிக்ரி காப்பி என்று பல பேதங்கள்.அவ்வளவும் அய்யர்கள் சரக்கு. காப்பி என்பது மருந்துக்கு சாப்பிடுவோம்.என்றாவது ஒருநாள் எங்களுக்கு வாய்க்கும் பேரு.கொடை. அக் காப்பிக்கடைகளுக்கு முன்னால் ஒரு சைக்கிள் நுழையும் அளவுக்கு சின்ன பொது மூத்திர சந்திருந்தது பிரியும்.சந்தென்றால் தெருவே சந்து.பெயர்:ஜெயில் தெரு.பேருக்கு தக்க தோற்றமும் உண்டு.அசப்பில் ஜெயில் போல வீட்டு மதில்கள் உசந்து உசந்து நிற்கும். இச்சந்தில் கவரிங் நகைகளுக்கு கிலிட் பிடிக்கும் கடைகள் இருந்தன.சேர்ந்தார் மாதிரி டைலர் கடை, அடகு கடை என்றும் இருந்தன. இப்பகுதிக்குள் நுழையவே அடிவயிறு குமட்டும். கிலிட் பிடிப்பவர்கள் சின்னச் சின்ன கண்ணாடி பாட்டில்களில் மின் கம்பிகளை போட்டு ஏதேதோ செய்வார்கள். சீராகப் பாயும் மின்னாசரம் நகைகளை அழக்காகும் கலை மாற்றம் அரங்கேறும் இடங்கள்.சில்வர் பேஷன்களில் புங்கங்கொட்டை ஊர வைத்து அதை இரும்பு பிரஷால் போட்டுத் தேய்ப்பார்கள்.நுரைப் பொங்கிகொண்டு வரும். பார்க்கப் பார்க்க நம் ரசனை அடங்காது. வெள்ளிக்கொலுசுக்கு அழுக்கெடுப்பது.கவரிங் செயினுக்கு மினுமினுப்புக் கூட்டுவது என்று பல மாயாஜாலம் நடக்கும்.

இந்த மூத்திர வாடைக்கு இடையில் எப்படிதான் இவர்கள் பணி செய்தார்களோ என்று படிப்பவர்கள் ஐயப்படலாம்.அங்கேதான் விஷயம் இருக்கிறது. மூத்திர வாடையை உள்ளே வர விட்டாமல் தடுத்துக்கொண்டு நிற்கும் காப்பிக் கடைகள் இவர்களுக்கு காலம் காலமாய் சேவகம் பண்ணிக்கொடிருந்தன. இந்த காப்பி வாசனையில் மூத்திர வாடை மூழ்கடிக்கப்பட்டது.

இன்றைக்கு பிரபலமாக இருக்கும் பெரியார் நகர், ஊரில் 90களின் பிற்பகுதியில் பிறந்த நகர் பகுதி. இந்தப் பகுதியில் மத்திய அரசின் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியில் இருந்தவர்களும் வசதி படைத்த வர்கத்தினரும் மாதச் சம்பளம் வாங்கும் ஆஃபீஸர்களும் வந்து புதியதாக குடியேறி புழங்க ஆரம்பித்த பின்னால் அழகான நகர் பகுதியாக ஆனது. அதற்கு முன்னால் அந்தப் பகுதியே வயல்வெளியாய் விரிந்துக் கிடந்தது.இன்று அத்தைனையும் அழகிய மனைகள். குறிஞ்சித் தெரு,முல்லை தெரு,செம்மருத்தி தெரு, மல்லிகை தெரு, சூரிய காந்தி தெரு, ரோஜா தெரு, கனகாம்பரத் தெரு, சாமந்தி பூத் தெரு, அல்லி தெரு, தாமரை தெரு என்று வடக்கு பெரியார் நகர் முழுக்க மலர் பெயர்களாய் தாங்கி நின்ற நேரத்தில் தெற்கு பெரியார் நகர் முழுக்க கம்பர் தெரு, வள்ளுவர் தெரு, அவ்வை தெரு, இளங்கோ தெரு, தொல்காப்பியர் தெரு, நக்கீரன் தெரு, சேக்கிழார் தெரு, வள்ளலார் தெரு,அப்பர் தெரு, திருஞானசம்பந்தர் தெரு,ஆண்டாள் தெரு,நாலடியார் தெரு என்று தமிழிலக்கிய புலவர் பெயர்களை தாங்கி நின்றன. 90களில் விளக்கு வைத்த பிறகு இவ்விடத்தில் கால் வைக்கவே மக்கள் அஞ்சுவார்கள்.அந்தளவுக்கு ஆள் நடமாட்டமில்லாதப் பகுதி.இன்று அப்படியில்ல்லை.ஊரின் முக்கிய பகுதியாக மவுசு கூடி நிற்கிறது. எனக்கு தெரிந்து 89களில் இலங்கையிலிருந்து விரட்டப்பட்ட அகதிகளை இந்த மயானக்காட்டில்தான் கொண்டு வந்து டேரா அடித்து குடியமர்த்தினார்கள். இன்றைக்கும் அரசு விவாசாய பொருட்களை கொள்முதல் பண்ணும் கமிட்டி இங்கேதான் உள்ளது.அதன் பின்னால் கிடந்த கேட்பாரற்ற நிலத்தியே அகதிகள் வசிப்பதற்கென்று வசதி பண்ணிக்கொடுத்தது தமிழக அரசு.விளக்கு வசதிகள் இருந்ததாகக் கூட நினைவில்லை.

நான் புதுப்பேட்டையிலுள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில்தான் எட்டாம் வகுப்பபடித்து வரை படித்தேன்.அப்புறம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இடம் பெயர்ந்தேன். எட்டாம் வகுப்பில் பாதிப்படிப்பு முடியும் நேரத்தில் திடீரென்று பல பிள்ளைகள் வந்து உட்கார்ந்தார்கள்.அவர்களின் பேச்சில் ஒன்றும் தமிழ் இருப்பதற்கான தடயமில்லை. கனத்த வார்த்தைகளை இலகுவாக பேசிய மாணாக்கர்களை பார்த்து நாங்கள் பீதியுற்றோம். அவர்களின் ஒரு வார்த்தைக்கூட எங்களுக்கு ஒட்டவில்லை.ஒப்பவுமில்லை. அரசு இலவசாமாக வழங்கிய காக்கி அரை டவுசரையும் மட்டமான வெள்ளை உடுப்பையும் கட்டியிருந்த எங்களுக்கே அவர்கள் பரதேசி கோளத்தில் தென்பட்டார்கள். அவர்களோடு ஒட்ட எங்களுக்கு தனி பயிற்சி வேண்டியிருந்தது.ஆசிரியர்களும் இந்த இடைவெளியை கலைய கால்கடுக்காய் நின்று கத்தினார்கள்.

இந்தப் பள்ளியில்தான் திருநிறைச்செல்வன் என்று ஒரு பையன் எனக்கு நண்பனான்.அவன் ஈழத்தவன்.பாதி காலம் பதிவேட்டில் பெயர் பதியும் வரை என்னோடு சத்துணவை சரிபாதியாய் பகிர்ந்தவன். அவனோடு வந்தப்பிள்ளைகள் ஏதோ ஒரு நாட்டிலிருந்து அந்த அரசு தங்களை அடித்து விரட்டிவிட்டதாகவும் கடல்வழியில் கள்ளத்தனமாய் இங்கே வந்துவிட்டதாகவும் இரவில் கடலை கடக்கும் போது கரையென்று நம்பி இறங்கியபோது அது தங்களை ஏமாற்றிவிட்டதாகவும் பின் விடியும் வரை கடல்நடுவிலேயே நின்று வெளிச்சம் பார்த்த பிறகும் தமிழ்நாட்டை அடைந்ததாகவும் எங்களுக்கு கதை சொன்னான்.நாங்கள் நம்பவில்லை. சமைக்ககூட பண்ட பாத்திரங்கள் இல்லாமல் உண்மையில் கஷ்டப்படுவதாகவும் சொன்னான்.நாங்கள் நம்பவில்லை. உங்களின் வீடு எங்கே என்றேன். ஓலைப்பாய் அடித்த குடிசையில் கும்பலாக தங்குகிறோம் உங்களைப் போல தனி வீடெல்லாம் இல்லை என்றான்.நாங்கள் நம்பவில்லை.உங்களுக்கு இங்கே சொந்தக்காரர்கள் யாரும் இல்லையா?என்றோம்.இல்லை என்றான்.நாங்கள் நம்பவில்லை.இப்படி சந்தேகம் இன்னொரு தலையா கனத்தது எங்களுக்கு. வேற நாட்டுக்காரன் எப்படி தமிழ் பேசுவான்? மண்டையை சுற்றிய சந்தேகம் இது!

திருவின் கதைகளை கேட்ட நாங்கள் அவனது வீட்டை போய் பார்க்கத் தீர்மானித்தோம். அவன் அது நல்லதல்ல;நீங்கள் எல்லாம் உள்ளே வரமுடியாது.போலீஸ் பிடித்துக்கொள்ளும் என்றான்.திரு வாட்ட சாட்டமாக இருப்பான்.எட்டாம் வகுப்பு தோழனுக்கான எந்த அடையாளத்தையும் அவன் உடம்பில் பார்க்க முடியாது. பாதி ஆண் பிள்ளைக்கான லட்சணங்கள் அவன் சரீரத்தில் சடுகுடு ஆடின.ஆகவே நீதான் பலசாளியாயிற்றே போலிஸை அடித்து சாய்த்துவிட்டு எங்களை அழைத்துக்கொண்டுபோய் காட்டு என்றேன்.சிரித்தான்.

எவ்வளவு இடைஞ்சல்கள் வந்தாலும் அவனது குடிலுக்கு போவது என்பதில் திடமாய் நின்றோம்.மறுநாள் கட்டாயம் போகலாம் என்றான். எங்களின் புலனாய்வுக்கு நல்லத் தீனி என்று அன்று பள்ளியிலிருந்து கலைந்திட்டிடோம். அடுத்த நாள் வகுப்பில் பிரேயர் முடிந்து உள்ளே நுழைந்ததும் இன்னைக்கு சாயுங்காலம்..கட்டாயம் போகணும்என்றேன். ம் என்று கண்ணசைத்தான். திருவை போல பல பிள்ளைகள் வந்திருப்பதால் பள்ளியின் இட நெருக்கடி அதிகமானது.அதோடு அவர்கள் யாரும் சரிவர பள்ளிக்கு வரமாட்டேன் என்கிறார்கள் என்றும் அவர்களை ஒன்றாக கூப்பிட்டு விசாரிக்க வேண்டும் என்றும் ஹெச்.எம்.வீரமணி விரும்பினார். அழைத்து விசாரித்தபோது குடம்குடமாய் கண்ணீர் விட்டார்கள் பிள்ளைகள்.அவ்வளவு வாழ்வியல் நெருக்கடிகள். மாற்றுக்கு துணியில்லை.வீட்டிற்குள் சமைக்க விறகில்லை என்று அழுது புலம்பினார்கள்.பட்டினிக்கிடக்கிறோம் அய்யா என்றார்கள். தமிழகத்து பல மாணவர்களை அழைத்து அவரவரர் வீட்டில் உள்ள பழைய உடுப்புக்களை எடுத்து வாருங்கள் என்று வேண்டுகோள் வைத்தார் தலைமை ஆசிரியர். நாங்கள் வீட்டில் இருந்ததை கொண்டுவந்து கொடுத்ததை தவிர்த்து ஊரிலுள்ள பல வீட்டிற்கு ஆசிரியரின் துணையோடு யாசகம் கேட்டு படியேறினோம். நிறைய உடுப்புகள் கைவசம் வந்தன. அள்ளிக் கொண்டு வாய்ப்பை பயன்படுத்தி அகதிகள் முகாமிற்குள் நுழைந்தோம். இரண்டாள் உருப்படியாக உறக்கம் கொள்ளமுடியாத துளியோண்டு இடத்தில் பத்து ஆட்கள் பட்டியில் அடைப்பதைப்போல அடைத்து வைத்திருந்தார்கள். முள் கம்பி இல்லாத முகாம்.காலைக் கடன் கழிக்க அரசு தரப்பில் கட்டிக்கொடுத்திருந்த கழிப்பறையின் வாய்கள் நிரம்பி மனித மலம் மலையாய் குவிந்திருந்தது.அக்காட்சிய கழிவறையை பார்த்ததும் குடலை பிறட்டும் துர்நாற்றம்.எங்கும் சுகாதாரம் பேச்சுக்கும் இல்லை. திரு மீது இறக்கம் கவிழ்ந்த தருணம் அது.

இலங்கையில் இருந்து வந்த இவர்கள் பிழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருந்ததால் பள்ளியை பாதியிலேயே பல பிள்ளைகள் விட்டுவிட்டார்கள். தாய்மார்கள் வீட்டு வேலைகளுக்கும் தகப்பன்மார்கள் வீட்டிற்கு வெள்ளையடிப்பதற்கும் வேலைக்குப் போக ஆரம்பித்தனர்.ஒத்தாசைக்கு பிள்ளைகள் சுண்ணாம்பு வாளியை சுமக்க வேண்டிய நிலை.ஆகவே பள்ளியின் பக்கம் தலைவைக்காட்ட நேரமில்லாமல் பல மாணவர்கள் எங்களைவிட்டு பிரிந்தார்கள்.

இலங்கயின் தமிழ் பாஷை பச்சையாய் இருந்தது எனக்கு பிடித்திருந்தது.அதோடு சாகஸம் கொண்ட திருவின் கடல் பயணக் கதைகள் என்னை ஈர்த்தன.ஆகயால் திருவின் வீட்டிற்கு திரும்பத் திரும்ப நடையாய் நடந்தேன்.அப்படி போய் வந்த நாளில்தான் அவன் தங்கை மார்பளவு கடல்நீரில் மூழ்கு செத்தக்கதையை என்னிடம் சொன்னான். முகாம் முழுக்க உள்ளவர்கள் சுண்ணாம்படிக்க கூலி வேலைக்கு போனார்கள்.திருவின் வீட்டார் மட்டும் சுண்ணாம்பு அடிக்க போகவில்லை.பூர்வீகமாய் அவனின் குடும்பம் மீனவக் குடும்பம்.ஆகவே கடலூர் ரோட்டிலுள்ள டிபி பங்களாவிற்கு முன்னால் கடலூரிலிருந்து மீன்களை கொண்டு வந்து மீன் வியபாரம் பண்ண ஆரம்பித்தார்கள். மீன் மார்கெட் என்றால் அது பாலக்கரையிலுள்ள காய்கறி மார்கெட் பின்புறம்தான் இருந்தது.ஊரின் மீன் வியபாரிகள் முழுக்க அங்குதான் கடைப்போட்டிருந்தார்கள். திடீரென்று முளைத்த இந்த சிலோன் மீன் கடையில் ஐஸ் போடாமல் கடலூரிலிருந்து மீன்களை கொண்டு வந்து உடனுக்கு உடன் விற்பனை செய்ததால் வியபாரம் சூடு பிடித்திருந்தது.உள்ளூர் வியபாரிகள் எடைப்போட்டு மீன்களை விற்கும் காலத்தில் இவர்கள் கொடுக்கின்ற காசிற்கு கைநிறைய கூடையில் மீன்களை அள்ளிப்போட ஆரம்பித்தது ஊர் மக்களை இவர்கள் பக்கம் திரும்ப வைத்தது. நாளுக்கு நாள் நல்ல வியபாரம்.ஓரிருக் கடைகள் காலப்போகில் கால் டஜன் அரை டஜன் என்று வளர்ச்சியடைந்தன. உள்ளூர் வியபாரிகளுக்கு இருப்புக்கொள்ளவில்லை.இவர்களால் தங்களின் இலாபம் குறைக்கிறதென்று இலங்கைக்கார மீனவன் கையில் தராசை தந்தார்கள் ஊர் வியபாரிகள்.அப்படியும் கூட்டம் குறையவில்லை. ஊர் வியபாரிகளுக்கு ஒரு கும்பிடுபோட்டுவிட்டு மக்கள் சிலோன் கடை பக்கமே தலைவைத்து படுத்துவிட்டனர். நாடோடி மன்னனில் எம்ஜிஆர் செல்வந்தர்களை எதிர்த்து சண்டையிடுவாரில்லையா அதேபோல் ஊர் வியபாரிகளை எதிர்த்து யுத்தம் செய்தார்கள் இலங்கையாட்கள்.கோபத்தின் எல்லைய மீறிய பல வியபாரிகள் சிலோன் கடைக்காரகளிடம் இருந்த இடத்தை அபகரிக்க ஆரம்பித்தனர். தெருவோரக்கடைதான் என்றாலும் நிலத்திற்கு சொந்தமில்லாதவர்கள் என்று விரட்டப்பட்டார்கள். அங்கே இருந்து நகர்ந்துபோய் தங்களின் வியபாரத்திற்கு வேறு இடத்தை கட்டியெழுப்பினார்கள்.அங்கேயும் வம்புகள்.மாமுல்கள் என்று நெருக்கடிகள் தொடர்ந்தன. சின்ன அளவில் இருந்தவர்கள் காலப்போக்கில் காணாமல் போய்விட்டார்கள்.இப்போது சுரேஷ் தியேட்டர் பகுதியில் உள்ள மீன்கடைகள் முழுக்க உள்ளூர் ஆட்கள் கைக்கு வந்துவிட்டன. இலங்கை வியபாரி இன்று வீட்டிற்கு சுண்ணாம்பு அடிக்கும் தொழிலாளியாகிவிட்டான். வாழ்நாளில் ஒரு சைக்கிள் வாங்குவது அம்மக்களின் உச்சபட்ச கனவாகிவிட்டது. பெரிய பிழைபொன்றுமில்லை.சீரான வருமானத்தில் வயிற்றைக்கழுவுகிறார்கள்.எங்கள் ஊரில் எங்கோ ஒரு முளையில் என் பால்ய நண்பன் திருவும் அவனது குடும்பமும் இன்று சுண்ணாம்பு அடித்துக் கொண்டுருக்கலாம்.அல்லது ஊர் எல்லையைக் கடந்து கண் காணாது இடம் பெயர்ந்திருக்கலாம்.உண்மையாய் திருவின் முகம் என் கண்ணிற்கு முன்னால் இன்றைக்கும் நிழலாடுகிறது. அவனது குடும்பமும்தான்.அவனை பார்ப்பேனா தெரியவில்லை.என் ஆயுளுக்கும் அவனை பற்றி அவனது குடும்பத்தை பற்றி விரும்பக்கூடாத செய்தியை கேட்டுவிடக்கூடாது என்று வேண்டிக் கொண்டிருக்கிறேன்.

Monday, May 23, 2011

டாக்கீஸ் அனுவம்





ஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளுவை இன்றைக்கு ஒருவன் பார்க்க நேர்ந்தால் பல்வேறு கோணங்களில் சந்தேகம் தட்டும். அப்படத்தின் நாயகி சினிமா மோகத்தால் சிக்கிச் சீரழிந்து இறுதியாக சின்னா பின்னமாவாள். ஜெயகாந்தன் தன் கருத்தை வழக்கமாக கதா பாத்திரத்தின் மூலம் ஏற்றி சொல்லியிருப்பார்.பழைய மெட்ராஸில் ரிக்‌ஷா ஓட்டிப் பிழைக்கும் அடிதட்டு மக்களின் உச்சபட்ச கனவை விவரிக்கும் சினிமா, ஜெயகாந்தனின் இந்தக் குறிப்பிட்ட சினிமா. படத்தில் இடம்பெறும் சம்பவம் உண்மைச் சம்பவம். அன்றாடம் நம் வாழ்க்கையில் தென்படும் சங்கதி. ஆனால் இன்று அப்படம் அசல் தன்மையை இழந்திருக்கிறது. பொய் பிம்பம் பூணுகிறது. சில கருத்தியல் சிராய்ப்புகள் எழுகின்றன. இன்று எளிய விஷயங்களின் மீது நாம் பெரிய தத்துவங்களை போர்த்தி ஒப்பிடுகிறோம்.சுமை தாளாது தள்ளாடுகிறது நம் கலாச்சாரப் பழையத் தோணி..அப்படி பார்த்தால் உண்மை ஒரு குறிப்பிட்டக் காலத்திற்கு அப்புறம் சந்தேகத்தின் சாயலைத் தழுவிக் கொள்கிறது.நிஜம் ஒரு காலகட்டத்திற்கு அப்புறம் தன் உஷ்ணத்தின்

கொள்ளளவைக் குறைத்துக் கொள்கிறது. சூடு குறைந்த கரித்துண்டுகள் பின் சாம்பலாவது மாதிரி, நம்பகத்தை இழக்கும் சங்கதிகள் சந்தேகங்களாக மடிந்து மண்ணில் சுருண்டிருக்கின்றன.

இன்று பழைய ஆடம்பரத்தின் எந்தச் சிறு தடங்களும் இல்லாமல் ஒளியிழந்து கிடக்கும் தியேட்டர்களை காணும் ஒரு தலைமுறைக்கு எண்பதுகளில் இருந்த அதன் அத்ததை பிரமாண்டங்களும் எளிதாகத் தென்பட்ட வாய்ப்பில்லை. சினிமா தன் உச்சக்கட்டமான அனலை உழிந்து நின்ற உச்சி வெயிலில் பிறந்தது கடைசித் தலைமுறையை சார்தவர்களில் நானும் ஒருவன். எங்கள் வீட்டில் அண்ணனும் நானும் சினிமா பைத்தியம். எங்கள் குடும்பத்தில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் உரசல்கள் மூண்டால் அதற்கு சினமாதான் முதற்காரணம்.அம்மா,அப்பாவிடம் படம் பார்ப்பதற்கு பணம் கேட்

கப் போய் வில்லங்கத்தை விலைக்கு வாங்கினக் கொண்டு நிற்பாள்.இங்கேதான் ஜெயகாந்தனின் சித்தாளு படம், தமிழ் மக்களின் அன்றைய மனநிலையை படம் பிடித்து சொன்னது.

அன்று நான் கைக்குழந்தையாக இருந்த போதே சினிமா பார்த்து ரசித்த

தாக அம்மா மெச்சிக் சொல்வாள்.கண் கொட்டக் கொட்ட வெள்ளித்திரையை வியந்து வியந்து பார்ப்பேனாம்.எண்பதுகளுக்கு முன்னால் பிறந்த ஒரு தமிழ்நாட்டுத் தமிழன் அந்தப் பண்போடுடே அன்று

ஒட்டிப் பிறந்திருக்க முடியும்.இதில் வியப்பொன்றுமில்லை.அம்மாவின் குடும்பத்திற்கு சினிமாவோடு நெருங்கமான பினைப்பு இருந்தது.அவள் சின்ன வயது முதலே சினிமாவோடு நெருக்கமாக பழகியிருக்கிறாள்.அம்மாவின் குடும்பம் சற்றும் சங்கோஜமில்லாமல் போஸ்டர்கள் மீது படுத்து புரண்டு கொண்டிருந்தக் ஒரு குடும்பம்.என் தாய்மாமன் மரக்காணம் பக்கமுள்ள அனுமந்தை கிராமத்தில் டூரிங் டாக்கீஸில் ஆபரேட்டராக வேலை பார்த்தவர்.அந்த

க் கிராமத்தின் ஒரே டாக்கீஸ் என்பதால் மாமாவும் ஊரில் ராஜ உபசாரம். அத்தி மலர்ந்த்துபோல் ஊரின் மத்தியில் மலர்ந்திருந்தது மாமா வேலை பார்த்த அந்த டாக்கீஸ்.மாலை காட்சி, இரவுக்காட்சி என்று இரண்டே காட்சிகள். சாயுங்காலம் படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒலிபெருக்கியில் பழைய பாடலை போட்டு வானத்தைக் கிழிப்பார்கள். படம் தொடங்குவதற்கு சற்று முன்னதாக ப்ரத்யேக இசைத் தட்டைப்போட்டு சுழலவிடுவார்கள்.வழக்கமாக தினமும் ஒரே மெல்லிசைதான்.இமியும் மாறது.இச்சமிக்ஞை உணர்ந்த பொதுமக்கள் படம் பார்க்க வேக வேகமாக விரைந்து டாக்கீஸ் முன்பு குழுமுவார்கள்.

பனை ஓலைகளால் வேயப்பட்ட மேற்கூரை. பக்கவாட்டைச் சுற்றி தட்டி. உள்ளே ஐம்பது அறுபது பேர்கள் உட்காரும் அளவுக்கு கொள்ளளவு. டாக்கீஸின் பெயர் பலகைக்கு மேலாக ஒரு ஒத்தை விளக்கு கம்பம்.அரங்குக்கு உள்ளே சின்ன சிம்னி வெளிச்சத்தில் எரியும் ஒ

ரு குண்டு பல்ப். போஸ்டருக்கு என்று தனியாக ஒரு தொங்கு விளக்கு. உள்ளே கடைசி இரண்டு வரிசையை நிறைக்கும் மர பெஞ்சுகள்.திரையையொட்டி ஆற்று மணலடித்த வெறும் தரை என்று டாக்கீஸ் பார்க்க பூவுலக சொர்க்கமாய் காட்சியளிக்கும். இதே தோற்றம்தான் எல்லா ஊருக்கும்.பேதங்கள் அரிது.அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மறுதல்கள் இருக்கலாம். மற்றபடி டாக்கீஸின் தேசிய அடையாளங்கள் இவை. பார்வையாளர்கள் உட்கார்ந்து படம் பார்க்கும் போது உயரம் காணாது சிலர் திண்டாடுவார்கள். தரையில் நிரப்பியிருக்கும் மண்ணை ஒரு மேடாகக் குவித்து உயரத்தைக் கூட்டிக் கொள்வார்கள். படம் பார்க்க கொஞ்சம் செளரியமாக இருக்கும்.இந்த சமீபத்திய செளகர்யம் பல சமயங்களில் முன்னே உட்கார்ந்திருப்பவன் தனக்கு திரையை மறைப்பதாக சொல்லி திடீர் முட்டல் மோதலை உண்டாக்கும். சின்னளவு முட்டல்கள்.பின்பு ரத்தக்களரி

யானதையும் நான் கண்டிருக்கிறேன். ஆகாயத்தில் டைவ் அடிக்கும் சினிமா ஃபைட்களைவிட விஞ்சி நிற்கும் அசல் சண்டைக் காட்சிகள் இவை. டாக்கீஸின் ப்ரத்யேக அம்சமே அதன் சூழல்தான். காண்டா விளக்கொளியில் முறுக்கு,சீடை,வெள்ளத்தின் சுவையோடு தயாரிக்கப்பட்ட எள்ளு உருண்டை.கமர்க்கட்டு மிட்டாள்.பெரிய சைஸ் பொரி உருண்டை.அதிரசம், அரிசி மாவில் சுட்ட சுய்யம் உருண்டை,பச்சைக் கடலை,அவித்த வேர்க் கடலை,வள்ளிக்கிழங்கு என்று தின்பண்டக் கடைகள் பல டாக்கீஸ் முன்னால் டேரா போட்டு உடக்கார்ந்திருக்கும்.கடைகள் என்றால் கூடையளவு வியபாரம்.அலுமினிய அண்டாவில் அடுக்கி வைத்து நடக்கும் வியபாரம். 1985களில் நான் பத்துக் காசுக்கு முறுக்கு, நாலு அணாவுக்கு சுய்யம், வள்ளிக்கிழங்கு என வாங்கித் தின்றிருக்கிறேன். நொறுக்குத்தீனி வயிறு முட்டவில்லை என்றாலும் திருப்தி கட்டாயம் மனசை முட்டும். வயிற்றுக்கும் வாய்க்கும் பஞ்சக்கதைகள் இருக்காது.இடைவேளை சமயத்தில் திறந்தவெளியில் நடக்கும் சில்லறை வியபாரம் மக்கள் மத்தியில் அவ்வளவு ஜரூர் காணாது.பலர் வீட்டிலிருந்தே டாக்கீஸுக்கு தின்பண்டங்களை மூட்டைக்கட்டி வந்துவிடுவார்கள். ஆகவே விற்பனை அதிகம் செல்லாது.

மழைபெய்யும் சமயத்தில் டாக்கீஸில் உட்கார்ந்து படம்பார்க்கும் சுகமேதனி. பனை மட்டைகள் எழுப்பும் சலசல சத்தம்.மண்ணை நனைத்துக் கொட்டு எழும் புழுதி வாடை.உள்ளேயே ஒருவரை ஒருவர் உரசிக்கி நின்று ஏற்றும் உடம்புச்சூடு என டாக்கீஸ் எழுப்பும் நினைவலைகள் அற்புதம் நிறைந்தவை. அது கிராமத்தில் ஒரு பொதுக்கலாச்சாரத்தின் குறியீடாக தென்பட்டது.சாதிகளை தாண்டி ஒரு பொது அடையாளத்தினை நோக்கி மக்களை ஈர்த்தது. ரசிகர் மன்றங்களும் திரைப்படத்தின் கொண்டாட்டங்களும் மக்களை சாதி வரம்பை மீறிய பொதுச் செயல்பாட்டிற்கு அழைத்து வந்தன.இவை கூர்ந்துநோக்குகையில் இன்றைக்கு தோணும் சமாச்சாரங்களாக பிடிபடுகின்றன. சினிமா என்ற ஊடகத்தின் வழியே கட்டமைக்கப்பட்ட புதிய மதத்தை பற்றிய ஆய்வுகள் அயல்நாடுகளில் ஒரு தியரியாக எழுதப்பட்டு உள்ளன.நமக்குதான் அப்பார்வையே இன்னும் வாய்க்கவில்லை. அக்கோணங்களில் அலசல்கள் எழுதப்படவேண்டும்.

டாக்கீஸில் இரவு படம் முடிந்து ஜனம் ஒட்டுக்க வெளியே போகும் போது ஒன்றோடு ஒன்றாக உரசியபடி ஓடும். படம் விட்ட சற்று நேரத்திற்குள் ஜனம் சந்து பொந்தில் ஓடி மறைவதைபோல சட்டென முழுக்க மறைவார்கள். கிராமங்களில் பொதுவழிப் பயணம் அரிதானது. ஒவ்வொரு ஆட்களையும் குறுக்கு வழிகள் தனித் தனியாகக் கூப்பிட்டுக்கொண்டு நிற்கும்.வயல்களில் இறங்கி, தோப்புகளில் புகுந்து வீடு, மக்கள் கரை சேர்ந்துவிடுவார்கள். கிராமத்தின் இருட்டில் வேடிக்கைக்குகூட ஒரு பொருள் கண்ணுக்குத் தெரியாது.சுற்றிலும் கருந்திரை கண்ணை மறைக்கும்.முதல் ஆட்டத்திற்கே இந்தக் கதி.இரண்டாம் ஆட்டத்திற்கு சொல்லவேத் தேவையில்லை. இரண்டாம் ஆட்டம் முடிந்து வெளியேவருபவர்களுக்கு வெளிச்சம் என்பது வேடிக்கை பொருள். தூரத்தில் எங்கோ வெளிச்சம் சின்னதாக சிந்திக் கொண்டிருக்கும்.பல நாட்களுக்கு நிலவு வெளிச்சம் நிம்மதி தரும்.அம்மாவாசையன்று ஊரே இரவில் கறுப்புக் கம்பளி போர்த்திக்கிடக்கும். சினிமா ஆசை இருட்டு வெளிச்சம் அறியாது.

நான் பாட்டியின் ஊரிலுள்ள டாக்கீஸில் பார்த்த முதல்படம் சிவாஜி கணேசன் நடித்த முதல்மரியாதை என்பதாக ஞாபகம். நல்ல வெனவு தெரிந்தப் பிற்பாடு நானும் பாட்டியும் சேர்ந்து பார்த்தப் படம் ரஜினி நடித்த மனிதன்.ரூபினியும் ரஜினியும் சேர்ந்து நடித்தப் படம். ‘காள காள..முரட்டுக்காள பாடலும் ‘மனிதன் மனிதன்..எவந்தான் மனிதன்.அடுத்த வீடு தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா?அந்தநேரமோடி வந்து துடிப்பவன் மனிதனா?பாடலும் அதன் காட்சிகளும் இன்னும் நினைவில் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. முதல்மரியாதையில் ‘எனக்கு ஒரு உண்மைதெரிஞ்சாகணும் சாமீஎன்று சிவாஜியிடம் வேலுச்சாமி கேட்கும் வசனத்தையும் ‘அதோ தூரத் தெரியுதே ரெண்டு பனைமரம் அதுக்கு பின்னால என்னய்யா இருக்கு?என்ற வசனத்தையும் ‘ அந்த நிலாவத்தானா நான் கையில புடிச்சேன்என்ற பாடலையும் ‘இந்த சிறுக்கி அறியாத வயசுல ஒரு தப்பை பண்ணிட்டேன்.திருவிழாவுக்கு போன இடத்துல வயித்துல ஏத்திக்கிடு வந்து நின்னேதான்.இல்லன்னு சொல்லல.அதுகாக நாலு வெள்ளாடும் துருப்பிடிச்ச தொறட்டிக் கம்புமா வந்த வெறும் பைய கையில புடிச்சிக்கொடுத்துட்டு செத்தானே என் அப்பன் அவன சொல்லணும்என்று வடிவுக்கரசி வைக்கும் ஒப்பாரியையும் வைத்து, விபரம் அறிந்த பிறகு என் பழைய நினைவுகளை மீட்டேன். சிவாஜி ராதாவோடு சேர்ந்து ஆற்றில் மீன் பிடிப்பதும் அதைக் கொண்டு வந்து சமைத்து ராதா சிவாஜியை சாப்பிட அழைப்பதும் வேண்டாம் வேண்டாம் என்று பிகு பண்ணிக்கொண்டே பின்னால் நடிகர் திலகம் மீனை உருஞ்சி உருஞ்சி ருசிப்பதும் அபாரமானக் காட்சிகள்.

பாட்டியோ ரஜினியின் தீவிர ரசிகை.டாக்கீஸில் ரஜினி படம் என்றாள் மாலைக்குள் வீட்டுவேலைகளை அசமடக்கி வைத்துவிட்டு லாந்தரைக் கையில் பிடித்துக்கொண்டு டாக்கீஸூக்கு கிளம்பிவிடுவாள். லாந்தர் வெளிச்சம் போதும் அவள் அடுத்த தேசம்த்தயும் கடக்க. மணல்வெளிகளில் பதிந்துகிடக்கும் காலடிச்சுவட்டை வைத்தே இன்னார் என்று அறிந்துவிடுவாள்.செறுப்பின் எண் பார்த்து எந்த ஆள் திருடன் என்பதை ஊகிக்கும் அளவுக்கு உஷாரி. இந்த அறிவு ஊரில் சகலரும் அறிந்த்தே.ஆனாலும் மதி கூட பெற்றவர் இதில் நிபுநர் ஆகலாம்.ரஜினியின் காமெடி சென்ஸ் பாட்டியை அவருக்கு ரசிகை யாக்கியிருந்தது.வீட்டுக்கு வந்தற்கப்புறமும் காட்சிகளை சொல்லிச் சொல்லி சிரிப்பாள். தாத்தா சாகக்கூடா வயதிலேயே சாவைத் தழுவிவிட்ட்தால் ஒண்டிப் பொம்பளையாக நின்று தன் மூன்று மகள்களையும் இரண்டு மகன்களையும் கட்டிக்கரை சேர்த்த தைரிய மனுஷி பாட்டி.தாத்தா சாகும்போது என் அம்மாவுக்கு ஐந்து வயது.அவருக்கு கீழ் இரண்டும் ஆண்பிள்ளைகள். தாத்தா தனக்கென்று வைத்திருந்த தென்னந்தோப்பு ஒன்றுதான் ஜீவனத்திற்கு ஆதாரம்.அதுபோக கைத்தறியில் கோரைப்பாய் தயாரிப்பது,ஈச்சம்பாய் பின்னுவது, கீற்று முடைவது என்பன குலத் தொழிலாக இருந்தது.ஏரியில் விளையும் கோரைகளை கொண்டு வந்து கலர் சாயம் கலந்து பின் வெயிலில் காயப்போட்டு பாய் தயாரிப்பார்கள்.ஒருநாளைக்குள் ஒரு பாயை தறியில் அடித்தால் அன்று சினிமாவுக்கு அழைத்துபோவதாக பாட்டிச்சொல்லி பந்தயம் மூட்டுவாளாம்.ஆசைக்குப் பணிந்து அடித்து பிடித்து வேலைகள் நடக்குமாம்.அம்மா சொல்லிக் கேட்டவை இவை. மாமா ஆபரேட்டராக இருந்ததால் டாக்கீஸில் இலவசமாக படம் பார்க்கலாம்.ஆனாலும் அதற்கு பாட்டியின் சம்மதம் அவசியம்.ஆகவே போட்டிக்கு ஒப்புக்கொடுத்து தறி வேகத்தில் தீப்பொறித் தெரிக்குமாம்.நீரில் ஊறிய மட்டைகளைப்போல சினிமாவில் ஊறிய பிள்ளைகளாக அவர்கள் வளர்ந்திருக்கிறார்கள்.இதனால் சின்ன வயதிலேயே அம்மாவுக்கு சினிமா நடிகையாகும் கனவிருந்திருக்கிறது. அதற்கான இரண்டொரு வாய்ப்புகள் கூட வீட்டைத் தட்டியதாக என்னிடம் சொல்லி அம்மா பெருமைப்பட்டுக் கொள்வாள். இதற்காக தனியாக நடனம் கூட பழகி இருக்கிறாள்.திருமணத்திற்கு பிறகு அம்மாவின் ஆசைகள் அவள் அடிமனசோடு எருவாகிவிட்டன.மேல் மனம் உயரத்திற்குகூட அக்கனவு எழுந்துவர தெம்பில்லாமல் செத்துபோயிவிட்டது

திருமணத்திற்கு பின்னால் அம்மா விருத்தாசலத்திற்கு வந்துவிட்டாள். படம் பார்க்கும் பழக்கம் மட்டும் அவள் கூட வந்த சீதனமாய் தங்கிப்போனது. அது தழைத்து எங்களையும் பதம் பார்க்க ஆரம்பித்தது.அண்ணனும் நானும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்.அவரின் தத்துவ பாடல் வரிகளும் விஷேசமான அங்க அசைவுகள், அவர் எதிராளியை மடக்கிப்பிடிக்கும் லாவகம் எல்லாம் எங்களைக் கட்டியிழுத்தன. எம்.ஜி.ஆர் படங்களை மட்டுமே இரண்டாம் ஆட்டமாக ஸ்ரீராஜராஜேஸ்வரி டாக்கீசில் தொடர்ந்து வெளியிட ஆரம்பித்தார்கள்.அத்தனை இரண்டாம் ஆட்டத்திற்கும் ஆஜராகிவிடுவோம். இருட்டிலும் கூட்டம் பகல் காட்சியை போல திமிரும்.ஜன நெரிசல் நெக்கித்தள்ளும். விருத்தாசத்திலுள்ள பழைய டாக்கீஸ்களில் இன்றைக்கும் உயிரோடுள்ள ஒரே டாக்கீஸ் அதுதான்.

ஊரில் சந்தோஷ் குமார் பேலஸ்தான் பெரிய தியேட்டர்.அதன் உரிமையாளரின் வீடு ராஜேஸ்வரி டாக்கீஸுக்குப் பின்னால் இருக்கிறது. ஜங்ஷன் ரோட்டில் தியேட்டர் வைத்திருக்கும் உரிமையாளரின் வீடு மணிமுத்தாற்றின் மறுகறையில் இருந்தது.வீடென்றால் மாளிகை.முகவாசல் ஒரு தெருவில்லும் புறவாசல் இன்னொரு தெருவுக்குமாய் நீண்டு நிற்கும். அவரின் பேலஸிலும் இந்தப் பந்தா பவிசுகள் தென்பட்டன. வடதமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய தியேட்டர் என்ற பெயர் இதற்குண்டு.நடிகர் சிவாஜி கணேசன் விலைக்கு கேட்டும் விற்க மறுத்துவிட்டார் என்று அதன் உரிமையாளரை பற்றி ஊரில் ஜம்பமடிப்பார்கள். எனக்கு தெரிந்து எங்களூரில் தியேட்டருக்கு முன்பாக பெரிய நீருற்று வைத்த ஒரே தியேட்டர் சந்தோஷ்குமார்தான். அதற்கு பின் பெரியார் நகரில் சுரேஷ் தியேட்டர் புதியதாக முளைத்தது.அன்றைக்கு இதன் பெயர் பெரியார் நகரில்லை.பின்னால் வழக்கத்திற்கு வந்த புதிய அடையாளம் இது.சுரேஷின் உரிமையாளர் வாண்டையார் வகையேறாவை சேர்ந்தவர்.நவீன அடையாளங்களோடு கட்டப்பட்ட தியேட்டராக சுரேஷ் அன்றைக்கு விளங்கியது.இந்தத் தியேட்டருக்கு முன்னால் அழகிய இரு பெண்கள் குடத்திலிருந்து நீருற்றுவதைபோலவும் லஷ்மி தாமரை இலையில் மேல் உட்கார்ந்திருப்பதைபோலவும் இருபுறங்களிலும் யானைகள் தன் துதிக்கையினால் நீர்த் தெளிப்பதைப் போலவும் அழகான முகப்பை வடிவமைத்திருந்தார்கள்.அன்றைய நாளில் கட்டப்பட்ட அழகியவடிவமைப்பு. அதேப் போல் திரையில் படம் போடுவதற்கு முன்னதாக வண்ணவிளக்குகள் தொங்கிகொண்டே மேலேறும் திரைச்சீலையை இந்த தியேட்டரில்தான் முதன்முதலாக அறிமுகம் செய்தார்கள்.அதைக் காணவே தனிக்கூட்டம் தியேட்டருக்குள் புகுந்தது.

சந்தோஷ்குமாரில் ஒரு ரூபாய் ஐம்பது காசுவில் நான் படம் பார்த்திருக்கிறேன்.அதிகப்படியாக டிக்கெட் 2.50 காசுகள் இருந்தது.பால்கனிக்காக இந்தக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதே அளவுக்கான டிக்கெட்தான் சுரேஷிலும். சுரேஷ் தியேட்டர் ஊரைவிட்டு ஒதுக்குப்புறமாக இருந்ததினால் அன்றைக்கு அவ்வளவாக கூட்டம் போகவில்லை. தியேட்டருக்கு முன்னால் சிறைக்கூடம் இருந்தது.சில காவலர் குடியிருப்புகள் இருந்தன.மற்றபடி ஈ ஆடாது. இன்று காவல்நிலையம் இருக்கும் இடத்தில்தான் காவலர் குடியிருப்பு இருந்தது.குடியிருப்பையொட்டி பெரிய ஆலமரம் பற்றி படர்ந்து நின்றது.அதன் கீழ் ஒரு சின்ன பிள்ளையார் கோவில் இருக்கும். மற்றபடி ஒப்புக்கும் ஆள் நடமாட்டம் இருக்காது. பகலிலேயே இந்த நிலமை என்றால் ராத்திரியில் சொல்லணுமா? இப்பகுதியே மயான அமைதியில் மூழ்கும். எனக்குத் தெரிந்து சுரேஷ் தியேட்டரில் இரவுக்காட்சிகளாக பேய்ப்படங்களை திரையிடுவார்கள்.கும்மியிருட்டில் பேய்ப்படம் பார்த்து திரும்புவது அத்தனை எளிதல்ல; 13நம்பர் வீடு,மைடியர் லிசா, அதிசய மனிதன் பார்ட் ஒன்று, பார்ட் இரண்டு,வா அருகில் வா, உருவம் இவை எல்லாம் இங்கேதான் திரையிடப்பட்டன. அதிசயமனிதனை தனியாக உட்கார்ந்து பார்க்கும் தைரியசாலிக்கு பரிசெல்லாம்கூட அறிவித்த ஞாபகம். இந்தப் படங்களில் ஒன்றைக்கூட விடாமல் நாங்கள் பார்த்திருக்கிறோம்.அவ்வளவும் மையிருட்டில். வீடு திரும்பும்போது பயத்தைத் தணிக்க சினிமா பாட்டை பாடிக்கொண்டே வீட்டை வந்து அடைவோம்.

சுரேஷ் தியேட்டரில் பல படங்கள் 100வது நாளை தொட்டன..அம்மன் கோவில் கிழக்காலே அவ்வாறு நூறு நாள் ஓடியப்படம். நூறாவது நாளைக்கு நடிகர் தவக்களை உள்ளிட்ட சிலர் தியேட்டருக்கு வந்தார்கள்.எங்க ஊர் பாட்டுக்காரன், உதயகீதம்,ஆண்பாவம்,ஒரு கைதியின் டைரி, காக்கிச்சட்டை, சிந்துபைரவி, கொடிபறக்குது, வைக்காசி பொறந்தாச்சு,இது நம்பாளு போன்ற படங்கள் ரகளைக் கட்டியப் படங்கள். இது நம்மாளு படம் ரிலிஸான அன்று முட்டி மோதி டிக்கெட் கவுண்டரில் உள்ளே நுழைந்தால் எனக்கு மட்டுதான் டிக்கெட் கிடைத்தது. மூன்று பேராகப் போயிருந்தோம்.ஒருவர் மட்டும் போக மனமில்லாமல் டிக்கெட்டை வெளியில் விற்றுவிட்டு வீடு திரும்பினோம்.மறுநாள் இரண்டு டிக்கெட்.மூன்றாம் நாள் டிக்கெட்டே இல்லை.இப்படி கஜினி மாதிரி படையேடுத்து நான்காம் நாள் படத்தை பார்த்தோம். ஆனாலும் சந்தோஷமாக பார்க்க கொடுப்பினை இல்லை. டிக்கெட் கவுண்டரின் சுவற்றில் மோதி என் தம்பிக்கு முன் மணடை உடைந்து போனது.பலநாள் போராட்டத்திற்கு பிறகு கிடைத்த அரிய வாய்ப்பை நழுவவிட மனமில்லாமல் தம்பியின் தலையில் வழியும் ரத்ததில் என் கையைவைத்து அழுத்திக்கொண்டே முடியும் வரை படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வந்தால் அவன் முகமெல்லாம் வலியால் ஊதிப்போய்விட்டது. பக்கத்திலிருந்தவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நான் கேட்கவில்லை.படம்தான் பிரதானம் என்று உட்கார்ந்துவிட்டேன்.

ஒரு நாள் சுரேஷ் தியேட்டரில் இரவுக்காட்சியின் போது ஒரு பெண் கழிப்பிடதிற்கு வைத்து கொலை செய்ப்பட்டுவிட்டதாக ஒரு விவரீதச் செய்தி ஊரெல்லாம் பரவியது. தியேட்டரில் காவலர்கள் உடனே கொலைக்காரியைக் கண்டுபிடித்துவிட்டதாக மக்கள் பேசிக்கொண்டார்கள். இந்தச் சம்பவம் நடந்ததை அறிந்தவுடன் தியேட்டரின் வாசலை மூடிவிட்டு பரிசோதித்ததில் கொலைக்காரி கத்தியை கொண்டையில் முடிந்து வைத்திருந்ததாகவும் நகைகளை ஜாக்கெட்டில் மறைத்து வைத்திருந்ததாக பேசிக்கொண்டார்கள்.இதற்கு பிறகு இரவுக்காட்சிக்கு கூட்டம் குறைய ஆரம்பித்தது. காலப்போக்கில் புதிய தியேட்டர்கள் நகரின் மையப்பகுதியான பேருந்துநிலையத்தையொட்டி முளைக்க ஆரம்பித்ததால் சுரேஷ் தன் ஆடம்பரத்தை எளிதாக இழந்தது.இரவுக்காட்சிகளில் ஈ ஓட ஆரம்பித்தது. இதை உணர்ந்த நிர்வாகம் இரவுக்காட்சி பார்த்துவிட்டு போகும் மக்களுக்கு இசவசமாக குதிரை வண்டிகளை அமர்த்திக்கொடுத்தது. தியேட்டருக்கு வரும் கூட்டத்திற்கும் நிற்கும் குதிரை வண்டியின் எண்ணிக்கைக்கும் சற்றும் சம்பந்தமிராது. பத்து ஆட்கள் குதிரை வண்டியில் ஏறினால் 100பேர் வண்டியில்லாமல் பொடிநடை கட்டுவார்கள். இந்தக் காலத்தில் எல்லாம் ஆட்டோக்கள் அவ்வளவாக ஊரில் இல்லை. கடைவீதியிலுள்ள பாலக்கரையில் குதிரைவண்டிகளுக்கென்று தனி ஸ்டாண்டே இருந்தது. இவ்வண்டிகளே அன்றைய ஜனங்களுக்கு சவாரி வாகனம்.

(தொடரும்)

படங்கள் நன்றி:கோவை ஓவியர் ஜீவா