Sunday, January 30, 2011

புத்தகங்களின் வாசனை




இந்த
வருட புத்தகச் சந்தைக்கு முதல் நாளே போயிருந்தேன்.காரணம்,அம்பைக்கு ஒரு லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்ததுதான். பாம்பன்விளையில் போன வருடம் அவரை வந்தித்ததோடு சரி.அதற்கப்புறம் நடக்க விருந்த சந்திப்பு. பரிசளிப்பு விழாவுக்கு வருகிறேன் என்று சொல்லாமல் குறிப்பிட்ட தேதியில் சென்னை வருகிறேன் என்று மட்டும் அம்பை மெயில் அனுப்பி இருந்தார். இரண்டு நாட்கள் இ-மெயில் வசதியில்லாத ஊரில் நான் இருந்ததால் உடனே அவருக்கு பதில் அனுப்ப முடியவில்லை. நான் ஏதோ அவர் மீது மன சங்கடத்தில் இருப்பதாக எடுத்துக்கொண்டு மறு மெயிலும் அனுப்பிவிட்டார். சென்னை திரும்பிய கையோடு இரு மெயிலையும் பார்த்துவிட்டு அவரை கைபேசியில் அழைத்தேன்.இந்து நாளிதழில் கு.ப.சேது அம்மாள் பற்றி வெளிவந்திருந்த கட்டுரையை படித்துவிட்டு அவரை சந்திக்க வேண்டும் அவரின் முகவரியை பிடிக்க முடியுமா என்றார்.நான் சென்னை வந்து அழையுங்கள் மற்றதை பேசிக்கொள்ளலாம் என்றேன்.சென்னை வந்ததும் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது.மாலை புத்தகக் கண்காட்சியில் சந்திக்கிறேன் என்றேன்.சொன்னதைபோலவே மாலை கண்காட்சியில் நடக்க இருந்த பரிசளிப்பு விழாவுக்கும் போனேன். அம்பை வழக்கத்திற்கு ஒவ்வாத தோரணையோடு மேடையில் அமர்ந்திருந்தார். சம்பந்தேமே இல்லாமல் பலர் ஏதேதோ பேசிக் கொண்டு போனார்கள்.சகிக்கவில்லை, கிளம்பிவிட்டேன்.எனக்கே இப்படி என்றால் அம்பையின் மனநிலை நிச்சயம் மோசமடைந்திருக்கும். மறுநாள் சந்தித்தபோது “நேற்று வந்தேன்.நீங்கள் மேடையில் இருந்ததால் பார்த்து பேச முடியவில்லை.போய்விட்டேன்”என்றேன்.கலகலவென அவரது கரகர குரலில் சிரித்தார்.”ஒருத்தருக்கும் என்ன தெரியுல.என்னை லஷ்மின்னு நினைச்சுக்கிட்டு சிலர் பேசிக்கிட்டு இருந்தாங்க.நிகழ்ச்சி சுத்தமோசம்” என்றதாக ஞாபகம். ஒரு லட்சம் பரிசு தொகை அம்பைக்கு பல நல்ல வழிக்களுக்கு உதவக்கூடும்.அவர் நடத்தி வரும் ஸ்பேரோவுக்கு இத்தொகையை அவர் பயன்படுத்தினாலும் பயன்படுத்துவார்.ஆகவே அவருக்கு பரிசு கிடைத்ததில் எனக்கு உள்ளூர மகிழ்ச்சி.கருணாநிதி, பபாசிக்குவழங்கிய ஒருகோடி ரூபாய் முரசொலி அறக்கட்டளை பரிசைப் போல குப்பன் சுப்பனுக்குதான் போய் சேரப்போகிறது என்று நான் பயந்து கொண்டிருந்த சமயத்தில் அம்பையை போல ந.முத்துசாமியை போல நல்ல ஆளுமைகளுக்கு போய் சேர்கிறதென்றால் யார்தான் அகமகிழமாட்டார்கள்?

இந்த வருட கண்காட்சியில் அதிக நேரத்தை காலச்சுவடு அரங்கிலேயே கழித்திருக்கிறேன்.அதற்கு சின்ன காரணமும் உண்டு. ஐந்து வருடங்களுக்கு பிறகு எனது கண்ணாடிக்கிணறு கவிதை தொகுப்பு காலச்சுவடு வெளியீடாக வந்திருப்பது.அதோடு அரட்டை அடிக்க அங்கேதான் அதிகம் தெரிந்த முகங்கள் உள்ளன என்பது.காலச்சுவடு ஸ்டாலில் பல நல்ல உள்ளங்களை சந்திக்க முடிந்தது. பல வருடங்களுக்கு முன்னால் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த விமலாத்தித மாமல்லனை முதன் முறையாக சந்தித்தேன்.சுகுமாரன் அறிமுகம் செய்து வைத்தார். எடுத்த எடுப்பிலேயே “நீ என்னோட பல வருட திட்டத்தை திருடிட்டீயேப்பா?”என்றார்.எனக்கு தலைக்கால் புரியவில்லை.இப்போதுதான் அறிமுகமாகிறோம் அதற்குள் திருட்டுப்பழியா? என்னத்த திருடினோம்ன்னு தெரியலையே? என்று மூளையைக் குழப்பினேன்.அப்புறம்தான் அவரிடம் உள்ள அதே சுபாவம் என்னிடமும் இருப்பதாகவும் அவர் சொன்னார். அவர் செய்ய நினைத்திருந்த ஒன்றை நான் பகடி என்ற பெயரில் பண்ணிக்கொண்டு திரிவதாக தெரிவித்தார். “அது எப்படி உங்களுக்கு தெரியும்”என்றேன்.உபயம்; சுகுமாரன் என்றார். பார்த்த மாத்திரத்திலேயே அவரை பிடித்துப்போனது.இலக்கியவாதிகள் அதிகம் நகைச்சுவை ரசனை இல்லாதவர்கள்.இவர் அரங்கம் அதிர சிரிக்கிறார்.எடுத்த எடுப்பிலேயே மெட்ராஸ் பாஷை ”அசைச் சொற்களை”பேசுகிறார்.இவை எல்லாம் ஒரு இயல்புத் தன்மையை எனக்கு நல்கின. இந்த தமாஷ் பேர்வழிக்கு சுகுமாரன் நெருங்கிய ஸ்நேகிதராம்.என்னால் நம்பவே முடியவில்லை.மாமல்லனோடு இருப்பது விசு படம் பார்ப்பது மாதிரி.சுகுமாரனோடு இருப்பது மணிரத்னம் படம் பார்ப்பது மாதிரி.மில்லிமீட்டர் அளவில் வசனம் பேசுவார் சுகுமாரன். தண்னீர் லாரி போல தரதரவென்று சிரிப்பைக் கொட்டுகிறார் மாமல்லன். இருவரும் எதிரும் புதிருமானவர்கள்.ஆனாலும் நண்பர்கள்.அந்த நாகரீகம் எல்லாம் இன்றைக்கு இல்லை.ஒத்த அலைவரிசையோடு உள்ளவர்களே கீரியும் பாம்புமாக மாறி சண்டைப்போடும் காலமிது.இந்த எதிரும் புதிரும் நட்பெல்லாம் விஷப்பரீட்சை என்பது இன்றைய இளைய தலைமுறையின் அசைக்க முடியாத அபிப்ராயம். எதோடும் மல்லுக்கட்டுவதை அவர்கள் விரும்புவதில்லை. ஆனால் போன தலைமுறை மல்லுக்கட்டுவதே அலாதி என வாழ்க்கையை கழித்தவர்கள்.எதோடும் ஒரு சண்டை உண்டு அவர்களுக்கு.கூடவே கொஞ்சம் சமாதானம்.ஆனால் இப்போதுள்ள இளசுகள் எதையும் முழுமையா எடுத்துக்கொள்ளவதில் ஆர்வமுள்ளவர்கள். எவற்றையும் எந்த இன்னலும் இல்லாமல் அப்படியே முழுதாய் அனுபவிக்க வேண்டும்.

சந்தையில் பல நண்பர்களை சந்தித்தேன்.இயக்குனர் மணிரத்னத்தை அழைத்துக்கொண்டு ஜெயமோகன் சுற்றிக்கொண்டிருந்தார்.ஒவ்வொரு கடையாக அவரை அழைத்துக்கொண்டு போய் பல புத்தகங்களை அறிமுகப்படுத்தினார். ஜெயமோகன் எடுத்துக்காட்டும் ஒவ்வொரு புத்தகத்தையும் மணிரத்னம் கையில்கூட தொடவில்லை.தூரப்பார்வை இட்டதோடு திரும்பிக்கொண்டார். யாருக்கு தெரியும் அவரது குறிக்கோள் வேறாக இருக்கலாம்.அது சிக்கும் வரை அவர் காத்துக்கொண்டிருந்திருக்கலாம். ஜெயமோகன் என்றதும் ஒரு தகவல் ஞாபகத்திற்கு வருகிறது. சினிமா உலகில் ஜெ.மோவுக்கு ஜெய் சார் என்று ஒரு செல்லப்பெயர் உண்டாம்.ஒரு வெளியீட்டுவிழாவில் வசந்தபாலன் குறிப்பிட்டுக்கூறினார்.எஸ்.ரா.வுக்கு என்ன பெயரோ தெரியவில்லை? சுய அடையாளத்தை அழித்து ரசிப்பதில் சினிமாகாரர்களிக்கு அப்படியொரு குரூர குஷி. ஜெயமோகனை பார்த்துவிட்டு நகர்ந்த போது ஓர் உயர் அதிகாரியின் அழகியலோடு நாஞ்சில் நாடன் என்னை உரசும் தூரத்தில் கடந்துபோனார்.சாஹித்ய அகாதெமி சந்தோஷம் அவர் முகத்தில் தென்பட்டது.அவர் கையை பிடித்து என் வாழ்த்தை தெரிவித்தேன்.அகாதெமி விருது மீது ஒரு புண்ணாக்கும் எனக்கு மரியாதையில்லை.ஆனால் நாஞ்சில் மீதும் அவரின் எழுத்தின் மீதும் அளவில்லா மரியாதையை உள்ளதால் இந்தப் பாராட்டு என்றேன்.இந்தப் புத்தக்க் காட்சியில் அவரது ’சூடியபூ சூடற்க’ சிறுகதை தொகுப்பு 2900ம் பிரதிகளுக்கு மேல் விற்றிருக்கிறது என்றார்.நல்ல தகவல் என்றேன்.மாலை த.மு.எ.க.ச.அவருக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணியிருப்பதாகவும் அவசியம் வாருங்கள் என்றும் அழைப்புவிடுத்தார்.கட்டாயம் வருகிறேன் என்றேன்.எந்தக் காலத்தில் நாம் வாக்குறுதியை காப்பாற்றி இருக்கிறோம் என்று உள்ளபடியே சிரித்துக்கொண்டேன்.

சொந்த ஊரிலிருந்து கண்காட்சிக்காக வந்திருந்த நண்பர் கே.என்.செந்தில் ஓர் இரவு மட்டும் என்னோடு வீட்டில் தங்கினார். இரண்டு நாள் கண்காட்சி அவரோடு கழிந்தது.செந்தில்,நான்,தேவிபாரதி,நெய்தல் கிருஷ்ணன் அரங்கத்திற்கு வெளியில் நின்று புகைத்துக் கொண்டிருந்தோம்.அப்போது பவா செல்லத்துரை வந்து எங்களோடு கலந்து நின்றார். எப்போது சந்தித்தாலும் சொல்வதற்கு பவாவிடம் புதுசுபுதுசாக கதைகள் இருக்கும்.தனது டூரிங் டாக்கீஸ் அனுபவம் பற்றி லஷ்மண பெருமாள் தமிழ்ஸ்டூடியோ டாட் காமில் பிரமாதமாக எழுதியிருப்பதாகவும் அதில் தான் ரசித்த பகுதிகள் பற்றியும் பேசிக்கொண்டேபோனார். வழக்கம்போல பவாவின் பேச்சில் வரிக்கு வரி பிரமாதம் பிரமாதம் வந்துகொண்டே இருந்தது. இடையில் சம்பந்தமே இல்லாமல் புகுந்த சில வாசகர்கள் பவாவிடம் பேச்சுக் கொடுத்தார்கள்.அவரை விஜய் டி.வி.யின் நீயா?நானாவில் பார்த்ததாகவும் பவா பிரமாதமாக பேசியதாகவும் அவர்கள் சொன்னார்கள்.இப்போது பவாவிடமிருந்த பிரமாதம் அந்த வாசகர்களின் பேச்சில் இடம் மாறி இருந்தது. எங்களையும் சமாளித்துக்கொண்டு அவர்களையும் சமாளித்துக்கொண்டு கொஞ்ச நேரம் படாதபாடுபட்டார் பவா.மேலும் அவரை சங்கோஜத்தில் நெளிய வைக்க வேண்டாமே என்று நாங்கள் கால்களை கடத்த ஆரம்பித்தோம்.
மறுநாள் ஜமா அரங்கின் உள்ளேவே நடந்தது.நடக்கின்ற வழியை நாங்கள் மறித்து நின்றதுகூட தெரியாமல் ஒருவருக்கொருவர் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தோம்.இன்றும் பவா உள்ளேபுகுந்தார். தனது ஸ்டாலுக்கு ஒரு எழுபது வயதான மூதாட்டி வந்ததாகவும் சமகால எழுத்தாளர்களின் பல நூல்களை வாங்கியதாகவும் சொன்னார்.ஆச்சர்யம் என்னவென்றால் அம்மூதாட்டி கண்காட்சியில் புத்தகங்களுக்கு செலவு செய்வதற்காக அவரது வீட்டில் ஒருலட்சம் ரூபாய் கொடுத்துவிடுவதாகவும் சொன்னார்.இவரைப் போன்றவர்களால்தான் கண்காட்சி கண்ணீர் வடிக்காமல் தப்பிக்கிறது என்றேன். அம்மூதாடியுடன் வந்தவர் கத்தைக் கத்தையாக பணத்தை கடக்குக்கடை பட்டுவாடா பண்ணுவதை பார்த்து ஆடிபோய்விட்டேன் என்றார்.ஆட்டம் அவருக்கு மட்டுமல்ல;கேள்விப்பட்ட எங்களுக்கும்தான்.


பபாசி பல அட்டகாசங்களை அரங்கேற்றுகிறது.இதையெல்லாம் கேட்க ஆளே இல்லை என்றார் கண்ணன்.காலச்சுவடு அரங்கில் எல்.சி.டி. வைத்திருந்தார்களாம்.கரண்ட் அதிகமாக செலவாகிறது என்று தூக்கச்சொல்லிவிட்டார்கள்.அப்புறம் அரங்கில் சிறு மைக்கில் புத்தக வெளியீடு நடத்தினோம்.அதையும் நிறுத்த சொல்லிவிட்டார்கள்.கடையில் எழுத்தாளர்கள் வந்து கையெப்பம் இடுகிறார்கள் என்று பொதுஅறிவிப்பு பண்ண சொன்னோம் மாட்டேன் என மறுத்துவிட்டார்கள். காரணம் கேட்டால் எல்லாரும் செய்யத் தொடங்கிவிடுவார்கள் என்கிறார்களாம். செய்தால் என்ன? அதற்கென்று ஒரு கட்டணத்தை நிர்ணயித்துக்கொள்ள வேண்டியதுதானே என்றார்.ஜெர்மன் புத்தக் கண்காட்சியில் எழுத்தாளர்கள் சரக்கு அடிக்கவே தனியிடம் உண்டு.இங்கே நாம் அவ்வளவு தூரம் போக வேண்டாம்.இதுபோல சிறு காரியங்களுக்கு இடம் கொடுத்தால் என்ன என்றார்.எனக்கு நியாயமாகப்பட்டது. பபாசி பதிப்பகத்திடமிருந்து பணத்தை கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருக்கிறதேயொழிய ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்களை நோக்கி முன்னேறுவதற்கான அறிகுறிகளே தென்படவில்லை. இந்த வருடம் அரங்கத்திற்குள் அடித்து வைத்திருந்த நடைமேடை பல இடங்களில் பரதநாட்டியம் ஆடிக்கொண்டுயிருந்தது.அசந்தால் ஆளை உள்ளே காவு வாங்கிவிடும்போல.அவ்வளவு கரடுமுரடுகள். இதையெல்லாம் நுகர்வோர் புகார் செய்ய எங்கே போவதோ தெரியவில்லை.பத்து டிக்கெட் கவுண்டர்கள் இருந்தும் எல்லாவற்றையும் மூடி வைத்துவிட்டு ஓரே கவுண்டரில் டிக்கெட் கொடுத்தார்கள்.கூட்டம் ஓரே இட்த்தில் முண்டியடித்து நின்றது.பார்க்கவே எனக்குப் பத்திக்கொண்டு வந்தது.

அப்புறம் இன்னொரு விஷயம்.பட்டிமன்றம் என்றபெயரில் பலரின் கழுத்தில் கத்திப்போட்டுக் கொண்டிருந்தார்கள் பல பேச்சாளர்கள்.அப்பதுல் காதர் ஏனோ உட்கார்ந்த இடத்திலேயே ஆசன வாய் அடைக்க கத்திக்கொண்டே போனார்.அவ்வளவு கிட்டத்தில் மைக் இருந்தும் இவர் ஏன் மூச்சடைக்க கத்துகிறார் என்பது புரியவில்லை. கேட்டதிலேயே சுகி சிவத்தின் பேச்சு கொஞ்சம் சராசரியானது. அண்மையில் வழங்கப்பட்ட நீதிமன்றங்களின் தீர்ப்பை மறைமுகமாக எள்ளல் செய்தார் அவர். கன்டம்ட் ஆஃப் கோர்ட் பற்றி ஒரு பிடிபிடித்தார். நீதி மன்றங்களை விமர்சிக்கும் வழக்கை நீதி மன்றங்களே விசாரிப்பது முறையல்ல;ஆகவே அதற்கென தனி ஆணயத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டியச் சூழலில் இன்றைக்கு நாம் இருக்கிறோம் என்றார். சமகால ப்ரக்ஞையோடு பேசிய ஒரே பட்டிமன்ற பேச்சாளர் அவர் மட்டும்தான்.பட்டிமன்றம் என்றால் சுகி கோபித்துக்கொள்ளலாம்.வலிந்து பட்டிமண்டபம் என்றே அவர் மேடையில் குறிப்பிட்டுகொண்டு போனார்.

கறையான்கள் பசிக்காக புத்தகத்தை தின்கின்றன.நானும் பசிக்காகதான் புத்தகங்களை படிக்கிறேன். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பரிணாம வளர்ச்சியின் மிச்சசொச்சங்கள் உண்டுதானே. நான் ஒரு கறையானாக உருமாறும் மாற்றத்தை இந்த சந்தைக்குள் நின்றுதான் உணரமுடிகிறது.காஃப்கா கரப்பான்பூச்சியானதைபோல. ஆதி தன்மையின் வேரை உணர்ந்தவர்கள் மறுபடியும் தனது பிறப்பிடத்திற்கு திரும்புகிறார்கள். நானும் என் அனுபூதியான பிறப்பிடத்தை புத்தகங்கள் மூலம் அடைகிறேன். முதலில் கறையான் போன்ற ஓர் உயிரிக்கு உணவாக இருந்தது படிப்படியாக அறிவாக மாறும் விந்தைதான் வாசிப்பு.ஒரு விதத்தில் வயிற்றிலிருந்து தலைக்குத் திரும்புதல்.எப்போதும் வாசிப்பின் வாசல்கள் ஒன்றுபோலவே உள்ளன. இரையை வாயால் கவ்வும் உயிரினத்தைப்போல என் உணவை நான் மூளையால் கவ்வ ஆரம்பித்திருக்கிறேன். வயிற்றிற்கு இருக்கும் உணவுக்குழலைப்போல மூளைக்கும் உணவுக்குழல் உண்டு என்ற தகவலே பாதி மனிதர்களூக்கு தெரிவதில்லை.அவனது அன்றாட பிரச்சனையோடு அவனது ஆயுள் முடிந்துபோவது எவ்வளவு பெரிய கொடுமை. வயிற்றிலிருந்து விடுபட்டு மூளைக்குப்போய் சேராத சமூகத்திற்கு எந்தக் காலத்திலும் விடுதலை இல்லை.உடம்பிற்கு தேவையான கலோரி பற்றியே இந்த நூற்றாண்டில்தான் தமிழன் யோசிக்க ஆரம்பித்திருக்கிறான்.ஊணுடம்பு ஆலயம் ஆவது எப்போதோ? அறிவுக்கான கலோரி பற்றி விழிப்புணர்வே இல்லாத ஒரு சமூகத்தில் எழுத்தாளன் கொண்டாடப்பட வேண்டும் என நினைப்பது கூட மடத்தனம் இல்லையா என பலர் வாதிடலாம்.ஆனால் ஆசானை தெய்வத்திற்கு பக்கத்தில் வைத்தவர்கள் நாம்.அறிவாளனை மறுகடவுளாக தொழுதிட்டவர்கள் நாம் . உலகத்தில் எந்த ஒரு கவிஞனும் இறைவனுக்கு பக்கத்தில் இன்னொரு நாற்காலி போடப்பட்டிருப்பதாக சான்றுகள் இல்லை.இங்கே அப்பரும் திருநாவுக்கரசரும் இறைவனுக்கு இணையானவர்கள்.இந்தக் குலம்தான் இன்று சகதியில் உழல்கிறது.மடமையில் சிக்குண்டு கிடக்கிறது.எவ்வளவு வேதனைக் கொள்ளத்தக்க விஷயம் இது.




கண்காட்சியில் நான் கவனித்த சில விஷயங்கள் எனக்கு விநோதமாகப்பட்டன. பெரிய எழுத்தாளன் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் யாரும் ஒப்புக்கு ஒரு புத்தகத்தைக்கூட வாங்காமல் வெறு கையை வீசிக்கொண்டு திடலில் திரிந்தது. மூட்டை மூட்டையாய் நூல்களை அள்ளிச் சுமந்து போனவர்கள் வாசக மனநிலையிலேயோடே பவ்யமாக நின்று எழுத்தாளர்களிடம் பேசியது. மேட்டுக்குடி தோரணையில் இருந்த சிலர் ஸ்டாலுக்கு வெளியிலேயே நின்றுகொண்டு தாவித்தாவி புத்தகங்களை தொட்டு பார்த்துவிட்டு ஒன்றையும் வாங்காமல் கேண்டீனில் உள்ளே புகுந்தது.இவையெல்லாம் ஒன்றுக்கொன்று முரணாகவே பட்டவிஷயங்கள்.இதை சொல்வதால் கண்காட்சியிலிருந்து நான் மூட்டைக்கணக்கில் புத்தகங்களை வாங்கியிருப்பேன் என நீங்கள் நினைத்துவிட வேண்டாம்.அப்படியொன்றும் சந்தையில் தேடிப்பிடித்து கட்டுக்கட்டாக புத்தகங்களை வாங்கும் ரகமல்ல நான்;அச்சகத்திலிருந்து சூடு குறையாமல் கொண்டு வந்து அடுக்கப்படும் சில புத்தகங்களை புரட்டிப்பார்க்க மட்டுமே பிரியப்படுபவன். அதன் அட்டை, வடிவமைப்பைக் கண்டு மெய்ச் சிலீர்ப்பதோடு சரி, என் ஆசைகள் அடங்கிவிடும். அடுத்த நாளும் அட்டைகளை மட்டுமே ரசிக்க கிளம்பிவிடுவேன். அச்சு மையின் வாசனையை பிடிக்க மறுநாளும் தவறாமல் கண்காட்சிக்கு வந்துவிடுவேன். இதை வைத்து நான் புத்தகங்களே வாங்காத ஆள் என்ற முடிவுக்கு நீங்கள் வந்துவிடக் கூடாது. அதில் உண்மையுமில்லை.

ஒவ்வொரு வருட சந்தைக்கும் அசுரகதியில் தயாராகும் பல புத்தகங்கள் தரத்தில்,கருத்தில்,மொழிபெயர்ப்பில் எல்லாம் சுத்தமானவை என உறுதிப்பட்ட பின்புதான் புத்தகங்களை வீட்டுக்குச் சுமக்க தீர்மானிப்பேன். அதற்குள் சந்தையே முடிந்துவிடலாம் இல்லையா?ஆம், முடிந்துவிடும்தான்.தன் இறையை குறி பார்த்து தாக்கி விட்டு அது குறிப்பிட்ட தூரம் போய் சாக்கும் வரை காத்திருக்கும் பாலைவன சைட் வின்ட்டர் பம்பை போல நானும் எனக்காக புத்தகங்களை குறிபார்த்து குறித்திக்கொண்டு பின் புத்தகக் கடைகளுக்குப் போய் வாங்கிக் கொள்வேன். அப்போ எனக்கும் சந்தைக்கும் வியபாரத்தனமான சம்பந்தமே இல்லையா என்றால் ஏறக்குறைய இல்லை எனலாம்.அப்படியே வாங்கினாலும் 500,600ரூபாய்க்கு மேல் பட்ஜெட் தாண்டாது

சந்தையில் புத்தகங்களுக்கு பத்து சதவீதம்தான் கழிவு இல்லையா? நான் வாங்கும் கடைகளில் எனக்கு 25 சதவீதம் கழிவு.காத்திருப்பிற்கு சரியான கூலி கிடைக்கிறதில்லையா? அதற்காகதான் இந்த நிதாதம்,பொறுமை எல்லாம். இருந்தாலும் சந்தைக்கு நான் வந்துபோகும் வழக்கம் குன்றுவதில்லை. தினமும் கண்காட்சியை விட்டு திரும்பும் பத்து நாளும் நாளையும் இங்கு வரதான் வேண்டுமா என மனதில் ஒரு அலுப்புத் தோன்றவே செய்யும்.ஆனாலும் அடுத்த நாளே என்னையும் கேட்காமல் கால்கள் சந்தையை நோக்கி நடைபோட தொடங்கிவிடும். வெறுமனே நின்று புத்தகக் கடைகளை ரசிப்பதில் எனக்குள் ஏதோ சுவாரஸ்யம் உள்ளது. எனக்கு மட்டுமல்ல;என்னை போன்ற பலருக்கும் அப்படிதான்.இது ஒரு பொது மனநிலை சார்ந்த விஷயம்.கால்கள் உளைய புத்தகள் நடுவில் அலைந்து திரிவதில் ஏதோ இன்பம் இருக்கிறது. வருடம் முழுக்க வெறும் கட்டடங்களையே உரசிக்கொண்டு நடந்த கால்களுக்கும் கண்களுக்கும் இக்கண்காட்சி ஓர் ஆறுதல் நிவாரணி. உறவினர்களை விட அதி முக்கியமாகப்படும் எழுத்தாள நண்பர்களை சந்தித்து பேசிக்கொண்டிருப்பதில் உள்ளூர எனக்கு கிளர்ச்சி ஏற்படுகிறது. இதெல்லாம் சென்னைவாசியாக நான் மாறிய பிறகு உண்டான மன மாறுதல்கள். அதற்கு முன் எல்லோரையும் போல இந்தச் சந்தைதான் எனக்கும் புத்தகங்கள் வாங்கும் போக்கிடம். வியாபார நுணுக்கங்கள்,சூதுவாது அறியாத பருவம் அது.இப்போது கொஞ்சம் கற்றுக் கொண்டிருக்கிறேன்.எங்கே?எப்படி? குறைந்த தம்பிடியில் தாராளக் கொள்முதல் பண்ணலாம் என்பது உடபட.சகலமும் அத்துபடியானதாய் ஒரு நம்பிக்கை.அவை வெறும் நம்பிக்கை மட்டும்தான்.

22 comments:

MANO நாஞ்சில் மனோ said...

புத்தகம் வாசிப்பின் அருமை தெரிந்தவர் நீங்கள்.....

கடற்கரய் said...

அப்ப நீங்க

இளங்கோ கிருஷ்ணன் said...

பதிவு நன்றாக இருந்தது. உங்களை காலச்சுவடு அரங்கில் சந்தித்தது மகிழ்ச்சி நண்பா. பேசத்தான் முடியவில்லை. நான் அந்த இரவே கோவை திரும்பி விட்டேன். எல்லா அரங்குகளையும் முழுமையாக பார்க்க கூட நேரமில்லை.

உண்மைத்தமிழன் said...

அடடா.. அட்டகாசமா பின்னிருக்கண்ணே..!

வாங்கின புத்தகங்களையும் சொல்லியிருந்தா என்னைப் போன்றவர்கள் பின்பற்றி வாங்குவதற்கு வசதியா இருந்திருக்கும்..!

Unknown said...

//முதலில் கறையான் போன்ற ஓர் உயிரிக்கு உணவாக இருந்தது படிப்படியாக அறிவாக மாறும் விந்தைதான் வாசிப்பு.ஒரு விதத்தில் வயிற்றிலிருந்து தலைக்குத் திரும்புதல்.எப்போதும் வாசிப்பின் வாசல்கள் ஒன்றுபோலவே உள்ளன. இரையை வாயால் கவ்வும் உயிரினத்தைப்போல என் உணவை நான் மூளையால் கவ்வ ஆரம்பித்திருக்கிறேன். வயிற்றிற்கு இருக்கும் உணவுக்குழலைப்போல மூளைக்கும் உணவுக்குழல் உண்டு என்ற தகவலே பாதி மனிதர்களூக்கு தெரிவதில்லை.அவனது அன்றாட பிரச்சனையோடு அவனது ஆயுள் முடிந்துபோவது எவ்வளவு பெரிய கொடுமை.//
//மிக நுட்பமான பதிவு தம்பி//

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//நான் வாங்கும் கடைகளில் எனக்கு 25 சதவீதம் கழிவு.காத்திருப்பிற்கு//

அருமையான பகிர்வு. 'அந்த' கடை முகவரி கிடைக்குமா?

கடற்கரய் said...

இளங்கோ,உங்களை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி.இனி வாய்க்கும்போது மனம் விட்டு பேசுவோம்

கடற்கரய் said...

உண்மைதமிழன்,உங்களின் அதித அன்பிற்கு நன்றி

கடற்கரய் said...

சுந்தர் அண்ணா..எனக்கு பிடித்த வரிகளை சரியாக எடுத்துக்காட்டியதற்கு நன்றி

கடற்கரய் said...

கடை முகவரியை கொடுத்தால் அவர்களின் அவர்கள் பிழைப்பில் மண் விழுந்துவிடாதா எஸ்.ஏ.சரவணக்குமார்?

Prasanna Rajan said...

மிக நல்ல பதிவு கடற்கரய்...

கடற்கரய் said...

பிரசன்ன ராஜன் உங்களின் பகிர்வுக்கு நன்றி

Muthusamy Palaniappan said...

இந்த புத்தகக் கண்காட்சியில் நான் 11,000 ரூபாய்க்கு புத்தகம் வாங்கினேன் என மிகுந்த அடக்கத்துடன் சொல்லிக் கொள்கிறேன்.

இப்போ கொஞ்சம் பணமுடை :-)

zafarRahmani said...

அம்பை சேது அம்மாளை சந்தித்தார்களா இல்லையா? 
உங்கள் கவிதை நூலுக்கு என்ன விமர்சனங்கள் வந்தன? 

இளைய அப்துல்லாஹ் said...

கண்காட்சி வலம் உங்கள் பார்வையில் ஓகே.
வேறு புத்தக கடை பக்கம் சும்மாவாகிலும் போகவில்லையா கடற்கரை

butterfly Surya said...

சூப்பர்.

கடற்கரய் said...

முனுசாமி பழனியப்பன்,உங்களின் தன்னடக்கம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது..வாங்கிய புத்தகங்களை இந்த வருடத்திற்குள் நீங்கள் படித்துமுடித்திட இறையருள் கிடைக்கட்டும்.அப்போதான் பட்ஜெட் 12ஆயிரம் ஆகும்.

கடற்கரய் said...

அவரை சந்தித்த மறுநாள் இந்து ஆஃபீஸ் போகலாம் என்றேன்.அவரும் சம்பதித்தார்.அதற்கப்புறம் அவர் அதுபற்றி உதவியை என்னிடம் கேட்கவில்லை.என்ன ஆயிற்றோ தெரியவில்லை.

கண்காட்சியில் என்னுடைய கவிதை தொகுப்பு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விற்றிருந்ததாக பதிப்பகத்தார் சொன்னார்கள்.உள்ளபடி மகிழ்ந்தேன்.வம்புதும்பு இல்லாம எழுத்தும் நம்பையும் கவனிக்க ஆள் இருக்கிறார்கள் வையகத்தில் என்ற நம்பிக்கை பிறந்தது.
நல்ல விமர்சனமும் வந்தபடியுள்ளது ஜாஃபர்.

கடற்கரய் said...

அப்படி சொல்ல முடியாது மச்சான்(இளைய அப்துல்லாஹ்) எல்ல கடைகளுக்கும் போனேன்.அதை பற்றியும் எழுதினால் கட்டுரை நீண்டு போகும்.அதிலும் வாய்விட்டுச் சிரிக்க நிறைய தகவல்கள் உள்ளன.எழுதினால் வீட்டுக்கு ஆட்டோ வரவும் வாய்ப்புண்டு!

கடற்கரய் said...

சூரியா உங்களுக்கு நன்றி

ஜமாலன் said...

//சந்தையில் புத்தகங்களுக்கு பத்து சதவீதம்தான் கழிவு இல்லையா? நான் வாங்கும் கடைகளில் எனக்கு 25 சதவீதம் கழிவு.காத்திருப்பிற்கு சரியான கூலி கிடைக்கிறதில்லையா? அதற்காகதான் இந்த நிதாதம்,பொறுமை எல்லாம்.//

அடுத்தமுறை சென்னை வந்தால் ஒருநாள் முழுவதும் உங்களுடன் சென்தான் புத்தகம் வாங்கனும். 25 சதவீதம் எப்படியும் ஓருபுலடலுக்கு தேராதா? ஹா ஹா. நம்பர மாத்திடாதீங்க.. தொடர்புகொள்ள. ))) நன்றாக உள்ளது அனபவ பதிவ.

கடற்கரய் said...

நன்றி ஜமாலன்,ஃபுல் என்றால் ஃபுல்மீல்ஸ்தானே?