Thursday, October 13, 2011

ஆவணமாக்கப்பட வேண்டிய நிகழ்வு




சமகாலப் பதிவுகள் எதையும் ஆவணமாகப் பார்க்கும் நோக்கு தமிழர்களிடையே இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. நூறு இருநூறு ஆண்டுகள் எல்லாம் வரலாற்றுத் தன்மைக்கு உகந்ததல்ல எனும் மனப்பாங்கு நிறைந்தவர்கள் நாம். வழிபாட்டுத் தலங்கள்கூட இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைமிக்கவை என்று அறிந்த பிற்பாடே, தெய்வத்தைத் தொழுவதற்கு ஒருசேரக் கரங்களைத் தலைக்கு மேலாக உயர்த்துகிறோம். இது முற்றிலும் குறைபாடான மனப்பான்மையல்ல. ஹரப்பா போன்று நீண்ட பாரம்பரியம் மிக்க ஒரு குடியின் மனநிலை சார்ந்த விஷயம் இது, அவ்வளவுதான். ஆனால் எத்தனை காலத்திற்குத்தான் இப்படிச் சமகாலப் பிரக்ஞையற்றுக் கதை சொல்லித் திரியப்போகிறோம் என்பது ஒரு கேள்வி. ஒவ்வொரு நாளும் பொழுதும் ஆவணமாக மாறக்கூடும். அதைச் சமீப காலச் சான்றுகள் நமக்கு உணர்த்துகின்றன. அவற்றிலிருந்து பாடம் கற்க நாம் தவறிக்கொண்டிருக்கிறோம் என்பதை இந்த வருடப் புத்தகக்(கண்)காட்சி எனக்கு உணர்த்தியது.

முப்பத்தியிரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்துவரும் இக்கண்காட்சி பற்றி எத்தனை பதிவுகள் நம்மிடையே எழுதப்பட்டிருக்கின்றன? இதன் வளர்ச்சி குறித்து நம்முடைய ஆவண அவதானிப்பு என்ன? முப்பத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் புத்தகங்களை ஓரிடத்தில் வெறுமனே கொட்டிக் குவித்து அதைக் காண வாருங்கள் என அழைத்தபோது தமிழ் மக்களின் மனநிலை, எதிர்வினை என்னவாக இருந்திருக்கும் என்பதை ஊகிக்க முடியாமல் தவிக்கவே நேர்கிறது. பபாசியின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டிப் பதிப்பகங்களின் வரலாற்றைக் குறிக்கும் நூல் ஒன்று வெளியிடப்பட்டதாக அறிந்தேன். ஆனால் அதன் பிரதி இன்று பார்க்கவும் கிடைக்கவில்லை. இதைச் செய்ய வேண்டிய பபாசி பதிப்பகங்களின் முகவரியை அச்சிட்டு அதை நூறு ரூபாய்க்கு வாங்குங்கள் என்று சொல்லி ஒலிபெருக்கியில் அழைத்துக்கொண்டிருக்கிறது.

சமீபத்தில் பீட்டர் மேனுவல்லின் காசட் கல்ச்சர் என்னும் புத்தகத்தைப் பார்த்தேன். அதில் இந்திய அளவில் வாய்மொழிப் பாடல்கள் ஒலிநாடா வடிவில் மாற்றப்பட்டு அது ஒலிக்கும்போது இந்தியன் சைக்கிஎன்பது எப்படிச் செயல்படுகிறது என ஆராய்ந்து எழுதியிருந்தார் அவர். அதே போன்று பவுல் டி.கிரீனின் என்பவர் தமிழ் ஒலிநாடாக் கலாச்சாரத்தைப் பற்றித் தனி நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் தமிழ் சைக்கிஎப்படிச் செயல்படுகிறது என அலசி ஆராய்ந்திருக்கிறார். எங்கோ ஒரு கலாச்சாரத்தில் பிறந்து கீழை நாகரிகத்தை அறிந்துகொள்வதில் அத்தனை ஆர்வம் இவர்களுக்கு எப்படிப் பிறக்கிறதென்றே புரியவில்லை. ஒருவிதத்தில் இதைப் புவிசார் காலனிய வாதம் என்று சிலர் புறந்தள்ளினாலும் அவற்றின் துணை கொண்டுதான் ஒவ்வொரு தமிழ் ஆய்வாளனும் தன்னுடைய ஆய்வை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

எரிக் மில்லர் என்னும் இன்னொரு மேலைநாட்டு ஆய்வாளர் சமகாலச் சிற்றிலக்கியவாதிகளுக்கு நன்கு பரிச்சயப்பட்டவர். அவர் சிலப்பதிகாரத்தைப் படித்துவிட்டுக் கண்ணகியின் இடப்பெயர்வில் வரும் வழியை நேரடியாகவே பார்க்கப் புறப்பட்டார் என அறிந்தபோது எனக்குச் சற்று நடுக்கம் உண்டானதை நான் இங்கே சொல்ல வேண்டும்.

பட்டாங்கில் யானும், ஓர், பத்தினியேம் ஆகில்,

ஒட்டேன், அரசோடு ஒழிப்பேன்; மதுரையையும்! என்

பட்டிமையும் காண்குறுவாய், நீ

எனக் கண்ணகி உரைப்பது வெறும் செய்யுள் மட்டுமே. சிலப்பதிகாரத்தை வெறும் காதை வடிவமாகவே வாசித்துப் பழக்கப்பட்ட நம் பொதுப்புத்திக்கு இந்தப் பயண யோசனை உரைக்காமல் போவது ஏனோ. இப்படிக் கால நகர்வின் நெடுகப்பதியப்படாமல் விட்ட வெற்றிடத்தில் சிக்கலுற்றிருக்கிறது நம்முடைய வரலாறு. பலவகைகளில் வரலாறு என்பது கேள்விகளில் தொடங்கிக் கேள்விகளிலேயே முடிவுறுகிறது. அது எப்போதும் முற்றுப்பெறக் கூடியதல்ல; மாறாக ஒரு தொடர் செயல்பாடு.

வரலாறு என்பது எல்லாவற்றுக்கும் அப்பால் ஒரு விவாதம்; வேறுபட்ட வரலாற்றாசிரியர்களுக்கு இடையேயான ஒரு விவாதம்; கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான விவாதம்; உண்மையில் நிகழ்ந்துவிட்டதற்கும் அடுத்து நடக்க இருப்பதற்கும் இடையில் உள்ள ஒரு விவாதம். விவாதங்கள் முக்கியமானவை; அவை மாற்றங்களுக்கான சாத்தியங்களை உருவாக்குகின்றனஎன்கிறார் வரலாற்று விமர்சகர் ஜான் எச். அர்னால்டு.

நம்மிடையே சரித்திர ஆசிரியர்கள் வளர்ந்த அளவிற்குப் பெண்ணிய வரலாற்றாசிரியர்கள், புவியியல் வரலாற்றாசிரியர்கள், அறிவியல் வரலாற்றாசிரியர்கள், சமூகவியல் வரலாற்றாசிரியர்கள், அரசியல் வரலாற்றாசிரியர்கள் எனக் கிளைத்து இத்துறை வளரவில்லை. ஒரு துறை சார்ந்த ஆசிரியர்கள் மற்ற துறை பற்றி எதிர்மறை உணர்வையே வெளிப்படுத்துகிறார்கள். வரலாற்றில் ஆர்வத்தோடு இயங்கும் ஓர் ஆசிரியர் தத்துவத்தை ஜென்மப் பகையாகக் கருதும் போக்கு நம்மவர்களுக்கே சொந்தமானது. மேலைநாடுகளில் ஒரு துறையோடு மற்ற துறையாளர்கள் விவாதித்து, பொருள் கொண்டு அவற்றை எழுதி வெளியிடுகிறார்கள். அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சம் தத்துவவியலாளர்கள் அகாடமி அளவில் பணிபுரிகிறார்கள் என்னும் தகவல் நம்மைச் சலனப்படுத்துவதே இல்லை. சென்னைப் பல்கலையில் தத்துவத் துறையே மூடப்பட்டுவிட்ட செய்தி எத்தனை பேரைச் சுடக்கூடியதாக இருந்திருக்கும்.

இதையெல்லாம் முன்வைத்துப் புத்தகக் காட்சி பற்றி அங்கே வரும் நண்பர்களிடம் புலம்பிக்கொண்டிருந்தேன். வழக்கமான புலம்பல்தான் என ஒதுக்கியவர்கள் பலர். என்னுடைய ஆதங்கத்தைப் புரிந்துகொண்டு கைகோத்தவர்கள் சிலர். உடனே தாமதிக்காமல் சென்னைப் புத்தகக் கண்காட்சி: தோற்றமும் வளர்ச்சியும்என்னும் நூலை எழுத ஆரம்பித்துவிட்டேன். இந்தப் பத்துநாட்களில் கால் கிணறு தாண்டியாயிற்று. எப்படியும் ஓரிரு மாதங்களில் நூல் வேலை முடிந்துவிடும் என நம்புகிறேன்.

முப்பத்தியிரண்டு வருடங்களுக்கு முன் ராஜாஜி ஹாலில் சுமார் ஐம்பது கடைகளுடன் தொடங்கப்பட்ட பபாசி கண்காட்சி இன்று அறுநூறு கடைகள்வரை வளர்ந்திருக்கிறது. அந்தக் காலத்தில் ஐம்பது பைசா நுழைவுக் கட்டணம். இன்று படிப்படியாக வளர்ந்து ஐந்து ரூபாயை எட்டியிருக்கிறது. கடைகளில் அலங்காரம், கூடாரத்தில் பிரம்மாண்டம் என எல்லாவற்றிலும் வளர்ச்சி கூடியிருக்கிறது. காயிதே மில்லத் கல்லூரிப் புத்தகக் கண்காட்சியோடு பத்தாண்டு அனுபவம் எனக்கு. அங்கிருந்த வசதிகளையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் புதிய வடிவமைப்பைப் பார்க்கவே சந்தோஷமாக இருந்தது. ஆனாலும் கழிப்பிட வசதி, அரங்கதாரர்களுக்கு மின் விசிறி வசதி போன்ற விஷயங்களில் பபாசிக்கு அக்கறை இருப்பதாகவே தெரியவில்லை.

பார்வையாளர்களுக்குப் புத்தகங்களைச் சரிவரத் தேடிப் பார்க்கும் பக்குவமான போக்கில் ஏதோ குறைபாடே தெரிகிறது. கடைகளின் வரிசைக் கிரமங்களில் குழப்பங்கள் இருப்பதாகப் பலர் குறிப்பிட்டார்கள். புத்தகத்தை வாங்குவதற்குள்ளாகவே தன்னுடைய உடல் நலத்தில் ஏதேனும் குறைகள் இருக்கின்றனவா என அறியும் மருத்துவ முகாமிற்குத் தாவிவிடுகிறது ஒரு கூட்டம். வாசகர்களாக வருபவர்களின் மனநிலையைப் பபாசி ஒரு பதற்றத்திற்கு உட்படுத்தி அவர்களைத் திருப்புவதில் ஆரோக்கியம் இருப்பதாகச் சொன்னால் எப்படி நம்மால் ஏற்க முடியும். தினமும் நடத்தப்படும் அரங்கக் கூட்டங்கள் மக்களுக்குப் பயன் தருவதாக இருக்கின்றனவா? வழக்கமான பட்டிமன்றப் பேச்சுகளில் இருந்து நம் சமூகம் விடுபடவே முடியாதா? வினாக்கள் நம்மை வளைத்து நிற்கும் சங்கடங்களாக வளர்கின்றன.

முதல்வர் கலைஞர் கருணாநிதி வழங்கிய ஒரு கோடி நிதியில் ஆண்டு தோறும் பரிசுக்கு அறிவிக்கப்படும் எழுத்தாளர்களைப் பபாசி எப்படித் தேர்ந்தெடுக்கிறது? அதற்கான தேர்வுக் குழு எது என்பதில் எல்லாம் கொஞ்சம் வெளிப்படைத் தன்மை வேண்டும். லட்ச ரூபாய் என்பது தமிழ் எழுத்தாளருக்கு நன்மைதரும் தொகைதான். இப்படியான பரிசுத் தொகைகளை வரவேற்கும் வேளையில் அதில் நடக்கும் பரிமாற்றங்களையும் கணக்கில் கொள்வது நல்லதாக இருக்கும் அல்லவா?

ஒவ்வொரு வருடமும் கண்காட்சிக்கு எழுத்தாளர்கள் வந்து தங்கள் நூல்களில் கையொப்பமிட்டு வாசகர்களைச் சந்திக்கும் போக்கு உற்சாகமானது. காலச்சுவடு கடையில் உட்கார்ந்து சுந்தர ராமசாமி கையெழுத்துப்போட்ட காட்சி என் ஞாபகப் பதிவேட்டிலிருந்து இன்னும் அகலவே இல்லை. ஒவ்வொரு ஆளுமையும் இயல்பாகச் சுற்றித் திரியும் காட்சி இங்கு விட்டால் வேறு எங்கும் காணக் கிடைக்காதது. இன்று படிப்படியாக வளர்ந்து சென்னையைத் தாண்டிப்போய் இருக்கிறது இந்த அறிவுச் சந்தை. சில இடங்களில் நடந்த சந்தை சோபிக்கவில்லை என்றாலும் அம்முயற்சிக்கான பயனை நிச்சயம் விரைவில் பதிப்பாளர்கள் அறுவடை செய்வார்கள்.

இந்த வருடம் பொருளாதார அளவில் பல புதிய பதிப்பகங்களுக்கு வரும்படி கிடைக்கவில்லை என்றாலும் அவர்களின் முயற்சிக்கு மக்களின் ஒரு சிறிய அங்கீகாரம் கிடைத்திருப்பது உண்மைதான். காலச்சுவடு கண்ணனுடன் பேசியபோது மிகுந்த உற்சாகமாகப் பேசினார். கண்காட்சி ஆரம்பமான இரு தினங்கள் சற்றுச் சோடையாக இருந்ததாகவும் போகப் போகச் சூடு பிடித்துவிட்டதாகவும் அவர் சொன்னார். அவரது பேச்சில் புகார்களே இல்லாதது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. நான் அடிக்கடி பார்வையிட்ட விடியல், காலச்சுவடு, வம்சி, அடையாளம், குமுதம், பாரதி புத்தகாலயம், என். பி. டி. என எல்லாப் பதிப்பகங்களும் விறுவிறுப்பாகவே இருந்தன.

ந. முருகேச பாண்டியனும் நானும் இரண்டு நாட்கள் சுற்றித்திரிந்தோம். சங்க காலப் பெண் கவிஞர்களைப் பற்றி ந. மு. விவாதித்துக்கொண்டே இருந்தது என் மன நிலைக்குச் சற்று உவப்பானதாக இருந்தது. ந.மு, அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் (காலச்சுவடு) என்னும் தனது சமீபத்திய நூலின் மனப்போக்கிலிருந்து வெளியேறாமல் பேசிக்கொண்டே இருந்தார். அவரது பேச்சில் பேராசிரியரின் வாடை இல்லாதது நல்ல அம்சம் என்று எனக்குப்பட்டது. அந்த நூலிற்கு எழுதியிருந்த முன்னுரையில் சங்க காலப் பிரதியைக் கட்டவிழ்த்து அவர் எழுதியிருந்தவிதம் எனக்குப் பிடித்திருந்ததால் பாராட்டிச் சொன்னேன்.

ஒருவகையில் சொல்லப்போனால் அறிவுலக நம்பிக்கைவாதிகளுக்குத் தமிழ்நாட்டில் போக்கிடம் இல்லை. இந்தப் புத்தகச் சந்தைதான் ஒரே இடம். டிசம்பர் மாதத்தில் மட்டுமே வெவ்வேறு இடங்களிலும் நூல்கள் வெளியிடப்படுவது, நண்பர்களைச் சந்திப்பது என நம்மவர்களுக்கு ஒரு கூடல் வாய்க்கிறது. புத்தகம் என்னும் உலகம் முந்தைய தலைமுறைக்கு அரசியலாகவும் அறிவு மருந்தாகவும் இருந்திருக்கிறது. புத்தக அறிவால் ஆட்சியைப் பிடிக்க ஒரு தலைமுறை புறப்பட்டு அதிகாரத்தைக் கையிலெடுத்த நிகழ்வு தாய்த் தமிழ்நாட்டில்தான் நடந்திருக்கிறது என்னும் சமகால உண்மையே இன்று நம்பக்கூடியதாக இல்லை. அறிவுசார் விவாதங்கள் பொதுமேடையில் நிகழ்த்தப்பட்டதற்கான சுவடுகளைச் சொல்லித் தந்தவர்களே அதை இன்று மறக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஒரு தேசம் தன்னுடைய இலக்கியச் சிறப்பியல்புகளை உலக அரங்கிற்குள் கொண்டுசெல்லப் பல லட்சங்களைச் செலவழித்துத் தன் நாட்டு இலக்கியப் பிரதிகளைக் கட்டிக் கப்பல் கப்பலாக அனுப்பிய கதையை வருங்காலத் தலைமுறை எப்படி உள்வாங்கிக் கொள்ளப்போகிறதோ புரியவில்லை. இன்றைக்குப் புத்தகத்தின் மூலம் அறிவைப் பெருக்கிக்கொள்பவர்களை ஜென் எக்ஸ் என அழைக்கிறது நவீன உலகம். புத்தகப் பூச்சிகளாகத் திரியும் சென்ற தலைமுறை. புத்தகத்தின் மூலம் உருவாக்கிக் கொண்ட அறிவுலகத்தை அறவே புறம் தள்ளுகிறது இன்றைய ஜென் ஒய் தலைமுறை. புத்தகம் என்றாலே இவர்களுக்கு ஒவ்வாமை. இந்தத் தலைமுறை எதையும் அனுபவ வழியிலே ஏற்கும். இவர்கள் எதையும் விட்டேத்தியாக எடுத்துக்கொள்பவர்கள். அலுவலகத்தில் பிரச்சினையா தலையைப் போட்டு உடைத்துக் கொள்ளமாட்டார்கள். உடனே பை பை சொல்லிவிட்டு நாகரிகமாக ஒதுங்கிக் கொள்வார்கள். ஏறக்குறைய இன்றைய காலம் இவர்களுடையது. இந்தக் காலத்தில் சிந்தனைப் பள்ளிகள் பற்றி மெய்சிலிர்ப்பவர்களுக்கு இங்கு இடமில்லை என்பதெல்லாம் அறிஞர்களின் இன்றைய காலத்தைப் பற்றிய ஆய்வு வெளிப்பாடு.

புத்தக உலகத்தை ஏற்க மறுக்கும் ஒரு தலைமுறையின் காலகட்டத்தில் புத்தகங்கள் தமிழில் வளமாக வெளிவருவதை எப்படிப் புரிந்துகொள்வது? ஒவ்வோராண்டும் முந்தைய ஆண்டைவிட ஏராளமான நூல்கள் வருகின்றன. எப்போதும் இல்லாத அளவிற்குப் பதிப்பகங்கள் தமிழில் பெருகியிருக்கின்றன. பல வருடமாகப் புத்தகச் சந்தைப் பக்கமே தலைகாட்டாமல் இடைவெளி விட்டிருந்த க்ரியா இந்த வருடம் கடைபோட்டிருக்கிறது. ஆயிரத்து ஐந்நூறு பக்கத்தில் நாவல்கள் வந்திருக்கின்றன. பாழி, ஞானக்கூத்தன் கவிதைகள், சுந்தர ராமசாமி மொத்தக் கதைகள், ஜி. நாகராஜன் முழுத்தொகுப்பு என மறு பதிப்புகள் வெளிவந்து நன்றாக விற்றுமிருக்கின்றன. காலச்சுவடின் புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுத் தொகுதி ஐந்து பதிப்புகளைக் கண்டிருக்கிறது. இவையெல்லாம் அறிவுலகம் காலியாகிவிட்டதையா நமக்குச் சொல்கின்றன?

நன்றி:காலச்சுவடு 2009 பிப்ரவரி

3 comments:

சு.சிவக்குமார். said...

என்னுடைய மிக பலகீனமான இடமென்று நான் நம்புவது என் நண்பர்களுக்குச் சொல்வது புத்தகக் கடைகள்தான்..எனக்கு கல்லூரியில் வந்த உதவித்தொகையில் வாங்கிய குழந்தைகள்,பெண்கள்,ஆண்கள்-(நான் 2003ல் வாங்கும்போதே கொஞ்சம் எனக்கு கையைச்சுடும் விலைதான்)..இன்று நண்பனிடம் பத்திரமாக இருக்கிறது..பெரும்பாலான என் நூலகப்புத்தகங்களில் 4580 என்ற எண் மட்டுமே இருக்கிறதா..இல்லை வேறு ஏதாவது எண் இருக்கிறதா என்று அடிக்கடி எடுத்துப்பார்த்திருக்கி
றேன்..ஒருமுறை ரூ200 மட்டுமே செலவு செய்வது என்று போய் கடனட்டை ஏற்றுக்கொள்ளப்பட்டதால் ரூ1500/- புத்தகங்கள் சுமந்து வந்தது இன்னும் நினைவில் நிற்கிறது...புத்தகங்கள் வாயிலாக இன்று நிறைய பதிப்பகப்பெயர்கள் நன்கு அறிமுகம்..புத்தகச்சந்தையில் நுழைந்த உடனே நாம் போகவேண்டிய புத்தக அரங்கு எது என்று உடனே கால்களுக்குத் தெரிந்துவிடுகிறது..சென்னைப் புத்தகக் கண்காட்சியில் தன்னிடம் ஒருவருமே கையெழுத்து கேக்கவில்லை என்று வருத்தத்திற்கு ஆறுதலாக வந்தவரிடம் தன் பேனாவை பறிகொடுத்த சுகுமாரன், என சென்னைப் புத்தகக் கண்காட்சியின் சுவாரசியம் என்னை அழைத்துக்கொண்டே இருக்கிறது...இப்படி நிறைய நினைவுகளை கிளறி...அதே சமயம் புத்தக்கண்காட்சி மற்றும் பதிப்பகங்களின் வேறு கோணங்களைப் பற்றி சில நல்ல சிந்தனைகளை கிளறியது உங்களின் பதிவு..உங்களுடைய ஒவ்வொரு பதிவுமே போதுமான அளவு விரிவும்,செறிவும் கொண்டிருப்பது தொடர்ந்து வாசிக்கத்தூண்டுகிறது...

கடற்கரய் said...

நீண்ட பகிர்வுக்கு நன்றி.

ஹ ர ணி said...

அன்புள்ள கடற்கரய் அவர்களுக்கு...

வணக்கம். முதன்முதலாக உங்களின் வலைப்பக்கத்திற்கு வந்தேன். இப்பதிவு என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. என்னுடைய மனவோட்டங்களின் நகல்களாக சில வரிகளைக் கண்டு மகிழ்ச்சி நிறைகிறது. இருப்பினும் சிலவற்றைத் தங்களோடு பகிர்ந்துகொள்ளல் அவசியம் எனக் கருதுகிறேன்.

1. முதலில் தற்போது வாசிப்புப்பழக்கம் என்பது வெகுவாகக் குறைந்துவிட்டது மிகப்பெரிய துயரம். குழந்தைப்பருவம் முதலே வாசிப்புப் பழக்கத்தையும் எழுதும் பழக்கத்தையும் தீவிரப்படுத்தும் முனைப்புக்ள் இல்லை. அறிவுவிருத்தி செய்தல் எனும் நோக்கில் குழந்தைகளை இம்சிக்கும் கல்விமுறைக்கே தலைமுறைகள் செலவிடப்படுகின்றன. எனவே குழந்தைகள் இலக்கியம் குறித்த ஒரு விழிப்புணர்வும் அதுதொடர்பான பல புத்தகங்களும் மிகுதியளவில் தேவை என்பதை நான் உணர்கிறேன்.

2. இன்றும் தரமான இலக்கியத்தை மையப்படுத்தியதான பயணத்தில் இருக்கும் பல சிற்றிதழ்களில் குழுமனப்பாமையும் ஒருவரையொருவர் வசைபாடிக்கொள்ளும் மனோபாவமும் சற்றும் குறையாமல் உள்ளது எப்படி தரமான வாசிப்பையும் புத்தகத்தையும் உருவாக்கும் என்று எனக்குப் புரியவில்லை.

3. இன்னொன்று இந்திய சூழலில் பளபளப்பான அட்டையும் படங்களும் குறித்த கவனத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று எனக்குப் படுகிறது. இது என்னுடைய கருத்து மட்டுமே. தரமானது என்றைக்கும் அதனுடைய இலக்கை அடைந்துவிடும் என்பதில் கடுகளவும் ஐயமில்லை.

4. முக்கியமாக புத்தகங்களின் விலைகள் மேல் நிச்சயமாக ஒரு பரிசீலனை அவசியமாகப்படுகிறது. புத்தகங்களின் விலை அதிகம் என்பது வாங்க யோசிப்பையும் வாசிப்பையும் செய்யவிடாமல் தடுப்பவை. நான் என்னுடைய வாசிப்பைக் குறைவாக மேற்கொள்ளும் சங்கடத்திற்கு ஆளானது புத்தகங்களின் அதிக விலையால்தான்.

5. உங்களுடைய புத்தகம் மற்ற புத்தகங்களின் தோற்றமும் வளர்ச்சிபோல இருந்துவிடக்கூடாது என விரும்புகிறேன். இருக்காது எனவும் நம்பிக்கை இருக்கிறது. ஏனெனில் இலக்கிய வரலாறு எனும் தலைப்பில் புற்றீசல் போலப் பெருகி நிற்கும் புத்தகங்களே இதற்குச் சாட்சி. மு.அருணாசலம். மு.வ. கா.சிவத்தம்பி எனக் குறிப்பிடத்தக்கவர்கள் இலக்கிய வரலாறு புத்தகங்களை அன்றி மற்றவை அனைததும் நகலெடுத்த பிரதிகளே. சற்று சோம இளவரசு வேறுபடுகிறார். உங்களின் புத்தகம் புது பதிவை நிகழ்த்தட்டும்.

6. உண்மையில் வரலாறு என்பதன் அர்த்தத்தையும் அது எப்படி எழுதப்படவேண்டும் ஆவணப்படுத்தப்படவேண்டும் என்பதையும்கூட சொல்லித்தரவேண்டிய சூழல் தமிழில் உள்ளது என்பதையும் இறுக்கமாகவே பகிர்ந்துகொள்ளவேண்டியுள்ளது.

தொடர்ந்து வாசிப்பேன். நன்றி.