Tuesday, February 17, 2009

அறிவியலுக்கு அப்பால் நிகழும் அறிவீனம்

மசினக்குடியில் துவங்க உள்ள நியூட்ரினோ திட்டத்தினை நேரடியாகச் சென்று பார்த்து வரலாம் என்று கடந்த ஜனவரி மாதம் கள ஆய்விற்கு கிளம்பினேன். கோவையிலுள்ள ஓசை நண்பர் காளிதாசன்அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாக சொல்லியிருந்தார்.அவரின் வழிகாட்டலோடு சென்று திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கையில் புறப்பட்டுவிட்டேன்.ஆனால் அவரால் அன்று என்னுடன்ஒத்துழைக்க முடியாமல் போனது. மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் கோவையில் அன்று யானை- மனித மோதல் அதிகரிப்பதை தடுப்பதற்கு என்ன என்ன செய்யலாம் என்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள இருந்ததே அதற்கு காரணம். மேற்குத் தொடர்ச்சி மலையைச் சுற்றியுள்ள யானைகளின் வலசைப் பாதைகள் (எலிஃபெண்ட் காரிடார்) பல தனியார் நிறுவனங்கள்ஆக்கிரமித்துவிட்டதால் யானைகளின் போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டுப் போய்விட்டது. பல கல்வி நிறுவனங்கள் ஏக்கர் கணக்கில் இடங்களை வளைத்துப் போட்டுள்ளதால் இன்று யானைகள் தம் வாழ்விடத்தை புழங்க முடியாமல் தவிக்கின்றன. கோடைக் காலங்களில் மலையிலுள்ள நீர்ப்பிடிப்புகள் வற்றி ஓடைகள் வழியாக நீர் சமதளத்திற்கு வந்துவிடுவதால் யானைகள்குடிநீர்த் தேடி கீழ் இறங்கத் தொடங்கிவிடுகின்றன.வருகிற வழியில் தென்படுகின்ற விளைநிலங்களில் அவை புகுந்து நீர்குடிக்க முற்படுவதால் பயிர்கள் நாசமாகிவிடுகின்றன. இதைத் தடுக்க விவசாயிமேற்கொள்கின்ற முயற்சிகள் யானை-மனித மோதலாக மாறிப்போகின்றன என்பதெல்லாம் பல காலமாக இயற்கை ஆர்வலர்கள் கண்டறிந்து சொல்கின்ற உண்மைகள்.ஆனால் அரசோ,நிறுவனங்களோ இதுவரை தங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொண்டதாக வரலாறு இல்லை. எப்படியாவது இந்தமாதிரியான கூட்டங்கள் வாயிலாவது அரசின் கவனத்தை ஈர்க்கலாம் என்று முட்டிமோதிக்கொண்டிருக்கிறார்கள் ஆர்வலர்கள்.அதற்கான ஒரு முன்மாதிரி கூட்டமாக அது அமையும் என்பதால் அதை முதலில் கவனியுங்கள் என்று காளிதாசனிடம் சொல்லிவிட்டேன்.அவரோ, அவர் இல்லாத குறையைத் தீர்ப்பதற்காக ஓசை கணேஷ் அவர்களை என்னுடன் அனுப்பித் தந்தார்.அவரோடு அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தியும்,பொறியாளர் தேன்முருககனியும் உடன்வந்தனர்.கிருஷ்ணமூர்த்தி கோவையில் ஒரு பேக்கரி கடையின் உரிமையாளர்.அது முக்கியமல்ல; அதைவிட முக்கியம் இயற்கை ஆர்வலர்,நல்ல நிழற்படக் கலைஞர்.லட்ச ரூபாய்க்கு மேல்செலவழித்து சொந்தமாக காமிராவாங்கி காட்டு விலங்கினங்களைப் படமெடுத்து வருபவர். இதுவரை அவர் எடுத்த படங்கள் சில நூறுகளைத் தாண்டியிருக்கும். அவற்றை எங்கும் அவர் இதுவரைவெளியிட்டதே இல்லை என அவர் சொல்லிக்கொண்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவற்றை என்ன செய்வீர்கள் என்று நான் கேட்டதற்கு,” சும்மா ஹாபிக்குத்தான் எடுக்கிறேன் சார்” என்றார் கிருஷ்.இதுவரை அவரது காமிராவில் சிக்கிய ஜீவராசிகள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததோ இப்படி ஆய்வுப் பிரக்ஞை இல்லாமல் இருக்காதீர்கள். அதன் முக்கியத்துவத்தை முதலில்நீங்கள் உணருங்கள் என்று எச்சரித்து வைத்தேன்.

கிருஷ்ணமூர்த்தி எந்தவித உபரிப் பழக்கமும் இல்லாதவர். பீடி, சிகரெட், கறி,மீன் உண்ணாது சைவ ஜீவனம் நடத்துபவர்.ஆகவே இவரதுநிழற்பட செலவுகள் குறித்து அவரது வீட்டாருக்கு புகாரில்லை என அவர் தன்னைப் பற்றி அடிக்கடி சொல்லிக்கொண்டார். அதற்கு நண்பர் கணேஷ் கவுண்டமணியின் ஒரு காமெடி வசனத்தைச்சொல்லி அவரை கிண்டலடித்துக் கொண்டது பயணத்திற்குக் கொஞ்சம் கூடுதல் சுவாரஸ்யமாக இருந்தது. கணேஷ் எனக்கு ஏற்கெனவே நன்கு பரிச்சயமானவர்தான்.அவருடன் நான்கு வருடங்களுக்கு முன்பு நான், இந்திரன், வ.ஐ.ச.ஜெயபாலன் என்று ஒரு பெரிய பட்டாளமே டாப்சிலிப்பிற்கு போய் இருந்தோம்.அப்போது கணேஷ் செய்த உதவிகள் அளவில் பெரியவை.ஆகவே கணேஷுடன் பயணிப்பதில் சிக்கல் ஏதும் இல்லை எனக்கு.அதிகாலை ஐந்து மணிக்கு கோவையிலிருந்து உதகையை நோக்கிக் கிளம்பினோம். பொறியாளராக வேலை செய்துகொண்டிருந்த கணேஷ், இயற்கை அழிவினங்களைத் தடுத்து நிறுத்துவதற்காகமுழு நேர களப்பணியாளராக மாறியவர். இவரைப் போன்றோரைச் சந்திக்கும்வேளையில் என் குற்றவுணர்ச்சி மேலெழுவதை என்னால் சீர் செய்ய முடியாமல் தவிக்கநேரிடுவதுண்டு.போகும் வழி முழுக்க காட்டைப்பற்றிய தகவல்களை மிடறு மிடறாய் கொடுத்துக் கொண்டே இருந்தார் கணேஷ்.விஷயங்களை சிரஞ்சி மாதிரிமெல்லஏற்றுவதில் கணேஷ் வல்லவர்.இவர் இப்படியென்றால்காளிதாசோ நேர் எதிர்.நிறுத்தாமல் பெரு வெள்ளமாய் தகவல்களை அள்ளிவிடுபவர்.என்னைப் போன்ற ஆர்வலர்களுக்கு வேண்டுமானால் காளிதாசன் தரும் இடைவிடாத தகவல்கள் இன்பமானவையாக இருக்கும். சாதாரண சுற்றுலா வாச மனநிலையாளர்களுக்கு சோர்வாகிவிடும். கணேஷ் அளவாக பேசுபவர். அதீதமாக உபசரிப்பவர். காளி அதிகமாகபேசுபவர்.அளவை விட குறைவாக உண்பவர். செவிக்கு உணவு வேண்டுபவர்கள் காளி பாக்கத்தில் நின்றுக் கொள்ளலாம்.நானோ எறும்புத்தீனி தின்பவன்.வாய் வலிக்க பேசுபவன். ஆக,இவ்விஷயத்தில் காளிதாசனும் நானும் ஒரே ஜாதி. திட்டமிட்டபடி காலை ஏழு மணிக்கு கோத்தகிரிக்கு(கோத்தர் கிரி என்றதன் திரிபு இது.கோத்தர் என்ற பழங்குடியின் மலை என்பது இதன் பொருள்) சென்றுவிட்டோம். அங்கு சரியான குளிர்.காலைச் சிற்றுண்டிக்காக ஒரு ஹோட்டலுக்குள் அமர்ந்தோம். கை அலம்பும் நீரில் கை நனைத்த போது கைகள் விறைக்கும் அளவிற்கான குளிர். என்னுடன் சென்னையிலிருந்து வந்திருந்த புகைப்பட நிபுணர் சித்ரம் மத்தியாஸுக்கு கைவிறைத்துப்போய் அவர் துடிதுடித்ததைப் பார்த்த ஹோட்டல் சர்வர் அதிகக் குளிராகவா இருக்கிறது என்று அவரைப் பார்த்துக் கேட்டதும், வருடம் முழுவதும்கட்டப்பாறையாய் சுடும் சென்னைவாசிக்கு குபுக்கென்று சிரிப்பு வந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இருக்காது என்பதைபோல் நான் தோசையைப் பிய்த்து உள்ளே தள்ளிக்கொண்டிருந்தேன்.உணவு முடிந்ததும் தாமதிக்காமல் வண்டி ஊட்டி, தொட்டபெட்டா(இது ஒரு கன்னடச் சொல். தொட்ட- என்றால் பெரியது. பெட்டா-என்றால் மலை.ஆக பெரியமலை என்பது பொருள்)வழியே எங்களின்கார் மசினகுடிக்கு போய்க் கொண்டிருந்தது.

இங்கே ஒரு தகவலை உங்களுடன் கட்டாயம் நான் பகிர வேண்டும். ஊட்டியிலிருந்து மசினகுடிக்கு கல்லட்டி குறுக்குவழி. இவ்வழி நேர்வழியைவிடமுப்பது கிலோ மீட்டர் குறைவானது. ஆனால் கொஞ்சம் ஆபத்தான பாதை. ஹேர்பின் வளைவைபோல நெளிவான பாதை.அதித சறுக்கல் நிறைந்தது. இவ்வழியில் செல்லும் போது குறிப்பிட்டப்பகுதியில் முதல் கியரில்தான் வண்டி போகவேண்டும்.அடுத்து வரும் சில தூரங்களை இரண்டாம் கியரில் பயணிக்கலாம். ஏன் இந்தக் கட்டுப்பாடு என நண்பர்களை விசாரித்தேன். இப்பாதை பாதாளசறுக்கலைப்போல இருப்பதால் வாகனம் எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதை ஓட்டுநரால் கண்டறிய முடியாது ஆகவே இக்கட்டுப்பாடு என்றார்.அதோடு பயங்கர வேகத்தில் வண்டி போவதால் சட்டென்று பிரேக் போடும் போதுபிரேக் ஷூ செயலிழந்துவிடுமாம். தினமும் இங்கே ஒரு சில விபத்தாவது நடக்கும் என்றார். மெதுவாக வந்ததற்கே எங்களின் வாகனத்திலிருந்து பிரேக் ஷூ உருகும் வாடை வந்ததை நுகர்ந்ததும் அதன்விபரீதத்தை நான் உணர்ந்து கொண்டேன்.மசினகுடியிலுள்ள சிங்காரா நீர் மின் திட்டம் செயல்படும் இடத்திற்கு நங்கள் சென்றுசேர்ந்த போது நேரம் மதியத்தைத் தொட்டிருந்தது.சிங்காரா திட்டம் 1923ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட ஒரு திட்டம். மலையின் மீதிருந்து கீழிறங்கும் நீரை குறிப்பிட்ட உயரத்திலேயே ஓர் அணையமைத்து(GLEN MORGAN DEM), குழாய்கள் மூலம் நீரை கீழிறக்கிக் கொண்டுவந்து, சுழற்சிக்கு அதனை உட்படுத்தி,அதன் மூலம் மின் உற்பத்தி நிகழ்கிறது.ஆங்கிலேயர்களால்ஆசியாவிலேயே நிறுவப்பட்ட முதல் திட்டம் இதுதான். இதை நிறுவியபோது ஏற்பட்டசெலவினைத்தவிர மின் உற்பத்திக்கென்று தனி செலவே இல்லாமல் மின்சாரம் கிடைக்கின்ற அருமையான திட்டமாக அதுஅமைக்கப்பட்டிருந்தது. ESCHER WYSS ZURICH என்ற கம்பெனியின்எந்திரங்களை ஆங்கிலேய அரசு இங்கிலாந்திலிருந்தும்,ஜெர்மனியிலிருந்தும் வரவழைத்து இதற்கு உபயோகப் படுத்தியுள்ளது. மொத்தம் ஏழு நீர் மின்சுழற்சி எந்திரங்கள் ஆரம்பத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தன.அதில் இரண்டு இப்போது பழுதாகிவிட்டதாக நிறுத்தி இருக்கிறார்கள்.விசாரித்ததில்அவ்வெந்திரம் இரண்டும் பழுதுபட்டமைக்காக நிறுத்தவில்லையாம். இதர ஐந்து எந்திரங்களுக்கு உதிரி பாகங்கள் கிடைக்காதென்பதால், மாற்று பயன்பாட்டிற்கு இதிலிருந்து பகங்களைக் கழற்றிபயன்படுத்திக் கொள்வதற்காக இயக்காமல் நிறுத்தியுள்ளோம் என்றார்கள் சில ஊழியர்கள். சிங்காரா தொடங்கப்பட்டபோது இதில் 70 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது. இப்போது 59 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது.

இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை யூனிட் ஒன்றிற்குவெறும் 18 பைசாவிற்குகொள்முதல் செய்கிறது தமிழக அரசு.இதோடு ஒப்பிடுகையில் சென்னையிலுள்ள GMR மின் நிலையத்திலிருந்து யூனிட் ஒன்றிற்கு 8 ரூபாய்க்கு, இன்றையதேதியில் மின்சாரத்தை அரசு கொள்முதல் செய்கிறது. இதன் அருகாமையில் உருவாக்கப்பட்ட மின் திட்டம்தான் பைக்காரா மின் திட்டம். இங்கு 150 மெகாவாட் மின் உற்பத்திசெய்யப்படுகிறது. சிங்காராவை முதலில் நிறுவிய கம்பெனிக்காரர்கள் அதன் எந்திரச் செயல்பாட்டை வியந்து மறுபடியும் அவர்களின் சொந்தச் செலவிலேயே புது திட்டத்தை அமைத்துத் தருவதாகஉறுதியளித்தார்களாம். ஆனால் நம் சுதேசி அரசு சும்மாவெல்லாம் தேவையில்லை என்று சுயமரியாதைப் பேசி அவர்களை கிளப்பிவிட்டுவிட்டு பல கோடி செலவழித்து புதுத் திட்டத்தினைமலையைக் குடைந்து உள்ளே கட்டியிருக்கிறது. இதில் வேதனைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ஆங்கிலேய அரசு இயற்கை வளத்தைச் சிதைக்காமல் பயபடுத்தி உருவாக்கிய ஒரு திட்டத்தினைகெடுத்துவிட்டு அதன் பக்கத்தில் மலையைக் குடந்து,இயற்கையை நாசப்படுத்தி பைக்காராவை கட்டி சாதித்திருக்கிறார்கள் நம் நாட்டு விஞ்ஞான அறிவுஜீவிகள்.சிங்காராவில் வேலைசெய்து ஓய்வு பெற்ற தேவசுந்தரம் என்பவரிடம் பேச்சுக் கொடுத்தேன். சுமார் 90 வயது மதிக்கத்தக்க முதியவரான அவர்,எந்த வசதியும் இல்லாத இந்தக் கிராமத்திற்குஈரோட்டிலிருந்து வந்த எல்.எம். சுந்தரம் என்பவர்தான் சாலை வசதிகளை ஏற்படுத்தித் தந்ததாகக் குறிப்பிட்டார். சிங்காரா, பைக்காரா மின் உற்பத்தி நிலையம் செயல்படுகின்ற இந்த மலைக்கு அருகில்தான் நியூட்ரினோ சுரங்கத்தைஇரண்டு கிலோ மீட்டர் மலையைக் குடைந்துஉருவாக்கப்போகிறார்கள். நியூட்ரினோ சுரங்கம் இங்கு வந்துவிட்டால் இப்பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் சேர்க்கப்பட்டுவிடும்.ஏற்கெனவே மின்பற்றாக்குறையால் அவதிப்படும் தமிழகம்சிங்காரா,பைக்காராவை இழக்க நேரலாம். வேண்டாத தலைவலியை தமிழக அரசு தலையில் கட்டிக்கொள்ளவும் வேண்டிவரும்.நல்ல வேளையாக தமிழக அரசு இத்திட்டத்திற்கு இன்னும்அனுமதி தரவில்லை. வனத்துறையும் இதனை கடுமையாக எதிர்க்கிறது.இவை மட்டும்தான் இப்போதைக்கு சாதகமான விஷயங்கள்.சூரியனிலிருந்தும்,நட்சத்திர ஒளியிலிருந்தும் வெளியேறும் அணுவிலும் மெலிதான நியூட்ரினோ துகள்களை எடுத்து ஆய்வை நடத்தினால் பல பிரபஞ்ச ரகசியங்களுக்கு நம்மால் விடைகண்டறிந்துவிட முடியும்.உலகம் எப்போது உண்டானது,மனிதர்கள் எப்போது தோன்றினார்கள் என பல கேள்விகளுக்கு பதில் வந்துவிடும்.நாம் சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும்போதே நம் உடலை ஊடுருவி பல நியூட்ரினோக்கள் செல்கின்றன.வெற்றுவெளியில் இவற்றை பிடித்து எளிதில் ஆய்வுசெய்ய முடியாதென்பதால் அதற்கென்று தனிச் சுரங்கம் அமைத்து குளிர்வான பகுதியில் அதை பிடித்து ஆராய்ச்சிக்கு உட்படுத்தவேண்டும். ஆகவேதான் அதற்கு சுரங்கம் தேவையாகிறது.

இதற்கு ஏற்கெனவே பயன்படுத்தாமல் கிடப்பில்போட்டுவிட்ட கோலார் தங்கச்சுரங்கம் மாதிரியான சுரங்கங்களை பயன்படுத்தலாம். இந்தியாவின் முதல் நியூட்ரினோ ஆய்வுச்சுரங்கம் 1965ல் அங்குதான்முதலில் அமைக்கப்பட்டது.அதைப் புதுப்பிக்காமல் விட்டுவிட்டு ஆரோக்கியமான மலையைக் குடைந்து புதியதாக ஆராய்ச்சிக்கூடத்தை நிறுவ வேண்டுமா என்பது சுற்றுச்சூழல்வாதிகளின் நயமான கேள்வி. உலக அளவில் பாதுகாக்கப்பட்ட முல்லை,குறிஞ்சிக்காடுகளில் முதுமலை மிகமிக முக்கியமானகாடு என்பது ஊரறிந்த தகவல். முதுமலை புலிகளின் சரணாலயமாக அண்மையில்தான் அறிவிக்கப்பட்டிருக்கிறது.தன் சுதந்திர தினப் பேருரையில் நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங் புலிகளைக் காப்பாற்றவேண்டும் என்று சூளுரைத்திருக்கிறார்.ஆசியளவில் அதிகப்படியான யானைகள் முதுமலையில்தான்உள்ளன. ஆசியளவில் தலை சிறந்த யானை ஆய்வாளகள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியே தங்களின்ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். யானைகளை அழித்துவிட்டு ஆய்வைச் செய்தால் அதற்குப் பெயர் ஆய்வல்ல; அகழ்வாராய்ச்சி.டினோசர்களைப்போல யானைகளும் முன்பொருகாலத்தில் இங்குவாழ்ந்தன என்று பாடத்திட்டத்தில் நம் பிள்ளைகளுக்கு நாம் பாடம் நடத்தலாம்.அதுதான் கடைசியாக நிலத்தில் வாழ்ந்த பெரிய விலங்கினம் என்று கதை பேசிக் கொள்ளலாம்.அந்தக் கொடுமையைஅரங்கேற்றிவிட்டுதான் நம் வ்ஞ்ஞானகள் ஓய்வார்கள் போல.விஞ்ஞானியும்,முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாம் அய்யாவோதன் கனவுத் திட்டமான நியூட்ரினோ மட்டும் நிறைவேற்றப்பட்டால் உலக அரங்கில் நம் நாட்டில் அறிவியல் கொம்பு பெரியதாகிவிடும் என்கின்றார். நமது விஞ்ஞானிகள். உலகம்முழுவதும் இயற்கை வளங்களைமீட்டெடுக்க திரும்பிக்கொண்டிருக்கிற காலத்தில் மலையைச் சிதைத்து, இயற்கையை அழித்து அறிவியல் வளர்க்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

கலாம்இத்திட்டத்தை மேற்கொள்ளுங்கள் என்றாரே ஒழிய,மலையை உடைத்து உள்ளே கட்டுங்கள் என்று எவ்விடத்திலும் சொல்லவில்லை. ஆகவே அறிவியல் கனவு காண்பவர்கள்சற்று இயற்கை வளங்களைத் தாண்டி ஒதுக்குப் புறமாகப்போய் தன் கனவைக் காணலாம்.இந்த மலையைக் குடைவதால் வரக்கூடிய கழிவுகள் அப்பகுதியின் சுற்றுச்சூழலையே நாசப்படுத்திவிடும். மலைக்குள்ளே கட்ட உள்ள ஆராய்ச்சிக்கூடத்திற்கு மொத்தம் 1லட்சம் டன் இரும்புப்பொருட்கள் தேவைப்படும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.இதைத்தவிர சிமெண்ட்,ஸ்டீல்,பி.வி.சி.பைப்,காப்பர்,அலுமினியம்,மணல் என்று 35 ஆயிரம் டன் பொருட்கள் தேவைப்படும் என்கிறார்கள்.8டன் ஏற்றக்கூடிய டிராக்டரைப் பயன்படுத்தினால் 17 ஆயிரம் ட்ரக் லோடுகள் தேவை. இவர்களின் கணக்கில் பார்த்தால் மொத்தம் 6,30,000டன் வருகிறது.அப்படி என்றால்தினசரி வேலைகளுக்காக 50 வகனங்கள் 50 ரவுண்ட் டிரிப் அடித்தாக வேண்டும்.இதில் மலையை குடைவதால் கிடைக்கக்கூடிய கழிவை கணக்கில் எடுத்துக்கொள்ளவேயில்லை. அதையும்சேர்த்தால் அம்மாடியோ காடே கணாமல்போவதென்னவோ உறுதி. தினமும் வந்துபோகின்ற வாகனத்தில் அடிபட்டு அத்தனை ஜீவராசிகளும் சாகவேடியதுதான்.நம்மால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உருவாக்கவே முடியாத 5000 சதுர அடி கிலோ மீட்டர் உள்ள முதுமலை காட்டை ஒழித்துக்கட்டிவிட்டு வெறும் ஆராய்ச்சிக்கூடத்தை மட்டும் வைத்துக் கொண்டு நாக்கை வழிக்கவேண்டியதுதான். அதுதானே வளர்ச்சி.அதற்குத்தானே அறிவியல்.1990களில் உறுதிசெய்யப்பட்ட இத்திட்டத்தை இப்போதுதான் மக்களின் பார்வைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். இந்திராகந்தி அவர்களால் ஏற்படுத்தப்பட்ட வனச்சட்டம் மட்டும் இல்லயென்றால்நமது காடுகளை அழித்து என்றைக்கோ துவம்சம் செய்திருப்பார்கள் பலர். பாதுகாக்கப்பட்ட ஒரு வனப்பகுதிக்குள் தனி நபர்கள் பிரவேசிப்பதற்கே ஆயிரம் கெடுபிடிகள் உள்ளபோது இப்படியொருஆய்வைமேற்கொள்ள மத்திய அரசு எப்படி அனுமதித்தது.அதற்காகதான் இயற்பியல் ஆராய்ச்சிகளுக்காக உண்டாக்கப்படும் காரியங்களுக்கு நீதிமன்றம் தடை வழங்கக்கூடாது என்று மத்திய அரசு அதிரடிசட்டம் இவ்வாண்டு கொண்டுவந்ததோ என சந்தேகிக்க வைக்கிறது நம்மை.வனப்பகுதிக்குள் அமைக்கப்படும் இத்திட்டத்திற்கு முதலில் “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ”என்ற ஆய்வறிக்கையை சமர்ப்பித்தால்தான் மத்திய அரசின் அனுமதியைப் பெறமுடியும் என்பதற்காகஅவசர அவசரமாகSACON என்ற சலீம் அலி அவர்களின் ஆய்வு நிற்வனத்தின் உதவியோடு அம்மதிப்பீட்டை சமர்ப்பித்து அனுமதி வாங்கியுள்ளனர்.அம்மதிப்பீட்டை மூன்றே மாதங்களில் நடத்தி இருக்கிறது SACON.நிச்சயம் இவ்வேலைக்கு குறந்தது ஒரு வருடமாவது தேவைப்படும். சாகானே அதை தோராயமான ஆய்வே என்றும், முழு முடிவான ஆய்வல்ல என்று ஒப்புக் கொண்டுள்ளனர். அப்படி இருக்கையில் CARE EARTH என்ற ரஞ்சித் டேனியலின்ஆரய்ச்சியகம் “சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்ட அறிக்கை” சமர்ப்பிப்பதில் என்ன நியாயம் இருக்க இயலும்.ராம்மன்,டார்ஜிலிங் போன்ற மலைகளுடன் ஒப்பிடுகையில் மசினகுடியிலுள்ள சிங்காரா மலை உறுதியானது என்கிறது ஆய்வு. முன்னதாகச் சொன்ன இரு மலைகளையும் குடைந்தால்அவை வெறும் 24 மணி நேரம் மட்டுமே விழாமல் நிற்கும் திறன் படைத்தவை.
சிங்காராவோ துளையிட்ட 90 நாட்கள் வரை கீழே விழாமல் நிற்கும் வலிமையைக் கொண்டது. அதனால்இவர்கள் சாவகாசமாக வேலை செய்துகொள்ளலாமாம்.இதெல்லாம் சாதகமானவை. ஆகவேதான் இங்கே வருகிறோம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஊமைத்தகவலாக மக்கள் முணுமுணுப்பதுஇவ்வாராய்ச்சிக் கூடத்தில் வேலை பார்க்கப் போகும் விஞ்ஞானகள் எல்லோரும் மைசூர், பெங்களூர் வாசிகலாம்.அவர்களின் கூப்பிடு தூரத்தில் உள்ள, பெங்களூரைப்போல குளுகுளுஇடம் இதுதான் என்பதாலேயே விடாமல் இவ்விடத்தை சுற்றுகிறார்கள் என்கிறார்கள்.

அமெரிக்கா,ஜப்பான்,கனடா,இத்தாலி என்று பல நாட்டில் நியூட்ரினோ கூடம் செயல்படுகிறது.இதில் இத்தாலியில் மட்டும்தான் கிரான்சாசோ என்ற மலைப் பகுதியில் கூடம் இருக்கிறது.அங்கும்சில வருடங்களுக்கு முன் அங்கு பல பிரச்சனைகள் உருவாகியுள்ளன.அதை இப்போது என்னவாக இருக்கும் என்று ஆராய்கிறார்கள். இதெல்லாம் நம் கண்முன் தென்படும் முன்னெச்சரிக்கைகள்.மசினகுடி ஊராட்சித் தலைவி சங்கீதா பின்னுவைப் பார்த்துப் பேசிய போது அவர், மசினகுடியில் வேலைவாய்ப்பே இல்லை. இந்தத் திட்டம் வந்தால் மக்களுக்கு வேலை கிடைக்கும் என்றார்.ஐ.என்.ஓ.வின் அதிகாரப்பூர்வ வளைதளமோ இது யாருக்கும் வேலைவாய்ப்பை வழங்கும் திட்டமில்லை என்கிறது.ஊராட்சியின் வரும்படிக்காக ஏற்கெனவே மசினகுடி,ஊட்டியைச் சுற்றி கட்டப்பட்ட ரிசாட்ஸ்கள் இரவில் அடிக்கும் கும்மாளத்தினால் மிருகங்கள் அவதிப்படுகின்றன.வரும்படியும் பெரியதாக இல்லை. தனி நபர்களே லாபப் பணத்தில்கொழிக்கிறார்கள்.முதுமலையிலுள்ள பெட்ட குரும்பர் என்னும் ஆதிவாசிப் பழங்குடி இனத் தலைவர் மாதன் அவர்களை சந்தித்துப் பேசலாம் என்று தர்ஷ் தேக்கேகரா உதவியோடு போனேன்.தர்ஷ் இத்திட்டத்தினைமலையில் நிறுவ எதிர்ப்பு தெரிவிக்கும் சுற்றுச்சூழல் அமைப்பிகளை ஒருகிணைத்து என்.பி.ஆர். அலையன்ஸ் என்னும் அமைப்பைக் கட்டி அதன் ஒருங்கிணைப்பாளராக செயல்படுபவர்.பழங்குடித்தலைவரோ,யாரையும் நாங்கள் ஆதரிக்கவும் இல்லை.எதிர்க்கவும் இல்லை. எது எப்படி கெட்டால் எங்களுக்கென்ன என்ற தொனியில் பேசியதில் எங்களுக்கு வியப்பொன்றுமில்லை.

கள ஆய்வெல்லாவற்றையும் முடித்துக் கொண்டு மசினகுடி உட் ஹவுஸில் பழங்குடி ஒருவர் தயாரித்து வழங்கிய அசைவச் சாப்பாட்டை ஒருபிடி பிடித்தோம். சற்று ஓய்விற்குப் பின்ஐ.ஐ.எஸ். யானை ஆய்வாளர் கண்ணன் உதவியோடு முதுமலையின் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாத உட் பகுதிக்கு அவரது ஜீப்பில் புறப்பட்டோம். பயணித்த சாலையின் இருமருங்கிலும் திட்டுத்திட்டாக மொத்தமாக சேர்த்து 68 மான்களை நான் கணக்கிட்டுப் பார்த்தேன்.முதுமலையிலிருந்து தெப்பக்காடு வழியாக கார்குடி,அப்பர் கார்குடி, ஹேம்ஹட், இம்பர்லா வரை சென்று திரும்பினோம். ஹேம்ஹட்டில் ஒரு அழகான ஏரி இருந்தது.சதுப்புநிலக்காடு என்று கண்ணன் அதை குறிப்பிட்டார். யானைகள் உள்ளிட்ட விலங்கினங்கள் நீரருந்தும் ஏறி அது. அழகழகான பறவைகள் பலவற்றைப் பார்தோம். கிருஷ்ணமூர்த்தியும், சித்ரம் மத்தியாஸும்படமெடுத்துக் கொண்டார்கள்.ஹேம்ஹட் ஏரியைச் சுற்றி அற்புதமான மூங்கில் காடுகள் நிறைந்திருந்தன.அதனையொட்டிய கரையோரத்தில் ஆங்கிலேயர்கள் நீரருந்த வரும் விலங்கினங்களைவேட்டையாடுவதற்கு பூமிக்கு மேல்புறத்தில் ஒரு வுட் ஹவுஸ் கட்டியிருக்கிறார்கள்.அது இப்போது நினைவுச்சின்னம் மட்டுமே. வேண்டுமானால் மேல்நின்றவாறு மிருகங்களைப் பார்த்து ரசிக்கலாம்.இம்பர்லா செல்லும் வழியில்தான் அவ்வதிசயம் நிகழ்ந்தது. அந்த மலைச்சரிவில் மொத்தமாக சேர்த்து ஏழு யானைகளைப் பார்த்தோம்.அதில் இரண்டு குட்டிகள்.கொம்பன் ஒன்று. நான் காட்டில் வைத்து கொம்பனைப் பார்ப்பது இதுவே முதல் தடவை. ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தங்கள் இருக்கும்.ஆப்பிரிக்க யானைகளில் ஆண் பெண்இரண்டிற்கும் தந்தங்கள் இருக்கும்.வழியில் தென்பட்ட யானை ஆய்வாளர் சிவசுப்பரமணியன் நேற்று இங்குதான் ஒரு புலியைப் பார்த்தேன்என்றதும் எங்களுக்கு ஆர்வம் இருப்புக் கொள்ளவில்லை. உடனே கண்ணனோ இங்கிருந்து சற்று தள்ளிதான் நானும் ஒரு புலியைப் பார்த்தேன் என்றார். அதை அவரது சின்ன கேண்டி காமிராவில் படமெடுத்துள்ளதையும் காண்பித்தார்.உடனே ஜீப்பை விட்டு இறங்கி கொஞ்ச தூரம் துழாவினோம். புலி அப்படியேவா அங்கேயே படுத்திருக்கும் என்று கண்ணன் நகைக்க உடன் புறப்பட்டோம்.அங்கிருந்து வேறு வழியாக கீழிறங்கியபோது ஒருசில மயில்கள் தென்பட்டன. இங்கே பாதையில் புலிகளை கணக்கெடுக்கும் இரு காமிரா டிராக்கள் அடுத்தடுத்து இருந்தன.அது எங்களை படமெடுக்கும் ஆவலில் வாகனத்தைவிட்டு இறங்கிப்போய் நான் நின்றேன். அவ்விரண்டுமே பாட்டரி இல்லாமல் பழுதாகிக்கிடந்தன. இந்த காமிராக்களின் கணக்கீட்டின் படிதான் இக்காட்டில் மொத்தம் 36 புலிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. காமிரா பழுதாகாமல் தொடர்ச்சியாகக் கணக்கிட்டால் நிச்சயம் அதிகமான புலிகள் இருப்பதை கண்டறியலாம்.சாலை ஓரமாகவே இரண்டு காட்டெருதுகள் கண்ணில் தட்டுப்பட இறங்கிப்போய் நோக்கியதில் அங்கு ஒருஎருதுதான் நின்றிருந்தது.தூரத்திலிருந்து பார்க்க இரண்டாக கண்களை ஏமாற்றியிருக்கிறது என்பது புலனானது. ஒரு டன் எடைக்கு மேல் இருக்கும் என்றார் கணேஷ்.இவ்விடத்தில் நான் குறிப்பிட மறந்து போன ஒரு தகவலைச் சொல்லிவிடுகிறேன். சிங்காரா போனேன் இல்லையா அங்கே பொறியாளர், எழுத்தாளர் சோமு.பழ.கருப்பையா வீட்டில் சில மணிதிவளைகள் தங்க நேர்ந்தது. அப்போது அவரது வீட்டிற்கு முன்னுள்ள மரத்தில் ஹார்ன்பில்(இருவாச்சி- கேரளாவின் தேசியப்பறவை. தமிழ்நாட்டின் தேசியப்பறவை-பச்சைப் புறா)பறவை வந்தமர்ந்தபோது மகிழ்ச்சியில் எல்லோரும் துள்ளிக்குதித்தோம். ஹார்ன்பில் பறவையில் மொத்தம் தமிழ்நாட்டில் நான்கு வகை உள்ளதாக கணேஷ் சொன்னார்.அதில் ஒன்று சாம்பல் நிற வகையைச் சார்ந்தவை. ஹார்ன்பில் தலையில் அழகான கொண்டைகள் இருக்கும்.மூங்கிலை இரண்டாகப் பிளந்தால் பிறை மாதிரி இருக்கும் வடிவத்தைப் போன்று இருக்கிறது அதன் கொண்டை.இரு கொண்டைகள் கொண்ட ஹார்ன்பிலும் உண்டு. அவர் இப்படி தனக்குப் பெயர் தெரியாத பல பறவைகளை தினமும் காண்பதாகவும், காமிராவை வீட்டிற்கு உள்ளே சென்று எடுத்துவருவதற்குள் அவை பறந்துபோய்விடுவதாகவும்வருந்தினார்.

1 comment:

Anonymous said...

miga miga arumaiyaana pathivu. munnetram enraal cityum nugarvu kalaachaaramum thaan enre nam mara mandaikalil adaithu vaithullom aanaal nam ariveenam eppadi patta perazhivai kondu vara pogirathu enbathai asatai seithu kondum irukirom viraivil theerpu naal varum appothu nam thavurukalai thiruthik kollavum vaaippillaamal pogum.