Friday, March 6, 2009

கலைமாமணியே குருவே சரணம்



தமிழக அரசின் “கலைமாமணி விருது” அறிவிக்கப்பட்ட அன்று, இரவு தொலைபேசியில் நண்பர் பவா செல்லதுரை கூப்பிட்டார். அவர் அழைத்த சமயம் இரவு பத்தரைக்கு மேல் இருக்கும்.இரவு அழைப்புகளைநான் பெரும்பாலும் எடுப்பதில்லை. காரணம், நள்ளிரவில்
சில நண்பர்கள் குடித்துவிட்டு பின் நவீனத்துவம் குறித்து மணிக்கணக்கில் பேசி உயிரை எடுக்கிறார்கள். அப்படியில்லையென்றால் யாரையாவதுகுறிவைத்து பொளந்து கட்டுகிறார்கள். இந்த ராக்கூத்தில் சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்க என் கைபேசியை
சைலண்ட் மோட்டில் போட்டுவிடுவது வழக்கம். அதனால் சில நேரங்களில்
பவா போன்ற பல நல்ல நண்பர்களின் அழைப்பையும் எடுக்கமுடியாமல் போய்விடுகிறது. அன்று எதேச்சையாக பவாவின் அழைப்பை ஏற்கமுடிந்தது எனக்கு ஆச்சரியமே.
அவசரமாக அழைத்த பவா “தன் மனைவி ஷைலஜாவிற்கு
கலைமாமணி விருதுகிடைத்திருப்பதாக சொல்லி பல நல்லுள்ளங்கள் தொலைபேசி செய்து வாழ்த்துவதாகவும், எங்களுக்கு அரசிடமிருந்து அதுகுறித்து எதுவும் தகவல் வரவில்லை
என்றும், இந்த வாழ்த்துப்பாக்களை ஏற்பதா மறுப்பதா என்று எங்களுக்குப் புரியவில்லையென்றும், இது குறித்து உங்கள் பத்திரிகை நண்பர்களிடம் விசாரித்து தெரிவியுங்கள்” என்றார்.

“தி.மு.க.அரசு நாட்டுடைமையாக்கல் விஷயத்தில் வாரிசுகளுக்கே தெரியப்படுத்தாமல் சட்டசபையில் அறிவிப்பை வெளியிட்டதைப் போல இவ்விஷயத்திலும் உரியவர்களுக்குத் தெரியப்படுத்தாமலே பரிசுகளை அறிவித்துவிடுகிறதோ என்னவோ” என்று அவரிடம் சொல்லிவிட்டு, சில பத்திரிகை நண்பர்களுக்கு போன் போட்டேன்.
இரவு என்பதால் பலர் தூக்கக் கலக்கத்திலேயே பதில் பேசிவிட்டு ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டார்கள். மறுபடி நான் அழைத்தபோது பலரிடம் பதிலில்லை. அவர்களுக்கும்
இரவில் பின்நவீனத்துவ பிரச்னை இருக்கும் போல.
ஒரு பத்திரிகை நண்பர் மட்டும் இரவுப் பணியில் இருந்தார். உடனே பதில் தருவதாக சொன்னார். கொஞ்ச நேரம் காத்திருந்தேன். அவர் அழைப்பதற்குள் பதற்றம்
தலைக்கேறிவிட்டது எனக்கு. மனம்முழுக்க ஷைலஜாவிற்கு விருது கிடைத்துவிடக் கூடாதென்ற எண்ணம் மிதந்து கொண்டே இருந்தது. ஏனென்றால், ஷைலஜா என் நம்பிக்கைக்குரிய மொழிபெயர்ப்பாளர். பாலச்சந்திரச் சுள்ளிக்காட்டின் ’சிதம்பர நினைவுக’ளை அவர் மொழிப்பெயர்த்து வெளியிட்டபோது அதைப் படித்துவிட்டு இன்புற்றவர்களில் நானும் ஒருவன்.அவரின் நல்ல வாசிப்பின் ரசனையை நினைத்து மகிழ்ச்சியடைந்தவன்.
இது போதாதக் குறைக்கு இந்த வருடம் புத்தாண்டு அன்று கட்டுக்கட்டாக ஏ4 பேப்பர்களை வங்கிக் கொண்டுபோய் ஷைலஜாவிற்கு பிரபஞ்சன் பரிசளித்து பல நூற்களை மொழிபெயர்த்து
தமிழ்ச்சமுகத்திற்கு சேவை செய்யுமாறு பணித்துவிட்டு வேறு வந்திருக்கிறார். இந்த விருது மட்டும் கிடைத்துவிட்டால் ஷைலஜா இலக்கிய உலகிலிருந்து ஓய்வை எய்திவிடுவார். கலைமாமணி என்பது சாவுகிராக்கி அவார்டு.அல்லது இறக்கப்போகும் தருவாயில் ஆதரவற்றுத் தவிக்கும் ஆட்களுக்கு அரசு கொடுக்கும் அநாதை பென்ஷன் மாதிரியான ஒரு பரிசு.
ஷைலஜாவிற்கு இந்த விருதைக் கொடுத்து தமிழக அரசு அவரை அசிங்கப்படுத்திவிட்டால்...அய்யய்யோ..அய்யகோ..என்று கருணநிதி மொழிநடையில்
யோசிக்கும்போதே பயம் அதிகரித்தது.
பொதுவாக விருது என்பது கலைஞனுக்கு மகிழ்ச்சியளிக்க வேண்டிய ஒன்று.ஆனால் தமிழக அரசின் விருது,நல்கை அறிவிப்புகளோ பெரும்பாலும் இரவு தூக்கத்தைக் கெடுப்பதாக இருக்கிறது. ஒரு மனிதனை ராத்திரி நிம்மதியாக தூங்கவிடாமல் இப்படி புலம்பவைக்கிறது. இல்லையென்றால் இந்த அர்த்தராத்திரியில் கண்விழித்து இதை எழுதிக்கொண்டிருப்பேனா?

ஷைலஜாவிற்கு வாழ்த்துக்களை ஆமோதிப்பதா இல்லையா என்பதில் பிரச்னை. எனக்கு நான் மதிக்கும் ஒரு நல்ல படைப்பாளி அசிங்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் பிரச்னை.
எனக்குத் தெரிந்து கலைமாமணி அவார்டு கிடைத்தவர்கள் யாரும் அதன்பொருட்டு புகழடைந்ததாக சரித்திரம் இல்லை. தரித்திரம் வேண்டுமானால் உண்டு. கலாப்ரியா, வண்ணதாசன் போன்ற கண்ணியவான்கள் சில கோடம்பாக்கத்துக் கழிசடைகளோடு சேர்ந்து நிற்பதை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. இந்த விருது அரசாங்கத்தை சொறிந்துவிடும்
ஆசாமிகளுக்காக உண்டாக்கப்பட்டது என்று நண்பர் ஒருவர் முன்பே என்னிடம் சொல்லியிருந்தார். கலைமாமணி; அரசின் சொறி தீர்க்கும் சர்வரோக நிவாரணி என்பது அவரின் நெடுநாள் நம்பிக்கை.
எப்படியோ கலை, கலாச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் ஆளுமைகளுக்கானதல்ல என்பது சத்தியம். அப்படி இருக்கும் போது நமது ஆளுமைகளுக்கு மட்டும் ஏன் இவ்வாறான விபத்தெல்லாம் நடக்கிறதோ புரியவில்லை. இந்த ஒன்னே கால்ணா விருதுக்காக க்யூவில் தேவ்டு காத்து நிற்கிறார்கள்.
கலாப்ரியா என்ற கவிஞன் தற்காலத் தமிழ்க்கவிதையின் ஓர் அடையாளம்.ஒரு புராதன மொழியின் அடுத்தகட்டப் படிகட்டு அவர். இப்படி மலிவான விருதுகளை கொடுத்து அவரை
அசிங்கப்படுத்தும் போக்கு ஒரு வன்முறை மாதிரி நிகழ்த்தப்படுவதை நினைத்தால் கலாச்சாரப் பங்களிப்பாளன் எவனொருவனுக்கு இரவில் தூக்கம் பிடிக்காது.

பால் சக்கரியாவுக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்ட அன்றைக்கு அவர் அதைப் பெற போகவேயில்லையாம். பத்திரிகையாளர்கள் அவரிடம் கேட்டபோது, “அன்று
தூங்கிவிட்டேன். ஆகவே விழாவுக்குப் போகமுடியவில்லை. விருதை விட தூக்கம்தான் எனக்கு முக்கியம்” என்றாராம். இப்படியும் கலைஞர்கள் நம் அண்டை மாநிலத்தில் வசிக்கிறார்கள்.
ஆனால் நம்மூரிலோ நேர் எதிராக இருக்கிறார்கள். அவர்கள் போடும் புத்தகத்திற்கு அவர்களே விமரிசனக் கூட்டம் நடத்துகிறார்கள். அவருக்குத் தெரிந்த நண்பர்களை வைத்து அதற்கு விமரிசனம் எழுதுதச் சொல்கிறார்கள். அவர்களே தனக்கு விருது கிடைத்த தகவலை விளம்பரப்படுத்துகிறார்கள். ஏறக்குறைய அஞ்சா நெஞ்சன் அழகிரி லெவலுக்கு
பிரயத்தனங்கள், மெனக்கெடல்கள், நச்சரிப்புகள் போதும்டா சாமீ, சகிக்க முடியவில்லை.
இதே ஊரில்தான் வண்ணநிலவன் போன்ற மகாகலைஞன் எழுதிமுடித்துவிட்டு அடையாளமே இல்லாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்பதுபோல் தேமேவென்று கிடக்கிறார்.

சென்ற வருடம் கல்யாண்ஜிக்கு கலைமாமணி விருது கிடைத்த அன்றைக்கு “ பொதுவாக விருதுகள் மீது எனக்கு நல்ல மதிப்புகள் கிடையாது.அதிலும் கலைமாமணி மாதிரியான
ஒரு விருதை அறவே நான் மதிப்பதிலை. உங்கள் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டமைக்காக என் வருத்தங்கள்” என்று ஒரு குறுஞ்செய்திமட்டும் அனுப்பிவிட்டேன்.
அதற்கு அவர் “விருது கிடைத்ததிலிருந்து ஒரே பாராட்டுமழைகள். உங்களின் கருத்து மட்டும்தான் விமர்சனப்பூர்வமாக, உண்மையாக இருந்ததென்று” பதில் அனுப்பினார்.
சிபாரிசு எதிர்பார்ப்பவர்கள் வேண்டுமானால் வாழ்த்தலாம். நாமும் அப்படிச் செய்யவேண்டுமா என்ன?
நம்மூரில் சிறந்த படைப்பாளியாக இருந்தாலும் தொலைக்காட்சி பெட்டியில் தோன்றி பேசினால்தான் அண்டை வீட்டானும் மதிக்கின்றான். அப்பொருட்டே நம் மதிப்பிட்டை உயர்த்தி மதிப்பீடுகிறான்.
இதற்காக முட்டால் பெட்டியில் தலைகாட்டவேண்டிய நிர்ப்பந்தம் வந்து சேர்கிறது படைப்பாளிகளுக்கு. இந்தக் கொடுமைகளுக்காக சில சமரசங்களை மேற்கொள்ள வேண்டியாகிறது.
இன்குலாப் போல ஒரு சுயமரியாதை மிக்க கவிஞன் கூட இந்த மாயவலையில் மாட்டிக் கொள்ளவேண்டியுள்ளது.இந்த வருடம் அவருக்கும் ஒரு கலைமாமணி.
அழைப்பிதழ் எடுக்காமல் கலைமாமணி விருது வழங்கும் விழாவிற்குப்போன இன்குலப்பை உள்ளே விட மறுத்துவிட்டார்களாம். பிறகு நண்பர் ஒருவர் வீட்டிலிருந்த அழைப்பை
கொண்டுபோய் கொடுத்து கடைசி நேரத்தில் உதவியிருக்கிறார். அதன்பின்னே அவரை விருது பெற உள்ளே அனுமதித்தார்களாம். இந்தக் கேலிக்கூத்துகளைச் சொல்லி என்னிடம்
புலம்பினார் ஒரு முன்னாள் இடதுசாரி.
சக்கரியாவை போல இதையெல்லாம் தூக்கி தூரப்போடுகிற மனப்போக்கு ஏன் இல்லாமல் போகிறது இவர்களுக்கு. ழீன் பால் சார்த்தருக்கு நோபல் வழங்கப்பட்ட போது அவர்” நிறுவனங்கள் சார்பாக கொடுக்கப்படும் ஒரு விருதை நான் பெற்றுக் கொண்டால் நானும் நிறுவனமயமாகி விடுவேன்” என்று அஞ்சி அதை ஏற்க மறுத்தார்.
சில வருடங்களுக்கு முன் ஒரு காலமிஸ்ட் ஒரு எழுத்தாளர் டி.வி.யில் தோன்றி பேசியதற்காக அவரை வருத்தெடுத்திருந்தார் தன்னுடய கடுரையில். ஆனால் இன்று அவர் வராத டி.வி.யே இல்லை. ஆச்சி ஊறுகாய் விளம்பரத்திற்குக் கூட வந்துவிடுவார் இன்னும் கொஞ்சம் நாளில். டி.வி. தொகுப்பாளர் கேட்கிற கேள்விகளுக்கு அவர் சம்மந்தா சம்மந்தமில்லாமல் பதிலிப்பதை பார்த்த என் அக்காவின் குழந்தை “லூசா... மாமா இந்தாளு” என்று பிதாமகன் லைலாவைப் போல என்னிடம் அவன் கேட்டதை இங்கே
நான் கட்டாயம் எழுதியே ஆகவேண்டியிருக்கிறது.

10 comments:

ச.முத்துவேல் said...

சரி. ஷைலஜாவுக்கு கிடைச்சதா,இல்லையான்னு சொல்லவேஇல்லயே.( நான் சரியாப் படிக்கலயா..?)(கிடைக்கலன்னுதான் நினைக்குறேன்)

comments எழுத word verification ஐ நீக்கினால், நன்றாயிருக்கும்

கடற்கரய் said...

ச.முத்துவேல் உங்களின் வருகைக்கு
என் நன்றிகள் பல..
எனது வேண்டுதல் பலித்தது. ஆகவே
பவா அன்றிரவே அந்த ஷைலஜா பாடகி என்றும் அது தன் மனைவிக்கான விருதல்ல என்றும் பதில் தந்தார். அதற்குள் என் புலனாய்விலும் உண்மை தெரிந்துவிட்டது. ஷைலஜா மரியாதைக்குரிய படைப்பாளியாகவே காப்பற்றப்பட்டார்.அரசுக்கு என் நன்றி.

இப்னு ஹம்துன் said...

கலைமாமணி விருது குறித்த நியாயமான பார்வை.

ஒவ்வொரு வருடமும் அரசின் இந்தத் தாக்குதலிலிருந்து தப்பிக்கும் கலைஞர்கள், எழுத்தாளர்கள் பெருமூச்சு விடுவது இயல்பே.

கடற்கரய் said...

இப்னு ஹம்துன் தங்களின் பின்னுட்டத்திற்கும் கைகோர்ப்பிற்கும் என் நன்றி.அரச பயங்கரவாதம் என்பது விருது வடிவிலும் நடத்தப்படலாம்

Erode Nagaraj... said...

நல்ல பதிவு. ஷைலஜாவிற்கு (பவா) வாழ்த்துகள்.

கலைமாமணி: இது கலையல்ல; money!

கடற்கரய் said...

நன்றி நாகராஜ்

ஜமாலன் said...

நல்ல பதிவு. விருதுகள் நிலை இப்படித்தான் இங்கல்ல உலகெங்கிலும்.

ரவிஉதயன் said...

விருதை வாங்குகிறார்கள்.சில பேருக்குத்தான் அது கொடுக்கப்படுகிறது. நல்லபதிவு கடற்கரய் சார்.

umavaratharajan said...

நண்பர் ஜமாலன் சொல்வது சரி.இங்கும் அதே கூத்துதான். தாங்கள் கடந்த காலங்களில் எழுதியவற்றை மிகவும் சுலபமாக மறந்து, படைப்பாளி என்ற கம்பீரத்தை இழந்து அதிகாரத்தின் முன்னால் கூனிக்,குறுகி .ஒரு விருதின் பொருட்டு இவர்கள் போடும் தோப்புக் கரணங்கள் வெட்கப் பட வைக்கின்றன.
பல சந்தர்ப்பங்களிலும் மிக மோசமான பேர்வழிகளுக்கு வழங்கப் படும் இந்த விருதுகள் ,.ஒரு விபத்துப் போல எப்போதாவது தகுதி வாய்ந்தவர்களை சந்திக்கும் போது அவற்றை அவமானத்தின் சின்னங்களாகவே கருத வேண்டும்.
நண்பர் கடற்கரய், நல்ல உறைப்பான பதிவு. ஆனால் எருமை மாட்டில் பெய்த மழை.

கடற்கரய் said...
This comment has been removed by the author.