கவிதை நூல்கள் வெளிவருகின்ற அளவுக்கு கவிதை நூல்களைப் பற்றிய விரிவான விமர்சனக் கூட்டங்கள் நிகழ்வது என்பது வெகு அரிதாகிவிட்டது. இந்தக் குறையைக் கொஞ்சமாவது களையும் விதமாக இருந்தது கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற கடற்கரய்யின் "கண்ணாடிக்கிணறு' கவிதை நூல் விமர்சனக் கூட்டம்.
சென்னை தேவநேயப்பாவாணர் அரங்கில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு பூமா ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். நிகழ்ச்சியை அபூர்வம் இலக்கிய அமைப்பு ஒருங்கிணைத்திருந்தது.
பார்வையாளர்களாக பெரும் படைப்பாளிகளும் கலந்து கொண்டதைப் பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருந்தது. எவ்வித வம்புதும்புகளும் இல்லாமல் நிகழ்ச்சி சீராக நடைபெற்றதே வியப்பான ஓர் அம்சம் எனலாம். பிரபஞ்சன், இந்திரன், வ.ஐ.ச.ஜெயபாலன், மொழிபெயர்ப்பாளர் ஆர்.சிவக்குமார், இலங்கை மலையக எழுத்தாளர் அந்தோனி ஜீவா, லதா ராமகிருஷ்ணன், எம்.பாண்டியராஜன், அழகிய சிங்கர், வெளி ரங்கராஜன், குவளைக் கண்ணன், குமார் அம்பாயிரம், சொர்ணபாரதி என்று எழுத்தாளர்களின் கூட்டம் அரங்கத்தை நிரப்பியிருந்தது.
முதலில் நூல் குறித்து பேச வந்த க.மோகனரங்கன், தன் கறாரான விமர்சனத்தை மிக நேர்த்தியாக அரங்கில் முன் வைத்தார். ""கவிதையைப் பாஷைக்குள் இயங்கும் பரிபாஷை எனலாம். பாஷையை அறிந்த அனைவருக்குமே பரிபாஷைப் பிடிபடும் எனக் கூறிவிட இயலாது. அதனாலேயே கற்றறிந்த கல்விமான்கள் பலரும்கூட கவிதைக்கு வெளியே நிற்க நேரிடுகிறது. மாறாக, நுண்ணுணர்வு கொண்ட ஒரு சாதாரண வாசகனுக்கு அவனது மன விரிவுக்கேற்ப, ஒரு கவிதை தன் உள் கதவுகளை ஒவ்வொன்றாகத் திறந்து காட்டுகிறது. கவிதையின் பொருள் அதிலுள்ள சொற்களால் மட்டும் நேரடியாக உருவாவது அல்ல. அதற்கு மாறாக அச் சொற்களுக்கிடையே உறைந்திருக்கும் மௌனத்தாலும், அம்மௌனத்தை உருவாக்குகிற கவிஞனின் தொனியினாலுமே மறைமுகமாக உருவாகிறது. நமது பூர்வீக அடையாளங்களான இன, மொழி, பண்பாட்டு நினைவுகளை விரைவாக இழந்துவரும் நாம், ஒரு முழுமையான தன்னிலையாக அல்லாமல் சிதறுண்ட பல சுயங்களின் தொகுப்பாகவே நம்மை உணர்கிறோம். இந்தத் தத்தளிப்பை கடற்கரய்யின் பல கவிதைகளில் அவ்வளவு தெளிவாக இல்லாவிட்டாலும், தீவிரமாக உணரமுடிகிறது. அதோடு தொகுப்பிலுள்ள கவிதைகள், பாரம்பரியத்தை உடன் சுமந்து செல்ல இயலாமலும், உதறிவிட்டு முன்னகர முடியாமலும் நடுவில் அகப்பட்டு அல்லாடுபவனின் தத்தளிப்பை பிரதிநிதித்துவப்படுத்துபவை. இது இக்கவிஞனின் தத்தளிப்பு மாத்திரமல்ல இத்தலைமுறையைச் சேர்ந்த நம்மில் பெரும்பாலானோரின் தத்தளிப்பும் கூடத்தான்'' என்றார்.
அடுத்து பேச வந்த விமர்சகர் சண்முகம், ""90களுக்குப் பின்னால் எழுத வந்த கவிஞர்களின் கவிதைகளில் ஓசை நயம் என்பதில்லை. இந்தச் சாதகத்தினாலேயே இவர்களால் ஒரு கட்டுக்குள் குன்றிவிடாமல் மிகச் சுதந்திரமாக இயங்க முடிகிறது. அதற்கான சான்றுகள் கடற்கரய்யின் கவிதைகளில் மிக சிறப்பாக வெளிப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன். உரைநடை வடிவத்தில் இவர் கவிதைகளை எழுதி பார்ப்பதால் சில கவிதைகளில் கதை சொல்லும் தன்மை உயர்ந்துள்ளது. இதுவும்கூட நவீன கவிதைக்குள் வந்திருக்கும் புது அம்சத்தையே காட்டுகிறது. பின் நவீனக்கூறுகள் நிறைந்த குரலாக இவரின் கவிதைகள் இருக்கின்றன'' என்றவர் பல மேலை நாட்டுக் கவிஞர்களின் கவிதைக் காட்சிகளோடு கடற்கரய்யின் கவிதைகளை ஒப்பிட்டு கருத்துகளை எடுத்துரைத்தார். நவீன கவிதைகளில் ஒளிந்துள்ள புரியாமை என்ற தொனியைத் தெளிவாக விளக்கும் முயற்சியோடு சண்முகத்தின் பேச்சு பல கோணங்களில் நகர்ந்தது. இறுதியாகப் பேச வந்த ஸ்ரீநேசன் தனக்குப் பிடித்த கடற்கரய்யின் பல கவிதைகளை ஒன்றொன்றாக முதலில் வாசித்தார். ""ஒரு கவிஞன் தனக்கு நேராத ஒரு அனுபவத்தைக்கூட மிக துல்லியமாகத் தன் கவிதைக்குள் பிடித்துவிட முடியும். அதை இவரின் கவிதை மிகச்சரியாகச் செய்துள்ளது. கடற்கரய்யின் இரண்டாம் தொகுதியை நான் வாசித்திருக்கிறேன். இது மூன்றாம் தொகுதி. அதிலும் எனக்குப் பிடித்த கவிதைகள் இருந்தன. இத் தொகுப்பு அதைத் தாண்டியும் சென்றிருக்கிறது.
முதலில் கவிஞனாக அறிமுகமான இவர், தீராநதியில் எடுத்த பல நேர்காணல்களை படித்துவிட்டு இவன் கவிஞர் மட்டும் இல்லை என அறிந்து வியந்திருக்கிறேன். நேர்காணல்களில் இவரின் இன்னொரு முகத்தைக் கண்டு வியந்த சமயத்தில் மீண்டும் தன் கவிதையின் மூலம் என்னை வியக்கச் செய்திருக்கிறார். அவரின் ஆளுமை பல வடிவங்களில் செழுமையடைகிறது'' என்றார்.
ஏற்புரை நிகழ்த்திய கடற்கரய்,""பல கவிதைகளில் மாயத் தன்மை உள்ளது என்றார்கள். விந்தை என்பது நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கம். நாம்தான் அதை கண்டுகொள்வதில்லை. வெளியில் மழைபெய்யும் போது வீட்டிற்குளிருப்பவன் மழையில் நனையாமலேயே அதன் குளிர்ச்சியை அனுபவிக்க முடியும் இல்லையா? வெளியே உண்மையான மழைதரும் அதே குளிர்ச்சியை வீட்டின் உள்ளே நானும் அனுபவிக்கிறேன். மழைநீரில் நனைவது ஓர் அனுபவம் என்றால் நனையாமலேயே மழையை உணர்வது இன்னோர் அனுபவம். இரண்டும் உண்மைதான். ஆகவே ஓர் உண்மை என்றதைக் கலைத்து பல நிலைகள் கொண்ட உண்மையை நான் என் கவிதைகளின் மூலம் கட்டமைக்க முயல்கிறேன்'' என்றார். நிகழ்ச்சி முடியும் வரை யாரும் அங்கிங்கு நகராமல் உன்னிப்பாய் செவிகளை கொடுத்திருந்தார்கள். பலர் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஓர் இலக்கிய நிகழ்வை இக்கூட்டம் ஞாபகப்படுத்தியது என்று பேசிக்கொண்டிருந்தார்கள். இதுவும் அபூர்வம்தான்.
-பாரி
(நன்றி:தினமணி) 18பிப் 2011
1 comment:
Thanks for Sharing.
Post a Comment