ரா.மா.வின் என் பதிவு குறித்து அபிலாஷ் சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டிருந்தார். அவருக்கு என் நன்றிகள். சிறு கடிதமாயினும் உரையாடலுக்கான தன்மைகள் அதிலொரு அழைப்பாய் இழையிட்டன. அந்தக் குரல்தான் இன்றையத் தேவையாக உள்ளது.
அபிலாஷ் இதழியல் பற்றி தெரிவிக்கும் கருத்துக்கள் ஒரு வெளியாளின் பார்வைக்குள் நின்று இயங்குபவை. அவரின் குரல் பொதுவான அபிப்ராயங்களால் நிரம்பியுள்ளது. நான் தொந்தரவு என்று குறிப்பிட்டது புதிய எழுத்தாளர்களை அல்ல; ’பெரும் ஜாம்பவான்’களை.
அல்லது அப்படி சொல்லிக்கொள்பவர்களை. நான் குறிப்பிட்ட தொந்தரவின் விளக்கம்:மிரட்டல் என்பது. கொஞ்சம் நாசூக்காக எழுதியதால் பிழையாக புரிந்துகொள்ள வழிவகுத்திருக்கிறது..
ஆரம்ப அடையாளத்திற்காக காத்திருக்கும் புதுபடைப்பாளிகள் மனித நேயம்மிக்கவர்கள். ஒருபோதும் உளவியல் வன்முறை சார் நடவடிக்கைகள் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அதன் வரைபட நுட்பத்தினை அவர்கள் கற்க காலங்களாகும்.புதியவர்கள் பெரும்பாலும் தன்படைப்பின் ஆகிருதி குறித்த சந்தேகத்திலேயே
இறுதிவரை நேரத்தை செலவிடுவதால் அவர்கள் இதழியளார்களுடன் வம்புக்கு நிற்பதில்லை. அவர்களிக்கு இமெயில் அனுப்பி மிரட்டுவதுமில்லை. ஆனால் ஜனநாயத்திற்கான குரலை பாதுகாக்கிறோம், பெண்ணிய சுதந்திரத்தை பேண விழைகிறோம் என்று கிளம்பியவர்களின் ஒருசிலர்தான் அடியாட்களை ஏவிவிடும் அளவிற்கு தாதாவாக மாறியுள்ளார்கள். ஆரம்பக்கட்ட எழுத்தாளன் பாவம். அப்பாவி. மிட் நைட்டில் புகழடைந்த கருத்தியல் தாதாக்கலோடு அவர்களை
ஒப்பிடக் கூடாது.
அபிலாஷ் குறிப்பிடுவத்தைபோல புதிய படைப்பாளிகளை பத்திரிகைகள் கண்டுபிடிக்கவில்லை என்பதில் கொஞ்சம் உண்மையுள்ளது.
இப்படி டிஸ்கவரி செயும் அளவிற்கு எப்போதும் பத்திரிகைகள் களம் இறங்கியதாக நம்மிடம் வரலாறுகள் இல்லை. பலர் வெகுசன ஊடகத்தின் வெளிச்சம் படாமலே இன்று வளர்ந்திருக்கிறார்கள். பின்பு அவர்களை ஊடகங்கள் பயன்படுத்திக்கொண்டன அல்லது பயன்படுத்திக் கொண்டுள்ளன என்பதே நிசம். பத்திரிகைகள் இன்றும் பேச அச்சப்படும் பல விஷயங்களை அபிலாஷ் போன்றவர்கள் தைரியாமாக எழுத முயன்றிருப்பது எந்தப் பத்திரிகையின் தைரியத்தால் அல்ல இங்கே கவனிக்கப் படவேண்டிய விஷயமில்லையா.
அபிலாஷ் என் கவிதைகளை படித்திருப்பதாக குறிப்பிட்டதே எனக்கு ஆச்சர்யம் தரும் தகவல். கவிதைகள் குறித்து எழுதுவதாக வேறு சொல்லியிருப்பது அதைவிட இன்ப அதிர்ச்சி. உதிரிகளை யார் இங்கு கண்டுகொள்கிறார்கள் சொல்லுங்கள்
அன்புடன்
கடற்கரய்
1 comment:
கடற்கரய்,
புதிய படைப்பாளிகளை இனங்கண்டு அடையாளப்படுத்துவதென்பதை கவிதை போன்றவற்றில் மட்டுமே காண முடிகிறது. கட்டுரை, சிறுகதை என வர பல வேலிகளைக் கடந்துதான் உள் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதற்குள் சோர்வுற்று சலிப்பாகிறவர்கள் அதிகம். ஊடகங்களின் அரசியல் வெகு கொடுமையானது. வெகுஜன ஊடகங்களில் பணி புரிபவர்கள் நவீன கொத்தடிமைகளாக நடத்தப்படுவதை கண்கூடாக காண்கிறேன்.
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
Post a Comment