Saturday, March 28, 2009

சுகந்தி சுப்ரமணியன்: பெண்மையின் வழித்தடம்; பெண்ணுடலின் ஆரம்பச் சொல்







தற்காலப் பெண்ணுடல் ஆவணப்போக்கின் ஆரம்பச் சொல்; சுகந்தி சுப்ரமணியனுடையது. இவரது இருப்பு உறுதியாகின்ற வரை தமிழ்க்கவிதையின் போக்கு ஆண்சார்பு நிலைப்பாட்டையே
கருப்பொருளாகக் கொண்டிருந்தது என்பதை தனியே நான் இங்கு குறிப்பிட்டுச் சொல்லத்தேவை இல்லை. கவிதையின் ஆன்மா உடலற்றது. ஆண் பெண் என்ற பால்பேதம் அதற்கு ஸ்தூல
அளவில் இல்லையென்றாலும் பெளதீக அளவில் அது உடல் என்பதை அடையாளப்படுத்துகிறது.
ஒருவிதத்தில் சொல்லிப் பார்த்தால் புறச்சூழல் என்பதன் அடையாளமாக வருகின்ற பொருட்கள் ஆணுக்கும் பெண்னுக்கும் வெவ்வேறானதாகவே உள்ளன. ஆண் மையப்பட்ட வஸ்துகளில்
பெண்மையின் இருப்பென்பது இருள் தன்மையடைந்துவிடுகிறது. ஆணின் உலகை எடுத்து மொழியும் ஒரு வஸ்து, அதில் பெண்மையை உள்ளடக்கிக் கொள்ளமுடியாத நிலையில்
அதிகாரம் செலுத்துகிறது. அந்தப் பொருளின் அதிகாரம் ஆணின் மைய அதிகாரத்தின் அடையாள அரசியல் மூலம் மெளனமான வடிவில் நுண் அரசியல் நிகழ்த்த வைக்கிறது.
ஒரு மொழியின் இருதலைப்பட்சமான நிலைப்பாட்டினை இங்கேதான் நாம் புரிந்து கொள்கிறோம்.
இந்த இருதலைப்பட்ச நிலைப்பாடு புறவடிவில் தொடங்கி குடும்பமாக கட்டமையும்போது ஆணின் அதிகார நிறுவனமாக அது வடிவமடைந்துவிடுகிறது. குடும்ப மையத்திற்குள் ஆணின்
இருப்பு பெண்ணின் மீதான பாலியல் அதிகாரமாக மடைமாற்றம் அடைகிறது. இப்பொழுது பெண்ணிருப்பு என்பது இன்மையை எய்துகிறது. ஆவேதான்
“பாலியல் உறவுகளில் உள்ள அதிகாரத்திற்குள் செல்லாமல்,பாலின சமத்துவமின்மையைப் பற்றி விவாதிக்க முடியாது” என்பதனை அமர்த்யா சென் தன் நிலைப்பாடாகவே முன்வைக்கப்படுகிறது.
“அதிகாரம் எனப்படுவது பாலியலில் மையமானதாக இருக்கிறது. பாலினச் சமத்துவமின்மையில் நேரிடையாகவும் மறைமுகமாகவும் அதிகாரத்தின் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது.
தனது திறன்களை வளர்த்துக் கொள்வதில் சந்தர்ப்பத்தைப் பெறுவது, சுயமரியாதை மற்றும் மற்றவரின் மரியாதையினைச் சாதித்தெடுப்பது என்பதிலெல்லாம் பெண்களை விடவும் ஆண்களுக்கு
சாத்தியப்பாடுகள் மிகுந்திருக்கக் காரணம், இந்தப் பாலின உறவுநிலையிலுள்ள அதிகாரமே. ஆகவே பெண்ணின் அரசியல், அதிகாரம் என்பதெல்லாம் சமூக அடுக்குகளில் நிகழும் போதுதான்
சமூகமாற்றம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி போன்றவை உந்துதல் கொள்ளும்” என்று ழீன் ட்ரெஸுடன் அமர்த்யா சென் சேர்ந்தெழுதியுள்ள Indian: Economic Development and Social
Opportunity என்ற நூலில் வற்புறுத்துகிறார்.
பாலியல் சுதந்திரமான பெண்ணுடல் என்பது ஒற்றைக் கோணத்திலான பாலியல் மீட்பிலிருந்து துலங்குகிறது. ஆதிக்கத்தின் மையமாக உள்ள அகமணமுறையை உடைப்பதில்
துவங்கி ஆண் மொழியிலான கருத்தாடல்களை மீட்டுருவாக்கம் செய்வதில் பிரதானம் கொள்கிறது. ஆக, வரலாறு, இலக்கியம்,தத்துவம்,கலாச்சாரம் என்பதில் எல்லாம் பெண்பால்
தன்மையை இட்டு நிரப்பமுற்படுகிறது.
“எப்பொழுதும் அவளுக்குள்ளே இருக்கிறது; குறைந்தது அந்த நல்ல தாயின் கொஞ்சநஞ்சப் பாலாவது உள்ளே ஊறிக் கொண்டுதான் இருக்கிறது. அவள் தன் அந்த வெள்ளை
நிறப்பாலால் எழுதுகிறாள்” என்ற ஹெலன் சீக்சூவின் பிரகடணம் இதுவரையிலுள்ள பிரதிகளனைத்திலும் தாய்ப்பால்வாசனையினை கமழவிடுகிறது. இதன்மூலம் மொழியின் புழக்கத்தில்
பெண்சார்பு சாத்தியமடைகிறது.இங்கே பாலினமற்றது மொழி என்ற பழங்கருத்தாடல் தன் போதாமையை நிரூபணம் செய்து கொண்டுவிட்டது.
இந்தமாதிரியான கருத்தாடல்கள் எதுவும் ஒலிக்காத ஒரு காலச்சூழலில் பெண் என்ற குறிப்பான்களோடு 1988ஆம் ஆண்டுவாக்கில் ‘புதையுண்ட வாழ்க்கை’எனும் தொகுதியின்
வழியே தனது கவிதைகளை முன்வைத்தார் சுகந்தி சுப்ரமணியன்.
அதுவரை தமிழ்க் கவிதைப் பரப்பில் பதிவுறாத பெண் வஸ்துகளின் சொற்கள் இவரால் அத்தியாவசியமான வஸ்துவாக நிறுவப்பட்டது. இந்திய சமூகத்தில் பெண்ணின் பிரதிநிதித்துவமாக வைக்கப்
பட்ட வஸ்துகளைக் கையாண்டு அதன் எதிர்வலிமையைத் தன் கவிதையினூடே சொல்ல முற்பட்டார் சுகந்தி. அன்றாட குடும்ப புறச்சூழலில் எதிர்ப்படும் பெண்மையின் இடர்ப்பாட்டினை
பேசத் தொடங்கிய சுகந்தி, குடும்ப அமைப்பிற்கு வேறான ஒரு ’வெளி’யை பெண்ணுலக உட்டோபியாவாக(Utopia) உருவாக்கினார்.அதை தன் Hypothesis சாரமாகவே பதியவைக்கத்
தொடங்கி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.
வாழ்க்கையைத் தாண்டிய ஒரு வாழ்க்கை. மனதைத் தாண்டிய ஒரு மனம். சமூகத்தைத் தாண்டிய ஒரு சமூகம். ஆணைத் தாண்டிய ஒரு ஆண். மரணத்தைத் தாண்டிய ஒரு அமரத்துவம். அன்பைத்
தாண்டிய ஒரு அசலான காதல். துக்கத்தைத் தாண்டிய ஒரு இன்பம். உறக்கத்தைத் தாண்டிய ஒரு உறக்கம். நிலத்தைத் தாண்டிய ஒரு பிரயாணம். மறதியைத் தாண்டிய ஒரு விழிப்பு.
அழுகையைத் தாண்டிய ஒரு சுகம். நிம்மதியைத் தாண்டிய ஒரு மெளனம். உறவைத் தாண்டிய ஒரு ஸ்நேகம். உரிமையைத் தாண்டிய ஒரு சுதந்திரம். அழகைத் தாண்டிய ஒரு சிலாகிப்பு.
இரைச்சலைத் தாண்டிய ஒரு அமைதி.திசையைத் தாண்டிய ஒரு பறத்தல். இப்படி சமூகத்தால் வழங்கப்பட்ட வரம்புகளை ஒட்டி தாண்ட முடியால் ஏக்கம் கொள்கிறது சுகந்தியின் கவிதை உலகம்.
சுகந்தி அடிக்கடி பயன்படுத்தும்
மீன்,கதவு,பகல், ஒளி,நதி, வானம்,பறவை,சூரியன், ரயில்,மரம்,வெளிச்சம் என்ற படிமங்கள் எல்லாம் கட்டுப்படலுக்கு அப்பாற்பட்டவை.இயற்கையின் உபாசனையாக சுழலும் இப்படிமங்கள்
சுதந்திரத்தினை ரட்சிப்பவை.இதற்கு ஒத்து வீடு,நாற்காலி,சுவர்,கடிகாரம், நாள்காட்டி என்று வரும் பொருட்கள் எல்லைகளை விதிப்பவை.இந்த எல்லைகளை விதிக்கும் வஸ்துகளை கைக்கொண்டு
ஒருவிதத்தில் தன் எல்லையின் பரப்பை கேள்விக்குள்ளாக்குகிறார் சுகந்தி.

‘இரவலும்,கடனும் யாசகமல்ல; /சந்தோஷ உறவுகளின்/ஒரு திசை கூட’என்று சந்தோஷத்திற்கு புதுப் பொருள் சொல்கிற சுகந்தி,
‘முரண்பாடுகளே வாழ்க்கை என்றான பின்/எது சரி?/எதுதான் தவறு?’ என்று சராசரி தன்மைக்குள் வழுவி விழுந்துவிடுகிறார்.
ஒரு மட்டத்தில் உற்சாகத்தின் பாடலாக ஒலிக்கும் தொனியை தன் கவிதையில் கேட்டுக் கேட்டு சலித்த பின் அவருக்கே தெம்பு குன்றிவிடுகிறது. உடனே தெம்பின்மையின் பாடலாக
உருமாறுகிறது இவரின் Hypothesis.
முழுவிதமான நோக்கில் கவனித்தால் கவிதையிலும் நடப்பிலும் சுகந்திக்கு வாழ்க்கை ஒன்றுபோலதான்.கவிதை தனி வசிப்பிடமல்ல; அதுதான் இருப்பிடம் அவருக்கு.ஆகவே
வாழ்வின் குறை கவிதையிலும் குறையாகிறது. குடும்பத்தின் அசதி கவிதையிலும் அசதிதான்.இதனால்தான் இவர் கவிதைக்கென்று தனிக்குடித்தனம் செய்ய முடிவதில்லை.
அழுகுகின்ற வாழ்வை எண்ணி கவிதையில் உணர்ச்சி கொப்புளிப்பதில்லை.அதன்போக்கில் அழுகலின் வாடை அப்படியே வந்துவிழுகிறது.எனவே எல்லா கவிதையிலும்
இடைவிடாது சமர் என்பது சுகந்தியிடம் பூடகமாக வலுப்பெற்றுக்கொண்டேயுள்ளது.
யாருக்கோ பதிலளிக்கும் பொருட்டு பேசப்படும் வரிகள் யாருக்கானதுமல்ல;தனக்குத்தானே பேசிப் பேசி ஓய்வுறும் தன்மையே சுகந்தியின் மையப் பொருளாக பதிவுறுகிறது.
இந்த வரிகள் யாருக்குமான புகாருரைகள் அல்ல.அவருக்கான பேச்சுகளை அவரே அவருக்குள் முணங்கிக்கொள்கிறார். அப்படித்தான் கணிக்க முடிகிறது ஒட்டுமொத்த கவிதைகளையும் வாசிக்கும் போது.

ஒரு கவிதை:‘யாரைப் பற்றியும் பேச எனக்கு உரிமையில்லை/ஆனால் என்னைக் குறித்துப் பேச எல்லோருக்கும்/உரிமையிருப்பதாக அவன் சொன்னான்/யார்?எப்போது? ஏன்?’ இப்படி
பேசுகிறது.
அந்த அவன் என்ற சொல் ஆணாதிக்க உரிமையை பறைசாற்றுகிறது.அதைத்தான் சுகந்தி நாசூக்காக்க,வலிமை குன்றாமல் எதிர்க்கேள்வி எழுப்புகிறார்.காலம் காலமாக வரும் அந்த ‘அவன்’யார்?
எல்லாவற்றிற்கும் உரிமை வழங்கும் பணியை அவனுக்கு யார் கொடுத்தது? அந்த அவன் எப்படி அவளை விட மேலானவனாக கருதப்பட்டான்.அந்தச் சாவியை தன் பொறுப்பில் மட்டுமே
வைத்திருக்கும் அவசியம் அவனுக்கு ஏன் நேர்ந்தது? இவ்வாறு நீண்டு போகும் வாதத்தை உணர்ச்சி மட்டத்தில் மட்டுமே எழுப்பாமல் கலாச்சார மட்டத்தில் நின்று ஒலிக்கின்ற பலத்தினை
சுகந்தி, கவிதையில் அநாயாசமாக நகர்த்திச் செல்கிறார்.
சுகந்தியினால் கவிதையில் எதைக்குறித்தும் சரளமாகப் பேச முடிகிறது.முதலில் கவிஞனுக்கு இது ஒரு பாக்கியம். அது கவிதையாகாது போகலாம்.கணிப்பில் பிசகு நேரலாம். அது முக்கியமல்ல;
எதன் பொருட்டும் நினைத்ததும் வார்த்தை வந்துவிழவேண்டும். வா என்றால் வரிகள் அடுக்கி நிற்கவேண்டும். அப்படி சொன்ன சொல் கேட்கும் கவிதை என்பது வலியல்ல;.பிரசவம்.இந்தப் பிரசவம்
சுகந்திக்கு நினைத்ததும் நேர்கிறது.அடுப்பங்கரையில் அன்றாட காட்சிகளைக்கூட வலை பிண்ணுவதைப்போல வார்த்தைகளை வைத்து கவிதையாகப் பிண்ணிக்கொண்டே போகிறார்.
ஆக கவிதையில் பிரக்ஞை என்ற மட்டத்திற்கே திரும்ப முடியாமல் போகிறது அவரால். வந்தது நின்றது மேனிக்கு பல கவிதைகள் வல்லமைகொள்ளாது தவிக்கின்றன.
அந்தக் கோணத்தில் பலரால் எடுத்தாளப்பட்ட கவிதைகளைத் தாண்டி ஒரு கவிதையினை அடையாளம் காண்பது இயலாமல் போகிறது. அப்படி இங்கே பலராலும் எடுத்துப் பேசப்பட்ட கவிதை ஒன்று:
‘எங்களூர் நதி/ எங்கே போய்க்கொண்டிருக்கிறது?தெரியாது/ கல்யாணமானபின்/ ஆறு எதுவரை போகிறது/காட்டுங்கள் என்றேன்/ஐம்பது மையில் தள்ளிப்போய்/ஓர் அணையைக் காட்டினார்/
இதுவரைக்கும்தான்/ எனக்கும் தெரியுமென்றார்/ஆனாலும் ஆறு போய்க்கொண்டிருந்தது.’ எப்படி இருக்கிறது கவிதை?ஆறு போய்க்கொண்டுதான் இருக்கும் வாழ்க்கையைப்போல. யார் தடுத்தும் அது ஓய்வதில்லை.
இக்விதையில் பேசப்படும் கருத்தென்ன.
ஊரில் காலம்காலமாய் ஊர்ந்து செல்லும் ஆறு, விரவிக்கிடக்கும் வயல், நெளிந்து ஓடும் ஓடை இதெல்லாம் பெண்ணின் புரிதலுக்கு அப்பாற்பட்டவையாக நம் சமூகம்
கட்டமைத்திருக்கிறது என்பது.
ஆண் சமூக மொழியில் ஊரின் வரைபடம் பெண்ணுக்குத் தேவையற்ற ஒன்று. நிலத்தின் பதம், அரசியலின் விதம் எல்லாம் பெண் என்பவள் இருப்பற்று அழிக்கப்படுகிறாள். நதியைப் படிப்பது என்பது
நாகரிகத்தைப் படிப்பது. நதியின் வழியே நாகரிகம் என்பது பெண்ணுக்கு புலப்பட்டுவிட்டால் ஆணின் அதிகாரம் நசிந்துவிடும், தகர்ந்துவிடும்.ஆகவே ஆற்றைக் கடக்காத அறிவை பெண்ணிற்கு வழங்கியது
ஆண் மையப்பட்ட சமூகம் என்பதையெல்லம் இக்கவிதை நதியைப் போல ஓடி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது இல்லையா?
அடுத்த கவிதையொன்று:
‘இன்னும் தஞ்சை வரை கூடப் போகவில்லை/ஹைதராபாத்தின் அனல் காற்று தெரியும்/ஊட்டியின் பனிக்காற்றைக் கூட/இன்னும் உணரவில்லை/எங்களூர் நொய்யல் நதி தெரியும்/
இன்னும் எனக்கு கங்கைகூட தெரியாது.”என ஏங்கும் சுகந்திக்கு கடைசியில் சொல்ல முடிவது எல்லாவற்றிற்கும் ‘‘ஆமென் ஆண்களே”தான்.
பொதுவாக பயணம் அல்லது கடத்தல் சுகந்தியை சதா வருத்தமடையச் செய்யும் காரியம். ‘மரங்களைத் தேடிப்போவதற்கு’ஆசை. ஆனால் ‘வாகனம் ஏற வேண்டிய தூரங்கள்’ அழுத்துகின்றன.
உடனே‘என்னைக் கொன்று இந்த மண்ணில் புதைத்தாயிற்று ஏற்கெனவே.’என்கிறார்.
சுகந்தி அலைந்து அலைந்து யாசிப்பது ஒன்றே ஒன்றுதான்:அது நிம்மதி. அது கிடைத்த பின் ‘வாழ்க்கையவிட முக்கியமானது வேறு ஒன்றும் இல்லை’ என்று கீழே இறங்கிவிடுவார்.
சுகந்திக்கு என்னதான் பிரச்சனை. அவர்தான் பிரச்சனை. அவருக்கு பிறரின் உறுத்தலைவிட ‘என்னை நான் உறுத்தாதவரை’தான் முக்கியம்.
தடையற்ற வாழ்வினை யாசிக்கும் போதே ‘தாழற்றுத் திண்டாடும் மனக்கதவு’ அவரை உறுத்த ஆரம்பித்துவிடுகிறது.
‘மனித நடமாட்டமில்லாத இடங்கள் அபூர்வமானவை;அழகானவை கூட’ அது வேண்டும் சுகந்திக்கு. அங்கே சென்றுவிட்டால் ‘எனக்கே பிடிக்கவில்லை./
எனது-நான்’ என்கிற அலுப்புக் கவ்வுகிறது. உடனே ‘சிறகுகள் இழந்த பறவையாய்/வானத்தில் மிதக்கிறது உயிர்’என உயிர்ப்புக் கொள்ளும்
சகந்தி, ‘கண்கள் தூக்கம் மறந்ததற்காய்’ வருத்தமுறுகிறார். தூக்கத்தினைப் பிடிக்கமுடியாத தோல்வி தாளாமல் ‘நான் இன்னும் விழித்திருக்கிறேன்/
எனதுறக்கத்தில்’என்று சமாதானம் அடைகிறார்.மறுபடி வேறு ஒரு இடத்தில் ‘சிலர் மாத்திரையில்/இன்னும் சிலர் சாராயத்தில்/எல்லோரும் உறங்க/நடுநிசியில் நான்/தேடிக்கொண்டிருக்கிறேன்/
உறக்கத்தை’என விம்முகிறார்.
எல்லோருக்கும் தனித் தனி உலகம். தனித் தனி நிறங்கள். தனித் தனிக் காட்சி. இதுதான் சுகந்தியின் கவி விருப்பு.ஒருவிதத்தில் அவரின் கவிதைக் கோரிக்கை.
‘உப்பு மிளகு சேர்த்து/என் உடலை நானே ருசிக்கிறேன்/சொல்லத் தெரியாத பறவை/தன் சந்தோஷத்தை/பறந்து பறந்து நிரப்புகிறது வெளியில்/எல்லோர்க்குமான உலகம்/தினசரி நிகழ்கிறது/
நாமதைக் காண்பதில்லை.’ஆம். எல்லோருக்குமான உலகை எப்படி காண்பது. அதன் உதயம் காணாமலே மறைவை எட்டுகிறதே எப்படி? இவையெல்லம் சுகந்திக்குள் எழும் வினாக்கள்.
வினாக்கள் எல்லவற்றிற்கும் பதில் தெரியவேண்டுமா என்ன? வேண்டாம் என்றாலும் விடுவதாய் இல்லை அவர் மனம். சதா நச்சரிக்கிறது. கிடந்து இம்சிக்கிறது.
இப்படி நோய்க் கூறுகளினூடே வாழ்ந்து அவதியுற்ற ஒரு பெண்ணின் அவதிகளுக்கு இந்த ஆண்வயப்பட்ட உலகம்தான் காரணம். அதன் நிரூபணம்தான் இப்பிரதிகள் நமக்கு வழங்குகின்றன.
ஆண்வயப்பட்ட உலகம் என்பதை படைப்பாளியின் குடும்பம் என்ற சிறு பரப்போடு குறுக்கிப் பார்க்கவேண்டாம் என்பது நான் இன்கே அழுத்தம் தர விரும்புவது.

சுகந்தியின் கவிதைகளில் குடும்பச் சித்திரம் என்பது பிரதான அங்கம் வகிக்கிறது.அது ஒன்றே அவரின் உலகம். அவர் மீற விரும்பிய உலகம்.
குடும்பத்தில் நிகழும் தினசரி வேடிக்கைகள், சங்கடங்கள் வந்துவந்து ஆக்கிரமிக்கின்றன அவரது கவிதைகளில்.அதுவே சுகந்தியின் தனித்த அடயாளமாக தென்படுகிறது.
அதற்காகவே அவர் முக்கியத்துவம் பெற்றார்.பெண்பால் அரசியல் தீவிரம் கொண்ட 90களுக்கு அப்பால் சுகந்தியின் படைப்புக்களை விசாலமான
முறையில் பெண்கவிஞர்கள் எல்லோரும் சேர்ந்து கவனப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஏனோ மெளனமே நிலவியிருக்கிறது. அவரது தொகுப்பில் ஆண் பாடைப்பாளிகளின் முன்னுரை,மதிப்புரைகளே வலிமை சேர்க்கின்றன.
தனது ‘மீண்டெழுதலின் ரகசியம்’ தொகுப்பில் கூட சுகந்தி நன்றி நவிலும் பகுதியில் நினைவில் நிற்கும் முகங்களுக்கு நன்றி என குறிப்பிடும் அதிகப்படியான பெயர்கள் எல்லாமே
ஆண் படைப்பாளிகளாகவே உள்ளனர். அந்நூலை அம்பைக்கும் லதா ராமகிருஷ்ணனுக்கும் அவர் சமர்ப்பித்திருக்கிறார்.படைப்பைத் தாண்டி வாழ்வியல் சூழலுக்குள் சென்று சுகந்திக்கு
உதவியவர்கள் இவ்விருவரும். அதற்காக அவர்கள் கொளரவிக்கப் படவேண்டியவர்கள், புற வாழ்வின் நிர்ப்பந்தத்தைத் தாண்டிப் போய் உதவுகின்ற தீரம் பலருக்கு வாய்க்கப்பெறாதென்பதால்.
இந்த பெண் படைப்பாளிகள் மெளனப்போக்கில் சில சங்கடங்கள் எழுகின்றன.
ஆண் ஆதிக்கம், ஆண் பிரதிகளை நிர்-நிர்மாணம் செய்தல் என்றெல்லாம் விவாதிக்கின்ற பெண்படைப்பாளிகள் பெண் பிரதிகளைப் பற்றிய கருத்தியலை வளர்க்காமல் போவதேன்?
அதுவும் இன்று கவிதைப் பரப்பு சகலத்துறைகளைவிட வீச்சு பெற்றிருக்கின்ற தருணத்தில் இம்மெளனம் தமிழின் பெண் முன்னோடிக் கவிஞருக்கு ஏன் நிகழ்கிறது? ஆயுள் முடிந்த காலத்தில்தான்
படைப்பாளி கெளரவிக்கப் படவேண்டும் என்ற ஊமைத்தனமான எண்ணம்கூட ஒருவித நுண் அரசியலின் வெளிப்பாடே என சுட்டத் தோணுகிறது.
சுகந்தியின் மறைவையொட்டி மாலதி மைத்ரி நடத்திய அஞ்சலி நிகழ்வைக் கடந்து வேறெதும் பேசும்படியாக இல்லாதது வருந்தத்தக்க ஒன்று. பிரகடணங்களைத்தாண்டி செயல்பாட்டினை
எட்டவேண்டிய காட்டாயத்தை சுகந்தியின் இன்மை நமக்கு (குறிப்பாக பெண்படைப்பாளிகளுக்கு) எடுத்துரைக்கிறது.

சரி,சுகந்தியின் கவிதைக்குள் மறுபடி திரும்புவோம்.எஸ்.லச்சுமி பாட்டி,ஆர். லச்சுமி பாட்டிக்குமான நட்பை ஒரு குறும்பட வடிவில் சித்திரப்படுத்துகிறது ஒரு கவிதை(பக்:17).
எஸ்.பாட்டி,ஆர்.பாட்டிக்குமான உறவு குறித்த பரிச்சயம் பற்றிய
சந்தேகத்துடன் ஆரம்பமாகிறது அக்கவிதை. ஆர்.பாட்டி ஒரு விதவை. எஸ்.பாட்டி விவாகரத்தானவள். அப்படியொரு அன்னியோன்யம் இரு பாட்டிக்குள்ளும். ஸ்நேகிதத்தின்
உச்சம் வெளிப்படுகிறது வரிகளில். கல்யாணம்,கருமாதி என்றால் ஜோடி பிரிவதில்லை.ஒப்பாரிப் பாட்டில் வரிக்கு வரி இருவருக்கும் அத்துப்படி. வரி பிசகாமல் பாட்டை பின்
தொடரும் வல்லமை
பெற்றவர்கள் இருவரும். சுகந்தியின் திருமணத்திற்காக வாங்கிய கடன் காசிற்கு வட்டி கேட்கிறாள் எஸ்.பாட்டி. உடனே ஆர்.பாட்டியின் முகம் கருக்க, உறவில் விரிசல் எழுகிறது. பாட்டியும்
பாட்டியும் பிரிந்து போனார்கள். வருஷத்தைக் கடந்துபோனார்கள்.முகத்தை மறந்தே போனார்கள். எஸ்ஸும்,ஆரும் தடையமில்லாமல் போனார்கள்.
பாட்டிகளுக்குள் உறவு முறிந்ததை குறித்து புகார் இல்லை. ஆனால் சுகந்திக்கு முள்ளாய் தைக்கிறது.நட்பின் அறம் சுடுகிறது. நீதி வலுக்கிறது.
ஒரு ஆவணத்தைப் போல இரு மூதாட்டியின் நட்பு யாதார்த்தமாக பதியப் பட்டிருக்கிறது இக்கவிதையில்.
பெண் உறவில் எள்ளல், கயமை, சீக்கு என்று விரியும் கவிதைகள் ஆணுலகத்தின்பால் குரோதம் பொழிகின்றன. அதன் வேரை அறுத்தெரிந்துவிட்டுத் திரிய முற்படுகின்றன.
சுகந்தியின் கவியுலகம் எல்லா நிலையிலும் Binary consept-டினால் உருக்கொள்கிறது.சரிXதப்பு, நல்லதுXகெட்டது,துக்கம்Xமகிழ்ச்சி,நிம்மதிXசலனம்,உயிர்Xஇறப்பு,
அமைதிXஇரைச்சல்,கேள்விXமெளனம்,
வீடுXஉலகம்,பயணம்Xமுடங்கல்,முழுமைXகுறைபாடு,ஆசைXநிராசை,முக்கியத்துவம்Xமுக்கியமற்றது,ஞாபகம்Xமறதி,ஸ்நேகம்Xதுரோகம்,பிறப்புXஅழிப்பு என்று ஊசலாடுகிறது.
நிலையாமையின் முழு ரூபமாக காட்சி கொள்கிறது.

அவரது வாழ்க்கையும் அவ்வாறே என்பதைப் புரிந்துகொள்ளும் போது பதற்றத்தின் பரவல் கவிழ்கிறது. ‘தமிழினி’ வெளியீடாக வந்த சுகந்தியின் ‘மீண்டெழுதலின் ரகசியம்’
தொகுதியை முதலில் வாசித்த போது பெருத்த ஏமாற்றமே எனக்கு மிஞ்சியது. அதில் பெரும்பாலான கவிதைகள் பிசகில் தள்ளாடின. அளவுக்கு அதிகமாக பெண் கவிதைக்கு
சலுகைகள் வழங்கப்படுகிறதோ என்ற ஐயங்கள் மேலெழுந்தன. இப்போது ஒரு மருத்துவரின் பிரயாசையோடு சுகந்தியின் உலகை பொருள்கொள்ள முற்பட்டேன்.
அளவுகடந்த உஷ்ணம் அதில்.சொல்லுக்குச் சொல் பொருள் கூட்டல் நிகழ்கிறது.கசியும் அலரல் வெப்பத்தைப்போல மிதக்கிறது.அந்தச் சூடு ஆண் திமிருக்கு எதிரானது.
அங்கு அலைவுறும் நிலையாமை அவருக்கு மட்டுமே ஆனதல்ல.

‘‘கன்றும் உண்ணாது காலத்தினும் படாது/நல்ஆன் தீம்பால் நிலத்து உக்கா அங்கு/எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது/பசலை உணீயர் வேண்டும்/திதலை
அல்குல் என் மாமைக் கவினே” என்று தலைவனுக்காக ஏங்காத முதல் நவீனகாலத்து பெண்பால் புலவர் அற்பாயுலில் உதிர்வது தமிழுக்குப் புதிதல்லவே.

7 comments:

selventhiran said...

அடடா நீங்கள் பதிவும் எழுதுகிறீர்களா?! இத்தனைக் காலம் தெரியாமல் போய்விட்டதே.

பதிவுகள் எழுதத் துவங்கிய காலத்தில் தேசாந்திரி என்ற சொல்லில் ஈர்க்கப்பட்டு அந்தப் பெயரில் ஒரு பிளாக்கர் ஐடி துவக்கி ரிசர்வ் செய்து வைத்திருந்தேன். இனி அடையாளச் சிக்கல்கள் வரும் என்பதால் அதை டெலீட் செய்துவிடலாம் என்றிருக்கிறேன்.

ஒரு சிறிய அபிப்ராயம்: நெடிய கட்டுரைகள் காகித வடிவில் வாசிப்பு சுகம் தருபவை. இணையத்தில் இத்தனை நீண்ட கட்டுரைகள் படித்தல் எவர்க்கும் அயற்சியூட்டுவது.

யாத்ரா said...

கனத்த மனத்தோடு வாழ்வை அதன் கசப்புகளோடு எழுதிச்சென்றவரின் கவிதைகளைப் பற்றிய தங்கள் உரை அவரை வாசிக்கத்தூண்டுகிறது. இவர் இறந்த பிறகு தான் இவர் கவிதைகள் என் போன்ற பலருக்கும் அறிமுகம் என நினைக்கும் போது மிக வருத்தமாயிருக்கிறது.

கடற்கரய் said...

செல்வேந்திரன் முதலில் உங்களின் தாராளமனசிற்கு ஒரு நன்றி.
எனக்காக உங்களின் தேசாந்திரியை டெலிட் செய்யப்போவதாக சொன்னீர்கள் அதற்குதான் உங்களை தாராளவாதி என்றேன்.
உங்களின் கருத்து மிகமிக உண்மை.
குறுக்கி எழுதுவதே படிப்பதற்கு சுகம் தரும்.
ஆனால் சுகந்தி போன்ற ஒரு படைப்பாளியை புந்துகொள்ள வெளிநாட்டு வாழ் தமிழனுக்கு விரிவான பதிவுகளே பயன்தரும். ஆகவே அப்படி எழுதிவிட்டேன்.இனி சுறுங்க சொல்வேன்.
தொடர்ந்து பேசுவோம் நண்பரே.

கடற்கரய் said...

yathra இத்தனை காலம் ஒருவரை படிக்கவில்லையே என்று நாம் குற்றவுணர்வில் தவிக்க வேண்டாம். ஒரு வாசகன் எத்தனை நபர்களைதான் படிக்க முடியும். தமிழில் செவ்விலக்கியங்களை படிக்கவே நமக்கு இருக்கும் ஆயுள் போதாது.அவ்வளவு பெரிது. எல்லா நூற்களையும் வாசித்துவிட வேண்டும் என்று நினைப்பதே ஒருவிதத்தில் சாகவரம் கேட்பது போலதான் என்று ஒரு முறை நண்பர் நாஞ்சில்நாடன் நேர் பேச்சில் சொன்னார்.உண்மைதான்போல.

Vinothini said...

Ungal katturai nanru. (Enakku katturai neendu vittathath theriyavillai). Ungal puhaippadangalum azhakaka irukkinrana.

கடற்கரய் said...

thanks vinothini.

கடற்கரய் said...

thanks vinothini.