Monday, February 23, 2009

அ.மு. கடிதம்


அன்புள்ள நண்பரே,
வணக்கம்.
கவிதைகளை திரும்பத் திரும்ப படித்தேன். சூரியன் மறையும் நேரத்து வானத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பல வர்ணங்கள் தோன்றுவதும் மறைவதும் புது வர்ணம் உண்டாவதும் நடந்துகொண்டிருக்கும். அதுபோலவே உங்கள் கவிதைகளும். படிக்கும் தோறும் புதுப்புது அர்த்தங்களை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. ஒரு கவிஞன் சொன்னான் கவிதை என்றால் என்ன, ஒரு தருணத்தை விரிவாக்குவது என்று. உங்கள் கவிதைகளில் தொடர்ந்து காலத்தின் நகர்வு ஊடிழையாக துல்லியப்படுகிறது.முருங்கைப்பூ உதிரும் தாழ்வாரம் என்பதில் காலம் தெரிகிறது. நேற்றுத்தான் பிறந்த ஒரு பிஞ்சுக் குழந்தை. காலம். பிள்ளைகள் போன இடத்தில் அப்படியே வளர்ந்துவிட்டார்கள். இங்கேயும் காலம் சொல்லப்படுகிறது. மூன்றாம் நாள் காய்ச்சல் முடிந்து. மறுபடியும் காலம். இப்படியாக உங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ கால நகர்வு பாடல்களில் ஒருமையாக விரவிக்கிடக்கிறது. அது வெற்றி.ஐந்திணை வாழ்வு இயற்கையோடு ஒன்றிய மனநிலையை சொல்லும் கவிதை என்றே நினைத்து படித்தேன். ஆனால் கடைசி வரி எல்லாவற்றையும் மாற்றிப்போட்டது. தங்கக் காசை திருப்பி மற்றப் பக்கம் போட்டதுபோல, புது ஒளி, அதே மாற்று. அருமையான கவிதை. அனுபவித்தேன். வெளி உலகு இன்னொரு காலநகர்வை அழகாகச் சொல்லும் கவிதை. நேற்றைக்குத்தான் பிறந்த ஒரு பிஞ்சுக் குழந்தை என்று ஆரம்பிக்கிறது. முதல் ஐந்து வரிகளில் முழுமை பெற்றுவிடுகிறது. மீதி வரிகளை நான் படிக்கவே தேவையில்லாமல் ஆக்கிவிட்டது. நான்கு கண்கள் பட்டென்று வெளிப்படும் நாளாந்த நடைமுறைக் கவிதை. நான் ரசித்த சொல் தொடர் 'நான்கு வழிப்பாதை நாயொன்று.'
பொதுவாக முதல் வரியை படித்ததும் ஒரு சுமை நெஞ்சில் ஏறி உட்கார்ந்துகொள்கிறது. அடுத்த வரியை படிக்கப் படிக்க சுமை அதிகமாகிறது. இது உங்கள் கவிதைகளின் பொதுவான விதி. சுலபமில்லை மகளே என்னைப் பெரிதும் பாதித்தது. என் மகளை நினைத்துக்கொண்டேன். 'இனி நம் குடிலுக்கு திரும்பும் தூரம் சுலபமில்லை, மகளே. அது என் உள்ளங்கை ரேகைகள்போல கிளைத்துக்கொண்டே போகிறது' என்ற வரியில் உச்சம் கொள்கிறது. கவிதை முடிந்தது, ஆனால் பாரம் இறங்கவில்லை.
கவிதைகளைப்பற்றி எழுதக்கூடாது என்பது எனக்கு தெரியும். அவை உள்வாங்கி உள்ளூக்குள் அனுபவிக்கவேண்டியவை என்று நண்பர்களிடம் நான் சொல்வதுண்டு. கவிதை பற்றி எழுதி முடித்ததும் என் போதாமையை வெளிப்படுத்திய வெற்றி ஒன்றுமட்டுமே மிஞ்சுகிறது. கேட்டுக்கொண்டதால் எழுதினேன். தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள். அடிக்கடி ஒரு வரி எழுதுங்கள்.
அன்புடன்
அ.முத்துலிங்கம்

4 comments:

thenaturetrust said...

WARM GREETINGS FROM THE NATURE TRUST.
ITS A GREAT ARTICLE POSTED BY YOU AND MR.KALIDASS.EVERYBODY SHOULD JOIN HANDS TO CONSERVE THE NATURE.
THANKING YOU.

கடற்கரய் said...

நண்பா.. உங்களின் பதிவிற்கு நன்றி

Rajan said...

vaazhthugal

கடற்கரய் said...

rajan உங்களின் கருத்திற்கு நன்றி. தொடர்ந்து பேசிக்கொள்வோம்