Monday, August 22, 2011

மரத்தை மறைக்கும் மாமத யானை!


ஹெச் வில்லியம்ஸ் ஒரு ஆங்கிலேய அதிகாரி. யானை ஆராய்ச்சியாளர் கிடையாது. ஆனால் அவர் யானைகளுடன் வாழ்ந்திருக்கிறார். யானைகளுடனான அவரது சகவாசம், பணி நிமித்தமானது. காலனிய ஆட்சிக் காலத்தில் அவர், பர்மியக் காடுகளிலும் அதையொட்டி இந்திய அந்தமான் காடுகளிலும் அலைந்து திரிந்திருக்கிறார். 1931ம் ஆண்டில் வடக்கு அந்தமானை ஆராய வந்தக் குழுவில் இவரும் இருந்திருக்கிறார். வேட்டைக்காரனின் சாகஸத்துடன் தொடங்கிய வில்லியம்ஸின் வன வாழ்க்கை, போகப்போக யானைகளைப் பழக்கும் பர்மிய மக்களுடன் கூடிப் பிணைக்கப் பெற்ற ஒன்றாக உருமாறுகிறது.

1914-18 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகப் போரின் போது முதலில் வில்லியம்ஸ் பர்மாவில் ஒட்டகப் படையில் பணியாற்றினார். அடர்ந்த வனங்களில் தன் அன்றாட வேலைகளுக்கு மனித உழைப்பு எந்த அவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு இமியும் குறையாமல் யானைகளின் உழைப்பும் வில்லியம்ஸுக்கு முக்கியமாக இருந்திருக்கிறது. நாள்தோறும் மேய்ப்பாளன் இடும் கட்டளைகளை புரிந்துக்கொண்டு வேலை பார்க்கும் யானைகளை வெறும் மிருகங்களாக கருதாமல், அவற்றை மனிதன் தன் தேவைக்கேற்ப பழக்கப்படுத்தி வைத்திருக்கும் நுட்பத்தை வியக்க ஆரம்பிக்கிற வில்லியம்ஸின் மூளையில் ஒரு நாள் பொறித்தட்டுகிறது. இனி, வேலைகளோடு மட்டுமே மல்லுக்கட்டுவதை நிறுத்திவிட்டு, இந்த ஜீவராசிகளின் குணதிசங்களை உற்று நோக்கி புரிந்துகொள்ள முற்பட வேண்டும் என தீர்மானிக்கிறார். அன்று முதல் யானைகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணிக்கிறார். அன்றாட வரவு செலவு கணக்குகளை எழுத்தும் அதே மும்முரத்தோடு யானைகள் பற்றிய தன் நாட்குறிப்புகளையும் எழுத ஆரம்பிக்கிறார். அந்தக் குறிப்புகளோடு சேர்த்து தன் நினைவுகளையும் திரட்டி பல காலங்களுக்கு அப்புறம் ஒரு புத்தம் எழுத ஆரம்பிக்கிறார். அவ்வாறு உருவான நூல்தான் –யானைக்கூட்டம். அகல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள சமீபத்திய நல்வரவு. வன உயிரின ஆர்வளர்களை தாண்டி அனைத்து வாசகர்களும் படிக்க வேண்டிய புத்தகம் இது.

யானைகளை பற்றிய வில்லியம்ஸின் அவதானிப்பு ஒரு வெளிப் பார்வையாளனின் அறிவுலகத்தோடு பொருந்தக்கூடியது. அதே சமயம் அவற்றோடு அனுதினம் இரண்டறக் கலந்து வாழும் மக்களை விட அதிகப்படியான தகவல்களை எடுத்து சொல்வது. இன்னதன் காரணம் எதுவென்றறியாமல் ஒரு பழக்கத்தைப் போல மனிதனால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைகளுக்குள் புதைந்து கிடக்கும் பல்லாயிரமாண்டு கால அறிவை, ஒரு கோழியைப் போல சீய்த்து சீய்த்து மனித மனங்களின் தனது எழுத்தின் மூலம் மேற்பரப்புக்கு கொண்டு வருகிறார். வில்லியம்ஸின் அவரின் புத்தகத்தினை ஒரு சாக்காக வைத்து நாம் யானைகள் பற்றிய அடிப்படையான சில தகவல்களை அறிந்துகொள்வோம்

யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கினம்.தாவரங்களின் இலைத் தழைகளை மட்டுமே இவை உணவாக உட்கொள்கின்றன. நிலத்தில் வாழும் உயிரினங்களிலேயே மிகப்பெறிய விலங்காக யானை கருதப்படுகிறது.இதன் சராசரியான வாழ்நாள் எழுபது ஆண்டுகள்.ஏறக்குறைய மனித வாழ்நாளை ஒத்த உயிரினமாக இது இருக்கிறது. அரிமா,வேங்கை போன்ற வலிமையான விலங்கினங்களுக்கு இணையான வலிமை கொண்ட ஒரு விலங்காக நிலத்தில் யானை திகழ்கிறது. அதே சமயம் புலி,சிங்கம் போன்ற விலங்குகளை தன்னிடம் நெருங்கவே அச்சுறுத்தும் விலங்காகவும் யானை இருக்கிறது. பல சிங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு யானையை ஒருவேளை கொல்ல நேரலாம்.அவ்வாறு ஏற்படும் சண்டைகள் இளைய யானைக்கும் சிங்கத்திற்குமான சண்டையாகவே இருக்கும். பருமனிலும் ஆகிருதியிலும் பலம் கொண்ட பெரிய யானையை வீழ்த்துவது என்பது மற்ற விலங்கினங்களுக்கு அவ்வளவு லேசானதல்ல.

.

· யானைகள் எந்த விலங்குகளையும் வேட்டையாடுவது இல்லை.தாவர உண்ணியான இவை மாமிசங்களை உண்ணாது. புலி, பசித்தாலும் புல்லை தின்னாது என்ற பழமொழி உள்ளதைப் போல் யானைக்கு எவ்வளவு கடும் பசி எடுத்தாலும் அது மாமிசம் உண்ணாது என்று நாம் ஒரு புது மொழி எழுதிப் பழகலாம். யானை மூங்கில்,கரும்பு போன்றவைகளை மட்டுமே விரும்பி உண்ணக் கூடியது.ஒரு நாளைக்கு 16 மணி நேரத்தை உணவு சேகரிப்பதில் மட்டுமே ஈடுபடுகின்றது. இவற்றின் செரிமானத்திறன் மிக மந்தமானது.உண்பதில் 40 விழுக்காடே செரிமானமாகிறது.எனவே அளவுக்கு அதிகப்படியான நிறைய உணவை இவை உட்கொள்ள வேண்டியுள்ளது.வளர்ந்த யானை நாள் ஒன்றிற்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவை உட்கொள்கின்றது.

· யானைக் குடும்பத்தில் மொத்தம் மூன்று சிற்றினங்கள் உலகில் இன்றைக்கு உயிரோடு எஞ்சியுள்ளன. ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள்,ஆப்பிரிக்கக் காட்டு யானைகள்,ஆசிய யானைகள் இவை மூன்றும்தான் அவை. இந்த இனங்களுக்கு இடையே பல வேறுபாடுகள் உண்டு.இனங்களுக்கு தக்க,நிலத்திற்கு ஏற்ப இவைகளின் குணநலன்கள்,அங்க மாறுபாடுகள் ஏராளம் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளைவிட அளவில், உருவத்தில் பெரியவை.ஆப்பிரிக்க யானைகளுக்கு காதுமடல்கள் பெரியதானவை.ஆண் பெண் இரண்டிற்கும் நிகரானத் தந்தங்கள் உண்டு. ஆசிய பெண் யானைகளுக்கு தந்தங்கள் இருக்காது. சில யானைகளுக்கு மட்டும் அரிதாக இருக்கலாம். ஆப்பிரிக்க யானைகளின் தலையையொட்டி உள்ள முதுகுபுறம் சற்று உள்நோக்கி வளைந்தும்,புடைத்த நெற்றி மேடுகள் அல்லாமல் சமனாகவும் இருக்கும். இவற்றிற்கு துதிக்கை நுனியில் இரண்டு இதழ்கள் இருக்கும்.முன்னங்கால்களில் நான்கு முதல் ஐந்து நகங்களும்,பின்னங்கால்களில் மூன்று நகங்களும் இருக்கும். ஆசிய யானைகளின் முதுகு சற்று உயர்ந்து மேடாக இருக்கும். நெற்றியில் இரு மேடுகளும் காது மடல்கள் சிறியதாகவும் இருக்கும்.இவற்றிற்கு துதிக்கை நுனியில் மேல் நோக்கியவாறு ஓரிதழ் மட்டுமே இருக்கும்.முன்னங்கால்,பின்னங்கால் உட்பட தலா நான்கு நகங்களைக் காணலாம்.ஆண் யானை பொதுவாக மூன்று மீட்டர் உயரமும் 6000 கிலோகிராம் எடையையும் கொண்டிருக்கும்.யானையின் தோல் சுமார் 3செ.மீட்டர் தடிமனாக இருக்கும்.யானை பெருத்த உடலைக் கொண்டிருந்தாலும் மலையின் மீதும் செங்குத்தான இடங்கள் மீது சரளமாக ஏறவும் இறங்கவும் செய்யும்.அந்தத் திறன் அவற்றிற்கு அதிகமாகவே உண்டு.

· யானையின் துதிக்கை மிக விஷேசமானது.மொத்தம் 40,000 தசைகளால் ஆனது. இந்தத் துதிக்கையினான் பெரும் மரக் கிளைகளை ஒடிக்கவும்,உடைக்கவும் அதனால் முடியும்.அதோடு பெரும் சுமைகளையும் துதிக்கையினால் இவை தூக்கிச் சுமக்கின்றன. உணவை எடுக்கவும் நீர் அருந்தவும் யானை தன் துதிக்கையை பயன்படுத்திக் கொள்கிறது.

· யானைத் தந்தங்களுக்கு யானைக்கோடு என்ற சிறப்பு பெயரும் உள்ளது. இந்தக் கோடானது யானையின் கடவாய்ப் பற்களின் நீட்சியாகும்.இதற்கு எயிறு,தந்தம் என்ற இதர பெயர்களும் இருக்கின்றன.தந்தம் என்றால் பல் என்று பொருள்.சராசரியாக தந்தங்கள் பத்து அடி வரை வளரும்.அதோடு இத்தந்தங்கள் சுமார் 90கிலோகிராம் எடை வரை கனக்கக்கூடியவை.

· தன்னுடைய துதிக்கைகளை தரையில் படுக்கை வாட்டில் கிடத்தி தரையிலிருந்து எழும் அதிர்வு ஒலிகளைக் கொண்டு, தன் புலனுணர்வை மூளைக்கு அனுப்புகின்றன என்கிறது யானைகள் பற்றிய சமீபத்திய ஆய்வுகள்.அதேபோல யானை, தான் புதியதா பார்க்கும் பொருட்களை தன் பாதங்கள் மூலம் மெதுவாக அழுத்திச் சோதித்தப் பின்பே அவற்றை சேதப்படுத்தவோ,அப்புறப்படுத்தவோ செய்கின்றது என்றும் இப்போது கண்டறியப்பட்டு இருக்கிறது.

· ஆசிய யானைகளின் தோல்,ஆப்பிரிக்க யானையின் தோல்களை விட கூடுதலான ரோமங்களை கொண்டுள்ளன. ஆண் யானையை தமிழில் களிறு என்பர்.பெண் யானையை பிடி என்பர். குட்டி யானையை கன்று என்று குறிப்பிடப்படுகிறது.யானை உரக்க எழுப்பும் ஒலியை பிளிறுதல் என்பார்கள். சீதோஷண மாறுதல்களில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள பொதுவாக யானைகள் சேற்றில் கிடந்து உழுலும் குணாதிசயம் கொண்டவை.மண்ணை வாறி உடல் முழுவதும் போட்டும் கொள்ளும்.இதனால் கடுமையான சூரிய வேப்பத்தில் இருந்தும்,அட்டைப் பூச்சி,உண்ணி போன்றவற்றிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்கிறது. யானைகளுக்கு வேர்க்காது என்பதால் இந்த மாதிரியான பழக்க வழக்கங்கள் பாதுகாப்பானதாக உள்ளன. இவற்றின் தோல் தடித்து இருப்பினும் இதன் உணர்திறன் என்னவோ அதிகம்தான்.

· யானை தன் வலிமையான உடற்பருமனை தாங்கும் அளவிற்கு அவற்றின் கால்கள், பாதங்கள் வலிமையானதாக இருக்கின்றன.இதன் கால்கள் செங்குத்தாக இருப்பதாலும் அகன்ற பாதங்கள் உள்ளதாலும் யானை நிற்பதற்கு தசையாற்றல் அதிகம் தேவையிராது. எனவே இவற்றால் அதிகப்படியான நேரங்கள் நிற்க இயலும்.ஆசிய யானைகள் அடிக்கடி உட்காந்து இளைப்பாரும்.ஆனால் ஆப்பிரிக்க யானைகள் உடல் சீக்கு காணும் வரை உட்கார்ந்து இருப்பதை தவிர்கவே செய்கின்றன. யானைகளால் நதிகளில் இலகுவாக நீந்த முடியும்.ஆனால் குதிக்க இயலாது.குட்டி யானைகள் பிறந்த சில வாரங்களிலேயே தாய்,தாதி யானைக் கூட்டங்களால் நீந்தப் பழகிக் கொடுக்கப்படுகின்றன

· யானைக்கு உருவத்திற்கேற்ப அகன்ற காது மடல்களை கொண்டுள்ளன.அதன் வெப்பநிலையைப் பராமரிப்பதில் அகன்ற மடல்கள் பெரும்பங்காற்றுகின்றன.யானையின் மடல்கள் இரத்த நாளங்களால் நிரம்பியவை. மடல்களில் வெப்பம் மிகுந்த இரத்தம்,காதுகளின் இடைவிடாத அசைவினால் குளிர்விக்கப்படுகின்றது.இதனால் உடல் வெப்பத்தை யானை குறைத்தும் கொள்கிறது. ஆசிய யானையின் காது ஓரங்கள் வெளிப்புறம் மடிந்திருக்கும்.ஆப்பிரிக்க யானைக்கு உட்புறம் மடிந்திருக்கும்.

· யானைக்கு நினைவாற்றல்,அறிவாற்றல் அதிகம்.ஒரு கூட்டு சமூகமாக வாழும் இவை தனது அறிவை சந்ததிக்கு கடத்துவதில் வல்லவை.தரையில் வாழும் உயிரினங்களிலேயே யானையின் மூளையே மிகப்பெரியதாகும்.ஐந்து கிலோ கிராமுக்கு சற்று அதிகமாக எடையை இது கொண்டிருக்கிறது. யானைகள் தங்களின் பல ஆயிர வருடங்களான வழித்தடங்களை,வலசைப் பாதைகளை மறக்காமல் அப்படியே நினைவில் வைத்திருக்கின்றன.

· யானைகள் மிக மெல்லிய வாசனைகளை கூட விரைவில் கண்டறியும் முகர் உணர்வு உடையவை.சில மையில்களுக்கு அப்பால் வரும் மனித வாடையை முன் கூட்டியே தன் மோப்ப சக்தியினால் கண்டறியும் ஆற்றலும் இதற்கு உண்டு.உப்பின் வாடை யானையை எங்கிருந்தாலும் சுண்டி இழுத்துவிடும்.இவற்றிற்கு கண்பார்வை கொஞ்சம் மங்கலானதாக இருப்பதால் தூரத்தில் உள்ள பொருட்களை எளிதில் அறிந்துக் கொள்ள முடியாது.எனவே மோப்ப உணர்வையே இவை அதிகம் நம்பி வாழ்கின்றன.இதன் பாதங்கள் மிக குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளையும் உணரவல்லன.

· யானை மனிதனைப் போல குடும்ப உறவில் வாழ்பவை. தாய் யானை தனது குட்டியை தன் தாதி யானையோடு இணைந்தே வளர்க்க ஆரம்பிக்கும்.ஒரு சமூகக் கூட்டமாக இருக்கும் யானைகளில் ஒரு ஆண் யானை மட்டுமே தலைமை வகிக்கும். புணர்ச்சிக் காலங்களில் வேறு யானை ஒரு கூட்டத்திலுள்ள பெண் யானையை புணர விரும்பினால் அக்கூட்டத்தின் தலைமை யானையான ஆண் யானையை சண்டையிட்டு வீழ்த்திய பின்பே அதனால் உறவை மேற்கொள்ள முடியும். குட்டியாக உள்ள ஆண் யானை பருவம் அடைந்தக் கையோடு தாய்க் கூட்ட்த்தினை விட்டு விரட்டி அடிக்கப்பட்டுவிடும்.அது தனித்து சென்று தன் புதிய வாழ்க்கையை மேற்கொள்ள தாய் செய்யும் புத்திசாலித்தனம் இது. இதனால் ஒரே சந்ததியினருக்குள்ளான உறவு முற்றிலும் தடுக்கப்படுகிறது

· யானைக்கள் தண்னுணர்வு கொண்டவை.இதன் முன்னால் வைக்கப்பட்ட கண்ணாடியைக் கண்டு இவை தங்களின் அடையாளங்களை பழக்கிக் கொள்ள முற்பட்டன என்கிறது ஒரு ஆய்வு.குரங்குகளும் டால்பின்களும் இக்குணத்தை கொண்டிருப்பவையே. இவற்றின் சினைக்காலம் 22 மாதங்கள்.இது பாலுட்டி இனங்களில் அதிகப்படியான காலங்களாகும்.யானை ஒரு குட்டியையையே ஈனும்.இரட்டைப்படை என்பது அரிதானதொன்று.கன்றானது 90முதல் 115 கிலோ எடை வரை இருக்கும். இதன் பிரசவக் காலத்தில் மற்ற யானைகள் கூடி நின்று உதவி செய்கின்றன. யானைக்கன்று பிறந்த்து தொட்டு அது யானைக்கூட்ட்த்தினாலேயே வளர்க்கப்படுகின்றது.

· சங்க இலக்கியங்களில் யானை 23விதமான சொற்களால் குறிப்பிடப்படுகின்றன.அவை வருவன: யானை, வேழம், களிறு, பிடி, கலபம், மாதங்கம், கைமா, உம்பர், வாரணம், அஞ்சனா வதி, அத்தி, அத்தினி, அரசுவா, அல்லியன், அனுபமை, ஆம்பல், ஆனை, இபம், இரதி, குஞ்சரம், இருள், தும்பு, வல் விலங்கு

யானைகள் பற்றிய இன்றைய நிலவரம் என்ன? அவற்றின் வாழ்விடப் பிரச்னை உள்ளிட்ட சில அடிப்படைத் தகவல்களை இனி பார்ப்போம்:

· இன்று நிலத்தில் வாழும் பெரிய இனமான யானைகள் அழியும் தருவாயில் உள்ளன.அவற்றின் உணவு பற்றாக்குறை,தொடர்ந்து வனப்பகுதிகள் அழிக்கப்படுவதினால் அவற்றின் இருத்தல் கேள்விக்குறியாகிவிட்டது. அதோடு வனப் பகுதிகள் மனிதனின் பாசனப் பயன்பாட்டின் மாற்றத்தினால் சுறுங்கிடுவதினால் யானைகள் குறுகலான நிலத்தின் உள்ளாக வாழ நிர்பந்திக்கப்படுகின்றது. இதனை மீறி வலுக்கட்டாயமாக மற்றப்பட்ட விளைநிலங்களுக்குள்ளாக யானைகள் நுழைய நேரிடும் போது அது மனித யானை மோதல்களாக மாற்றம் கொள்கின்றன. மனிதற்கல் போடும் மின் வேலிகளில் அடிப்பட்டு காயம் உண்டாகி பின் இறந்தும் போகின்றன.

· இலங்கயில் இந்த மாதிரியான மோதல்கள் ஆண்டொன்றுக்கு சராசரியாக 80 ஆட்களும் 225 யானைகளும் பலியாவதாக பி.பி.சி.(தமிழ்) அறிக்கை வெளிவந்திருகிறது.யானை-மனித மோதலால் இலங்கயில் உள்ள மொத்தம் 9மாகாணங்களில் 8மாகாணங்கள் பதிக்கப்படுவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.அக்டோபர் 15க்கு முந்தய நான்கு நாட்களில் மட்டும் 4பேர் மட்டக்களப்பு மாவட்ட்த்தில் மட்டும் அடிப்பட்டு இறக்க நேர்ந்திருக்கிறது.

· இந்த ப்ரச்னையைக் கையாள இலங்கையில் எலி அலார்ட் என்ற புதிய முறையை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது அவ்வரசு.பாதுகாப்பிற்காக போடப்பட்ட வேலிகளை யானைகள் உடைக்கும் போது,ஏற்கெனவே எலி அலாட் கருவியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அந்த ஊர் முக்கியஸ்தர்களின் மொபைல் போனுக்கு தாமாகவே அக்கருவி குறுஞ்செய்தி அனுப்பிவிடும்.இதனை லங்கா விஜேசிங்க என்பவர் அரிமுகப்படுத்தியுள்ளார்.

· தமிழ்நாட்டில் அதிகப்படியான நீர் நிலைத்தடங்கள் மூடப்பட்டதினால் யானைகள் ஒழுங்கான பாதைகளை விட்டு கட்டுப்பாடற்ற பாதைகளில் குறுக்கிட்டு ரயில் தடங்களில் அடிப்பட்டும் கும்பல் கும்பலாக சாகின்றன.

· யானைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றால் அது வேட்டையாடப்படுவதுதான்.அதன் தந்தங்களுக்காக மிக அதிக எண்ணிக்கையில் கொல்லப்படுகின்றன என்பது ஊரறிந்தத் தகவல். யானைகளின் உணவான மரச் செடிக்கொடிகள் அழிக்கப்படுவதாலும் நீராதாரம் சுறுங்கிப்போவதாலும் யானைகள் உலக அளவில் செயற்கையான சாவை சந்திக்கவேண்டியுள்ளது.

· ஆப்பிரிக்காவில் பெரிய தந்தங்கள் உள்ள யானைகளையே குறிவைத்து அழிக்கப்படுவதினால் புதியதாக பிறக்கும் யானைகள் சிறிய தந்தங்களோடு பிறக்கும் அவலமும் நடந்தேறி வருகின்றது.இன்னும் தந்தங்கள் அற்றும் பிறக்க நேரிடுகின்றது.1930களில் ஒரு சதவீதமாக இருந்த இவ்வாறான யானைகளின் எண்ணிக்கை இன்று சில பகுதிகளில் 30 சதவீதமாக அதிகரித்து நிற்கிறது.

· வனப்பகுதிகளின் ஏற்படும் குடியேற்றத்தினால் யானைகளுக்கு இருதயக் கோளாறு,மாரடைப்பு,மூளையில் இரத்தக்கட்டி,சர்க்கரைநோய் போன்ற புதுப்புது வியாதிகள் யானைகளிடன் பரவ ஆரம்பித்திருக்கிறது.

· மலைப்பகுதிகளில் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக தோண்டப்படும் பெரும் குழிகள் அல்லது பள்ளங்களில் விழுந்து யானைகள் சாவது தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நடந்துவருகிறது.

வில்லியம்ஸின் புத்தகம் தரும் தகவல்கள் இவை:

· ஆப்பிரிக்க யானைகளை அடக்கிப் பழக்க முடியாது என பலராலும் நம்பப்படுகிறது.இதில் உண்மையில்லை.நீக்ரோ இனத்தவர்கள் இந்த யானைகளை அடக்கி தங்களின் வேலைகளுக்கு பழக்கி இருக்கிறார்கள்.ஆப்பிரிக்க யானை இனத்தைத்தான் கார்த்தேஜீனியர்கள் அடக்கிப் பழக்கி ரோம் நாட்டுக்கு எதிராக நட்த்திய யுத்தங்களில் பயன்படுத்தினார்கள் என்று உறுதியாகக் கூறப்படுகிறது.

· இந்திய வரலாற்றில் யானைகள் போரில் பயன்படுத்தப்பட்டு வந்தன.புகழ் பெற்ற அலெக்சாண்டரைப் புறமுதுகிட்டு ஓடச் செய்யப் போரில் யானைகள் பழக்கி வைக்கப்பட்டன.

· காட்டில் வாழும் யானைகள் பொதுவாக முப்பது முதல் ஐம்பது வரையில் கூட்டமாக வசிக்கின்றன. பர்மா யானை மூங்கிலை விடபுல்லையே அதிகமாகத் தின்கின்றன.

· அவரச நேரத்தில் எந்த வழியாக தப்ப வேண்டும் என்பதை அந்தக் கூட்ட்த்தின் தலைவனாக இருக்கும் யானையே முடிவுசெய்யும்.அப்போது அவை ஒன்றின் துதிக்கை மற்றொன்றின் மேல் போட்டவாறு ஒரு வரிசையில் மும்மூன்றாகவோ அல்லது நான்குகவோ செல்லும்

· பெரும்பாலான யானைகள் மார்ச் மாத்த்திற்கும் மே மாத்த்திற்கும் இடையேதான் குட்டிப்போடுகின்றன.

· யானையைப் பிடிப்பதற்கு முன்னால் சுமார் எட்டு மைல் தூரத்திற்கு அதன் அடிச்சுவட்டைக் கொண்டே போகவேண்டும்.

· யானைகள் பிடிபட்டுள்ள காலங்களில் கரு தரிப்பதில்லை.இயற்கயான சூழல் ஏற்படும் போதே மீண்டும் அவை கருதரிக்கின்றன.

· இயல்பாக ஒரு பெண் யானை 17 வயதில்லிருந்து இருபது வயதுக்குட்பட்டபோது முதன்முதலாக இணை சேர்கிறது.வருட்த்தில் இந்தக் குறிப்பிட மாத்த்தில்தான் அது இணை சேரும் என்ற எந்த வரையறையும் கிடையாது.

· குட்டியானை தாய் யானையை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு பிந்தொடரும்.அது தாய் யானைகளினால் பாலூட்டப்படுகிறது. பிறந்தவுடனே குட்டி யானையின் துதிக்கை அதற்குப் பயன் இல்லாத ஒரு பொருளாக உள்ளது.இந்தக் காலங்களில் குட்டி தன் வாயாலேயே தாயிடம் பால் குடிக்கும்.துதிக்கை மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குப் பயனுள்ளதாகவும்,வளையக்கூடியதாகவும் இருப்பதில்லை. 5 அல்லது 6 வயதில் குட்டித் தன தீனியைத் தானே சேகரிக்கக் கற்றுக்கொள்கிறது.

· ஒருபெண் யானை தன் வாழ்நாளில் சராசரியாக 4குட்டிகள் ஈனும்.இருகுட்டிகள் பொடுவது மிக ஆச்சரியமானதில்லை(கவனிக்க:எந்த ஒரு விலங்கினை பற்றிய ஆய்வும் முழுமையாக முற்று பெற்றவையல்ல;காலங்கள் தோறும் பழய ஆய்வுகள் உடைக்கப்பட்டு புதிய ஆய்வுகள் நிறுவப்படலாம்)

· 15,16 வயதில் வாட்டஞ்சாட்டமான மனிதைனைப்போல் யானையும் ஆகிவிடும்.20முதல் 35 வயது வரையில் மதநீர் சிறிது கசியத் தொடங்கும்.இந்த்த் திரவத்தின் நாற்றம் கடுமையான மணம் எழுப்பக்கூடியதாக இருக்கும். கண்ணுக்கு அருகிலும்,வயிற்றுக்கு மேலேயுள்ள கோட்டிற்கு மேலும் உள்ள மதநீர் சுரப்பியிலிருந்து மதநீர் கொஞ்சம் கொஞ்சமாக கசியும். தகுதி வாய்ந்த ஆன் யானைக்கு ஆண்டு தோறும் வெப்பமான மாதங்களில் அது காணப்படுகிறது.இந்தப் பருவம்தான் அது பெண் யானையோடு சேர்வதற்குரிய காலமாகும். முப்பது வயது முதல் நாற்பது வயது வரயில் அக்கசிவு அதிகரித்து தாராளமாக ஓடும்.சொட்டுச் சொட்டாக அதன் வாயிற்குள் நீர் செல்ல அது அதன் சுவையை உணரும்.அச்சுவை அதை கோபமூட்டி அதை மேலும் அதிக்க் கொடுரமாக்கிவிடும்.அந்தச் சமயத்தில் மிகுந்த வலிமை அதற்குண்டு. 40-50 வயதில் மதநீர் குறையத் தொடங்கி இறுதியில் நின்றுவிடும். மதம்பிடிக்கும் காலத்தில் யானையை நம்பக்கூடாது.அப்படி நம்புவதானால் அதற்கு 60 வயது முடிந்திருத்தல் அவசியம்.

· 15முதல் 20 வயதுவரை உள்ள காலமே காட்டு யாணைகளைப் பிடிப்பதற்குரிய தகுந்தக் காலம்.இதிலிருந்து சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் அது கடுமையான வேலையைச் செய்யப் போதுமான பக்குவத்தையும்,தண்ணீரைத் தானே பெறும் சக்தியையும் அடைகிறது.

· தாயைப் பிரிந்து இரண்டு இரவுகள் குட்டியானை அழத்த வண்ணம் இருக்கும் காட்சி காட்டில் சர்வசாதாரணமாகும்.பர்மாவில் உள்ள ஒஸிகள் வழக்கமாக யானைகளை அவற்றின் பெயரிட்டு அழைப்பதில்லை.

· தாய் யானையிடம் இருந்து பிரிக்கப்பட்ட இளைய யானைகள் 19வயது முடியும் வரையில் பயிற்சிக்காக வைக்கப்படுகிண்ரன.சுமார் எட்டு வயதுள்ள இளைய யானைகள் முதன் முதலாக கட்டையைத் துக்குகின்றன.இவற்றின் வேலை செய்யும் வயது ஐம்பது வயதுவரை என நாம் கொள்ளலாம்.

· வேலைசெய்யும் யானைகள் மார்ச் முதல் மே மாதம் வரையில் உள்ள வெப்பக்காலத்தில் வேலை செய்ய வைக்க்க் கூடாது.வனப்பரப்புகளில் போதுமான தண்ணீரும் தீனியும் இப்பருவத்தில் சீராக்க் கிடைப்பதில்லை.ஆகவே அவைகள் ஓய்வை விரும்பக்கூடும் காலமாகிறது. ஒரு மாதத்தில் பர்மிய யானைகள் காலனிய ஆட்சிக் காலத்தில் 18 நாட்கள் வரை வேலை செய்தன.12நாட்கள் ஓய்வுநாளாகும். மூன்று நாட்கள் தொடர்ந்து வேலை செய்ய நேரிட்டால் இரு தின்ங்கள் ஓய்வளிக்கப்பட்டன. ஒரு வருடத்தில் 9மாதங்களில் 162 நாட்கள் வேலை நாட்கள்.ஒவ்வொரு நாளும் சுமார் 8மணி நேரமே அன்று யானைகள் வேலை செய்தன. இவ்வாறு ஒரு யானை வருத்த்திற்கு 1,300 மணி நேரம் வேலை செய்த்தது.

· இருபது வயதுள்ளபோது பாகன் காட்டும் ஜாடைகளைத் தவிரக் கட்டளையிடப்படுகின்ற 24 தனி வார்த்தைகளைக் கட்டாயம் யானை புரிந்துக் கொள்ளக்கூடும்.

· தன் உடலில் துதிக்கை எட்டாத ஒரு பாகத்தில் சொறிய வேண்டிய உணர்ச்சி ஏற்பட்டால் அது அந்தப் பாகத்தை மரத்தில் சாய்த்து தேய்த்துக் கொள்வதில்லை.ஒரு பெரிய குச்சியை எடுத்து அதைக்கொண்டு தன்னைத்தானே தேய்த்துக் கொள்கிறது.குச்சு போதுமானதாக இல்லாவிட்டால் வேறு ஒரு குச்சியை அது நாடிச் செல்லும் அறிவைக் கொண்டுள்ளது.

· யுத்தத்திற்கு முன்பு உணர்ச்சியில்லாதவாறு செய்கின்ற மருந்துகளைப் பற்றிய பரிசோதைகள் யானைகளின் மீது செய்துபார்கப்பட்டன.

· எவ்வளவு வலியையும் பொறுத்துக்கொள்ளும் சக்தி யானைக்குண்டு.இவை அசைபோடும் மிருகம் இல்லை.அதற்கு ஒரே ஒரு இரைப்பைதானுண்டு.நாளொன்றுக்கு 600ராத்தல் தீமியை அது சேகரிக்கிறது.

· மனிதன் எவ்வளவு நேரம் தண்ணிருக்குள் மூச்சைப் பிடித்துக் கொண்டிருக்க முடியுமோ அவ்வளவு நேரம்தான் யானையாளும் நீருக்குள் இருக்க முடியும்.சுமார் 1,000கெஜ தூரம் நீந்திச் செல்லும்.அதில் 400கெஜ தூரத்தை நீருக்குள்ளாகவே நீந்திப்போகும் தறன் அதற்கு இருக்கிறது.

யானைகள் பற்றிய ஆரய்ச்சி இதோடு முடிந்து விடவில்லை. ஆராய்ச்சியாளர்களால் ஒவ்வொரு தகவலும் தொடர்ந்து பதியப்பட்டு வருகின்றன. வாய்ப்பு கிடைக்கும் தருணத்தில் மறுபடியும் பல விஷயங்கள் பற்றி ஆராய்வோம். விருப்பமுள்ள அன்பர்கள் கட்டாயம் வில்லியம்ஸை வாசித்து பாருங்கள்.

Tuesday, August 2, 2011

சுரா:வசனத்தின் குழந்தைக்கு வயது எண்பது




குமரி முனையில் நடைபெற்ற சுரா-80க்கு போயிருந்தேன். விவேகானந்தா கேந்திரத்தில் மொத்தம் மூன்றுநாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அங்கே நடக்கவிருந்த’இளம் தலை முறையினர் பார்வையில் சுரா’என்ற விவாத அரங்கில் என்னை பங்கேற்க முடியுமா என கண்ணன் கேட்டிருந்தார். எதிர்பாராமல் வந்த அவ்வழைப்பை இன்முகத்தோடு ஏற்றேன். வருடக் கணக்காய் மூளையில் கிடந்து அரித்துக் கொண்டிருந்த சுராவின் சொற்களை மற்றவர் தலையில் எப்பாடுபட்டாவது இறக்கி வைத்துவிடலாம் என்ற ஆவல் உந்தியதே ப்ரத்யே காரணம். நான் பயணித்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில் ரயிலில்தான் காலச்சுவடு ஊழியர்களும் இதர நண்பர்கள் சிலரும் வந்தனர். அதில் பரிசல் செந்தில்நாதனும் ஒருவர். என்னை அகஸ்மத்தமாக பார்த்தவர், “நாளைக்கு கூட்டத்துல பேசும்போது அளவா பேசுப்பா.நீபாட்டுக்கும் ஒரு மணி நேரம் பேசி தொலைக்கப்போறே”என்று ஒரு எளிய வேண்டுகோள் வைத்தார். வீதிக்கு வீதி, தெருவுக்கு தெரு, பேசிப் பேசியே இயக்கம் கட்டிய கம்யூனிட் அமைப்பில் (தமுஎகச) இருப்பவர். ஒரு கூட்டத்தை சைதை தேரடி வீதியில் மாலை ஆறு மணிக்கு இவர்கள் ஆரம்பித்தால் அக்கம் பக்கத்தில் குடும்பம் இருக்கிறதே? குழந்தைக் குட்டிகள் இருப்பார்களே என்ற எந்த சமூகப் பிரக்ஞையும் அற்று விடிய விடிய கூத்து நடத்துவார்கள். இவர்களின் உறுப்பினர்களே இன்று பேச்சை வெறுக்க ஆரம்பித்திருப்பது வரலாற்று நகையா? அல்லது முரண்நகையா? இல்லை கவரிங் நகையா என்பது புரியவில்லை.

தோழர் பி.வி.பி. மார்க்ஸிய வகுப்பெடுக்க ஆரம்பித்தால் அன்னந் தண்ணி ஆகாரமில்லாமல் நாள் கணக்கில் உட்கார்ந்து பேசுவார் என கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப் பண்பாளர் வழி வந்தவர்கள் இன்று என்னைப் பேசாதே என்கிறார்கள். ஜீவா பேசாத பேச்சா. ஜீவா இறந்துவிட்டார் என ஊரில் தகவல் பரவியதும் அத்தைனை தோழர்களும் கேட்ட முதல் கேள்வி: மேடையில் பேசிகிட்டு இருக்கும்போதா? என்பது.(கவனிக்க:சுரா கட்டுரைகள்) பேச்சுக்கும் கட்சிக்கும் அப்படியொரு பொருத்தம் இருந்த காலங்கள் உண்டு. ஆனால் இன்று அவ்வமைப்பின் பிரதிநிதிகள் பேச்சைக் கேட்டாலே வெறுக்கிறார்கள்.ஒருவர் பேசுவதையே முடக்குகிறார்கள்.ஜீவாவை நான் பார்த்ததில்லை.அதற்கு வாய்ப்பும் கிட்டவில்லை. ஜீவா அளவுக்கு நான் அறிவாளி கிடையாது.அவர் அளவுக்கு பெரிய சொல் விரனும் கிடையாது.ஆனால் எனது மரணமும் பேச்சும் தருணத்தில் முடிவுற பிரியப்படுகிறேன். ஒலிக்கு அழிவில்லை என்கிறது அறிவியல். அந்த அழிவற்ற நிலத்தில் எனக்கொரு இடம் தேடிக் கொண்டிருக்கிறேன். செந்தில்நாதன், எந்த நேரத்தில் அப்படி சொன்னாரோ? ரயிலில் பேச்சுத் துணைக்குகூட ஆளில்லாமல் ஒத்தை ஆளாய் குமரிமுனை வந்து சேர்ந்தேன்.இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தென்திசை யை எட்டுவதற்குள் சுராவின் கவிதைகள் – கரட்டு வடிவவம் உட்பட - முழுத் தொகுப்பையும் மறுபமுறை ஒரே மூச்சில் வாசித்துவிடலாம் என எண்ணினேன். என்னெதிரே உட்கார்ந்திருந்த ஒரு பையனும் அவனது ஸ்நேகிதனும் சொந்தக்கதை பேசினார்கள். அப்புறம் ஊர்க்கதையாய் புகையாய் புகை நெளிந்த்து. ரயிலைவிட்டு இறங்கும் வரை அவர்கள் இருவரும் மெளனிக்கவேயில்லை.

காலச்சுவடு ஜூன் 3ம் தேதி சுராவின் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்ததால் ஊரில் கூடுதல் ஆரவாரங்களை எதிர்ப்பார்த்திருந்தேன். வாழும் வள்ளுவர் பிறந்த நாளாயிற்றே! அதுவும் கன்னியாகுமரி எல்லை. கறை வேஷ்டிகள் முஷ்டியை முறுக்கிக் கொண்டு குமரியில் முக்கூட்டுக்கு முக்கூட்டு நின்றிருப்பார்கள் தானே? ஆனால் ஏனோ ஆரவாரமோ, தம்பட்டமோ கரகர கர்ஜிப்பு சத்தமோ தென்படவில்லை. ரயிலடியிலிருந்து வந்தவர்கள் அனைவரும் கும்பலாய் குழுமினோம். ஜங்ஷன் வாயிலில் ஒப்பந்த வாகனம் ஒன்று காத்து நின்றது. தேவிபாரதி, குவளைக் கண்ணன், அனிருத்தன் வாசுதேவ், களந்தை பீர்முகம்மது, நான் உள்ளிட்ட சிலர் சாலையில் பொடி நடைப் போட்டோம். உடன் இணைந்தார் கவிஞர் சுகிர்தராணி. அதிகாலை நேரம்.ஒரு தேனீர் கடைக்குள் சகலரும் ஒதுங்கினோம். காப்பி, டீ என ஆளுக்கு தக்க ஆர்டர் பறந்தது. அனிருத் மட்டும் தனக்கு லாக்டோமால் ஒவ்வாமை இருப்பதாக சொல்லி டீ, பால், காப்பி குடிக்க மறுத்தார்.பின் நவீனதுவ நாவலின் தலைப்பைபோல அனிருத் உச்சரித்த மருத்துவச் சொல் கொஞ்ச நேரம் விவாதப் பொருளாக டீக்குள் விழுந்தது. அந்த ஆராய்ச்சி முடிவுற்று அறைக்கு வந்த மறுகணமே குளித்து முடித்துவிட்ட கையோடு கருத்தரங்க அரங்கிற்கு விரைந்தோம்.

அரங்கம் க.நா.சு நினைவரங்கம், தளையசிங்கம் சிற்றரங்கு என இருவிதமாக பிரிக்கப்பட்டிருந்தது. சுராவுக்கு அனுசரனையான இரு படப்பாளிகளின் பெயரில் அரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது மகிழ்ச்சிக்குறிய அம்சம். க.நா.சு.வின் வழித் தடம் பார்த்து தன் எழுத்தின் கால் தடத்தை சீர்ப்படுத்தி கொண்டவர் சுரா. புதுமைப்பித்தனுக்கு பிறகு சுரா வரித்துக்கொண்டது க.நா.சுவின் பாதை. நாகர்கோவில் லாட்ஜில் தனி அறையெடுத்து க.நா.சு. தங்கயிருந்த காலத்திலிருந்து உண்டான ஸ்நேகம். சுராவும் கிருஷ்ணன் நம்பியும் க.நா.சுவும் சேர்ந்து அந்தக் காலத்தில் நாகர்கோவிலை நடந்தே சவாரி பண்ணிப் பார்த்திருக்கிறார்கள். க.நா.சு அறையைவிட்டு தெருவுக்குள் இறங்கியதும் அவர் உடம்பு எந்தத் திசைக்கு திரும்புகிறதோ அத்திசை பார்த்து, உடனே நடக்க ஆரம்பித்துவிடுவார் என தன் நினைவோடையில் சுரா குறிப்பிடுகிறார். க.நா.சு.அளவுக்கு தளையசிங்கத்தின் எழுத்தை சுரா கொண்டாடியிருக்கிறார். தளையசிங்கத்தின் எழுத்திலுள்ள பிரபஞ்ச யதார்த்தம் பற்றி அவர் சிலாகித்து எழுதியக் கட்டுரை தமிழில் ஒரு தனி வகைமாதிரி. அக்கட்டுரையை ஒட்டி இருவேறு கருத்து மோதல்கள் இருப்பதினாலேயே அதன் இருப்பு இன்றும் வலுப்பெற்றிருக்கிறது.

முதல் நாள் பிரதான அரங்கில் சுராவின் மனைவி கமாலா அம்மாள் குத்து விளக்கு சுடரை பற்றவைக்க, தங்கு சுராவின் கவிதைகளை கர்நாடக இசையில் பாடி நிகழ்ச்சியை இனிமையாக துவக்கிவைத்தார். தங்குவின் குரலைத் தாண்டி இசையின் அடி வானத்திற்கு அப்பால் போய் விழுந்தன சுந்தர ராமசாமி கவிதைகள்.நவீனக் கவிதைகள் செவ்வியல் இசைப்பண்பைக் கட்டிக்கொண்டு தழையத் தழைய வலம் வந்த விதம் வெகு மக்களை சிலாகிக்கச் செய்தது. அடுத்து ’தியேட்டர் ஒய்’ நாடகக்குழுவினர் சுராவின் பிரதிகளை பக்கம் பக்கமாய் வாசித்துக் காட்டினார்கள். இது ஒருவிதமான தியேட்டர் ஃபார்ம்.அயல் தேசம் வரை அறியப்பட்டக் குழுவினர். சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் ராபட்டோ கலாஸாவின் நூல் வெளியிட்டு விழாவலும் இதேபோன்ற ஒரு நிகழ்ச்சியை நடத்திக்காட்டினார்கள். முன்னமே நான் பார்த்திருக்கிறேன். அங்கு கலாஸாவின் பிரதிகளை வாசித்தவர்கள் இங்கே சுராவின் பிரதிகளை தமிழ், மலையாளம், இந்தி, இங்கிலீஷ் முதலிய சகல மொழிகளில் வாசித்தனர். வாசிப்பு மணிக்கணக்காய் நடந்தது. முதலில் உற்சாகம் முட்ட ஆரம்பித்த நிகழ்ச்சி நேரமாகமாக அசதி தட்டியது. எதையும் அதிகமாக அனுபவிக்கும் ஆற்றல் நம் உடம்பிற்கு இயற்கையாகவே இருப்பதில்லையோ என்னவோ? உற்சாகம், இடம் பிடித்து நாற்காலியில் உட்கார்வதற்கு முன் அசதி தன்னிரு கால்களை நீட்டி தரையில் சரிந்துவிடுகிறது. நாடகக் குழுவினர் ஒரு பிரதியின் வெவ்வேறு மொழிப் பெயர்ப்புகளை வாசித்துக் காட்டியதில் எனக்கு ஒரு ஐயம் . பிற மொழிகளில் தவழும் சாந்தம், இயல்பு, நட்புணர்ச்சி எதுவும் தமிழில் வாசிக்கப்படும் சமயத்தில் தென்படவியில்லை. தமிழ் உச்சரிப்பில் உணர்ச்சிகள் கொப்பளித்தன. வாசிக்கப்படும் வாசனத்தைத் தாண்டி உணர்ச்சி முன்னக்க முன்னக்க வந்து சிந்தியது. இந்த முந்திரிக் கொட்டை மனோபாவம் தமிழுக்கே உரியதா? என் இருக்கைக்கு அருகிலிருந்த ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதியிடம் கேட்டேன்: இது மொழியின் குறைபாடா? இல்லை வாசிப்பவரின் குறைப்பாடாவென்று? அவர், இரண்டும்தான் என்றார். இவ்வளவு உணர்ச்சிகளை ஒரு மொழி ஏன் தனக்குள்ளாக அழுத்தி வைத்திருக்கிறக்க வேண்டும்? பவ்யம், மென்மை, நளினம் என்பதெல்லாம் தமிழ் உள்வாங்கவே இல்லையா? இவையெல்லாம் அண்டைவீட்டு பாத்திரங்களா?நம்மால் புழங்கவே முடியாதவையா?

தலையசிங்கம் அரங்கில் சுராவின் படைப்புகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. கவிஞர் ஆனந்த், குமார செல்வா, அ.ராமசாமி, அரவிந்தன், பழ.அதியமான், எம்.யுவன், மணா, பெருந்தேவி, கவிதா முரளிதரன், அம்பை என பலர் கட்டுரை வாசித்தார்கள்.அதியமான், ஆனந்த், அரவிந்தன் , எம்.யுவன் உள்ளிட்டவர்களின் முழுக் கட்டுரை வாசிப்பின் போது நான் அரங்கில் இருந்தேன். அதியமான் மறுமலர்ச்சி கால எழுத்தாளர்களை சுரா எப்படி பார்த்தார். எப்படி பார்த்திருக்கலாம் என்ற பதத்தில் நூல் பிடித்தத கட்டுரையை படித்தார். ஆய்வு சாயலை கட்டுரையில் அவர் கைக்கழுவி இருந்திருக்கலாம். அரவிந்தனின் கட்டுரை சுராவை தரவாக படித்ததற்கான தடயத்தை மட்டுமே வழங்கியது. எழுத்தாளனுக்கு செய்யும் முதல் கெளரவம் அது. அரவிந்தன், தனது கட்டுரைக்கு எதிராக எழுந்த விமர்சனத்திற்கு அளித்த பதிலில் சாமர்த்தியம் இடைவிடாமல் தட்டுப்பட்டது. ஆனந்த், அரங்கத்திற்கு வருவதற்கு சற்று முன்னதாகவும் ரயில் பயணத்திலுமே தன் கட்டுரையை உதிரியாக எழுதிக் கோர்த்து வந்திருப்பதாக சொன்னார். முழுமை பிரதியல்ல என்று சொல்லிவிட்டு வாசித்தார். அவரது கட்டுரையில் வந்த சுயம் என்ற ஒற்றை வார்த்தையை பிடித்து உருட்ட ஆரம்பித்தார் பிரேம்.அவர் கேட்க நினைத்த கேள்வி அடிக்குரல் தாண்டவில்லை. அவருக்குள்ளாகவே சரிந்து உடைந்துப்போனது. வாசிக்கப்பட எல்லாக் கட்டுரையிகளும் குறையோடு இருப்பதை மணிவண்ணன் முன் கூட்டியே கனித்திருந்தார். பலருக்கு பிடிபடாத ரகஸ்யம். கட்டுரை எங்கு முடிகிறது?எங்கு ஆரம்பிக்கிறது என்று உணராமல் அவர் கவலை கொள்ள பழகியிருந்தார்.கவலை அவரின் பிரதான பிரச்னை. கட்டுரை வாசிப்பு முடியும் வரை கட்டுரையாளரை முறைத்து நின்ற காமிராவின் கண்கள் தாமாகவே மணிவண்ணனைப் பார்த்து முறைக்க பழகியிருந்தன। அரங்கம் அத்தனை சுறுசுறுப்பு। லஷ்மிமணிவண்ணனிடம் தமிழில் பிரசுரம் காண்கிற சகல படப்புகளையும் தான் மட்டுமே படிக்கிறோம் எனும் தொனி। பின்னால் வெளியில் வந்து அம்பையின் கட்டுரையை வாங்கி வாசித்து பார்த்தேன்।

”தமிழ்ச் சூழலில் இலக்கியத்தில் ஆளுமை உள்ள ஒரு மூத்த ஆண் எழுத்தாளர் ஒரு பிதாமகர் ஸ்தானத்தை எட்டிவிடுகிறார். பெண் எழுத்தாளர்கள் வயது ஏறஏறக் கிழவிகள்தான் ஆகிறார்கள்.! ஒரு முறை சுராவுக்கு, பலர் அவரை ஒரு குருவைப் போல நடத்துவதாக நான் எழுதினேன். அவர் அதற்குப் பதில் எழுதவில்லை. ஆனால் நேரில் சந்தித்தபோது ’அப்படி எதுவும் இல்லை’ என்றார். அவர் எழுதிய கதைகளை, கவிதைகளை வெகுவாக விரும்பிய நான் ஜே ஜே; சில குறிப்புகள் நாவல் வெளிவந்த போது பெருத்த ஏமாற்றம் அடைந்தேன். அதைப் பற்றிய நீண்ட விமர்சனம் ஒன்றை ஒரு பொது நிகழ்ச்சியில் படித்தேன். அதன் பின்பு நான் நாகர்கோவில் வந்தபோது நான் நாவலை முற்றிலும் நிராகரிப்பதாகவும், அதனால் அவரும் அந்த விமர்சனத்தை முற்றிலும் நிராகரிப்பதாகவும் கூறினார். அது குறித்து சர்ச்சை செய்தோம். ஆனால் இருவரும் அவரவர் நிலையிலிருந்து மாறவில்லை.

தமிழினி நிகழ்வில் நாவல்களைப் பற்றி நான் பேசியபோது ஜே ஜே நாவலைப் பற்றிய என் பழைய கருத்தையே முன் வைத்தேன். என் பேச்சு முடிந்த பிறகு என்னைச் சந்தித்த சுரா, ’நானும் இனிமேல் எல்லோரையும் கிழிகிழியென்று கிழிக்கப் போகிறேன்’ என்றார். ‘உங்களை யாராவது தடுத்தார்களா என்ன?’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டேன். சுரா வழக்கமாக அப்படிப் பேசக் கூடிய நபர் அல்ல. விவாதித்தும் எழுதியும் தீர்த்துக்கொள்வாரே ஒழிய இப்படி வெடிப்பவர் அல்ல. நிகழ்ச்சி முடிந்த பிறகு கடைசி நாள் நான் என் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்த போது, அங்கே சுரா நின்றுகொண்டிருந்தார். என் அருகில் வந்து என் முதுகில் தட்டிக் கொடுத்தார். அத்தனை ஆண்டு நட்பில் அவர் ஒரு முறை கூட என்னைத் தொட்டுப் பேசியதில்லை. அவர் வெகு வாஞ்சையுடன் முதுகில் தட்டித் தந்ததும் ஆச்சரியப்பட்டுப் போனேன். ‘எதையும் மனசுல வெச்சுக்க வேண்டாம். எதுவும் மாறல. வழக்கம் போல நாகர்கோவில் வரணும்’ என்றார். ஒரு வேளை என் மனத்தை புண்படுத்திவிட்டோமோ என்று நினைக்கிறார் என்று புரிந்துகொண்டேன். நட்பையும் அன்பையும் வெளிப்படுத்தும் அந்தத் தொடுகை என்னை நெகிழ்த்தியது” என்று எழுதியிருந்தார்.

நான் முதல் அரங்கத்திற்கும் இரண்டாம் அரங்கத்திற்கும் மாறிமாறி தாவிக் கொண்டிருந்தேன். பிரதான அரங்கில் ச.தமிழ்செல்வனின் பேச்சு சரளமாய் பல உள் குத்தல்களோடு பார்வையாளர்களை கட்டிப்போட்டது. சச்சிதானந்தன் கேரளாவில் இருந்து வந்திருந்தார். நித்தியானந்தன், உலகத் தமிழர்களின் இன்றைய வாழ்வியல் குறித்தும் அதன் உண்மைத் தன்மை விரிவாக நகைச்சுவை தொனிக்கப் பேசினார். உங்களுக்கு ’ரஜினி இட்லி சாப்பிட்டதுதான் தலைப்புச் செய்தி.அதுவும் கூடவே அவர் ஒரு வடையும் சாப்பிட்டது அபாரத்தகவல் இல்லையா’ என்றார். குலசிங்கத்தின் உரை முற்றிலும் எதிர்மறையாக விழுந்தது. ’எங்களை சோதனைச்சாலை எலிகளைபோல உங்களின் எழுத்தில் பயன்படுத்தாதீர்கள்.இங்கிருந்து வரும் தமிழ்நதிகள் எல்லாம் அதையே செய்கிறது’ என ஆதங்கப்பட்டார்.அவருக்கும் அவரது மக்களுக்கும் இன்றைய தேவை காசு.அல்லது பணம் என்றார்.

அன்றிரவு நிகழ்த்தப்பட்ட ’குதிரை முட்டை’ நாடகம் குறிப்பிட்டு சுட்டவேண்டிய ஒரு நிகழ்வு. நெய்தல் கிருஷ்ணனின் நடிப்பாற்றல் உடற் அசைவுகள் அபாரம். கிருஷ்ணனுக்குள் ஒரு குட்டிக் கலைஞனை கற்பனை செய்து பார்க்கவே மனம்வரவில்லை. ஆனால் அதை கண்டுணர்ந்திருக்கிறார் சண்முகராஜா. நாடக அரங்கம் முழுக்க சிரிப்புச் சத்தம். வீரமாமுனிவரின் கேலி இழையும் உரைநடை பிரதியிலுள்ள வார்த்தைகளை கிருஷ்ணன் நயம்பட உச்சரித்தை கேட்டு பலர் மகிழ்ந்துபோய் சிரித்தார்கள்.இந்த நாடகதம், ஞாநியின் ’எந்திர துடைப்பான்’ நாடகங்கம் என இரு நாடங்கள் மட்டுமே எனக்கு பார்க்க வாய்த்தவை. ரசனை மட்டத்தில் முன்னதற்கும் பின்னதற்கும் பார தூரம். இறுதி நாள் பேசிய ஜெமோவின் உரை திடமானது. அவருக்கு ஃபுரூட் சாலட்டில் சீனி தூவி சாப்பிடும் பழக்கம் உண்டாம். திருவனந்தபுரத்து பால்ய பழக்கம். ஒருமுறை சுரா ஃபுரூட் சாலட் சாப்பிடும் போது சீனி போடாமல் சாப்பிட்டாராம்.ஏன் சீனியிடும் வழக்கம் இல்லையா என சுந்தர ராமசாமியிடம் ஜெமோ கேட்தற்கு, அவர் ’அதை தனியே சாப்பிடுவேன்’ என்றாராம். இந்த மாதிரி சீனியிடப்பட்ட எழுத்துதான் ஜனரஞ்சக எழுத்து சுஜாதாவின் எழுத்து. வலிந்து உருவாக்கப்பட்டவை. வலிந்து சுவாரஸ்யப்படுத்தப்பட்டவை. தீவிர எழுத்துகள் இதற்கு நேரெதிராக பிறந்தவை என்று தன் பார்வையை பதிய வைத்தார். பி.ஏ.கிருஷ்ணனின் கட்டுரை தொகுப்பை ஜெமோ வெளியிட வந்திருந்தார். கிருஷ்ணனின் புத்தகத்திற்கு சற்று அவர் கூடுதல் கவனம் அவர் தந்திருக்கலாம்.

கலந்துரையாடல் பகுதியில் நான் பேசியதன் சாரம்சம் : சுரா எங்கள் நிலப்பரப்பை பொறுத்தளவில் எதிர் உருவம். வறட்டு நாத்தீகம், தட்டையான வாசிப்பு என பழக்கப்பட்ட பகுதிக்கு சுரா ஒரு ஆகாத ஆள். அழகுணர்ச்சி, கலையுணர்ச்சி சிந்தனை நரம்புகள் அரவே இயங்காத எங்கள் ஊர் எழுத்தாளர்களுக்கு ஆகாத அம்சங்கள்.உவக்காதச் சொற்கள். பிடிக்காத வாதங்கள். என் தெருவில் வசித்த இளம் கவிஞர் ஒருவரின் கவிதை நூலுக்கு கலிஃபோர்னியாவிலிருந்து சுரா ஒரு முன்னுரை எழுதியிருந்தார். அந்நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்த எழுத்தாளர் ஒருவர், ”காலிஃபோர்னியாவில் இருந்து கால் செருப்பு வந்தாலும் அதை காலில்தான் போட முடியும்.தலையில் தூக்கிகொண்டு திரிய முடியாது “என்று பேசினார். அவரின் கண்டுபிடிப்பு எனக்கு எரிச்சலை மூட்டியது. பேச்சாளரின் அடி மனசில் காழ்ப்பின் கசடுகள் அண்டிக் கிடப்பதை நான் எளிதில் ஊகித்துவிட்டிருந்தேன். இந்த வீர உரை நிகழ்த்திய எழுத்தாளர் காலப்போகில் நெய்தல் வருடம் தோறும் நல்கும் சுராவின் விருதிற்கு தாமே தன்னை பரிந்துரைத்து ஆயிரம் கடிதத்தை எழுதி தள்ளினார். விருது நிகழ்ச்சியில் கண்ணீர் மல்கியதாகவும் அறிந்தேன். எப்போதும் எதிர் கருத்தின் பக்கமே ஈர்க்கப்பட்டு பழகிப்போன எனக்கு சுராவை படிக்கும் உத்வேகம் இதனால் பிறந்தது.எனது ஊரில் ஜவுளிக்கடை வைத்திருந்த சதாசிவம் என்பவரிடமிருந்து தோட்டியின் மகன் நாவலை படிக்க எடுத்துச் சென்றேன். அதுவரை கவிதையில் மடியில் தங்கிக்கிடந்த எனக்கு நாவல் என்ற வார்த்தையே புதுசு. தட்டையான மொழியில் புழங்கியே பழக்கப்பட்ட என் வாசிப்புக்கு மழமழவென்று மழித்து சவரம் செய்த அழகான முகம் மாதிரியான சுராவின் கச்சித மொழி பிடிபடவில்லை. இரண்டுநாள் வைத்திருந்து நூலை திருப்பிவிட்டேன். எனது அறியாமையை உணர்ந்து சாவதானமாக படிக்க சொல்லி சதா அண்ணன் என்னை திருப்பிவிட்டார்.முதல் சில பக்கங்களுக்கு அப்புறம் வாசிப்பில் குதிரைப்பாய்ச்சல் பிடிதத்து நாவல்.செதுக்கப்பட்ட மொழியை செறிக்க கற்றேன். அசலின் தடித்தனம் என்னை கவர்ந்திழுத்தது. முரட்டு மொழி மந்திரமொழியாக தித்தித்தது.

85களில் நான் நடுநிலைப் பள்ளி மாணவன். நான் படித்தப் பகுதியில் நிறைய பம்பாய் கக்கூஸ்கள் இருந்தன. புதுப்போட்டை பகுதி முழுக்க அம்மாதிரியான கழிப்பறைகள்தான். சுவற்றில் கட்டமாக துளையிட்டு இரும்பு தகரத்தால் கக்கூஸூக்கு ஒரு மூடாக்கிட்டிருப்பார்கள். தினமும் மூடாக்கை தூக்கிவிட்டு தகரக் கரண்டியினால் மலத்தை அள்ளி பீப்பாய்களுக்குள் நிரப்புவார்கள் அருந்ததிய மக்கள். மலத்தை அள்ளுவதற்கு முன்னால் அடுப்பு சாம்பலை வாரி இரைப்பது வழக்கம். வாகாய் மலம் பீப்பாய்க்கு இடமாறும். நிரம்பிய பீப்பாய்களை சிறுவயதில் நான் நடுரோட்டில் தள்ளி திரிந்திருக்கிறேன். தாளித்த ரசம் நுரைத்துப் பொங்குவதை போல மலப் பீப்பாய்கள் பொங்கும். அந்த வாழ்வின் குறிப்பிட்ட எல்லை வரை சென்று பார்த்திருக்கிறேன். இந்த வாழ்வியலோடு எனக்கிருந்த பரிட்சயம் தோட்டியின் மகன் நாவலோடு என்னை ரத்தமும் சதையுமாய் உறவு கொள்ளச் செய்தது. ரணகளமான அவ்வாழ்வை தகழி எழுதி செல்லும் பாங்கு படிக்க படிக்க உடலில் உஷ்ணத்தை உண்டாக்கியது. ரத்தம் சூடேறி இயலாமையில் அனுதினம் சரிந்திருக்கிறேன்.

இதன் பிறகு ஜே.ஜே நாவல்.கதையின் முக்கியதுவத்தை மட்டுமே அதுகாறும் அரற்றி வந்த தமிழிலக்கிய பரப்பில் முதல் கல்விட்டவர் சுரா. ஜே.ஜேவில் மொழியே நாவலை தீர்மானிக்கும் சக்தி. ஆற்று மணலில் துளையிட்டு நண்டுகள் ஈரத்தை உறிஞ்சிக் குடிப்பதை போல மொழியில் துளையிட்டு வார்த்தையின் முழு சாற்றை உறிஞ்சி காகிதத்தில் கொட்டிப் பார்த்திருப்பார் சுரா. ஜே.ஜே நாவலில் கதை இருக்கிறது.ஆனால் கதை இல்லை. அதற்குள் ஒரு எழுத்தாளன்,சிந்தனைச் சிற்பி வருகிறான்.ஆனால் அவன் இல்லை.பாரதி இருக்கும் அதே நாவலில் ஆல்பர் காமுவும் இருக்கிறான். அனது இறப்போடு நாவல் உயிர் கொள்ளத் தொடங்குகிறது. தமிழில் மொழியை குறியீடாக முன் வைத்த முதல் நாவல் ஜே.ஜே.. தத்துவ நாணை வரிக்கு வரி வீணையாக மீட்டி மொழியை ஒரு இசைக்கருவியாக சுரா செய்துக்காட்டிய விதம் ஓர் அற்புதம். சுராவின் கட்டுரை மொழியில் வீசும் ஒளி, வீரியம், விறைப்பு உள்ளான சகலமும் நவீனத் தமிழுக்கு செழுமை சேர்ப்பவை.அதில் உள்குத்தலாக கேட்கும் குசும்பு எவரையும் எளிதாக சாய்க்கும் ஆயுதமாக படுத்துறங்குகிறது. அவரின் நினைவோடைகளில் தென்படும் அபார நினைவாற்றல் வியப்பை நல்குவன. காட்சிகளை எழுத்திற்குள் சித்திரப்படுத்தும் வலிமை அவரது பலம்.மெளனியை பற்றி,ஜீவாவை பற்றி,நாமக்கல் கவிஞரின் இறுதிகாலம் பற்றி சுராவின் கட்டுரை சித்திரங்கள் ஆவண அம்சம் பெற்றவை. சுராவே சொன்னதை போல அவர் வசனத்தின் குழந்தை.கவிதையில் அவர் உயரம் பார்க்கவில்லை.பண்டிதத் தமிழுக்கு பக்கத்திலுள்ள ஒரு மொழியை அவர் கவிதைக்கு தேர்ந்தேடுத்தார். அது செதுக்கப்பட்ட அளவுக்கு சிற்பமாகவில்லை.

நன்றி-உயிர் எழுத்து

Tuesday, July 26, 2011

குத்தல் குடைசல் கொண்ட வத்தல் கதைகள்!


இன்றைக்கு இருப்பதைப் போல அல்ல;பத்திப்புத்துறை உச்சம் தொடாதக் காலம். 90களின் பிற்பகுதி வரை மந்த நிலைதான். வை.கோவிந்தனின் சக்தி காரியாலயம் போன்ற பல நல்ல பத்திப்பகத்தை கூட தண்ணீர் குடிக்க வைத்தத் தொழில்,இந்த அச்சுத் தொழில். அச்சில் ஒரு படைப்பை காண்பது அத்தனை எளிதல்ல; கல்லில் நார் உரிக்கும் காரியம். ஒரு சிறுபத்திரிகைக்கு கவிதை எழுதி, அஞ்சல் பெட்டியில் சேர்ப்பித்து விட்டு முழுசாய் வீடு திரும்பி இருக்கமாட்டேன் அதற்குள் அப்பத்திரிகை நின்றுவிட்டதாக துரதிருஷ்ட தகவல் ஒன்று கதைவைத் தட்டும். கெட்ட சேதி எனக்கு முன்னதாகவே வீட்டு தாழ்ப்பாளை நீவிக் கொண்டு உள்ளே புகுந்து உட்கார்ந்திருக்கும். சிற்றிதழுக்கு தபால் எழுதி எழுதியே கைவிரல் தேய்ந்து சலித்த இலக்கியப் பிள்ளைகளில் நானும் ஒருவன். படைப்புகளை படியெடுத்து படியெடுத்தே அசதி அண்டிவிடும். முடிவில் ஆளையே கொன்றுவிடும். கூனல் விழாதக் குறை. குனிந்து குனிந்து, இனுக்கி இனுக்கி, காகிதங்களை வாங்கி, எழுதி அனுப்பிவிட்டு, வரும் வரும் என காத்திருந்தால் கடைசியில் ஏமாற்றம்தான் வலுவாய் திரும்பும். கீழே விழுந்தும் மீசையில் மண்னொட்டாத கதை, என் எழுத்துலக கதை. அந்தளவுக்கு விழுப்புண்கள் மனதில் மறைந்து கிடக்கின்றன.முதல் பிரசுரமாவது? இரண்டாவது பிரசவமாவது? பத்திரிகை பிரசுரம் என்பது மகிழ்ச்சியான அனுபவமாக எனக்கு வாய்க்கவில்லை. எல்லாம் மரண அடி. குத்தல் குடைசல் கொண்ட வத்தல் கதைகள்.

இன்று யோசிக்க யோசிக்க ஏதேதோ ஞாபகத்தை மீட்டுகிறது. “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? எமக்கு இன்பம் சேர்க்க மாட்டாயா? அன்பிலா நெஞ்சில் தமிழில்பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா? கண்ணே அல்லல் நீக்க மாட்டாயா?” எனும் பாவேந்தரின் பாடல் வரிகள் மனசிற்கு மருந்தாகிறது. அவை மனசை பிழியும் மந்திர வார்த்தைகள். எழுத்தாளன் ஆவேன்.கவிதை எழுதுவேன். பத்திரிகையொன்றில் பணியாற்றுவேன் என்பதெல்லாம் நான் என்றும் எதிர்பாராத பகல் கனவுகள். ஆனால் எழுத்தின் ருசியை உள் மனம் உணர்ந்திருந்தது. ஆழ்மனத்தில் தொடர் இயக்கம் ஒன்று வேர்ப்பிடித்து விரவி நின்றிருக்கிறது. விவரமறிந்து, பாட புத்தகங்களை தவிர்த்து, நான் முதலில் படிக்க ஆரம்பித்த புத்தகங்கள், சினிமா பாட்டு புத்தகங்கள். வீட்டு மதில்சுவர் தாண்டி கிளைக்கும் செம்பருத்திச் செடியின் சிறு கிளையைபோல என் வரம்பை மீறி வளரும் பருவத்தை அவைதான் எனக்கு வழங்கின. வகை வகையாய் பாட்டு பிரசுரங்களை வாங்கி சுயத் தெம்பில் பாட்டுக்கட்டுவேன்.கொஞ்சம் கூடுதலாய் இட்டுக் கட்டுவேன். என் சொந்த சரக்கும் சேர்ந்து இதமாய் உள்ளிறங்கும். சிறு பிராயத்தில் பாட்டு புத்தகங்களை படித்து இலக்கிய வாசலுக்குள்ளாகப் புகுந்தவன் என இன்றைக்கு என்னைப் பற்றி சொல்லிக் கொள்வதில் எனக்கொன்றும் கூச்சங்களில்லை. பத்து வயதில் தாழப் பறந்தது என் தமிழ்க்கொடி. அடிவானத்திற்கு அப்பால் அது போய்சேரவுமில்லை.

நடைபாதைக் கடையில் 50பைசா கொடுத்து வாங்கும் சினிமா பாட்டு புத்தகங்களுக்கு வீட்டில் தனி அலமாரி அடுக்கே உண்டு. அவ்வளவு ஸ்நேகம்,ஈர்ப்பு வார்த்தைகள் மீது. சொற்களின் மாய உலகத்தில் என் பறக்கும் கம்பளம் பயணித்த காலம். பள்ளி நோட்டு புத்தகத்திற்குள் ஒளித்து வைத்து ஒருவரி விடாமல் முணுமுணுத்து மடைக்குள் ஏற்றுவேன். பாடல் வரிகளை வரிசை மாறாமல் தாளம் கோணாமல் உட்கார்ந்து நான் பாட ஆரம்பித்தால் சின்ன தம்பி படத்தில் பிரபு மாதிரி(இந்தப் படம் வருவதற்கு பல வருடம் முன்) அக்கம் பக்கத்து அண்டை வீட்டு சனங்கள் நின்று வேடிக்கையாய் கேட்கும். ஆண்பாவம் படம் ரிலிஸான அன்று அதில் வரும் “என்ன பாட சொல்லாதே நான் கண்டபடி பாடிபுடுவேன்..கேட்டா மடையனுக்கும் ஞானம் பொறந்திடும்” பாட்டை குரலை கோணல்மானலாக மாற்றி நான் பாடியதை கேட்டு வீதி சனமே விறைத்து நின்றது. சொன்னால் நம்ப மாட்டீர்கள். பக்கத்துவீட்டில் ஒரு பெண்பிள்ளை பிறந்திருந்தது. அக்குழந்தைக்கு நான் சில்க் என்று செல்லப்பெயர் இட்டிருந்தேன். சில்க் அழுகும் சமயம் பார்த்து பாட்டுபாட அவளது அம்மா என்னை கூப்பிடுவார். அந்தளவுக்கு என் பாடின் மீது அபார நம்பிக்கை அவளுக்கு. தூளியை ஆட்டி,பாடலை காட்டி குழந்தைக்கு தூக்கதை ஊட்டுவேன்.இந்தப் பாட்டு வாத்தியார் உத்தியோகம்தான் எனக்கு கவிதை எழுதும் உத்வேகத்தை வழங்கியிருக்கும் என இப்போது தோன்றுகிறது.

நீங்கள் நினைப்பதை போல் பிறந்ததும் காஃப்காவையும், ஆல்பர் காமுவையும், போர்ஹேவையும், அந்தவான் து செந்த் – எக்சுபெரியையும் படிக்கின்ற ஞானக் குழந்தையாக நான் வரலவில்லை.அதேபோல் சோவியத் நாட்டிலிருந்து மூட்டை மூட்டையாக வந்திறங்கிய சிகப்பு இலக்கியங்களை உண்டு செரித்து உருப்படியான பிள்ளையாகவும் உருவாகவில்லை. இவை ஆச்சர்யப்படும் தகவல்கள் அல்ல;மிகைப்படுத்தப்படாத யதார்த்தங்கள். சாமான்யன் ஒருவனின் எளிய சித்திரங்கள். நான் கவிதை என்ற வார்த்தையின் வாசத்தைக்கூட உணராத வயதில் டயரி குறிப்புகளாக கிறுக்கி வைத்திருந்த காகிதக் குவியலை யதேட்சையாக பார்த்த பள்ளி ஸ்நேகிதன் ஒருவன் அவ்வார்த்தைகளுக்கு முதன்முதலாக கவிதை என பெயரிட்டான். இனம் புரியாத இன்பம் புல்லாங்குழல் வாசித்த இந்தத் தருணத்தையே என் முதல் பிரசுரம் என்பேன். அவன் கண்டு கொடுத்த அடையாளம் வேறுவேறு எல்லைகளுக்கு என்னை கடத்திக் கொண்டுப் போய் போட்டது. சுடுமணலில் சுருண்டு குளிர்ந்து ஆற்று நீரில் உருண்டு பிள்ளைப்பூச்சியாக வளர்ந்தேன். தெளிவான வாசக மீசை அரும்ப ஆரம்பித்த பருவம். பின்பு ஆத்மநாமில் ஆரம்பித்து கலாப்ரியா வரை வாசித்த புத்தகங்கள் எங்கெங்கோ என்னை சுழற்றி நுழைத்திருக்கிறது.

இப்படி பல வருடங்களாக எழுதியெழுதிச் சேமித்தவற்றை ஒவ்வொரு சிறுபத்திரிகைகளாக அடையாளம் கண்டு, அனுப்பி வைத்துவிட்டு காத்திருப்பேன். என் முதல் கடிதம் என்ன விளைவை உண்டாக்கியதோ அதே அனுபவம் இறுதிவரை விடாமல் விரட்டியது. தொடர்ந்து தோல்விகள்.வெற்றியென்பது வேலைக்கானதே இல்லை.ஒவ்வொரு முறையும் இந்த முறையாவது பலிக்கனுமே என்ற அயர்ச்சி அழுத்தும். சொல்லி வைத்த மாதிரி ஒரு பதில் கடிதம். ’உங்களின் படைப்பை வெளியிட முடியாமைக்கு வருந்துக்கிறோம். இதழ் பொருளாதார நெருக்கடிகளால் நிற்க நேரிட்டது.’ இப்படி எத்தனையோ பதில் கடித்ததை படித்து படித்து அலுத்துபோய்விட்டது. புறமுதுகில் குத்துப்பட்டு வரும் கடித்ததை அம்மா படித்துக்காட்டி நகைப்பாள். ”எழுதினான்.எழுதினான்.எழுதுவான்.எழுதிகிட்டே இருப்பான்” என்று காஜா ஷெரீப்பை விசு ‘சம்சாரம் அது மின்னாசரம்’ படத்தில் கிண்டல் பண்ணும் வசனம் ஒன்று இடம்பெரும் இல்லையா? அதையே சொல்லி அப்படியே அம்மா என்னை பழிப்பாள்.. அவளது சிரிப்புக்காவது உதவியதே என விட்டுத் தொலைப்பேன்.

புதிய இதழ் ஒன்று அப்போதுதான் கைக்கு கிடைத்திருக்கும். இந்த சஞ்சிகைக்கு அனுப்பலாமே என சின்னதாக மனதிலொரு ஆவல் முட்டும். அடுத்த விநாடியே அது நின்ற தகவல் நெஞ்சை கசக்கும். என் ராசியினால்தான் பல பத்திரிகை நின்று போவதாக மடத்தனமாக நம்பி படைப்பை அனுப்புவதை தவித்திருக்கிறேன்.நம்ம ராசி பிரத்தியாரையும் ஆட்டிப்படைக்க கூடாதே என்ற நல்லெண்ணம். நான் கவிதையை அனுப்பவே இல்லை. பல பத்திரிகைகள் இடைவிடாமல் இறுதி மூச்சை விட்டன. மரணக் கட்டிலில் படுத்தன.அன்றைக்குதான் ப்ரச்னை நம்மிடமில்லை. தப்பு வேறெங்கோ ஒளிந்திருக்கிறது என்பது உறைத்தது.

ஒருமுறை ஊரில் நண்பர்கள் சகலரும் சேர்ந்து ஒரு சிற்றிதழ் தொடங்குவதற்காக உட்கார்ந்து பேசினோம். சிலர் நண்பர்கள் பொருளாதார உதவி பண்ணுவதாக ஒப்புக்கொண்டனர். இதழுக்கு என்ன பெயர் வைக்கலாம் என ஆலோசிக்கையில் நான் சொன்ன பெயர் ஏற்புடையதானது.மண் மணம் கமழும் சொல் என்பதால் குழுவினரால் சட்டென ஏற்கப்பட்டது. அச்சு நுனுக்கம் அறிந்தவரிடம் பணியை ஒப்படைக்க ஆராய்ந்ததில் நான் அகப்பட்டேன். குருவி தானியத்தை பொருக்குவதை போல எறும்பு தன் தீனியை சுமப்பதைபோல பல மாதங்கள் மெனக்கெட்டு பத்திரிகைக்கு உருவம் கொடுத்தேன். அதில் பிரசுரம் காண இருந்த என் படைப்பை எண்ணி ஏக மகிழ்ச்சி. மறுநாளே உலகம் நம்மை உற்றுப்பார்த்துவிடும் என்ற நப்பாசை.

பகலில் பெரிய வேலைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் அச்சகத்தார் எங்களின் இதழ் வேலையை இரவு நேரத்திற்கு தள்ளி வைத்துவிடுவார். உடனே காசு வரும் சமாச்சாரம் என்பதால் இதழ் பணிகளுக்கு இரண்டாம் இடம் வழங்கப்பட்டது. தொடர்ச்சியான இதழ் பணியால் ஒரு ராத்திரிகூட எனக்கு சீரான தூக்கமில்லை.கண் சிவந்து செய்த பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்த அன்று சகாக்கள் எல்லோரும் கூடி ஒரு முடிவை எடுத்தனர். அப்பத்திரிகையை வன்னியர் அடையாளத்துடன் வெளியிடயிருப்பதாகவும் வன்னியர் அல்லாதவர்களுக்கு போகப் போக இடம் தரலாமென்றும் முடிவெடுத்து எனக்கு தகவல் தெரிவிக்காமலே அதில் இடம்பெற்றிருந்த என் படைப்பை அகற்றிவிட்டார்கள். இதழ் வேலைகள் முடியும் வரை வன்னியர் சாயம் பூச முற்படாதவர்கள் அத்தனை வேலைகளும் முடிந்தற்கு பின்னால் வன்னியர் முகம் தலைதூக்கியதால் நானே மனம் உகந்து வெளியேறினேன்.

”இதர சாதிக்காரனின் உழைப்பு மட்டும் தேவை.அவனின் படைப்பு மட்டும் தேவையில்லையா? இது எந்த ஊர் நியாயம்”என ஒரேயொரு நண்பர் ரெங்கப்பிள்ளை மட்டும் நியாயக்குரல் எழுப்பினார்.இவர் பெரியாரின் பேரனும் இல்லை. காரல் மார்க்ஸின் மருமகனும் இல்லை.ஒரு சாமாண்ய மனிதன். வஞ்சிக்கப்பட்ட எனக்கு நியாயம் சேர்த்தது அவரது குரல். அடிப்பட்டவனுக்கு களிம்பாக தடவப்பட்ட வார்த்தைகள். இப்படி என் முதல் பிரசுரத்தில் ஊனப்பட்ட கதையே அதிகம். இத்தனை இம்சைகளுக்கு அப்புறம் பிரசுரம் பெற்ற முதல் படைப்பு தஞ்சாவூரிலிருந்து வந்த சுந்தரசுகனில் என்பதாய் ஞாபகம். பிசகில்லாத ஞாபகம். வழிப்போக்கன் என்பது முதல் கவிதையின் பிரசுரத் தலைப்பு.

எப்படி முதல் பிரசுரம் எனக்கு மகிழ்ச்சி தரவில்லையோ அதேபோல் என் முதல் நூல் வெளியீட்டு விழாவும் எனக்கு இன்பம் பெயக்கவில்லை.தலைகுனிந்து மனமொடிந்து நடுத் தெருவில் குடும்பமே அன்று கண்ணீர்ல் தத்தளித்தோம்.2003 மார்ச் 2ஆம் நாள் என் முதல் நூல் வெளியீட்ட விழா. விருத்தாசலத்தில் தெய்வம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ஸ்நேகா பதிப்பகத்தின் பத்து நூல்கள் ஒட்டுக்க சேர்த்து வெளியிடப்பட்டன. மண்டப பெயரில் தெய்வம் துணையிருந்த அளவுக்கு வாழ்க்கையில் எனக்கு துணையிருக்கவில்லை. பல வருஷங்களாக உட்பூசலாக புகைந்துகொண்டிருந்த குடும்பச்சண்டை அன்றைக்குதான் வீதியை எட்டியது. வாக்குவாத முடிவில் வீட்டை விட்டே எனது அப்பா ஓடிப்போனார். குடியின் மரணப்படுக்கையில் தடுமாறிக் கொண்டிருந்த அவருக்கு இந்தப் புத்தகம்,கவிதை என்பதெல்லாம் வேண்டாத வேலை. அன்றைக்கு வீட்டை விட்டு புறப்பட்டுப் போனவர் இன்று வரை வீடு திரும்பவில்லை. வெளியீட்டு விழா மேடையில் நின்றிருந்த என்னிடம் பக்கத்து வீட்டுக்காரர் என் வீட்டில் அடிதடி நடப்பதாகவும் அப்பா குடித்துவிட்டு மானபங்கமாக நடந்து கொள்வதாகவும் தகவல் சொன்னார். ஒரு பக்கம் புதியதாக அச்சிட்டு எடுத்து வந்த எனது புத்தகத்தில் பசை கொஞ்சம் கொஞ்சமாக உலர ஆரம்பித்துக் கொண்டிருந்தது. அதற்குள் இன்னொரு பக்கம் குடும்பத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னால் இறுக்கிப் போடப்பட்ட பசை ஒட்டாமல் முழுதாக பிரிந்து கொண்டிருந்தது.

Tuesday, June 14, 2011

தலைவர்கள் மறந்து போன ஒரு தமிழறிஞர்!


எல்லிசன்! தமிழன் மறந்துபோன ஒரு ஆங்கிலேய தமிழ் அறிஞர்! பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் என்ற தன் ஆங்கில பெயரை தமிழ் ஒலிச் சப்தத்திற்கேற்ப தூய தமிழில் எல்லீசன் என்று மாற்றிக்கொண்ட தமிழ்மொழிக் காதலர்!

தமிழுக்கு அப்படி இவர் என்னதான் செய்தார் என்கிறீர்களா? திருக்குறள் உலகப் பொதுமறை என்று பெரியாரால் போற்றப்படுவதற்கு நூறு வருடங்களுக்கு முன்னதாகவே திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகறியச் செய்த உத்தமர் இந்த எல்லீஸ்! மதராஸ் ஆங்கிலேய அரசாங்கத்தின் வருவாய் வாரியச் செயலாளர் பதிவிக்காக இந்தியா வந்த இவர் நிலச்சுங்க அதிகாரி,சென்னை மாவட்ட ஆட்சியர் எனப் பல பதவிகளை வகித்த ஓர் உயர் அதிகாரி. இவரது காலத்தில்தான் சென்னையில் நிலவிய குடிநீர் பஞ்சதைப் போக பல கிணறுகள் வெட்டப்பட்டன. இப்போதும் ஏழுகிணறு என சென்னை மக்களால் குறிப்பிடப்படும் கிணறு எல்லிஸால் வெட்டப்பட்டதுதான். தமிழனின் தாக்கம் போக்கிய இந்த ஆகிலேயனுக்கு தமிழ்மீது தனியா தாகம் உண்டானதில் வியப்பொன்றுமில்லை!

மறைந்துபோன எல்லிஸ் வரலாற்றை மறுபடியும் கண்டறிந்தவர் தாமஸ் டிராவுட்மன். ஒரு பயணத்தின்போது எதேட்சையாக அயர்லாந்தில் இருந்த எல்லிஸின் கையெழுத்துப் பிரதிகளை புறட்டிப்பார்த்த டிராவுட்மன் இது அரிய பொக்கிஷம் என்பதை உணர்ந்தார்.உடனே தாமதிக்காமல் தன் ஆய்வைத் தொடர்கிறார்.இந்த தாமஸும் ஓர் ஆங்கிலேயர் என்பது கூடுதல் தகவல். தமிழை பற்றி ஆங்கிலேயர்கள் உணர்ந்துகொண்ட அளவுக்கு தமிழர்களே உணரவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை! மக்கள் ஒருபுறம் இருக்கட்டும் அரசாவது உணர்ந்ததா என்றால் இல்லை என்றுதான் நமக்கு பதில் வருகிறது.கால்டுவெல்லுக்கு கொடுக்கப்பட்ட அளவுக்கு எல்லிஸ் கெளரவிக்கப்படவில்லை.

“தமிழ்மொழி,இலக்கியத்தின் மீது காதலார்வம் கொண்ட்டிருந்த எல்லிஸின் புலமை இன்று பெரிதும் மறைக்கப்பட்டுவிட்டது;அதனை மீட்டு,தமிழ் வாசகர்களின் கையில் ஒப்படைக்க வேண்டும் என்பதே என் நெடுநாள் விருப்பம்”என்கிறார் தாமஸ் டிராவுட்மன்.இவர் அமெரிக்காவிலுள்ள மிஷிகன் பல்கலையில் பணியாற்றி வரும் மானிடவியல் மற்றும் வரலாற்றுப் பேராசிரியர்.

எல்லிஸின் ஆய்வுகள் குறித்த நன்கு அறிந்த தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கிடாசலபதியிடம் பேசினோம். “தமிழில் செய்யுள் இயற்றும் அளவுக்கு ஆங்கிலேய துரை எல்லீசனுக்கு பயிற்சியிருந்தது.நமசிவாயம் என்ற ஐந்தெழுத்து மந்திரம்பற்றி இவர் ஐந்து பாடல்கள் இயற்றியுள்ளதாக ரா.பி.சேதுப்பிள்ளை குறிப்பிருகிறார்.சென்னையில் தம் பொறுப்பிலிருந்த அரசாங்கத் தங்கச் சாலையில் திருவள்ளுவரின் உருவம் பொறித்த நான்கு வாரகம் தங்க நாணயங்களை வார்த்து வெளியிட்டவரும் இவரே. 1994ல் ஐராவதம் மகாதேவன் இலண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருந்த இரு நாணயங்களையும் கல்கத்தாவில் இருந்த இரு நாணயங்களையும் கண்டெடுத்து அதன் ஒளிநகலை முதன்முதலாக வெளியிட்டார்.

எல்லிஸ் தென்னிந்திய மொழிகளையும் பிற இந்திய நாட்டு மொழிகளையும் ஆங்கிலேய நிர்வாக அதிகாரிகளுக்குப் பயிற்றுவிப்பதற்காகப் புனித ஜார்ஜ்கோட்டையில் ஒரு கல்லூரியை 1812ல் நிறுவினார்.’சென்னைக் கல்ல்விச் சங்கம்’ என்று தமிழில் அறியப்பட்ட இக்கல்லூரியே எல்லிஸின் மொழி ஆய்வுகளுக்குக் களமாக விளங்கியது.1856ல் கால்டுவெல் எழுதி வெளியிட்ட ‘திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம்’என்னும் அரிய ஆய்வு நூலுக்கு நாற்பதாண்டுகளுக்கு முன்னரே,1816ல் ‘திராவிட மொழிக் குடும்பம்’என்ற புலமை மிக்க கருத்தாக்கத்தை கண்டுணர்ந்து உலகுக்கு வெளிப்படுத்தியவர் எல்லிஸ்.தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,துளு முதலான திராவிட மொழிக்குடும்பம் என்றும்,சொற்கள் அளவிலான கொள்வினையே சமஸ்கிருதத்துடன் உண்டு என்பதையும் எல்லிஸ்தான் முதலில் நிறுவுகிறார்”என்ற சலபதியிடம் “தன் ஆய்வுகளை எல்லிஸ் ஏன் வெளியிட முயற்சிக்கவில்லை என்றோம்?” மறுபடி தொடர்ந்தார் சலபதி.

“நாற்பது வயது நிறையும் வரை நூல்களை எழுதி வெளியிடுவதில்லை என்ற உறுதிபூண்டிருந்த எல்லிஸ் நாற்பத்தோரு வயதில் திடீரென்று உடல்நிலை சீர்குலைந்து மறைந்துபோகிறார்.இதனால் அவரது ஆய்வு மூலையில் முடக்கிவிட்டது.இதை மீண்டும் கண்டெடுத்து நூலாக கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் ஆங்கிலத்தில் வெளியீடுவதற்கு முன்னதாகவே தமிழாக்க செய்து வெளியிடப்பட்டது.இவ்வளவு சிறப்பு மிக்க நூல் தமிழக அரசு நூலகத்திற்குகூட கொள்முதல் செய்யாமல் தவிர்த்துவிட்டது என்ற செய்தி வருந்த்தக்க ஒன்றாகும்.பள்ளிக்கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டம் ஒரு பலனும் கிடைக்கவில்லை”என்றார்.

தாமஸ் டிராவுமன் தனது தமிழ்மொழிபெயர்ப்பு நூலை எழுத்தாளர் தியடோர் பாஸ்கரனுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.அவருடன் பேசினோம். “டிராவுட்மன் அர்த்தசாஸ்திரம் பற்றி ஆய்வைதான் முதலில் மேற்கொள்கிறார்.அதன்மூலம் அர்த்தசாஸ்திரம் கெளடில்யர் என்ற தனியொருவரின் படைப்பல்ல;சில நூற்றாண்டுக்கால இடைவெளியில் பலருடைய பங்களிப்பால் உருவான நூல் அது என்று தன் புள்ளியல் பகுப்பாய்வின் மூலம் நிறுவினார். தற்செயலாக ஏ.எல்.பாஷம் எழுதிய The Wonder that was India என்ற நூலை படிக்கிறார். அதன் பின் டிராவுட்மன் கவனம் இந்தியாவின் மீது விழுந்தது. நாடு சுதந்திரம் அடைந்தப் பிறகு புதிய ஆய்வுகள் நம் சமூகத்தில் நடைபெறவே இல்லை.எல்லோரும் பாடிய பாட்டையே பாடுகிறார்கள்.கால்டுவெல் எவ்வளவு முக்கியமான அறிஞரோ அதற்கு சற்றும் குறையாதவர் எல்லிஸ்.மெட்ராஸ் லிட்ரரி சொஸைட்டி உட்பட பல நல்ல துறைகளை சென்னையில் நிறுவியவர்.ஆனால் எல்லிஸை யாரும் கண்ண்டுகொள்வதேயில்லை.இதே போலதான் அறிஞர் சுரேஷ்பிள்ளை.வரலாற்றாய்வில் மிகப் பெரிய முன்னோடி.அவரையும் யாரும் பேசுவதில்லை. தாமஸ் டிராவுட்மனை எனக்கு 1974ல் இருந்து தெரியும்.’திராவிட உறவுமுறை’ ஆய்விற்காக இந்தியா வந்த போது பழக்கமேற்பட்டு தமிழ்நாட்டிலுள்ள பல வரலாற்று சின்னங்களை காண என்னுடன் பயணித்தார். அவரது ஆய்வை உலகம் அறிந்துகொண்டு எல்லிஸை இன்று கொண்டாடுகிறது.தமிழனுக்காக நடத்தப்பட்ட ஆய்வை தமிழகஅரசுகூட கண்டுகொள்ளாதது துரதிருஷ்டமானதுதான்”என்றார்.

எல்லிஸின் கல்லறையை கண்டறிந்தவர் கல்வெட்டறிஞர் வெ.வேதாசலம்“பல்வேறு ஆய்விற்காக நான் சுற்றிய போது இராமநாதபுரத்திலுள்ள ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தில் எல்லிஸின் கல்லறையுடன் கல்வெட்டு ஒன்றைக் கண்டெடுத்தேன்.சிதைந்த நிலையில் கிடந்த அக்கல்வெட்டை இப்போது பாதுகாப்பாக மதுரை நாயக்கர் மகால் அருங்காட்சியத்தில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறேன்”என்றார். எல்லிஸின் சில கட்டுரைகளை தமிழுக்கு மறுபடியும் வழங்கியவர் பேரா.மருதநாயகம்.எல்லிஸின் பிரதிகளை வெளியிட கொடுத்த பதிப்பகமொன்று எல்லிஸ் ஆய்வை தன் தாயாருக்கு சமர்ப்பணம் செய்த கொடுமையும் நிகழ்ந்துள்ளது.

எவ்வித பிரதிபலனும் பாராமல் உழைத்த எல்லிஸுக்கு இன்று ஒரு படம் கூட இல்லை. சிலை கூட இல்லை.இதைவிட கொடுமை வேரென்ன இருக்கமுடியும்? வாழ்க செம்மொழியான தமிமொழியாம்!

-நன்றி குமுதம்