Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Friday, February 5, 2010

புதிய கவிதைகள்

(1)



என்



என்
பால்யத்தை எப்படி
பிரசவிப்பது.சிறு
குழந்தையாக பெற்றெடுக்க
நான்
தாயுமல்லன்;
தந்தையுமல்லன்
இரண்டிற்கும்
நடுவில் என் கனவு,
பூட்டியிருக்கிறது.அதன்
ஓரப் பொந்துகளில் என் பால்யமனத்
துவாரச் சாவியை
கவ்வியபடி பறக்கிறது
ஒரு காகம்
காகத்தின்
திருட்டு வடையை
சுட்டுத் தரும்
மூதாட்டிக்கு
450கோடி ஆண்டுகள்
பூமி வயசு
அவள் மூட்டிய
தீயில்
நூற்றாண்டுகள்
கடந்திட்ட
ஜீவகாருண்ய
தித்திப்பு-
என்றும் ஒரு மிடறு
மிதந்தபடி இருக்கிறது.அதன்
உள்ளோடும் தினசரியை
ஓர் இடமாகப் பார்க்கும்
பேரிளம்பெண்
தன் பால்யத்தை
பெண்மைக்குள்
கைவிட்டு
உயிருள்ள ஜீவனக
வெளியே எடுக்கிறாள்
அதன் ஜுவாலை
மூடாமல்
திறந்தே இருக்கிறது


*********


(2)


அதன் கீழ்


ஒரு சொல்
ஒரே ஒரு சொல்
வாழ்வின் இடையே
பிறக்கிறது,
பிறந்துக் கொண்டே
இறக்கிறது.இறந்ததும்
நதியில் கரைகிறது.அந்
நீரின் அழகிற்கு
உள்ளே
வெளியே
கிடையாது
சுவரில்
அகால மரண
சுவரொட்டி.அதன்
கீழ்
ஒரு மனிதனின்
ஆரம்பம்
முடிவு
ஒன்றைச் சந்திக்கின்றன


*********


(3)





பெயரிடப்பட்ட உணர்ச்சி


குட்டையான இரு மாடுகள்
கோவில் சந்தின் எதிரெதிரே
பெயரிடப்பட்ட ஆதி உணர்ச்சியை
அசைப்போட்டு சுவைக்கின்றன

விதானத்தில்
சம்மணமிட்ட காளையின்
கழுத்துப்பட்டை மணி
யெழுப்பும் ஒலி
கொட்டிச் சிதறுகிறது
பக்தனின்
நேர்ச்சைக்குள்

நெட்டிலிங்க மரத்தின்
ஏதோ ஒரு
முனையை
வருடும்
பக்தனின் பார்வை
முதல் தடவை
புனிதவதியின்
மாயக்கனியை
காண்கிறது

இருமாங் கனிகள்,
முதற் கனியை ஈகை உண்ண
பின்னது,கனவனின் பசியை உண்டது
மூன்றாவதாக பிறந்த
தவக்கனியைக் கண்டு
கட்டியவன் மறைந்தான்.அவன்
புசிக்காத ஒரு கனி
ஒரேயொரு கனி
காலம் காலமாய்
உருட்டுகிறது
நம் தலையை




*********

(4)

மீகாலம்



மீகாலத்தின் உருவகம், அக்னிகுஞ்சு
பறக்கத் தொடங்கியாயிற்று
அடிவானத்திற்குள்
பறக்கத் தெரியாதப் பறவை
ஆகாயம்
மேல்
கீழ்
அல்ல
இரண்டும் தாண்டி அதன்
கூடு.பறவை,திசையறிந்து பறக்கும்
பண்பாட்டு உருண்டை.எப்படி நான்
உருண்டையை
உருண்டையாகப் பார்ப்பது.அம்
முழுமை வாள் உன்,
என் தலையை
ஒரே வீச்சில் கொய்ததே
உருளும் முகத்தில் தொங்குகிறது
நம் அடையாளப் பட்டை.அதன்
கடினத்தில் என்றைக்கும்
அதிகாரத்தின் தடயம்
எனக்கு-
அக்னி குஞ்சல்ல;
நொய்யலாற்றின் மேல் சுற்றும்
கதைசொல்லி காக்கையின்
பொன்குஞ்சு முக்கியம்
முட்டையில் கூளமாகாதக்
குஞ்சுகள்,நிகழ்காலத் தரையில்
தாவித்தாவி
கடந்தக் காலத்திற்குப் போய்
இரையெடுத்து திரும்பும் குஞ்சுகள்
அன்றாடத்தை
ஒரு முட்டையாகச்
சுமக்கும் நான்,
முற்கால தடாகத்தில் என்
புனைவுப் புரவிகளை
தாகம் தனிக்க
லாயத்தில் கட்டுகிறேன்.அங்கே
அவிழ்ந்து ஓடும் என் புரவிகளுக்கு
புவிக்கு அப்பால் விளிம்பே கிடையாது