Tuesday, July 26, 2011

குத்தல் குடைசல் கொண்ட வத்தல் கதைகள்!


இன்றைக்கு இருப்பதைப் போல அல்ல;பத்திப்புத்துறை உச்சம் தொடாதக் காலம். 90களின் பிற்பகுதி வரை மந்த நிலைதான். வை.கோவிந்தனின் சக்தி காரியாலயம் போன்ற பல நல்ல பத்திப்பகத்தை கூட தண்ணீர் குடிக்க வைத்தத் தொழில்,இந்த அச்சுத் தொழில். அச்சில் ஒரு படைப்பை காண்பது அத்தனை எளிதல்ல; கல்லில் நார் உரிக்கும் காரியம். ஒரு சிறுபத்திரிகைக்கு கவிதை எழுதி, அஞ்சல் பெட்டியில் சேர்ப்பித்து விட்டு முழுசாய் வீடு திரும்பி இருக்கமாட்டேன் அதற்குள் அப்பத்திரிகை நின்றுவிட்டதாக துரதிருஷ்ட தகவல் ஒன்று கதைவைத் தட்டும். கெட்ட சேதி எனக்கு முன்னதாகவே வீட்டு தாழ்ப்பாளை நீவிக் கொண்டு உள்ளே புகுந்து உட்கார்ந்திருக்கும். சிற்றிதழுக்கு தபால் எழுதி எழுதியே கைவிரல் தேய்ந்து சலித்த இலக்கியப் பிள்ளைகளில் நானும் ஒருவன். படைப்புகளை படியெடுத்து படியெடுத்தே அசதி அண்டிவிடும். முடிவில் ஆளையே கொன்றுவிடும். கூனல் விழாதக் குறை. குனிந்து குனிந்து, இனுக்கி இனுக்கி, காகிதங்களை வாங்கி, எழுதி அனுப்பிவிட்டு, வரும் வரும் என காத்திருந்தால் கடைசியில் ஏமாற்றம்தான் வலுவாய் திரும்பும். கீழே விழுந்தும் மீசையில் மண்னொட்டாத கதை, என் எழுத்துலக கதை. அந்தளவுக்கு விழுப்புண்கள் மனதில் மறைந்து கிடக்கின்றன.முதல் பிரசுரமாவது? இரண்டாவது பிரசவமாவது? பத்திரிகை பிரசுரம் என்பது மகிழ்ச்சியான அனுபவமாக எனக்கு வாய்க்கவில்லை. எல்லாம் மரண அடி. குத்தல் குடைசல் கொண்ட வத்தல் கதைகள்.

இன்று யோசிக்க யோசிக்க ஏதேதோ ஞாபகத்தை மீட்டுகிறது. துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? எமக்கு இன்பம் சேர்க்க மாட்டாயா? அன்பிலா நெஞ்சில் தமிழில்பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா? கண்ணே அல்லல் நீக்க மாட்டாயா?எனும் பாவேந்தரின் பாடல் வரிகள் மனசிற்கு மருந்தாகிறது. அவை மனசை பிழியும் மந்திர வார்த்தைகள். எழுத்தாளன் ஆவேன்.கவிதை எழுதுவேன். பத்திரிகையொன்றில் பணியாற்றுவேன் என்பதெல்லாம் நான் என்றும் எதிர்பாராத பகல் கனவுகள். ஆனால் எழுத்தின் ருசியை உள் மனம் உணர்ந்திருந்தது. ஆழ்மனத்தில் தொடர் இயக்கம் ஒன்று வேர்ப்பிடித்து விரவி நின்றிருக்கிறது. விவரமறிந்து, பாட புத்தகங்களை தவிர்த்து, நான் முதலில் படிக்க ஆரம்பித்த புத்தகங்கள், சினிமா பாட்டு புத்தகங்கள். வீட்டு மதில்சுவர் தாண்டி கிளைக்கும் செம்பருத்திச் செடியின் சிறு கிளையைபோல என் வரம்பை மீறி வளரும் பருவத்தை அவைதான் எனக்கு வழங்கின. வகை வகையாய் பாட்டு பிரசுரங்களை வாங்கி சுயத் தெம்பில் பாட்டுக்கட்டுவேன்.கொஞ்சம் கூடுதலாய் இட்டுக் கட்டுவேன். என் சொந்த சரக்கும் சேர்ந்து இதமாய் உள்ளிறங்கும். சிறு பிராயத்தில் பாட்டு புத்தகங்களை படித்து இலக்கிய வாசலுக்குள்ளாகப் புகுந்தவன் என இன்றைக்கு என்னைப் பற்றி சொல்லிக் கொள்வதில் எனக்கொன்றும் கூச்சங்களில்லை. பத்து வயதில் தாழப் பறந்தது என் தமிழ்க்கொடி. அடிவானத்திற்கு அப்பால் அது போய்சேரவுமில்லை.

நடைபாதைக் கடையில் 50பைசா கொடுத்து வாங்கும் சினிமா பாட்டு புத்தகங்களுக்கு வீட்டில் தனி அலமாரி அடுக்கே உண்டு. அவ்வளவு ஸ்நேகம்,ஈர்ப்பு வார்த்தைகள் மீது. சொற்களின் மாய உலகத்தில் என் பறக்கும் கம்பளம் பயணித்த காலம். பள்ளி நோட்டு புத்தகத்திற்குள் ஒளித்து வைத்து ஒருவரி விடாமல் முணுமுணுத்து மடைக்குள் ஏற்றுவேன். பாடல் வரிகளை வரிசை மாறாமல் தாளம் கோணாமல் உட்கார்ந்து நான் பாட ஆரம்பித்தால் சின்ன தம்பி படத்தில் பிரபு மாதிரி(இந்தப் படம் வருவதற்கு பல வருடம் முன்) அக்கம் பக்கத்து அண்டை வீட்டு சனங்கள் நின்று வேடிக்கையாய் கேட்கும். ஆண்பாவம் படம் ரிலிஸான அன்று அதில் வரும் “என்ன பாட சொல்லாதே நான் கண்டபடி பாடிபுடுவேன்..கேட்டா மடையனுக்கும் ஞானம் பொறந்திடும்பாட்டை குரலை கோணல்மானலாக மாற்றி நான் பாடியதை கேட்டு வீதி சனமே விறைத்து நின்றது. சொன்னால் நம்ப மாட்டீர்கள். பக்கத்துவீட்டில் ஒரு பெண்பிள்ளை பிறந்திருந்தது. அக்குழந்தைக்கு நான் சில்க் என்று செல்லப்பெயர் இட்டிருந்தேன். சில்க் அழுகும் சமயம் பார்த்து பாட்டுபாட அவளது அம்மா என்னை கூப்பிடுவார். அந்தளவுக்கு என் பாடின் மீது அபார நம்பிக்கை அவளுக்கு. தூளியை ஆட்டி,பாடலை காட்டி குழந்தைக்கு தூக்கதை ஊட்டுவேன்.இந்தப் பாட்டு வாத்தியார் உத்தியோகம்தான் எனக்கு கவிதை எழுதும் உத்வேகத்தை வழங்கியிருக்கும் என இப்போது தோன்றுகிறது.

நீங்கள் நினைப்பதை போல் பிறந்ததும் காஃப்காவையும், ஆல்பர் காமுவையும், போர்ஹேவையும், அந்தவான் து செந்த் – எக்சுபெரியையும் படிக்கின்ற ஞானக் குழந்தையாக நான் வரலவில்லை.அதேபோல் சோவியத் நாட்டிலிருந்து மூட்டை மூட்டையாக வந்திறங்கிய சிகப்பு இலக்கியங்களை உண்டு செரித்து உருப்படியான பிள்ளையாகவும் உருவாகவில்லை. இவை ஆச்சர்யப்படும் தகவல்கள் அல்ல;மிகைப்படுத்தப்படாத யதார்த்தங்கள். சாமான்யன் ஒருவனின் எளிய சித்திரங்கள். நான் கவிதை என்ற வார்த்தையின் வாசத்தைக்கூட உணராத வயதில் டயரி குறிப்புகளாக கிறுக்கி வைத்திருந்த காகிதக் குவியலை யதேட்சையாக பார்த்த பள்ளி ஸ்நேகிதன் ஒருவன் அவ்வார்த்தைகளுக்கு முதன்முதலாக கவிதை என பெயரிட்டான். இனம் புரியாத இன்பம் புல்லாங்குழல் வாசித்த இந்தத் தருணத்தையே என் முதல் பிரசுரம் என்பேன். அவன் கண்டு கொடுத்த அடையாளம் வேறுவேறு எல்லைகளுக்கு என்னை கடத்திக் கொண்டுப் போய் போட்டது. சுடுமணலில் சுருண்டு குளிர்ந்து ஆற்று நீரில் உருண்டு பிள்ளைப்பூச்சியாக வளர்ந்தேன். தெளிவான வாசக மீசை அரும்ப ஆரம்பித்த பருவம். பின்பு ஆத்மநாமில் ஆரம்பித்து கலாப்ரியா வரை வாசித்த புத்தகங்கள் எங்கெங்கோ என்னை சுழற்றி நுழைத்திருக்கிறது.

இப்படி பல வருடங்களாக எழுதியெழுதிச் சேமித்தவற்றை ஒவ்வொரு சிறுபத்திரிகைகளாக அடையாளம் கண்டு, அனுப்பி வைத்துவிட்டு காத்திருப்பேன். என் முதல் கடிதம் என்ன விளைவை உண்டாக்கியதோ அதே அனுபவம் இறுதிவரை விடாமல் விரட்டியது. தொடர்ந்து தோல்விகள்.வெற்றியென்பது வேலைக்கானதே இல்லை.ஒவ்வொரு முறையும் இந்த முறையாவது பலிக்கனுமே என்ற அயர்ச்சி அழுத்தும். சொல்லி வைத்த மாதிரி ஒரு பதில் கடிதம். உங்களின் படைப்பை வெளியிட முடியாமைக்கு வருந்துக்கிறோம். இதழ் பொருளாதார நெருக்கடிகளால் நிற்க நேரிட்டது. இப்படி எத்தனையோ பதில் கடித்ததை படித்து படித்து அலுத்துபோய்விட்டது. புறமுதுகில் குத்துப்பட்டு வரும் கடித்ததை அம்மா படித்துக்காட்டி நகைப்பாள். எழுதினான்.எழுதினான்.எழுதுவான்.எழுதிகிட்டே இருப்பான்என்று காஜா ஷெரீப்பை விசு ‘சம்சாரம் அது மின்னாசரம் படத்தில் கிண்டல் பண்ணும் வசனம் ஒன்று இடம்பெரும் இல்லையா? அதையே சொல்லி அப்படியே அம்மா என்னை பழிப்பாள்.. அவளது சிரிப்புக்காவது உதவியதே என விட்டுத் தொலைப்பேன்.

புதிய இதழ் ஒன்று அப்போதுதான் கைக்கு கிடைத்திருக்கும். இந்த சஞ்சிகைக்கு அனுப்பலாமே என சின்னதாக மனதிலொரு ஆவல் முட்டும். அடுத்த விநாடியே அது நின்ற தகவல் நெஞ்சை கசக்கும். என் ராசியினால்தான் பல பத்திரிகை நின்று போவதாக மடத்தனமாக நம்பி படைப்பை அனுப்புவதை தவித்திருக்கிறேன்.நம்ம ராசி பிரத்தியாரையும் ஆட்டிப்படைக்க கூடாதே என்ற நல்லெண்ணம். நான் கவிதையை அனுப்பவே இல்லை. பல பத்திரிகைகள் இடைவிடாமல் இறுதி மூச்சை விட்டன. மரணக் கட்டிலில் படுத்தன.அன்றைக்குதான் ப்ரச்னை நம்மிடமில்லை. தப்பு வேறெங்கோ ஒளிந்திருக்கிறது என்பது உறைத்தது.

ஒருமுறை ஊரில் நண்பர்கள் சகலரும் சேர்ந்து ஒரு சிற்றிதழ் தொடங்குவதற்காக உட்கார்ந்து பேசினோம். சிலர் நண்பர்கள் பொருளாதார உதவி பண்ணுவதாக ஒப்புக்கொண்டனர். இதழுக்கு என்ன பெயர் வைக்கலாம் என ஆலோசிக்கையில் நான் சொன்ன பெயர் ஏற்புடையதானது.மண் மணம் கமழும் சொல் என்பதால் குழுவினரால் சட்டென ஏற்கப்பட்டது. அச்சு நுனுக்கம் அறிந்தவரிடம் பணியை ஒப்படைக்க ஆராய்ந்ததில் நான் அகப்பட்டேன். குருவி தானியத்தை பொருக்குவதை போல எறும்பு தன் தீனியை சுமப்பதைபோல பல மாதங்கள் மெனக்கெட்டு பத்திரிகைக்கு உருவம் கொடுத்தேன். அதில் பிரசுரம் காண இருந்த என் படைப்பை எண்ணி ஏக மகிழ்ச்சி. மறுநாளே உலகம் நம்மை உற்றுப்பார்த்துவிடும் என்ற நப்பாசை.

பகலில் பெரிய வேலைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் அச்சகத்தார் எங்களின் இதழ் வேலையை இரவு நேரத்திற்கு தள்ளி வைத்துவிடுவார். உடனே காசு வரும் சமாச்சாரம் என்பதால் இதழ் பணிகளுக்கு இரண்டாம் இடம் வழங்கப்பட்டது. தொடர்ச்சியான இதழ் பணியால் ஒரு ராத்திரிகூட எனக்கு சீரான தூக்கமில்லை.கண் சிவந்து செய்த பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்த அன்று சகாக்கள் எல்லோரும் கூடி ஒரு முடிவை எடுத்தனர். அப்பத்திரிகையை வன்னியர் அடையாளத்துடன் வெளியிடயிருப்பதாகவும் வன்னியர் அல்லாதவர்களுக்கு போகப் போக இடம் தரலாமென்றும் முடிவெடுத்து எனக்கு தகவல் தெரிவிக்காமலே அதில் இடம்பெற்றிருந்த என் படைப்பை அகற்றிவிட்டார்கள். இதழ் வேலைகள் முடியும் வரை வன்னியர் சாயம் பூச முற்படாதவர்கள் அத்தனை வேலைகளும் முடிந்தற்கு பின்னால் வன்னியர் முகம் தலைதூக்கியதால் நானே மனம் உகந்து வெளியேறினேன்.

இதர சாதிக்காரனின் உழைப்பு மட்டும் தேவை.அவனின் படைப்பு மட்டும் தேவையில்லையா? இது எந்த ஊர் நியாயம்என ஒரேயொரு நண்பர் ரெங்கப்பிள்ளை மட்டும் நியாயக்குரல் எழுப்பினார்.இவர் பெரியாரின் பேரனும் இல்லை. காரல் மார்க்ஸின் மருமகனும் இல்லை.ஒரு சாமாண்ய மனிதன். வஞ்சிக்கப்பட்ட எனக்கு நியாயம் சேர்த்தது அவரது குரல். அடிப்பட்டவனுக்கு களிம்பாக தடவப்பட்ட வார்த்தைகள். இப்படி என் முதல் பிரசுரத்தில் ஊனப்பட்ட கதையே அதிகம். இத்தனை இம்சைகளுக்கு அப்புறம் பிரசுரம் பெற்ற முதல் படைப்பு தஞ்சாவூரிலிருந்து வந்த சுந்தரசுகனில் என்பதாய் ஞாபகம். பிசகில்லாத ஞாபகம். வழிப்போக்கன் என்பது முதல் கவிதையின் பிரசுரத் தலைப்பு.

எப்படி முதல் பிரசுரம் எனக்கு மகிழ்ச்சி தரவில்லையோ அதேபோல் என் முதல் நூல் வெளியீட்டு விழாவும் எனக்கு இன்பம் பெயக்கவில்லை.தலைகுனிந்து மனமொடிந்து நடுத் தெருவில் குடும்பமே அன்று கண்ணீர்ல் தத்தளித்தோம்.2003 மார்ச் 2ஆம் நாள் என் முதல் நூல் வெளியீட்ட விழா. விருத்தாசலத்தில் தெய்வம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ஸ்நேகா பதிப்பகத்தின் பத்து நூல்கள் ஒட்டுக்க சேர்த்து வெளியிடப்பட்டன. மண்டப பெயரில் தெய்வம் துணையிருந்த அளவுக்கு வாழ்க்கையில் எனக்கு துணையிருக்கவில்லை. பல வருஷங்களாக உட்பூசலாக புகைந்துகொண்டிருந்த குடும்பச்சண்டை அன்றைக்குதான் வீதியை எட்டியது. வாக்குவாத முடிவில் வீட்டை விட்டே எனது அப்பா ஓடிப்போனார். குடியின் மரணப்படுக்கையில் தடுமாறிக் கொண்டிருந்த அவருக்கு இந்தப் புத்தகம்,கவிதை என்பதெல்லாம் வேண்டாத வேலை. அன்றைக்கு வீட்டை விட்டு புறப்பட்டுப் போனவர் இன்று வரை வீடு திரும்பவில்லை. வெளியீட்டு விழா மேடையில் நின்றிருந்த என்னிடம் பக்கத்து வீட்டுக்காரர் என் வீட்டில் அடிதடி நடப்பதாகவும் அப்பா குடித்துவிட்டு மானபங்கமாக நடந்து கொள்வதாகவும் தகவல் சொன்னார். ஒரு பக்கம் புதியதாக அச்சிட்டு எடுத்து வந்த எனது புத்தகத்தில் பசை கொஞ்சம் கொஞ்சமாக உலர ஆரம்பித்துக் கொண்டிருந்தது. அதற்குள் இன்னொரு பக்கம் குடும்பத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னால் இறுக்கிப் போடப்பட்ட பசை ஒட்டாமல் முழுதாக பிரிந்து கொண்டிருந்தது.

6 comments:

geethappriyan said...

நண்பரே!!!
எவ்வளவுகொடுமை,கடினம்,தமிழ்சூழலில் ஒரு படைப்பாளியாக இருப்பது?

கடற்கரய் said...

உங்களின் பகிர்வுக்கு என் முதல் நன்றி.உண்மைதான் கீதப்ப்ரியன்.அவமானங்கள், புறக்கணிப்புகள் என் வாழ்வில் நடந்து ஏராளம்.அவ்வளவு சொன்னால் கழிவிறக்கமாகிவிடும் இல்லையா?

aravindan chennai said...

கழிவிரக்கத்துக்கு வல்லின ற போட்டிருக்கிறீர்கள். பொருள் எப்படி மாறுகிறது பார்த்தீர்களா?

கடற்கரய் said...

ஹிஹி..அரவிந்தன்.உங்கள்ஆசியர் வேலையை ஆரம்பித்துவிட்டீர்களா? தவறுதான்.திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்

கோகுல் said...

உங்கள் மனதில் வேர் விட்டுள்ள இந்த சோகம் உங்களைப்போன்ற ஒவ்வோர் எழுத்தாளனையும் ஆட்டிப்படைக்கிறது,
\\“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? எமக்கு இன்பம் சேர்க்க மாட்டாயா? அன்பிலா நெஞ்சில் தமிழில்பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா? கண்ணே அல்லல் நீக்க மாட்டாயா?”\\
உண்மையான மருந்துதான்

கடற்கரய் said...

நன்றி கோகுல்