Tuesday, August 2, 2011

சுரா:வசனத்தின் குழந்தைக்கு வயது எண்பது
குமரி முனையில் நடைபெற்ற சுரா-80க்கு போயிருந்தேன். விவேகானந்தா கேந்திரத்தில் மொத்தம் மூன்றுநாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அங்கே நடக்கவிருந்தஇளம் தலை முறையினர் பார்வையில் சுராஎன்ற விவாத அரங்கில் என்னை பங்கேற்க முடியுமா என கண்ணன் கேட்டிருந்தார். எதிர்பாராமல் வந்த அவ்வழைப்பை இன்முகத்தோடு ஏற்றேன். வருடக் கணக்காய் மூளையில் கிடந்து அரித்துக் கொண்டிருந்த சுராவின் சொற்களை மற்றவர் தலையில் எப்பாடுபட்டாவது இறக்கி வைத்துவிடலாம் என்ற ஆவல் உந்தியதே ப்ரத்யே காரணம். நான் பயணித்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில் ரயிலில்தான் காலச்சுவடு ஊழியர்களும் இதர நண்பர்கள் சிலரும் வந்தனர். அதில் பரிசல் செந்தில்நாதனும் ஒருவர். என்னை அகஸ்மத்தமாக பார்த்தவர், நாளைக்கு கூட்டத்துல பேசும்போது அளவா பேசுப்பா.நீபாட்டுக்கும் ஒரு மணி நேரம் பேசி தொலைக்கப்போறேஎன்று ஒரு எளிய வேண்டுகோள் வைத்தார். வீதிக்கு வீதி, தெருவுக்கு தெரு, பேசிப் பேசியே இயக்கம் கட்டிய கம்யூனிட் அமைப்பில் (தமுஎகச) இருப்பவர். ஒரு கூட்டத்தை சைதை தேரடி வீதியில் மாலை ஆறு மணிக்கு இவர்கள் ஆரம்பித்தால் அக்கம் பக்கத்தில் குடும்பம் இருக்கிறதே? குழந்தைக் குட்டிகள் இருப்பார்களே என்ற எந்த சமூகப் பிரக்ஞையும் அற்று விடிய விடிய கூத்து நடத்துவார்கள். இவர்களின் உறுப்பினர்களே இன்று பேச்சை வெறுக்க ஆரம்பித்திருப்பது வரலாற்று நகையா? அல்லது முரண்நகையா? இல்லை கவரிங் நகையா என்பது புரியவில்லை.

தோழர் பி.வி.பி. மார்க்ஸிய வகுப்பெடுக்க ஆரம்பித்தால் அன்னந் தண்ணி ஆகாரமில்லாமல் நாள் கணக்கில் உட்கார்ந்து பேசுவார் என கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப் பண்பாளர் வழி வந்தவர்கள் இன்று என்னைப் பேசாதே என்கிறார்கள். ஜீவா பேசாத பேச்சா. ஜீவா இறந்துவிட்டார் என ஊரில் தகவல் பரவியதும் அத்தைனை தோழர்களும் கேட்ட முதல் கேள்வி: மேடையில் பேசிகிட்டு இருக்கும்போதா? என்பது.(கவனிக்க:சுரா கட்டுரைகள்) பேச்சுக்கும் கட்சிக்கும் அப்படியொரு பொருத்தம் இருந்த காலங்கள் உண்டு. ஆனால் இன்று அவ்வமைப்பின் பிரதிநிதிகள் பேச்சைக் கேட்டாலே வெறுக்கிறார்கள்.ஒருவர் பேசுவதையே முடக்குகிறார்கள்.ஜீவாவை நான் பார்த்ததில்லை.அதற்கு வாய்ப்பும் கிட்டவில்லை. ஜீவா அளவுக்கு நான் அறிவாளி கிடையாது.அவர் அளவுக்கு பெரிய சொல் விரனும் கிடையாது.ஆனால் எனது மரணமும் பேச்சும் தருணத்தில் முடிவுற பிரியப்படுகிறேன். ஒலிக்கு அழிவில்லை என்கிறது அறிவியல். அந்த அழிவற்ற நிலத்தில் எனக்கொரு இடம் தேடிக் கொண்டிருக்கிறேன். செந்தில்நாதன், எந்த நேரத்தில் அப்படி சொன்னாரோ? ரயிலில் பேச்சுத் துணைக்குகூட ஆளில்லாமல் ஒத்தை ஆளாய் குமரிமுனை வந்து சேர்ந்தேன்.இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தென்திசை யை எட்டுவதற்குள் சுராவின் கவிதைகள் கரட்டு வடிவவம் உட்பட - முழுத் தொகுப்பையும் மறுபமுறை ஒரே மூச்சில் வாசித்துவிடலாம் என எண்ணினேன். என்னெதிரே உட்கார்ந்திருந்த ஒரு பையனும் அவனது ஸ்நேகிதனும் சொந்தக்கதை பேசினார்கள். அப்புறம் ஊர்க்கதையாய் புகையாய் புகை நெளிந்த்து. ரயிலைவிட்டு இறங்கும் வரை அவர்கள் இருவரும் மெளனிக்கவேயில்லை.

காலச்சுவடு ஜூன் 3ம் தேதி சுராவின் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்ததால் ஊரில் கூடுதல் ஆரவாரங்களை எதிர்ப்பார்த்திருந்தேன். வாழும் வள்ளுவர் பிறந்த நாளாயிற்றே! அதுவும் கன்னியாகுமரி எல்லை. கறை வேஷ்டிகள் முஷ்டியை முறுக்கிக் கொண்டு குமரியில் முக்கூட்டுக்கு முக்கூட்டு நின்றிருப்பார்கள் தானே? ஆனால் ஏனோ ஆரவாரமோ, தம்பட்டமோ கரகர கர்ஜிப்பு சத்தமோ தென்படவில்லை. ரயிலடியிலிருந்து வந்தவர்கள் அனைவரும் கும்பலாய் குழுமினோம். ஜங்ஷன் வாயிலில் ஒப்பந்த வாகனம் ஒன்று காத்து நின்றது. தேவிபாரதி, குவளைக் கண்ணன், அனிருத்தன் வாசுதேவ், களந்தை பீர்முகம்மது, நான் உள்ளிட்ட சிலர் சாலையில் பொடி நடைப் போட்டோம். உடன் இணைந்தார் கவிஞர் சுகிர்தராணி. அதிகாலை நேரம்.ஒரு தேனீர் கடைக்குள் சகலரும் ஒதுங்கினோம். காப்பி, டீ என ஆளுக்கு தக்க ஆர்டர் பறந்தது. அனிருத் மட்டும் தனக்கு லாக்டோமால் ஒவ்வாமை இருப்பதாக சொல்லி டீ, பால், காப்பி குடிக்க மறுத்தார்.பின் நவீனதுவ நாவலின் தலைப்பைபோல அனிருத் உச்சரித்த மருத்துவச் சொல் கொஞ்ச நேரம் விவாதப் பொருளாக டீக்குள் விழுந்தது. அந்த ஆராய்ச்சி முடிவுற்று அறைக்கு வந்த மறுகணமே குளித்து முடித்துவிட்ட கையோடு கருத்தரங்க அரங்கிற்கு விரைந்தோம்.

அரங்கம் க.நா.சு நினைவரங்கம், தளையசிங்கம் சிற்றரங்கு என இருவிதமாக பிரிக்கப்பட்டிருந்தது. சுராவுக்கு அனுசரனையான இரு படப்பாளிகளின் பெயரில் அரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது மகிழ்ச்சிக்குறிய அம்சம். க.நா.சு.வின் வழித் தடம் பார்த்து தன் எழுத்தின் கால் தடத்தை சீர்ப்படுத்தி கொண்டவர் சுரா. புதுமைப்பித்தனுக்கு பிறகு சுரா வரித்துக்கொண்டது க.நா.சுவின் பாதை. நாகர்கோவில் லாட்ஜில் தனி அறையெடுத்து க.நா.சு. தங்கயிருந்த காலத்திலிருந்து உண்டான ஸ்நேகம். சுராவும் கிருஷ்ணன் நம்பியும் க.நா.சுவும் சேர்ந்து அந்தக் காலத்தில் நாகர்கோவிலை நடந்தே சவாரி பண்ணிப் பார்த்திருக்கிறார்கள். க.நா.சு அறையைவிட்டு தெருவுக்குள் இறங்கியதும் அவர் உடம்பு எந்தத் திசைக்கு திரும்புகிறதோ அத்திசை பார்த்து, உடனே நடக்க ஆரம்பித்துவிடுவார் என தன் நினைவோடையில் சுரா குறிப்பிடுகிறார். க.நா.சு.அளவுக்கு தளையசிங்கத்தின் எழுத்தை சுரா கொண்டாடியிருக்கிறார். தளையசிங்கத்தின் எழுத்திலுள்ள பிரபஞ்ச யதார்த்தம் பற்றி அவர் சிலாகித்து எழுதியக் கட்டுரை தமிழில் ஒரு தனி வகைமாதிரி. அக்கட்டுரையை ஒட்டி இருவேறு கருத்து மோதல்கள் இருப்பதினாலேயே அதன் இருப்பு இன்றும் வலுப்பெற்றிருக்கிறது.

முதல் நாள் பிரதான அரங்கில் சுராவின் மனைவி கமாலா அம்மாள் குத்து விளக்கு சுடரை பற்றவைக்க, தங்கு சுராவின் கவிதைகளை கர்நாடக இசையில் பாடி நிகழ்ச்சியை இனிமையாக துவக்கிவைத்தார். தங்குவின் குரலைத் தாண்டி இசையின் அடி வானத்திற்கு அப்பால் போய் விழுந்தன சுந்தர ராமசாமி கவிதைகள்.நவீனக் கவிதைகள் செவ்வியல் இசைப்பண்பைக் கட்டிக்கொண்டு தழையத் தழைய வலம் வந்த விதம் வெகு மக்களை சிலாகிக்கச் செய்தது. அடுத்து தியேட்டர் ஒய் நாடகக்குழுவினர் சுராவின் பிரதிகளை பக்கம் பக்கமாய் வாசித்துக் காட்டினார்கள். இது ஒருவிதமான தியேட்டர் ஃபார்ம்.அயல் தேசம் வரை அறியப்பட்டக் குழுவினர். சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் ராபட்டோ கலாஸாவின் நூல் வெளியிட்டு விழாவலும் இதேபோன்ற ஒரு நிகழ்ச்சியை நடத்திக்காட்டினார்கள். முன்னமே நான் பார்த்திருக்கிறேன். அங்கு கலாஸாவின் பிரதிகளை வாசித்தவர்கள் இங்கே சுராவின் பிரதிகளை தமிழ், மலையாளம், இந்தி, இங்கிலீஷ் முதலிய சகல மொழிகளில் வாசித்தனர். வாசிப்பு மணிக்கணக்காய் நடந்தது. முதலில் உற்சாகம் முட்ட ஆரம்பித்த நிகழ்ச்சி நேரமாகமாக அசதி தட்டியது. எதையும் அதிகமாக அனுபவிக்கும் ஆற்றல் நம் உடம்பிற்கு இயற்கையாகவே இருப்பதில்லையோ என்னவோ? உற்சாகம், இடம் பிடித்து நாற்காலியில் உட்கார்வதற்கு முன் அசதி தன்னிரு கால்களை நீட்டி தரையில் சரிந்துவிடுகிறது. நாடகக் குழுவினர் ஒரு பிரதியின் வெவ்வேறு மொழிப் பெயர்ப்புகளை வாசித்துக் காட்டியதில் எனக்கு ஒரு ஐயம் . பிற மொழிகளில் தவழும் சாந்தம், இயல்பு, நட்புணர்ச்சி எதுவும் தமிழில் வாசிக்கப்படும் சமயத்தில் தென்படவியில்லை. தமிழ் உச்சரிப்பில் உணர்ச்சிகள் கொப்பளித்தன. வாசிக்கப்படும் வாசனத்தைத் தாண்டி உணர்ச்சி முன்னக்க முன்னக்க வந்து சிந்தியது. இந்த முந்திரிக் கொட்டை மனோபாவம் தமிழுக்கே உரியதா? என் இருக்கைக்கு அருகிலிருந்த ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதியிடம் கேட்டேன்: இது மொழியின் குறைபாடா? இல்லை வாசிப்பவரின் குறைப்பாடாவென்று? அவர், இரண்டும்தான் என்றார். இவ்வளவு உணர்ச்சிகளை ஒரு மொழி ஏன் தனக்குள்ளாக அழுத்தி வைத்திருக்கிறக்க வேண்டும்? பவ்யம், மென்மை, நளினம் என்பதெல்லாம் தமிழ் உள்வாங்கவே இல்லையா? இவையெல்லாம் அண்டைவீட்டு பாத்திரங்களா?நம்மால் புழங்கவே முடியாதவையா?

தலையசிங்கம் அரங்கில் சுராவின் படைப்புகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. கவிஞர் ஆனந்த், குமார செல்வா, அ.ராமசாமி, அரவிந்தன், பழ.அதியமான், எம்.யுவன், மணா, பெருந்தேவி, கவிதா முரளிதரன், அம்பை என பலர் கட்டுரை வாசித்தார்கள்.அதியமான், ஆனந்த், அரவிந்தன் , எம்.யுவன் உள்ளிட்டவர்களின் முழுக் கட்டுரை வாசிப்பின் போது நான் அரங்கில் இருந்தேன். அதியமான் மறுமலர்ச்சி கால எழுத்தாளர்களை சுரா எப்படி பார்த்தார். எப்படி பார்த்திருக்கலாம் என்ற பதத்தில் நூல் பிடித்தத கட்டுரையை படித்தார். ஆய்வு சாயலை கட்டுரையில் அவர் கைக்கழுவி இருந்திருக்கலாம். அரவிந்தனின் கட்டுரை சுராவை தரவாக படித்ததற்கான தடயத்தை மட்டுமே வழங்கியது. எழுத்தாளனுக்கு செய்யும் முதல் கெளரவம் அது. அரவிந்தன், தனது கட்டுரைக்கு எதிராக எழுந்த விமர்சனத்திற்கு அளித்த பதிலில் சாமர்த்தியம் இடைவிடாமல் தட்டுப்பட்டது. ஆனந்த், அரங்கத்திற்கு வருவதற்கு சற்று முன்னதாகவும் ரயில் பயணத்திலுமே தன் கட்டுரையை உதிரியாக எழுதிக் கோர்த்து வந்திருப்பதாக சொன்னார். முழுமை பிரதியல்ல என்று சொல்லிவிட்டு வாசித்தார். அவரது கட்டுரையில் வந்த சுயம் என்ற ஒற்றை வார்த்தையை பிடித்து உருட்ட ஆரம்பித்தார் பிரேம்.அவர் கேட்க நினைத்த கேள்வி அடிக்குரல் தாண்டவில்லை. அவருக்குள்ளாகவே சரிந்து உடைந்துப்போனது. வாசிக்கப்பட எல்லாக் கட்டுரையிகளும் குறையோடு இருப்பதை மணிவண்ணன் முன் கூட்டியே கனித்திருந்தார். பலருக்கு பிடிபடாத ரகஸ்யம். கட்டுரை எங்கு முடிகிறது?எங்கு ஆரம்பிக்கிறது என்று உணராமல் அவர் கவலை கொள்ள பழகியிருந்தார்.கவலை அவரின் பிரதான பிரச்னை. கட்டுரை வாசிப்பு முடியும் வரை கட்டுரையாளரை முறைத்து நின்ற காமிராவின் கண்கள் தாமாகவே மணிவண்ணனைப் பார்த்து முறைக்க பழகியிருந்தன। அரங்கம் அத்தனை சுறுசுறுப்பு। லஷ்மிமணிவண்ணனிடம் தமிழில் பிரசுரம் காண்கிற சகல படப்புகளையும் தான் மட்டுமே படிக்கிறோம் எனும் தொனி। பின்னால் வெளியில் வந்து அம்பையின் கட்டுரையை வாங்கி வாசித்து பார்த்தேன்।

தமிழ்ச் சூழலில் இலக்கியத்தில் ஆளுமை உள்ள ஒரு மூத்த ஆண் எழுத்தாளர் ஒரு பிதாமகர் ஸ்தானத்தை எட்டிவிடுகிறார். பெண் எழுத்தாளர்கள் வயது ஏறஏறக் கிழவிகள்தான் ஆகிறார்கள்.! ஒரு முறை சுராவுக்கு, பலர் அவரை ஒரு குருவைப் போல நடத்துவதாக நான் எழுதினேன். அவர் அதற்குப் பதில் எழுதவில்லை. ஆனால் நேரில் சந்தித்தபோது அப்படி எதுவும் இல்லை என்றார். அவர் எழுதிய கதைகளை, கவிதைகளை வெகுவாக விரும்பிய நான் ஜே ஜே; சில குறிப்புகள் நாவல் வெளிவந்த போது பெருத்த ஏமாற்றம் அடைந்தேன். அதைப் பற்றிய நீண்ட விமர்சனம் ஒன்றை ஒரு பொது நிகழ்ச்சியில் படித்தேன். அதன் பின்பு நான் நாகர்கோவில் வந்தபோது நான் நாவலை முற்றிலும் நிராகரிப்பதாகவும், அதனால் அவரும் அந்த விமர்சனத்தை முற்றிலும் நிராகரிப்பதாகவும் கூறினார். அது குறித்து சர்ச்சை செய்தோம். ஆனால் இருவரும் அவரவர் நிலையிலிருந்து மாறவில்லை.

தமிழினி நிகழ்வில் நாவல்களைப் பற்றி நான் பேசியபோது ஜே ஜே நாவலைப் பற்றிய என் பழைய கருத்தையே முன் வைத்தேன். என் பேச்சு முடிந்த பிறகு என்னைச் சந்தித்த சுரா, ’நானும் இனிமேல் எல்லோரையும் கிழிகிழியென்று கிழிக்கப் போகிறேன்என்றார். உங்களை யாராவது தடுத்தார்களா என்ன?’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டேன். சுரா வழக்கமாக அப்படிப் பேசக் கூடிய நபர் அல்ல. விவாதித்தும் எழுதியும் தீர்த்துக்கொள்வாரே ஒழிய இப்படி வெடிப்பவர் அல்ல. நிகழ்ச்சி முடிந்த பிறகு கடைசி நாள் நான் என் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்த போது, அங்கே சுரா நின்றுகொண்டிருந்தார். என் அருகில் வந்து என் முதுகில் தட்டிக் கொடுத்தார். அத்தனை ஆண்டு நட்பில் அவர் ஒரு முறை கூட என்னைத் தொட்டுப் பேசியதில்லை. அவர் வெகு வாஞ்சையுடன் முதுகில் தட்டித் தந்ததும் ஆச்சரியப்பட்டுப் போனேன். எதையும் மனசுல வெச்சுக்க வேண்டாம். எதுவும் மாறல. வழக்கம் போல நாகர்கோவில் வரணும்என்றார். ஒரு வேளை என் மனத்தை புண்படுத்திவிட்டோமோ என்று நினைக்கிறார் என்று புரிந்துகொண்டேன். நட்பையும் அன்பையும் வெளிப்படுத்தும் அந்தத் தொடுகை என்னை நெகிழ்த்தியதுஎன்று எழுதியிருந்தார்.

நான் முதல் அரங்கத்திற்கும் இரண்டாம் அரங்கத்திற்கும் மாறிமாறி தாவிக் கொண்டிருந்தேன். பிரதான அரங்கில் ச.தமிழ்செல்வனின் பேச்சு சரளமாய் பல உள் குத்தல்களோடு பார்வையாளர்களை கட்டிப்போட்டது. சச்சிதானந்தன் கேரளாவில் இருந்து வந்திருந்தார். நித்தியானந்தன், உலகத் தமிழர்களின் இன்றைய வாழ்வியல் குறித்தும் அதன் உண்மைத் தன்மை விரிவாக நகைச்சுவை தொனிக்கப் பேசினார். உங்களுக்கு ரஜினி இட்லி சாப்பிட்டதுதான் தலைப்புச் செய்தி.அதுவும் கூடவே அவர் ஒரு வடையும் சாப்பிட்டது அபாரத்தகவல் இல்லையா என்றார். குலசிங்கத்தின் உரை முற்றிலும் எதிர்மறையாக விழுந்தது. எங்களை சோதனைச்சாலை எலிகளைபோல உங்களின் எழுத்தில் பயன்படுத்தாதீர்கள்.இங்கிருந்து வரும் தமிழ்நதிகள் எல்லாம் அதையே செய்கிறது என ஆதங்கப்பட்டார்.அவருக்கும் அவரது மக்களுக்கும் இன்றைய தேவை காசு.அல்லது பணம் என்றார்.

அன்றிரவு நிகழ்த்தப்பட்ட குதிரை முட்டை நாடகம் குறிப்பிட்டு சுட்டவேண்டிய ஒரு நிகழ்வு. நெய்தல் கிருஷ்ணனின் நடிப்பாற்றல் உடற் அசைவுகள் அபாரம். கிருஷ்ணனுக்குள் ஒரு குட்டிக் கலைஞனை கற்பனை செய்து பார்க்கவே மனம்வரவில்லை. ஆனால் அதை கண்டுணர்ந்திருக்கிறார் சண்முகராஜா. நாடக அரங்கம் முழுக்க சிரிப்புச் சத்தம். வீரமாமுனிவரின் கேலி இழையும் உரைநடை பிரதியிலுள்ள வார்த்தைகளை கிருஷ்ணன் நயம்பட உச்சரித்தை கேட்டு பலர் மகிழ்ந்துபோய் சிரித்தார்கள்.இந்த நாடகதம், ஞாநியின் எந்திர துடைப்பான் நாடகங்கம் என இரு நாடங்கள் மட்டுமே எனக்கு பார்க்க வாய்த்தவை. ரசனை மட்டத்தில் முன்னதற்கும் பின்னதற்கும் பார தூரம். இறுதி நாள் பேசிய ஜெமோவின் உரை திடமானது. அவருக்கு ஃபுரூட் சாலட்டில் சீனி தூவி சாப்பிடும் பழக்கம் உண்டாம். திருவனந்தபுரத்து பால்ய பழக்கம். ஒருமுறை சுரா ஃபுரூட் சாலட் சாப்பிடும் போது சீனி போடாமல் சாப்பிட்டாராம்.ஏன் சீனியிடும் வழக்கம் இல்லையா என சுந்தர ராமசாமியிடம் ஜெமோ கேட்தற்கு, அவர் அதை தனியே சாப்பிடுவேன் என்றாராம். இந்த மாதிரி சீனியிடப்பட்ட எழுத்துதான் ஜனரஞ்சக எழுத்து சுஜாதாவின் எழுத்து. வலிந்து உருவாக்கப்பட்டவை. வலிந்து சுவாரஸ்யப்படுத்தப்பட்டவை. தீவிர எழுத்துகள் இதற்கு நேரெதிராக பிறந்தவை என்று தன் பார்வையை பதிய வைத்தார். பி.ஏ.கிருஷ்ணனின் கட்டுரை தொகுப்பை ஜெமோ வெளியிட வந்திருந்தார். கிருஷ்ணனின் புத்தகத்திற்கு சற்று அவர் கூடுதல் கவனம் அவர் தந்திருக்கலாம்.

கலந்துரையாடல் பகுதியில் நான் பேசியதன் சாரம்சம் : சுரா எங்கள் நிலப்பரப்பை பொறுத்தளவில் எதிர் உருவம். வறட்டு நாத்தீகம், தட்டையான வாசிப்பு என பழக்கப்பட்ட பகுதிக்கு சுரா ஒரு ஆகாத ஆள். அழகுணர்ச்சி, கலையுணர்ச்சி சிந்தனை நரம்புகள் அரவே இயங்காத எங்கள் ஊர் எழுத்தாளர்களுக்கு ஆகாத அம்சங்கள்.உவக்காதச் சொற்கள். பிடிக்காத வாதங்கள். என் தெருவில் வசித்த இளம் கவிஞர் ஒருவரின் கவிதை நூலுக்கு கலிஃபோர்னியாவிலிருந்து சுரா ஒரு முன்னுரை எழுதியிருந்தார். அந்நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்த எழுத்தாளர் ஒருவர்,காலிஃபோர்னியாவில் இருந்து கால் செருப்பு வந்தாலும் அதை காலில்தான் போட முடியும்.தலையில் தூக்கிகொண்டு திரிய முடியாது என்று பேசினார். அவரின் கண்டுபிடிப்பு எனக்கு எரிச்சலை மூட்டியது. பேச்சாளரின் அடி மனசில் காழ்ப்பின் கசடுகள் அண்டிக் கிடப்பதை நான் எளிதில் ஊகித்துவிட்டிருந்தேன். இந்த வீர உரை நிகழ்த்திய எழுத்தாளர் காலப்போகில் நெய்தல் வருடம் தோறும் நல்கும் சுராவின் விருதிற்கு தாமே தன்னை பரிந்துரைத்து ஆயிரம் கடிதத்தை எழுதி தள்ளினார். விருது நிகழ்ச்சியில் கண்ணீர் மல்கியதாகவும் அறிந்தேன். எப்போதும் எதிர் கருத்தின் பக்கமே ஈர்க்கப்பட்டு பழகிப்போன எனக்கு சுராவை படிக்கும் உத்வேகம் இதனால் பிறந்தது.எனது ஊரில் ஜவுளிக்கடை வைத்திருந்த சதாசிவம் என்பவரிடமிருந்து தோட்டியின் மகன் நாவலை படிக்க எடுத்துச் சென்றேன். அதுவரை கவிதையில் மடியில் தங்கிக்கிடந்த எனக்கு நாவல் என்ற வார்த்தையே புதுசு. தட்டையான மொழியில் புழங்கியே பழக்கப்பட்ட என் வாசிப்புக்கு மழமழவென்று மழித்து சவரம் செய்த அழகான முகம் மாதிரியான சுராவின் கச்சித மொழி பிடிபடவில்லை. இரண்டுநாள் வைத்திருந்து நூலை திருப்பிவிட்டேன். எனது அறியாமையை உணர்ந்து சாவதானமாக படிக்க சொல்லி சதா அண்ணன் என்னை திருப்பிவிட்டார்.முதல் சில பக்கங்களுக்கு அப்புறம் வாசிப்பில் குதிரைப்பாய்ச்சல் பிடிதத்து நாவல்.செதுக்கப்பட்ட மொழியை செறிக்க கற்றேன். அசலின் தடித்தனம் என்னை கவர்ந்திழுத்தது. முரட்டு மொழி மந்திரமொழியாக தித்தித்தது.

85களில் நான் நடுநிலைப் பள்ளி மாணவன். நான் படித்தப் பகுதியில் நிறைய பம்பாய் கக்கூஸ்கள் இருந்தன. புதுப்போட்டை பகுதி முழுக்க அம்மாதிரியான கழிப்பறைகள்தான். சுவற்றில் கட்டமாக துளையிட்டு இரும்பு தகரத்தால் கக்கூஸூக்கு ஒரு மூடாக்கிட்டிருப்பார்கள். தினமும் மூடாக்கை தூக்கிவிட்டு தகரக் கரண்டியினால் மலத்தை அள்ளி பீப்பாய்களுக்குள் நிரப்புவார்கள் அருந்ததிய மக்கள். மலத்தை அள்ளுவதற்கு முன்னால் அடுப்பு சாம்பலை வாரி இரைப்பது வழக்கம். வாகாய் மலம் பீப்பாய்க்கு இடமாறும். நிரம்பிய பீப்பாய்களை சிறுவயதில் நான் நடுரோட்டில் தள்ளி திரிந்திருக்கிறேன். தாளித்த ரசம் நுரைத்துப் பொங்குவதை போல மலப் பீப்பாய்கள் பொங்கும். அந்த வாழ்வின் குறிப்பிட்ட எல்லை வரை சென்று பார்த்திருக்கிறேன். இந்த வாழ்வியலோடு எனக்கிருந்த பரிட்சயம் தோட்டியின் மகன் நாவலோடு என்னை ரத்தமும் சதையுமாய் உறவு கொள்ளச் செய்தது. ரணகளமான அவ்வாழ்வை தகழி எழுதி செல்லும் பாங்கு படிக்க படிக்க உடலில் உஷ்ணத்தை உண்டாக்கியது. ரத்தம் சூடேறி இயலாமையில் அனுதினம் சரிந்திருக்கிறேன்.

இதன் பிறகு ஜே.ஜே நாவல்.கதையின் முக்கியதுவத்தை மட்டுமே அதுகாறும் அரற்றி வந்த தமிழிலக்கிய பரப்பில் முதல் கல்விட்டவர் சுரா. ஜே.ஜேவில் மொழியே நாவலை தீர்மானிக்கும் சக்தி. ஆற்று மணலில் துளையிட்டு நண்டுகள் ஈரத்தை உறிஞ்சிக் குடிப்பதை போல மொழியில் துளையிட்டு வார்த்தையின் முழு சாற்றை உறிஞ்சி காகிதத்தில் கொட்டிப் பார்த்திருப்பார் சுரா. ஜே.ஜே நாவலில் கதை இருக்கிறது.ஆனால் கதை இல்லை. அதற்குள் ஒரு எழுத்தாளன்,சிந்தனைச் சிற்பி வருகிறான்.ஆனால் அவன் இல்லை.பாரதி இருக்கும் அதே நாவலில் ஆல்பர் காமுவும் இருக்கிறான். அனது இறப்போடு நாவல் உயிர் கொள்ளத் தொடங்குகிறது. தமிழில் மொழியை குறியீடாக முன் வைத்த முதல் நாவல் ஜே.ஜே.. தத்துவ நாணை வரிக்கு வரி வீணையாக மீட்டி மொழியை ஒரு இசைக்கருவியாக சுரா செய்துக்காட்டிய விதம் ஓர் அற்புதம். சுராவின் கட்டுரை மொழியில் வீசும் ஒளி, வீரியம், விறைப்பு உள்ளான சகலமும் நவீனத் தமிழுக்கு செழுமை சேர்ப்பவை.அதில் உள்குத்தலாக கேட்கும் குசும்பு எவரையும் எளிதாக சாய்க்கும் ஆயுதமாக படுத்துறங்குகிறது. அவரின் நினைவோடைகளில் தென்படும் அபார நினைவாற்றல் வியப்பை நல்குவன. காட்சிகளை எழுத்திற்குள் சித்திரப்படுத்தும் வலிமை அவரது பலம்.மெளனியை பற்றி,ஜீவாவை பற்றி,நாமக்கல் கவிஞரின் இறுதிகாலம் பற்றி சுராவின் கட்டுரை சித்திரங்கள் ஆவண அம்சம் பெற்றவை. சுராவே சொன்னதை போல அவர் வசனத்தின் குழந்தை.கவிதையில் அவர் உயரம் பார்க்கவில்லை.பண்டிதத் தமிழுக்கு பக்கத்திலுள்ள ஒரு மொழியை அவர் கவிதைக்கு தேர்ந்தேடுத்தார். அது செதுக்கப்பட்ட அளவுக்கு சிற்பமாகவில்லை.

நன்றி-உயிர் எழுத்து