Monday, July 20, 2009

ராஜமார்த்தாண்டன்: பெயரில் பிரமாண்டம், தோற்றத்தில் தவழும் ஏழ்மை


அண்ணாச்சி என்று தமிழிலக்கிய வட்டாரம் உரிமையோடு இரண்டு பேரை அழைக்கும். ஒருவர்: ராஜமார்த்தாண்டம். மற்றொருவர்: நம்பிராஜன் பிள்ளைவாள். முன்னவரை பற்றி நாம் ஆரபிக்கும் ஒவ்வொரு சொல்லும் கால் புள்ளி அரை புள்ளியை தாண்டி தொட்டு முடிவுறும் முற்றுப்புள்ளியாக பின்னவர் வந்திடுவார். இப்பேச்சு படைப்பிலக்கிய ஒற்றுமை சார்ந்தல்ல; குண நலங்கள் சார்ந்தவை.
ஒரு பெயரை தொட்டு அவர் உடல் வழி புகுந்து மற்றவர் உடல் வழியாக வெளிவரும் தொடர்புவழி ஞாபகப்பாதையாக இவ்விருவரும் வாழ்ந்திருக்கிறார்கள். ஒருவித பின்நவீனத்துவமான கூறுகள் நிரம்பிய, உருவமாக நமக்குள் இவர்கள் அடையாளப்பட்டிருப்பதாக இப்போது யோசிக்கையில் பொறிதட்டுகிறது. ஓருயிர் ஈருடல் எனும் உருவகச் சொல்லுக்கு ஸ்தூல வடிவம் கொடுத்தவர்கள் இவர்கள் இருவரும்.

ஜூன் ஆறாம் தேதி அன்று தேவிபாரதி ராஜமார்த்தாடன் இறந்துவிட்டதாக அனுப்பிய குறுஞ்செய்தியை பார்த்து நான் அதிர்ச்சியடையவில்லை.இதன் பொருள் நான் சந்தோஷம் அடைந்தேன் என்பதாகாது. சமீபமாக ஒன்றன்பின் ஒன்றாக
முன்பின் என்று நம்மிடமிருந்து பல படைப்பாளிகள் வழுவிக்கொண்டிருப்பதன் விளைவாக இம்மனநிலை எனக்குள் உருவாகியிருக்கலாம். வார்த்தைகளில் சொல்லமுடியாத ஒரு தாள்ளாட்டம். மருத்துவநோக்கிலான ஒரு பிரச்னையாக அது என்னை வருத்தியது. தட்டையான அர்த்தத்தில் சொன்னால் ஒரு மாதிரி வெறுமை அன்று முழுக்க அழுத்திக்கொண்டிருந்தது. தேவிபாரதி அனுப்பிய செய்தியை நண்பர்களுக்கு ஃபார்வேர்ட் செய்துகொண்டிருக்கும் சமயத்தில் சுகுமாரனிடம் இருந்து தகவலும் போனும் வந்ததாக ஞாபகம். அதையொட்டி குளச்சல் மு.யூசுப் தகவல் அனுப்பியிருந்தார். அலுவலக நண்பர் பாண்டியரானிடம் பகிர்ந்துகொண்டிருக்கும் போதே குமுதம் ஜோதிடம் செல்லப்பா பதறிக்கொண்டு வந்து என்னிடம் வருந்தினார். செல்லப்பாவும் மார்த்தாண்டனும் தினமணியில் ஒன்றாக பணி செய்தவர்கள். செல்லப்பாவுக்கு வெற்றிலை பாக்கு பழக்கமுண்டு. மற்றபடியான பழக்கங்கள் அவருக்கு கிடையாதென்றே நினைக்கிறேன். ராஜமார்த்தாண்டன் குடியாலேயே சாக நேர்ந்துவிட்டதாக புலம்பினார் அவர். ஒரு வேளை அப்படியான சாவாக அது இருந்தாலும் இருக்கலாம்.ஆனால் அப்படிதான் நேர்ந்தது என்று நம்புவதில் எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. எனக்கு தெரிந்து என் அப்பா ஒரு நாளைக்கு நான்கு பாக்கெட் சிகரெட்ஸ் பிடிக்கிறார். குறைந்தது ஒரு குவாட்டர் மது அருந்துகிறார். எனக்கு விவரம் தெரிந்து அவர் ஒருநாளும் மருத்துவமனை பக்கம் ஒதுங்கியவர் இல்லை. இந்த நடப்பியல்பு என்னை குடியினால்தான் சாவு நேர்ந்தது என்பதை நம்பவிடாமல் தடுத்தது.

ராஜமார்த்தாண்டன் என்ற கம்பீரமான பெயர் எனக்கு பதினான்கு வருடங்களுக்கு முன் அறிமுகமானது. அவரை நான் முதன்முதலின் 2000ம் ஆண்டுதான் தமிழினி அலுவலப் பக்கம் நேரில் பார்த்தேன். பார்க்க நேரும் வரை மார்த்தாண்டம் என்ற பெயரிலுள்ள வசீகரம் என்னை இழுத்திருந்தது. பேருந்துகளில் மார்த்தாண்டம் எனும் பலகையை பார்க்கும் போதெல்லாம் அவ்வூரை பற்றிய புனைவான சித்திரம் ஓர் அரசனின் தோரணையில் நிமிர்ந்தெழும். மார்த்தாண்டனின் ஞாபகங்கள் குமிழும். மார்த்தாண்டம் என்ற ஊரை நான் நேரில் காண்டபோதுஅடைந்த ஏமாற்றத்தைவிட மார்த்தாண்டன் எனும் கவிஞனை காண நேர்ந்த போது உண்டான ஆட்டம் அளவில் அதிகப்படியானது. தமிழினி அலுவலகத்தில் மதிற்சுவர் ஓரமாக நின்று அவர் புகைத்துக்கொண்டிருந்த தோற்றம் நான் முன் எண்ணியிருந்த வசிகரத்தை வழங்கவில்லை. அது70களின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் வேலை இல்லாமல் ஊர்சுற்றி திரியும் ஒரு மனிதனின் சித்திரமாக விரிந்து நின்றபோது யதார்த்தத்திற்கும் புனைவிற்குமான இடைவெளியை அறியமுடிந்தது.தமிழினி பக்கம்
மாரிமுத்துவும் மார்த்தாண்டனுன் மணிகணக்காய் நின்று உரையாடுவதை ஸ்நேகா அலுவலக மாடியிலிருந்து நான் கண்காணித்து கொண்டிருப்பதை இருவரும் உணர்ந்திருக்க நியாயமில்லை. மாரிமுத்துவின் கவிதைகள்பால் எனக்கு ஈர்ப்பிருந்த காலம் அது. இருவரின் ஸ்நேகம் என் கவித்துவ அடர்த்தியை பெருக்கிக் கொள்ள உதவுமென்று நம்பி நெருங்கமுயன்றேன். சில வருடங்கள் கழித்து மருதா பாலகுருசாமியின் நட்பினால் மார்த்தாண்டன் எனக்கு குடி ஸ்நேகிதராகினார். ராயப்பேட்டை பக்கமுள்ள மதுபானக் கடையில் சில மாதங்கள் சேர்ந்துகுடித்திருக்கிறோம். அங்குதான் எனக்கு திருமுருகன் அறிமுகமானார். பலரின் தோழமை மலர்ந்ததும் அங்கேதான்.வேட்டை கண்ணன் நட்பு கிடைத்தது அவ்விடமே.

ஒருநாள் மார்த்தாண்டனும் நானும் குடித்துவிட்டு ராத்தங்கலுக்காக அவரது நாகராஜ் மேன்சனுக்கு நடந்தோம். வயதில் அண்ணாச்சி முதியவராக இருந்தாலும் நடையில் வீரியமானவர். அவரை நிதானத்தில் பின் தொடர்வதே சற்று சறுக்கலானது. போதையில் அவரின் நடையின் வேகம் அளவில் வேறுபடும். வேறுபடும் என்றால் வேகம் கூடும். சாரையைப் போல் சரசரப்பார் தரையில். நாலுமுழ வேட்டியின் நுனியினை விரலில் கவ்விக்கொண்டு வெடுக்வெடுக்கென்று நடந்தார். தெருமுனையில் தென்பட்ட ரோட்டோரக்கடையில் டிஃபன் கட்ட சொன்ன போது இரண்டு இட்டலி போதும் என்றார். நான் நான்கு இட்டலி கட்ட சொன்னதற்கு மூக்கில் ஈ புகுந்தவர் போல் தலையை கீழே சலம்பினார். அவர் விருப்பம் குலைக்க நான் முயலவில்லை. பல சந்துகள் ஒடித்து நடந்தோம். அறையை அடைந்தோம். அறையில் இரு பெரிய இரும்பு கட்டில்கள் கிடந்தன.அதில் முழுக்க பழுப்பேறிப்போன புத்தகங்கள் கிரமம் மாறாமல் கட்டுக்கட்டாக அடுக்கப்பட்டிருந்தன. அச்சின்ன அறையில் புத்தகளை கட்டிலில் நிரப்பிவிட்டு விநோதமாக அவர் தரையில் சாய்வதை கண்டு சங்கடமுற்றேன். வாங்கிச்சென்ற டிஃபனை நான் சாப்பிட்ட போது நிதானம் தவறி தரையில் கொட்டிய சாம்பாரை அவரே சுத்தம் செய்தார். அவருக்கு வாங்கிய இரு இட்டலியையும் மேன்சன் பூனைகளுக்கு பிரித்து வைத்து அவை தின்னும்வரை உட்கார்ந்து அழகு பார்த்தார். பூனைகள் மீது மார்த்தாண்டனுக்கு பாசம் இருந்ததா? நகுலனை போல இவர் பூனை உபாசகரா என்பதெல்லாம் நானறியேன். நானும் அவரும் அறையில் சேர்ந்துறங்கிய நாட்களில் பூனைகளின் நடமாட்டம் நிரம்பியே இருந்தது. அவரின் அனுகுமுறையும் பூனைகளிடம் அன்னியோன்யத்தையே காட்டியது. என்னை இரு கட்டில்களுக்கு மத்தியில் கிடத்தி விட்டு அவர் நிலைபடியில் மத்தியில் சரி பங்காக சாய்ந்துறங்கினார்.போதையில் சர்ச்சிப்பதை அண்ணாச்சி தவிர்க்க விரும்புபவர். அவர் மீது மாற்றுகருத்துகளை வைக்கும் போதெல்லாம் நழுவுவார். அவர் ஒரு பெண் கவிஞருக்கு எழுதியிருந்த முன்னுரை குறித்த என் எதிவினையை சொன்னபோது “அது முடிஞ்சு போன விவகாரம்.பேசி என்ன ஆவபோவுது” என்றார். இலக்கியத்தில் முடிந்துபோனது என்று ஒன்று இருக்கிறதா என கேட்டேன். “வம்புபேசமா படுமய்யா”என்றார். அண்ணாச்சியோடு அவர்விரும்பும் இலக்கியம் பேசலாம்.விவாதித்தல் கூடாது. விவாதத்தின் ருசி விரும்பாதவர் அண்ணாச்சி.

எவ்வளவோ நபர்களோடு பழகுகிறோம். நேரம் மறாமல், அதன் நிறம் மறாமல் நினைவிருப்பவை ஒருசிலதான். அன்று பெளர்ணமி.பெருநிலவு பூமியின் நிலப்பரப்பை மூட முற்படும் நேரம். போதை தூக்கத்தை தள்ளிபோட்டது. மேன்சன் மாடியில் நின்றோம். ஆகச்சிறந்தக் கலைஞன் ஜெயமோகன் என சிலாகித்தார். அவன்தான் எழுத்தாளன். நாம பகுதிநேரம் மட்டுமே எழுத்தை விரும்புபவர்கள் என்றார். பத்திரிகை பணி எழுத்துச் செழுமையை காயடித்துவிடுகிறது என்றார். பேச்சு பொழுதுபுலர்ந்தவரை தொடர்ந்தது.
படைப்பிலும் சரி, வாழ்விலும் சரி அண்ணாச்சிக்கு பாலியல் சமாச்சாரங்களை வெளிப்படையாக அலசுவதில் உவப்பிருந்ததில்லை.
அகவேதான் அவர் தொகுத்த கொங்குதேர் வாழ்க்கை பாகம் இரண்டில் சில கவிஞர்களை தவித்தார். பாலியல் குறித்து அவர் பொதுபுத்தியையே கொண்டிருந்தார். அது குறித்து ஆய்வறிவு அவருக்கு இருந்ததில்லை.அவசியமற்றது என்று ஒதுக்கியதாவும் சொல்வதற்கில்லை. அதன் அரசியல் நுண்மையை அவர் புரிந்து கொள்ளும் சக்தியற்றிருந்தார் எனலாம்.

உத்யோக காரணத்தினால் மார்த்தாண்டனை சந்திப்பது தள்ளிப்போனது. இறுதில் நட்பின் துளை தூர்ந்தே போய்விட்டது.
தீராநதி என்னுடைய பங்களிப்பையும் சேர்த்து கொண்டு வெளிவந்த சமயத்தில் தூர்ந்த நட்பு துளிர்விட்டது. காலச்சுவடு அலுவலகத்தின் எண்ணிலிருந்து அடிக்கடி அழைப்பதை வழக்கப்படுத்தினார். தனது கவிதைகளை அனுப்பி வைத்துவிட்டு பரிசிலனை செய்யுங்கள். பிடித்திருந்தால் மட்டும் பிரசுரம் பண்ணுங்கள் என்பார். ‘என்ன அண்ணாச்சி... தேர்வு , பரிசிலனைன்னு பேசுறீங்க’ என்றால் “கட்டாயப்படுத்தக் கூடாதில்லையா’என்பார். இன்றைய இளம் கவிஞர்கள் தனது கவிதைகளை அனுப்பிவிட்டு ஆயிரம் போன் பண்ணிவிடுவார்கள். நேரம் காலம் இல்லாமல் கருத்து கேட்கும் சாக்கில் பிரசுர விவரத்தை அறியமுற்படுவார்கள். சரியாக வரவில்லை வேறு அனுப்புங்கள் என்றால் அவ்வளவுதான் நட்பே துண்டித்துபோகும். நான் கேட்காமலே தனது கவிதைகளை என் பார்வைக்கு ஒரு பெண்கவிஞர் அனுப்பிவைத்துவிட்டு போனிலேயே பேசி என்னை சகடித்துவிட்டார். நலிதாளாமல் அவர் அனுப்பியவைகளில் ஒருசில கவிதைகளை பிரசுரம் செய்து தொலைக்கவேண்டியதாகிப் போனது. அதற்காக தாதா பொண்டாட்டியைப் போல அவர் சமியாடியதை இங்கே எழுத்தில் எழுத அருவருப்பாக உள்ளது. என் வீட்டிற்கு ஆட்டோ வராததுதான் பாக்கி. அவ்வளவு மிரட்டல்கள். பழைய தலைமுறையின் மாண்பை சுட்டிக்காட்டவ.இதை குறிப்பிடுகிறேன்.மாதங்கள் கழித்து மறுமுறை அண்ணாச்சியின் அனுப்பியிருந்த ஒருசில கவிதைகள் எனக்கு தோதாக உள்ளது கட்டாயம் பிரசுரிக்கலாம் என்றேன்.’வர்ர மாதம் மாதிரி பண்ணமுடியுமா’ என்று குரலை தாழ்த்தினார். விவரம் கேட்டபோது வருகிற மாதத்தின் முதல்வாரதில் தனக்கு அறுபதுவயது நிறைவடைகிறது ஆகவே அப்போது வந்தால் மழ்ச்சியுருவேன் என்றார். வாழ்த்துகளை தெரிவித்துவித்தேன். அவர் விருப்பம் போல பிரசுரமானது கவிதை. அவரை ஒரு நேர்காணல் செய்யும் திட்டமிருப்பதாக சொன்னபோது நெகிழ்தேபோனார்.

சென்ற வருடம் புத்தகக் கண்காட்சியில் அண்ணாச்சியை சந்திக்க முடிந்தது.அவருடன் தேவிபாரதி, ந.முருகேசபாண்டியன், நான் இன்னும் சில நண்பர்கள் சேர்ந்து மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தோம். அவர் வழக்கம் போல கண்ணதாசன், சிவாஜி கணேசன் நடிப்பு என்று அரதப்பழசானவற்றை புகழ்ந்துகொண்டிருந்தார். பேச்சி மாலை சாயசாய புத்தக சந்தைக்கு வெளியில் எங்களை ஈர்த்தது.நடந்தே கடையை அடைந்தோம். மூச்சு முட்ட ஏற்றிக்கொண்டோம்.நண்பர் ஒருவரால் பேச்சி கருணாநிதிக்கு தாவி பிறகு பிள்ளைமார் சாதியரசியலுக்குள் போகும்போது ”ஹே... எதுக்குயா வந்தீங்க... தேவயில்லாம சண்ட போடவா.. மயித்துக்கா..நா நிக்கேன்” என அண்ணாச்சி சீறியபோது ந.மு. எல்லோரயும் சரிக்கட்டினார்.

இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் போனில் அழத்த அண்ணாச்சி “கடைசிகாலத்துல ஒரு புத்தகம் எழுதியிருக்கேன் அதுக்கு ஒரு விமர்சனம் போடுங்கையா... காலச்சுவடுல வர்ரதெ விட தீராநதியில வந்தா நல்லா இருக்கும். சுந்தர ராமசாமி கவிதெ பத்தி எழுதி, அவங்களே புத்தகத்தெ பதிப்பிச்சு... அவங்களே விமர்சனமும் போட்டுறதுல எனக்கு சங்கடம் இருக்கு. அதனாலெ உங்களுதுல வந்தா சந்தோஷம்.வேற யாரும் எழுதெ வேண்டாம் நீங்களே எழுதுங்க.” என்றார்.
என்னால் அவருக்கு அஞ்சலிதான் இப்போதைக்கு எழுத முடிந்திருக்கிறது.
மன்னிச்சிடுங்க அண்ணாச்சி.

Sunday, July 19, 2009

நண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு
சுந்தர ராமசாமி பெயரில் வருடம் தோறும் அறிவிக்கப்படும் இவ்விருது இதுவரை சரியான ஆளுமைக்கு போய் சேரவில்லை. கலை தன்மை, மொழிச்செரிவு,விசாலமான பார்வை,சமூக அறிவின்மைக்கு எதிரானகுரல்,வாழ்வின் மீதான மறுபரிசீலனை,ஜனநாகய சமூகத்தின் அடிப்படை குணாம்சத்தை பேணுதல் என்று தன் வாழ்நாளை செலவழித்தவரின் பெயரில் உருவாக்கப்பட்ட இவ்விருது சோத்துக்கு வழியிலாதவர், பொண்டாடி இல்லாமல் அவதிபடுபவர் என்று ரயில் டிக்கெட்டுக்கு கொடுக்கப்படும் சலுகையடிப்படையில் தரப்படுவதை நினைக்கும் போது காமிடி கீமிடி பண்றாங்களோ என்று எண்ணத் தேன்றுகிறது.
என்ன கொடுமை சார் இது?