Monday, October 4, 2010

சுந்தர ராமசாமி கவிதைகள்

















மந்த்ரம்


ட்யூப்லைட் சுந்தராச்சி உபயம்
குத்துவிளக்கு கோமுட்டிச்செட்டி உபயம்
உண்டியல்பெட்டி தெ.கு.வே. உபயம்
பஞ்சதிரி விளக்கு ஆண்டி நாடார் உபயம்
குண்டுச்சட்டி பால்பாயச உருளி த்ரிவிக்ரமன்
நாயர் உபயம்
சூடன்தட்டு ரீஜென்று மகாராணி உபயம்
தகரடப்பா ஆறு நித்யானந்தா உபயம்
அலுமினியப் போணி வமு.சல.பெ.ம.
அரிகரபுத்திரன் செட்டியார் உபயம்
ஸ்க்ரு ஆணி நட்டு பட்டு அம்மாள் உபயம்
தீபத்தட்டு பெரியன் தாத்தாச்சாரி உபயம்
சின்னத்தட்டு ஒரு டஜன்
வைரங்குளம் மிட்டாதார் உபயம்

வைரங்குளம் மிட்டாதார்
அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அம்மா உபயம்
அவர் அம்மா
அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அம்மா
அவர் அம்மா
அவர் அப்பா

நீ
நான்
அவள்
இவன்
அவன்
பூனை
புண்
பூ
புழு
பூச்சி
குண்டூசி
குத்தூசி
கடப்பாரை
லொட்டு லொடக்கு
எல்லாம்
ஸ்வாமி
உபயம்
ஸ்வாமி
சிற்பி
உபயம்

சிற்பி
அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அம்மா உபயம்

அவர் அப்பா அவர் அம்மா
அவர் அம்மா அவர் அப்பா
எல்லாரும் ஸ்வாமி உபயம்

ஸ்வாமி
நம்ம உபயம்
நாம
ஸ்வாமி உபயம்
நம்ம பேரு சாமிமேலே
சாமி பேரு நம்மமேலே.

****************************

சவால்


நோவெடுத்துச் சிரம் இறங்கும் வேளை
துடைகள் பிணைத்துக் கட்ட
கயிறுண்டு உன் கையில்.

வாளுண்டு என் கையில்
வானமற்ற வெளியில் நின்று
மின்னலை விழுங்கிச் சூலுறும்
மனவலியுண்டு.

ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின் வாங்கல் அல்ல பிதுங்கல்.

எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நரையேற்றும் காலங்கள்.

எனது கொடி பறக்கிறது
அடிவானத்துக்கு அப்பால்.

****************************

நம்பிக்கை

தூரத் தொலைவில் அந்த நடையைக் கண்டேன்
அச்சு அசல் என் நண்பன்.
மறைந்தவன் எப்படி இங்கு வரக்கூடுமெனத் திடுக்கிட்டேன்.
வேறு யாரோ.
அப்படி எண்ணாதிருந்தால் அவனே வந்திருப்பான்.

****************************

பூனைகள் பற்றி ஒரு குறிப்பு


பூனைகள் பால் குடிக்கும்.
திருடிக் குடிக்கும் கண்களை டிக்கொள்ளும் டிய கண்களால் சூரிய
அஸ்தமனம் ஆக்கிவிடும். மியாவ் மியாவ் கத்தும் புணர்ச்சிக்கு முன்
கர்ண கடூரச் சத்தம் எழுப்பும் எப்போதும் ரகசியம் சுமந்து வளைய வரும்
வெள்ளைப் பால் சம்பந்தமாக சர்வதேசக் கொள்கை கொண்டவை பெண்
பூனைகள் குட்டி போடும் ஒன்று அல்லது இரண்டு அல்லது ன்று அல்லது
நான்கு அல்லது குட்டிகளுக்ளு மியாவ் மியாவ் மியாவ் கத்தச் சொல்லித்
தரும். வாலசைவில் அழகைத் தேக்கிச் செல்லும் இரண்டு அடுக்குக்
கண்களில் காலத்தின் குரூரம் வழியும் பூனைகள் குறுக்கே
வராமலிருப்பது அவற்றுக்கும் நமக்கும் நல்லது. குறுக்கே தாண்டிய
பூனைகள் நெடுஞ்சாலைகளில் தாவரவியல் மாணவனின் நோட்டில் இலை
போல் ஒட்டிக்கிடப்பதைக் கண்டதுண்டு வேறு பூனைகள் குறுக்கிட்டுத்
தாண்டும் சிறிய பூனைகள்தான் பெரிய பூனைகள் ஆகின்றன.
பூனைகளின் முதுமையைக் கண்டறிவது கடினம் அவற்றின்
மரணத்திற்குச் சாட்சியாக நிற்பது கடினம் அவற்றின் பேறுகால
அனுபவங்கள் பற்றி நாம் யோசிப்பது காணாது இருப்பினும் அவை
இருக்கின்றன. பிறப்பிறப்பிற்கிடையே.

****************************

ஒரு படைத்தலைவர் மேலதிகாரிக்கு மனதில் எழுதும் சொற்கள்


தாண்டிச் சென்றதும் பாலத்தைத் தகர்க்க
தங்கள் ஆணையை என் ரத்தத்தில்
எழுதிக் கொண்டிருக்கிறேன்
மேன்மை தங்கியவரே
குதிரைகளின் புட்டங்களில்
குதிரைகளின் முகங்கள் உரச
தாண்டிக் கெக்ணடிருக்கிறோம்
கடைசிக் குதிரை தாண்டியதும்
பாலம் பறந்து நதியில் மூழ்கும்.
தாண்டாமல் காத்திருக்கிறான் ஒரு வீரன்
தங்களிடம் சேதி சொல்ல
எப்படி மீண்டும் சேர்ந்து கொள்வேன்
என்று அவன் கேட்கவில்லை.
தான் செல்லப் பாலங்கள் இருக்குமா
செய்தி சொன்ன பின் நான் இருப்பேனா
என்று அவன் கேட்கவில்லை
தன் குதிரை இருக்குமா
என்று அவன் கேட்கவில்லை
தாங்கள் இருப்பீர்களா
என்று அவன் கேட்கவில்லை.

மேன்மை தங்கியவரே
தகர்ப்பது பெரிது இல்லை.
கேட்கப்படாத இந்தக் கேள்விகள்
அவற்றின் தகர்ப்பு...

****************************
அக்டோபர் 14 சுராவின் நினை வுநாள்

Sunday, October 3, 2010

ஏசுவும் எம்.ஜி.ஆரும்



24.12.1987 அன்று.கிறிஸ்துமஸூக்கு முதல் நாள் காலை. சுவற்றில் ஆணி கொண்டு அறைந்து மாட்டப்பட்டிருக்கும் மர்பி ரேடியோ ஒரு அதிச்சியான தெய்தியை சன்னமானக் குரலில் உச்சரிக்கிறது. ரேடியோவின் திசை முள்ளை திருகிக் கொண்டிருந்த அம்மா, சுவற்றின் ஒதுக்குப் புறமாக ஒண்டிப் படுத்திருக்கும் என்னை தன் காலால் கெந்திக் கெந்தி உதைத்தாள். வலி பொருக்காமல் உடனே நான் அலறிக்கெண்டு எழுகிறேன். கண்ணில் ஒட்டி நிற்கும் கண் ஊலையை துடைத்தபடி,”என்ன ஆச்சும்மா” என்கிறேன். அம்மா தேம்மித் தேம்பி அழுகிறாள்.ஒன்று புரியவில்லை.சொன்னாலே விளங்காத வயசு.தானாக புரிந்து கொள்வது என்பது தர்மசங்கடம். கண்களை தன் சேலை முந்தியால் துடைத்துக் கொண்டு பேச ஆரம்பிதாள்.
”எம்.ஜி.ஆர். செத்துட்டாருப்பா!?” அவளிடம் முனங்கல் மொழியில் வார்த்தைகள் வெளியேறுகிறது. எம்.ஜி.ஆர்.எங்கள் உறவினர் இல்லை? அப்புறம் ஏன் இவள் இப்படி தேம்பித் தேம்பி அழுகிறாள்.மறுபடியும் ஒன்று புரியவில்லை. எம்.ஜி.ஆரின் மறைவையொட்டி பள்ளி விடுமுறை என்று அதே ரேடியோவில் அறிவிக்கப்படுகிறது.பள்ளி விடுமுறைக்காக நான் சந்தோஷப்படுவதா?இல்லை எம்.ஜி.ஆரின் அகால மரணத்திற்காக அம்மாவோடு சேர்ந்து ஒப்பாரி வைப்பதா?
அந்த மறைவுச் செய்தியைக் கேட்டதும் தெருவே தன் இயல்பை இழக்கிறது.எல்லோரும் ரேடியோ பெட்டியின் முன்பாகவே எதையோ உற்றுநோக்கி உட்கார்ந்திருக்கிறார்கள். திரும்ப வரப்போகும் செய்தி பொய்த்துவிடகூடாதா? புலம்புகின்றனர் பலர். அன்று முழுக்க அம்மாவும் சமைக்காமல் உம்மென்று உட்கார்திருக்கிறாள்.இடிவிழுந்த மாதிரி நொறுங்கிப்போய் இருந்தாள். மறுநாள் கிறிஸ்துமஸுக்கான வீதியில் தொங்கும் இரவு நட்சத்திரங்கள் அன்று எரியவே இல்லை.இருட்டோடு இருட்டாக கலந்திருந்தன.தேவக்குமாரனுக்கு நேர்ந்த சோகம் இது. பலரது மனதில் யாராலும் சகித்துக் கொள்ளமுடியாத சங்கடம் வாட்டி வதைக்கிறது. மக்கள் தலைவன் அல்லவா?
திக கிறிஸ்துவ மக்கள் புழங்காத தெரு எங்களின் தெரு.ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைக்கும் கிறிஸ்துமஸ் நட்சத்திர விளக்குகளை மெய்மறந்துபோய் பார்த்துகொண்டு நிற்பேன்.தெருவின் தெற்கில் இருந்த சர்ச்சும்,அங்கே கமழும் பன்னீர் மரப் பூக்களும் எனக்குள் ஒரு கிறிஸ்துவ உபாசனையை உண்டாக்கியிருந்தன.அதற்கு சில குடும்ப ரீதியிலான காரணங்கள் இருந்தன.எனது பெரியம்மாள் ஒரு கிறிஸ்துவரை காதல் மணம் புரிந்தவர்.ஆகவே எங்கள் குடும்ப வட்டாரத்திற்குள் கிறிஸ்துவ வாசம் அன்னிச்சையாய் தவழ்ந்து கொண்டிருப்பதை நான் சின்ன வயதிலேயே புரிந்து வைத்திருந்தேன்.பரீட்சை முடிந்து பள்ளி விடுமுறைவிடும் நாட்களில் நான் பெரியம்மாவின் வீட்டிற்கு செல்வது வழக்கமாக இருந்தது.அவருக்கு மணமாகியும் பிள்ளைபேறு இல்லாத்தால் நான் அவர்களின் செல்லப் பிள்ளையாக வளர்த்தெடுக்கப்பட இருந்தேன்.பெரியப்பா ஞானசேகரன் நாடார் சமூகத்தை சார்ந்த கிறிஸ்துவர்.தேவனின் காதலர்.தன் பூலோகக் காதலியிடம் மறுபேச்சு பேசாதவர்.இருப்பதை வைத்துக் கொண்டு விருப்பம் போல் வாழப் பழகியவர்.படித்தப் பட்டதாரி ஆசிரியர். ஒழுக்கத்தை உயிரென ஓம்புபவர்.இப்படி சீரான அவரின் பண்பு என்னை கவர்ந்திருந்தது.அவர் பண்பிற்கு நான் விசிறியானேன்.
பாண்டிச்சேரியில் இருந்து மரக்காணம் போகும் ரோட்டில் கீழ்புத்துப்பட்டுதான் என் பெரியம்மாவின் சொந்த கிராமம்..அதே ரோட்டில் இரண்டு ஸ்டாப்பிங் தாண்டினால் அம்மாவழி பாட்டியின் சொந்த ஊர் செட்டிக்குப்பம்.பக்கம் பக்கமாக இருப்பதால் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் மாறி மாறி விடுமுறையை கழிப்பேன். இன்று உள்ளதை போன்று அன்றைக்கு ஈ.சி.ஆர்.ரோடு வசதி எல்லாம் வரவில்லை.சின்னப் பாதையை போல இருமறுங்கிலும் கருத்தப்பனைகள் வரிசையாய் நிமிர்ந்து நிற்கும். கண்ணுக்கு குளிர்ச்சியானக் பயணம்.அகலப் பாதைகள் இன்று அதனை அழகையும் நாசம் செய்துவிட்டன. பெரியம்மா,பாட்டி வசித்த இரண்டு கிராமங்களுமே அழகான கடற்கரை கிராமங்கள். பெரியம்மா வீட்டிலிருந்து கடலுக்கும் வீட்டிற்குமான இடைவெளி கொஞ்சம் தான்.கண்விழித்ததும் கால் நனைக்கும் அளவுக்கு கடல் என்னுடன் நெருக்கமாய் இருந்தது.மீனவப் பிள்ளைகளோடு மணல் பரப்பில், மார்பில் மண் ஒட்ட மாலை வரை விளையாடி புரள்வேன். கட்டுமரத்தில் ஏறி கடலுக்கு மீன் பிடிக்கப்போகும் மீனவர்களோடு கடலுக்கும் போவேன்.பெரிய வலையை கடலில் விரித்துவிட்டு ப்ளாஸ்டிக் மண்ணெண்னை கேனை மார்புக்கு கீழ் வைத்தவாறு கடலில் நீச்சலடித்து கரையேறும் மீனவர்களின் சாகசத்தைக் கண்டு பெருமிதப்படுவேன்.பெரிவலையின் தாம்புக்கயிறை கரையில் மீனவர்களோடு சேர்ந்து நின்று இழுத்து பழகுவேன். சங்கு,கிளிச்சல்,சிப்பி,கடல்நுரை எல்லாவற்றையும் பொக்கிஷமாக அள்ளிக்கொண்டு வீடுதிரும்புவேன்.ஒரு கிறிஸ்துமஸ் நாளில் பெரியப்பாவோடு கடலுக்கு சென்று திரும்புகையில் உயிருள்ள முத்துச் சிப்பியை வீட்டுக்கு கொண்டுவந்து வாசல் உள்ள விளக்கு மாடத்தில் வைத்து மணிக்கணக்காய் காவல்காத்தது இப்போதுகூட ஞாபகத்தில் நிற்கிறது.
தினமும் கருக்கலிலேயே பெரியப்பா ஜெபக் கூட்டத்தினரை அழைத்துக் கொண்டு இசை மணம் கமழ கடற்கரையோரம் உள்ள மீனவக் குடும்பங்களிடம் சென்று தேவ ஊழியம் செய்வார்.தேவனின் வருகையை பற்றி பாடம் நடத்துவார்.இப்படி ஊழியம் பார்த்தவர்கள் பலர் 2000ம் ஆண்டு பூலோகத்தில் தேவன் அவதரிப்பார் என்று மக்களிடம் அன்றைக்கு நம்பிக்கை ஊட்டிக் கொண்டிருந்தார்கள்.அதில் பெரியப்பாவும் ஒருவர்.தினத் துயரத்தில் சிக்கித் தவிக்கும் மீனவ மக்களுக்கு தேவன் வருகையை பற்றிய பெரியப்பாவின் வார்த்தைகள் தேனாய் இனிக்கும். தேவனின் ஆசிர்வாதத்திற்கு அடி பணிந்த முதல் மீனவன் அன்று முதல் சீடனாக்கப்படுவான். முதல் சிலுவையும் அங்கே ஊன்றப்படும்.அவன் வழி பின்னால் வரப்போகும் சந்ததிக்கு ஒரு புதிய பாதையொன்று உருவாக்கப்படும். இப்படி நடத்தப்படும் மதமாற்ற சடங்குகளில் நான் உற்சாகமாக பங்கேற்பேன். இந்தக் குழுவில் சிறுபிள்ளைகளுக்கு என்று தனிக்குழு ஒன்றும் இருந்தது. அவர்கள் இசை வாத்தியங்களை இசைப்பது,துண்டுப் பிரசுரங்களை இலவசமாகவும், பத்து பைசா இருபத்தைந்து பைசாவுக்கும் வசதிக்கேற்ப விநியோகிப்பதுமாக தங்களின் பணிகளை ஏற்றிருந்தார்கள். எனக்கு நிறைய கிறிஸ்துவப் பாடல்களை பெரியப்பா கற்றுத்தந்திருந்தார். “சந்தோஷம் பொங்குதே..சந்தோஷம் பொங்குதே..சந்தோஷம் விண்ணில் பொங்குதே” உள்ளிட பல பாடல்களை அழகாக பாட கற்றிருந்தேன். அதேடு துண்டுப் பிரசுரங்களில் எழுதப்பட்டிருக்கும் வாக்கியங்களையும் கதைகளையும் தரவாக் கற்றிருந்தேன். பைபிளின் வசனங்களை விளக்குவதில் கூட தேர்ச்சிப் பெற்றிருந்தேன்.அதோடு தனியே நானே கிறிஸ்வ நாடகங்களை இயக்கும் அளவுக்கு திறமை பெற்றிருந்தேன்.இதனால் அச்சிறுவர் குழாமுக்கு நான் தலைமை வகித்தேன். இப்படி குழந்தை இல்லாத பெரியப்பாவின் குடும்பத்தில் வந்த தேவகுமாரனாய் நான் வளர்த்து எடுக்கப்பட்டேன்.
கிறிஸ்துவ மதத்தின் மிஷனரி பணிகள் என் மனதை ஆட்கொண்டதால் எனக்கு இயல்பாக இஸ்லாம் மீதான பிடிப்பு குறைய ஆரம்பித்தது. ஆதரவற்ற ஒருவனை தன்னைப்போல் ஒருவனாக பாவிக்கும் குணத்தை பெரியப்பா கடைபிடித்ததை கண்கூடாக காண்பதில் இருந்து என்னுள் மனிதநேயம் வேர் பிடித்திருந்தது. இவ்வுலகில் மனிதனை போலவே சகல ஜீவன்களும்,அவைகளுக்கு துன்பன் விளைவிப்பதை தேவன் பொருத்துக் கொள்ளமாட்டார் என்ற கருத்தியல் சிறு குழந்தையான எனக்கு பக்கத்தில் இருந்தது. அதை நான் இறுகப் பற்றிக்கொண்டேன். புலால் சாப்பிடும் குடும்பத்தில் பிறந்த நான் முற்றாக மாமிசம் உண்பதற்கு எதிரான நிலைக்கு வந்து சேர்ந்தேன். மாமிசம் சாப்பிடும் பழக்கத்தை அறவே கைவிட்டேன். 19 வயது வரை என் வீட்டில் மாமிச சமையல் என்றால் அம்மா எனக்காக தனி சைவ சாப்பாட்டை சமைத்து வைத்திருப்பாள்.ரம்ஜான் போன்ற பண்டிகைப் பொழுதுகளில் கூட எனக்கு தனி சமையல் அடுப்பில் வேகும்..

எம்.ஜி.ஆரின் மறைவையொட்டி ரேடியோவில் வயலின் மெளன இசை மட்டும் இசைத்தது.எல்லா நிகழ்ச்சிகளும் நிறுத்தப்பட்டன.அன்றைக்கு மக்களின் ஒரே பொழுதுபோக்கு ரேடியோதான்.டி.வி.என்பது ஊருக்கு ஒரு வீட்டில் இருக்கும் பணக்கார அடையாளம். ரேடியோ என்பது ஜனநாயகத்தின் சின்னம்.எங்கள் தெருவில் ஒரு ரெட்டியார் வீட்டிலும் ஒரு செட்டியார் வீட்டிலும் மொத்தம் இரண்டே டி.வி.க்கள் இருந்தன. ஒரு வீட்டில் டி.வி. இருக்கிறதென்றால் அந்த விஷயம் ஊருக்கே அத்துபடியாகிவிடும்.காரணம், ஆகாயத்தை முட்டிக்கொண்டு நிற்கும் ஆண்டெனா.அதுபோதுமே எங்கே டி.வி. இருக்கிறது இல்லை என்பதை மக்கள் பார்வைக்கு கடைவிரிக்க.ரெட்டியார் ஓர் அரசு ஊழியர்.செட்டியார் பரம்பரை பணக்காரர்.ஹிந்துஸ்தான் விற்பனை பொருட்களின் டீலர். எம்.ஜி.ஆர். மறைந்த அன்று தெரு ஜனமே இந்த இரு வீட்டின் முன்னால் முண்டியடித்துக் கொண்டு நின்றது.கால் வைக்கக்கூட இடமில்லை.இரண்டு வீட்டிலும் உட்கார்ந்து டி.வி.பார்க்க அனுமதிக்கமாட்டார்கள்.வாசலிலேயே வாயை பிளந்துக்கொண்டு நிற்கவேண்டியதுதான்.வீட்டின் ஜன்னல் கிராதிகளுக்குள் முகத்தை உரசியபடி,எம்.ஜி.ஆரின்.இறுதி ஊர்வலத்தை தெரு மக்களோடு சேர்ந்து பார்த்தேன். அம்மா தன் அடக்க முடியாத சோகத்தால் வெதும்பி வெதும்பி அழுகிறாள்.ஊர் ஜனமே அழுகிறது. கருப்பு வெள்ளையில் ஒளிபரப்பான அக்காட்சி எல்லோர் நெஞ்சிலும் ஓங்கி அறைகிறது. இனி நீங்கள் எல்லாம் அநாதைதான் என்கிறார் ஒரு முதியவர். மக்கள் நெரிசலில் காமிராவை நுழைத்து மூவ் செய்கிறார்கள்.நெஞ்சில் அடித்துக் கொண்டு ஒரு பெண்மணி வீறிடுகிறாள். தலைமயிரை பிடித்து இழுத்துக் கொள்கிறாள். எம்.ஜி.ஆரின் பக்கத்தில் ஜெயல்லிதா அமர்ந்திருக்கிறார். ஒவ்வொரு தலைவராக வந்து மலைவலையம் வைக்கிறார்கள். அவரது சொத்தின் அத்தனை பத்திரங்களும் அவரது கைகடிகாரத்தில்தான் இருப்பதாக ஜன்ங்கள் பேசிக் கொள்கிறார்கள். தொப்பியோடு புதைப்பார்களா?இல்லை அதை கழற்றி விட்டு புதைப்பார்களா?என்று விவாதம் ஜனங்களுக்குள் நடக்கிறது.இந்தப் பேச்சுக்கு இடையில் காட்சியையும் கவனமாக காண்கிறார்கள். சந்தனக்கட்டையில் செய்தப் பெட்டியில் அவரை அடக்கம் செய்யபோவதாக செய்தி பரவுகிறது.இறுதி ஊர்வலம் தயாராகி அவரை ராணுவ ஊர்திக்கு மேல் வைத்து கொண்டுப் போகிறார்கள். டி.வி.யில் மெட்ராஸ் முழுக்க ஜனங்களாக தெரிகிறார்கள். ”ஒரு புள்ள இருந்திருந்தால் கொல்லியாவது வைக்கும்.அதுக்கு கொடுத்து வைக்கலையே”என்கிறாள் அம்மா. ஊர்வலத்தில் வர்ணனைக்கு நடுவில் “போகுதே..போகுதே”என்ற எம்.ஜி.ஆரை பற்றிய புகழ் பாடல் ஒலிக்கிறது.அது சோகத்தை மேலும் கூட்டுகிறது. இனி அவளவுதான் இந்த முகத்தை பார்க்க முடியாதே என்று கேவுகிறாள் ஒரு மூதாட்டி. ஐயோ ஐயோ என்று அலறுகிறார்கள் மக்கள். கூட்டத்தினர் மத்தியில் அழுகுரல் அளவும் கூடுகிறது. ஏனோ அங்கே ஆண்டவனை எல்லோரும் அசிங்கமாய் திட்டிக்கொண்டிருந்தார்கள்.

Tuesday, August 31, 2010

அழிந்து வரும் நெல்மணிகள்:ஆபத்தும் பேராபத்தும்









எவ்வளவு விஷயங்களுக்குதான் நாம் போராடுவது சொல்லுங்கள்? விதைகளில் வீரியம் குற்றிக் கொண்டே வருகிறது.பச்சைப் பிள்ளைக்கு காம்பை கொடுக்கும் தாய்ப்பாலில் நஞ்சுக் கூடிக்கொண்டுள்ளது.பசுமைப்புரட்சி என்ற aaமடத்தனமான வேளாண்மையால் விளைநிலம் பழாகிவிட்டது.பன்னாட்டு கம்பெனிகளுக்காக பூர்வக்குடிகளின் நிலங்களை வலுக்கட்டாயமாக அரசு கையகப்படுத்தி,செழிப்பான இயற்கை வளங்களை அழிவுக்குள்ளாக்கி வருக்கிறது.புவியில் சீதோஷ்ண சீர்கேட்டால் அதன் பன்மயச் சுழச்சி பாதிக்கப்பட்டு வருகிறது.நாம் முன்பே சந்திக்க நேர்ந்த கடல் சுனாமியைப் போல் சூரிய சுனாமியின் வருகையால் பூகோள அமைப்பின் வாழ்நிலை நெருக்கடிக்கு உள்ளாகப்போகிறது. இப்படி தினம்தோறும் ஏராளமான பத்திரிகைச் செய்திகள் வெளி வருகின்றன. இவை வெறும் செய்திகள் மட்டுமே அல்ல; பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தாங்கள் பல காலமாக மேற்கொண்டு ஆய்வுவிற்கு பின் எதிர்காலத்தில் நிகழப்போகும் பிரச்னையின் முடிவை முன்கூட்டியோ அல்லது ஏற்கெனவே உள்ளாகி தவிக்கும் பாதிப்புக்கான காரணியின் விடை குறித்தோ வெளியாகி வருகின்றன செய்திகள். ஆக, முக்கிய கவனம் எடுத்து மக்கள் கவனிக்க வேண்டிய செய்திகள் இவை.இவ்வளவு ஆபத்தானச் செய்திகளை மக்கள் கவனிக்கிறார்களா? அது குறித்து ஏதாவது யோசிக்கிறார்களா? ஒன்றுமே புரியவில்லை. இது நம் பிரச்னையல்ல என்ற தொனியிலேயே அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.

மேலை நாடு ஒன்றில், ஒரு குறிப்பிட்ட குளத்தில் உரியிர் வாழும் தவளைகள் இரட்டை தலைகளோடும் இரட்டை உடலுறுப்புகளோடும் பிறப்பதாக ஒரு தகவலை உயிரியல் விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்தார்கள். இதை முதலில் மரபணு மாற்ற பிரச்னை என்றும், ஜீன் கோளாறு என்றும் நம்பிய விஞ்ஞானிகள்,பின்னால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் இதற்கு ஜீனோ,மரபணுவோ காரணமல்ல என்ற முடிவுக்குத் திரும்பினார்கள்.இவை இரண்டும் காரணமில்லை என்றால் அப்போது பிரச்னையின் ஊற்றுக்கண்தான் என்ன? தொடர்ந்து தேடினார்கள்.ஊரில் ஒரு குட்டை விடாமல் சோதனை மாதிரிகளை சேகரித்தார்கள்.விஞ்ஞானிகள் இரவும் பகலுமாக சோதனைச்சாலையே கதி என்று கிடந்தார்கள். விளைவு? அதற்கான சரியான காரணியை கண்டுபிடித்தார்.உலகத்தையே அதிர வைக்கும் தகவலை வெளியிட்டார்கள். அதன்படி இதற்கு காரணம் விளைநிலங்கள்தான் என்றது அவர்களின் ஆராய்ச்சி முடிவு. ஒருதவளை இரட்டைத்தலையோடு பிறப்பதற்கும் விளைநிலத்திற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? ஆம், இந்தப் பூமியில் எல்லாவற்றிற்கும் ஒன்றோடு ஒன்று சம்பந்தம் இருக்கிறது. ஆகையால்தான் ஒரு பட்டாம்பூச்சியின் மரணம் பற்றி கவலைக் கொள்கிறது கேயாஸ் தியரி.

அந்த உயிரியலாளர்கள் கண்டறிந்த உண்மை இதுதான் : விவசாய உற்பத்திக்காக விளைநிலங்களில் தெளிக்கப்பட்ட பூச்சிக்கொள்ளி மருந்துகள் மண்ணின் மேல் படிந்துபடிந்து நஞ்சாகத் தங்கி, பின் ஏரிகளிலும் குட்டைகளிலும் போய் கலந்து இன்றைக்கு தவளைகளின் தலையெழுத்தையே மாற்றி இருக்கிறது. தவளைகளின் தலையெழுத்து தானே என்று நீங்கள் கண்டுக்கொள்ளாமல் அசட்டையாக இருந்தால் நாளை பிறக்கப்போகும் மனிதனும் இவ்வாறான உடல் உபாதைகளால் சிரமப்படலாம் என்றார்கள் அதே விஞ்ஞானிகள். இதை கேட்டப் பின்பும் உலகல் விழித்துக்கொண்டுவிட்டதா?அதுதான் இல்லை. தூர தேசத்தில் எங்கோ மாதிரிகளை சேகரித்து அவர்கள் வெளியிடும் தகவல்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? நிறையவே இருக்கிறது. அவ்விஞ்ஞானிகள் எந்தப் பூச்சிக்கொள்ளியால் பூமிக்கு ஆபத்து ஆபத்து என்று அலறுகிறார்களோ அந்த உயிக்கொல்லி மருந்தைத்தான் கொஞ்சமும் விழிப்புணர்வற்று நாம் நம் வயல்களில் அதிக மகசூலுக்காக அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறோம்.இன்று அவர்களுக்கானது நாளை நமக்கானது.நாளை நமக்கானது இன்னொருநாள் மற்றொருவருக்கானது. கீதையின் சுழற்சி இங்கேயும் செயல்படும்.

சரி,நாளை வரப்போவதுதானே என்று ஆசுவாசப்படுபவர்கள் இத்தகவலை கவனிக்கவும்.இந்தியா எதிர்நோக்கி இருக்கும் இன்னொரு பேராபத்தை சற்று உள்வாங்கி கொள்ளவும். ஆப்ரிக்க துணைக் கண்டத்தில் உள்ளவர்களைவிட, இந்தியாவில் பட்டினியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக நவதானிய அறக்கட்டளையின் தலைவரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான வந்தனா சிவா தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் 57 லட்சம் குழந்தைகள் போஷாக்கின்மை காரணமாக, சராசரி எடையை விட குறைவான எடையுடன் பிறப்பதாகவும், நம் நாட்டில் மொத்த உணவு உற்பத்தியைப் பற்றி அதிகமாகப் பேசப்படும் வேளையில், கடந்த 1991-ம் ஆண்டு தாராளமாயப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பின்னால், இந்தியாவில் தனி நபருக்குக் கிடைத்து வந்த உணவு,அதற்கு முன் இருந்ததை விட 2001-ம் ஆண்டில் 150 கிலோவாகக் குறைந்துவிட்டது என்றும் இப்படி உணவு உற்பத்தி அளவும் பெருமளவு குறைந்துவிட்டதற்கு, விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை வேறு பயன்பாடுகளுக்குக் கொடுத்துவிட்டு வெளியேறி வருவது ஒரு காரணம் என்றும் அவர் ஆராய்ந்திருக்கிறார். மேலும்,இந்த ஆய்வானது ஐ.நா. மன்றத்தின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வெளியிட்ட ஆய்வின் அடிப்படையிலேயே தங்களின் ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக வந்தனா சிவா தெரிவிக்கிறார். தொடர்ந்து அவரே,இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ள புண்டேல்கண்ட் பிராந்தியத்தில் தங்கள் அமைப்பு நடத்திய ஆய்வில், 90 % குடும்பங்களுக்கு போதிய அளவு உணவு கிடைப்பதில்லை என்றும் சொல்லி இருக்கிறார்.

இதிலிருந்து நாம் ஒன்றை மட்டும் புரிந்துக்கொள்ள முடிகிறது. இந்தப் பூவுலகு ஏதோ ஒரு நெருக்கடிக்குள் சிக்கித் தினறிக் கொண்டிருக்கிறது. அந்த நெருக்கடி தானே உண்டானவையல்ல; பொருளாதாரத்தில் வலுத்த நாடுகள் ஏழை உயிரோடு எதன் பொருட்டோ விளையாடி வருகின்றன.அவர்களுக்கு இது விளையாட்டு.நமக்கு உயிர்பிரச்னை. இப்படி ஆசிய நாடுகளில் வாழும் மக்களின் உயிர் பிரச்னையின் மையமாக திகழும் நெல் உற்பத்தியை பற்றியும் அதன் அழித்தொழிப்பு பற்றியும் விவாதிக்கும் கோ.நம்மாழ்வாரின் சமீபத்திய நூலே ”வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்” என்கின்ற நூல். இந்நூலின் அடிநாதம் நெல்லை பாதுகாப்பது. மண்ணிற்குள் புதையுண்டு போன தானியங்களை அடையாளப்படுத்துவது,ஆவணப்படுத்துவது.பசுமைப் புரட்சியால் மறுபடி திரும்ப முடியாது தவிக்கும் வாழ்க்கைக்கு நடுவில் மிகச் சுலபமாக உங்களை திரும்பிப்போக வழிகாட்டுவது.இதைதான் மிக எளிய முறையில் இந்நூலில் தொடர்ந்து பேசுகிறார் நம்மாழ்வார்.

தஞ்சை மாவட்டம் இளங்காடு கிராமத்தில் சிறு உழவாண்மை முடும்பத்தில் பிறந்த நம்மாழ்வார் அண்ணாமலை நகர் உழவர் கல்லூரியில் 1959-63 ஆம் ஆண்டு வேளாண்மை கல்வியில் படித்து பட்டம் பெற்றவர். இவர் காலத்தில்தான் உழவாண்மை மறைந்து பசுமைப்புரட்சி தொடங்கியது. பள்ளிப்படிப்பு முதலே காலையிலும் மாலையிலும் உழவாண் வேலையில் ஈடுப்பட்டு இவர் இயற்கை உழவாண்மை செய்ததால் நவீன வேளாண்மையின் அபாயம் அறிந்து களப்பணிக்குள் கால்பதிக்க வந்துவிட்டார். அதன் பின் இயற்கை உழவாண்மைக்காக தன்னை அர்பணித்துக் கொண்ட நம்மாழ்வார் இன்று தமிழகத்தின் புதிய அடையாளமாக கருதப்படுகிறார். விளைச்சலை கூட்டுவது குறித்து பேசிக் கொண்டிருப்பதோடு நிற்காமல் இவர் தமிழ்நாட்டில் சாதித்திருப்பது ஏராளம். அவருக்குப் பின்னால் ஒரு பெரிய மக்கட் திரளே ஒரு வேளாண் புரட்சியை மேற்கொண்டிருக்கிறது. நம் மண்ணுக்கே உரிய மஞ்சலின் காப்பீட்டு உரிமையை மேலைநாட்டினர் கையகப்படுத்த இருந்த வேளையில் சர்வதேச நீதிமன்றம் வரை சென்று வாதாடி வென்ற பெருமைக்குரிய மனிதர் இவர்.

“நாற்பது நாடுகளில் இன்று உணவுக்கான கலவரம் நடக்கிறது என ஐ.நா.சபை பொதுச் செயலாளர் அறிவித்திருக்கிறார்.உற்பத்தியாகின்ற உணவு தானியத்தில் 48 விழுக்காடு கால்நடைத் தீவனமாக மற்றப்படுகிறது.கோதுமை,சோயாமொச்சை,மக்காச்சோளம்,கரும்பு போன்றவை டீசலாக மாற்றப்படுகின்றன.உலகில் வாழும் மக்களில் பாதிப் பேருக்கு உணவுக்கு உத்திரவாதம் இல்லை.85கோடி மக்கள் தினமும் பசியோடு படுக்கைக்குச் செல்கிறார்கள்.”என்கிற அதிரடித் தகவலோடு தொடங்கும் இந்தப் புத்தகம் வழக்கமான சுற்றுச்சூழல் பாணியான எழுத்து நடையில் எழுதப்படாமல் மிகச் சரளமாக ஒரு குழந்தைக்கு எடுத்து சொல்வதைப் போல் எழுதப்பட்டு இருகிறது. வெறும் புள்ளி விவரங்களோடு மட்டுமே நின்றுவிடாமல் வரலாற்றினை பின்னோக்கிப் பார்த்து உணவு போதாமைக்கான காரணிகளை நிறை செய்ய முயலுகிறது.

இன்று உலகில் உயிர் வாழும் மக்களில் பாதிக்கும் அதிகமானோர் அரிசியை உணவாக நம்பியே உயிர் வாழ்கிறார்கள்.இதற்கான அரிசி உற்பத்தி பெரும்பகுதி ஆசிய நாட்டில் நடக்கிறது. அதிலும் சீனா,இந்தியாவிலும் மட்டுமே விளைகிறது.இதில் குறிப்பாக இந்தியாவில்,மேற்குவங்கம்,ஆந்திரம்,தமிழ்நாடு,கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்களின் முக்கிய உணவாக அரிசியே உள்ளது. நம்முடைய நாட்டில் 15 ஆயிரம் ஆண்டுகளாக அரிசி நம் மக்களின் வாழ்க்கையை தீர்மானித்து வந்துள்ளதாக சரித்திரம் சொல்கிறது. அப்படி என்றால் நெல் மட்டுமே இருந்தால் மக்கள் பசியற்று வாழ்ந்து விடுவார்களா? இக்கேள்விக்கு விடை சொல்கிறது நமது பண்டைய இலக்கியம்.

“நெல்லும் உயிரன்றே.நீரும் உயிரன்றே.மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்”
-இதன் பொருள் என்ன? வெறும் நெல்லும் நீரால் மக்களை வாழவைக்க முடியாது. மன்னனின் செங்கோலுக்கே அந்தத்தகுதியுண்டு என்கிறது தமிழர் வகுத்த வாழ்நெறி.

“உழுது விதைத்து அறுபார்க்கு உணவில்லை.பொய்யைத் தொழுது அடிமை செய்வார்க்கே செல்வம் எல்லாம் உண்டு” என்கிறான் பாரதி. இவ்வளவு ஏன் சமகாக வரலாற்றில் நாம் தேசத்தை கிஸான்கி பாரத் என்றல்லவா பெயரிட்டு அழைத்தோம். இந்நூலின் மூலம் அந்தப் பாடம் எல்லாம் மலையேறியாயிற்று என்கிறார் நம்மாழ்வார். இன்று நம் தேசம் 1லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் கொடுத்து உரத்தை இறக்குமதி செய்கிறது.இதன் வெளிப்பாடு என்ன?வேளாண்மையை தொழில் தூக்கில் கொண்டிருக்கிறது என்பதுதான் என்கிறார் இவர். இதற்கெல்லாம் யார் காரணம். லார்டு மெக்காலே சொல்வதை கேளுங்கள்.இவர்தான் 1835ம் ஆண்டு வெள்ளையர் ஆட்சியில் இந்தியருக்கான ஆங்கில மேற்கல்வியை தொடங்கியவர்.இது ஊரறிந்த விசயம்.சரி,அவரது பேச்சிக்கு வருவோம்:

“நாடு முழுவதும் உள்ளவர்களுக்குக் கல்வி அளிக்க எங்களிடம் வசதி வாய்ப்பு இல்லை.எங்களுடைய இப்போதைய முயற்சி இதுதான்: எங்களுக்கும் எங்களால்(கோடிக்கணக்கில்) ஆளப்படுவோர்க்கும் இடையில் விவரங்களைப் பரிமாறக்கூடிய ஒரு கும்பலை முதலில் உருவாக்குவோம்.அவர்கள் இரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாக இருப்பார்கள்.ஆனால் கருத்தாலும்,புத்தியாலும்,சுவையாலும் ஆங்கிலேயராக இருப்பார்கள்” இவ்வாறு மெக்காலேவின் குரலாக செயல்பட்டவர்கள்தான் வேளாண்மையமைச்சராகவும் பசுமைப் புரட்சியாளராகவும் சுதந்திரத்திற்கு பின்னால் நம் தேசத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள் என்பது தற்கால வரலாறு. காந்தியின் பக்தர் போல் நடித்த முன்னாள் உணவு-உழவு அமைச்சர் சி.சுப்பிரமணியமே இதற்கு கையாளாகிப்போனதை நாம் எப்படி உள்வாங்க? என்று குரலை உயர்த்துகிறார் நம்மாழ்வார். தொடர்ந்து இவர் அங்கலாய்ப்பதை படியுங்கள்:

இந்தியா சுதந்திரம் அடைகிறபோது முப்பதாயிரம் நெல் ரகங்கள் இருந்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.கேரளாவில் 1880ம் ஆண்டு வாக்கில் பயணம் செய்த ஜான் அகஸ்டஸ் வால்க்கர் 50 வகையான நெல் ரகங்களை தானே பார்த்ததாக எழுதுகிறார்.அவர் குறிப்பிடும் இன்றும் கேரளாவின் மேலைக் கரையோரம் கடல்நீர் புகும் பகுதிகளில்’பொக்காலி’நெல்பயிர் செய்யப்பட்டுவருகிறது. ஒரிசாவில் மட்டும் நவதான்யா குழு 300க்கும் மேற்பட்ட நெல் ரகங்களை அடையாளம் கண்டு வைத்திருக்கிறது. தமிழகத்தில் புதுமாப்பிள்ளை அரிசி சோற்றில் ஊறிய நீராகாரத்தை பருகியவர்கள் சர்வ சாதாரணமாக இளவட்டக் கல்லைப் புரட்டிப் போட்டிருக்கிறார்கள்.அந்த நெல் மாப்பிள்ளை சம்பா என பெயரானது.தலை ஞாயிறு வட்டாரத்தில் தண்ணீர் மிகுந்த போதும் நீர் மட்டத்திற்கு மேல் தலை தூக்கிக் கதிர் தள்ளும் நெல்லுக்கு பெயர்,காட்டிடை ஓணான்.நாகப்பட்டினம் கடல் ஓரம் கடல் நீர் புகுந்தாலும் விளையும் திறன் பெற்ற நெல்லுக்கு குழியடுச்சான். இப்படி ஆறு மாதத்தில் விளையும் வாடன் சம்பா,கட்டைச் சம்பா ஐந்து மாதத்தில் விளையும் கிச்சடிச் சம்பா,கார்த்திகைச் சம்பா மூன்று மாதத்தில் விளையும் குள்ளக்கார்,கருங்குறுவை,செங்குறுவை,செங்கல்பட்டுச் சிறுமணி,ஈரக்கசிவில் கூட விளைச்சலுக்கு வரும் உவர் மொண்டானும்,ஓசுவக்குத் தாளையும் வெள்ளத்தின் மேல் கதிர் நீட்டும் மடுமுழுங்கியும் அறுபது நாளில் விளையும் அறுபதாங்குறுவையும் எழுபது நாளில் விளையும் பூங்கார் போன்ற வகை நெல்களும் முன்னால் நம்மிடம் இருந்தன. இந்த சகலத் தகவல்களும் நம்மாழ்வாரின் தேடல் பட்டியலில் இருந்து நமக்கு கிடைக்கப்பெறுபவை. இன்று இத்தனையும் சுறுங்கி இரண்டொன்றாகிப் போயின என்பது எவ்வளவு சங்கடம்.

மழையை மட்டுமே நம்பி, விதைப்பை நடத்தி வெற்றிக்கொண்ட தமிழ்ச் சமூகம் பல சாதனைகளையும் கண்டிருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன் வந்த ஜான் அகஸ்டஸ் வால்க்கர் அன்று ஆங்கிலேய அரசுக்கு சமர்பித்த அறிக்கை இன்று வெளியாகி உள்ளது.அதில் தமிழர்களின் பாசன முறைப்பற்றி வியந்து எழுதியுள்ளான். சில இடங்களில் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராகவே நீரை வழிப்படுத்தி வேளாண்மையில் வெற்றிக்கண்டிருக்கிறார்கள் தமிழர்கள் என்றிருக்கிறான் அகஸ்டஸ். பொதுவாழ்க்கையில் இந்தச் சமூகம் எவ்வளவு நேர்பட வாழ்ந்த்து என்பதற்கு ஒரு சிறு சான்று இதோ:

பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கொங்கு மண்டலத்தை ஆண்ட பாண்டிய மன்னனின் தளபதியான (சிற்றரசன்) இருந்தவன் காளிங்கராயன். இவன் வாழ்ந்தப் பகுதிக்கு ஆற்றுநீரைக் கொண்டுவரத் திட்டமிட்டான். பவானி ஆற்றில் கிளைப் பிரித்தான்.தன் தாய்,பால் விற்று நெய் விற்று சேர்த்திருந்த பணத்தை எல்லாம் செலவழித்து அணைக்கட்ட ராப்பகலாக உழைத்தான்.இறுதியில் மிகப்பெரிய காளிங்கராயன் கால்வாய் உருவாயிற்று. தாழ்வாயில் உள்ள முடியை மழிக்க நேரமில்லாமல் உழைத்தவன் கால்வாய்த் திறக்கப்போகும் நேரத்தில் அயர்ந்து தூங்கிவிட்டான். எல்லா பணிகளையும் முடித்து அவன் எழுந்த போது,”காளிங்கராயன் ஊரார் பணத்தை முழுக்கச் செலவழித்து தன் நிலத்திற்கு தண்ணிர் கொண்டு போகிறார்” என்று அவன் காதிற்கு ஒரு அவதூறு செய்தி வருகிறதுஇதைக் கேட்டு காளிங்கன் சொன்னான்: ”நானோ,எனது சுற்றமோ இந்தக் கால்வாயில் குடிப்பதற்கு ஒருமுறை தண்ணிர் எடுத்தால்கூட ‘காசியில் காராம்பசுவைக் கொன்ற பாவம் செய்தவர்களுக்கு ஒப்பாவோம்’.அதற்குரிய தண்டனையை அனுபவிப்போம்” என்று அறிவிக்கிறான்.இச்செய்தி கேட்ட அவனது உறவினர்கள் எல்லாம் காளிங்கன் கால்வாயை ஒட்டி உள்ள தங்களின் நிலத்தை விற்றுவிட்டு வேறு பக்கம் நிலம் வாங்கிக்கொண்டுப் போகிறார்கள். செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் ஆற்று நீராதாரம் அற்றக் கிடந்த நிலங்களைக் கூட வளப்படுத்தி வாழ்ந்தச் சமூகம் இன்று ரூபாய்க்கு ஒருகிலோ அரியை ரேஷனில் எதிர்பார்த்து காத்து நிற்கிற கொடுமையை எங்கே போய் சொல்வது? 18ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19ம் நூற்றாண்டின் தொடக்கக் கால ஆங்கிலேய ஆவணங்கள் அலகாபாத் முதல் கோவை வரையில் பரவலாக பல இடங்களில் உயர் விளைச்சல் இருந்துள்ளதை பதிவு செய்திருக்கின்றன. 1910 கிராமங்களில் சுமார் 1500 கிராமங்களின் வருவாய் பற்றிய தரவுகள் நமக்கு இன்று கிடைத்துள்ளன.1550 கிராமங்களில் வாழ்ந்த 45000 குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஆண்டிற்குச் சராசரியாக 5டன் உணவு தானியம் பெற்றிருந்தது எனவும்,65 கிராமங்கள் ஒரு ஆண்டிற்குச் சராசரியாக 5000கலத்திற்கு அதிகமாக உணவு தானியம் உற்பத்தி செய்து எனவும் அறிக்கைகள் வந்துள்ளன. சிங்கப்பெருமாள் கோயிலையும்,ஸ்ரீபெரும்புதூரையும் இணைக்கும் சாலையில் வடக்குப்பட்டு என்ற கிராமம் உள்ளது.18ம் நூற்றாண்டு ஆவணங்களின் படி வடக்குப்பட்டு கிராமம் வேளாண்மையில் சிறப்பான உயர்விளைச்சல் கண்டிருக்கிறது. பார்னார்டு என்பவர் 1774அ ஆண்டு நவம்பர் மாதம் எழுதிய தமது கடிதத்தில் 1772 முதல், தான் இது போன்ற கிராமக்கணக்கு ஆவணங்களை சேகரிக்கத் தொடங்கி உள்ளதாக குறிப்பிடுகிறார்.

காவிரி பகுதியில் காணப்படும் கி.பி.900-1200வரையுள்ள காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் ஒரு ஏக்கருக்கு 6000முதல் 7200 கிலோகிராம் நெல் விளைந்ததைப் பதிவு செய்துள்ளன. 1100 ம் ஆண்டு தென்னாற்காடு மாவட்டத்தில் ஏக்கருக்கு 5800கிலோ விளைந்த்தாக கல்வெட்டு ஒன்று கூறுகிறது. 1325ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் ஏக்கருக்கு 8000கிலோ விளைந்ததாக கல்வெட்டாதாரம் கிடைத்துள்ளது.அதேபோல 1807ல் கோவை மாவட்டத்தில் ஏக்கருக்கு 5200கிலோ விளைந்ததாக ஐரோப்பிய ஆவணம் சொல்கிறது. இதற்கெல்லாம் இன்று ஒப்பிட்டு பார்க்க ஏதாவது ஆதாரம் உள்ளதா என்பவர்கள், எக்னா நாராயண் அய்யர் என்ற வேளாண் நிபுணர் தமிழகத்தில் பல இடங்களிலும் கிடைத்த விளைச்சலை அளந்துபார்த்து ஆவணப்படுத்தியுள்ளதை தேடிச் சென்று விடை அறிந்துகொள்ளலாம் என்கிறது இந்த நம்மாழ்வாரின் புத்தகம்.இதோடு சேர்ந்து மண் நலம் பயிர் நலம் மக்கள்நலம் பறிபோன வரலாற்றை மறுபடி நமக்கு நினைவூட்டவும் முயலுகிறது இந்நூல்.கூடவே இவ்வளவு இயற்கை சுழற்சியோடு செம்மையுற்ற நம் வேளாண்மை, பசுமைப்புரட்சி,மன்சாண்டோ விதைகளின் அறிமுகம் போன்றவற்றால் நசிந்துபோய் வருகிறது என எச்சரிக்கையையும் மணியடிக்கிறது.

இன்றைக்கு உலகில் உள்ள விதை இனங்களில் 90 சதவீதம் மன்சாண்டோ நிறுவனத்தின் பிடியில் சிக்கியுள்ளது. மேற்கத்திய நாடுகளில் மரபீனி மாற்று உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் போது,அதனை மரபீனி மாற்றம் செய்யப்பட்டது என்பதை வெளிப்படையாக அறிவித்து விற்பனை செய்ய வேண்டும் என்ற சட்டம் செயல்படுத்தப்படுகிறது.ஆனால் இந்தியாவில் அதற்கான எந்த முஸ்தீபுகளும் தென்படவில்லை. இந்தியாவில் மட்டும் மரபீனி மாற்று வேளாண்மையில் 236 ரகப்பயிர்கள் மீது ஆய்வுகள் நடைபெறுகின்றன.அவற்றில் உணவுப் பயிர் வகைகள் மட்டும் 169. இதில் புதியதாக முளைத்திருக்கும் அபாயம் என்னவென்றால் உணவுப் பொருட்களை தொடர்ந்து மூலிகைகளின் மீது,மரங்களின் மீது ஆய்வுகள் நடைபெற ஆரம்பித்திருப்பதுதான். நம் நாட்டில் 1500 தாவரங்கள் மருத்தவத் தாவரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.இவற்றில் 500தாவரங்கள் நேரடி மருந்து தயாரிப்பில் பயன்படுத்தபடுபவை. இவையும் நஞ்சாகும் ஆபத்து தற்போதைக்கு நம்மை சூழ அரம்பித்திருக்கிறது என அறிவுறுத்துகிறார் நம்மாழ்வார்.

ஏற்கெனவே இந்தியாவில் பசுமைப்புரட்சி என்ற பெயரில் பல நாசங்களை நம்மண்ணில் விதைத்த ராக்பெல்லர் பவுண்டேசன்தான் இன்று மரபீனிப் புரட்சியை நம்மீது திணித்துவருகிறது. இவ்வளவு கொடுமைகளைவும் தாங்கிக் கொண்டு நாம் நாட்டு வேளான் விஞ்ஞானிகள் என்னதான் செய்கிறார்கள்? அவர்கள் மெக்கலேவின் வாரிசுகளாய் இன்றும் அருமையாய் கடமையாற்றி வருகிறார்கள் அவ்வளவுதான். இதில் இருந்து நமக்கு என்ன புரிகிறது”தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்-உரிமையாளர் மான்சாண்டோ” என நம்மாழ்வார் ஏற்கெனவே குறிப்பிட்டு எழுதியதில் உண்மை இருப்பதாகவே தெரிகிறது.

(வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்,ஆசிரியர்:கோ.நம்மாழ்வார்,வெளியீடு:நமது நெல்லைக் காப்போம் இயக்கம்,ஹெச்-3,ஜவஹர் நகர், கவ்தியார், திருவனந்தபுரம்-695003.கேரளா.பேச:0471-2727150 மற்றும் வானகம்,60-3 எல்.பி.சாலை,திருவான்மியூர்,சென்னை -600041,பெச:09442531699)

தகவல்: ஆகஸ்ட் மாத சிற்றிலை கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை இது

Tuesday, August 24, 2010

நிறம் மங்காத கருப்பு வெள்ளை



எங்கள் ஊரில் இருந்து பென்னாடம் செல்லும் ரோட்டில் இருந்த பழையபோஸ்ட் ஆபிஸ் எதிர்புறம் துரை ஸ்டுடியோ என்ற பெயரில் ஒரு ஸ்டுடியோ இருந்தது.அதன் உரிமையாளர் பெயர்; துரை. பார்ப்பதற்கு துரை,கட்டையாகவும், குள்ளமாகவும் இருப்பார்.அசப்பில் அவர் ஒரு டி.பி.கஜேந்திரன்.என்ன.. கஜேந்திரன் கறுப்பு.இவர் கொஞ்சம் சிகப்பு. அவ்வளவுதான் வித்தியாசம். அவர் தினதோறும் காலையில் கடைக்கு வரும்போது நெற்றியில் விபூதிப் பட்டை,அதன் இடையில் சந்தனத் திட்டை,கழுத்தில் உத்திராட்சைக் கொட்டை என்று மங்களகரமாக வந்து கடையைத் திறப்பார்.

ஊரில் மிகப்பழைய ஸ்டுடியோவின் பெயர் பூபதி ஸ்டுடியோ.அது பாலக்கரை கடைவீதி இருந்தது.அதற்கு அடுத்த இடத்தில் சாரதி ஸ்டுடியோ இருந்தது.இந்தக் கடையின் உரிமையாளர் பக்கத்து ஊரான நெய்வேலிக்காரர். பூபதியிடம் இருந்து தொழில் கற்றவர்கள் பின் அங்கிருந்து வெளியேறி வந்து கெம்பு ஸ்டுடியோ,குவாலிட்டி ஸ்டுடியோ,ராமு ஸ்டுடியோ,ரவி ஸ்டுடியோ என பல ஸ்டுடியோக்களை ஊரில் ஆரம்பித்தார்கள். சாரதி ஸ்டுடியோ வேறு ஆளிடம் கைமாறி பின்னால் லைன் ஸ்டுடியோ என்று பெயர் மாற்றம் கண்டது.அக்கடையை ஒட்டியே கோல்டன் ஸ்டுடியோ என்ற பெயரில் பாய் ஒருவர் ஸ்டுடியோ வைத்திருந்தார்.ஒரு நாளும் அவர் படம் எடுத்து நான் கண் குளிரப் பார்த்ததில்லை.ஒப்புக்கு ஸ்டுடியோவை திறந்து வைத்துக் கொண்டு சும்மாவே உட்கார்ந்திருப்பார்.அவர் ஒரு கம்யூனிட்.கட்டிட உரிமையாளருக்கும் அவருக்கும் கோர்ட்டில் வழக்கு நடப்பதாகவும் அதனால் அவருக்கு வாடகைப் பிரச்னை இல்லை என்றும் ஊரில் பேசிக் கொண்டார்கள். இந்தக் கடைக்கு பக்கத்திலேயே பதினாறு வயதினிலே படத்தில் வரும் டாக்டரின் ஸ்டைலில் ஒரு டாக்டர் கிளினிக் வைத்திருந்தார்.அங்கேயும் நோயாளிகள் வந்து நான் கண்டதில்லை. அங்கே கம்பெளண்டராக வேலை பார்த்த பெண் எப்போதும் வீதியை வேடிக்கை பார்த்தபடி சும்மாவே உட்கார்ந்திருப்பார்.

ஸ்டுடியோ என்றால் கடைக்கு வெளியே பெரிய பெரிய சைஸ்ஸில் போட்டோக்களை மாட்டி வைப்பார்கள்.மரச்சட்டத்தை அடித்து கண்ணாடிப் போட்டு பிரேம் பண்ணித் தரும் ஆட்கள் ஸ்டுடியோவுக்கு வெளியிலேயே காத்திருப்பார்கள்.வாடிக்கையாளர்களின் வசதிக்காக சில ஸ்டுடியோக்களை அந்த மாதிரி ஆசாரிகளை வேலைக்கு அமர்த்திக் கொள்வதும் உண்டு. ஒவ்வொரு ஸ்டுடியோக்களின் முன்பும் அண்ணாதுரை,காமராஜர்,காந்தி,நேரு,இந்திராகாந்தி,எம்.ஜி.ஆர்.,கருணா நிதி,ஜெயலலிதா,ஸ்ரீதேவி,கமல்,ரஜினி என்று பழைய அரசியல், சினிமா ஸ்டார்களின் படங்களாக கடை முழுக்க நிறைந்திருக்கும். அதை தாண்டி அழகழகான குழந்தைகளின் படங்கள் நிறையவே இருக்கும்.அவைகளை முன்மாதிரியாக வைத்து தங்களின் பிள்ளைகளை பொதுமக்கள் படம் எடுத்துக் கொள்வார்கள்.எனக்கு வினவு தெரிய வந்தபோது லைன் ஸ்டுடியோவும் ஜெமினி படமனையும் புகழின் உச்சில் இருந்தன.லைன் அதன் பிரமாண்டத்தினால் பெயர் எடுத்தது. ஜெமினி அதன் நடவடிக்கைகளால் பெயர் எடுத்திருந்தது. ஜெமினியை கல்லூரி மாணவப் பருவத்தில் ரெங்கப்பிள்ளை என்பவர் ஆரம்பித்தார்.அவருக்கு சினிமா நண்பர்கள் அதிகமாக இருந்தார்கள்.பாடலாசிரியர் அறிவுமதி,இயக்குநர் தங்கர்பச்சான்,ஷெல்வன்,வ.கெளதமன் என்று பல பிரபலங்கள் ஸ்டுடியோவுக்கு அடிக்கடி வந்து போவதால் ஊரில் அவர் முக்கிய புள்ளியாக மதிக்கப்பட்டார். ஜெமினி படமனை ஜங்ஷன் ரோட்டில் உள்ள பஸ் ஸ்டாண்டின் அருகில் இருந்தது.லைன் ஸ்டுடியோ அதே ரோட்டின் கடைசி முனையான கடலூர் ரோட்டின் முடிவில் இருந்த அண்ணா சிலைக்கு அருகில் இருந்தது. இந்த ஸ்டியோவை ஒட்டி நூர்ஜஹான் என்ற பெயரில் பெரிய ரைஸ் மில் ஒன்றும் இருந்தது. இது பிரமாண்டமான ரைஸ்மில். அன்றாடம் அரைவைச் சத்தம் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் கேட்டுக்கொண்டே இருக்கும்.தீபாவளி மாதிரியான பண்டிகைகளில் ஜனங்களின் கூட்டம் தெரு வரைக்கும் வரிசைக்கட்டி நிற்கும்.ஊரின் பிரதான சந்தை நடக்கும் இடத்தையொட்டி இந்த மில் இருந்ததால் நகரத்தை சுற்றி உள்ள கிராமத்து ஜனம் முழுக்க இங்கேதான் ஜாகைப் போட்டு உட்கார்ந்து மாவு அரைப்பார்கள்.நெல் அவிப்பார்கள்.மில்லில் நெல் அவிக்கும் வாசம் வீதி எங்கும் நீக்கமற கமழும்.இவ்வளவு பிரபலமான மில் இன்றைக்கு சத்தம் குறைந்துபோய் ஈனச் சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கிறது.90களிக்கு பிறகு வந்த பெரும் தொழில்புரட்சியால் இந்த மாதிரியான அரைவை எந்திரத் தொழில் நசிந்தே போய்விட்டது. எல்லாம் பாக்கெட்டுகளின் உலகமான பிறகு, மக்கள் ரெடிமேட் பொருட்களின் அடிமைகளாக வடிவமைக்கப்பட்டுவிட்டார்கள். கடைகளுக்குப் போகையில் கைப்பையை கூட சுமக்க சத்தற்றவர்களாகப் மாறிப் போயிவிட்டார்கள்.தொலைநோக்கற்று சுறுங்கிப்போய்விட்டார்கள். மில் தொழிலை போல ஊரில் நசிந்துபோன சிறு தொழில்கள் ஏராளம்.

நான் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போது இந்த மில்லை ஒட்டிப்போகும் காட்டுக்கூடலூர் ரோட்டு வழியாகதான் தினமும் பள்ளிக்கு நடந்து போவேன்.அந்த ரோட்டில் புதன் கிழமை அன்று ஊர் சந்தை நடக்கும். அன்றைக்கு ரோட்டில் நடக்கமுடியாத அளவு மக்கள் நெரிசல் பிதுக்கிக் கொண்டு நிற்கும். இதே இடத்தில் வியாழன் அன்று மாட்டு சந்தையும் நடக்கும். இங்கே இரவு நேரங்களில் சீனிக்கிழங்கு,மரவல்லிக்கிழங்கு போன்ற வியபாரச் சந்தையும் நடக்கும்.வாரக் காய்கறி சந்தையில் நடக்கும் வாழைப்பழ ஏலம் ஊரில் மிகப் பிரசித்தம். ஒரு ரூபாய்க்கு, ஒரு சீப்பு பழம் ஏலத்தில் எடுக்கலாம். ஆனால் சமயம் வாய்க்கும் வரை காத்து நிற்க வேண்டும். பள்ளிக்கு போகும் போது அப்பா தினம் கொடுக்கும் 50பைசாவை வழைப்பழ ஏலத்திற்காக தனியாக சேர்த்து வைத்து காத்திருப்பேன். சந்தையில் ஏலம் எடுப்பது ஒரு கலை. அதில் ஒருவர் கைதேர்ந்து வர பல நாட்கள் பிடிக்கும்.
ஏல வியபாரி “அப்படியே போடு.. அஞ்சு ரூபா..யாருக்கு வேணும்..சும்மா லட்டு மாதிரி இருக்குப்பாரு..யாருக்கு வேணும் அலேக்கா அஞ்சு ரூபா” என்று மாட்டு வண்டியின் மேல் நின்று முதலில் பழ ஏலத்தை ஆரம்பிப்பார். நேரம் ஆகஆகதான் விலை குறையும்.பொழுது சாயசாய பழத்தின் எடை ஏறும். ஒளித்து வைத்திருந்த சீப்புகள் ஒவ்வொன்றாக வெளியே தலைக்காட்ட ஆரம்பிக்கும்.மக்களின் கூட்டம் நல்ல சீப்பு வரும் வரை வாயை பிளந்து, உயரே அண்ணாந்து பார்த்துக் கொண்டே அப்படியே நிற்கும்.
மறுபடியும் “இது அஞ்சு ரூபாக்கு பொறாதா?”என்று ஏலக்காரர் எதிர்க்கேள்வி கேட்டுக் கொண்டே “சரி,போடு..அப்படியே நாலு ரூபா ஐம்பது காசு ”என்பார்.அப்போதும் கூட்டம் அமைதிக் காக்கும். பழம் வாங்குவதற்காகமுக்கால் தூரத்திற்கு உயர்திய கைகள் அப்படியே பொறுமைக்காக்கும்.
“அதுக்கும் ஆகாதா? சரி,நாலார் ரூபா” என்றதும் கூட்டம் முந்திக்கொண்டு காசை நீட்டும். 4 ரூபாய் ஐம்பது காசு என்றாலும் நாலார் ரூபாய் என்றாலும் ஓரே விலைதான்.அவரத்தில் ’நெகா’’ புரியாமல் பலர் குழம்பிப்போவார்கள்.அதுதான் ஏலம் விடுபவனுக்கு வேண்டும். மக்களின் மதியை குழப்புவதில்தான் ஏல வியபாரத்தின் தந்திரம் இருக்கிறது.அதில் சுதாரிப்பவர்களுக்கு ஏலம் என்பது இன்பமான அனுபவம்.பிசகுபவர்களுக்கு கசப்பான அனுபவம். எனது ஏல அனுபவம் முழுக்க இன்பமயமானது. ஆற்றில் தன் ஒற்றைக்காலை தூக்கிக்கொண்டு மீன் வருகைக்காக காத்திருக்கும் செங்கல்நாரைப் போல நல்ல சீப்பு வரும் வரை அப்படியே செப்புச் சிலையாக நான் காத்திருப்பேன். ஊரில் பழ வியபாரம் என்பது சாப்பாட்டுக்கடை வியபாரம் போல.புதன் கிழமை நடக்கும் ஏலம் இல்லத்தரசிகளுக்கானது. வியாழன் கிழமை நடைபெறும் ஏலம் வியபாரிகளுக்கானது.வியாழன் அன்று கூடும் மாட்டு சந்தைக்கு மாடு பிடிக்க கிராமத்தில் இருந்து வரும் விவசாயிகள் யாரும் கிளப்புக் கடைக்குப் போய் சாப்பிடமாட்டார்கள்.அது வீண் செலவு என்பது அவர்களின் பொது அபிப்ராயம். சந்தையில் ஏலத்தில் விற்கும் வாழைப்பழத்தை வயிறுமுட்ட வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு,மாடு விற்ற காசை மடியில் முடிந்துக்கொண்டு அப்பாடாவென்று நடந்தே ஊர் போய் சேர்ந்துவிடுவார்கள்.
விற்பனை சந்தையில் மாட்டை பூசினார்போல் காட்ட மணிமுத்தாறு நதியில் இருக்கும் தொட்டியில் தரகர்கள் தண்ணியில் தவிட்டை கொட்டி மாட்டின் வயிறு முட்டமுட்ட வாயைப்பிளந்து உள்ளே ஊற்றுவார்கள்.இதை குடித்த மாடு அது நடக்கின்ற பாதை எல்லாம் கழிந்துபடி நடந்துபோகும்.இப்படி கழிந்தகொண்டு ஒரே தெருவில் ஓராயிரம் காளைகள் ஒரே நாளில் நடந்தால், அந்த சாலையின் கதி அதோகதிதான்.இந்த சாணத்தை தட்டுக்கூடையில் அள்ளிப்போய் விராட்டித்தட்டி காயவைத்து பிழப்பவர்களும் ஊரில் உண்டு. அப்படி போஜனம் நடத்தும் குடும்பத்துக் குழந்தைகள் அவற்றை தட்டுத்தட்டாக அள்ளிக்கொண்டு வீடுக்கு நடப்பார்கள். அந்தப் பிள்ளைகளை பார்க்கவே தலைவெறி கோலமாய் இருக்கும். நானும் பத்தாம் வகுப்பு வரும் வரை இப்படி சாணி அள்ளி இருக்கிறேன். இந்தச் சந்தையில் கிடைக்கும் சாணியையல்ல;நாங்கள் வீட்டில் வளர்த்த மாடின் சாணியை.

மாட்டுச்சந்தையில் தரகர்கள் கையில் துண்டை போர்த்திக் கொண்டு மாட்டை விலைபேசும் பாணியை பள்ளிப் பிள்ளைகளான நாங்கள் மெய்மறக்க பார்த்துக் கொண்டு நிற்போம்.மாடின் சுழியை வைத்து ஜாதகம் கணிப்பதில் எங்கள் தெருவில் மாவிடந்தல்காரர் ஒருவர் கில்லாடியாக இருந்தார். அவரால் மாடுச்சுழியால் ஏற்பட இருக்கும் நல்லது பொல்லதுகளை சொல்லிவிட முடியும் என்று ஊர் மக்கள் நம்பினார்கள். அவர் மாட்டின் பல் பார்த்து அதன் வயதைக் கணித்துவிடுவார். 2000ம் ஆண்டு வரை ஊரில் சந்தை தனியாகவும் மார்க்கெட் தனியாகவும் இருந்த்து.மார்க்கெட்டில் எப்போது வேண்டுமானாலும் போய் காய்கறி வாங்கலாம்.மார்க்கெட் பெரியக் கோயிலின் முன்பாக இருந்த இட்த்தில் இருந்த்து. அந்த இடம் கோயிலுக்கான நந்தவனத்தின் இடம் என்று கோயில் நிர்வாகம் மார்க்கெட்டை காலிசெய்ய சொல்லி நிர்பந்திக்க அந்த இடத்தை விட்டு மார்க்கெட் வாரச்சந்தை இடமான காட்டுகூடலூர் ரோட்டுக்கு இப்போது மாற்றமாகிவிட்டது.சரி, ஸ்டுடியோ கதைக்கு வருவோம்.

துரையின் ஸ்டுடியோ மணிமுத்தாறு பாலத்திற்கு அந்தப்புறம் இருந்தது.அதாவது வானொலி திடலில் இருந்து போகும் தெருவின் நேர் கடைசி முனையில் இருந்தது. பாலக்கரை பக்கம் இருந்த துரையின் ஸ்டுடியோ ரொம்ப சின்ன ஸ்டுடியோ. எனக்கு தெரிந்து அவருக்கும் கடை வருமானத்தைவிட வெளி ஆர்டர்கள் நிறைய வந்தன. ஸ்டுடியோவிற்குள்ளாகவே முடங்கிப்போய்விடாமல் ஓடியாடி வேலை செய்ய துரை தயாராக இருந்தார்.அதனால் கூப்பிட்டதும் மறுபேச்சு சொல்லாமல் வெளிவேலைக்கு வந்துவிடுவார். ஊரில் துரைதான் சகல அரசியல் பொதுக் கூட்டங்களுக்கு ஆஸ்தான போட்டோகிராஃபர். கட்சி பேதமின்றி எல்லா அரசியல் மேடைகளையும் அவர் அலங்கரிப்பார்.துரை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அடுத்தவர் கட்சி மேடைகளில் அதை அவர் காட்டிக் கொள்ளாமல் அடக்கத்துடன் நடந்துக் கொள்வதால் அவரை பலரும் விருப்பினர்.


அறிவாளயத்தில் நான் பொதுச்செயலாளர் அன்பழகனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட குரூப் போட்டோ துரை ஸ்டுடியோவில் ரெடியாகிவிட்டதாக ஒரு நாள் சைக்கிள் கடை பன்னீர்செல்வம் என்னிடம் சொன்னார். பன்னீர்செல்வம் ஒரு காலத்தில் காய்கறி மார்க்கெட்டில் சைக்கிள் கடை வைத்திருந்தவர்.பின் வியபாரம் நொடித்துப் போக, வெட்டி ஆபீஸர் ஆகிவிட்டார். கறுப்பு சிகப்பு கறைப் போட்ட வேட்டி சட்டையுடன் ஊரின் வடக்கே உள்ள, காந்திநகர் அவரது வீட்டிலிருந்து புறப்பட்டு ஊரின் கிழக்குக் கோடியான பெரியார்நகர் வரை சும்மாவே சுற்றிவிட்டு வீடு திரும்புவது பன்னீரின் வழக்கம். இந்த மாதிரியான பயணத்தில் பல கடைகளில் அவரது இடைத்தங்கல் நிகழும்.அதில் துரையின் கடையின் கீழ் இருந்த நகைப் பத்தர் கடையும் ஒன்று.அவர் போட்டோவை பற்றி சொன்னவுடன் எனக்கு அதை பார்க்கவேண்டும் போல் இருந்தது. உடனே துரை ஸ்டியோவுக்கு போய்விட்டேன். நான் போன நேரம் பார்த்து ஓனர் துரை கடையில் இல்லை. அவரது உதவியான்தான் இருந்தான். அவனிடன் எவ்வளவு விளக்கியும் பலன் எதுவும் இல்லை.சரி,உரிமையாளர் வரட்டும் என்று பல மணி நேரம் கடையில் உட்கார்ந்து இருந்தேன். முற்பகல் தாண்டி பிற்பகலும் வந்துவிட்டது.துரையை காணேம்.புகைப்படத்தின் ஆவல் பசியை அடக்கிவைத்திருந்தது.அதற்கும் அளவிருக்கிறது இல்லையா?அப்புறம் பசி அதன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்ட சமயத்தில் ஆடி அசைந்து துரை உள்ளே நுழந்தார்.

“என்னப்பா..என்ன வேணும்?” என்றார். விஷயத்தை விவரமாக சொன்னதும் “ஆமாம்..வந்த கப்பி எல்லாத்தையும் எல்லோருக்கும் பிரிச்சுக் கொடுத்துட்டேன்.உனக்கு தனியா வேணும்னா ஆர்டர் கொடுத்தா ரெண்டு நாள்ல பிரிண்ட் போட்டுத்தர்றேன்.ஆனா முழுக்காசயும் முன்ன கூட்டியே கொடுத்தாதான் பிரிண்ட் போட செளகர்யப்படும்.இப்படி பிரிண்ட் போட சொல்லிட்டு போறவங்க யாரும் வேலை முடிஞ்ச பின்னாடி திரும்ப வர்றதே இல்ல.நெறைய நஷ்டம் பட்டாச்சு.எவ்வளவு போட்டோ கிடக்கு பாரு..எடுத்துக் காட்டுடா அத” ”என தன் உதவியாளரிடம் துரை சொன்னார்.
அவனும் இட்டப் பணியை செய்வதுபோல அப்படி இப்படி தன் உடலை மட்டும் அசைந்தான்.ஆனால் எந்தப் படங்களையும் எடுத்துக் காட்டவே இல்லை.துரை,தன் காலம் பூராவும் இப்படி பலபேரிடம் ஏமாந்து போயிருப்பதென்னவோ உண்மைதான்.அதனால் அவரது சகல நஷ்டத்திற்கும் மூலக்கூறே நான்தான் என்பதைப்போல் அவர் என்னிடம் நடந்து கொண்டதை பொறுமையாக நான் கேட்டுக்கொண்டதற்கு முதல் காரணம் ,என் வயதுதான்.இந்தச் சின்ன வயதில் ஸ்டுடியோவுக்கு தனியாளாக வந்து யாரும் போட்டோ வாங்கமாட்டார்கள். இந்தப் பொடியன் காசுக் கொடுத்து போட்டோவாவது? வாங்குவதாவது என்று என்னைக் கழித்துக் கட்டவே அவர் அவ்வாறு நடந்துக் கொண்டார்.அதையும் மீறி நான் பணம் எவ்வளவு என்றதும் அவரது முகம் வெளிச்சமானது. காசை கொடுத்துவிட்டு மறுநாள் வருவதாக சொல்லிவிட்டு வந்தேன். சொன்னபடி நான் நடந்துகொண்டேன்.ஆனால் அவர் ,அவரது பேச்சைக்கூட கேட்கவில்லை.தினமும் ஒரு சாக்குப்போக்கு பேசினார்.இருந்தாலும் அவரை பகைத்துக் கொள்ளும் வயசில்லையே எனக்கு.காசையும் கொடுத்துவிட்டு ஏதோ கடன் நடையாய் நடப்பதுப் போல தினமும் நடையாய் நடந்தேன்.

90களில் பிற்பகுதி வரை ஒரு போட்டோவை கண்னில் பார்ப்பதென்றால் குதிரைக் கொம்பான காரியம். ஸ்டியோவில் உட்கார வைத்து, வெப்பத்தை உமிழும் சோடியம் லைட்டுகளை போட்டு, நம் தலையை அப்படி இப்படியுமாக அசைத்து, அவர்கள் நம்மை ஒரு போட்டோ எடுப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். இதற்கே ப்ளாக் அண்ட் ஒய்ட் படம்தான்.கலர் படமாக இருந்தால் பூந்தொட்டி பக்கத்திலோ, திரைச்சீலைகளில் வரையப்பட்ட பங்களாக்கள் பக்கத்திலோ, அல்லது புலி சிங்கம் பக்கத்திலோ நின்று சரியான வெளிச்சத்தில், சரியான தோற்றத்தில் ஒரு படம் எடுப்பதற்குள் நம்மை ஒருவழிப் படுத்திவிடுவார்கள்.அன்று டம்மி பீஸில் புட்லட்,டாக்ஸி எல்லாம் ஸ்டுடியோவிற்குள் நிற்கும். அவர்கள் மாடலாக கொடுக்கும் உடையை கொஞ்சமும் பொருத்தமில்லாமல் நாம் மாட்டிக் கொண்டு நின்றால், சற்றும் நம் இயல்பு நம்மீது பட்டுவிடாமல் ஒரு படத்தைதான் நமக்கு எடுத்துக் கொடுப்பார்கள். அவர்களின் உடை ரசனையே விநோதமாக இருக்கும். வருஷக் கணக்கில் தண்ணிப்படாமல் நாறும் கோட்டை உடுத்திக்கொண்டு எப்படி நாம் சந்தோஷமாக சிரிக்க முடியும் சொல்லுங்கள்? அப்படி பார்த்தால் நம் சங்கடத்தை கொஞ்சமும் வெளியேக் காட்டிக் கொள்ளாமல் காமிரா முன் சிரிப்பது கூட ஒரு பெரியக் கலைதான். சிவாஜி கணேசனையும் தாண்டி ’தம்’ ’கட்டி நம்மவர்கள் எப்படியெல்லாம் அந்தக்காலத்தில் நடித்திருக்கிறார்கள். நம் ஆட்களுக்கு கோட்டின் கப்பு வாடை எல்லாம் சப்பமேட்டர். எடுக்கப்போகின்ற போட்டோவின் சந்தோஷம்தான் முக்கியம். “இதெல்லாம் வேண்டாம்ப்பா”என்று வழத்தை மீறி நாம் படம் எடுக்க முயன்றால்,
“அப்புறம் படம் சரியா வரலன்னா எங்கள கேட்க்ககூடாதுங்க””என்று நம் முயற்சியை முளையிலே கிள்ளிவிடுவார்கள். ஆளாளுக்கு வாத்தியார் ஆகிவிட்டால் அவர்கள் பணி ஆட்டம் கண்டுவிடுமே? அவர்கள் சொல்லும் கட்டளைக்கு எல்லாம் அடி படிந்து நம் எடுத்துக் கொள்கின்ற படமே ஏதோ வேற்று கிரக வாசியைப்போலதான் இருக்கப்போகிறது. அவர்களின் சொல் மீறிவிட்டால்? வம்பே வேண்டாம்.நிச்சயம் அந்தப் படம் சிம்பன்ஸி மாதிரியோ,கொரிலா மாதியோதான் இருக்கும். அதற்கு பயந்தே அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் நாம் வந்துவிடுவோம். அதுதான் அவர்களுக்கும் வேண்டும். அதற்காகதான் இத்தனை பிரயத்தனம்.
அன்றைக்கு ஒரு போட்டோ என்பது இவ்வளவு அனுபவங்களை உள்ளடக்கியது.இன்று டிஜிட்டல் காமிராவை க்ளிக் என்றது அதன் குட்டித்திரையில் அதன் நல்லது கெட்டதுகளை அறிந்து கொள்ளமுடிகிறது.ஆனால் அன்று எக்ஸாம் பேப்பர் கைக்கு வரும்வரை ஒரு மாதிரி அடி வயிறு கலக்கிக் கொண்டு நிற்கும் இல்லையா?அதேபோல் நமது ஆவல் உள்ளே கிடந்து மனதைக் கலக்கிக் கொண்டிருக்கும். அன்றைக்கு இத்தனை சங்கடங்களுக்குப் பிறகு கிடைக்கும் பொருளில்தான் ஒரு சந்தோஷம் மறைந்து கொண்டிருந்தது. இன்று எல்லாமே வெளிப்படையாகிவிட்டன. இருட்டு என்பதே இல்லை.எல்லா பக்கங்களிலும் வெளிச்சம் தன் வேலையை பார்த்துவிட்டது.அதித வெளிச்சம் இன்பத்தின் பல நிறங்களைத் தின்றுவிட்டதுப்போல ஓர் உணர்வு.இன்று புதிர் என்பது சுத்தமாய் மறைந்தே போய்விட்டது. இன்றைக்கு அதனால்தானோ என்னவோ எல்லா பொருட்களும் நொடிக்கு நொடி கவர்ச்சி இழந்துவிடுகின்றன. நமது கால்களுக்கு அடியில் மறைவிடங்களே இல்லாத்தை போன்ற ஓர் உணர்வு உருவாகியிருக்கிறது. அன்று அறியாமையின் மறைவிடம் என்பது வாழ்வின் மகத்துவத்தின் இன்னொரு இடமாக இருந்தது.