Tuesday, August 24, 2010

நிறம் மங்காத கருப்பு வெள்ளை



எங்கள் ஊரில் இருந்து பென்னாடம் செல்லும் ரோட்டில் இருந்த பழையபோஸ்ட் ஆபிஸ் எதிர்புறம் துரை ஸ்டுடியோ என்ற பெயரில் ஒரு ஸ்டுடியோ இருந்தது.அதன் உரிமையாளர் பெயர்; துரை. பார்ப்பதற்கு துரை,கட்டையாகவும், குள்ளமாகவும் இருப்பார்.அசப்பில் அவர் ஒரு டி.பி.கஜேந்திரன்.என்ன.. கஜேந்திரன் கறுப்பு.இவர் கொஞ்சம் சிகப்பு. அவ்வளவுதான் வித்தியாசம். அவர் தினதோறும் காலையில் கடைக்கு வரும்போது நெற்றியில் விபூதிப் பட்டை,அதன் இடையில் சந்தனத் திட்டை,கழுத்தில் உத்திராட்சைக் கொட்டை என்று மங்களகரமாக வந்து கடையைத் திறப்பார்.

ஊரில் மிகப்பழைய ஸ்டுடியோவின் பெயர் பூபதி ஸ்டுடியோ.அது பாலக்கரை கடைவீதி இருந்தது.அதற்கு அடுத்த இடத்தில் சாரதி ஸ்டுடியோ இருந்தது.இந்தக் கடையின் உரிமையாளர் பக்கத்து ஊரான நெய்வேலிக்காரர். பூபதியிடம் இருந்து தொழில் கற்றவர்கள் பின் அங்கிருந்து வெளியேறி வந்து கெம்பு ஸ்டுடியோ,குவாலிட்டி ஸ்டுடியோ,ராமு ஸ்டுடியோ,ரவி ஸ்டுடியோ என பல ஸ்டுடியோக்களை ஊரில் ஆரம்பித்தார்கள். சாரதி ஸ்டுடியோ வேறு ஆளிடம் கைமாறி பின்னால் லைன் ஸ்டுடியோ என்று பெயர் மாற்றம் கண்டது.அக்கடையை ஒட்டியே கோல்டன் ஸ்டுடியோ என்ற பெயரில் பாய் ஒருவர் ஸ்டுடியோ வைத்திருந்தார்.ஒரு நாளும் அவர் படம் எடுத்து நான் கண் குளிரப் பார்த்ததில்லை.ஒப்புக்கு ஸ்டுடியோவை திறந்து வைத்துக் கொண்டு சும்மாவே உட்கார்ந்திருப்பார்.அவர் ஒரு கம்யூனிட்.கட்டிட உரிமையாளருக்கும் அவருக்கும் கோர்ட்டில் வழக்கு நடப்பதாகவும் அதனால் அவருக்கு வாடகைப் பிரச்னை இல்லை என்றும் ஊரில் பேசிக் கொண்டார்கள். இந்தக் கடைக்கு பக்கத்திலேயே பதினாறு வயதினிலே படத்தில் வரும் டாக்டரின் ஸ்டைலில் ஒரு டாக்டர் கிளினிக் வைத்திருந்தார்.அங்கேயும் நோயாளிகள் வந்து நான் கண்டதில்லை. அங்கே கம்பெளண்டராக வேலை பார்த்த பெண் எப்போதும் வீதியை வேடிக்கை பார்த்தபடி சும்மாவே உட்கார்ந்திருப்பார்.

ஸ்டுடியோ என்றால் கடைக்கு வெளியே பெரிய பெரிய சைஸ்ஸில் போட்டோக்களை மாட்டி வைப்பார்கள்.மரச்சட்டத்தை அடித்து கண்ணாடிப் போட்டு பிரேம் பண்ணித் தரும் ஆட்கள் ஸ்டுடியோவுக்கு வெளியிலேயே காத்திருப்பார்கள்.வாடிக்கையாளர்களின் வசதிக்காக சில ஸ்டுடியோக்களை அந்த மாதிரி ஆசாரிகளை வேலைக்கு அமர்த்திக் கொள்வதும் உண்டு. ஒவ்வொரு ஸ்டுடியோக்களின் முன்பும் அண்ணாதுரை,காமராஜர்,காந்தி,நேரு,இந்திராகாந்தி,எம்.ஜி.ஆர்.,கருணா நிதி,ஜெயலலிதா,ஸ்ரீதேவி,கமல்,ரஜினி என்று பழைய அரசியல், சினிமா ஸ்டார்களின் படங்களாக கடை முழுக்க நிறைந்திருக்கும். அதை தாண்டி அழகழகான குழந்தைகளின் படங்கள் நிறையவே இருக்கும்.அவைகளை முன்மாதிரியாக வைத்து தங்களின் பிள்ளைகளை பொதுமக்கள் படம் எடுத்துக் கொள்வார்கள்.எனக்கு வினவு தெரிய வந்தபோது லைன் ஸ்டுடியோவும் ஜெமினி படமனையும் புகழின் உச்சில் இருந்தன.லைன் அதன் பிரமாண்டத்தினால் பெயர் எடுத்தது. ஜெமினி அதன் நடவடிக்கைகளால் பெயர் எடுத்திருந்தது. ஜெமினியை கல்லூரி மாணவப் பருவத்தில் ரெங்கப்பிள்ளை என்பவர் ஆரம்பித்தார்.அவருக்கு சினிமா நண்பர்கள் அதிகமாக இருந்தார்கள்.பாடலாசிரியர் அறிவுமதி,இயக்குநர் தங்கர்பச்சான்,ஷெல்வன்,வ.கெளதமன் என்று பல பிரபலங்கள் ஸ்டுடியோவுக்கு அடிக்கடி வந்து போவதால் ஊரில் அவர் முக்கிய புள்ளியாக மதிக்கப்பட்டார். ஜெமினி படமனை ஜங்ஷன் ரோட்டில் உள்ள பஸ் ஸ்டாண்டின் அருகில் இருந்தது.லைன் ஸ்டுடியோ அதே ரோட்டின் கடைசி முனையான கடலூர் ரோட்டின் முடிவில் இருந்த அண்ணா சிலைக்கு அருகில் இருந்தது. இந்த ஸ்டியோவை ஒட்டி நூர்ஜஹான் என்ற பெயரில் பெரிய ரைஸ் மில் ஒன்றும் இருந்தது. இது பிரமாண்டமான ரைஸ்மில். அன்றாடம் அரைவைச் சத்தம் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் கேட்டுக்கொண்டே இருக்கும்.தீபாவளி மாதிரியான பண்டிகைகளில் ஜனங்களின் கூட்டம் தெரு வரைக்கும் வரிசைக்கட்டி நிற்கும்.ஊரின் பிரதான சந்தை நடக்கும் இடத்தையொட்டி இந்த மில் இருந்ததால் நகரத்தை சுற்றி உள்ள கிராமத்து ஜனம் முழுக்க இங்கேதான் ஜாகைப் போட்டு உட்கார்ந்து மாவு அரைப்பார்கள்.நெல் அவிப்பார்கள்.மில்லில் நெல் அவிக்கும் வாசம் வீதி எங்கும் நீக்கமற கமழும்.இவ்வளவு பிரபலமான மில் இன்றைக்கு சத்தம் குறைந்துபோய் ஈனச் சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கிறது.90களிக்கு பிறகு வந்த பெரும் தொழில்புரட்சியால் இந்த மாதிரியான அரைவை எந்திரத் தொழில் நசிந்தே போய்விட்டது. எல்லாம் பாக்கெட்டுகளின் உலகமான பிறகு, மக்கள் ரெடிமேட் பொருட்களின் அடிமைகளாக வடிவமைக்கப்பட்டுவிட்டார்கள். கடைகளுக்குப் போகையில் கைப்பையை கூட சுமக்க சத்தற்றவர்களாகப் மாறிப் போயிவிட்டார்கள்.தொலைநோக்கற்று சுறுங்கிப்போய்விட்டார்கள். மில் தொழிலை போல ஊரில் நசிந்துபோன சிறு தொழில்கள் ஏராளம்.

நான் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போது இந்த மில்லை ஒட்டிப்போகும் காட்டுக்கூடலூர் ரோட்டு வழியாகதான் தினமும் பள்ளிக்கு நடந்து போவேன்.அந்த ரோட்டில் புதன் கிழமை அன்று ஊர் சந்தை நடக்கும். அன்றைக்கு ரோட்டில் நடக்கமுடியாத அளவு மக்கள் நெரிசல் பிதுக்கிக் கொண்டு நிற்கும். இதே இடத்தில் வியாழன் அன்று மாட்டு சந்தையும் நடக்கும். இங்கே இரவு நேரங்களில் சீனிக்கிழங்கு,மரவல்லிக்கிழங்கு போன்ற வியபாரச் சந்தையும் நடக்கும்.வாரக் காய்கறி சந்தையில் நடக்கும் வாழைப்பழ ஏலம் ஊரில் மிகப் பிரசித்தம். ஒரு ரூபாய்க்கு, ஒரு சீப்பு பழம் ஏலத்தில் எடுக்கலாம். ஆனால் சமயம் வாய்க்கும் வரை காத்து நிற்க வேண்டும். பள்ளிக்கு போகும் போது அப்பா தினம் கொடுக்கும் 50பைசாவை வழைப்பழ ஏலத்திற்காக தனியாக சேர்த்து வைத்து காத்திருப்பேன். சந்தையில் ஏலம் எடுப்பது ஒரு கலை. அதில் ஒருவர் கைதேர்ந்து வர பல நாட்கள் பிடிக்கும்.
ஏல வியபாரி “அப்படியே போடு.. அஞ்சு ரூபா..யாருக்கு வேணும்..சும்மா லட்டு மாதிரி இருக்குப்பாரு..யாருக்கு வேணும் அலேக்கா அஞ்சு ரூபா” என்று மாட்டு வண்டியின் மேல் நின்று முதலில் பழ ஏலத்தை ஆரம்பிப்பார். நேரம் ஆகஆகதான் விலை குறையும்.பொழுது சாயசாய பழத்தின் எடை ஏறும். ஒளித்து வைத்திருந்த சீப்புகள் ஒவ்வொன்றாக வெளியே தலைக்காட்ட ஆரம்பிக்கும்.மக்களின் கூட்டம் நல்ல சீப்பு வரும் வரை வாயை பிளந்து, உயரே அண்ணாந்து பார்த்துக் கொண்டே அப்படியே நிற்கும்.
மறுபடியும் “இது அஞ்சு ரூபாக்கு பொறாதா?”என்று ஏலக்காரர் எதிர்க்கேள்வி கேட்டுக் கொண்டே “சரி,போடு..அப்படியே நாலு ரூபா ஐம்பது காசு ”என்பார்.அப்போதும் கூட்டம் அமைதிக் காக்கும். பழம் வாங்குவதற்காகமுக்கால் தூரத்திற்கு உயர்திய கைகள் அப்படியே பொறுமைக்காக்கும்.
“அதுக்கும் ஆகாதா? சரி,நாலார் ரூபா” என்றதும் கூட்டம் முந்திக்கொண்டு காசை நீட்டும். 4 ரூபாய் ஐம்பது காசு என்றாலும் நாலார் ரூபாய் என்றாலும் ஓரே விலைதான்.அவரத்தில் ’நெகா’’ புரியாமல் பலர் குழம்பிப்போவார்கள்.அதுதான் ஏலம் விடுபவனுக்கு வேண்டும். மக்களின் மதியை குழப்புவதில்தான் ஏல வியபாரத்தின் தந்திரம் இருக்கிறது.அதில் சுதாரிப்பவர்களுக்கு ஏலம் என்பது இன்பமான அனுபவம்.பிசகுபவர்களுக்கு கசப்பான அனுபவம். எனது ஏல அனுபவம் முழுக்க இன்பமயமானது. ஆற்றில் தன் ஒற்றைக்காலை தூக்கிக்கொண்டு மீன் வருகைக்காக காத்திருக்கும் செங்கல்நாரைப் போல நல்ல சீப்பு வரும் வரை அப்படியே செப்புச் சிலையாக நான் காத்திருப்பேன். ஊரில் பழ வியபாரம் என்பது சாப்பாட்டுக்கடை வியபாரம் போல.புதன் கிழமை நடக்கும் ஏலம் இல்லத்தரசிகளுக்கானது. வியாழன் கிழமை நடைபெறும் ஏலம் வியபாரிகளுக்கானது.வியாழன் அன்று கூடும் மாட்டு சந்தைக்கு மாடு பிடிக்க கிராமத்தில் இருந்து வரும் விவசாயிகள் யாரும் கிளப்புக் கடைக்குப் போய் சாப்பிடமாட்டார்கள்.அது வீண் செலவு என்பது அவர்களின் பொது அபிப்ராயம். சந்தையில் ஏலத்தில் விற்கும் வாழைப்பழத்தை வயிறுமுட்ட வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு,மாடு விற்ற காசை மடியில் முடிந்துக்கொண்டு அப்பாடாவென்று நடந்தே ஊர் போய் சேர்ந்துவிடுவார்கள்.
விற்பனை சந்தையில் மாட்டை பூசினார்போல் காட்ட மணிமுத்தாறு நதியில் இருக்கும் தொட்டியில் தரகர்கள் தண்ணியில் தவிட்டை கொட்டி மாட்டின் வயிறு முட்டமுட்ட வாயைப்பிளந்து உள்ளே ஊற்றுவார்கள்.இதை குடித்த மாடு அது நடக்கின்ற பாதை எல்லாம் கழிந்துபடி நடந்துபோகும்.இப்படி கழிந்தகொண்டு ஒரே தெருவில் ஓராயிரம் காளைகள் ஒரே நாளில் நடந்தால், அந்த சாலையின் கதி அதோகதிதான்.இந்த சாணத்தை தட்டுக்கூடையில் அள்ளிப்போய் விராட்டித்தட்டி காயவைத்து பிழப்பவர்களும் ஊரில் உண்டு. அப்படி போஜனம் நடத்தும் குடும்பத்துக் குழந்தைகள் அவற்றை தட்டுத்தட்டாக அள்ளிக்கொண்டு வீடுக்கு நடப்பார்கள். அந்தப் பிள்ளைகளை பார்க்கவே தலைவெறி கோலமாய் இருக்கும். நானும் பத்தாம் வகுப்பு வரும் வரை இப்படி சாணி அள்ளி இருக்கிறேன். இந்தச் சந்தையில் கிடைக்கும் சாணியையல்ல;நாங்கள் வீட்டில் வளர்த்த மாடின் சாணியை.

மாட்டுச்சந்தையில் தரகர்கள் கையில் துண்டை போர்த்திக் கொண்டு மாட்டை விலைபேசும் பாணியை பள்ளிப் பிள்ளைகளான நாங்கள் மெய்மறக்க பார்த்துக் கொண்டு நிற்போம்.மாடின் சுழியை வைத்து ஜாதகம் கணிப்பதில் எங்கள் தெருவில் மாவிடந்தல்காரர் ஒருவர் கில்லாடியாக இருந்தார். அவரால் மாடுச்சுழியால் ஏற்பட இருக்கும் நல்லது பொல்லதுகளை சொல்லிவிட முடியும் என்று ஊர் மக்கள் நம்பினார்கள். அவர் மாட்டின் பல் பார்த்து அதன் வயதைக் கணித்துவிடுவார். 2000ம் ஆண்டு வரை ஊரில் சந்தை தனியாகவும் மார்க்கெட் தனியாகவும் இருந்த்து.மார்க்கெட்டில் எப்போது வேண்டுமானாலும் போய் காய்கறி வாங்கலாம்.மார்க்கெட் பெரியக் கோயிலின் முன்பாக இருந்த இட்த்தில் இருந்த்து. அந்த இடம் கோயிலுக்கான நந்தவனத்தின் இடம் என்று கோயில் நிர்வாகம் மார்க்கெட்டை காலிசெய்ய சொல்லி நிர்பந்திக்க அந்த இடத்தை விட்டு மார்க்கெட் வாரச்சந்தை இடமான காட்டுகூடலூர் ரோட்டுக்கு இப்போது மாற்றமாகிவிட்டது.சரி, ஸ்டுடியோ கதைக்கு வருவோம்.

துரையின் ஸ்டுடியோ மணிமுத்தாறு பாலத்திற்கு அந்தப்புறம் இருந்தது.அதாவது வானொலி திடலில் இருந்து போகும் தெருவின் நேர் கடைசி முனையில் இருந்தது. பாலக்கரை பக்கம் இருந்த துரையின் ஸ்டுடியோ ரொம்ப சின்ன ஸ்டுடியோ. எனக்கு தெரிந்து அவருக்கும் கடை வருமானத்தைவிட வெளி ஆர்டர்கள் நிறைய வந்தன. ஸ்டுடியோவிற்குள்ளாகவே முடங்கிப்போய்விடாமல் ஓடியாடி வேலை செய்ய துரை தயாராக இருந்தார்.அதனால் கூப்பிட்டதும் மறுபேச்சு சொல்லாமல் வெளிவேலைக்கு வந்துவிடுவார். ஊரில் துரைதான் சகல அரசியல் பொதுக் கூட்டங்களுக்கு ஆஸ்தான போட்டோகிராஃபர். கட்சி பேதமின்றி எல்லா அரசியல் மேடைகளையும் அவர் அலங்கரிப்பார்.துரை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அடுத்தவர் கட்சி மேடைகளில் அதை அவர் காட்டிக் கொள்ளாமல் அடக்கத்துடன் நடந்துக் கொள்வதால் அவரை பலரும் விருப்பினர்.


அறிவாளயத்தில் நான் பொதுச்செயலாளர் அன்பழகனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட குரூப் போட்டோ துரை ஸ்டுடியோவில் ரெடியாகிவிட்டதாக ஒரு நாள் சைக்கிள் கடை பன்னீர்செல்வம் என்னிடம் சொன்னார். பன்னீர்செல்வம் ஒரு காலத்தில் காய்கறி மார்க்கெட்டில் சைக்கிள் கடை வைத்திருந்தவர்.பின் வியபாரம் நொடித்துப் போக, வெட்டி ஆபீஸர் ஆகிவிட்டார். கறுப்பு சிகப்பு கறைப் போட்ட வேட்டி சட்டையுடன் ஊரின் வடக்கே உள்ள, காந்திநகர் அவரது வீட்டிலிருந்து புறப்பட்டு ஊரின் கிழக்குக் கோடியான பெரியார்நகர் வரை சும்மாவே சுற்றிவிட்டு வீடு திரும்புவது பன்னீரின் வழக்கம். இந்த மாதிரியான பயணத்தில் பல கடைகளில் அவரது இடைத்தங்கல் நிகழும்.அதில் துரையின் கடையின் கீழ் இருந்த நகைப் பத்தர் கடையும் ஒன்று.அவர் போட்டோவை பற்றி சொன்னவுடன் எனக்கு அதை பார்க்கவேண்டும் போல் இருந்தது. உடனே துரை ஸ்டியோவுக்கு போய்விட்டேன். நான் போன நேரம் பார்த்து ஓனர் துரை கடையில் இல்லை. அவரது உதவியான்தான் இருந்தான். அவனிடன் எவ்வளவு விளக்கியும் பலன் எதுவும் இல்லை.சரி,உரிமையாளர் வரட்டும் என்று பல மணி நேரம் கடையில் உட்கார்ந்து இருந்தேன். முற்பகல் தாண்டி பிற்பகலும் வந்துவிட்டது.துரையை காணேம்.புகைப்படத்தின் ஆவல் பசியை அடக்கிவைத்திருந்தது.அதற்கும் அளவிருக்கிறது இல்லையா?அப்புறம் பசி அதன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்ட சமயத்தில் ஆடி அசைந்து துரை உள்ளே நுழந்தார்.

“என்னப்பா..என்ன வேணும்?” என்றார். விஷயத்தை விவரமாக சொன்னதும் “ஆமாம்..வந்த கப்பி எல்லாத்தையும் எல்லோருக்கும் பிரிச்சுக் கொடுத்துட்டேன்.உனக்கு தனியா வேணும்னா ஆர்டர் கொடுத்தா ரெண்டு நாள்ல பிரிண்ட் போட்டுத்தர்றேன்.ஆனா முழுக்காசயும் முன்ன கூட்டியே கொடுத்தாதான் பிரிண்ட் போட செளகர்யப்படும்.இப்படி பிரிண்ட் போட சொல்லிட்டு போறவங்க யாரும் வேலை முடிஞ்ச பின்னாடி திரும்ப வர்றதே இல்ல.நெறைய நஷ்டம் பட்டாச்சு.எவ்வளவு போட்டோ கிடக்கு பாரு..எடுத்துக் காட்டுடா அத” ”என தன் உதவியாளரிடம் துரை சொன்னார்.
அவனும் இட்டப் பணியை செய்வதுபோல அப்படி இப்படி தன் உடலை மட்டும் அசைந்தான்.ஆனால் எந்தப் படங்களையும் எடுத்துக் காட்டவே இல்லை.துரை,தன் காலம் பூராவும் இப்படி பலபேரிடம் ஏமாந்து போயிருப்பதென்னவோ உண்மைதான்.அதனால் அவரது சகல நஷ்டத்திற்கும் மூலக்கூறே நான்தான் என்பதைப்போல் அவர் என்னிடம் நடந்து கொண்டதை பொறுமையாக நான் கேட்டுக்கொண்டதற்கு முதல் காரணம் ,என் வயதுதான்.இந்தச் சின்ன வயதில் ஸ்டுடியோவுக்கு தனியாளாக வந்து யாரும் போட்டோ வாங்கமாட்டார்கள். இந்தப் பொடியன் காசுக் கொடுத்து போட்டோவாவது? வாங்குவதாவது என்று என்னைக் கழித்துக் கட்டவே அவர் அவ்வாறு நடந்துக் கொண்டார்.அதையும் மீறி நான் பணம் எவ்வளவு என்றதும் அவரது முகம் வெளிச்சமானது. காசை கொடுத்துவிட்டு மறுநாள் வருவதாக சொல்லிவிட்டு வந்தேன். சொன்னபடி நான் நடந்துகொண்டேன்.ஆனால் அவர் ,அவரது பேச்சைக்கூட கேட்கவில்லை.தினமும் ஒரு சாக்குப்போக்கு பேசினார்.இருந்தாலும் அவரை பகைத்துக் கொள்ளும் வயசில்லையே எனக்கு.காசையும் கொடுத்துவிட்டு ஏதோ கடன் நடையாய் நடப்பதுப் போல தினமும் நடையாய் நடந்தேன்.

90களில் பிற்பகுதி வரை ஒரு போட்டோவை கண்னில் பார்ப்பதென்றால் குதிரைக் கொம்பான காரியம். ஸ்டியோவில் உட்கார வைத்து, வெப்பத்தை உமிழும் சோடியம் லைட்டுகளை போட்டு, நம் தலையை அப்படி இப்படியுமாக அசைத்து, அவர்கள் நம்மை ஒரு போட்டோ எடுப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். இதற்கே ப்ளாக் அண்ட் ஒய்ட் படம்தான்.கலர் படமாக இருந்தால் பூந்தொட்டி பக்கத்திலோ, திரைச்சீலைகளில் வரையப்பட்ட பங்களாக்கள் பக்கத்திலோ, அல்லது புலி சிங்கம் பக்கத்திலோ நின்று சரியான வெளிச்சத்தில், சரியான தோற்றத்தில் ஒரு படம் எடுப்பதற்குள் நம்மை ஒருவழிப் படுத்திவிடுவார்கள்.அன்று டம்மி பீஸில் புட்லட்,டாக்ஸி எல்லாம் ஸ்டுடியோவிற்குள் நிற்கும். அவர்கள் மாடலாக கொடுக்கும் உடையை கொஞ்சமும் பொருத்தமில்லாமல் நாம் மாட்டிக் கொண்டு நின்றால், சற்றும் நம் இயல்பு நம்மீது பட்டுவிடாமல் ஒரு படத்தைதான் நமக்கு எடுத்துக் கொடுப்பார்கள். அவர்களின் உடை ரசனையே விநோதமாக இருக்கும். வருஷக் கணக்கில் தண்ணிப்படாமல் நாறும் கோட்டை உடுத்திக்கொண்டு எப்படி நாம் சந்தோஷமாக சிரிக்க முடியும் சொல்லுங்கள்? அப்படி பார்த்தால் நம் சங்கடத்தை கொஞ்சமும் வெளியேக் காட்டிக் கொள்ளாமல் காமிரா முன் சிரிப்பது கூட ஒரு பெரியக் கலைதான். சிவாஜி கணேசனையும் தாண்டி ’தம்’ ’கட்டி நம்மவர்கள் எப்படியெல்லாம் அந்தக்காலத்தில் நடித்திருக்கிறார்கள். நம் ஆட்களுக்கு கோட்டின் கப்பு வாடை எல்லாம் சப்பமேட்டர். எடுக்கப்போகின்ற போட்டோவின் சந்தோஷம்தான் முக்கியம். “இதெல்லாம் வேண்டாம்ப்பா”என்று வழத்தை மீறி நாம் படம் எடுக்க முயன்றால்,
“அப்புறம் படம் சரியா வரலன்னா எங்கள கேட்க்ககூடாதுங்க””என்று நம் முயற்சியை முளையிலே கிள்ளிவிடுவார்கள். ஆளாளுக்கு வாத்தியார் ஆகிவிட்டால் அவர்கள் பணி ஆட்டம் கண்டுவிடுமே? அவர்கள் சொல்லும் கட்டளைக்கு எல்லாம் அடி படிந்து நம் எடுத்துக் கொள்கின்ற படமே ஏதோ வேற்று கிரக வாசியைப்போலதான் இருக்கப்போகிறது. அவர்களின் சொல் மீறிவிட்டால்? வம்பே வேண்டாம்.நிச்சயம் அந்தப் படம் சிம்பன்ஸி மாதிரியோ,கொரிலா மாதியோதான் இருக்கும். அதற்கு பயந்தே அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் நாம் வந்துவிடுவோம். அதுதான் அவர்களுக்கும் வேண்டும். அதற்காகதான் இத்தனை பிரயத்தனம்.
அன்றைக்கு ஒரு போட்டோ என்பது இவ்வளவு அனுபவங்களை உள்ளடக்கியது.இன்று டிஜிட்டல் காமிராவை க்ளிக் என்றது அதன் குட்டித்திரையில் அதன் நல்லது கெட்டதுகளை அறிந்து கொள்ளமுடிகிறது.ஆனால் அன்று எக்ஸாம் பேப்பர் கைக்கு வரும்வரை ஒரு மாதிரி அடி வயிறு கலக்கிக் கொண்டு நிற்கும் இல்லையா?அதேபோல் நமது ஆவல் உள்ளே கிடந்து மனதைக் கலக்கிக் கொண்டிருக்கும். அன்றைக்கு இத்தனை சங்கடங்களுக்குப் பிறகு கிடைக்கும் பொருளில்தான் ஒரு சந்தோஷம் மறைந்து கொண்டிருந்தது. இன்று எல்லாமே வெளிப்படையாகிவிட்டன. இருட்டு என்பதே இல்லை.எல்லா பக்கங்களிலும் வெளிச்சம் தன் வேலையை பார்த்துவிட்டது.அதித வெளிச்சம் இன்பத்தின் பல நிறங்களைத் தின்றுவிட்டதுப்போல ஓர் உணர்வு.இன்று புதிர் என்பது சுத்தமாய் மறைந்தே போய்விட்டது. இன்றைக்கு அதனால்தானோ என்னவோ எல்லா பொருட்களும் நொடிக்கு நொடி கவர்ச்சி இழந்துவிடுகின்றன. நமது கால்களுக்கு அடியில் மறைவிடங்களே இல்லாத்தை போன்ற ஓர் உணர்வு உருவாகியிருக்கிறது. அன்று அறியாமையின் மறைவிடம் என்பது வாழ்வின் மகத்துவத்தின் இன்னொரு இடமாக இருந்தது.

Monday, August 2, 2010

குடும்பம் இல்லாத கருணாநிதி






பல காலமாக நான் எதிர்பார்த்திருந்த தி.மு.க.வின் உறுப்பினர் அட்டை என் கையில் வந்து சேர்ந்தது.அதில் பெரியார் முகத்தை தழுவிக்கொண்டு சற்று முன் வந்து எட்டிப் பார்க்கும் அண்ணாவின் முகம்,அதை ஒட்டியே வெளியே தள்ளி வந்து நிற்கும் கலைஞரின் உருவம் என்று ஒன்றின் மீது ஒன்று அடுக்கப்பட்டதை போல மூன்று தலைகள் ஓவியமாகப் பொறிக்கப்பட்டிருந்தது.அதன் கீழாக ஒரு அழகான இளைஞன் கழகக் கொடியை தூக்கிக் கொண்டு வீரநடை போடுவதைபோல காட்சியளிக்கும் அந்த அட்டையில் இரகு.ஹைதர்கான் என்று என் பெயர் அச்சடிக்கப்பட்டிருந்தது.அதை கண்டு தலைக்கால் புரியாமல் சந்தோஷத்தில் துடித்தேன்.அப்படியொரு இனம்புரியாத மகிழ்ச்சி உள்ளுக்குள். அப்பாவின் பெயரான இரகுமான்கானில் வரும் -ரஹிமான்கான் என்பதை என் முன்னெழுத்தின் கவர்ச்சிக்காக அப்படி நான் திருத்திக் கொண்டேன் என்பதுதான் உண்மை- முதல் இரு எழுத்தை இனிஷியலாக சேர்த்துக் கொண்டது கூட தி.மு.கழகப் பாதிப்பால்தான்.உறுப்பின அட்டையில் கழகக் கொடியை தூக்கிச் சுமக்கும் இளைஞனைப் போலவே எங்கள் தெருவிலும் ஒரு நபர் இருந்தார்.அவர் பெயர் கருணாநிதி.அவர் எப்போதும் சட்டை அணியாமல் சாதாரண நாலுமுழ காவிநிற வேட்டி மட்டுமே உடுத்துவார்.கழகக் கறை பாடர் போட்ட கட்சித் துண்டு கட்டாயம் மார்பில் புரளும். வேட்டி அணியாத நாளில் வெறும் அரை நிஜார் மட்டும் அணிந்திருப்பார். காக்கி கலரில் துப்புறவுத் தொழிலாளி மாதிரி இருக்கும் டவுசர் அது. அவரின் முகத்தோற்றம் அப்பாவித்தனத்திற்கான அத்தனை அம்சங்களையும் கொண்டிருந்தது. வாயை மீறி வெளியேத் துருத்திக் கொண்டு நிற்கும் எடுப்பான பல்.மொட்டை என்றும் சொல்ல முடியாமல் அடர்ந்த கேசம் என்றும் சொல்ல முடியாமல் அப்படியொரு ஹேர்ஸ்டைல் அவருக்கு. இதன் அளவு என்றைக்கும் மாறியதில்லை.ஓரே சீராக இருக்கும்.தினமும் திருநீரை எடுத்து நெற்றி நிறைய அப்பிக் கொள்வார்.முகத்தில் ஆரம்பித்து கெண்டைக் கால் வரை தேகம் முழுமைக்கும் படர்ந்து நிற்கும் தோல் சீக்கு அவரை பாடாய் படுத்திக் கொண்டிருந்தது.பேச்சு வாக்கில் அவ்வியாதி குறித்து அடிக்கடி அங்கலாய்த்துக் கொள்வார்.ஊருக்குள் சூதுவாது அறியாத ஆசாமி என பெயரெடுத்திருந்தார். பேச ஆரம்பித்தால் வளவளவென்று நிறுத்தாமல் உளறுவார்.ஏறக்குறைய புத்தி இடறியவர் போல வெகுளித் தனமான பேச்சாகவே அது இருக்கும்.குறைந்தது அவருக்கு முப்பத்தைந்து வயது மேல் இருக்கும்.தோற்றம் என்னவோ எப்போதும் ஐம்பதைதான் அடையாளப்படுத்தியது.இப்படி பார்ப்பதற்கே பரிதாபமாகக் காட்சியளிக்கும் கருணாநிதியை ஜில்லா முழுக்க உள்ள கழகத்துக்காரர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர்.

ஊரில் ஒரு பொதுக்கூட்டம் என்றால் கழகக் கொடியை பெரிய கம்பில் கட்டிக்கொண்டு ஊர்த் தெரு முழுக்க பொடிநடையாக நடந்தே பிரச்சார நோட்டீஸை விநியோகிப்பார்.சொல்லப்போனால் அவரொரு நடமாடும் கொடிக் கம்பம்.என் காலத்தில் வாழ்ந்த ஒரு கொடிகாத்தக் குமரன்.கருணாநிதி கூட்டம் நடக்க இருக்கும் இரண்டு நாட்களுக்கு முன்னாலேயே தனது பிரச்சாரப் பணியை ஆரம்பித்துவிடுவார். உச்ச ஸ்தாயியில் "இன்று மாலை சரியாக ஆறு மணியளவில்..விருத்தாசலம் வானொலித் திடலில்..கழகத்தின் போர் வாள்..இயக்கத்தின் இடிமுரசு..”என்று அவர் ஊர் முழுக்க முழங்கிக் கொணடே திரிவார். இப்படி பிரச்சாரம் பண்ண கருணாநிதிக்கு தனியாக கூலி என்று எதுவும் கட்சியினர் கொடுப்பதில்லை. அவரும் கேட்டதும் இல்லை.எல்லாம் கலைஞருக்காக அவர் செய்யும் ஊழியம்.அதில் வருமானம் பார்ப்பது அப்பத்தமான காரியம் என்பது கருணநிதியின் எண்ணம்.இவ்வாறு தெருத் தெருவாக கத்தி நா வறண்டவர்,ராமச்சந்திரனின் மளிகைக் கடையில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து களைப்பாருவார்.பின் உச்சு வெயிலை தணிக்க ஒரு கோலி சோடாவில் சிறிதளவு உப்புப்போட்டுப் குடிப்பார்.இதனால் தொண்டையின் கரகரப்பு சரியாகும்.அப்புறம் சில பீடித் துண்டுகளை வாங்கி இடுப்பு மடிப்பில் வேட்டியில் சுறுட்டிக் கொள்வார்.காசு இருந்தால் கொடுப்பார் இல்லை என்றால் அக்கெளண்டில் எழுதிக் கொள்ளச் சொல்வார்.கடையில் அப்படி எந்த அக்கெளண்டும் அவர் பெயரில் இருந்ததாக தெரியவில்லை.யாசகமாக கடை உரிமையாளர் ராமச்சந்திரன் கொடுப்பதை மற்றவர்கள் முன்பு அப்படி நாகரிகமாக சொல்லிக் கொள்வது கருணாநிதியின் சுபாவம். பீடியை பற்ற வைத்தக் கையோடு அப்படியே கடையில் கிடக்கும் அன்றைய தினம் முரசொலியை எடுத்து வாசிப்பார். வாசிப்பார் என்பதைவிட படம் பார்ப்பார்.அன்றைக்கு வெளியாகி இருக்கும் தலைவரின் உடன்பிறப்புக் கடிதத்தை பற்றி சீரியஸாக கேட்டு தெரிந்து வைத்துக் கொள்வார். கருணாநிதி ஒரு கழகக் கண்மணி என்பதற்கு சரியான உதாரணம். தனக்கென்று வீடு வாசல் இல்லாத தனிக்கட்டையான கருணாநிதிக்கு கழகம்தான் ஊர்.தலைவர்தான் உடமை.இப்படிபட்ட பலர் தி.மு.க.வை ஊர் ஊருக்கு தனித் தனியாளாக நின்று வளர்த்திருக்கிறார்கள்.ஆனால் இந்த உதிரிகளுக்கு இயக்க வரலாற்றில் ஒரு சின்ன இடமும் இதுவரை இருந்ததில்லை. இந்த லட்சிய இளைஞனுக்கு நோய் முற்றிபோய் ஒரு நாள் தெருவோரத்தில் இறந்துகிடந்தார்.தூக்கிப் போடகூட நாதியில்லாமல் சீமித்துக் கொண்டிருந்த பிணத்தை நகராட்சியின் குப்பை வண்டி வந்து தூக்கிக் கொண்டுபோய் புதைத்தது என்பது தனி வரலாறு.

கழக சார்பில் எங்களூர் வானொலித் திடலின் நடக்கும் அத்தனைப் பொதுக் கூட்டத்திற்கும் நான் ஆர்ஜராகிவிடுவேன். ஊர்ப் பாலத்திற்கு அந்தப் பக்கம்
தான் இந்தத் திடல் உள்ளது.இங்குதான் ஊருக்கு என்று பொதுவில் சங்கு பிடிக்கும் மிஷின் ஒன்றும் இருந்தது.பனிரெண்டே முக்கால்,மாலை நாலு மணி என்று முறை வைத்து தினமும் சங்கொலி எழுப்பப்படும். சங்கொலி கேட்டப் பிறகே ஒவ்வொரு நாளும் பிள்ளைகள் பள்ளியைவிட்டு களைவார்கள். சங்கு சத்தம்தான் ஊரில் சகலத்திற்கும் சமிக்ஞை.இச்சத்தம் மாதிரியே பள்ளிவாசலின் பாங்கு சத்தமும் மக்களிடம் ஒரு முக்கிய பங்கு வகித்தது. நல்லவேளை இன்று இப்படிப்பட்ட பழக்கங்கள்
ஊரில் இன்றில்லை.ஒருவேளை இருந்திருந்தால் இன்றைய கருணாநிதி ஆட்சியின் மின்வெட்டால் முதல் நாள் காலை சங்கு மதிய சங்கு எல்லாம் அடுத்த நாள் காலையில்தான் ஒலித்திருக்கும்.அந்த அளவுக்கு வெகு சிறப்பாக ஆற்காட்டார் தன் துறையை நிர்வகித்துக் கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் இடம் தராமல் இச் சம்பர்தாயங்கள் தொழில் நுட்ப வளர்ச்சியால் காலவதியாகப்பட்டு விட்டன.
மணிக்கூண்டு என்ற கலாச்சாரம் எல்லாம் அறிமுகமாவதற்கு முன்னால் கடைபிடிக்கப்பட்ட ஒரு வடிவம் இது. பழமையின் பிரதிநிதியான சங்கு,மிச்சமாக சொச்சமாக ஊரில் அன்று முழங்கிக் கொண்டிருந்தது.அதனால்தான் இந்த இடத்திற்கு வானொலித் திடல் எனும் பெயர் வந்திருக்கலாம்.திடலையொட்டி ராஜராஜேஸ்வரி டாக்கீஸ்,ஊரின் பிரதான பெரியக் கோயிலான பழமலைநாதர் ஆலயம் ,திடலை ஒட்டியே வாடகை கார் ஸ்டேண்ட்,மின் விளக்குகளின் அலங்காரக்கடை,வளையல்,குங்குமப் பொட்டு கடைகள் என அகண்டு பரப்பிக் கொண்டு நிற்கும் பெரியக் கடைவீதி இது. இங்குதான் சர்வக் கட்சியின் பொதுக்கூட்டங்களும் நடக்கும்.அ.தி.மு.க கூட்டமானால் எங்கள் கட்சியாட்கள் ஏதாவது கடையின் கூரைக்கு கீழ் நின்று இருட்டில் மறைந்தபடி கூட்டம் கேட்பார்கள்.எதிர்கட்சியின் எகத்தாளமானப் பேச்சுக்கு எதிரடிக் கொடுக்கவேண்டும் இல்லையா? அதற்குதான் இந்தத் தீவிர அவதானிப்பு.அ.தி.மு.க.வின் பொதுக்கூட்டம் நடந்து முடிந்த இரண்டு நாட்களுக்குள் பதிலடியாக எங்கள் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று சபையேறும்.வை.கோபால்சாமி,நாஞ்சில் மனோகரன்,சுப்புலட்சுமி ஜெகதீசன்,வெற்றிகொண்டான்,தஞ்சைக் கூத்தரசன்,நன்னிலம் நடராசன்,திருச்சி சிவா,தீப்பொறி ஆறுமுகம்,செஞ்சி ராமச்சந்திரன் இப்படி யாராவது சிறப்புப் பேச்சாளர்கள் வந்து வீர முழக்கம் இடுவார்கள்.வெற்றிகொண்டானின் எகத்தாளமான பேச்சும் நையாண்டி நடையும் இடையிடையே வெளிப்படும் இரட்டை அர்த்தங்களும் கூட்டத்தினரை கும்மாளமிட வைக்கும்.அந்தப் பேச்சின் சார்ஜ் எங்களுக்குள் இருந்து இறங்க பல நாட்கள் ஆகும்.

இப்படி கூட்டம் கேட்டுக் கேட்டு நானும் ஒரு பேச்சாளனாக என்னையும் அறியாமல் வளர்ந்து கொண்டிருந்தேன். பெரிய பேச்சாளர்களின் பேச்சில் உள்ள சாரத்தை மட்டும் அப்படியே உள்வாங்கி என் சொந்த சரக்கையும் சேர்த்து பேசும் அளவிற்கு நான் வளர்ந்திருந்தேன்.என்னை பேச்சாளனாக முன்னிறுத்திக் கொள்ள முயன்று கொண்டிருந்த சமயத்தில்தான் சட்டமன்ற தேர்தல் தலைக்காட்டியது.அப்போது குழந்தை தமிழரசன் தி.மு.க.வின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.ஒரு இடம் விடாமல் ஊர் முழுக்க கட்சிக்காக கத்து கத்து என்று நாய்க்கத்தலாய் ஒலிப்பெருக்கியில் அலறினேன்.பிரச்சாரத்தின் மூலம் எனக்கென்று ஒரு தனி அடையாளம் கிடைத்தது.வளரும் பேச்சாளராக நண்பர்கள் மத்தியில் உச்சுமுகரப்பட்டேன். என்னுடைய பேச்சுக்கும் நாலு ஆட்கள் நின்று சிலாகிப்பார்கள் என்ற தைரியத்தை ஊர் மக்கள் எனக்கு உருவாக்கிக் கொடுத்து அழகு பார்த்தார்கள் என்றுதான் இன்றைக்கு சொல்லத் தோன்றுகிறது. சட்டமன்றம் முடிந்ததும் நாடாளுமன்றத் தேர்தல்.இதில் எழுத்தாளர் இமையத்தின் அண்ணன் வெ.கணேசன் நிறுத்தப்பட்டார்.மைக் பிடித்தவன் வாய் சும்மா இருக்கும்? லொங்கு லொங்கு என்று வண்டிக்கட்டி கொண்டு சுற்றினேன்.
இந்தப் பிரச்சாரத்தையெல்லாம் விட நகரமன்றத் தேர்தலில்தான் ஜகஜோதியான என் பிரச்சாரம் சூடுபிடித்தது.நகரமன்றத் தலைவராக பூக்கடை இராசாங்கம் நிறுத்தப்பட்டார்.எங்கள் வார்டில் பூண்டுக்கடை இராமலிங்கம் கவுன்சிலராக நிறுத்தப்பட்டார். இராமலிங்கம் முதலியார் வகுப்பை சார்ந்தவர் என்பதால் சீட்டுக் கிடைத்ததாக கட்சிக்காரர்கள் பொடி வைத்துப் பேசிக்கொண்டார்கள்.எனக்கு இராமலிங்கம் உறவு முறையில் சொந்தமில்லை.ஆனாலும் எங்கள் குடும்ப அளவில் நெருங்கியவர்.வீட்டு மளிகை சாமான்கள் எல்லாம் மாத அக்கெளண்டில் கொடுத்து உதவக்கூடியவர்.அதோடு ஊர் வந்தப் புதுசில் அவரது வீட்டில்தான் முதன்முதலில் நாங்கள் வாடகைக்குக் குடியிருந்தோம் என்று அம்மா சொல்லி நான் பலதரம் கேட்டதுண்டு. அவரை மாமா என உறவுமுறை வைத்துதான் என் அண்ணன் தம்பி உட்பட வீட்டில் எல்லோரும் அழைப்போம். இதையெல்லாவற்றையும் காட்டிலும் அவர் தி.மு.க.வின் வேட்பாளர்.அவரை ஜெயிக்க வைப்பது என் தலையாகிய கடமையல்லவா?
தேர்தல் சூடு பிடித்தது.இராமலிங்கமே என் பிரச்சாரத்தால்தான் வெற்றிபெறப் போகிறோம் என்று நம்பினார்.தினமும் காலை என் வீட்டு வாசலுக்கு ஆட்டோ வந்துவிடும்.பல் கூடத் துலக்காமல் வண்டியில் ஏறி மைக்கை பிடித்தால் மீண்டும் ஆட்டோவை விட்டு நான் இறங்க இரவாகிவிடும்.வார்டில் ஒரு இடம் தப்பாது.ஒண்டு ஒடிசலான தெருவுக்குள் கூட புகுந்து புகுந்து காட்டுக் கத்தலாய் கத்துவேன்.எனது பிரச்சாரத்தின் தீவிரத்தை பார்த்த பக்கத்து வார்டு கட்சி வேட்பாளர்கள் தனக்கும் பிரச்சாரம் பண்ணச் சொல்லி வேண்டுகோள் விடுத்தார்கள். எங்கள் 12வது வார்டில் இராமலிங்கம் ஜெயிப்பது உறுதியென்றானபோது உள்ளே புகுந்தார் சுயேட்சை உறுப்பினரான ஏக் பாய்.இவரது பெயர் ஷேக் பாய்,ஆனால் பேச்சுவாக்கில் மருவி இப்படியாகிவிட்டது.அவர்,தெருவில் தவணை முறையில் வீட்டுக்கு வீடு சீட்டுப் பிடிப்பவர் என்பதால் ஜெயிக்க அதிகம் வாய்ப்பிருப்பதாக வார்டு மக்கள் பேசிக்கொண்டார்கள்.அவருக்கு ஆதரவாக பிரச்சாரக் களத்தில் குதித்தார் வின்சென்ட் ராஜ்குமார் என்னும் இளைஞர் . இன்று மதுரையில் எவிடென்ஸ் என்ற மனித உரிமை அமைப்பை நடத்திக்கிக் கொண்டிருப்பவர் இவர்தான்.கதிர் என தன்பெயரை இப்போது மாற்றிக்கொண்டுவிட்டார் என்று பிறகுதான் அறிந்தேன்.அவரது பிரச்சாரத்தையும் தாண்டி சூடுபிடித்தது எங்களின் பிரச்சாரம். அணல் பறக்கும் கருத்து மோதல்கள் முடிந்து இராமலிங்கம் ஒருவழியாக ஜெயித்துவிட்டார்.ஆயிர சரவெடி,பண்டல் பண்டலான பட்டசுகள் வெடிக்க அவரை வீடு வரை தூக்கிச் சுமந்து கொண்டு வந்து இறக்கினோம்.அன்றைக்கு எல்லோருக்கும் கரம்கூப்பி நன்றி சொன்ன கையோடு இராமலிங்கம் நெடிஞ்சான் கிடையாக என் கால்களில் விழுந்து வணங்கினார்.அவரது நா தழுதழுத்தது.குரல் நடுங்கியது.உணர்ச்சிப் பெருக்கில் அவர் காணப்பட்டார்.அவரது இந்தச் செய்கைதான் என் பிரச்சாரத்திற்கும் மேடைபேச்சிற்கும் கிடைத்த வெளிப்படையான முதல் அங்கீகாரம்.

Tuesday, July 27, 2010

எனக்கு தெரிந்த மெட்ராஸ்








மெட்ராஸ் என்றதும் உடனே மனதில் தோன்றும் உருவம் என் அப்பாவினுடையது.அவர் ஓர் உடல் உழைப்பாளி.தனது தொழிலுக்கான உபகரணங்களைக் கொள்முதல் செய்ய அவர் அடிக்கடி வந்துபோகும் ஊர்தான் மெட்ராஸ்.அப்படி அவர் தொழில் சம்பந்தமாக மெட்ராஸ் வர நேர்ந்தால் வீடு திரும்ப இரண்டு இரவுகள் ஆகும்.அவரின் தனிமையை நாங்கள் உணராமல் இருக்க போகும்போது எனக்கு கிஸ்தி கொடுத்துவிட்டுப் போவார்.மெட்ராஸ் பயணத்திற்கு அப்பா எப்போதும் தேர்ந்தெடுக்கும் நேரம் நள்ளிரவு.இரவு முழுக்க பயணம் பண்ணிவிட்டு அதிகாலையில் தலைநகரம் வந்து தன் வேலைகளை முடித்துக் கொண்டு மறுநாள் இரவு வீடு திரும்புவார்.அப்பா வீட்டிற்குள் நுழையும் போது பிராந்திவாடை நான் போர்த்தி இருக்கும் போர்வையையும் தாண்டி உள்ளே இறங்கும்.சென்னை போகும் போதெல்லாம் அப்பா குடித்துவிட்டு வீடு வந்தாலும் அம்மா உட்பட குடும்பத்தினர் அனைவரும் அவர் மெட்ராஸ் செல்வதை விரும்பினோம்.

அப்பா,வெளியூர் எங்கு சென்று வந்தாலும் வாய்க்கு ருசியான ஸ்வீட் பாக்ஸ்களை பெட்டி பெட்டியாக வாங்கி வருவார்.மெட்ராஸ் பயணம் என்றால் பழவகைகள் பை முழுக்க கனமாய் கனக்கும்.இரவிலேயே சிறுநீர் கழிக்க எழுவது மாதிரி எழுந்து யாருக்கும் தெரியாமல் அப்பா வாங்கிவந்திருக்கும் இனிப்புப் பெட்டிகளைப் பிரித்து தனியாகக் கொஞ்சம் எடுத்து வைத்துவிட்டு உறங்கி விடுவேன்.இப்படி திருடும்போது கவனமாக எல்லா பெட்டிகளிலும் ஒன்று மேனிக்கு லவட்டினால் இனிப்பு குறைந்திருப்பது தெரியாது என்பது ஐயாவின் ஐடியா.திருட்டும் அவ்வழியே நடக்கும்.வாங்கி வந்த இனிப்புப் பண்டங்களை மறுநாள் காலை உட்கார்ந்து தனித் தனியாக பங்கு போடுவார் அப்பா.பங்கில் ஒன்று வீட்டுக்கு.மற்றதெல்லாம் தன் நண்பர்களின் வீட்டுக்கு கொடுக்கச் சொல்லி எங்களிடம் கொடுத்தனுப்புவார்.அப்பா இன்றுவரை தன் வீட்டிற்கு மட்டும் என்று எந்தப் பொருளையும் வாங்கி வந்ததில்லை.அவரது சுபாவம் அப்படி.சம்பாத்தியத்தை சாப்பிட்டுப் பார்த்தே சாகவேண்டும் என்பது அவரது கொள்கை.அம்மாவுக்கு ஸ்வெட்டர் வாங்கினாலும் அதே தோற்றத்தில் பையில் மூன்று நான்கு இருக்கும்.அவை விடிந்ததும் வேறு வேறு வீட்டுக்குப் போய்விடும்.தானத் தம்பட்டம் அடிப்பதில் தாராள மனம் உள்ளவர் அப்பா.பின்னால் இதனால் தம்பிடு காசிற்கு வழியில்லாமல் குடும்பம் அழிந்தது தனிக் கதை.

அப்பாவின் தொழில் சார்ந்த பயணத்தின்போது அடம்பிடித்து அவருடன் ஒருமுறை மெட்ராஸுக்கு வந்து சேர்ந்தேன்.அதுவே எனக்கு முதல் மெட்ராஸ் பயணம்.அன்று இன்றுள்ளதைப் போல தங்கநாற்கர சாலை வசதியெல்லாம் கிடையாது.இரண்டு பேருந்துகள் மட்டுமே வந்துபோகின்ற அளவுக்கான சாலை வசதிகள்தான்.விழுப்புரத்தைத் தாண்டிவிட்டால் பேருந்துகள் எல்லாம் ஆமைநடை போடும்.அவ்வளவு வாகன நெரிசல்.திண்டிவனம் பேருந்து நிலையத்திற்குப் போவதற்கு முன் ஒரு பாலத்திற்கு அடியில் புகுந்து பேருந்து சென்றது.நல்ல மழைக்காலம் என்பதால் பேருந்தின் பாதியளவிற்கு மழைத் தண்ணீர் உயர்ந்து நின்றது.அந்தப் பாலம் இன்று இல்லை.பயணத்தின் போது மேல்மருவத்தூர் தாண்டி ஒரு லாரி தலைகீழாய் கவிழ்ந்து உருண்டதை நேருக்கு நேராய் பார்த்தேன்.பஸ்ஸில் பரிதாபப்பட்டுக்கொண்டே பலர் பயணித்தார்களே ஒழிய யாரும் வாகனத்தை நிறுத்த சொல்லவில்லை. லாரி உருண்ட வேகத்தில் இருவர் உள்ளிருந்து ரத்தம் வழிந்த முகத்தோடு வெளியே தவழ்ந்து தவழ்ந்து வந்தார்னர்.இவை எல்லாம் மின்னல் வேகக் காட்சியாக நடந்தேறியது.ஒருவழியாக மெட்ராஸுக்குள் பஸ் புகுந்தது.எனக்கு அண்ணாசாலையில் இருக்கும் மேம்பாலத்தைப் பார்க்கப் பார்க்க பிரமிப்பாக இருந்தது.இரண்டு புறங்களிலும் கம்பீரமாக குதிரையின் லகானைப் பிடித்துக்கொண்டு வீரர்கள் நிற்பதும்,அவர்களிடம் இருந்து திமிறிக்கொண்டு குதிரை துள்ளுவதுமான காட்சியைக் காணவே கிளர்ச்சியாக இருந்தது.அச்சிலை கிண்டி ரேஸ் கோர்ஸ் மூடப்பட்டதன் சின்னமாக எம்.ஜி.ஆர்.திறந்ததாக அப்பா அதற்கு அர்த்தம் சொன்னார்.ஆனால் எனக்கெதுவும் புரியவில்லை.அண்ணா மேம்பாலத்திற்கு அடியில் பேருந்துகள் நுழைந்து நுழைந்து போவதை பஸ்ஸின் ஜன்னல் வழியே அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.அந்தக் காலத்தில் மெட்ராஸ் மத்திய பேருந்து நிலையம் பாரிமுனையில்தான் இருந்தது.அங்குள்ள எழிலகம்,அப்புறம் நீதி மன்றம்,அர்மீனியன் தெருவில் உள்ள சர்ச்,பூக்கடை ஒட்டி இருந்த கடைவீதி என பலவற்றைப் பார்த்த ஞாபகம் இன்னும் நீரடியில் உருளும் கூழாங்கல்லாய் மனதில் கிடந்து உருளுகிறது.பகல் முழுக்க தன் வேலைகளுக்கான சாமான்களை தேடித்தேடி வாங்கி அப்பா,இரவு எட்டு மணிவாக்கில் பாரிஸ் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தார்.விருத்தாசலம் என்ற பெயர் பலகை பொறித்த தந்தைபெரியார் வண்டியில் என்னை தனியாக உட்கார வைத்துவிட்டு, பக்கத்திலேயே இருந்த பிராந்திக்கடைக்குள் புகுந்துகொண்டார்.அன்றைக்கு இன்றுள்ளதைப் போல மாடர்ன் பஸ்கள் எல்லாம் கிடையாது.பேருந்தின் உள்ளே நுழைந்தாலே வாந்தியும் பேதியுமாக இருக்கும்.குறைந்தது எங்கள் ஊருக்குப் பயணநேரம் பத்து மணி நேரம் ஆகும்.பயணத்தில் ஏகப்பட்ட இன்னல்கள் வேறு. பேருந்தின் புகை பொத்துக்கொண்டு இருக்கை மீதாக எழும்பும்.இப்படியான வசதிகள் கொண்ட பேருந்துகள்தான் அன்றைக்கு ஓடின.கும்பகோணம் திருவள்ளுவர் பேருந்து என்றால் அப்பா ஏறவே மாட்டார்.காரணம்;கூடுதல் கட்டணம்.அதோடு அந்த டிப்போ வண்டி ஒழுங்காய் ஊர்போய்ச் சேராது என்ற கற்பிதமும் அன்று நிலவியது.நான் தட்டுமுட்டு சாமான்கள் நிறைந்த பைகளுடன் பேருந்திற்குள் தவியாய் தவித்தேன்.அவர் வாங்கிக் கொடுத்துவிட்டுப் போன மிக்ஸர் பொட்டலம் தீர்ந்த பிறகும் அவர் வந்தபாடில்லை.டிரைவர் வண்டியை ஸ்டார்ட் பண்ணி கொஞ்ச நேரம் ஆடவிட்டபடி இருக்க,வண்டியின் உள்ளே அப்பா புகுந்தார்.அதோடு கண்ணயர்ந்தவன்தான், ஊர் வந்த
பிறகுதான் விழித்தேன்.

விவரம் அறியாத வயதில் அப்பாவோடு மெட்ராஸ் வந்து போன பிறகு அண்ணனின் நண்பன் ஒருவன் கிண்டி ஐ.டி.ஐ.யில் படிப்பதாக அறிந்து அவனைப் பார்க்க நானும் அண்ணனும் மெட்ராஸ் வந்தோம்.அப்போதும் இதற்கு மெட்ராஸ் என்றே பெயர்.கிண்டி அரசு ஐ.டி.ஐ.யின் மொட்டை மாடியில் நிலா வெளிச்சம் முகத்தில் அப்ப அப்படியே ஓர் இரவு முழுக்க படுத்துக்கிடந்தோம்.பக்கத்தில் சதசதவென்று சத்தம் கேட்டு எழுந்த எனக்கு ஒரே அதிர்ச்சி.மாடி மேலிருந்து நின்றமேனிக்கு ஒரு மாணவன் கீழே மூத்திரம் பெய்துகொண்டிருந்தான்.அப்போதுதான் மாடி முழுக்க மூத்திரவாடை அப்பிக்கிடப்பதை உணர்ந்தேன். மூக்கைப் பிடித்துக் கொண்டு உறங்கியவன் விடியும்வரை நான் எழவே இல்லை.காலையில் எழுந்து புதியதாக வாங்கி வந்த பேஸ்ட் பிரெஷ்ஷை பாத் ரூமுக்கு எடுத்துக் கொண்டு போகும் வழியில் குறுக்கே புகுந்த தடியன் ஒருவன் “என்னோட பிரெஷ்ஷ நீ எடுத்துகிட்டியா?”என்று லடக்கென என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டான்.என் பொருளை தன்னுடையது என ஒருவன் ஏமாற்றிப் பிடுங்கிக் கொண்டதை என்னால் ஜீரணிக்க முடியாமல் வெதும்பினேன். அதை ஒரு பெரிய விஷயமாக யாருமே எடுத்துக் கொள்ளவில்லை.அவதி அவதியாகக் குளித்துவிட்டு நானும் அண்ணனும் அங்கிருந்து முதலில் வெளியேறினோம்.
மாலை வரை மெட்ராஸில் கண்டமேனிக்கு கால்கள் உளைய சுற்றினோம்.சுற்றிவிட்டு பாரிஸ் பேருந்து நிலையம் வரும் வழியில் உள்ள தெருவோர பஜாரில் ஏதோ ஒரு பொருளை நான் பார்க்க,மனம் கொஞ்சம் அலைபாய்ந்து.அருகில் போய் விலை விசாரித்தேன்.கடைக்காரன் முதலில் கையில் வாங்கிப் பார்க்குமாறு சொல்ல,நானும் ஆர்வமிகுதியில் கையில் வாங்கிக் கொண்டேன். பிறகு அவன் சொன்ன விலை அதிகம் என உணர்ந்ததால் வேண்டாமென்று திருப்பிக் கொடுத்தால் பொருளை வாங்க மறுக்கிறான். “எவ்வளவுக்கு வேண்டும்னு சொல்லுங்க குறைச்சுக் கொடுக்குறேன்”என்றான்.அவன் விலையை அடிமட்டமாகக் குறைத்தாலும் எங்களிடம் வாங்க காசில்லை.ஊர் திரும்ப மட்டுமே கையில் காசை இருக்கிப் பிடித்திருந்தோம். முயல் பிடிக்குற நாயை மூஞ்சப் பார்த்தாலே தெரியும் என்று எங்களூரில் ஒரு சொலவடை உண்டு.அதேபோல் எங்களிடம் பணமில்லை என்பதை அறிந்த கடைக்காரன் அசிங்கமாக ஒருமையில் பேச, அண்ணனும் கொஞ்சம் குரலை உயர்த்த, இடம் கலவரக் கோலம் மூண்டுவிட்டது.பக்கத்து கடைக்காரர்கள் எல்லோரும் ரவுடிகளைப்போல ஒன்றாக சேர்ந்துகொண்டு எங்களை வம்புக்கு அழைப்பது போல் கேலி பேசினார்கள்.எனக்கு அழுகை வந்துவிட்டது.ஒருவழியாக அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அங்கிருந்து வெளியேறினோம். வண்டி பிடித்து ஊர்த் திரும்பும் வரை எங்கள் அள்ளு எங்கள் கையில் இல்லை.

இதற்கப்புறம் நான் சென்னைக்கு வந்தது 1994ம் ஆண்டு.அப்போது நான் தி.மு.க.வின் தொண்டனாக இருந்தேன்.இன்னும் சரியாகச் சொன்னால் கலைஞரின் தீவிர வெறியன்.கலைஞரை என் வீட்டில் யாராவது கருணநிதி என்று பெயர் சொல்லி அழைத்தால் வீடே ரெண்டுபட்டு போகும்.அவர்களை அடிக்கவும் தயங்காது என் கைகள்.ஓட்டுப் போடக்கூட வயது வராத பருவத்தில் கலைஞருக்காக கள்ளவோட்டு போடவும் நான் தயங்கியவனில்லை.எங்கள் தெருவில் ஒரு நாடார் மளிகைக் கடை இருந்தது.அதன் உரிமையாளரின் பெயர் ராமச்சந்திரன்.அவர் ஒரு தி.மு.கழகத்துக்காரர்.எங்கள் 12வார்டில் அவரைத் தெரியாமல் யாரும் கட்சியில் இருப்பது அரிது. அதோடு எம்.செல்வராஜ் அளவுக்கு நேரடி பழக்கம் கொண்டவர்.எம்.செல்வராஜ் அண்ணா காலத்து எங்களூர் தி.மு.க.எம்.எல்.ஏ.அதோடு சாகும் வரை தி.மு.கழகத்தின் தலைமைக்கழக அமைப்பு செயலாளராக பதவிவகித்தவர். ராமச்சந்திரனின் மளிகைக் கடைக்கு தினம் மாலையில் போய் உட்கார்ந்துவிடுவேன். அவரிடம் தி.மு.க.வின் உறுப்பினர் அட்டை ஒன்று கேட்டிருந்தேன்.அது கிடைத்துவிட்டால் ஊரையே உண்டு இல்லாமல் ஆக்கிவிடலாம் என்பது அப்போது என் எண்ணம்.அதனுடன் கை அகலத்திற்கு கறைபோட்ட தி.மு.க.வின் துண்டு ஒன்றையும் கேட்டிருந்தேன்.துண்டை எம்.எஸ்.வீட்டிற்குப் போகும் போது வாங்கி வந்து தருவதாக உறுதியளித்திருந்தார் அவர்.அவற்றைப் பெற தினமும் என்னையும் அறியாமல் அவர்கடையை நோக்கி என் கால்கள் நடக்க ஆரம்பித்துவிடும்.சில நாட்களில் அவ்ர் கடைக்கு நான் வழக்கத்திற்கு மாறாக காலையிலேயே போய்விடுவதும் உண்டு. அவர் வாங்கிக் கொடுக்கப்போகிற துண்டிற்காகவும் உறுப்பினர் அட்டைக்காகவும் பல ஏவல் வேலைகள் புரிந்திருக்கிறேன். அவர் சைக்கிளில் மார்கெட்டிலிருந்து தன் கடைக்கு ஏற்றிவரும் காய்கறி மூட்டைகளை பொறுப்பாய் இறக்கி வைத்து அவருக்கு பணிசெய்வேன். எந்த வேலையை செய்தாலும் பரவாயில்லை, அவரின் மனதில் இடம்பிடித்து ஒரு துண்டும் உறுப்பினர் அட்டையையும் வாங்கிவிட வேண்டுமென கங்கணம் கட்டி பலநாள் வேலை பார்த்தேன். அவரும் என் ஆர்வத்தை புரிந்துகொண்டு எனக்கு ஒரு வாய்ப்பை நல்கினார்.“நாளைக்கு தி.மு.க.வில் புதியதாக இணைய மெட்ராஸுக்கு இரண்டு வண்டியில் எ.எஸ்.தலைமையில் ஆட்கள் போகிறார்கள்.நீயும் போறீயா?”என்றார்.கரும்பு தின்ன கூலியா?உடனே கிளம்பிவிட்டேன்.வண்டியில் வரும் போது மனம் முழுக்க ஒரே ஆசைதான் இருந்தது.அது எப்படியாவது கலைஞருடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்வது என்ற ஆசை.நினைத்ததைப் போன்றே வண்டி அறிவாலயத்தை வந்தடைந்தது.முற்பகல் இருக்கும்.“இப்போதுதான் தலைவர் புறப்பட்டார்.கொஞ்சம் முன்கூட்டி வந்திருக்கக் கூடாதா?இனி மாலை ஆறு மணிக்குதான் வருவார்.அதுவரை எங்காவது போய் சுற்றிப்பார்த்துவிட்டு வாருங்கள்”என்று கழக அலுவலகத்திற்குள்ளிருந்து வெள்ளை வேட்டியும் சட்டையுமாக வந்த ஒரு மெலிந்துபோன உருவம் எங்களிடம் சொன்னது.அவர்தான் எம்.செல்வராஜ் என்பது பிறகு அறிந்துகொண்டேன். ஊரைச் சுற்றி பார்க்க எனக்கு மனமில்லை.அறிவாலயத்தின் முன்னும் பின்னுமாக சுற்றிக்கொண்டிருந்தேன்.அங்கே சன் டி.வி.யின் தொகுப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் ஷூட் நடந்து கொண்டிருந்தது.அவரை டி.வி.யில் பார்த்த ஞாபகம்.ஆனால் சரியாக அடையாளம் தெரியவில்லை.அவரிடம் போய் “நீங்க சன் டி.வி.யில வர்றவருதானே”என்றேன்.“ஆமாம்” என்றவர், “எந்த நிகழ்ச்சியின்னு சொல்லுங்க பார்ப்போம்”என்றார்.தலையே வெடிக்கிற அளவுக்கு நினைவுபடுத்த முயன்றும் முடியவில்லை.பெயரை மட்டும் சரியாகச் சொல்லிவிட்டேன்.பிறகு அவரே தன் நிகழ்ச்சியின் பெயரை குறிப்பிட்டார்.கட்சியில் இணையும் போது படம் எடுப்பதற்காக எங்களுடன் வந்திருந்த புகைப்படக் கலைஞரிடம் கெஞ்சிக் கூத்தாடி ஜேம்ஸோடு ஒரு படம் எடுத்துக் கொண்டேன்.நான் புகைப்படம் எடுத்த முதல் வி.ஐ.பி.ஜேம்ஸ்தான்.இவ்வளவுக்கும் புகைப்படக்காரர் ஆகமட்டும் படமெடுக்க மறுத்தார். ஃபிலிம்ரோல் தீர்ந்துவிட்டால் வந்த வேலை கெட்டுப்போகும் என்று அஞ்சினார்.அன்றைக்கு ஒரு புகைப்படம் எடுப்பதில் ஏகப்பட்ட சிரமங்கள் இருந்தன.பிறகு அறிவாலயத்தின் ஒதுக்குப்புறமாக அப்படியே உறங்கிவிட்டேன்.மாலை ஊர்சுற்றிவிட்டு வந்தவர்கள் என்னை எழுப்பினார்கள்.அங்கேயே உள்ள பைப்பில் முகம் அலம்பினேன்.“தலைவர் வருகின்ற நேரம் தயாராக
இருங்கள் ”என எம்.எஸ்.எச்சரித்துவிட்டுப் போனார். இரவு எட்டாகியும் கலைஞர் வரவில்லை.பின் அவர் ஏதோ அவசரக் கூட்டத்திற்குப் போய்விட்டதாக தகவல் வந்தது. “சரி,பேராசிரியர் இருக்கிறார்.அவர் தலைமையில் இணைந்துவிடுங்கள்”என்றார் எம்.எஸ். உடனே எல்லோரும் உள்ளே போனார்கள்.நான் மட்டும் போகவில்லை. என்னை காணவில்லை என்றதும் தேடிக்கொண்டு வெளியே வந்த ஆள் அதட்டி உள்ளே அழைத்துக் கொண்டுபோனார்.“கலைஞர் தலைமையில் கட்சியில் சேர்வதாக இருந்தால் நான் உள்ளே வருகிறேன்.இல்லையென்றால் என்னை விட்டுவிடுங்கள்”என்றேன் அவரிடம்.அவர் என்னை சமாதானப்படுத்தி அழைத்துக்கொண்டுபோனார்.கட்சியில் இணைந்தவுடன் க.அன்பழகனோடு எல்லோரும் சேர்ந்து இன்முகத்தோடு ஒரு குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.புகைப்படத்தில் அத்தனைபேர் முகத்திலும் ஏக மகிழ்ச்சி.நான் மட்டுமே உள்ளுக்குள் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன்.அந்த வருத்தத்திற்குள் அன்றைக்கு இருந்த அர்த்தம் வேறு.இன்றைக்கு இருக்கின்ற பொருள் வேறு.

Friday, July 23, 2010

(எனக்குப் பிடித்த)தேவதச்சனின் மூன்று கவிதைகள்


1

இந்த நீலநிற பலூன் மலரினும்
மெலிதாக இருக்கிறது.எனினும்
யாராவது பூமியைவிட் கனமானது
எது என்று கேட்டால்,பலூனைச் சொல்வேன்

நீங்களாவது கூறுங்களேன்,இந்த
நாற்பது வயதில் ஒரு பலூனை
எப்படி கையில் வைத்திருப்பது என்று..
பலூனை விரல்களில் வைத்திருப்பது என்பது
காற்றைக் கையில் வைத்திருப்பது போல் இருக்கிறது
பலூன்கள் கொஞ்சநேரமே இருக்கின்றன.
எனினும் சிறுவர்கள் கொஞ்சத்தை ரொம்ப நேரம்
பார்த்து விடுகிறார்கள்

அருகிலிருக்கும் குழந்தையின் பலூன் ஒன்று
என்னை உரசியபடியே வருகிறது.நான்
கொஞ்சம் கொஞ்சமாக பலூன் ஆகிக் கொண்டிருக்கிறேன்


2

அவளது வலதுபக்கம் அம்மா அமர்ந்திருக்கிறாள்
எதிரில் இருக்கும் அதிகாரியோ
தேநீரை ஒவ்வொரு மடக்காகச் சுவைத்துக் கொண்டிருக்கிறார்.

அம்மாவின் கையில் கட்டியிருக்கும் கடிகாரம் அப்பாவினுடையது
ஆறுமாதத்திற்கு முன் இறந்து போனவரின் எச்சம் அது
அதில் முள் ஒருவிநாடி நகரும்போது,எதிர்காலம்
எல்லாமும் நகர்ந்துவிடுகிறது

அம்மா பதற்றத்தோடு பேசுகிறாள்
சில ஆவணங்களையும்,சான்றிதழ்களையும்
காட்டுவதற்கு,பாலிதீன் பையிலிருந்து
அவற்றை எடுக்கிறாள்.

வழக்கம்போல் அவைகள் நழுவி
தரையில் விழுகின்றன
அம்மாவின் வலதுபக்கம் யாருமில்லை

3

நீ சொன்ன இடத்தில் காத்திருந்தேன்
தொலைவில் யார் வந்தாலும் நீயே போலத் தெரிகிறது
ஆண்கள்கூட நீயே போல வருகிறார்கள் போகிறார்கள்
எல்லாப் பெண்களுக்கும் முகம் எப்படியோ
ஒரே மாதிரி இருக்குறது

நீ வரவில்லை.
என் கண்களில்
மிதக்கின்றன.
சாலைமரங்களில் அசைந்து கொண்டிருக்கும் இலைகளும்
அவற்றின்
அசையாத நிறமும்
திடீரென்று மாலை விளக்குகள் எரியத் தொடங்குகின்றன
துரிய இலையில் இருப்பதுபோல் இருக்கும்
காக்கிநிற டப்பா ஒன்றை
ஒருசிறுவன் எற்றிவிட்டுப் போகிறான்.
பசியோடும் கால் வலியோடும்
திரும்பத் தொடங்குகிறேன்.
இப்படி எல்லாம் நடக்கும்தானே