Monday, August 22, 2011

மரத்தை மறைக்கும் மாமத யானை!


ஹெச் வில்லியம்ஸ் ஒரு ஆங்கிலேய அதிகாரி. யானை ஆராய்ச்சியாளர் கிடையாது. ஆனால் அவர் யானைகளுடன் வாழ்ந்திருக்கிறார். யானைகளுடனான அவரது சகவாசம், பணி நிமித்தமானது. காலனிய ஆட்சிக் காலத்தில் அவர், பர்மியக் காடுகளிலும் அதையொட்டி இந்திய அந்தமான் காடுகளிலும் அலைந்து திரிந்திருக்கிறார். 1931ம் ஆண்டில் வடக்கு அந்தமானை ஆராய வந்தக் குழுவில் இவரும் இருந்திருக்கிறார். வேட்டைக்காரனின் சாகஸத்துடன் தொடங்கிய வில்லியம்ஸின் வன வாழ்க்கை, போகப்போக யானைகளைப் பழக்கும் பர்மிய மக்களுடன் கூடிப் பிணைக்கப் பெற்ற ஒன்றாக உருமாறுகிறது.

1914-18 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகப் போரின் போது முதலில் வில்லியம்ஸ் பர்மாவில் ஒட்டகப் படையில் பணியாற்றினார். அடர்ந்த வனங்களில் தன் அன்றாட வேலைகளுக்கு மனித உழைப்பு எந்த அவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு இமியும் குறையாமல் யானைகளின் உழைப்பும் வில்லியம்ஸுக்கு முக்கியமாக இருந்திருக்கிறது. நாள்தோறும் மேய்ப்பாளன் இடும் கட்டளைகளை புரிந்துக்கொண்டு வேலை பார்க்கும் யானைகளை வெறும் மிருகங்களாக கருதாமல், அவற்றை மனிதன் தன் தேவைக்கேற்ப பழக்கப்படுத்தி வைத்திருக்கும் நுட்பத்தை வியக்க ஆரம்பிக்கிற வில்லியம்ஸின் மூளையில் ஒரு நாள் பொறித்தட்டுகிறது. இனி, வேலைகளோடு மட்டுமே மல்லுக்கட்டுவதை நிறுத்திவிட்டு, இந்த ஜீவராசிகளின் குணதிசங்களை உற்று நோக்கி புரிந்துகொள்ள முற்பட வேண்டும் என தீர்மானிக்கிறார். அன்று முதல் யானைகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணிக்கிறார். அன்றாட வரவு செலவு கணக்குகளை எழுத்தும் அதே மும்முரத்தோடு யானைகள் பற்றிய தன் நாட்குறிப்புகளையும் எழுத ஆரம்பிக்கிறார். அந்தக் குறிப்புகளோடு சேர்த்து தன் நினைவுகளையும் திரட்டி பல காலங்களுக்கு அப்புறம் ஒரு புத்தம் எழுத ஆரம்பிக்கிறார். அவ்வாறு உருவான நூல்தான் –யானைக்கூட்டம். அகல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள சமீபத்திய நல்வரவு. வன உயிரின ஆர்வளர்களை தாண்டி அனைத்து வாசகர்களும் படிக்க வேண்டிய புத்தகம் இது.

யானைகளை பற்றிய வில்லியம்ஸின் அவதானிப்பு ஒரு வெளிப் பார்வையாளனின் அறிவுலகத்தோடு பொருந்தக்கூடியது. அதே சமயம் அவற்றோடு அனுதினம் இரண்டறக் கலந்து வாழும் மக்களை விட அதிகப்படியான தகவல்களை எடுத்து சொல்வது. இன்னதன் காரணம் எதுவென்றறியாமல் ஒரு பழக்கத்தைப் போல மனிதனால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைகளுக்குள் புதைந்து கிடக்கும் பல்லாயிரமாண்டு கால அறிவை, ஒரு கோழியைப் போல சீய்த்து சீய்த்து மனித மனங்களின் தனது எழுத்தின் மூலம் மேற்பரப்புக்கு கொண்டு வருகிறார். வில்லியம்ஸின் அவரின் புத்தகத்தினை ஒரு சாக்காக வைத்து நாம் யானைகள் பற்றிய அடிப்படையான சில தகவல்களை அறிந்துகொள்வோம்

யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கினம்.தாவரங்களின் இலைத் தழைகளை மட்டுமே இவை உணவாக உட்கொள்கின்றன. நிலத்தில் வாழும் உயிரினங்களிலேயே மிகப்பெறிய விலங்காக யானை கருதப்படுகிறது.இதன் சராசரியான வாழ்நாள் எழுபது ஆண்டுகள்.ஏறக்குறைய மனித வாழ்நாளை ஒத்த உயிரினமாக இது இருக்கிறது. அரிமா,வேங்கை போன்ற வலிமையான விலங்கினங்களுக்கு இணையான வலிமை கொண்ட ஒரு விலங்காக நிலத்தில் யானை திகழ்கிறது. அதே சமயம் புலி,சிங்கம் போன்ற விலங்குகளை தன்னிடம் நெருங்கவே அச்சுறுத்தும் விலங்காகவும் யானை இருக்கிறது. பல சிங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு யானையை ஒருவேளை கொல்ல நேரலாம்.அவ்வாறு ஏற்படும் சண்டைகள் இளைய யானைக்கும் சிங்கத்திற்குமான சண்டையாகவே இருக்கும். பருமனிலும் ஆகிருதியிலும் பலம் கொண்ட பெரிய யானையை வீழ்த்துவது என்பது மற்ற விலங்கினங்களுக்கு அவ்வளவு லேசானதல்ல.

.

· யானைகள் எந்த விலங்குகளையும் வேட்டையாடுவது இல்லை.தாவர உண்ணியான இவை மாமிசங்களை உண்ணாது. புலி, பசித்தாலும் புல்லை தின்னாது என்ற பழமொழி உள்ளதைப் போல் யானைக்கு எவ்வளவு கடும் பசி எடுத்தாலும் அது மாமிசம் உண்ணாது என்று நாம் ஒரு புது மொழி எழுதிப் பழகலாம். யானை மூங்கில்,கரும்பு போன்றவைகளை மட்டுமே விரும்பி உண்ணக் கூடியது.ஒரு நாளைக்கு 16 மணி நேரத்தை உணவு சேகரிப்பதில் மட்டுமே ஈடுபடுகின்றது. இவற்றின் செரிமானத்திறன் மிக மந்தமானது.உண்பதில் 40 விழுக்காடே செரிமானமாகிறது.எனவே அளவுக்கு அதிகப்படியான நிறைய உணவை இவை உட்கொள்ள வேண்டியுள்ளது.வளர்ந்த யானை நாள் ஒன்றிற்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவை உட்கொள்கின்றது.

· யானைக் குடும்பத்தில் மொத்தம் மூன்று சிற்றினங்கள் உலகில் இன்றைக்கு உயிரோடு எஞ்சியுள்ளன. ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள்,ஆப்பிரிக்கக் காட்டு யானைகள்,ஆசிய யானைகள் இவை மூன்றும்தான் அவை. இந்த இனங்களுக்கு இடையே பல வேறுபாடுகள் உண்டு.இனங்களுக்கு தக்க,நிலத்திற்கு ஏற்ப இவைகளின் குணநலன்கள்,அங்க மாறுபாடுகள் ஏராளம் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளைவிட அளவில், உருவத்தில் பெரியவை.ஆப்பிரிக்க யானைகளுக்கு காதுமடல்கள் பெரியதானவை.ஆண் பெண் இரண்டிற்கும் நிகரானத் தந்தங்கள் உண்டு. ஆசிய பெண் யானைகளுக்கு தந்தங்கள் இருக்காது. சில யானைகளுக்கு மட்டும் அரிதாக இருக்கலாம். ஆப்பிரிக்க யானைகளின் தலையையொட்டி உள்ள முதுகுபுறம் சற்று உள்நோக்கி வளைந்தும்,புடைத்த நெற்றி மேடுகள் அல்லாமல் சமனாகவும் இருக்கும். இவற்றிற்கு துதிக்கை நுனியில் இரண்டு இதழ்கள் இருக்கும்.முன்னங்கால்களில் நான்கு முதல் ஐந்து நகங்களும்,பின்னங்கால்களில் மூன்று நகங்களும் இருக்கும். ஆசிய யானைகளின் முதுகு சற்று உயர்ந்து மேடாக இருக்கும். நெற்றியில் இரு மேடுகளும் காது மடல்கள் சிறியதாகவும் இருக்கும்.இவற்றிற்கு துதிக்கை நுனியில் மேல் நோக்கியவாறு ஓரிதழ் மட்டுமே இருக்கும்.முன்னங்கால்,பின்னங்கால் உட்பட தலா நான்கு நகங்களைக் காணலாம்.ஆண் யானை பொதுவாக மூன்று மீட்டர் உயரமும் 6000 கிலோகிராம் எடையையும் கொண்டிருக்கும்.யானையின் தோல் சுமார் 3செ.மீட்டர் தடிமனாக இருக்கும்.யானை பெருத்த உடலைக் கொண்டிருந்தாலும் மலையின் மீதும் செங்குத்தான இடங்கள் மீது சரளமாக ஏறவும் இறங்கவும் செய்யும்.அந்தத் திறன் அவற்றிற்கு அதிகமாகவே உண்டு.

· யானையின் துதிக்கை மிக விஷேசமானது.மொத்தம் 40,000 தசைகளால் ஆனது. இந்தத் துதிக்கையினான் பெரும் மரக் கிளைகளை ஒடிக்கவும்,உடைக்கவும் அதனால் முடியும்.அதோடு பெரும் சுமைகளையும் துதிக்கையினால் இவை தூக்கிச் சுமக்கின்றன. உணவை எடுக்கவும் நீர் அருந்தவும் யானை தன் துதிக்கையை பயன்படுத்திக் கொள்கிறது.

· யானைத் தந்தங்களுக்கு யானைக்கோடு என்ற சிறப்பு பெயரும் உள்ளது. இந்தக் கோடானது யானையின் கடவாய்ப் பற்களின் நீட்சியாகும்.இதற்கு எயிறு,தந்தம் என்ற இதர பெயர்களும் இருக்கின்றன.தந்தம் என்றால் பல் என்று பொருள்.சராசரியாக தந்தங்கள் பத்து அடி வரை வளரும்.அதோடு இத்தந்தங்கள் சுமார் 90கிலோகிராம் எடை வரை கனக்கக்கூடியவை.

· தன்னுடைய துதிக்கைகளை தரையில் படுக்கை வாட்டில் கிடத்தி தரையிலிருந்து எழும் அதிர்வு ஒலிகளைக் கொண்டு, தன் புலனுணர்வை மூளைக்கு அனுப்புகின்றன என்கிறது யானைகள் பற்றிய சமீபத்திய ஆய்வுகள்.அதேபோல யானை, தான் புதியதா பார்க்கும் பொருட்களை தன் பாதங்கள் மூலம் மெதுவாக அழுத்திச் சோதித்தப் பின்பே அவற்றை சேதப்படுத்தவோ,அப்புறப்படுத்தவோ செய்கின்றது என்றும் இப்போது கண்டறியப்பட்டு இருக்கிறது.

· ஆசிய யானைகளின் தோல்,ஆப்பிரிக்க யானையின் தோல்களை விட கூடுதலான ரோமங்களை கொண்டுள்ளன. ஆண் யானையை தமிழில் களிறு என்பர்.பெண் யானையை பிடி என்பர். குட்டி யானையை கன்று என்று குறிப்பிடப்படுகிறது.யானை உரக்க எழுப்பும் ஒலியை பிளிறுதல் என்பார்கள். சீதோஷண மாறுதல்களில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள பொதுவாக யானைகள் சேற்றில் கிடந்து உழுலும் குணாதிசயம் கொண்டவை.மண்ணை வாறி உடல் முழுவதும் போட்டும் கொள்ளும்.இதனால் கடுமையான சூரிய வேப்பத்தில் இருந்தும்,அட்டைப் பூச்சி,உண்ணி போன்றவற்றிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்கிறது. யானைகளுக்கு வேர்க்காது என்பதால் இந்த மாதிரியான பழக்க வழக்கங்கள் பாதுகாப்பானதாக உள்ளன. இவற்றின் தோல் தடித்து இருப்பினும் இதன் உணர்திறன் என்னவோ அதிகம்தான்.

· யானை தன் வலிமையான உடற்பருமனை தாங்கும் அளவிற்கு அவற்றின் கால்கள், பாதங்கள் வலிமையானதாக இருக்கின்றன.இதன் கால்கள் செங்குத்தாக இருப்பதாலும் அகன்ற பாதங்கள் உள்ளதாலும் யானை நிற்பதற்கு தசையாற்றல் அதிகம் தேவையிராது. எனவே இவற்றால் அதிகப்படியான நேரங்கள் நிற்க இயலும்.ஆசிய யானைகள் அடிக்கடி உட்காந்து இளைப்பாரும்.ஆனால் ஆப்பிரிக்க யானைகள் உடல் சீக்கு காணும் வரை உட்கார்ந்து இருப்பதை தவிர்கவே செய்கின்றன. யானைகளால் நதிகளில் இலகுவாக நீந்த முடியும்.ஆனால் குதிக்க இயலாது.குட்டி யானைகள் பிறந்த சில வாரங்களிலேயே தாய்,தாதி யானைக் கூட்டங்களால் நீந்தப் பழகிக் கொடுக்கப்படுகின்றன

· யானைக்கு உருவத்திற்கேற்ப அகன்ற காது மடல்களை கொண்டுள்ளன.அதன் வெப்பநிலையைப் பராமரிப்பதில் அகன்ற மடல்கள் பெரும்பங்காற்றுகின்றன.யானையின் மடல்கள் இரத்த நாளங்களால் நிரம்பியவை. மடல்களில் வெப்பம் மிகுந்த இரத்தம்,காதுகளின் இடைவிடாத அசைவினால் குளிர்விக்கப்படுகின்றது.இதனால் உடல் வெப்பத்தை யானை குறைத்தும் கொள்கிறது. ஆசிய யானையின் காது ஓரங்கள் வெளிப்புறம் மடிந்திருக்கும்.ஆப்பிரிக்க யானைக்கு உட்புறம் மடிந்திருக்கும்.

· யானைக்கு நினைவாற்றல்,அறிவாற்றல் அதிகம்.ஒரு கூட்டு சமூகமாக வாழும் இவை தனது அறிவை சந்ததிக்கு கடத்துவதில் வல்லவை.தரையில் வாழும் உயிரினங்களிலேயே யானையின் மூளையே மிகப்பெரியதாகும்.ஐந்து கிலோ கிராமுக்கு சற்று அதிகமாக எடையை இது கொண்டிருக்கிறது. யானைகள் தங்களின் பல ஆயிர வருடங்களான வழித்தடங்களை,வலசைப் பாதைகளை மறக்காமல் அப்படியே நினைவில் வைத்திருக்கின்றன.

· யானைகள் மிக மெல்லிய வாசனைகளை கூட விரைவில் கண்டறியும் முகர் உணர்வு உடையவை.சில மையில்களுக்கு அப்பால் வரும் மனித வாடையை முன் கூட்டியே தன் மோப்ப சக்தியினால் கண்டறியும் ஆற்றலும் இதற்கு உண்டு.உப்பின் வாடை யானையை எங்கிருந்தாலும் சுண்டி இழுத்துவிடும்.இவற்றிற்கு கண்பார்வை கொஞ்சம் மங்கலானதாக இருப்பதால் தூரத்தில் உள்ள பொருட்களை எளிதில் அறிந்துக் கொள்ள முடியாது.எனவே மோப்ப உணர்வையே இவை அதிகம் நம்பி வாழ்கின்றன.இதன் பாதங்கள் மிக குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளையும் உணரவல்லன.

· யானை மனிதனைப் போல குடும்ப உறவில் வாழ்பவை. தாய் யானை தனது குட்டியை தன் தாதி யானையோடு இணைந்தே வளர்க்க ஆரம்பிக்கும்.ஒரு சமூகக் கூட்டமாக இருக்கும் யானைகளில் ஒரு ஆண் யானை மட்டுமே தலைமை வகிக்கும். புணர்ச்சிக் காலங்களில் வேறு யானை ஒரு கூட்டத்திலுள்ள பெண் யானையை புணர விரும்பினால் அக்கூட்டத்தின் தலைமை யானையான ஆண் யானையை சண்டையிட்டு வீழ்த்திய பின்பே அதனால் உறவை மேற்கொள்ள முடியும். குட்டியாக உள்ள ஆண் யானை பருவம் அடைந்தக் கையோடு தாய்க் கூட்ட்த்தினை விட்டு விரட்டி அடிக்கப்பட்டுவிடும்.அது தனித்து சென்று தன் புதிய வாழ்க்கையை மேற்கொள்ள தாய் செய்யும் புத்திசாலித்தனம் இது. இதனால் ஒரே சந்ததியினருக்குள்ளான உறவு முற்றிலும் தடுக்கப்படுகிறது

· யானைக்கள் தண்னுணர்வு கொண்டவை.இதன் முன்னால் வைக்கப்பட்ட கண்ணாடியைக் கண்டு இவை தங்களின் அடையாளங்களை பழக்கிக் கொள்ள முற்பட்டன என்கிறது ஒரு ஆய்வு.குரங்குகளும் டால்பின்களும் இக்குணத்தை கொண்டிருப்பவையே. இவற்றின் சினைக்காலம் 22 மாதங்கள்.இது பாலுட்டி இனங்களில் அதிகப்படியான காலங்களாகும்.யானை ஒரு குட்டியையையே ஈனும்.இரட்டைப்படை என்பது அரிதானதொன்று.கன்றானது 90முதல் 115 கிலோ எடை வரை இருக்கும். இதன் பிரசவக் காலத்தில் மற்ற யானைகள் கூடி நின்று உதவி செய்கின்றன. யானைக்கன்று பிறந்த்து தொட்டு அது யானைக்கூட்ட்த்தினாலேயே வளர்க்கப்படுகின்றது.

· சங்க இலக்கியங்களில் யானை 23விதமான சொற்களால் குறிப்பிடப்படுகின்றன.அவை வருவன: யானை, வேழம், களிறு, பிடி, கலபம், மாதங்கம், கைமா, உம்பர், வாரணம், அஞ்சனா வதி, அத்தி, அத்தினி, அரசுவா, அல்லியன், அனுபமை, ஆம்பல், ஆனை, இபம், இரதி, குஞ்சரம், இருள், தும்பு, வல் விலங்கு

யானைகள் பற்றிய இன்றைய நிலவரம் என்ன? அவற்றின் வாழ்விடப் பிரச்னை உள்ளிட்ட சில அடிப்படைத் தகவல்களை இனி பார்ப்போம்:

· இன்று நிலத்தில் வாழும் பெரிய இனமான யானைகள் அழியும் தருவாயில் உள்ளன.அவற்றின் உணவு பற்றாக்குறை,தொடர்ந்து வனப்பகுதிகள் அழிக்கப்படுவதினால் அவற்றின் இருத்தல் கேள்விக்குறியாகிவிட்டது. அதோடு வனப் பகுதிகள் மனிதனின் பாசனப் பயன்பாட்டின் மாற்றத்தினால் சுறுங்கிடுவதினால் யானைகள் குறுகலான நிலத்தின் உள்ளாக வாழ நிர்பந்திக்கப்படுகின்றது. இதனை மீறி வலுக்கட்டாயமாக மற்றப்பட்ட விளைநிலங்களுக்குள்ளாக யானைகள் நுழைய நேரிடும் போது அது மனித யானை மோதல்களாக மாற்றம் கொள்கின்றன. மனிதற்கல் போடும் மின் வேலிகளில் அடிப்பட்டு காயம் உண்டாகி பின் இறந்தும் போகின்றன.

· இலங்கயில் இந்த மாதிரியான மோதல்கள் ஆண்டொன்றுக்கு சராசரியாக 80 ஆட்களும் 225 யானைகளும் பலியாவதாக பி.பி.சி.(தமிழ்) அறிக்கை வெளிவந்திருகிறது.யானை-மனித மோதலால் இலங்கயில் உள்ள மொத்தம் 9மாகாணங்களில் 8மாகாணங்கள் பதிக்கப்படுவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.அக்டோபர் 15க்கு முந்தய நான்கு நாட்களில் மட்டும் 4பேர் மட்டக்களப்பு மாவட்ட்த்தில் மட்டும் அடிப்பட்டு இறக்க நேர்ந்திருக்கிறது.

· இந்த ப்ரச்னையைக் கையாள இலங்கையில் எலி அலார்ட் என்ற புதிய முறையை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது அவ்வரசு.பாதுகாப்பிற்காக போடப்பட்ட வேலிகளை யானைகள் உடைக்கும் போது,ஏற்கெனவே எலி அலாட் கருவியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அந்த ஊர் முக்கியஸ்தர்களின் மொபைல் போனுக்கு தாமாகவே அக்கருவி குறுஞ்செய்தி அனுப்பிவிடும்.இதனை லங்கா விஜேசிங்க என்பவர் அரிமுகப்படுத்தியுள்ளார்.

· தமிழ்நாட்டில் அதிகப்படியான நீர் நிலைத்தடங்கள் மூடப்பட்டதினால் யானைகள் ஒழுங்கான பாதைகளை விட்டு கட்டுப்பாடற்ற பாதைகளில் குறுக்கிட்டு ரயில் தடங்களில் அடிப்பட்டும் கும்பல் கும்பலாக சாகின்றன.

· யானைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றால் அது வேட்டையாடப்படுவதுதான்.அதன் தந்தங்களுக்காக மிக அதிக எண்ணிக்கையில் கொல்லப்படுகின்றன என்பது ஊரறிந்தத் தகவல். யானைகளின் உணவான மரச் செடிக்கொடிகள் அழிக்கப்படுவதாலும் நீராதாரம் சுறுங்கிப்போவதாலும் யானைகள் உலக அளவில் செயற்கையான சாவை சந்திக்கவேண்டியுள்ளது.

· ஆப்பிரிக்காவில் பெரிய தந்தங்கள் உள்ள யானைகளையே குறிவைத்து அழிக்கப்படுவதினால் புதியதாக பிறக்கும் யானைகள் சிறிய தந்தங்களோடு பிறக்கும் அவலமும் நடந்தேறி வருகின்றது.இன்னும் தந்தங்கள் அற்றும் பிறக்க நேரிடுகின்றது.1930களில் ஒரு சதவீதமாக இருந்த இவ்வாறான யானைகளின் எண்ணிக்கை இன்று சில பகுதிகளில் 30 சதவீதமாக அதிகரித்து நிற்கிறது.

· வனப்பகுதிகளின் ஏற்படும் குடியேற்றத்தினால் யானைகளுக்கு இருதயக் கோளாறு,மாரடைப்பு,மூளையில் இரத்தக்கட்டி,சர்க்கரைநோய் போன்ற புதுப்புது வியாதிகள் யானைகளிடன் பரவ ஆரம்பித்திருக்கிறது.

· மலைப்பகுதிகளில் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக தோண்டப்படும் பெரும் குழிகள் அல்லது பள்ளங்களில் விழுந்து யானைகள் சாவது தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நடந்துவருகிறது.

வில்லியம்ஸின் புத்தகம் தரும் தகவல்கள் இவை:

· ஆப்பிரிக்க யானைகளை அடக்கிப் பழக்க முடியாது என பலராலும் நம்பப்படுகிறது.இதில் உண்மையில்லை.நீக்ரோ இனத்தவர்கள் இந்த யானைகளை அடக்கி தங்களின் வேலைகளுக்கு பழக்கி இருக்கிறார்கள்.ஆப்பிரிக்க யானை இனத்தைத்தான் கார்த்தேஜீனியர்கள் அடக்கிப் பழக்கி ரோம் நாட்டுக்கு எதிராக நட்த்திய யுத்தங்களில் பயன்படுத்தினார்கள் என்று உறுதியாகக் கூறப்படுகிறது.

· இந்திய வரலாற்றில் யானைகள் போரில் பயன்படுத்தப்பட்டு வந்தன.புகழ் பெற்ற அலெக்சாண்டரைப் புறமுதுகிட்டு ஓடச் செய்யப் போரில் யானைகள் பழக்கி வைக்கப்பட்டன.

· காட்டில் வாழும் யானைகள் பொதுவாக முப்பது முதல் ஐம்பது வரையில் கூட்டமாக வசிக்கின்றன. பர்மா யானை மூங்கிலை விடபுல்லையே அதிகமாகத் தின்கின்றன.

· அவரச நேரத்தில் எந்த வழியாக தப்ப வேண்டும் என்பதை அந்தக் கூட்ட்த்தின் தலைவனாக இருக்கும் யானையே முடிவுசெய்யும்.அப்போது அவை ஒன்றின் துதிக்கை மற்றொன்றின் மேல் போட்டவாறு ஒரு வரிசையில் மும்மூன்றாகவோ அல்லது நான்குகவோ செல்லும்

· பெரும்பாலான யானைகள் மார்ச் மாத்த்திற்கும் மே மாத்த்திற்கும் இடையேதான் குட்டிப்போடுகின்றன.

· யானையைப் பிடிப்பதற்கு முன்னால் சுமார் எட்டு மைல் தூரத்திற்கு அதன் அடிச்சுவட்டைக் கொண்டே போகவேண்டும்.

· யானைகள் பிடிபட்டுள்ள காலங்களில் கரு தரிப்பதில்லை.இயற்கயான சூழல் ஏற்படும் போதே மீண்டும் அவை கருதரிக்கின்றன.

· இயல்பாக ஒரு பெண் யானை 17 வயதில்லிருந்து இருபது வயதுக்குட்பட்டபோது முதன்முதலாக இணை சேர்கிறது.வருட்த்தில் இந்தக் குறிப்பிட மாத்த்தில்தான் அது இணை சேரும் என்ற எந்த வரையறையும் கிடையாது.

· குட்டியானை தாய் யானையை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு பிந்தொடரும்.அது தாய் யானைகளினால் பாலூட்டப்படுகிறது. பிறந்தவுடனே குட்டி யானையின் துதிக்கை அதற்குப் பயன் இல்லாத ஒரு பொருளாக உள்ளது.இந்தக் காலங்களில் குட்டி தன் வாயாலேயே தாயிடம் பால் குடிக்கும்.துதிக்கை மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குப் பயனுள்ளதாகவும்,வளையக்கூடியதாகவும் இருப்பதில்லை. 5 அல்லது 6 வயதில் குட்டித் தன தீனியைத் தானே சேகரிக்கக் கற்றுக்கொள்கிறது.

· ஒருபெண் யானை தன் வாழ்நாளில் சராசரியாக 4குட்டிகள் ஈனும்.இருகுட்டிகள் பொடுவது மிக ஆச்சரியமானதில்லை(கவனிக்க:எந்த ஒரு விலங்கினை பற்றிய ஆய்வும் முழுமையாக முற்று பெற்றவையல்ல;காலங்கள் தோறும் பழய ஆய்வுகள் உடைக்கப்பட்டு புதிய ஆய்வுகள் நிறுவப்படலாம்)

· 15,16 வயதில் வாட்டஞ்சாட்டமான மனிதைனைப்போல் யானையும் ஆகிவிடும்.20முதல் 35 வயது வரையில் மதநீர் சிறிது கசியத் தொடங்கும்.இந்த்த் திரவத்தின் நாற்றம் கடுமையான மணம் எழுப்பக்கூடியதாக இருக்கும். கண்ணுக்கு அருகிலும்,வயிற்றுக்கு மேலேயுள்ள கோட்டிற்கு மேலும் உள்ள மதநீர் சுரப்பியிலிருந்து மதநீர் கொஞ்சம் கொஞ்சமாக கசியும். தகுதி வாய்ந்த ஆன் யானைக்கு ஆண்டு தோறும் வெப்பமான மாதங்களில் அது காணப்படுகிறது.இந்தப் பருவம்தான் அது பெண் யானையோடு சேர்வதற்குரிய காலமாகும். முப்பது வயது முதல் நாற்பது வயது வரயில் அக்கசிவு அதிகரித்து தாராளமாக ஓடும்.சொட்டுச் சொட்டாக அதன் வாயிற்குள் நீர் செல்ல அது அதன் சுவையை உணரும்.அச்சுவை அதை கோபமூட்டி அதை மேலும் அதிக்க் கொடுரமாக்கிவிடும்.அந்தச் சமயத்தில் மிகுந்த வலிமை அதற்குண்டு. 40-50 வயதில் மதநீர் குறையத் தொடங்கி இறுதியில் நின்றுவிடும். மதம்பிடிக்கும் காலத்தில் யானையை நம்பக்கூடாது.அப்படி நம்புவதானால் அதற்கு 60 வயது முடிந்திருத்தல் அவசியம்.

· 15முதல் 20 வயதுவரை உள்ள காலமே காட்டு யாணைகளைப் பிடிப்பதற்குரிய தகுந்தக் காலம்.இதிலிருந்து சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் அது கடுமையான வேலையைச் செய்யப் போதுமான பக்குவத்தையும்,தண்ணீரைத் தானே பெறும் சக்தியையும் அடைகிறது.

· தாயைப் பிரிந்து இரண்டு இரவுகள் குட்டியானை அழத்த வண்ணம் இருக்கும் காட்சி காட்டில் சர்வசாதாரணமாகும்.பர்மாவில் உள்ள ஒஸிகள் வழக்கமாக யானைகளை அவற்றின் பெயரிட்டு அழைப்பதில்லை.

· தாய் யானையிடம் இருந்து பிரிக்கப்பட்ட இளைய யானைகள் 19வயது முடியும் வரையில் பயிற்சிக்காக வைக்கப்படுகிண்ரன.சுமார் எட்டு வயதுள்ள இளைய யானைகள் முதன் முதலாக கட்டையைத் துக்குகின்றன.இவற்றின் வேலை செய்யும் வயது ஐம்பது வயதுவரை என நாம் கொள்ளலாம்.

· வேலைசெய்யும் யானைகள் மார்ச் முதல் மே மாதம் வரையில் உள்ள வெப்பக்காலத்தில் வேலை செய்ய வைக்க்க் கூடாது.வனப்பரப்புகளில் போதுமான தண்ணீரும் தீனியும் இப்பருவத்தில் சீராக்க் கிடைப்பதில்லை.ஆகவே அவைகள் ஓய்வை விரும்பக்கூடும் காலமாகிறது. ஒரு மாதத்தில் பர்மிய யானைகள் காலனிய ஆட்சிக் காலத்தில் 18 நாட்கள் வரை வேலை செய்தன.12நாட்கள் ஓய்வுநாளாகும். மூன்று நாட்கள் தொடர்ந்து வேலை செய்ய நேரிட்டால் இரு தின்ங்கள் ஓய்வளிக்கப்பட்டன. ஒரு வருடத்தில் 9மாதங்களில் 162 நாட்கள் வேலை நாட்கள்.ஒவ்வொரு நாளும் சுமார் 8மணி நேரமே அன்று யானைகள் வேலை செய்தன. இவ்வாறு ஒரு யானை வருத்த்திற்கு 1,300 மணி நேரம் வேலை செய்த்தது.

· இருபது வயதுள்ளபோது பாகன் காட்டும் ஜாடைகளைத் தவிரக் கட்டளையிடப்படுகின்ற 24 தனி வார்த்தைகளைக் கட்டாயம் யானை புரிந்துக் கொள்ளக்கூடும்.

· தன் உடலில் துதிக்கை எட்டாத ஒரு பாகத்தில் சொறிய வேண்டிய உணர்ச்சி ஏற்பட்டால் அது அந்தப் பாகத்தை மரத்தில் சாய்த்து தேய்த்துக் கொள்வதில்லை.ஒரு பெரிய குச்சியை எடுத்து அதைக்கொண்டு தன்னைத்தானே தேய்த்துக் கொள்கிறது.குச்சு போதுமானதாக இல்லாவிட்டால் வேறு ஒரு குச்சியை அது நாடிச் செல்லும் அறிவைக் கொண்டுள்ளது.

· யுத்தத்திற்கு முன்பு உணர்ச்சியில்லாதவாறு செய்கின்ற மருந்துகளைப் பற்றிய பரிசோதைகள் யானைகளின் மீது செய்துபார்கப்பட்டன.

· எவ்வளவு வலியையும் பொறுத்துக்கொள்ளும் சக்தி யானைக்குண்டு.இவை அசைபோடும் மிருகம் இல்லை.அதற்கு ஒரே ஒரு இரைப்பைதானுண்டு.நாளொன்றுக்கு 600ராத்தல் தீமியை அது சேகரிக்கிறது.

· மனிதன் எவ்வளவு நேரம் தண்ணிருக்குள் மூச்சைப் பிடித்துக் கொண்டிருக்க முடியுமோ அவ்வளவு நேரம்தான் யானையாளும் நீருக்குள் இருக்க முடியும்.சுமார் 1,000கெஜ தூரம் நீந்திச் செல்லும்.அதில் 400கெஜ தூரத்தை நீருக்குள்ளாகவே நீந்திப்போகும் தறன் அதற்கு இருக்கிறது.

யானைகள் பற்றிய ஆரய்ச்சி இதோடு முடிந்து விடவில்லை. ஆராய்ச்சியாளர்களால் ஒவ்வொரு தகவலும் தொடர்ந்து பதியப்பட்டு வருகின்றன. வாய்ப்பு கிடைக்கும் தருணத்தில் மறுபடியும் பல விஷயங்கள் பற்றி ஆராய்வோம். விருப்பமுள்ள அன்பர்கள் கட்டாயம் வில்லியம்ஸை வாசித்து பாருங்கள்.

4 comments:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
யானைகளைப் பற்றி அழகாக தொகுத்திருக்கிறீர்கள். நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
மிக்க நன்றி.

சு.சிவக்குமார். said...

ஆசிரியர் மிகுந்த முயற்சியெடுத்து புத்தகத்தை எழுதியுள்ளார்.நீங்களும் இந்த பதிவை சிரத்தையெடுத்து மிக அழகாக பதிவுசெய்துள்ளீர்கள்.

கடற்கரய் said...

நன்றி ரத்னவேல் சார்

கடற்கரய் said...

நன்றி சிவக்குமார்