Thursday, April 1, 2010

தலைமுறை ஓவியங்கள்


""பொதுவா எல்லா அப்பாவும் தனக்குப் பின்னாடி தன் பிள்ளைங்களுக்கு சொத்து சுகத்தை கொடுத்துட்டுப் போவாங்க. ஆனா எங்க அப்பா அதைவிட ஒருபடி மேலே போய் தனக்குக் கிடைச்ச பேரும் புகழையும் என்னையே வெச்சுக்கச் சொல்லி கொடுத்துட்டுப் போயிருக்காரு. இன்னைக்கும் அப்பாவுக்கு வர்ற பாராட்டுகளை நான் வாங்கி வச்சு மகிழ்ந்துட்டு இருக்கேன் '' எடுத்த எடுப்பிலேயே உற்சாக மணியடித்து பேசத் தொடங்குகிறார் ஓவியர் மணியம் செல்வன்.
இவரின் அப்பா மணியம் வரைந்த ஓவியங்கள் ; அப்புறம் இவர் வரைந்து குவித்த ஓவியங்கள் ; இவரின் வாரிசாக இப்போது வரைய ஆரம்பித்திருக்கும் இவரின் மகள்கள் சுபாஷிணி பாலசுப்ரமணியன், தாரிணி பாலகிருஷ்ணனின் ஓவியங்கள் எல்லாவற்றையும் சேர்த்து ""வாழையடி வாழை'' என்ற கான்செப்ட்டில் ஸ்ரீபார்வதி காலரியில் கண்காட்சி தொடங்கி இருக்கிறார் மணியம் செல்வன். பதினொன்றாம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சி டிசம்பர் 26ம் தேதி வரை களை கட்ட இருக்கிறது. ""தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை....'' என்ற பழமொழியை உண்மையாக்கி இருக்கும் இவரது குடும்பத்தை காலரியில் சந்தித்தோம்.
""இது போல வழிவழியா வர்ற ஒரு தொழில்ல என்ன சந்தோஷம்னா.... அப்பா கொண்டு வந்து நிறுத்துன இடத்துல இருந்து நான் தொடர ஆரம்பிச்சேன். நான் செய்துட்டு இருக்கிற இடத்துல இருந்து அதுக்கும் மேல ஒரு இஞ்ச் கொண்டு போய் சேர்க்கற முயற்சியில என்னோட மகள்கள் ஈடுபட்டு இருக்காங்க என்பதுதான்.
பெண்களுக்கு வேலை வாய்ப்புகள்ல மட்டும் சம அந்தஸ்து கிடைச்சா போதாது. அவங்க கலை சார்ந்த துறையிலும் சம அந்தஸ்துல ஈடுபட்டு மிளிரணும். அதுக்கு என்னால ஆன சின்ன தீபத்தை ஏற்றி வைத்திருக்கிறேன்'' என்றார்.
சுபாஷினி பாலசுப்ரமணியம் திருமணத்திற்குப் பிறகு வாழ்வது சிங்கப்பூரில் ""டெம்பிள் ஆஃப் பைன் ஆர்ட்ஸ் '' என்ற சுவாமி சதானந்த சரஸ்வதி பாடசாலையில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்தவர், ""ராகமாலா'' என்ற இந்திய ஓவியம் குறித்தான ஆய்விற்காக அந்த வேலையை விட்டுவிட்டார். தற்கால ஓவியங்களுடன் சேர்த்து பாரம்பரிய ஓவியங்களையும் கலந்து கொடுப்பது சுபாஷினியின் பிரதான பாணி.
""நம்மளோட இந்திய பாரம்பரிய ஓவியக் கலைக்கு சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகள்ல நல்ல வரவேற்பு இருக்கு.... நம்மகிட்ட இருந்து இன்னும் அதிகமான படைப்புகளை அவங்க எதிர்பாக்குறாங்க'' என்று சொல்லும் சுபாஷினி இந்தக் கண்காட்சிக்காகவே இந்தியா வந்திருக்கிறார்.
தாரிணி பாலகிருஷ்ணனுக்கு வாட்டர் கலர் பெயிண்டிங் என்றால் ரொம்பப் பிடிக்கும். "" இந்த மாதிரியான ஓவியங்களில்தான் என் இன்பம் இழைகிறது'' என்று சொல்கிறார் தாரிணி.
இந்த பாரம்பரிய ஓவிய ஆலமரம் தழைத்து வளரும் என்பது அவர்களின் படைப்புகளைப் பார்க்கும்போதே தெரிகிறது....
சந்திப்பு : கடற்கரய்

No comments: