Friday, February 20, 2009

எஸ்.ரா.அதிருஷ்டசாலி. நான் துரதிருஷ்டசாலிஇந்த வருட தீபாவளிக்கு ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளை திரும்பத் திரும்ப மறு ஒளிபரப்பு செய்கின்றன பல சேனல்கள்.அப்படி ஒரு நிகழ்ச்சியான சேரனின் பொக்கிஷம் நிகழ்ச்சியைவிஜய் டி.வி.யில் மறு ஒளிபரப்பு செய்தபோது நான் பார்க்க நேர்ந்தது. அந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு பிரபலங்களின் பொக்கிஷங்கள் என்ன, அதன் முக்கியத்துவம் என்ன என்று கேட்டு தொகுத்துத் தந்திருந்தார் சேரன்.நடிகர் நாசர் தனக்கு எங்கிருந்தோ தன் மனைவி வாங்கிவந்து பரிசளித்த பழங்காலத்து துருப்பிடித்த காமிராவைக் காட்டி ரசித்து ரசித்துப் பேசிக்கொண்டிருந்தார்.இவன் புலம்ப ஆரம்பிச்சுட்டான்யா.இனி நிறுத்தமாட்டான் என்பதுபோல நாசரைப் பார்த்துக்கொண்டிருந்தது அந்தப் பழைய காமிரா.

உண்மையில் நமக்கு பொக்கிஷம் என்று சொல்வதெல்லாம்வீட்டாரின் பார்வையில் வெறும் குப்பைகள்.ஒன்றுக்கும் உதவாத குப்பைகள். எப்படா இவன் ஒழிவான் இதைத் தூக்கி குப்பையில போடலாம் என்று காத்துக் கொண்டிருக்கும் டி.வி.சீரியல் வில்லிகள் அவர்கள்.பைசாப் பொறாததையெல்லாம் பத்திரப்படுத்தி என்னடா பண்ணப்போறவென்று பலமுறை என் அம்மா என்னை கேலி பேசியதுண்டு.அப்படித்தான்நீல.பத்மநாபன் சாகித்ய அகாதெமி விருது வாங்கிய கையோடு அவரை பேட்டி எடுக்கப் போயிருந்தேன்.அவர் ஆர்வமிகுதியில் அவரைப் பற்றிவந்த குறும்படம்தொடங்கி அத்தனை துண்டுக் காகிதங்கள் உட்பட சகலத்தையும் எடுத்து எடுத்துக் காட்டி பேசிக்கொண்டே இருந்தார்.நான் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் வரை பயணித்த களைப்பில் வாடிப்போயிருந்தேன். நேரம் போகப்போக மறுநாளே திரும்பவேண்டிய கட்டாயம் என்னை அழுத்திக்கொண்டேஇருந்தது ஒருமூட்டையைப்போல. ஒருவழியாக அவரது ஆர்வத்தைக் கெடுத்துவிடாமல் பொறுமைகாத்துப் பேசலாமா என்றேன்.அவர் மதியம் சாப்பிட்ட பிற்பாடு வீட்டிற்குப் பின்புறம் இருக்கின்ற வுட் ஹவுஸிற்குப்போய் ஆர அமர பேசலாம். வசதியான இடம் என்றார்.வுட் ஹவுஸ் என்றதும் எனக்கு உற்சாகம் தாளவில்லை. அழகான கேரளா டைப் வுட் ஹவுஸ்களை தமிழ்சினிமாக்களில் நிறைய பார்த்திருக்கிறேன்.அதன் வசீகரத்தைக் கண்டு சிலிர்த்திருக்கிறேன்.அப்படியான வுட் ஹவுஸுக்குப் போகப் போகிறத் தெம்பில் நேரம் ஆனாலும் பரவாயில்லை என்று சாதுவாக கட்டிப்போட்ட இடத்திலேயே தேமே என்று உட்கார்ந்திருந்தேன்.

அவர்”சரி, வுட் ஹவுஸுக்குப் போவோமா” என்றதும் மின்னல் வேகத்தில் எகிறிக் குதித்தேன்.போய்பார்த்தால் வீட்டிற்குப் பின்புறம் மரத்திலான ஒருசிறுக் கூடம். அதைத் திறந்தே பலவருடங்களாகியிருக்கும் போல.சந்திரமுகி படத்தில் வரும் பேய் பங்களா மாதிரி தெரிந்தது.உள்ளே னுழைந்த போது”மாப்பு..மாப்பு” என்று சவுண்ட் மட்டும்தான் நான் எழுப்பவில்லை.மற்றபடி சந்திரமுகி பங்களாவேதான்.சாவியைப் போட்டுத் திறந்தால் திறப்பேனா என்று முரண்டுபிடிக்கிறது கதவு. விடுவேனா என்று மல்லுக்கட்டுகிறார் பத்மநாபன். “சார் இந்த விஷப் பரிட்சை வேண்டாம். வீட்டிலேயே ஒக்கார்ந்துபேசிகிடுவோமே”என்றேன். அந்த வீட்டின் மகத்துவத்தை எப்படியாவது எனக்கு புரியவைத்துவிட வேண்டும் என்பதில் விடாப்பிடியாக நின்றார்அவர்.“இந்த வுட் ஹவுஸ் ரொம்ப பிரமாதமா இருக்கும். இது என் பழைய வீட்டில்தான் இருந்துச்சு. என் மகளுக்கு அந்தப் பழைய வீட்டைக் கொடுத்துட்டேன். அங்க கெடந்தா வீணாயிடுமே... அதான் அப்படியேபெயர்த்து இங்க தூக்கிட்டு வந்துட்டேன்.”என்றார்.அதன் அழகைவிட அதனுடன் பத்மநாபனுக்குமுள்ள உறவு என்பது உயர்வானது என்பதாக அதை நான் புரிந்து கொண்டேன்.சாவிச் சண்டை முடிந்து கதவைத்திறந்து வுட் ஹவுஸுக்குள் போனால் ஒரே ஒட்டடை. உலுத்துப்போன வாடை. மின் விசிறியைப் போட்டால் டர்ரு...டர்ரு..டர்ரு.. என்று சத்தம் எழுப்புகிறது. என் பேனாவை மின்விசிறியின் கம்பிகளுக்கிடையில் விட்டு இறக்கைகளைச் சுற்றிவிட்டேன்.ம்ம்ம்ம்....அசைவேனா என்றது.அடுத்து மின் விளக்கைப்போட்டால் பரபரவென்று பொறி கிளம்புகிறது.எறிந்தவாடை அறையில் பரவியது.ஆனாலும் பத்மாநாபன் முயற்சியைக் கைவிடுவேனா என்று போரிடுகிறார்.இதையெல்லாம் பார்த்தபின்பும் இங்கேதான் பேசணுமா வேற இடமே இல்லையா என்றேன்.அவரோ “இதன் உன்னதத்தெ யாரு நம்மல போல புரிஞ்சிகிடப் போறா. அழகுணர்ச்சியே இல்லாத மனுஷங்களா எல்லாம் மாறிப்போய்ட்டாங்க” என்று அலுத்துக் கொண்டார்.அவரது அழகுணர்ச்சியை இன்றைய இளையதலைமுறை எவ்வளவோ தாண்டிப் போய்விட்டது என்பதை அவரிடம் சொல்லமுடியாமல் நான் எனக்குள் தவித்தேன்.பொக்கிஷம் என்பதற்கும், அழகுணர்ச்சி என்பதற்குமெல்லாம் ஒரு பொது வரைமுறை இருப்பதில்லை. நபருக்கு நபர் மாறக்கூடியது அது.

அதெல்லாம் இருக்கட்டும் நாம் விஜய் டி.வி. நிகழ்ச்சிக்கு வருவோம். அந்தப் பொக்கிஷம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தன்னுடைய பொக்கிஷம் என்று ஹெம்மிங்வேவின் புத்தகத்தை எடுத்துக் காட்டி பேசிக்கொண்டிருந்தார். பல வருடங்களுக்கு முன் ராமகிருஷ்ணன்சென்னையில் தனக்கென்று ஓர் அறைவசதி கூட இல்லாமல் நாடோடியாகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் தன்னுடைய ஜோல்னா பையில் மாற்றுக்கு சில உடுப்புகளையும்ஹேம்மிங்வேயின் அந்தப் புத்தகத்தையும் தூக்கிக் கொண்டே திரிவாராம். அந்தப் புத்தகத்தின் அட்டையைப் பார்த்தபோது சிகப்பு நிறத்தில் சோவியத் நாட்டு புத்தகத்தைப் போல தடிமனாக இருந்தது. ’ அந்நாவலின் மொழிபெயர்ப்புக் கூட தமிழில்’கிழவனும் கடலும்’ என்று வந்திருக்கிறது.ஒருநாள் தன் ஜோல்னாப் பையை நண்பர்களின் அறையில் வைத்து விட்டு ஊருக்கு அவசரமாகப் போய்விட்டாராம். நாட்கள் ஓடின. வாரங்கள் கழிந்தன.மாதங்கள் தாண்டின. வருடங்கள் வளர்ந்தன. எஸ்.ரா. சென்னைக்கு வரவேயில்லை. பல வருடங்கள் கழித்து மறுபடி வந்து பார்த்தபோது நண்பர்களின் அறை காணாமல் போய்விட்டது.வாழ்வின் அலைக்கழிப்பில் நண்பர்கள் பறவைகளாகத் திசைதவறிவிட்டார்கள். அன்றாடம் காய்ச்சிகளாக வாழ்க்கை நடத்தும் வரும்படி இல்லாத உதிரி மனிதர்கள் இவ்வாறுஇருந்த இடம் தெரியாமல் மறைவது வடிவேலு பாணியில் சொன்னால் ஜகஜம்தான். ஆனால் அதுவல்ல பிரச்சனை. எஸ்.ரா.வின் சட்டை துணிமணிகளை விட ஹெம்மிங்வேவின் அந்தப் புத்தகத்தை எப்படி கண்டுப்பிடிப்பது. எஸ்.ரா.கேட்டதற்கு நண்பர்களோ சாதாரணமாக ”தூக்கி குப்பையில் போட்டாச்சு போட்டாச்சு” என்று பதிலளித்திருக்கிறார்கள்.குப்பைக்குப் போனது திரும்பக் கிடைக்குமா?அந்த அரிய பொக்கிஷம் லக்கி மேன் படத்தில் வரும் மெகா சைஸ் புத்தகத்தைப் போல பூலோக பிரஜைகளிடம் மாட்டிக்கொண்டு பாடுபடுமா?இப்படி பல கேள்விகளை எழுப்பும் நேரத்தில் ஒரு குட்டி பிரேக்குக்கு அப்புறம் பார்ப்போம் என்று விளம்பரத்தைப் போட்டார்கள்.எனக்கு பதற்றம் தலைக்கேறியது.ஹெம்மிங்வேக்கு என்னாச்சோ என்னாச்சோ என்று பெனாத்திக்கொண்டிருந்தேன்.ஒரு டி.வி. சீரியலுக்கு ஏற்ப அத்தனை குணாதிசயங்களும் நிறைந்த அந்நிகழ்ச்சியை தொடந்து பார்த்து விடையறிவதற்கு முன் என் வீட்டுவாசிகளுக்கு மானாட மயிலாடஜுரம் பிடிக்க ஆரம்பித்துவிட்டது.அவர்களிடம் கையில் காலில் விழுந்து ஹெம்மிங்வே புத்தகம் என்னாச்சோ கொஞ்சம் பொறுங்கள் பார்த்து விடுகிறேன் என்று அனுமதி வாங்கினேன். கடைசியில் காணாமல் போன ஹெம்மிங்வேவைஒரு நாள் எஸ்.ரா. நடந்து போகிற போது பழைய புத்தகக் கடையில் கண்டுபிடித்து எடுத்துவிட்டாராம். காணாமால் போன ஹெம்மிங்வேவை தூசுத்தட்டி வீட்டிற்குக் கொண்டுவந்துஇன்றுவரை பத்திரமாக பாதுகாக்கிறார் எஸ்.ரா. ஸோ.. அதுதான் அவருடைய பொக்கிஷம்.அது தன்னுடையதுதான் என்பதை அவர்,தான் கையெழுத்து இட்டிருந்ததை வைத்து உறுதிசெய்திருக்கிறார். அவர் சொன்னதைப் போலவே அதில் அவரின் கையெழுத்து எஸ்.ராமகிருஷ்ணன்/98 என்று ஆங்கிலத்தில் இடப்பட்டிருந்தது.எஸ்.ரா. ஒரு அதிர்ஷ்டசாலி. இதற்கு முன்கூட அவர் வெகுகாலமாகத் தேடிக்கொண்டிருந்த ஒரு புத்தகத்தை பழைய புத்தகக்கடையிலிருந்து கண்டெடுத்ததாகஎழுதியிருந்தார். பழைய புத்தகக் கடையின் வழியே அவர் நடந்து செல்லும் போது அந்தப் புத்தக வேதாளம் அவரை வா..வா.. என்று அழைத்ததாம்.உடனே அதன் ருசி நுகர்ந்துப் போய் அதைக் கண்டெடுத்துவிட்டாராம். இப்படி பல அமானுஷ்யங்கள் எஸ்.ரா.வின் வாழ்வில் நடந்திருப்பதாக ஏற்கெனவே படித்தது எனக்கு ஞாபகத்தில் வந்தது.

எஸ்.ரா.வோடு ஒப்பிடும் போது நான் ஒரு துரதிருஷ்டசாலி. 2006-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். வெளிநாட்டிலுள்ள அண்ணனிடம் பணம் கொஞ்சம் கடன் கேட்டிருந்தேன்.வங்கிக் கணக்கிலெல்லாம் போட்டால் நாட்களாகும், ஒரு குருவி மூலம் தந்துதவுவதாக சொல்லியிருந்தார்.சொன்னபடி அனுப்பியும் வைத்தார். அந்தக் குருவி ஒருநாள் எனக்கு போன் செய்தது. பணம் வந்திருப்பதாகவும்அதை எங்கு வந்து கொடுக்கவேண்டும் என்றும் கேட்டது. நான் முகவரி சொல்ல அங்கு வந்துவிடுவதாக உறுதியளித்தது. பணம் சரியான நபரிடம்தான் தருகிறோமாஎன்பதை உறுதிசெய்துகொள்ள அடையாளத்திற்கு வரும் போது என்னுடைய பாஸ்போர்ட்டை கொண்டுவரும்படி சொன்னது. நானும் பணம் வந்த சந்தோஷத்தில்பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு சைதாப்பேட்டையிலிருந்து எழும்பூருக்கு ரயிலில் பறந்தேன். ரயிலை விட்டு கீழ் இறங்கிப் பார்த்தால் மேல் சட்டைப்பையிலிருந்த என் பாஸ்போர்ட்டைக் காணோம். பதறிப்போய்விட்டேன். அலுவலகத்திலுள்ள நண்பர்களிடம் இதைச் சொன்னபோது தீவிரவாதிகளின் கையில் கிடைத்தால் அதை அவர்கள் மிஸ் யூஸ் செய்துவிடுவார்கள்.பிறகு நீதான் மாட்டவேண்டும்.ஜாக்ரதை. அவ்வளவுதான் என்றுபயமுறுத்திவிட்டுவிட்டார்கள். நானோ அந்தப் பயத்தில் தீவிரவாதியானதைப் போலவும், போலீஸ் என்னைப் பிடித்துக் கொண்டுபோய் லாடம் கட்டுவதைப் போலவும் கனவுகாண ஆரம்பித்துவிட்டேன்.தொலைக்காட்சி நிருபர்கள் என்னை உண்மையைச்சொல்லுங்க என்று கேட்டால் நான் எஸ்.ரா.வின் பொக்கிஷம் கதையில் ஆரம்பித்து பாஸ்போர்ட் தொலைந்தது வரை கக்கினாலும் உண்மைதான் என யார் நம்பப்போகிறார்கள். அனுப்பியப்பணம் வந்து சேரவில்லையென்றாலும் பரவாயில்லைதீவிரவாதியாகாமல் நம்மைக் காப்பாற்றிக்கொள்வோம் என்று புகார்கொடுக்க போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனால் கேள்விமேல் கேள்வி. விசாரணை மேல் விசாரணை.

“எப்போது தொலைஞ்சுது?”-இது போலீஸ்.

“காலையில்”-இது நான்.

“ அப்ப மதியம் வரைக்கும் என்ன பண்ணீங்க”

“ஆபிஸூல வேல அதான்..”

“உங்களுக்குதான் வேல.. எங்களுக்கு வேல இல்ல?”

“அப்படி இல்ல சார்...”“பின்ன எப்படி”என்று குறுக்கு கேள்வி கேட்டு மட்டையடி அடித்தார்கள்.உடன் வந்தநண்பர் எப்படியோ பேசி சரிக்கட்டி எஃப்.ஐ.ஆர். வாங்கிக் கொடுத்தார்.இதையெல்லாம் செய்து முடிப்பதற்குள் குருவி தொடர்ந்து எனக்கு போன் செய்ய ஆரம்பித்துவிட்டது. அங்கிருந்து அடித்துப்பிடித்துக் கொண்டு குருவியிடம் பணம் வாங்க வந்தால்பாஸ்போர்ட்டை காட்டினால்தான் பணம் தருவேன் என்று ஒரே அடாவடி. நிலைமைகளை எவ்வளவோ விளக்கிச்சொல்லியும் குருவி நம்பவே இல்லை.”இந்தக் கையில் பாஸ்போர்ட்.அந்தக் கையில பணம்”என்றது குருவி.”பாஸ்போர்ட்டே இல்லாதவங்களுக்கு எப்படி” என்றேன்.

அதுவோ கவுண்டமணி மாதிரி ”பாஸ்போர்ட் இல்லாதவங்களுக்கு எல்லாம் பணம் வராது” என்றது.கடன் வாங்கப் போய் ஏற்கெனவே 2000 ரூபாய் கட்டிவாங்கிய பாஸ்போர்ட்டும் அம்பேலானதுதான் மிச்சம்.இத்தனை வருடங்களாக அந்த பாஸ்போர்ட்டைத் தேடிக்கொண்டே இருக்கிறேன்.கிடைத்தபாடில்லை. இதற்கே அதில் என்னுடைய புகைப்படம் இருக்கிறது.முகவரி தெளிவாக இருக்கிறது.இருந்தும் கிடைக்கவில்லை.எஸ்.ரா.வைப்போல வெறும் கையொப்பம் மட்டும் உள்ள புத்தகம் இல்லையது.ஆனால் அவருக்குக் கிடைத்துவிடுவது எனக்கேன் கிடைப்பதில்லையோ?காரணம் என்னவாக இருக்குமென்று துழாவினேன். அவர் புத்தகத்தைத் தொலைத்த வருடம்:1998. கிடைத்த வருடம்:2008. மொத்தம் பத்து ஆண்டுகள் கழித்தே அவருக்குக் கிடைத்திருக்கிறது.நான் பாஸ்போர்ட்டைத் தொலைத்த வருடம்:2006. கணக்குப்படி பார்த்தால் பத்து வருடம் கழித்து 2016-ல் தான் என்னுடைய பாஸ்போர்ட் கிடைக்கும்.ஒருவேளை 2016-ல் அது எனக்குக் கிடைத்தாலும் பயன்படாது. ஏனென்றால் அதன் காலக்கெடு முடிந்தே போயிருக்கும். முடிந்து போனதை வைத்து .................வழிக்கதான் வேண்டும்.அதற்குதான் முன்னயே சொன்னேன். எஸ்.ரா.அதிருஷ்டசாலி. நான் துரதிருஷ்டசாலி.

7 comments:

M.Rishan Shareef said...

வாழ்வில் பொக்கிஷங்களெனப்படுவது நீண்ட தேடலின் பின்னர் கிடைப்பவைதான் போலும். தொலைத்தவை எல்லாமே மீளக் கிடைப்பினும் அவை எல்லாவற்றையுமே பொக்கிஷங்களெனக் கொண்டாட முடியாது பத்து வருடங்கள் கழித்துக் கிடைக்கப்போகும் உங்கள் பாஸ்போர்ட்டைப் போல..!

அழகான மொழிநடை நண்பரே !

கடற்கரய் said...

உங்களின் கணிப்புபடி பத்து வருடங்கள் கழித்து கிடைத்துவிடும் என்று நம்புகிறிகளா ரிஷான்.
எனக்கில்லை

Anonymous said...

கடர்கரய் நல்லாயிருக்கு

Anonymous said...

நிறைய பேர் தன்னையே தொலைச்சுட்டுத் தேடிக்கிட்டு இருக்கான். பரவாயில்லே, எஸ்.ரா. பொஸ்தகத்தையும் கடற்கரய் பாஸ்போர்ட்டையும்தான் தொலைச்சுருக்காங்க...

கடற்கரய் said...

thaks dhalavai

தமிழ்நதி said...

உங்கள் பழைய பதிவுகளை இதில் சேர்க்க முடியாதா?

எஸ்.ரா. பலவகைகளில் அதிர்ஷ்டசாலி. அவருடைய துணையெழுத்தை எப்போதாவது சோர்வு வரும்போது எடுத்துவைத்து வாசிக்க ஆரம்பித்துவிடுவேன். உலகம் ஏதோ நம்பிக்கைக்குரியதாக மாறிவிடும். இனி உங்கள் வலைப்பூ பக்கம் அடிக்கடி வருவேன். கணனியின் முன்பக்கத்திலேயே போட்டுவைத்திருக்கிறேன்.

கடற்கரய் said...

உங்களின் வருகைக்கு நன்றி.
தொடர்ந்து எழுத உங்களின் கருத்துக்கள் உதவும்.